ரொம்ப சுவாரஸியமான சமாச்சாரங்கள் எல்லாம், நம்ம லோட்டஸில் இருந்து வெறும் ஐநூறு மீட்டரில்தான் இருக்கு ! என்னோட ஷாப்பிங் லிஸ்டுலே இருப்பவைகளை எல்லாம் அங்கே இங்கேன்னு நடந்தே வாங்கிடலாம் என்றாலும்..... போக முடியாமல் இருக்கேன். இடத்துக்குப்பெயர் பாண்டி பஸார். அப்பதான் தோணுச்சு..... அங்கங்கே பாதுகாப்பு அதிகமா இருக்கும் சிறைச்சாலையில் இருந்தே ஷாப்பிங் போறாங்களாமே.... இது வெறும் ஹவுஸ் அரெஸ்ட்தானே ? அதுவும் எனக்கில்லையே.... ஒரு மாரல் சப்போர்ட்தானே கொடுக்கறேன்.
பகல் சாப்பாடு முடிச்சுக் கொஞ்சம் தூக்கம்போடும் நேரத்தை நான் பயன்படுத்திக்கணும் ! 'வண்டிக்குச் சொல்லிடவா ? தினம் பகலில் வாசலில் கொண்டு வந்து நிறுத்தச் சொன்னால் ஆச்சு'ன்னார்.
"ஆமாமாம்.... தினமுமுமா போகப்போறேன். மனசுக்குத் தோணும்போதுதான் அதெல்லாம். கீழே போய் ஒரு ஆட்டோ எடுத்தால் போதும்."
பரிசோதனைக்காக ஒருநாள் 'போயிட்டு வரேன்'னு கிளம்பினேன். வாசலுக்கு வந்தவுடன், எதிர்வாடையில் இருக்கும் ஆட்டோக்களில் எதாவது ஒன்னு வந்து நிக்கும். லோட்டஸ் ஒரு கெஸ்ட் ஹவுஸ்ன்னு தெரியாம இருக்குமா என்ன ? பாண்டி பஸார்னு சொன்னதும், சொல்லி வச்சாப்போல எல்லோரும் நூறுன்னு பல்லவியை ஆரம்பிப்பாங்க. நாலு நிமிட் பயணத்துக்கு இது அதிகமில்லையோ ? இப்ப மெட்ரோ வருதுன்னு போக்குவரத்தை தினம் ஒரு விதமாத் திருப்பி விடறது, இவுங்களுக்கு இன்னும் வசதியாப் போச்சு. 'ஒன்வே பண்ணிட்டாங்கம்மா.... சுத்திக்கிட்டுப்போகணு'முன்னு அடுத்து அனுபல்லவி. வேணாம். நீங்க போங்கன்னு சொன்னதும், நீங்க வழக்கமாக் கொடுக்கறதைக்கொடுங்க..... சரணம். தினம் கச்சேரிதான் போங்க.
ஆட்டோவுலே ஏறி உக்கார்ந்ததும் 'நோ சுத்து அட் ஆல்'. (ஒன்வேயை இவுங்களே மாத்திட்டாங்க ) கிளம்பி நேராப்போனா நாயர் ரோடு. இடப்பக்கம் திரும்பிக் கொஞ்சதூரத்துலே ராமன் ரோடு. அடுத்த ரோடு ஸர் தியாகராயா ரோடு. அம்புட்டுத்தான்.
