Friday, May 19, 2023

காத்திருப்பின் கஷ்டங்கள்...... கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 50

இன்னிக்குக் காலையில் எழுந்ததும் முதலில் கண்ணில் பட்டது கோவில் பிரஸாதம்! நேத்து நம்ம தோழி அருணா இங்கே வருமுன் நம்ம அடையார் அநந்தபதுமனுக்கு 'நம்மவர்' பெயரில் ஒரு அர்ச்சனை பண்ணிட்டுப் பிரஸாதம் கொண்டு வந்துருந்தாங்க.  என் கையில் கொடுத்ததை  வாங்கி மேஜையில் வச்சவள் அதை மறந்தே போயிருந்தேன். 
ஜன்னல் திரையைத் திறந்தால்......   ராத்ரி முழுக்க மழை விடாமல் இருந்துருக்கு.   முதல்வேலையாப் பத்துப்பாத்திரம் தேய்ச்சுக் காய வச்சேன்.  இனி அவரவருக்குத் திருப்பிக்கொண்டுபோய் கொடுக்கணும். 

முதலில்  காலை ப்ரேக்ஃபாஸ்டுக்கு முன் கொடுக்க வேண்டிய மாத்திரையை எடுக்க , ஹாஸ்பிடலில் நேத்துக் கொடுத்த மருந்துகள் இருந்த பையைத் திறந்தால்.....  எளிதில் புரிஞ்சுக்கறாப்லெ  அருமையா தனித்தனியாப் போட்டு எழுதிக்கொடுத்துருக்காங்க. 
நம்மாண்டைதான்  வலை இருக்கேன்னு  கூகுளாண்டவரிடம் மருந்து விவரம் என்னன்னு பார்த்தால்.....  கொடுத்ததில்  நாலு வகை மாத்திரைகள் BPக்கும்  ரெண்டு வகை  VERTIGOவுக்குமா இருக்கு.  கீழே தடால் னு விழுந்ததன் பலன்!   எனக்கும் ரொம்ப வருஷங்களுக்கு முன் இப்படிக் காலையில் எழுந்ததும்,  கீழே கால் வைக்கும்போது தரையெல்லாம்   சுத்தும். அப்புறம் டாக்டர் செக்கப்பில்  'காதுக்குள்ளே இருக்கும் திரவத்தில்  என்னமோ ஆகி , பேலன்ஸ் போயிருக்கு'ன்னு  சொல்லி மருந்து சாப்பிட்டு  பத்துநாளில் சரியாச்சு. 

வெர்ட்டிகோ வந்துருச்சுன்னா  கஷ்டமே கஷ்டம்தான்.  நிதானமே பிரதானமா எப்பவும் இருக்கணும்.  காலைக் கடமைகளை முடிச்சுட்டுக் கீழே ப்ரேக்ஃபாஸ்டுக்குப் போனோம். 
நடையில் மாற்றம். தெருவில் நடக்கும்போது முன்னெல்லாம் நீ முன்னாலே போ... நான் பின்னாலே வாறேன்னு வருவார். திருடன் எவனாவது என் கழுத்துச் சங்கிலியைப் பிடிச்சு இழுத்தால்  துள்ளிக் குதிச்சு அவனை  அடிச்சு விரட்டி, என்னைக் காப்பாத்துவாராம்.  இப்போ ?  அது ரிவர்ஸ். இவர் முன்னாலே போனால் நான் பின்னாலே போவேன். கீழே விழும்போது சட்னு தாங்கிப்பிடிச்சு மெல்ல தரையில்  கிடத்துவேன். சரியா !!!

