Monday, May 08, 2023

உடல் சொர்கத்தில் மனம் நரகத்தில்..... கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 45

ராத்ரி அஞ்சு மணிவரை தூக்கமே வரலை. மனசுலே ஒரே உளைச்சல். மணிக்கொரு முறை நர்ஸுகள் வந்து போய்க்கிட்டு இருக்காங்க.  இவர் அனக்கமே இல்லாமக் கிடக்கார்.  ட்ரிப் ஏத்தியிருக்காங்க. மானிட்டரையே முறைச்சுப் பார்த்துக்கிட்டு இருந்தேன். மணி ஆறும் ஆச்சு.  இனிமே என்ன தூக்கமுன்னு எழுந்துட்டேன்.  
ஹாஸ்பிடல் அறை  பரவாயில்லைன்னு   இருந்தாலும் பாத்ரூம்  ரொம்பவே சுமார்.  வாசல்,  தரையோடு இல்லாமல் ஒரு அரையடி உயரத்தில் இருக்கு.  நம்மவர் காலைத் தூக்கி வச்சால்  சரி.... பார்க்கலாம். முடியுமான்னு.....

முதலில் 'இன்றைய மீட்டிங் ரத்து' என்ற சேதியைத் தோழிகளுக்கு அனுப்பினேன்.  '

என்ன ஆச்சு என்ன ஆச்சு'ன்னு  பதில் செய்திகள்.  கோபாலுக்கு உடம்பு சரியில்லை. ஹாஸ்பிடலில் அட்மிட் னு சுருக்கமாச் சொல்லியாச். அண்ணனுக்கும் தகவல் சொல்லியாச்சு.  இப்பக் கிளம்பி வர்றேன்னார்.   வேணாம் .  இன்னும் கொஞ்சம் டெஸ்ட் எல்லாம் இருக்காம். நிதானமா வாங்கன்னுட்டேன்.

ஏழுமணிபோல  காலை ட்யூட்டி  டாக்டர் வந்து பார்த்தார். நம்மவர் அரை மயக்கத்தில்....  பயப்படவேணாமுன்னு சொல்லிட்டுப் போனார்.  BP இறங்கிவருது.  நம்மவருக்கு  எழுந்து  நிற்க முடியாதுன்றதால்   தேவையான பணிவிடைகளை நர்ஸுகளும், உதவியாளர் பார்வதியம்மாளும் சேர்ந்து செஞ்சாங்க. எனக்குத்தான் பேஜாராப் போச்சு. ப்ச்....

நான் லோட்டஸ் போய், குளிச்சுட்டு இவருக்கும் ஏதாவது ப்ரேக்ஃபாஸ்ட் கொண்டு வரணுமுன்னு கிளம்பினேன்.  காலை ட்யூட்டி நர்ஸுகளும்  '  அப்பாவை நாங்க பார்த்துக்குறோம்மா. நீங்க போயிட்டு வாங்க'ன்னு சொன்னாங்க. எல்லாம் சின்னப்பொண்ணுங்க. சிரிச்சமுகத்தோடு அன்பா ஆதரவாப் பேசறாங்க. 
வாசலுக்கு வரும்போது நேத்து இவர் விழுந்த இடத்தைப் பார்க்கறேன். திக் னு இருக்கு. பக்கத்துலே ஒரு பெரிய பாறை !  கொஞ்சம் பின்னால் விழுந்துருந்தால் மண்டை சிதறி இருக்கும்.  பெருமாளே பெருமாளேன்னு  கேட்டுக்கு வெளியே   வந்தால் ஆட்டோ கிடைச்சது.  நார்த் போக் ரோடு , ஒன்வே என்பதால்  கொஞ்சம் சுத்திக்கிட்டுப்  போகணும்.  ஹாஸ்பிடல் இருக்கும் விஜயராகவாச்சாரி ரோடில் இருந்து,  நார்த் போக் ரோடைக் கடந்து நேராகப்போய்,  முதலில் வரும் தெருவில்  லெஃப்ட் (லோடிகான் 3 வது தெரு )எடுத்தால் அது லோட்டஸ் இருக்கும் வெங்கட்ராமன் தெருவுக்குள்   வந்துரும். மொத்தமே ஒரு 450 மீட்டர் வரும்.  

