குளிரைத்தவிர வேறென்ன இருக்கு ? மிட் விண்ட்டர் என்ற பெயர் ! இங்கே ஜூன் ஜூலை ஆகஸ்ட்னு மூணுமாசம் தான் (!) குளிர்காலமாம் !!!! அப்ப இதுக்கு ரெண்டு மாசம் முன்னே பின்னேன்னு வரும் நாலு மாசங்கள் எந்தக் கணக்கில் வருதுன்னு சொல்லமாட்டேங்கறாங்க :-(
சநாதன தர்ம சபாவில் ராமாயணம் வாசிப்பது, பூஜை எல்லாம் வழக்கம்போல் வாரம் ஒருமுறை செவ்வாய்களில். சிலசமயம் வெள்ளிகளிலும். நேரம் சரியாக அமைஞ்சால் போய் வருவோம்.
சனிக்கிழமைகளில் நம்ம ஹரேக்ருஷ்ணா கோவிலுக்குப் போய் வரும் வழக்கம் பல வருஷங்களா இருந்தாலும் அரசு சொல்லும் விதமாத்தான் இப்பெல்லாம் . லாக்டௌன் லெவல் அனுசரிச்சுக் கோவில் திறந்து மூடறாங்க.
நம்ம புள்ளையார் கோவில் சத்சங்கத்திலும் இப்படியேதான். லெவல் அனுசரிச்சு நேரில், இல்லைன்னா ஸூமில்.... தான் பூஜையும் பஜனையும். இந்த மாசப்பூஜையை உள்ளூரில் இருக்கும் நேபாள் பண்டிட்கள் வந்து நடத்திக்கொடுத்தார்கள்.
கோவிட் அரக்கனின் பிடியில் இருந்து நம்மைக் காப்பாத்த அரசு தடுப்பூசி போடச் சொல்லுது. முதலில் மருத்துவத்துறை மக்கள், பொதுமக்களோடு நேரடித் தொடர்பில் இருக்கும் தொழில் சார்ந்த மக்கள் இப்படித் தரவரிசை போகுது. சீனியர் சிட்டிஸன் வரிசையில் நமக்கான ஊசியை ஜூலை முதல் வாரம் போட்டாங்க. இன்னும் மூணு வாரத்துக்குப்பிறகு ரெண்டாம் தடுப்பூசி போடுவாங்களாம்.
ஊசி போட்ட நாள் இரவு லேசா உடம்பு காய்ஞ்சது. சின்னதா கைகால் வலி. எப்பவும் இருக்கறவலி போலத்தான். ஆனாலும் பழி போட ஊசி இருக்கே இப்ப :-)
நம்ம தமிழ்ச்சங்கத்தில் குளிர்கால ஒன்று கூடல், அன்றைக்கு. சங்கத்தை ஆரம்பிச்சு வச்ச ஆத்மாக்கள் போகாமல் இருக்க மாட்டாங்கதானே ? நிறைய புது அங்கங்கள். தமிழ்பள்ளி மாணவர்கள் எண்ணிக்கையும் கூடி இருக்கு. பிள்ளைகள் எல்லாம் செல்லம்போல் இருக்காங்க. பாட்டு, நடனம், நாடகம்னு அமர்க்களம்தான். சங்கம் ஆரம்பிச்சு நடக்கும் கால் நூற்றாண்டு காலத்தில் முதல்முறையாக, இந்தியத் தமிழர், தலைவராக இருக்கார்.
(இங்கே இந்தியத் தமிழர்கள் சங்கம் ஒன்னு புதுசா ஆரம்பிச்சு மூணுவருஷமா நடக்குது என்பது கூடுதல் தகவல். CITA : Canterbury Indian Tamils Association)
இந்த வருஷ ஆரம்பத்தில் (2021) நம்ம அடுக்களைப்பக்கம் இருக்கும் கன்ஸர்வேட்டரியைப் புதுப்பிக்க ஏற்பாடு செஞ்சுருந்தோம். அவுங்க வந்து இடம் அளந்துக்கிட்டுப்போய், செலவுக்கான தொகையைச் சொல்லி, நாம் அதை அங்கீகரிச்சுன்னு ... வேலை ஆரம்பிச்சதே மார்ச் கடைசி வாரம்தான். சரியா அதே சமயம் 'நம்மவருக்கு' கண் சிகிச்சை வேற ! ஆச்சு பத்து மாசம் இன்றோடு. இன்னும் பூரணகுணம் கிடைக்கலை. நமக்கு நேரம் சரி இல்லை போல.... கண்ணில் பிரச்சனைகளா வந்துக்கிட்டே இருக்கு. பெருமாள்தான் பார்த்துக்கணும்.
இதுக்கிடையில் பயணம் ஏதும் போக முடியாமல் காலில் குண்டு கட்டி விட்டது போல இருக்கு. உள்ளுர் பயணமாவது போய் வரலாமுன்னா..... அங்கே கொரானோ கம்யூனிட்டி கேஸ், இங்கே கொரானா ன்னு பயம்வேற காமிச்சுக்கிட்டு இருக்காங்க. நாஞ்சொல்லலை.... தினம் மதியம் ஒரு மணிக்குக் கொரோனா டிவியில் வந்துரும்னு.....
