Monday, May 01, 2023

பதிவர் சந்திப்புகள் ! கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 42

இந்தியாவுக்கு வந்தால் எப்படியும் தினம் ஒரு கோவில் தரிசனமாவது செஞ்சுக்கறதுதான் வழக்கம்.  இன்றைக்கு சனிக்கிழமை வேறயா..... பெருமாளை தரிசிக்கப்போகலாமான்னு ஒரு பக்கம் ஆசை இருந்தாலும்,  வெங்கடநாராயணா திருப்பதி தேவஸ்தானக்கோவிலில் கூட்டம் அதிகமா இருக்குமேன்னு ஒரு சின்ன யோசனை. 
காலையில் வழக்கமான கடமைகள் எல்லாம் முடிச்சு, ப்ரேக்ஃபாஸ்டும் ஆச்சு. லோட்டஸில் நான் ரொம்பவே அனுபவிச்சுக் கொண்டாடுவது  அங்கத்துக் காலை உணவுதான்.  வேலை எதுவும் செஞ்சு நோகாம  மனசுக்குப்பிடிச்ச ஐட்டங்களை உள்ளே தள்ளறது எவ்ளோ சுகம் தெரியுமோ ! இன்றைக்கு வடகறி வேற !

கொஞ்சமே கொஞ்சம் ஹெவியா சாப்பிட்டால் மத்யான லஞ்சும் எனக்குத் தேவைப்படறதில்லைன்னு  கண்டுபிடிச்சது முதல்  மகிழ்ச்சியே அதிகம். இன்றைக்கும் அப்படியே ஆச்சு. தினம் அப்பாவோட ப்ரேக்ஃபாஸ்ட் படம் எடுத்து மகளுக்கு அனுப்பிருவேன்.  அதுவும் ஒரு கடமையே :-)

லோட்டஸில் இருந்து  வெங்கடநாராயணா ரோடு அவ்வளவா அதிக தூரமில்லைதான். ஆனால் இப்போ பாண்டிபஸாரில் ,மெட்ரோ வேலைகள் ஆரம்பிக்கப்போகுதுன்னு  போக்குவரத்தை மாத்தியிருக்காங்க.  அதுகூட பாருங்க....  நாயர் ரோடில் இருந்து போகும்போது ஒரு நாள்  ரைட் எடுக்க முடியுது.  இன்னொருநாள்  முடியாது.  முடியும் முடியாதுன்னு  இந்தக் குழப்பங்கள் கொஞ்சம் அதிகமாகவே ஆகிக்கிட்டுத்தான் இருக்கு.  ஆனாலும் மக்கள் அசரமாட்டாங்க. பலர்  எதையும் கண்டுக்காம ஒன்வேயில் எதிர்ப்பக்கமா வந்து  நம்மை திடுக்கிட வைப்பது சகஜமாப்போச்சு.  அந்தப் பலரில் ஆட்டோக்களும் அடக்கம். 
இன்றைக்கு ரைட் எடுக்கமுடியாதுன்னதால் நாங்க,  ஜிஎன்செட்டி ரோடில் போய் பனகல் பார்க்கையொட்டிப்போய்  வெங்கடநாராயணா ரோடுக்குள் நுழைஞ்சோம்.  கொஞ்ச தூரத்திலே நம்ம ஸ்ருங்கேரி மடத்தின் ஷாரதாம்பாள் கோவில் கண்ணில் பட்டதும் அங்கேயே போகலாமுன்னு முடிவாச்சு.
ஸ்ருங்கேரி பாரதி வித்யாஷ்ரம் என்று  ரொம்ப வருஷமா மெட்ராஸில் இருப்பதுதான். நாப்பது வருஷமுன்னு சொல்றாங்க. இப்ப இருக்கும் கோவிலுக்கு  1988 இல் அடிக்கல் நாட்டி, 1995 வது  வருஷம்  திறப்புவிழா நடந்துருக்கு. கோவில் நிர்வாகம் எல்லாம் ஸ்ருங்கேரி மடத்தின் பொறுப்பில்தான்.

ரோடில் இருந்து கொஞ்சம் உயரத்தில்தான் கட்டியிருக்காங்க.  கோபுர அமைப்பெல்லாம் கிடையாது.  படிகளேறிப்போகணும்.  உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை என்றதால் வெளியே இருந்தே சில க்ளிக்ஸ் ஆச்சு.