பகல் சாப்பாடு நம்ம கவிதாயினி மதுமிதா கொண்டு வந்தாங்க. கொஞ்சமாக் கொண்டு வாங்கன்னு யாருமே பேச்சைக் கேக்கறதில்லைப்பா....
கோவிடுக்கு முந்தி போன  இந்தியப் பயணத்துலே நம்ம  அமெரிக்கத் தோழியை சென்னையிலே சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சது.  நாம்  முந்தின இரவுதான்  சென்னைக்குப் போய்ச்சேர்ந்துருக்கோம்.  இவுங்க பயணம் முடிச்சுட்டு  இன்றைக்கு இரவு கிளம்பறாங்க. இன்னொரு தோழி வீட்டில் சந்திப்பு.   வரேன்னு  சொன்ன எங்க நெருங்கிய தோழிகள் சிலர் வரமுடியலை.  அதுக்காகத் தோழி எல்லோருக்காகவும் கொண்டு வந்துருந்த  கீச்செயினைக் கொடுக்காமல் இருப்பதா ?  நாங்கள்  எங்க பயணநாட்களில்  அந்தச்  சிலரில்  இருவரைச் சந்திக்கும்  ஏற்பாடு இருந்ததால்  நான்  கொடுத்துடறேன்னு  வாங்கி வச்சேன். 
அந்தப் பயணம் முடியும்வரை இருவரையும் சந்திக்கவே முடியாமல் போச்சு.  கீ செய்ன் தானே? அவ்ளோ முக்கியமான்னு கேக்கப்டாது.....  குழுவிற்கான  முத்திரை மோதிரமுன்னு வச்சுக்கலாம்:-)அது ரெண்டும் நியூஸிக்கு வந்து  மூணு வருஷம்   பார்டர் க்ளோஸால்  எங்கூடவே இருந்து,   இந்தப் பயணத்தில் திரும்ப இந்தியாவுக்கு வந்துருக்கு.  அந்த இருவரில் ஒருவர் நம்ம  மது !  கையில் கொடுத்து, சாட்சிப்படம் எடுத்து  அமெரிக்கத் தோழிக்கு அனுப்பியாச். அப்பாடா... நிம்மதி.  இனி ஒன்னு பாக்கி என் வசம்.
வேற வேலை ஒன்னு இருக்குன்னு  மது கிளம்பிப்போறாங்க.  வாசலில் ஆட்டோ ஒன்னும் கிடைக்கலை. தெருமுனை வரைக்கும் நடந்துபோனால் கிடைச்சுருமுன்னு நடந்தாங்க. நல்லவேளை மழை இல்லை.
சாயங்காலம் நம்ம கார்த்திக் வந்தார். கையில் துளசியும் மஞ்சளும் !  அட ! இப்படி ஒன்னு வந்துருக்கா ? தெரியாதேன்னுட்டு நன்றியுடன் வாங்கி வச்சேன்.  ராத்ரி டின்னர்க்கு சூப்பும் ப்ரெட்டுமா ஜமாய்ச்சாச்சு. 

நடமாட்டம் இல்லாததால்.... லைட் சாப்பாடுதான் நல்லது. பின்னந்தலை வலிக்குதுன்னார்.  லேசா வீக்கம் இருக்கறமாதிரித் தெரிஞ்சது.  இடது தோள்பட்டையிலும்  வலி இருக்காம்.  ஹாஸ்பிடலில் இருக்கும்போது சொல்லலையே....    ஒருவேளை.......  கொஞ்சநாள்  கழிச்சுத்தான் ஒவ்வொன்னா வெளியில் வருதோ...........     மருண்டவள் கண்களுக்கு.........   பெருமாளே......
மறுநாள் சித்ரா  கூப்பிட்டு 'எப்படி இருக்கீங்க 'ன்னு கேட்டாங்க. டிஸ்சார்ஜ் ஆன விவரம் சொன்னதும், 'இதே ஏரியாவில்தான் இருக்கேன். வர்றேன்'னுட்டு மிளகு வைத்தியம் செஞ்சாங்க.  இவருக்குப் பின்மண்டையில் வலின்னதும், ஒரு தைலம் கொடுத்துச் சும்மாத் தடவி விட்டால் போதும்னு சொல்லி ஒரு டெமோ காமிச்சாங்க. காயத்திருமேனி தைலம். சித்த மருத்துவம்.  வேற யாருக்கோ கொண்டு போக வேண்டியது, நமக்காச்சு. போகும் வழியில்  வேற வாங்கிக்கறேன்னுட்டுப் போனாங்க.

