Wednesday, February 02, 2022

கோவிட் ... தடுக்கில் பாய்ஞ்சதால், மாவேலி .... கோலத்தில் பாய்ஞ்சுட்டார்.... பொன்னோணம்....


வீக்கெண்டுக்குக் காத்திருந்து இன்றைக்கு ஓணம்  விழா கொண்டாடப் போறோம். இந்தக் கோவிட் காரணம், எப்போ  லாக்டௌனோ , லெவல் மாற்றம் வருமோன்ற திகில் காரணம் கிடைச்ச  வீக் எண்டைப் பாழாக்க  வேணாம்தானே ?  இந்த வருஷத்துக்கான ஒரிஜினல் (2021) ஓணம், ஆகஸ்ட் 21க்குத்தான்.  அதுவும் சனியாக இருப்பதால் அன்றைக்கே  விழாவை வச்சால்  மாவேலிக்கும் நாள் குழப்பம் இல்லாமல் இருக்கும். இத்தனைக்கும் எங்க கேரளா அசோஸியேஷனில்  ஒரு மூணு குடும்பம்தான் ஹிந்துக்கள்.  ஆனால் ஒன்னு சொல்லணும், யாரும் மத வேற்றுமை பார்க்காமல்  நெற்றியில்  சந்தனக்குறியும் செட் முண்டுமாய்  சம்ப்ரதாயப்படி  அமர்க்களமா அலங்காரம் செஞ்சுக்கிட்டுதான் விழாவில் கலந்துக்குவாங்க. 
இந்த வருஷத்துக்கும் பெண் தலைவர்தான்.  போனவருஷமும் இவுங்கதான். போட்டியின்றி மறுபடியும் தலைவராக்கிட்டோம்.  இதுவரை ரெண்டு லேடி  ப்ரெஸிடெண்டூ !   இந்த க்ளப்புக்கும் ஆரம்பிச்சு வச்சதில் நம்ம பங்கு உண்டு.  ஃபௌண்டர் மெம்பர். ஆயுள்கால அங்கம் வேற ! 

முந்தியெல்லாம்  ஒண விழாவுக்கு முந்தினநாள்  ராத்ரி, எல்லோரும் கூடி மறுநாளைக்கு வேண்டிய சமையலில் முக்காவாசியும் முடிச்சுருவோம்.  பூக்களம்  வரையும் பொறுப்பு எனக்குத்தான். சஹாயத்துக்கு  மற்ற சிறுப்பக்கார் உண்டு.  நம்ம துளசிதளத்துலேயே இந்த விழாக்களைப்பற்றி நிறைய எழுதியிருக்கேன்.

 எங்க ஊரில் 2011 வருஷ  நிலநடுக்கத்துக்குப்பின்  விழா கொண்டாட ஹால் கிடைக்காமல்  தவிச்சுத்தண்ணி குடிச்சதெல்லாம் பழங்கதை. கட்டிடங்கள் பழுதாகிப்போனதால்  சில முறை சர்ச்சில்  கூட ஓணம் கொண்டாடி இருக்கோம்.  இப்போ சில வருஷங்களா,  இன்னொரு பேட்டையில் நல்லதா  ஒரு கம்யூனிட்டி  ஹால்  கட்டி வாடகைக்கு விட்டுருக்கு  சிட்டிக்கவுன்ஸில். கொஞ்சம் ஊரின் எல்லையில்னு சொல்லலாம்.  என்ன ஒரு பத்து கிமீ தூரம். 

இப்பெல்லாம் இளையவர்கள் நிறைய நம்ம அசோஸியேஷனில் அங்கமாயிட்டதால் பொறுப்பை எல்லாம் அவுங்களிடமே கொடுத்தாச்சு. வயசன்மாரா லக்ஷணமா ஒரு பக்கம் இருந்து தேவைப்படும்போது வழிகாட்டினால் போதும். அவுங்களும் எல்லா விழாவையும் அட்டகாசமாப் பண்ணறாங்க.

கோவிட் காரணம், யாருக்கும் பயணம் போக அனுமதி இல்லாதால் மனம் ஒடைஞ்சு கிடைக்கும் நம்ம சனத்துக்காக,  Winter family gatherings, online Malayalam language classes,  சின்னப்பசங்களுக்கான  டான்ஸ் பயிற்சி, Childrens Day,  பெரியவங்களுக்கு ஒரு  Music Band,  Football, Cricket Tournament , Ladies Sports Day னு எதாவது ஏற்பாடு செஞ்சுக்கிட்டே இருக்காங்க.  இதுலே  விழாக்கால விசேஷங்களா, ஓவியம்,  சம்ப்ரதாய உடைகள் அணிஞ்ச குழந்தைகளின் படங்கள், க்றிஸ்மஸ் சமயத்தில் வீடுகளில்  அலங்காரம்  இப்படிப் பல ஆரோக்கியமான போட்டிகள்  நடத்தறாங்க. நம்ம வீட்டிலும் க்றிஸ்மஸ் அலங்காரங்கள் உண்டு. ஆனால் போட்டிக்கு இல்லை.  வீடுகளுக்கு வந்து க்றிஸ்மஸ் கேரல் பாடுவதும்  இருந்துச்சு. கோவிட் காரணம்  ரெண்டு வருஷமா அதை நிறுத்தி வச்சுருக்கோம்.

