Wednesday, May 10, 2023

பாவமும் கோபமும்........... கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 46

நம்ம தோழிகள்  எல்லோரும் கூப்பிட்டு விசாரிச்சுக்கிட்டே இருந்ததுடன்,  சாப்பாடு அனுப்பறோமுன்னு ஒரே நேரத்துலே சொல்ல ஆரம்பிச்சதும்தான், இதன் தீவிரம் புரிஞ்சது. ஒரு நாளைக்கு ஒருத்தர்னு  நீங்களே பேசி முடிவு பண்ணிக்கீங்கன்னு கெஞ்சிக் கேட்டுக்கிட்டேன்.
காலையில் வழக்கம்போல் லோட்டஸுக்குப்போய் குளிச்சுட்டு,  நான் ப்ரேக்ஃபாஸ்ட்  சாப்பிட்டதும், இவருக்கு ரெண்டு இட்லி, சக்கரை, பழமுதிர்நிலையத்தில் இருந்து ஒரு தயிர்னு கொண்டு வந்தேன். இந்த அறையில் ஃப்ரிட்ஜ் வசதி இல்லை.  நேத்து ராத்ரி டின்னருக்கு , காலையில் வாங்கி வந்த தயிரும் இட்லியும்தான்.  ஏதோ ஒன்னு வயித்துக்குள் போகணும். கொஞ்சமாவது பலம் வேணும் இல்லையா ?  தினமும் ஒரு தயிர் வாங்கினால் ஆச்சு.

நம்மவருக்கு இப்பக் கொஞ்சம் பரவாயில்லை போல....  ரெண்டு நிமிட் எழுந்து தரையில் கால்பாவி நிக்க முடிஞ்சது.  ரெண்டுன்னா ரெண்டேதான். பின்னாலே கட்டில், முன்னால் நான்னு கைகளை அண்டைக் கொடுத்துக்குவேன்.  தலை சுற்றல் அதிகமா  இருக்குன்னார். 

பகல் சாப்பாடு கொண்டுவரேன்னு கவிதாயினி மதுமிதா கூப்பிட்டுச் சொன்னாங்க.  இவராண்டை என்ன வேணுமுன்னு கேட்டதுக்குத் தயிர் சாதம் போதுமுன்னார்.  காரஞ்சாரமெல்லாம் இப்போதைக்கு வேணாம்.  வயிறும் கெடாமல் இருக்கணும்.  சட்னு ஜீரணமும் ஆகணும். படுக்கையிலே இருப்பதால் செரிமானம் இருக்காதுதானே ? 

எனக்குப் பருப்பு சாதமும், இவருக்கு வெறும் சாதமும் போதும். கைவசம் தயிர் இருக்குன்னேன். அவுங்க  ரெண்டுவகையான சாதமும் தொட்டுக்க ஏதோ பொரியலும் கொண்டுவந்தாங்க. சரியா நினைவில்லை.
முட்டைக்கோஸுன்னு நினைவு. கூடவே மாதுளைகள்.  பேசிக்கிட்டே மாதுளையை உரிச்சதும், பாடிக்கிட்டே உரிங்கன்னேன். ஆஹா அதுக்கென்னன்னு பாட்டும் ஆச்சு !  கோபாலா.....   துளசி லோலா.......  :-)

https://www.facebook.com/1309695969/videos/632975334938782/
தயிர் சாதத்தில் மாதுளையெல்லாம் போட்டு ஸ்டைலா விருந்துதான் !  சாயங்காலம்  ஆனதும்  ரெண்டு பேரும் போய் ஏதாவது சாப்பிட்டுட்டு வாங்கன்னார்.  வேணாமுன்னதுக்குக் கொஞ்சம் வெளியே போய் நடந்துட்டு வாங்க. ஃப்ளாஸ்க் எடுத்துப்போய் டீ வாங்கிட்டு வாங்கன்னார்.  ஸோ..... கெட்டிங் பெட்டர். 

நாங்க வெளியே வரும்போது 'சம்பவம்' நடந்த இடத்தைக் காமிச்சதும் பயந்தே போயிட்டாங்க. கேட்டில் நின்னு வலமா இடமான்னு யோசிச்சு, வலம் போனோம்.   ஒரு பத்துப்பதினைஞ்சு மீட்டரில்  பெரிய கேனில் டீ வச்சுக்கிட்டு சிலருக்கு விளம்பிக்கிட்டு இருந்தார் ஒரு சிறுதொழில் ஓனர்.  கடையில் வாங்காமல் அவரிடம்  ஃப்ளாஸ்கை நீட்டி, பத்து டீ ஊத்தச் சொன்னேன்.  ஒரு டீ ஒரு ரெண்டு வாயளவுதான் இருக்கும்.   

