எல்லோருக்கும் ஒரு வழின்னா இடும்பிக்கு வேற வழி இல்லையோ ? அதே தான் இங்கே இடும்பி வசிக்கும் நியூஸியிலும். பொதுவா பலநாடுகளில் ஜூன் மூணாம் ஞாயிறு கொண்டாடறாங்கன்னா, நாங்க செப்டம்பர் முதல் ஞாயிறுதான் கொண்டாடுவோம். எதை ?
தகப்பன் தினத்தைத்தான். பொதுவான்னு சொல்றதுகூடச் சரி இல்லை. அமெரிகாவில் ஜூன் மூணாம் ஞாயிறு என்பதால் அதையொட்டியே பலநாடுகள். கொண்டாட்டம் ஆரம்பிச்சதே அங்கேதான் 1908 இல் !
ஸ்பெயின், இடாலி, போர்ச்சுகல் நாடுகளில் மார்ச் 19, ஜெர்மனியில் ஈஸ்டர் கழிஞ்ச நாப்பதுநாளுக்கு அப்புறம் வரும் வியாழக்கிழமை, ஸ்காண்டிநேவியன் நாடுகளில் நவம்பர் (மதர்ஸ் டே ஆன ஆறாவது மாசமாம்) இப்படி வெவ்வேற காலங்களில்! இதுலேயும் சீனருக்குத் தனி வழியே ! எட்டுன்றது ரொம்ப முக்கியமான எண்ணாமே ! அதனால் எட்டாம் மாசம் எட்டாம் நாள் தகப்பனுக்கு ! எப்படியோ அப்பனை மறக்காமல் இருந்தால் சரி.
எங்க மகள் பிறந்ததும் ஒரு ஃபாதர்ஸ் டே அன்றுதான். தகப்பனுக்கு என்ன வாங்கிக்கொடுக்கலாமுன்னு வழக்கம்போல் என்னிடம் ஆலோசனை கேக்கறதும், நான்' ஒன்னும் வேணாம், நீ வீட்டுக்கு வந்துட்டுப் போ'ன்றதும் வாடிக்கை. ஆனாலும் ஏதாவது வாங்கிக்கொண்டு வருவாள். இந்த வருஷ ஸ்பெஷலா ரெண்டு மூக்கு மூடி. கைகழுவும் ஸோப், ஸ்ப்ரே தயாரிக்கும் நிறுவனங்களை, பில்லியனர் ஆக்குன கையோடு இப்போ மாஸ்க் தயாரிப்பாளர்களை பில்லியனர் ஆக்கணும் என்பதே கோவிடின் கொள்கை.
ஃபாதர்ஸ் டேயை முன்னிட்டுப் பகல் சாப்பாட்டுக்குப்பிறகு கலர் பார்க்கப் போனோம். அதே ஹேக்ளி பார்க்தான். அதே வெளிவட்டம் சுற்றல்தான்.
வஸந்தமுன்னு பெயருக்குத்தான் சொல்லணும். இன்னமும் குளிர் விட்டபாடில்லை. அன்றைக்குச் சரியாப் பார்க்கலைன்னுதான் இன்றைக்கு மறுபடியும். குளிரில் இலையுதிர்த்த பெரிய மரங்கள் இன்னும் தூங்கி எழுந்திருக்கலை. சின்னதுகள்தான் மொட்டு விட்டுக்கிடக்குதுகள்.
இதுலே செர்ரி மரங்கள்தான் முதலிடத்தில் ! அநேகமா இன்னும் ஒரு வாரத்தில் எல்லாம் பூத்திரும்! நம்மூர் செர்ரிப்ளோஸம் விழா ! கண்ணுக்கு விருந்தாக நல்லாவே இருக்கும்! பொதுவா மரங்கள் புது இலைகள் வந்தபின் பூத்து நிற்கும் இல்லையா... இங்கே என்னன்னா சில மரவகைகள் குளிர்காலம் முடிஞ்தும் முதலில் மொட்டுகள் விட்டுப் பூத்துக்குலுங்கிட்டு, ரெண்டு வாரங்களில் அந்தப் பூக்களெல்லாம் உதிர்ந்த பிறகு புது இலைகள் துளிர்த்து வளருது. இந்த செர்ரி மரங்கள் இந்தவகையைச் சேர்ந்தவைதான்.
