போனமாசமே கடைசி வாரத்துலே ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ஆரம்பிச்சுருச்சு. இது 2020 ஆம் வருஷம் நடந்துருக்கவேண்டியது. கோவிட் வந்து கெடுத்து வச்சுருச்சு. இந்த வருஷம் (2021) போட்டிகள் நடந்தாலும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். முக்கியமா சனம் கூடி கோஷம் போட முடியாது. அவுங்கவுங்க வீட்டுக்குள் உக்கார்ந்து பார்த்துக்கோன்னு ஏற்பாடு. ப்ச்......
உலகத்துக்கு இவ்ளோ கஷ்டம் கொடுத்த சீனா, ரெண்டாம் இடத்துலே வந்துருக்கு. எல்லாத்துலேயும் ஜெயிக்கணும் என்ற வெறின்னு எனக்குத்தோணுது. எதையும் ரொம்ப சீரியஸா எடுத்துக்காத நியூஸி இருபது பதக்கங்கள் வாங்கி, பதிமூணாம் இடத்தில் நிக்குது. பொதுவா டிவி பார்க்கும் பழக்கத்தை விட்டுத் தொலைச்சுட்டதால், ஃபைனல்ஸ் வரும்போது மட்டும் பார்ப்பேன். அதுவும் 'நம்மவர்' மறக்காமல் கூப்பிட்டுச் சொல்வார். அவர்தான் 24 மணி நேரமும் டிவி, ஸ்போர்ட்ஸ், சினிமா, இடைக்கிடை கோவிட் நியூஸ்ன்னு இருக்காரில்லெ ! அவருக்குத் துணையா, கம்பெனி கொடுக்கறது யாருங்கறீங்க ? எல்லாம் நம்ம ரஜ்ஜுதான். இந்த ரஜ்ஜு, ஜன்னு & கிச்சா இல்லைன்னா வாழ்க்கையே சுவாரஸியம் இல்லாமப் போயிருக்குமோ ? 'சின்னச்சின்ன வேலைகளைச் செஞ்சுக்கிட்டேதான் இருக்கேம்மா'ன்னும் சொல்வார்! ஆமாமாம்.... அதுலே புள்ளையை மடிமேல் வச்சுக்கிட்டு உக்கார்ந்திருப்பதும் ஒன்னு :-)
ஆடிப்பூரம் வருது. நம்ம ஜன்னுதான் ஆண்டாள். சும்மா சொல்லக்கூடாது..... அழகா அம்சமாத்தான் இருக்காள். நம்ம புள்ளையார் கோவில் சத்சங்கத்திலும் மாசாந்திரப் பூஜை. இது ஆடிமாசம் என்றபடியால் அம்மனுக்கு விசேஷம். வெலிங்டன் நகரில் இருந்து நம்ம பண்டிட் பத்மன் ஐயர், வந்து பூஜையை சிறப்பாக நடத்திக்கொடுத்தார். மாவிளக்கு, கூழ் நிவேதனம் எல்லாம் அமர்க்களம் போங்க. பொதுவான சமயங்களில் சாயங்காலம் நடக்கும் சத்சங்க நிகழ்வுகள், விசேஷ நாட்களில் மட்டும் பகலில் நடக்கும். பண்டிட் காலை வந்துட்டு, மாலை 5 மணி ஃப்ளைட்டுலே வெலிங்டன் போயிருவார். ஆனால் எந்த பூஜையோ, விழாவாகவோ இருந்தாலும் சனிக்கிழமைதான். அப்பத்தான் கொஞ்சம் மக்கள் கூட்டம் வந்து கலந்துக்க முடியும்.
விசேஷத்தை அனுசரிச்சு, அதன் சம்பந்தப்பட்ட கடவுளர்களைப் பல்லக்கில் இருத்திச் சின்ன அளவில் ஊர்வலமும் நடப்பதுண்டு. எல்லாம் காலநிலை அனுசரிச்சுதான். கீழே சுட்டியில் க்ளிக்கலாம்.