காலையில் கீழே போய் ப்ரேக்ஃபாஸ்ட்  முடிச்சதும் ரெஸ்ட்டாரண்ட் வாசலில் இருக்கும் சின்னத்தோட்டத்தில் ஒரு அஞ்சு நிமிட் உக்கார்ந்து வெளியுலகைப் பார்க்க விட்டு, அறைக்குக் கூட்டி வந்தால்  அன்றைக்கான அவுட்டிங் ஆச்சு நம்மவருக்கு. 
நாந்தான் பழமுதிர்நிலையம், சுஸ்வாத் கடைன்னு போய் ஜூஸ், தயிர், பழங்கள், தீனி இப்படி வாங்கி வந்துக்கிட்டு இருந்தேன்.  ரொம்ப போரடிச்சுக்கிடக்கறார். பொழுது போக ஒரு தமிழ்  & ஒரு இங்லிஷ் தினசரிகள், டிவி.
எப்படியானாலும் அடுத்த செக்கப் ஆனதும்தான் எந்த முடிவும் எடுக்கணும். காத்திருப்பும் கஷ்டம்தான்.....இல்லையோ....

தொடரும்......... :-)


10 comments:

said...

எல்லாம் நல்லதிற்கே

said...

மெல்....லத் திரும்பும் நார்மல்சி!

said...

உங்க தளத்தைப் படிக்க ஆரம்பித்த ஆரம்ப நாட்களில் இதுமாதிரி கோபால் சார் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனது பற்றியெல்லாம் எழுதியிருந்ததைப் படித்து, என்னாச்சு என்னாச்சு என்று மனசு ரொம்பவே யோசிச்சுக்கிட்டிருந்தது. பிறகுதான் நீங்க பழைய கதையை டைரி மாதிரி எழுதற டைப்புன்னு புரிஞ்சது.

அதுனால இந்தத் தொடர் டென்ஷன் இல்லாமல் படிக்க முடிந்தது. கோபால் சார் நல்லா பூரணமா குணமாயிருப்பார். ஆனாலும் அந்த நிகழ்வு நடந்தபோது உங்களுக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்திருக்கும்.

said...

கோபால் அண்ணா இப்ப நலம்தானே துளசிக்கா? முந்தைய பதிவுகளும் வாசித்துவிட்டேன். விரைவில் சரியாகிடும். ரிப்போர்ட்ஸ் எல்லாம் நார்மலாகத்தானே இருக்கு இறைவனுக்கு நன்றி.

முன்ன நியூஸில கண்ணுல பிரச்சனை வந்து சரியாகியது போல இதுவும் எல்லாம் சரியாகிடும்.

கீதா

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க ஸ்ரீராம்,

உண்மை !

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

பயணத்தில் இருக்கும்போது அப்போதைக்கப்போதே எழுதுவது கஷ்டம். அதுவும் இப்படி உடம்பு சரியில்லாமப்போனால் யோசிக்கவும் நேரம் இருக்காதே !

பின்னால் எதற்காவது உதவும் என்றுதான் (சம்பந்தப்பட்ட நபருக்கு எத்தனை முறை விளக்குவது ? ) எழுதி வைக்கிறேன்.

புரிதலுக்கு நன்றி !

said...

வாங்க கீதா,

இப்போதைக்கு அவ்வளவு மோசமில்லை. சமாளிக்க முடிகிறது.

கண் பிரச்சனைதான் இன்னும் தீரவில்லை. ஒன்னுமாத்தி யொன்னுன்னு இருக்கு கண்ணு! ப்ச்....

said...

காத்திருப்பு கடினமானதுதான்.ஓய்வும் தேவையே என மனம் தேற்றி இருக்கும்.

said...

சந்தித்த பிரச்சனைகளை இப்படி எழுத்து வடிவில் சேமித்துக் கொள்வது நல்லது. அடுத்தவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவலாம். நண்பர்கள் உதவி மறக்க முடியாத அனுபவம் தான். நல்லதே நடக்கட்டும்.