Friday, February 04, 2022

தாயின் மணிக்கொடி பாரீர் !

நண்பனா இருந்து எங்களைக் காப்பதைவிட,  அண்ணன் தம்பியா இருந்து காப்பாத்துப்பான்னு  சொன்னா.......  அதுக்குக் கூடுதல் வலிமை இருக்காது ?
இப்போ சில வருஷங்களா, நம்ம HSS  ( Hindu Swayam Sevak )அமைப்பில்  ரக்ஷாபந்தன் பண்டிகையில்   உள்ளூர் காவல்துறை & தீயணைப்புத்துறை சேர்ந்தவர்களுக்கு  ராக்கி கட்டிவிடும் வழக்கம் ஆரம்பிச்சுருக்கு.  ரொம்ப நல்லதுதான்.  





எங்கள் வழக்கம்போல்  எல்லாமே வீக் எண்டுக்குத்தானே ?  இன்றைக்கு அந்த விழா நடக்கப்போகுது.  எங்க ஊர் HSS இல்  வாராவாரம்  வகுப்புகள் நடக்கிறது.  ஹிந்துமத சம்பந்தமுள்ள விழாக்கள் பற்றி (  புள்ளையார் சதுர்த்தி,  குரு பூர்ணிமா, தசரா போன்றவை)நம்ம புள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுப்பது,  ஒரு சமூகமா நாம் எப்படி நடந்துக்கணும் என்பதையும் நேர்மை, ஒழுக்கம் சார்ந்த குணநலன்களையும் கத்துக்கொடுப்பதுன்னு  பல சமாச்சாரங்களை ஓசைப்படாமல் நடத்திக்கிட்டு வர்றோம்.  

அந்தந்த விழா நடக்குமுன்  வரும் வகுப்பில் அததுக்கான பயிற்சி வகுப்பும் உண்டு.  புள்ளையார் சதுர்த்தி சமயம், களிமண் புள்ளையார் செய்வது எப்படின்னு செய்முறையில்  எல்லோருக்கும்  ஒரு சின்ன உருண்டை களிமண்  கொடுத்துச் செய்யச் சொல்வோம். கற்பனைக்கு வானமே எல்லை ! 
 அதைப்போல ரக்ஷாபந்தனுக்கு ராக்கி செய்யும்  பயிற்சியும் நடக்கும்.
மூணரைமணிக்கு விழா ஆரம்பம்.  இந்தமுறை காவல்துறையினருடன், ஆம்புலன்ஸ் சேவை மக்களும் வந்துருந்தாங்க.  வழக்கம்போல்  இவர்களின் சேவையைக் குறித்த பாராட்டுகள், விழாவைப் பற்றிய விளக்கங்கள் எல்லாம் ஆனதும் ராக்கியும்  கட்டிவிட்டோம். இனிப்பையும் ஊட்டணுமா இல்லையா ?  ஹாஹா.....  தட்டுலே வச்சு விளம்பியாச்சு!  அதுபாருங்க....   இந்த வருஷம்  ஆகஸ்ட் பதிநாலுக்கு  ரக்ஷாபந்தன் விழா வச்சுருக்கு. பொழுதுவிடிஞ்சால் இந்திய நாட்டின் சுதந்திரதினம். அதையும் சேர்த்தேக் கொண்டாடியாச்.

