Monday, February 07, 2022

மாலா மராத்தி மாயீத் நாஹி......

"கோயி பாத் நஹி. ஜரூர் ஆயியே..... "
ஷ்ராவன் மஹோத்ஸவ்.  நம்மூர்  மராத்தி க்ளப் கொண்டாட்டம். கூப்பிட்டால் போகாம இருக்கமுடியுமா? நாமும் பூனாக்காரர்கள் இல்லையோ :-)

இந்தியக் காலண்டரின் அஞ்சாவது  மாசம் இந்த ஷ்ராவன்.  நம்ம ஆவணி மாசம்தான். நாம் சூரியக்கணக்கில் இருக்கோம். இது சந்திரக்கணக்கில் வருது என்பதால்  கொஞ்சம் முன்னே வந்துரும். மற்றபடி நக்ஷத்திரம், திதி எல்லாம் பஞ்சாங்கப்படி எல்லோருக்கும் ஒன்னுதான்! 

இதுலே பாருங்க இது வடக்கர்களுக்கு,  முக்கியமா மஹாராஷ்ட்ராவில், பூஜை, விரதத்துக்கான  மாசம்.  சிவனுக்கு நேர்ந்து விட்டுருக்காங்க.  அதுவும் ஷ்ராவன் மாசத் திங்கக்கிழமை விரதம் ரொம்ப முக்கியம் !  மாசம் முழுசும் சில குறிப்பிட்ட பொருட்களை உணவில் சேர்த்துக்க மாட்டாங்க. சுருக்கமாச் சொன்னா நம்ம புரட்டாசி !  இது விஷ்ணுவுக்குன்னா அது சிவனுக்கு!  இருக்கற பனிரெண்டு மாசங்களில்  சாமிக்கும் ஒரு மாசம் கொடுத்துடணும் இல்லே ?  நம்ம பெருமாள்தான் ரெண்டு பங்கு எடுத்துக்கிட்டார், புரட்டாசி & மார்கழின்னு.  அம்மனுக்கு ஆடியைக் கொடுத்தாச். 


கல்யாணமான பெண்கள், கணவரின் நலத்துக்காக  இருக்கும் விரதம் இந்த ஷ்ராவன் மாசத்தில்தான். மங்களகௌரி விரதம். திங்கள் சிவனுக்கு, செவ்வாய் பார்வதிக்குன்னு..... அஞ்சுநாள் விரதம்.  அதுவும் கல்யாணமான முதல் அஞ்சு வருஷம் கட்டாயமாக் கடைப்பிடிக்கணுமாம். (அதுக்கப்புறம்....  ? ஹாஹா..... அஞ்சு வருஷம் பழக்கிட்டால் போதாதா ? கணவன் நல்லாத்தான் இருப்பார்! )

இந்த அஞ்சுநாள் முடிஞ்சு விரதம் முடிச்சு ஆடிப்பாடிக்  கொண்டாடுறாங்க.  இந்த ஷ்ராவன் மாசத்துலே ஏகப்பட்டப் பண்டிகைகள் வேற இருக்கே!  ரக்‌ஷாபந்தன்,  ஹரியாலி தீஜ், ஸ்ரீ கிருஷ்ணாஷ்டமி, வரலக்ஷ்மி விரதம், நாகபஞ்சமி , நாரியல் பூர்ணிமா இப்படி.... கூடவே இந்திய சுதந்திர தினமும் !
மத்யானம்  மூணரைக்கு ஆரம்பிச்சு ஆறு மணிக்கு முடியும்னு சொல்லியிருந்தாங்க. ரொம்ப நல்லது. மாலை  ஆறரைக்கு  நம்மூட்டுக்கு  இன்னொரு தோழி, விஸிட் வர்றேன்னு சொல்லியிருக்காங்க. நல்ல டைமிங்தான் இல்லே !


ஒரு மூணே முக்கால் போலப் போய்ச் சேர்ந்தோம். எல்லா  மராத்திய மங்கைகளும் அட்டகாசமான அலங்காரத்தில் !  அப்பதான் நினைவுக்கு வருது, அடாடா..... நம்மாண்டை மூணு நத்து இருக்கேன்னு....  ஒளரங்காபாதில்  தேடித்தேடி வாங்கினோமே.... ஒன்னு போட்டுக்கிட்டு வந்துருக்கலாமோ ? :-) போகட்டும்... அவுங்களை மிரட்டணுமா என்ன ? ஹாஹா....
நம்மூர் மடிசார் கட்டுபோலத்தான் இதுவும். கொஞ்சம் வேற ஸ்டைல். Nauwari saadi  இப்பெல்லாம் ரெடிமேடாகவே கிடைக்குதாம். அதுவும் குழந்தைகளுக்கும் கூட !  அப்ப நம்ம ஜன்னுவுக்கும் ஒன்னு வாங்கணும்... மூளையில் முடிச்சு.  மனசைப்பிறாண்டிக்கிட்டே இருந்துச்சா....  யூ ட்யூப் பார்த்து அவளுக்குக் கட்டியும் விட்டாச்.  அழகாத்தான் இருக்காள். அடிச்சு ஆடறாளே ! எந்த ட்ரெஸ் போட்டாலும்  அவளுக்குப் பொருத்தமா இருக்கே!  