அறைக்குத் திரும்பினோம்.  தரையைச் சுத்தம் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க லக்ஷ்மி.  நம்மவருக்கும் எனக்கும் டீ எடுத்துக்கிட்டு,  சூடா இருக்கும்போதே குடிங்கன்னு ஃப்ளாஸ்கை லக்ஷ்மியிடம்  கொடுத்தேன். நம்ம மது   காஃபி, டீ குடிக்கறதில்லை.  

மது கொஞ்சநேரம் இருந்துட்டு, கோபாலுக்கு ஆறுதல் சொல்லிட்டுக் கிளம்பினாங்க. தி.நகர் வாசிதான் என்பதால், எதுன்னாலும் எப்ப  வேணுமுன்னாலும் கூப்பிடலாம், பிரச்சனை இல்லைன்னு சொல்லிட்டுப் போனாங்க.

கொஞ்ச நேரத்துலே  EEG  எடுக்கப்போறாங்கன்னு நர்ஸ் வந்து சொல்லிட்டு,  இந்த மாதிரி வெளியே இருந்துவரும்  சர்வீஸ்களுக்குக் கேஷ் தான் கொடுக்கணும், கார்ட் எடுக்க மாட்டாங்கன்னு  சொல்லிட்டுப் போனாங்க. கைப் பையைப் பார்த்தேன். இருக்கு. 



டெக்னீஷியன் வந்தார். வேக்ஸ் மாதிரி ஒன்னு வச்சு  electrodes களை தலையெல்லாம் ஒட்ட வச்சுட்டு  டெஸ்ட் நடந்துச்சு.  தலைசுத்தலுக்கான காரணம் என்னன்னு பார்க்கணும் இல்லையோ !  






வெறும் கோடுகள்தான் மானிட்டரில் தெரியுது.  இதுக்கெல்லாம் என்ன பொருள்னு எனக்கெப்படித் தெரியும் ? க்ருஷ்ணார்ப்பணம்தான்.  டெக்னீஷியன் செல்ஃபோனைப் பார்த்துக்கிட்டு இருந்தார்.  ஃபேஸ்புக் இல்லை.:-) 

முக்கால் மணி நேரம் ஆச்சு.  எல்லா ஒயர்களையும் எடுத்துப் பேக் பண்ணிட்டு, காசை வாங்கிக்கிட்டு, ஒரு ரசீதும் கொடுத்துப்போனார்.  ரிஸல்ட்டு டாக்டருக்குப் போயிருமாம். 

அவர் போனதும், தலையில் கைவச்சுப் பார்த்தால்   பிச்சுக் பிச்சுக்......      பிச்ச்சுக்னு  முடிலெயெல்லாம் கட்டி கட்டியா  வேக்ஸ்  ஒட்டிப்பிடிச்சுருக்கு. 
பொதுவா இங்கே நியூஸியில் இதுபோல  எந்த டெஸ்ட் நடந்தாலும் முடிஞ்சதும்  பேஷிண்டை ஓரளவு  சுத்தப்படுத்தித்தான்  வெளியே அனுப்புவாங்க. 

இந்தியாவில்  சர்வீஸ் ஒழுங்காயில்லைன்னு நான் கொதிக்கும்போது, .    'இங்கேயெல்லாம் அப்படித்தாங்க '  ன்னு என் புலம்பல்களுக்கு எல்லாம்  பதில் சொல்லும் எங்க அண்ணியை நினைச்சுக்கிட்டேன்.  அங்கெயெல்லாம் அப்படித்தான் போல....ப்ச்...

மாப்பிள்ளை  எடுத்துவச்ச கெட்டிலின் பயன் இன்றைக்குப் புரிஞ்சது.   கொதிக்கும் தண்ணீரில் டவலை நனைச்சு, தலையில்  ஒட்டிப்பிடிச்சிருந்த  மெழுகையெல்லாம் உருகவச்சு எடுத்தேன்.   உள்ளபடிக்கு இப்போ ஓரளவு பரவாயில்லை.  தினமும் ஷாம்பூ போட்டுக் குளிக்கும் நம்மவரின் கதி இப்படியாச்சே..... 


