Wednesday, May 24, 2023

மகள் தயவால் ரங்கத்தைச் சுத்திப் பார்த்தோம் !!!! கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 52

இந்தத்  தென் தமிழகம்  போகும் பயணம் ரத்தாகினதில் எனக்கு ரொம்பவே மனவருத்தம்தான்.  இந்த முறை ரங்கனைப் பார்க்கப்போகும் வழியில் கொஞ்சமா ஒரு திருப்பத்தில் போகணும். போற வழியில் ஒரு தோழியை சந்திக்கணுமுன்னு  ஏற்பாடு செஞ்சுருந்தேன்.  அது நடக்காதுன்னதும் தோழிக்கு சேதி அனுப்பித் துக்கப்பட்டாச்சு.  தோழி என்ன தோழி.... என் மகள்னும் சொல்லலாம்.
ஆஸ்பத்ரி சமாச்சாரம் தெரிஞ்சதில் இருந்து அவுங்களும் 'அப்பா எப்படி இருக்கார்'னு கேட்டுக்கிட்டே இருக்காங்க.  'வீட்டுக்கு வந்தாச்சு'ன்னு சொன்னதும், 'பெருமாள் காப்பாத்திட்டார்மா,  'நான் போய் அர்ச்சனை பண்ணிட்டு வரேன், நட்சத்திரம் சொல்லுங்கன்னாங்க'ன்னதும்... எனக்கு மனசு நிறைஞ்சு போச்சு.  அவுங்களுக்கும்  ஒரு ஒன்னேகால் மணி நேரப்பயணம் இருக்கே.... 'அதெல்லாம் வேணாம். உங்க ஊர்லே இருக்கும் பெருமாள் கோவிலில் அர்ச்சனை செஞ்சால் போதுமு'ன்னேன்.

மறுநாள், ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டு  வந்து  ஓய்வா உக்கார்ந்திருக்கும்போது, செல்லில் கூப்பிட்டு  'ஒரு லைவ் வீடியோ போடறேன், பாருங்க'ன்னாங்க.  பார்த்தால் ரங்கா கோபுரம் !   உடம்பே விதிர்விதிச்சுப் போச்சு.  நாங்கள்  சேர்ந்து பார்க்க ஆரம்பிச்சோம்.  கோவிலைச் சுத்தியுள்ள வீதிகளைக் காமிச்சுக்கிட்டே போறாங்க. கோவிலுக்குள்ளும் பல பகுதிகள், ராஜகோபுரம் பார்த்ததும்  கண்ணில்  சின்னதா ஒரு அருவி........ என்னாலே நம்பவே முடியலை.... நான் ஸ்ரீரங்கத்தில் சுத்திக்கிட்டு இருக்கேன் என்பதை !  ரங்கா ரங்கா.....
சுமார் 40 நிமிட்ஸ் இருக்கும்.....   அப்பதான் சொல்றாங்க.... 'நீங்க உங்க இஷ்டக்கோவிலைப் பார்க்க எவ்வளவோ ஆசையா இருந்துருப்பீங்க. பயணம் ரத்து என்றதும் எனக்கே தாங்க முடியலைம்மா. அதான்  இங்கே வந்து  உங்க ரெண்டு பெயருக்கும் அர்ச்சனை பண்ணிட்டேன். ப்ரசாதங்களை இப்போ கூரியரில் அனுப்பறேன்மா. நாளைக்கு வந்துரும்'ன்னதும்.... பெத்த மகளைவிடப் பாசம் காண்பிக்கும் உறவைக் காமிச்சுக்கொடுத்த  பெருமாளை  மனசில் நிறுத்திக் கைகூப்பினேன்.  நம்மவரும் அப்படியே நெகிழ்ந்து, கரைந்து சிலைபோல உக்கார்ந்துருந்தார். பார்த்தால் கண்ணில்  தளும்பி நிக்குது  கண்ணீர். 

மறுநாள் பார்ஸல் வந்துருச்சு. பரபரன்னு பிரிக்கிறேன்....  தாயாரின்  ப்ரசாதமாகத் தாமரைமொட்டு பார்த்ததும்  கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்  .....  ஹைய்யோ!!!!
ரெங்கன் கயிறை உடனே கையில் கட்டிவிட்டேன். காப்பு !
ப்ரஸாதம் வந்து சேர்ந்த விவரத்தை மகளுக்குச் சொல்லிட்டு  நம்ம ஆஞ்சி முன்னால் உக்கார்ந்து அஞ்சு நிமிஷ தியானம் ஆச்சு. இனி எல்லாம் சுகமேன்னு மனசு கூவுச்சு !