இன்னும் நாலுநாட்களில் புள்ளையார் சதுர்த்தி வருது. என்ன செய்யலாமுன்னு உக்கார்ந்து யோசிச்சுக்கிட்டு இருந்தேன் :-)
நம்ம ஹிந்து ஸ்வயம் ஸேவக் குடும்பத்தில் புள்ளையார் சதுர்த்தி வருமுன் புள்ளையார் ஒர்க்ஷாப் நடத்தறது இப்போ சில வருஷங்களா நடக்குது. இது நாலாவது வருஷம். பண்டிகைக்கு முன் வரும் ஞாயிற்றுக் கிழமை மதியம், ஏற்கெனவே பெயர் பதிஞ்சுக்கிட்டவங்களுக்கு ஆளுக்கொரு உருண்டை களிமண் கொடுக்கறோம். எளிதா எப்படி செய்யறதுன்னு ஒரு விளக்கமும். இனி அவரவர் கற்பனை வளம் !
படம்: 2018 முதல் முறையாகப் புள்ளையார் ஒர்க்ஷாப்பில்.
இந்தவருஷம் கோவிட் திருவிழா என்பதால் Zoom மூலம் நடத்தணும். பெயர் பதிஞ்சவங்களுக்கு வழக்கம்போல் ஒரு உருண்டையை வீட்டில் சப்ளை செய்யறோம். வாசலில் வச்சுட்டு வந்துருவோம். கைவண்ணத்தை கம்ப்யூட்டர் முன்னால் காமிச்சால் ஆச்சு.
நம்ம வீட்டில் இப்பெல்லாம் கொழக்கட்டை குழப்பம் அறவே இல்லை ! அந்த கவனம் எல்லாம் இப்போப் புள்ளையார் புடிக்கறதில்தான். முந்தி ஒரு Pபாட்டரி வகுப்பு ஓப்பன் டேயில் வேடிக்கைப்பார்க்கப்போய் ஒரு பத்துகிலோ களிமண் வாங்கிவந்தோம். நல்ல வெள்ளையாக இருந்தது. அதையே மூணு வருஷம் வச்சு மூணு சதுர்த்தி கொண்டாடியாச். அதுக்குப்பின் களிமண் விலைக்கு வேணுமுன்னு கேட்டதுக்கு, வகுப்பில் சேர்ந்தால் வாங்கிக்கலாம்னு சொன்னாங்க. அது ஒன்னுதான் பாக்கின்னு சேரலை. அப்புறம் தேடித்திரிஞ்சதில் நம்ம HSS Shakha வில் புள்ளையார் ஒர்க்ஷாப்க்கு வாங்கியதில் ஒரு 20 கிலோ பொதி பாக்கி இருக்குன்னதும் அதையே வாங்கி வச்சுக்கிட்டேன். மண் நிற மண்தான். அதிலிருந்து ஒரு நாலைஞ்சு கிலோ எடுத்துக்கலாம். முதல்முறையாக த்ரிமுக் கணேஷ் செய்யப்போறேன். ஆரம்பிக்குமுன் விக்னம் வராமல் இருக்கச் ச்சின்னப்புள்ளையார் செஞ்சு கும்பிட்டுக்கிட்டேன். சுமாரா வந்துருக்கு. நாமம் சார்த்தி நகை போட்டால் பரவாயில்லாமல் இருக்கும்.
அப்புறம் தெரிஞ்சமாதிரி புள்ளையார், பூனை வாஹனம், எலி வாஹனம், இந்த முறை த்ரிமுக் என்பதால் ஒரு கருட வாஹனம் எல்லாமும் ஆச்சு. இன்ஸ்பெக்டர் பார்த்து அப்ரூவ் செஞ்சார் :-)
மார்கெட்டில் வாங்கின சிமென்ட் புள்ளையாரைஒரு ஆறு மாசத்துக்கு முன் தங்கமாக்கி அலங்கரிச்சு அவரையும் புள்ளையார்க்கொலுவில் வச்சாச் :-)
ஏழுவகைக் கொழுக்கட்டைகளுடன் சதுர்த்தி பூஜையை மனநிறைவா நடத்தியாச்! அச்சு வந்ததோ... புள்ளையார் தப்பிச்சாரோ..... பாவம் :-)
நம்ம கைவண்ணத்தில் உருவான புள்ளையார்கள் எல்லோரும் வீட்டில்தான் இருக்காங்க. பக்தன் அப்பப்பப்போய் கும்பிட்டுக்கறான் ! எலி இருப்பதாலா ?