மேடையில் இந்தியா & நியூஸிக் கொடிகளை 'நட்டு' வச்சுருந்தாங்க. 
குத்துவிளக்கேற்றி விழாவை ஆரம்பிச்சு வச்சது யார் தெரியுமோ ?  சீனியர் சிட்டிஸந்தான் ! 
முதலில் தேசியகீதங்களைப் பாடினோம்.  பாரத் மாதாகீ ஜெய் !  சுதந்திர தின ஸ்பெஷல் :-)

எங்க யோகா குழுவினர் எல்லோரும் அங்கே ஆஜர் ஹோ :-) 









பிள்ளைகள் பாடல், மங்கையரின்   மங்கள்கௌரி நடனம்,  பாடல்கள்,  போட்டிபோட்டுக்கிட்டு மேடையில் வந்து பாடிய ஆண்கள் னு பரபரன்னு நிகழ்ச்சிகள் !  ஸ்ரீகிருஷ்ண ஜன்மாஷ்டமி ஸ்பெஷலா, தஹி ஹண்டி (Dahi Handi /தயிர்ப்பானை) என்னும் உறியடி நிகழ்ச்சி.  பானையில்  தயிர் எல்லாம்  வைக்க முடியாது. அப்புறம் மொத்த ஹாலையும் மக்கள் தலைகளையும் சுத்தப்படுத்த வேணாமா?  எல்லாம் முட்டாய்கள்தான்.

சின்ன வீடியோ க்ளிப்ஸ் லிங்க் கீழே இருக்கு பாருங்க. விருப்பமிருப்பின் பார்க்கலாம். இங்கே வீடியோவாகவே  கொடுக்கலாமுன்னா என்னவோ தகராறு செய்யுது ப்ளொக்ஸ்பாட் :-(

மங்கள் கௌரி நடனம்

https://www.facebook.com/1309695969/videos/251012566840961/

 மீனவர் கிராம நடனம்
https://www.facebook.com/1309695969/videos/376022454031003/

தஹி ஹண்டி !
https://www.facebook.com/1309695969/videos/638511990454043/

காலையில் கொடியேற்றத்தின் போது , கொடியேற்றிய ராணுவ அதிகாரியிடம்,  பகல் நிகழ்ச்சியைச் சொல்லிக் கட்டாயம் வரணுமுன்னு கேட்டுக்கிட்டோம். அவரும்  மராத்தியர் இல்லையோ !   மகிழ்ச்சியோடு கலந்துக்கிட்டார். புதுசா வந்துருக்கார் பாருங்க.... இன்னும் இங்கத்து இந்திய சமாச்சாரங்கள் எல்லாம் தெரியலை.... அதுக்காக விட்டுருவோமா ? :-)
அதென்னவோ நம்ம கலை கலாச்சாரம் எல்லாம் உள்நாட்டுலே இருக்கும்போது  அவ்வளவா மதிக்காத இளைய தலைமுறை, வெளிநாட்டுக்கு வந்ததும் பாய்ஞ்சு பாய்ஞ்சு  பங்கெடுத்துச் சிறப்பாக செய்யறதைப் பார்த்தால்.....  விட்டுவந்தவைகளின் அருமை  இப்பவாவது புரியுதேன்னுதான் தோணுது எனக்கு !

சாப்பாடில்லாம எந்தக் கொண்டாட்டமாவது  முடியுமா? உள்ளூர் மும்பைவாலா ரெஸ்ட்டாரண்ட் மக்கள்,  மும்பை ஸ்பெஷலான வடாபாவ்  செஞ்சு கொடுத்தாங்க.  சின்ன தொகையில் வாங்கிக்கலாம்.  பேல்பூரி, பானி பூரி, பாவ் பாஜி கூட உண்டு.

பாவ்பாஜி என்ற சமாச்சாரம் 1880 களிலேயே  மராட்டியத்தில்  ஆரம்பிச்சு இன்னும் வெற்றிகரமா நடந்துக்கிட்டு இருக்கு. ஆனால் இந்த வடா பாவ் என்றது 1960 இல்  கண்டுபிடிக்கப்பட்டதே ! சர்தார் அஹமத் என்ற நாக்பூர்க்காரரின் கண்டுபிடிப்பு. அப்பெல்லாம்   அக்கம்பக்கத்து மாநிலக்காரர்கள் எல்லாம் வேலைதேடி (கெட்டும் பட்டணம் சேர்.....  நம்மூர் பழமொழி.... )  பம்பாய்க்குக் கூட்டங்கூட்டமாய் வந்துக்கிட்டு இருந்தாங்க. துணி மில்கள் எக்கசக்கமாய் ஓடிக்கிட்டு இருந்ததில்லையா ! நாள் பூராவும் ஷிப்ட் முறையில் வேலைதான்.  சர்தார் அஹமத் முதலில் விதவிதமான பாவ்பாஜிகளைத்தான்  மில்களுக்கு வெளியே வச்சு வித்துக்கிட்டு இருந்தார். ஏழை எளிய மில் தொழிலாளிகள் அதிகமாச் செலவில்லாமல் பசியாறும்   உணவாகத்தான்  இருக்கு.  ஆனால் இன்னும் கொஞ்சம் மாறுதல் செய்யலாமே.... வயிறு நிறைஞ்சுருக்கன்னு ஆரம்பிச்ச பரிசோதனைதான்  இந்த  வடாபாவ். 