அந்த லோடிகான் 3 வது தெரு, கிட்டத்தட்ட ஒரு நீச்சல் குளம். மழைத்தண்ணி தேங்குதல் ஒரு காரணம் என்றால், நம்ம எதிர் வீட்டில் பம்ப் வச்சு இறைக்கும் தண்ணீரும்   இதுலே போய்த்தான் சேருது.
 ஆனால் நடந்து போனால் 400 மீட்டர்தான்.  அதே நார்த் போக் ரோடில் லெஃப்ட் எடுத்து கொஞ்ச தூரம் நடந்தால் பழமுதிர்நிலையம் வரும். அதுக்கு நேரே எதுத்தாப்லெ இருக்கு  வெங்கட்ராமன் ரோடு . வண்டிகளுக்குத்தான் ஒன்வே. நடக்கறவங்களுக்குமா ? 

லோட்டஸுக்குள் நுழைஞ்சதும்   கேட்டில் இருக்கும் வாட்ச்மேன் முதல் ரிஸப்ஷனில் இருந்தவர்கள்  வரை 'ஸார் எப்படி இருக்கார்?. எதாவது உதவி வேணுமுன்னா சொல்லுங்க'ன்னாங்க.

அறைக்குள் போய் சூடா ஒரு ஷவர் எடுத்தபிறகுதான் உடல் அசதி கொஞ்சம் குறைஞ்சாப்லெ இருந்தது.  கீழே ரெஸ்ட்டாரண்டுக்குச் சாப்பிடப்போனால்...... அங்கே இருந்த ஸ்டாஃப் எல்லோரும்  'ஸார் எப்படி இருக்கார்'ன்னு வந்து வந்து கேட்டுட்டுப் போனாங்க.   இந்த மாதிரி விசாரிப்புகள், கேட்கவும் நாதி இருக்குன்னு மனசுக்குத் தெம்பைக் கொடுத்தது உண்மை.  

நம்மவருக்கு ரெண்டு இட்லி, சக்கரை,   ப்ரெடுக்கு வச்சுருக்கும் வெண்ணை & ஜாமைப்  பார்ஸல் பண்ணச் சொல்லிட்டு, மேலே அறைக்குப்போய் பயணத்துக்குன்னு கொண்டுபோகும் ஃப்ளாஸ்கை எடுத்துவந்து  கொதிக்கும் தண்ணீர்விட்டுக் கழுவிட்டு அதில்  ரெண்டு கப் பாலை ஊத்தச் சொன்னதும் அப்படியே எல்லாம் ரெடி ஆச்சு.  

வாசலில் ஆட்டோ கிடைச்சது. நேராப் பழமுதிர் நிலையத்தில் ஒரு ஸ்டாப் போட்டு, ஒரு தயிர் வாங்கிக்கிட்டு ஹாஸ்பிடலுக்குப் போனேன்.  நம்ம அறைக்குப் போனால் கார்த்திக் வந்துருக்கார். சுடச் சுட இட்லி, சட்னி,  தட்டு, ஸ்பூன், கப்ன்னு   நமக்குத் தேவைப்படும் எல்லாத்தையும்  கொண்டு வந்துருக்கார்.  கவனிப்பைப் பார்த்ததும்  மனம் கசிந்தது உண்மை.   பிள்ளைகளைக் கொண்டுபோய் பள்ளிக்கூடத்தில் விட்டுட்டு வரேன்னார்.  இங்கே நல்லபடித்தான் இருக்கு.  நீங்க உடனே ஓடிவரவேணாம். தேவைன்னா சேதி அனுப்பறேன்னு சொன்னேன்.  தி நகருக்கும் பல்லாவரத்துக்கும் கொஞ்ச தூரமா என்ன ? 