கைராசி கடைக்குப் போனேன். இந்தக் கடையை சுமார் அறுபது வருஷங்களாப் பார்த்துக்கிட்டு இருக்கேன். ஆரம்ப காலங்களில் சின்னதா இத்துனூண்டா ஒரு கடை. வெறும் மேட்ச்சிங் ப்ளௌஸ் துணி' கட் பீஸ் வித்துக்கிட்டு இருந்தாங்க. அந்தக் காலத்தில் இப்ப வர்றதுபோல அட்டாச்சுடு ப்ளௌஸ் பீஸ் புடவைகள் எல்லாம் இல்லவே இல்லை. ஏதோ ஒரு நிறம், பேட்டர்ன்னு போட்டுக்குவாங்க. எதுக்கெடுத்தாலும் கருப்போ, வெள்ளையோ போதுமுன்னு சொல்லிக்குவாங்க. அப்புறம்தான் புடவைக்கலருக்கு மேட்ச்சா ப்ளௌஸ் போடும் ஃபேஷன் வந்ததது. அப்போ ஆரம்பிச்ச கடைதான் இது. காலப்போக்கில் வியாபாரம் வளர்ந்து இப்போ சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிஸினஸா ஆகி ருக்கு. அட்டகாசமான ரெண்டு மாடிக் கட்டடம். மாடியிலும் கீழேயுமா வகை வகையாகக் கொட்டிக்கிடக்கு !
எனக்கு மூணு புடவைகள் வாங்கிக்கணும். இங்கே இருக்கும் தோழிக்கு ஒன்னு, நம்ம சம்பந்தியம்மாவுக்கு ரெண்டு. அடுத்தவங்களுக்கு வாங்கறதால் கொஞ்சம் கவனமாத்தான் வாங்கணும். புடவை டிஸைனை அனுப்பி ஓக்கே ஆகுமான்னு பார்க்கலாம்தான். ஆனால் என்னாண்ட தான் வைஃபை இல்லையே..... விற்பனையாளரிடம் சொல்லி ரெண்டு படம் எடுத்துக்கிட்டுப் புடவைகளைத் தனியா எடுத்து வைக்கச் சொல்லிட்டு வந்துட்டேன். அறைக்குப்போய்ப் படங்களை அனுப்பினதும் 'ஓக்கே'ன்னுட்டாங்க. நம்ம செலக்ஷன் மேல் அபார நம்பிக்கையாமே ! நாளைக்கு இதே நேரத்தில், இதே மாதிரிப் போய் வாங்கிக்கணும்.
இன்னிக்கு வெறும் முக்கால் மணி நேர அவுட்டிங் தான். வந்து பார்த்தால் இவரும் ஷாப்பிங் பண்ணிக்கிட்டு இருக்கார் ! ஆன்லைன் ஷாப்பிங், அமேஸான்லெ! நியூஸியிலே அமெஸான் வியாபாரத்துக்கு அனுமதி இல்லை. கொஞ்ச நாளுக்கு முந்திதான் அண்டைநாடு அஸ்ட்ராலியாவில் ஆரம்பிச்சு இருக்கு. நியூஸிக்கு வேணுமுன்னால் அஸ்ட்ராலியாவில் டெலிவரி ஆகும் பொருட்களை வேறொரு தனிக் கூரியரில் அனுப்புவாங்களாம். அப்ப டபுள் செலவு. சுண்டைக்காய்க் கால் பணம். அனுப்பும் செலவு ஒன்னே முக்கால் பணம் !
இப்ப இந்தியாவில் இருப்பதால் இங்கே வாங்கி, நாம் கொண்டு போகலாமுன்னு ஐடியாக் கொடுத்தவரே நம்மவர்தான். ஆஹா..... விட முடியுமா? சாம்பிள் பார்க்கலாமுன்னு நம்ம ஜன்னுவுக்கு ஒரு ட்ரெஸும், பேக் ட்ராப் ரெண்டும் ஆர்டர் கொடுத்தோம். மூணே நாட்களில் கரெக்ட்டா வந்துருக்கு. தரமும் பரவாயில்லை. விலையும் மலிவே ! இருக்கட்டும்.... ஒருநாள் உள்ளே போய்ப் பார்க்கணும்!