https://www.facebook.com/1309695969/videos/588112545672846/
எதா இருந்தாலும் சனிக்கிழமைக்கு நேர்ந்து விட்டுருவோம் இல்லையா.... அன்றைக்கு சாயங்காலமே தோழி நடத்தும் நடனப்பள்ளியின் ஆண்டுவிழா நிகழ்ச்சி. எங்க ஊரில் இப்போ மூணு இந்திய நடனப்பள்ளிகள் இருக்குன்னு சொன்னால் நம்பறதே கஷ்டம்தான். நடத்தும் மூணு ஆசிரியர்களும் நம்ம தோழிகள்தான்! நடனம் பயிலும் பிள்ளைகளும் மற்ற தோழிமாரின் பிள்ளைகள்தான் ! நம்ம சமூகத்தில் எல்லோரையும் எல்லோருக்கும் தெரியும்:-)
மறுநாள் ஞாயிறு, நம்ம ஹேமில்டன் பாலாஜி கோவிலின் சார்பாக , நம்ம ஊரில் சுதர்ஸன் ஹோமம் நடப்பதாக போன ரெண்டாம் மாசமே ஒரு ஏற்பாடாகி இருந்துச்சு. உள்ளூரில் பூஜைக்குப் பொறுப்பேற்றுக்கிட்டவங்க, நம்ம சநாதன் தர்ம சபா ஹாலையே புக் பண்ணி இருந்தாங்க. எங்க சநாதன் தர்ம சபாவின் கமிட்டி இலவசமாகவே இடம் கொடுத்துச்சு. நம்ம மக்களுக்கு ஒரு நல்லது நடந்தால் நல்லதுதானே ! அந்த பூஜையில் வைக்க நம்ம வீட்டுப் பெருமாளுக்கு விசேஷ அழைப்பு. வந்து கேட்டப்ப, நான் பெருமாளைக் கொண்டுவர்றதாச் சொன்னேன்.
மூலவரை, பீடத்தில் இருந்து எடுக்கவேணாமுன்னு தோணுச்சு....... நம்ம ஆனந்த அத்திவரதரைக் கொண்டு போனோம். அவருக்கும் வீட்டை விட்டு வெளியிலே உலாப்போய் வர ஒரு சான்ஸ் கொடுக்கணும்தானே ! 2019 டிசம்பர் 31, வீட்டுக்குள் நுழைஞ்சவர்..... பாவம்.
அவர்கூடவே பெரிய திருவடியும் உலா வந்தார். வாஹனம் இல்லாமல் பெருமாள் வெளியே போவாரா என்ன ? சின்ன அளவில் அலங்காரம் செஞ்சேன் ரெண்டுபேருக்கும் !
ஹேமில்டன் பெருமாள் கோவில் பட்டர், அவருடைய உதவியாளர், ஆக்லாந்தில் இருந்து ஸ்ரீ விஷ்ணுசகஸ்ரநாமம் பாராயணக்குழுவினர் சார்பாக ஒரு குடும்பம், முந்தி, நம்மூரில் இருந்து ஹேமில்டன் நகருக்கு வேலை மாற்றத்தில் போன நண்பர் குடும்பம்( இவர் நம்ம புள்ளையார் சத்சங்க பூஜைக்கு நாங்களாவே நியமித்த பட்டர்னு சொல்லலாம். இவர் ஊர் மாறிப் போனதும் எங்களுக்குக் கையொடிஞ்சமாதிரி இருந்தது உண்மை!)இப்படி பலர் வந்துருந்தாங்க.
முதல்நாள் , புள்ளையார் சத்சங்க பூஜையின்போது, மறுநாள் நடக்கப்போகும் சுதர்ஸன ஹோமம் பற்றிச் சொல்லி எல்லோரையும் அழைச்சதில் , நம்ம சத்சங்கக் கமிட்டி மக்களும் வந்துருந்தாங்க. ரொம்ப முக்கியமா வருகை தந்தது யார் தெரியுமோ ? சாக்ஷாத் நம்ம புள்ளையார் சத்சங்க அம்மனேதான். கம்பீரமா மேடையில் உக்கார்ந்துருந்தாங்க.
நம்ம அத்திவரதருக்கான இடம் தயாரா இருந்தது. சமீபகாலமா காஞ்சி அத்திவரதர் வெளிவந்துட்டுப்போனார் இல்லையா.... அப்போ முதல் நம்ம சனத்துக்குப் பரவலா அத்திவரதர் பெயர் பரிச்சயமா ஆகி இருந்துச்சே ! இப்பதான் அத்திமரத்தில் செய்த அத்திவரதரை இங்கே இருக்கும் நம்ம மக்களும் தரிசனம் செய்ய ஒரு சான்ஸ் கிடைச்சதுன்னு பாலாஜி கோவில் பட்டர் திரு கிஷோர் ஷர்மா ரொம்பவே மகிழ்ச்சி அடைஞ்சார். நமக்கும் மகிழ்ச்சிதான். இதையெல்லாம் விட நம்ம ஆனந்த அத்திவரதர் நாலுபேரைப் பார்த்ததில் சந்தோஷமா, நிம்மதியா இருந்துருப்பார்.