பலநாட்களில் சாமி அறையில் போய் உக்கார்ந்துக்கறான். மனசுக்குள்ளே என்ன வேண்டறானோ ?
ஒன்னேமுக்கால் வருஷமாப் பயணம் போகாம இருப்பதே மன உளைச்சல்தான். போற போக்கைப் பார்த்தால் இனி இந்தியப்பயணம் அம்புட்டுதானோ ? ன்னு இருந்தப்பதான் குறைஞ்சபக்ஷம் நம்ம ஜன்னுவுக்காவது ஊரில் இருந்து ஏதாவது வரவழைச்சுக்கலாமோன்னு தோணுச்சு. வலையில் தேடிப் பார்த்தப்பக் கண்ணில் ஆப்டது ரதி சில்க்ஸ். சேலமாம். ஏற்கெனவே நம்ம பதிவுலக மகளின் சராஃபேஷன்ஸில் புடவைகள் ரெண்டுமுறை வாங்கியாச்சு. இனிமே எல்லாமே ஆன்லைந்தான் போல !
கொட்டிக்கிடப்பதில் தெரிஞ்செடுக்க நாலைஞ்சுநாள் ஆச்சுன்னா, ஆர்டர் அனுப்பிய அஞ்சாம்நாள் பார்ஸல் வந்தே வந்துருச்சு. மூணு பட்டுப்பாவாடை செட் ! ஜமாய் ஜன்னு :-)
நவராத்ரிக்கு ஒன்னு, தீபாவளிக்கு ஒன்னு, பொங்கலுக்கு ஒன்னுன்னு எல்லாத்தையும் கட்டி முடிச்சுட்டாள். இனி வரப்போகும் பண்டிகைகளுக்கு என்ன செய்யலாமுன்னு பார்க்கணும். நானே தைச்சுருவேன் என்றாலும் சம்ப்ரதாயமான பட்டுப்பாவாடைக்குப் பொருத்தமான துணி இங்கே கிடைக்காதே....
8 comments:
தங்கள் கை வண்ணத்தில் உருவான கணநாதர் க்ளாஸ்.
'பிள்ளையாராம் பிள்ளையார் பெருமைவாய்ந்த பிள்ளையார்....' எத்தனை விதங்களில் வாழ்த்துகள்.
ஜன்னு அசத்திக்கொண்டே போகிறாள்.
விநாயகர் சிலை தங்கள் கைவண்ணத்தில் அழகோ அழகு....
போஸ்ட் அன்றே வாசித்து இதுக்கு அடுத்த பதிவும் வாசித்து கமென்ட் விட்டுப் போச்சு. விநாயகர் அசத்தல்!!! உங்க கைவண்ணம் செம. ரஜ்ஜு இதுலயும் முகம் காட்டுறாரே
கீதா
வாங்க விஸ்வநாத்,
ஆர்ட்டிஸ்ட் சொன்னா சரியாத்தான் இருக்கும்:-)
நன்றி !
வாங்க மாதேவி,
நம்ம புள்ளையார் கோவில் சத்சங்கத்தில் இந்தப் பாட்டைத் தவறாமல் பாடுகிறோம்!
ஜன்னுவுக்கு அருமையான அம்மா கிடைச்சதே காரணம் :-)
வாங்க வெங்கட் நாகராஜ்,
புள்ளையாரை எப்படிப் பிடிச்சாலும் புள்ளையார்தான். கோச்சுக்கவே மாட்டார். அதான் அடிச்சு ஆடறேன் :-) இயற்கை அழகு !
வாங்க கீதா,
ரஜ்ஜில்லாமல் நாமில்லை...... நோஸி.... நம்பர் ஒன்.
Post a Comment