ஆஸ்பத்ரியில் இருந்து வீட்டுக்கு வந்தாச்சுன்னதும், நண்பர்கள் நலம் விசாரிப்பதும், நேரில் வந்து போகறதுமா இருக்காங்க. நியூஸித் தோழி ஒருவரின் அம்மாவும் ஒருநாள் வந்தாங்க. கையோடு பழங்களும், பட்டுப் புடவையுமா! ஊர் திரும்புமுன் கட்டாயம் வீட்டுக்குச் சாப்பிட வரணும் என்ற நிபந்தனையும் கூட! பயணம்தான் எப்போன்னு இன்னும் தெரியலையே.... அவுங்களை வழி அனுப்பக் கூடவே கீழே போனால்.... அம்மா, தங்கைன்னு காரில் இருக்காங்க. எல்லோருமே நியூஸிக்கு வந்துபோனவுங்க என்பதால் சட்னு ஒரு நெருக்கம் ஏற்பட்டுப்போச்சு. 'நம்மவருக்கு'க் காண்பிக்க சில க்ளிக்ஸ் :-)
நமக்குப் பகல் சாப்பாடெல்லாம் கீழே ரெஸ்ட்டாரண்டில் இருந்து வரவழைப்பதால் அலைச்சல் இல்லை. ஒரு தாலி வாங்கினாலே மீந்துதான் போகுது. இப்பெல்லாம் தாலியை ப்ளாஸ்டிக் ட்ரேவா மாத்தியிருக்காங்க. (-:
நேத்து மாதிரி கொஞ்சம் கடைக்குப்போகன்னு கிளம்பினால்..... 'வண்டியை வரவழைக்கிறேன். நானும் கூட வந்து வண்டியிலேயே இருக்கேன்'னு ஆரம்பிச்சார். உண்மையில் போரடித்துதான் இருக்கார் என்பதால் சரின்னு சொல்லியாச்சு. போறது போறோம்.... அப்படியே இன்னும் சில வேலைகளையும் செஞ்சுக்கலாமே..... ஒரே கல்லில் சில மாங்காய்ஸ்!
பொதுவா கடைகளில் இருக்கும் 'ஸல்வார் கமீஸ் செட்' வாங்கிக்க விருப்பம் இல்லை. கமீஸுக்குப் பொருத்தமுன்னு திராபையா ஒரு ஸல்வார் மெட்டீரியல் இருக்கும். அதனால் கூடியவரை தனியாகவே துணி எடுத்துத் தைக்கக் கொடுப்பேன். கைராசியில் எடுத்துவைக்கச் சொன்னப் புடவைகளை வாங்கிக்கும்போது கூடவே மூணு செட் துணிகள் எனக்கும் ஆச்சு.
வாங்குன கையோடு நம்ம டெய்லரிடம் கொண்டுபோய்க் கொடுத்தேன். அவருக்கு ஆச்சரியமாப் போயிருச்சு. அதுக்குள்ளே சௌத் போயிட்டு வந்துட்டீங்களா ? 22 ஆம் தேதிதானே வர்றதாச் சொன்னீங்க? நீங்க ஏற்கெனவே கொடுத்துட்டுப்போனவைகளை இன்னும் தைக்கலையே.... ன்னு கேள்விகளாக் கேட்கறார்.
சௌத் போகவே இல்லை. ஸாருக்கு உடம்பு சரியில்லாமப் போயிருச்சு. இங்கேதான் இருக்கோம். எல்லாத்தையும் ஒன்னாவே 22 தேதிக்குக் கொடுங்கன்னுட்டேன்.
அப்படியே மங்கேஷ் தெருவில் நம்ம சீனிவாச ஆச்சாரி கடைக்குப்போய் ஒரு சங்கிலியைப் பாலிஷ் பண்ணிக்கணும். அவருக்கும் வியப்பே ! அதுவும் நான் தனியாகப் போய் நிக்கறேன். எப்ப வந்தீங்க? ஸார் வரலையா ?
வந்துருக்கார். கொஞ்சம் உடம்பு சரியில்லை.