உள்ளூரில் பூஜைக்குப் பொறுப்பேத்துக்கிட்ட தோழியின் குடும்பம், பெருமாளைப் பூஜைக்கு அழைக்க வந்திருந்தப்ப..... பேச்சுவாக்கில் நிக்கற லக்ஷ்மியைத் தேடிக்கிட்டு இருக்கேன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன். அப்புறம் அதை மறந்தும் போயிருந்தேன்.
சுதர்ஸன ஹோமம் முடிஞ்சு நாம் கிளம்பும்போது, உங்க லக்ஷ்மி வந்தாச்சு. வீட்டுக்குக் கொண்டுவரேன்னாங்க. எப்படி ? எப்படி ? ஙே......
ஹோமத்துக்குத் தேவையான பொருட்களை, தோழியின் தகப்பனார்தான் சென்னையில் இருந்து பார்ஸலில் அனுப்பி இருந்தார். கூடவே லக்ஷ்மியையும் வாங்கி அனுப்பி இருக்கார் ! வரணும் என்று இருந்தால் வந்துதானே ஆகணும், இல்லையோ !
அடுத்த ரெண்டாம் நாள் இதே ஹாலில் வழக்கம்போல் செவ்வாய்க்கிழமை ராமாயணம் வாசிப்பு. வாசிப்பு மட்டுமில்லாமல் நம்ம ஜகத் சிங் மாஸ்டர்ஜியின் பொறந்தநாள் கொண்டாட்டம். இவர்தான் க்றைஸ்ட்சர்ச் ஃபிஜி அசோஸியேஷன் ஸ்தாபகர். 2002 ஆம் வருஷம் ஆரம்பிச்ச க்ளப் இன்னும் நல்லாவே நடக்குது. நாமும் ஆரம்பகால அங்கத்தில் ஒருவரே! இங்கேயும் ராமாயண வாசிப்புதான். கூடவே ஹிந்துப்பண்டிகைகளையும் கொண்டாடுவோம். இதைத்தவிர ராமாயண மண்டலி என்னும் பெயரில் ஒரு ஏழெட்டு குழுக்கள் இருந்தன. அவரவர் வீடுகளில் ராமாயண வாசிப்பு இந்தக் குழுக்களால் நடத்தப்படும். ஆனால் ஒன்னு, யாரும் யாருக்கும் விரோதமில்லை. எல்லோரும் எல்லாப் பூஜைகளிலும் கலந்துக்குவாங்க. இப்ப ஒரு நாலு வருஷத்துக்குமுன்னால் சநாதன் தரம் ஹால்னு ஒன்னும் எல்லோருமாச் சேர்ந்து வாங்கியது முதல், ஏறக்கொறைய எல்லாக் குழுக்களும் இங்கேயே பூஜைக்கு வந்துர்றாங்க. நிரந்தரமா ஒரு பண்டிட்டும் இருக்கார். குழுக்கள் தங்கள் தனித்துவத்தை விடாமல் அப்பப்ப ஒரு செவ்வாய்க்கிழமை ராமாயண வாசிப்பை இங்கேயே நடத்திக்கிறாங்க. இதுலே ரொம்ப நிம்மதி எனக்குதான். வீடுகளில் பூஜையில் கலந்துக்கும்போது, எல்லோருக்கும் இருக்கை வசதி தரமுடியாதில்லையா ? ஹால்னு இருந்தால் இந்தப் பிரச்சினை இல்லை. என் முழங்காலும் தப்பிச்சது :-) ரொம்பவே சுயநலமி ஆகிட்டேன், பாருங்க.
அதுக்கடுத்தநாள் நம்ம ஆண்டாளோட பொறந்தநாள். ஆடிப்பூரம் ! தூமணி மாடத்தை இன்னும் ஒரு நாலுமுறை பாடினால் ஆச்சு! நம்ம வீட்டு ஆண்டாளும் அலங்காரம் பண்ணிக்கிட்டாள் :-)
ஆடிப்பூரம் கொண்டாட்டம் முடிஞ்ச மறுநாள் மஹாலக்ஷ்மி வீட்டுக்கு வந்துட்டாள். கொஞ்சம் ப்ரஸாதங்கள் செஞ்சு வச்சுருந்தேன். அவளுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு ஆச்சு.
இந்த வருஷம் ஆடி பொறந்தது முதல் ஓய்வில்லாமக் கொண்டாட்டங்கள் அதிகமாப்போயிருச்சு..... நின்னு நிதானமாத்தான் சொல்லணும். சட்னு முடிக்க முடியாதில்லையா ? :-) :-)
பின்குறிப்பு :-) இப்போ சொல்லிக்கிட்டு இருப்பதெல்லாம் 2021 வது வருஷச் சமாச்சாரங்கள். 2022 என்று நினைச்சுக் குழம்பவேணாம்.