இங்கே நம்ம ஊரில்  ஒரு இண்டியன் க்ளப்  இருக்குன்னு சொல்லி இருக்கேன்தானே ? (ISCC   Indian Social & Cultural Club ) இதன் ஸ்தாபகர் நம்ம கோபால்தான் !  இந்திய சுதந்திரப் பொன்விழா ஆண்டு ஆரம்பிச்ச  க்ளப்பின் முதல் விழாவே  சுதந்திர தினக் கொண்டாட்டம்தான். நம்மவர் ஆரம்பிச்சு வச்சது, இன்னும் நல்லாவே நடந்துக்கிட்டு இருக்கு. என்ன ஒன்னு...... வருஷாவருஷம் வெவ்வேற தலைவர்கள்   வந்துக்கிட்டு இருக்காங்க இல்லையா..... அவுங்கவுங்க விருப்பம், அவுங்களுக்குன்னு இருக்கும்  ஜால்ரா கோஷ்டி எல்லாம் சேர்ந்து,  ஆரம்பகால ஏற்பாடுகள் எல்லாம் நீத்துப்போய், வருஷாவருஷம் தீபாவளி கொண்ட்டாட்டம் மட்டும்தான் ஆகிப்போயிருக்கு.  அதுகூட இந்தவருஷம் (2021) நடக்கலை. கோவிட்க்கு விட்டுக்கொடுத்தாச்.
நம்ம சமூகத்தில்  இருக்கும்  நண்பர் ஒருவர்,  ஒரு பத்துப்பதினைஞ்சு வருஷங்களா , சுதந்திர தினத்தைத் தன்னுடைய சொந்த செலவில் கொண்டாடும் பொறுப்பை ஏத்துக்கிட்டார்.  ஆகஸ்ட் பதினைஞ்சு, காலை எட்டரை மணிக்குக் கொடியேற்றம். ( இடையில்  ஒரு வருஷம் இன்னொரு நண்பர்  அவருடைய  இடத்தில் நடத்தினார். என்ன போட்டியோ என்னமோ... அது அந்த ஒரு முறை மட்டும்தான். )  நம்ம வீட்டில்  வழக்கம்போல் ஜன்னு, சுதந்திர தேவதையா ஆகி இருந்தாள்.

காலையில் கிளம்பிப் போனோம். நண்பர் இப்போது  ஒரு இண்டியன் மளிகைக்கடை நடத்துறதால் அங்கே  கடை வளாகத்துலேயே விழா !  சின்னக்கூட்டம்தான். வழக்கமா வர்றவங்கதான்.  குளிர்காலம் என்றதால் காலையில் கிளம்பி வர ,  நம்ம சனத்துக்கு ஒரு சின்னச் சுணக்கம்தான் போங்க.








இந்தமுறை எங்களுக்கெல்லாம் ஆச்சரியம் என்னன்னா..... இந்திய ராணுவத்தில் இருந்து பணி ஓய்வு பெற்ற உயர் அதிகாரி , இந்த விழாவுக்கு வருகைதந்து கொடியேற்றி வச்சதுதான்! பழக ரொம்பவே எளியவரா இருக்கார். பல போர்களில் கலந்துருந்த  அனுபவங்களைப் பற்றி அவரிடம்  கேட்டுக்கிட்டேன்.  போதாக்குறைக்குப் பொன்னியம்மான்னு அவர் பூனாக்காரர் வேற  !  அது போதாதா எனக்கு :-) நம்மூர் எத்னிக் கவுன்ஸில் தலைவர் வந்திருந்தார். நம்ம நண்பர்தான்.
வீட்டுக்குத் திரும்பி வரும்போது  ஒரு குறிப்பிட்ட கோணத்தில் கண்ணில் தெரியும் மலையில்,    பனி கொட்டிக்கிடக்கு.  ஆஹா.....     போகணுமுன்னு நினைச்சுக்கிட்டு இருந்தது, இன்றே இப்பொழுதேன்னு நேரா ஸ்ப்ரிங்ஃபீல்ட் என்னும் ஊருக்குப் போயிட்டோம்.  சதர்ன் ஆல்ப்ஸ் மலைத்தொடரையொட்டி இருக்கும் ஊர்.  நம்ம வீட்டில் இருந்து ஒரு 57 கிமீதூரம்தான்.  முக்கால்மணி போதும்.  ஊருக்குள்ளே (!) கூடப் போக  வேணாம். எனக்கு ரொம்பப் பிடிச்ச இடம்  அந்த ரெயில்வே ஸ்டேஷந்தான். 