நமக்குக் கொடுத்த அறை, நர்ஸிங் ஸ்டேஷனுக்கு முன்னால் இருப்பதால்  போகும்போதும் வரும்போதும்   அவுங்களோடு ஒரு சின்னப்பேச்சு நடப்பதும் நல்லது !

நைட் ட்யூட்டி நர்ஸ் வந்ததும்  ரிப்போர்ட்  என்ன வந்துச்சுன்னு கேட்டதுக்கு,  அப்நார்மலா ஒன்னும் இல்லைன்னு வந்துருக்குன்னு சொன்னாங்க.  கொஞ்சம் நிம்மதியாச்சு.

நட்ட நடு ராத்ரியில்  நான் கொஞ்சம் நல்ல தூக்கத்தில் இருந்தப்ப, திடீர்னு  கதவைத்திறந்து லைட்  போட்ட  வெளிச்சத்தில் நான் முழிச்சுக்கிட்டேன்.... ரெண்டு மூணு நர்ஸுகள் ஓடிவந்து   'என்ன ஆச்சு என்ன ஆச்சு'ன்னு பதறிக்கிட்டு இருக்காங்க.  என்ன ஆச்சு.........

மானீட்டரில் ஒன்னுமே இல்லை.....  தீரவிசாரிச்சதில்,  நம்மவர் வேலை அது.  ஒவ்வொரு மூணு நிமிசத்துக்கும்  அதுலே இருந்து சின்னதா ஒரு பீப்  ஒலி கேட்கும்.  அது எனக்கொன்னும் பிரச்சனையே இல்லை. அதான் காது.... அவுட் ஆச்சே.   நம்மவருக்கு அது 'பெரிய தொல்லை'யா இருந்துருக்காம்..... அதனாலே  கையை நீட்டி மானிட்டர்  ஒயரையெல்லாம்  வெளியே இழுத்து விட்டுருக்காரு!     அது எல்லாமே ஆஃப் ஆயிருச்சு.  நர்ஸிங் ஸ்டேஷனில்  இருக்கும் கனெக்ஷன் மானீட்டர் இருட்டானதும்.....  ' எல்லாம் முடிஞ்சுருச்சோ' ன்னு பதறியடிச்சுக்கிட்டு வந்துருக்காங்க.

மூணுநாளா  இந்த Beep இருந்துக்கிட்டு இருக்குதானே..... அப்ப இல்லாத தொல்லை இப்ப எப்படி ? (உடம்பு தேறி வந்துக்கிட்டு இருக்குல்லெ ! ஆபத்துலே இருந்த தெய்வம் எல்லாம் நல்லானதும் சாத்தான் ஆகிருது போல   )

திரும்ப ஒயரை எல்லாம் சரியா கனெக்ட் பண்ணதும்,  அது உக்கார்ந்துருந்த சேரை,  கைக்கு எட்டாத தூரத்தில் நகர்த்தி வைக்கச் சொன்னேன்.   'அப்பா  ஒயரை இழுக்காதீங்கப்பான்னு  அழமாட்டாத குறையாச் சொல்லிட்டுப்போனாங்க அந்த சின்னப்பெண்கள்.  உண்மையில் அடிச்சுச் சொல்லியிருக்கணும். எனக்கே பாவமா இருந்துச்சு அவுங்களைப் பார்த்து.  


'இது எந்தா குறுத்தக்கேடு காணிக்குந்நது 'ன்னு கோபத்துலே ஒரு அஷ்டோத்திர அர்ச்சனை பண்ணினேன் அர்த்தராத்ரியில். ' எல்லாம் கெட்டிங் நார்மல் 'என்பதற்கான  அடையாளம்.  புள்ளி வாயத்தொறக்கலே..... கப்சுப்.

தொடரும்.......:-)

5 comments:

said...

நட்புகள் வாழ்க.  வொயரைக் கழற்றி விட்டு குறும்பு செய்த கோபாலருக்கு ஜே!

said...

க்ருஷ்ணார்ப்பணம்

said...

வாங்க ஸ்ரீராம்,

குறும்பா இது ? கோலெடுத்து ரெண்டு சாத்து சாத்தியிருக்க வேணாமோ ?

said...

வாங்க விஸ்வநாத்,

ஆமாம்... நல்லதும் பொல்லதும் நாராயணனுக்கே !

said...

உடல் சற்று தேறியதால் வயர் கைக்கு வந்துவிட்டது .