இங்கே இந்த ஹாஸ்பிடலில் கேன்டீன் வசதி இல்லை.  ஏதாவது வேணுமுன்னு சொன்னால் அக்கம்பக்கத்துக் கடைகளில் போய் வாங்கி வந்து தருவோம்னு பார்வதி அம்மா சொல்லியிருந்தாங்க.
 
நம்மவருக்கு பல் தேய்ச்சு, உடம்பைச் சுத்தம் செஞ்சு, உடைகள் மாற்றி ,  கொஞ்சம்  ஒரு இட்லியை   ஊட்டிவிட்டு, ஊசி மருந்துகளையெல்லாம்  ட்ரிப் மூலமாகவே செலுத்திக்கிட்டு,  அப்பப்ப வந்து கவனிச்சுக்கிட்டு  எல்லாம் நல்லபடியாகவே நடக்குது.  ஒரே நாளில் நம்மவரின் முகமே மாறிப்போச்சு....  பயக்களை !   ஹார்ட் டாக்டர் வந்து பார்த்துட்டு வேற ஒரு டெஸ்ட்டுக்கு ஏற்பாடு செய்யறதாச்  சொல்லிட்டுப் போனார்.  அடையாறில் இருந்து தோழியும் கணவரும் வந்து பார்த்தாங்க.
ஓர்ப்படி பகல் சாப்பாடு கொண்டுவந்தாங்க. அண்ணன்  ஃபோன் செஞ்சு  சாப்பாடு கொண்டுவரேன்னார். வேண்டாம். இங்கே சாப்பாடெல்லாம் வந்துருச்சு. நீங்க லஞ்ச் முடிச்சுட்டு வாங்கன்னேன்.  அப்படியே ஆச்சு.
நம்ம ட்ராவல் கம்பெனி சதீஷுக்கு ஃபோன்  செஞ்சு, தென் தமிழ்நாட்டுப் பயணம் ரத்துன்னு தகவல் சொல்லிட்டு,  அங்கங்கே செஞ்சு வச்சுருந்த  ஹொட்டேல் புக்கிங் எல்லாத்தையும் ஒவ்வொன்னா  கேன்ஸல் செஞ்சாச்சு. 
குறையொன்றும் இல்லை.....  கோபாலான்னு  இருந்தாலும்.  மனசு பதற்றம் இன்னும் போகலை....  பெருமாளே.... காப்பாத்து........
 

தொடரும்........ :-)







6 comments:

said...

எல்லாம் சுபம்,
ஏழுமலையான் இருக்க எதற்கு பயம்.

said...

வாங்க விஸ்வநாத்,

ஆஹா..... ஏழு மலைக்கும் எனக்கும்தான் டெர்ம்ஸ் சரி இல்லையே !

said...

பதட்டமிருந்தாலும் நிதானமாக சரியாக செயல் பட்டிருக்கிறீர்களா என்று தெரிகிறது.  உடன் இருந்தவர்களும் நிறைய உதவும் எண்ணம் கொண்டவர்களாய் இருந்திருக்கிறார்கள்.

said...

வாங்க ஸ்ரீராம்,

அந்த வேளையில் புத்தி பேதலிக்காமப் பார்த்துக்கிட்டப் பெருமாளின் கருணைக்குத்தான் நன்றி சொல்லிக்கிட்டு இருக்கேன்.

said...

சிரமத்தின் மத்தியிலும் தளர்வுறாது தனியனாக பயண ஒழுங்குகளை செய்துவிட்டீர்கள்.

said...

வாங்க மாதேவி,

எம்பெருமாள் கூடவே இருந்து வழிகாட்டினார் என்றுதான் சொல்லணும் !