மிளகாய் வத்தல், பூண்டு, எள், கொப்பரைத்தேங்காய் & உப்பு  எல்லாம் சேர்த்துக் கொஞ்சம் எண்ணெயில் லேசாவறுத்துப் பொடிச்ச மிளகாய்ப்பொடிதான் வடாபாவ்க்கு ஜோடியாம். 
பூனாவில் அஞ்சு வருஷம்  குப்பை கொட்டியும்கூட இந்த வடாபாவை நாம்  ருசிச்சதே இல்லை. பேல்பூரிதான் எப்பவும் என் ஃபேவ். ஒரே ஒருமுறை பானி பூரி.  அந்த வடாபாவில் வடை  வேற இருக்கு! ஆனாலும் கோட்டை விட்டுருக்கேன். இப்பவாவது ஆகட்டுமுன்னு ரெண்டு வடாபாவ் வாங்குன கையோடு கிளம்பிட்டோம்.  உக்கார்ந்து சாப்பிட நேரம் இல்லை.
இப்பவே மணி ஆறேகால்னு அடிச்சுப்பிடிச்சு  வீட்டுக்கு வந்தாட்டு,  செல்லில் மெஸேஜ் பார்த்தால், வரேன்னு சொன்ன தோழி, வரமுடியாத நிலைன்னு சேதி அனுப்பி இருந்தாங்க.  அடராமா.....

கொண்டுவந்த வடாபாவையே டின்னரா வச்சுக்கிட்டோம்.  உண்மையைச் சொன்னா எனக்கு அவ்வளவாப் பிடிக்கலை.  வடையை எப்பவும் தனியாச் சாப்பிட்டால்தான் பிடிக்குது. 

நானும்  இங்கே நியூஸி வந்தபிறகு, பேல்பூரி,  பாவ்பாஜி, பானிபூரி, தஹிபுச்கான்னு வீட்டுலேயே செய்யறதுலே  எக்ஸ்பர்ட் ஆகிட்டேன்.  'இந்த வகைகள் விரும்பி'யா இருப்பது  யார் தெரியுமோ ? மருமகன் !  இதுமட்டுமா  இவர் இன்னொரு வடைப்ரேமியும் கூட ! நல்லத்தான் பழக்கி வச்சுருக்கேன் போல :-)









10 comments:

said...

போஹா (அவல்) & வடாபாவ் are famous (and cheap) breakfast items in Maharashtra.

said...

மகிழ்ச்சி.

said...

நம்மூர் வரலக்ஷ்மி விரதம் கூட இதற்கு முன்னால் வரும் இல்லையா?  கிட்டத்தட்ட இதே போல பூஜைதானே?

said...

விதம் விதமான கொண்டாட்டங்கள்.... மனதுக்கு மகிழ்ச்சி தரும் இந்த கொண்டாட்டங்கள் தொடரட்டும். அத்தனையும் இப்படி பதிவு செய்து வைப்பதும் நல்லது.

said...

வாங்க விஸ்வநாத்,

ஆலு பொஹாவும்தான் :-)

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா,

நன்றி !

said...

வாங்க ஸ்ரீராம்,

ஆவணி மாசம் வந்துட்டாலே விரதங்களும் பூஜைகளும் ஆரம்பிச்சுருதே! என்ன ஒன்னு நாம் வரலக்ஷ்மி விரதத்தின்போது ஆடிப்பாடறதில்லை..... வச்சுக்கொடுப்பதில் பிஸியா இருந்துடறோம் இல்லே ? :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

பதிவு எழுத விட்டுப்போனதில் பல நிகழ்ச்சிகள் நினைவுக்கே வராமப்போயிருது. முக்கியமா அப்போ என்ன புடவை வாங்கினோம், எதைக் கட்டினோமுன்னு :-)))))))

அதுக்காகவாவது எழுதி நாலு படமும் போட்டால் வருங்காலத்து ரெஃபரன்ஸ் ஆகாது?

அந்த நல்லெண்ணம்தான் :-)

said...

விழாக்கள் பாட்டு நடனம் உணவு என கொண்டாட்டம் சிறப்பு.

said...

வாங்க மாதேவி,

நன்றிப்பா !