நம்ம வீட்டில் அப்பா, சித்தப்பா, சின்ன அண்ணா  எல்லாம் ரெயில்வேக்காரர்கள் என்றபடியால் எனக்கு ரயில்ன்னா ஒரு இது. அந்த ஆசைக்கே ஒரு ரயில் எஞ்சின் வாங்கி வச்சுருக்கேன். தங்கம் !
பெரிய ஸ்டேஷனெல்லாம் இல்லை. மொத்தமே  நாளுக்கு ரெண்டுமுறைதான்  ரயில் வந்து போகும்.  காலையில் எங்கூரில் இருந்து போகும் ரயில் 9 .19 க்கு  அங்கே ஒரு நிமிஷம் நிக்கும். அதே போல க்ரேமௌத்தில் இருந்து திரும்பும் இதே ரயில்  மாலை 5.38 க்கு வந்து நிமிஷநேரம் நின்னு கிளம்பிரும்.
ஸ்டேஷன் மாஸ்டருக்கு நாளுக்கு ரெண்டு நிமிட் வேலை. மத்த நேரத்தில் என்ன செய்வார் ?  ஸ்டேஷனில் ஒரு அறையில் ( பயணிகள் காத்திருக்கும் அறை! ) காய்கறிக் கடை இருக்கு. கதவு சும்மாத்தான் சாத்தி வச்சுருக்கும். நாம் போய் எதாவது எடுத்துக்கிட்டு, உண்டியலில்  அதுக்குண்டான காசைப் போட்டுட்டு வரலாம். ஒருவேளை இந்த காய்கறிக்கடை, ஸ்டேஷன்மாஸ்டரின்  உபதொழிலோ என்னவோ ! 
நாங்க கூட அங்கிருந்து வெங்காயமூட்டை வாங்கி வந்தோம் ஒருமுறை :-)
ஆனால் ஒரு காலத்தில் ஏகப்பட்ட பிஸியான ஸ்டேஷனா இருந்துருக்கு. மொத்தம் ஆறு ட்ராக்.  இப்பவும் மற்ற ட்ராக்குகளில்  எஞ்சினோ, பொட்டியோ ச்சும்மா நின்னுக்கிட்டு இருக்கும்.   
 
இப்ப நாம் போனப்ப மணி பனிரெண்டாகப்போகுது.  சும்மா ஒரு வேடிக்கைன்னு  பத்து நிமிட் படங்களைக் க்ளிக்கிட்டு வீட்டுக்கு வந்தப்ப மணி ஒன்னு. தூரத்தில் கண்ணில் பட்ட மலைமுகடுகளில் இருக்குமளவு பனி, கீழே  வரவர ஒன்னுமே இல்லை. நாம் போனமாசமே ஒருநாள் வந்துருக்கணும்....  இன்னும் ரெண்டு வாரத்தில் குளிர்காலம் அஃபீஸியலா முடிஞ்சுது.  
நாலுமணிக்கு இன்னொரு நிகழ்ச்சிக்குப் போகணும். அதுவரை கொஞ்சம் ஓய்வு :-)





10 comments:

said...

சுவாரஸ்யம். ஜிலேபி படம் கவர்ந்தது முதலில். அப்புறம் ரயில் பாதை படம் மிகக் கவர்ந்து விட்டது.

said...

கொண்டாட்டங்கள் சுவாரசியம். ஜன்னு ஆஹா!!!

எனக்கும் ரயில் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப ரொம்பப் பிடிக்கும்!! அதுவும் இப்படியான ரயில் பாதைனா சொர்கம் தான். பனி மூடிய மலை என்ன அழகு!!! ரயில் பாதை பின்னே மலை அந்தப் படம் செம...மனதைச் சொக்க வைக்கிறது!!!

கீதா

said...

மிக அருமை, நன்றி

said...

ரயில் நிலையம் மனதைக் கவர்ந்தது. கொண்டாட்டங்கள் நன்று. தொடரட்டும் விழாக்களும் கொண்டாட்டங்களும்.

said...

வாங்க ஸ்ரீராம்,

ஜிலேபி நிறம் தியாகத்தின் நிறமல்லவா... அதான் :-)

ரயில் பாதை..... தத்துவம் சொல்லுதோ.... ஜோடியாகவே போகணுமுன்னு :-)

said...

வாங்க கீதா,

அனுபவிக்கத் தெரிஞ்சுக்கிட்டா எல்லாத்திலும் சுவாரஸியம்தான் இல்லையோ !!!!

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

நம்ம நாட்டிலும் முந்தியெல்லாம் ரயில் நிலையங்கள் இப்படித்தான் ஜிலோன்னு இருக்கும். சனம் பெருகினப்புறம்தான் எங்கேயும் எப்போதும் கூட்டம்.

said...

ஸ்பிரிங் பீல்ட் மலை முகடு மிகுந்த அழகு. ரயில் நிலையம் சிறியதாக இருந்தாலும் கவர்கிறது.

said...

வாங்க மாதேவி,

ஆளே இல்லை என்பதும் கூட ஒரு அழகே !