இன்னிக்கு ரொம்ப லேட் லஞ்ச். பசியே இல்லை..... ஆனாலும்  நம்மவர் மருந்துகள் சாப்பிடவேணுமே..... 
 
சாப்பாடு ஆனதும் 'கொஞ்ச நேரம் தூங்கப்போறேன்'னார்.  'ஆஹா.... நல்லது. அப்படியே செய்யுங்க. நான்  கொஞ்சநேரம் வெளியே போயிட்டு வரேன்'னு  கிளம்பிட்டேன். ஙேன்னு முழிச்சவரிடம்.... 'பயப்படாதீங்க .  ப்ரெஷர் ஏறிடப்போகுது. கனமான பொருட்களை வாங்க மாட்டேன்'னு  துப்பட்டாவைப் போட்டுத் தாண்டவேண்டியதாப் போச்சு. 

நேபாள் பயணத்தில் மணிப்பித்து பிடிச்சுருச்சுன்னு  சொன்னேனே... அது குறையவே இல்லை.  விண்டோ ஷாப்பிங் செஞ்சுக்கணும்.  ரொம்பப் பிடிக்கறமாதிரி ஏதாவது அமைஞ்சால்  வாங்கலாம்.   மணிகளுக்குப் பெயர்போன நாராயணா பேர்ல்ஸ் பார்த்ததும்   கொஞ்சம் வேடிக்கை. அதிலொன்னு பிடிச்சுருந்தது.  இன்னொரு  நெக்லெஸ் அழகு. மகளுக்கு வேணுமுன்னா வாங்கலாம். ஆனால் சட்னு வாங்க முடியாதே. ப்ரிஅப்ரூவல் வேணுமே.... ' படம் எடுத்துக்கவா'ன்னு கேட்டதுக்கு முதலில் தயங்கினாங்க.  என் நிலையைக் கோடி காமிச்சு 'மகள் சரின்னு சொன்னால்  நாளைக்கு வந்து வாங்குவேன்'னதும் சரின்னாங்க. 
லோட்டஸுக்குத் திரும்பி வந்து,  படத்தை அனுப்பினதும்,  மகள் அதைப்பற்றி விவரம் கேட்டாள். குஷன் கட்   நவரத்தினம் என்றதும் 'ஓ நைன் ஜெம்ஸ்' நல்லா இருக்கு'ன்னுட்டாள்.    லேட் லஞ்ச் ஆனதால்  டின்னர் லைட்டா இருக்கட்டுமுன்னு  டோஸ்டட் ப்ரெட் & பால். 
நம்மவரை இப்ப ரெண்டுமூணு நாட்களா  சுமார் முப்பதும் முப்பதும் அறுபதடி நடக்க வச்சுக்கிட்டு இருக்கேன்.  ரெண்டு அறைகள் நமக்குன்னு  இருக்கே.  ஒரு கோடியில் இருந்து மறுகோடிவரை  எதையும் பிடிச்சுக்காமல் நேரா நடக்கணும். எப்படி இருக்கு நடை என்பதை சின்ன வீடியோவா எடுத்துக் காமிச்சேன்.  தடுமாறாமல் நடக்கும் பயிற்சி.  கால்கள்  ரொம்ப வீக்கா இருக்காம்.  அப்ப நடக்க நடக்கத்தான் பலம் வரும் இல்லையோ.....    
     