14 comments:
அருமை நன்றி சிறப்பு
லக்ஷ்மியும் வந்தாச்சு இனிய கொண்டாட்டங்கள்தான்.
நிகழ்வுகள் சிறப்பு. வாழ்த்துகள்.
நல்ல நினைவலைகள்.
பகிர விடுபட்ட கொண்டாட்டங்களை இப்பொழுது பகிர்ந்து கொள்வது நல்லது... லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்தேன்னு சொல்லிக்கலாம்... படங்களும் தகவல்களும் சிறப்பு. தொடரட்டும் கொண்டாட்டங்கள்.
உலகத்துக்கு இவ்ளோ கஷ்டம் கொடுத்த சீனா, ரெண்டாம் இடத்துலே வந்துருக்கு. எல்லாத்துலேயும் ஜெயிக்கணும் என்ற வெறின்னு எனக்குத்தோணுது. //
என்னவோ போங்க என்ன வெறியோ உலக மக்கள் அப்பாவிகல் உயிரழ்ந்து...என்ன சொல்ல?
ரஜ்ஜு கம்பெனி கொடுக்கும் அழகே அழகு!!! அதுவும் புள்ள மடி மேல படுத்து சொகுசு ராஜாதான்....
உம்மாச்சியின் பாத்டப் ஹாஹாஹாஹா நல்லாருக்கு நல்ல ஐடியா!!!
நியூசி ஆண்டாள் ஜன்னு செம! அழகு. அடுத்த முறை ஜடை போட்டு (உங்ககிட்ட ஜடை கூட இருக்கே!! வேறு ஒரு நிகழ்வுல ஜன்னுவுக்குப் போட்டிருந்தீங்கல்ல) நெத்தில சீச்சுரணமும் போட்டீங்கனா ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளேதான்! நீங்கள் செய்யும் அலங்காரங்கள் செம...ரொம்ப ரசிக்கிறேன் உங்கள் கைவண்ணத் திறமையை.
ரசனையான நிகழ்வுகள் துளசிக்கா. இப்படி இருந்தா மனசு ரிலாக்ஸ்டா மகிழ்வா ஐடிலா இல்லாம டெவில் புகாம இருக்கும்.!!!!
கீதா
படங்களும், அதைப் பற்றிய விவரங்களும், வெளிநாட்டில் கூட இப்படி எல்லாம் சேர்ந்து மத வித்தியாசம் பார்க்காமல் கொண்டாடுவது எல்லாம் பார்க்கும் போது மிகவும் சிறப்பு மகிழ்ச்சி.
தொடர்கிறேன்
துளசிதரன்
வாங்க விஸ்வநாத்,
நன்றி !
வாங்க மாதேவி,
கொண்ட்டாட்டத்துக்கு என்ன குறைச்சல்.....? தாராளமா இருக்கே :-)
வாங்க ஜம்புலிங்கம் ஐயா,
நன்றி !
வாங்க பானுமதி,
நெஞ்சுக்குள்ளே நீந்தும் நினைவலைகள் !
வாங்க வெங்கட் நாகராஜ்,
நமக்கே ஒரு டயரிக் குறிப்பாகத்தான் இங்கே வலையில் சேமிச்சு வைக்கணும். ஃபேஸ்புக்கில் போடறதெல்லாம் தேடி எடுக்கக் கொஞ்சம் கஷ்டம் இல்லையோ !
வாங்க கீதா,
போறபோக்கைப் பார்த்தால் சட்னு கோவிட் முடியாது போல இருக்கே. ஒரு வட்டம் வந்து ஆரம்பிச்ச இடத்தில் தாண்டவமாடித்தான் நிக்கும் போல ! விடாது கர்மா !
உம்மாச்சிக்குச் சொந்த கோவில் இல்லை. கம்யூனிட்டி ஹால்தான் நாலு மணி நேரத்துக்கு வாடகைக்கு எடுக்கறோம். கார்பெட் பாழனால் நாம்தான் ஆயிரக்கணக்கில் செலவு செஞ்சு திரும்பப் புதுசாப்போட்டுக் கொடுக்கணும். போனமுறை வேற பாத் டப். ஓட்டை விழுந்துபோய் உடனே எல்லோருமாப் பாய்ஞ்சு துடைச்செடுத்துக் கடைசியில் கார்பெட்டை ஸ்டீம் க்ளீன் செஞ்சு கொடுத்தோம். வேறொரு பாத் டப் பார்த்து வச்சுருக்கோம்.
வாங்க துளசிதரன்,
மனுஷன் மனுஷனா இருக்கும் முயற்சிதான் இதெல்லாம் !
Post a Comment