ஏதோ நேத்துக் கட்டிமுடிச்ச கோவில் போலத்தான்  உள்ளே பளபளன்னு, படு சுத்தமா இருக்கு!  பெரிய ஹாலின் மறுகோடியில்  சந்நிதிகள். ஷார்தாம்பாள், ஆதி சங்கரர்,  சிவன், பிள்ளையார் சந்நிதிகள் ஒரு வரிசையில். ஹாலில் உக்கார்ந்து தியானம் செஞ்சுக்கலாம்.  என்னைப்போல் உள்ள முழங்கால் கஷ்டஜீவிகளுக்கு பெஞ்சுகளும் ஓரமாப்போட்டு வச்சுருக்காங்க. நிம்மதியான தரிசனம்.

அங்கிருந்து கிளம்பி க்ளோபஸ் ஷாப்பிங் சென்டருக்குப் போனால்....   மூடிட்டாங்களாம். 'அது ஆச்சே ரெண்டு வருஷமு'ன்னு வாட்ச் மேன்  சொன்னார். போகட்டும் போன்னு  லோட்டஸுக்குத் திரும்பிட்டோம். நம்மவருக்குக் கொஞ்சம் ஆபீஸ் வேலைகள் இருக்குன்னு அதுலே மூழ்கிட்டார். எனக்கு மட்டும் வேலை இல்லையா என்ன ? ஃபேஸ்புக், வாட்ஸ்ஸப்,  கூகுள். மெயில் பாக்ஸ்னு.............அவரவர் அவர்வேலை.   பழங்கள் , ஃப்ரிட்ஜ்லே இருக்கும் தயிர் னு லைட் லஞ்சும் ஆச்சு. 

நம்ம பதிவர் காவேரி கணேஷ், சந்திக்க நேரம் இருக்கான்னு கேட்டார். சாயங்காலம் ஒரு ஆறுமணி போல வர்றேன்னார்.  நோ ஒர்ரீஸ்.  நமக்கு பல பதிவுலக நண்பர்களை சந்திச்சே பத்துவருசம் ஆச்சு.  நம்மவரின் சஷ்டியப்தபூர்த்தி விழாவில் சந்திச்சதுதான் கடைசி. பயணங்களில் எப்பவாவது ஒரு சிலரையாவது  சந்தித்தால்  நம்ம அதிர்ஷ்டம்!

தமிழ்மணம் நல்ல செயலில் இருந்த காலக்கட்டத்தில் பதிவர் சந்திப்புகள் ஒரு திருவிழாபோல நடக்கும்.  நடேசன் பார்க்,  மெரீனாவில் காந்திசிலையாண்டை, வுட்லேண்ட்ஸ் ட்ரைவ் இன் இப்படியெல்லாம் ஒரே கோலாகலம்தான். 

சாயங்காலம் காவேரிகணேஷ் வந்தார். நலம் விசாரிப்பு, பயணம், பதிவுலகம், நண்பர்கள் ன்னு  கொஞ்ச நேரம்  கலகலன்னு பேசிக்கிட்டு இருந்தோம். எனக்கொரு அன்பளிப்பும் கொடுத்தார். மூன்றாம்பிறை !

அன்றைக்கு நம்ம உண்மைத்தமிழனும் வர்றதாச் சொல்லி இருந்ததால்  கொஞ்சநேரம் காத்திருந்தோம்.  உ. த   வேறெங்கோ சினிமா விழாவுக்குப் போனதில் தாமதமாகுதுன்னு  சேதி அனுப்பினார். இனி காத்திருக்க நேரமில்லைன்னு காவேரி கணேஷ் கிளம்பிப்போன பிறகு முக்கால்மணி நேரம் கழிச்சு உ த வந்து சேர்ந்தார்.
முருகன் இவரை பயங்கரமாச் சோதிச்சுக்கிட்டே இருக்கான்.  நம்மவரும் முருகன் பக்தரானபடியால்  இவரை ரொம்பப் பிடிச்சுப்போச்சு ! மனம்விட்டு பேசுவதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்கத்தானே செய்யுது, இல்லையா ?
கொஞ்சம் சீக்கிரமாவே டின்னருக்குப் போகலாமுன்னு கீழே ரெஸ்ட்டாரண்டுக்குப் போனோம். இந்த ரெஸ்ட்டாரண்டுக்குப் பலமுறை பெயர் மாத்தியாச்சு. இப்போ க்ரீன்வேஸ் ரெஸ்ட்டாரண்டுன்னு பெயர். சர்வீஸ், ருசி எல்லாம் ஒன்னுமே மாறலை.
எனக்கு ஒரு தோசை.  இவுங்க ஃபுல்கா ரோட்டியும் ஏதோ ஸப்ஜியுமா  சாப்பிட்டாங்க.  அப்புறம் மேலே வந்து கொஞ்சநேரம் பேசிக்கிட்டு இருந்து கிளம்பினார்.  