ஒரு மணி நேரம் ஆகும். பரவாயில்லையான்னார். பரவாயில்லை. அப்புறம் வந்து வாங்கிக்கறேன்னு கிளம்பிட்டேன். இன்றைக்கு ட்ரைவர் நம்ம சரத் தான். தம்பி விஜிக்கு லீவு :-)
பாலாஜி பவனுக்குப்போய் பஜ்ஜியும் காஃபியுமா ஆச்சு. எதிர்வாடைக்குப்போய் எனக்கொரு பாட்டா சப்பல். திரும்பி மங்கேஷ் தெருவுக்குப்போய் சங்கிலியை வாங்கிக்கிட்டோம். நம்ம சீனிவாச ஆச்சாரி, எழுந்து வந்து நம்மவரிடம் நலம் விசாரிச்சுக்கிட்டார். போதும் இன்றைக்குன்னு லோட்டஸுக்கு வந்து சேர்ந்தோம்.
'உன் ஷாப்பிங் எல்லாம் முடிஞ்சுருச்சுதானே' ன்னவருக்கு ஒரு முறைப்பைப் பதிலளித்தேன்.
தொடரும்............ :-)
8 comments:
ஷாப்பிங் முடிஞ்சுருச்சா ன்னு கேட்க என்ன ஒரு தைரியம், சாருக்கு. வாவ் .
பாண்டி பஜாருக்குப் பக்கத்தில் தங்கிவிட்டு, அதுவும் மற்ற பிரயாணங்களெல்லாம் கேன்சல் செய்தபிறகு, 'ஷாப்பிங் முடியுமா? முடியக்கூடிய விஷயமா?'? இன்னும் பாண்டிபஜாரில் எவ்வளவோ கடைகள் இருக்கு (அங்கு அருமையான புதிய ரெஸ்டாரண்டும் உண்டே), பக்கத்தில் மைலாப்பூரில் எஸ்.எம்.ஸில்க்ஸ் மற்றும் பொம்மைக் கடைகள்....
நீங்கள் பழகிய பழைய கடைகளுக்கே போகாமல் புதிய கடைகளும் ட்ரை செய்ய மாட்டீர்களா? ஆக்சுவலா லோட்டஸ் எங்கன இருக்கு?!
வாங்க விஸ்வநாத்,
அதானே.... மயக்கம் போட்டபின் நல்லா துளிர் விட்டுப்போச்சு.... முளையிலேயே... கவனிச்சுட்டேன் ! நல்லதாப் போச்சு :-)
வாங்க நெல்லைத்தமிழன்,
எடைப் பிரச்சனை ஒன்னு இருக்கே.... அதனால் கவனமாப் பார்த்துதான் வாங்கிக்கணும்.
மத்த பயணங்களிலும் அதிகமா ஒன்னும் வாங்கிக்கறதில்லை. கஷ்டப்படாம எடுத்துப்போகக்கூடிய ஷாப்பிங் பண்ணிக்கலாமுன்னா..... ஏகத்துக்கும் விலை ஏறிக்கிடக்கே..... பவுனு 45 ஆயிரத்துக்கும் மேலே...........
வாங்க ஸ்ரீராம்,
புதுக்கடைகளில் ஆடம்பரம் இருக்கே தவிர, நம்ம டேஸ்டுக்குத் தகுந்தாப்லெ ஒன்னும் இல்லை. விற்பனையாளர்களும்.... சின்னவயசுக்காரர்களா இருப்பதால்....ஒரு அலட்சிய மனப்பான்மையோடு இருப்பதாக எனக்குத் தோணுது.
மாடர்ன் வகைகளாம்..... இங்கே நியூஸியில் இல்லாததா....
அனுபவம் வாய்ந்த பழைய கடைகளில் என்ன கூட்டம்ங்கறீங்க ?
@ ஸ்ரீராம்,
லோட்டஸ், 15 வெங்கட்ராமன் தெரு தி. நகர். பாண்டிபஸாரில் இருந்து டாக்டர் நாயர் ரோடுக்குள் வந்தால் வலதுபக்கம் ரெண்டாவது தெரு.
ஷாப்பிங் முடிந்து விட்டதா? ஹாஹா கேட்கக் கூடாத கேள்வி..... :)
அனுபவங்கள் அனைத்தும் நல்லதாகவே அமையட்டும்.
Post a Comment