ஆச்சு ஒரு வாரம் ஆஸ்பத்ரியில் இருந்து வந்து!  ஒரு செக்கப் போக வேணும். எல்லாம்  சரின் னால்.... நம்ம டிக்கெட்டை மாத்தி எடுத்துக்கிட்டு உடனே கிளம்பிறணும்.  பொதுவா ஏர்ப்போர்ட்டுக்குள்ளேயே நிறைய நடக்கவேண்டி இருக்கும் என்பதால்தான் அந்த நடைப்பயிற்சி :-)

டிக்கெட்டை மாத்தி எடுக்க, முதலில்  விமானத்தில் இடம் இருக்கான்னு  பார்க்கணும். ஆன்லைனில் பார்த்தால்  எல்லா ஃப்ளைட்டும்  ஃபுல்லி புக்டு.  இது என்னடா  நியூஸிக்கு வந்த வாழ்வு !!  அப்க்ரேடு பண்ணிக்கிட்டாவது போயிடலாமுன்னு பார்த்தால் அதுவுமே இல்லை.  ஒருநாளுக்கு மட்டும் சென்னை- சிங்கையில்  இருக்கு. இப்பெல்லாம்  சென்னையில் இருந்து  சிங்கைக்குப் பகல் நேர ஃப்ளைட்தான் எடுக்கறோம்.  நாலரை மணி நேரம்தானே.... ரொம்பக் கஷ்டமில்லை.  ஆனால்  நமக்கு முக்கியம் சிங்கை - நியூஸி.  திரும்பிப்போகும்போது சுமார் பத்துமணி நேரம். அதுவும் ராத்ரியில் . பொதுவாகவே தூக்கமும் இருக்காது, கால் நீட்டவும் முடியாது..... இந்த அழகிலே தலைசுத்தல் வேற .... ப்ச்....

'வெர்ட்டிகோதான் காரணமுன்னு சொல்லிட்டாங்கதானே.... நாம் போய்  உனக்குக் காதுக்குப் பார்த்த அதே டாக்டரைப் பார்க்கலாமே'ன்னாரா... அதுவுஞ்சரின்னு,  வண்டியை வரச்சொல்லிட்டு வந்ததும் கிளம்பினோம். பர்கிட் ரோடு, டாக்டர் சுந்தர் க்ருஷ்ணன். கையோடு ஸ்கேன் ரிப்போர்ட் கொண்டுபோயிருந்ததால் பார்த்துட்டு,  ஆஸ்பத்ரியில் இப்பக் கொடுத்துருக்கும் அதே மருந்தை எடுத்துக்கச் சொன்னார். இப்படித்தான்  சொல்வார்னு நான்  நினைச்சுருந்தேன். ஆனால் இவரிடம் சொல்லலை. எத்தைத்தின்னால் பித்தம் தெளியும் என்று இருப்பவரிடம் நெகடிவா எதுக்குச் சொல்லணும் ? 


அப்ப சொல்றார்,  ஆன்லைனில்  சிலசமயம் சரியா விவரம் இருப்பதில்லை. பேசாம சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆஃபீஸில் கேட்கலாம்.  வலையில் பார்த்தால்  டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலைன்னு இருக்கு.  அதுலே இருக்கும் நம்பருக்குப் ஃபோன் செஞ்சால் பதிலே இல்லை.  வண்டிதான் இருக்கே... நேரில் போனால் ஆச்சுன்னு  எலியட்ஸ் ரோடுலே போய் அந்த ஆஃபீஸ் இருக்குமிடத்தைக் கண்டுபிடிச்சால்.... சுத்தம்.   ஃபோயரில் நோட்டீஸ் ஒட்டிட்டுப் போயிட்டாங்க. வாட்ச்மேன் சொன்னார், கோவிட் ஆரம்பிச்சதுமே மூடிட்டுப் போயிட்டாங்களாம்!
எனக்கு இன்னும் பழைய பெயர்கள்தான் நினைவில் இருக்கு. நான்  சென்னையை விட்டுட்டு வந்தபோது இருந்த பெயர்கள். அது ஆச்சே 48  வருசம் ! அதுக்கப்புறம் எத்தனையோ முறை  மெட்ராஸ் போனாலும், மாறிகிட்டே இருக்கும்  புதுப்பெயர்கள் மனசில் நிக்கறதில்லை, கேட்டோ !


வந்தது வந்தோம், அடுத்தாப்லே இருக்கும் ஹேமில்டன் ப்ரிட்ஜ் வரை போகலாமுன்னு  ஐடியாக் கொடுத்தேன். சென்னையில் நடந்த சதுரங்கப்போட்டி விளையாட்டை முன்னிட்டு இந்தப் பாலத்தை செஸ்போர்ட் டிஸைனில் பெயின்ட் செஞ்சுருக்காங்கன்னு  அப்போ வலையில் பார்த்த நினைவு. 