இன்னிக்கு ரொம்ப  சுத்தாமல் கொஞ்சம் ஓய்வா இருந்ததும், கூடவே மழை கொஞ்சம் நின்னுருந்ததும் நல்லதாப் போச்சு. 


தொடரும்........  :-)




12 comments:

said...

காலை உணவு படம் கவர்ந்தது (ஒருவேளை எனக்கு பசி வந்துடுச்சோ?)

பதிவர் சந்திப்பு நன்று. தமிழ்மணம் போன பிறகு, பதிவர்களை இணைக்கும் வலைச்சரம் எதுவும் இல்லை. பலதும் படிப்பதே இல்லை

said...

இடங்களும் சரி, நண்பர்களையும் சரி..  வெளிநாட்டிலிருந்து வந்து நீங்க பார்த்துடறீங்க..  சென்னைல இருந்துகிட்டே நான் இந்த இடமெல்லாம் பார்த்ததில்லை!

said...

பதிவர் சந்திப்பு - மகிழ்ச்சி...... தமிழ்மணம் நாட்கள், வலைச்சரம் நாட்கள் மறக்க முடியாதவை......

said...

அருமை நன்றி

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

தமிழ்மணத்தினால் கூடிய நண்பர்கள் எல்லோரும் இன்னும் தொடர்பில் இருக்கிறோம் என்பதே ஒரு ஆறுதல் ! இதில் சிலர் குடும்பநண்பர்களாகவும் மாறியிருக்கோம் !

said...

வாங்க நெல்லைத் தமிழன்,

தினமும் லோட்டஸில் காலை உணவு ரொம்பவே அருமைதான். வட இந்திய ஐட்டங்களும் உண்டு. இதெல்லாம் கூடாதே ப்ரெட், பட்டர்,ஜாம், ம்யூஸ்லி போன்றவைகளும் கூட. நாம் தான் அந்தப்பக்கம் திரும்பியும் பார்ப்பதில்லை .

தமிழ்மணம் போனபிறகு ஒரு வெறுமை வந்தது உண்மை.

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி!

said...

வாங்க ஸ்ரீராம்,

எங்களுக்கு இதைவிட்டால் பிறகு எப்போ சந்தர்ப்பம் அமையுமோன்னுதான் முடிஞ்ச அளவில் சந்திப்பு நடத்திக்கறோம். உள்ளூரில் இருப்பவர்களுக்கு அப்புறம் பார்க்கலாம் என்ற ஒத்திப்போடுதல் இருக்கே !

said...

பதிவர்கள் சந்திப்பு மிகவும் மகிழ்சி . நாங்களும் கலந்து கொண்ட உணர்வு.

said...

வாங்க மாதேவி,

கலந்துகொண்டது மகிழ்ச்சி !

said...

மன்னிக்கணும் டீச்சர்.. இப்போதுதான் பார்த்தேன்.. தங்களது வரவேற்புக்கும், உபசரிப்புக்கும் மிக்க நன்றிகள்..! அடுத்த முறை நான் உங்களுக்கு வேற எங்கயாச்சும் கூட்டிட்டுப் போய் ட்ரீட் தர்றேன்.. இது முருகன் மேல சத்தியமாக்கும்..!

said...

வாங்க உண்மைத்தமிழன்,

ஆஹா.... அடுத்தமுறை விடமாட்டேன். அட்வான்ஸ் நன்றி !