இந்தவருஷ விசேஷ விருந்தினராக நேஷனல் கட்சி பார்லிமென்ட் அங்கங்கள் இருவர் Hon. Nicola Grigg  (MP for Selwyn, National party, & Dale A Stephens , National Party List MP) வர்றாங்க. எதிர்க்கட்சிகள்தான்  மக்களோடு எப்பவும் கூடிக் குலவுவாங்க. நம்ம ஓட்டெல்லாம் வேணுமா இல்லையா ? அடுத்த தேர்தல்  வருமே !
தாலப்பொலியோடு  ஒரு வரவேற்பு ஆச்சு. ச்சும்மாச் சொல்லக்கூடாது...நம்ம குட்டிப் பசங்க எல்லோரும் செல்லம் போல் இருக்காங்க.


இந்த வருஷம் மாவேலி,   பூக்களத்தில் வந்திருந்தார். அட்டகாசம் போங்க!  கோவிட் பயம் போல இருக்கு , நேரில் வர :-)   சின்னக்குழந்தைகள் விவரம் இல்லாமல் தொட்டுப் பார்த்துக் கலைச்சு விடும்போது ரிப்பேர் பண்ண ரெண்டு பேர் ரெடியா இருந்தாங்க.  கலர்கலரா இருக்கும்போது  கையால் அளைய ஆசை வராதா ? 


சம்ப்ரதாயப்படிக் குத்துவிளக்கேத்தி,  விழா ஆரம்பிச்சது. ஆட்டம்பாட்டம் எல்லாம் அருமை!  


நம்ம பாரதிமணி ஐயா எப்படி, சினிமாக்களில்  நிரந்தர முதல்வரோ அப்படி நான் இங்கே நிரந்தர  ஜட்ஜ் ஆகி இருக்கேன்.

பேசாம  நீதிபதிகள் போட்டுக்கும் வெள்ளை விக் ஒன்னு சொந்தமா வாங்கி வச்சுக்கணும். 
ஓண உடுப்புகளில் இருக்கும் குழந்தைகள் படங்களில் பெஸ்ட் எதுன்னு தேர்ந்தெடுக்கணும்.  வெல்லக்கட்டியில் எந்தப் பக்கம் ருசி அதிகமுன்னு எப்படிச் சொல்றது..... Very Very tough job....   you see.....  



எக்கச்சக்கமா குட்டிப்பாப்பாக்கள் .....   இன்னும் மூணு வருஷத்தில்  டான்ஸ் க்ரூப் பெருசாகப்போகுது :-)
அடுத்ததா.... பரிசளிப்பு நிகழ்ச்சி. கூப்புடு அந்த வயசன்மாரை :-)


கலைநிகழ்ச்சிகள் முடிஞ்சவுடன் அடுத்த பரிபாடி...ஓணசத்யா !  21 ஐட்டங்கள், ரெண்டு வகை பாயஸம் உட்பட !  


எப்படியும் நாலு பந்தி நடக்கும்.  கடைசிவரை நிக்க நமக்கு இன்றைக்கு நேரமில்லை.....

இன்னொரு விழாவுக்கு இப்படியே ஓடணும்.....  

அசல் ஓணத்துக்கு நம்ம வீட்டில் சக்கப்ரதமனுடன் வாமன ஜயந்தி பூஜை நடந்தது ! நம்ம ஜன்னு தம்புராட்டி  அழகிதான் !









8 comments:

said...

மிக அருமை நன்றி.

said...

ஓணம் கொண்டாட்டங்கள் அனைத்தும் வெகு அழகு. படங்கள் கண்களைக் கவர்ந்தன. தொடரட்டும் கொண்டாட்டங்களும் கோலாகலமாக!

said...

ஓணம் கொண்டாட்டங்கள் செம!! படங்கள் எல்லாம் வெகு அழகு. ஓணம் சத்தியா யும்மி!! எல்லாமே சூப்பர்னா கடைசில நம்ம ஜன்னு தம்புராட்டி ச்சோ ஸ்வீட் அதை ரஜ்ஜு, ஜன்னுதானா இதுன்னு பாக்குதோ?!!! ஜன்னு ஒவ்வொரு கொண்டாட்டத்துக்கும் வித விதமா அலங்காரம் செஞ்சுக்குறாளே!

கீதா

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

எல்லா நாடுகளிலுமே கேரளக் கொண்டாட்டங்கள் வளரே கெம்பீரமாய்த்தான் நடக்குது இல்லையோ !!!!

said...

வாங்க கீதா.

ஜன்னுவுக்கென்னப்பா.... கொடுத்துவச்ச மகராசி. பிறப்பிலே சீனத்தியாக இருந்தும், தத்தெடுத்த அருமையான அம்மா கிடைச்சிருக்க, அலங்காரத்துக்கு என்ன குறை !

ரஜ்ஜு எப்பவுமே ஜன்னுவைப் பார்த்துப் பெருமூச்சு விடுவான். கொஞ்சம் பொறாமை இருக்குமோ ?

said...

ஓணம் பண்டிகை கொண்டாட்டம் குழந்தைகள் அழகிய அணிவகுப்பு.ஜன்னு தம்புராட்டி சூப்பரோ சூப்பர்.

said...

வாங்க மாதேவி,

ஏறக்கொறைய ஒரே வயசுக்குழந்தைகள் ஜமா சேர்ந்துருச்சு இங்கே !

தம்புராட்டிக்கு ஒரு தட்டு நிறைய வந்துருக்கு இப்போ ! அவ காட்டுலே நகை மழை!