'பாலத்துக்கிட்டே பார்க்கிங் இருக்காது'ன்னார் இன்றைய ட்ரைவர் விஜி. அண்ணனும் தம்பியுமா மாறி மாறி நம்மைப் பார்த்துக்கிறாங்க:-)  வண்டியை விட்டு இறங்க வேணாம். ச்சும்மாப் ப்போய் வரலாமுன்னதும் அப்படியே ஆச்சு. 













பீச் ரோடு பார்த்தால் வரும் மகிழ்ச்சி, இப்பவும்  வந்ததுதான்.  இங்கேயும் மெட்ரோ வருதுன்னு  அங்கங்கே  தடுப்புகள் வச்சுருக்காங்க. பாலம் கடந்து போய், உடனே திரும்பி அதே வழியில் வந்தோம்.  சின்னதா ஒரு வீடியோ எடுத்தேன்.  வேகத்தால் சரியா வரலைன்னு தோணுது.

எதுக்கும் ஃபேஸ்புக்கில் போட்டு வைக்கிறேன். சுட்டி இதுதான்.

https://www.facebook.com/1309695969/videos/1324567298476116/

திரும்பி லோட்டஸ் வருமுன் நேரா பாண்டி பஸார் ,  நான் மட்டும் சட்னு இறங்கிப்போய் நேத்துப் பார்த்துவச்ச நெக்லெஸையும் கூடவே இன்னொன்னு நம்ம ஜன்னுவுக்கும் வாங்கிக்கிட்டேன்.  பில் அடைக்கும்போதுதான்.... நேத்துப் பார்த்துவச்ச கடையின் உள் அலங்காரம் வேற மாதிரி இருந்ததேன்னு தோணுச்சு.   விசாரிச்சால்.... ரொம்பச் சரி..... தகப்பன் மறைவுக்குப்பின் பிள்ளைகள்  அதே பெயரில் தனித்தனிக் கடைகளை ஆரம்பிச்சு நடத்திக்கிட்டு வர்றாங்களாம்.  அடப்பாவமே... நேத்து கொடுத்த வாக்கைக் காத்துலே விட்டுட்டேனே....   ப்ச்....

லோட்டஸ் வந்ததும் விஜியை,  சாப்பிட்டுவந்து ரெஸ்ட் எடுக்கச் சொல்லிட்டு நாங்க அறைக்குப் போயிட்டோம். கீழே இருந்து சாப்பாடு வந்தது.  

சாயங்காலமா  நம்ம டாக்டர் கார்த்திக் கொடுத்த நம்பருக்குப் ஃபோன் செஞ்சால்  வேற வேலையாப் போயிருக்காராம்.  எப்படி இருக்கீங்கன்னு விசாரிச்சுட்டு, மறுநாள்  நேரம் கொடுத்தார். 

 அப்போதான் நம்ம டெய்லர்  செல்லில் கூப்பிட்டுத் துணிகள்  ரெடின்னார்.  நான் போய் வாங்கி வரேன்னு சொன்னேன்.  நம்மவரும்....  கூடவே  கிளம்பி வண்டியிலே இருக்கேன்னார்.  துணிகளை வாங்கினதும்  பில் செட்டில் செய்யும்போது, ஸார் எப்படி இருக்கார்னு விசாரிப்பு.  வெளியே வண்டியில் இருக்கார்னதும்,  வந்து பார்த்துப் பேசிட்டுப்போனார். 28 வருஷமா நமக்குத் தைக்கிறார் என்பதால்  பரஸ்பர அன்பு இருக்கு !
நாளைக்குச் செக்கப்பில் எல்லாம் சரியா இருக்கணுமே.....    பெருமாளே......

தொடரும்.....:-)




5 comments:

said...

மகள் போன்ற நட்பு வாழ்க.. நெகிழ வைக்கும் நிகழ்வுகள்.

said...

அருமை நன்றி

said...

வாங்க ஸ்ரீராம்,

எல்லாம் போன ஜன்ம பந்தங்களாகத்தான் இருக்கணும்!

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

மகள் போன்ற நட்பு...... நெகிழ்ச்சி. நல்லதே நடக்கட்டும். செஸ் பலகை போன்ற மேம்பாலம். படங்கள் நன்று.