சீனர்கள் மேல் கோபம் வருது.... ஆனால் இங்கே நமக்கான காய்கள் ஒன்னு ரெண்டு வாங்கிக்கணுமுன்னா சீனக்கடைக்குத்தான் போகணும். வீட்டாண்டை வேற இருக்கே!
ஒருநாள் அங்கே நம்ம நார்த்தங்காய் கிடைச்சது. விடமுடியுதா ? வடக்குத்தீவில் இருந்து வந்துருக்கு. நம்மூரில் சுருள்சுருளா வெட்டி உப்பிலிட்டு வைப்பாங்க பாருங்க.... அதையே செஞ்சு பார்த்தேன். முதல் முறைக்கு நாட் பேட். எல்லாஞ்சரி. வெயில் எங்கே இருக்கு காயவைக்க ? எடு அந்த சொந்த சூரியனை ! இந்த நார்த்தங்காய்க்கு இங்கே Kaffir Lime னு பெயர். உள்ளூர் நர்ஸரியில் ஒரு செடி வாங்கி வந்து வச்சுருக்கேன். அதுலே காய் வந்துட்டால்.... ஊறுகாய் பிஸினஸ் ஆரம்பிச்சுறலாம் :-)
நம்ம வீட்டு ஸ்ட்ராபெர்ரி கொய்யாவேற எக்கச்சக்கமாக் காய்ச்சுப் பழுத்துக்கிடந்தது. இதை வச்சு நம்ம எலந்தைவடை (! )செஞ்சு பார்க்கலாமான்னு தோணுச்சு. செஞ்சாச். நிறம்தான் சிகப்பா இருந்ததே தவிர ருசியில் ஒன் னும் அவ்வளவா மாற்றம் இல்லை.
இப்படித்தான் சமையல் பரிசோதனைன்னு ஆரம்பிச்சா.... அப்படியே ஒவ்வொன்னா.... வேற ஏதாவது அலங்காரம்னு ஆரம்பிச்சா அதுலேயேன்னு 'போனாப் போன இடம், வந்தா வந்த இடம்னு ' நாளைத் தள்ளிக்கிட்டு இருக்கேனே ஒழிய, உக்கார்ந்து எழுதலாமுன்னு தோணவே இல்லை. மனசுக்குள்ளே இதை எழுதணும் அதை எழுதணுமுன்னு அதுபாட்டுக்குச் சேர்ந்துக்கிட்டே இருக்கு. இதுவும் கடந்து போகுமுன்னு சொல்றாங்களே... அப்படியே ஆகக்கடவது.
துளசிதளத்தில்தான் பதிவுகள் வரலையே தவிர, ஃபேஸ்புக்கில் தினமும் ஆஜர் சொல்லிக்கிட்டுத்தான் இருந்தேன். அதுவும் இல்லைன்னா.... அந்தமான் சிறைவாசமா இருந்துருக்கும்........
இவ்ளோ கலாட்டாவிலும் ரொம்பவே திருப்தியா இருந்தது ரஜ்ஜு மட்டுமே ! ஹாஸ்டல் போக வேணாமே :-)
யோகா வகுப்பில் சேர்ந்துருக்கோமுன்னு சொன்னேனோ.... வாரத்துக்கொருநாள் ஒரு மணி நேரம் வகுப்பு. பயங்கர ஆசனம் எல்லாம் போட வேணாம். கொஞ்சம் வயதுபோனவர்களுக்கான ஸ்பெஷல் இது. அம்பதுக்குப்பின் :-) மூச்சுப்பயிற்சிதான் முக்கியம். கூடவே சின்ன சின்ன உடற்பயிற்சிகள். நாற்காலியில் உக்காந்தபடியே செய்யலாம். முக்கியமா உடலை நல்ல பேலன்ஸில் வச்சுக்கறதுக்கான பயிற்சி. கொஞ்சம் வயசாக ஆக.... எப்பவாவது சட்னு கீழே விழுந்து வச்சோமுன்னா... அதன்பிறகு நடமாட முடியாமப்போயிருதேன்னு ....... ஸ்போர்ட்ஸ் கேண்டர்பரி இதை நடத்துது. குழுவில் ரெண்டுபேருக்குப் பயிற்சி கொடுத்துருக்காங்க. அவுங்கதான் வகுப்பை நடத்திக்கிட்டுப் போவாங்க. மாசம் ஒருமுறை, ஸ்போர்ட்ஸ் கேண்டர்பரி பயிற்சியாளர் வந்து நாம் யோகா செய்யும் லக்ஷணத்தை நேரில் வந்து பார்த்துட்டு, இன்னும் சில புது யுக்திகளைச் சொல்லிக் கொடுத்துட்டுப் போவாங்க.
நாங்க ஒரு முப்பதுபேர் இந்தக்குழுவில் இருக்கோம். வெறும் Chair யோகா மட்டும் செய்யாம அப்பப்ப Food Yoga வும் செய்வோம். கொண்டாடக் காரணங்களா இல்லை ? எல்லோரும் மனசால் இணைஞ்சுட்ட காரணத்தால் யோகா வகுப்பு தவிர , அப்பப்ப சின்னதா பிக்னிக், எங்கியாவது தோட்டத்தில் நடக்கப்போறது, வீட்டுப் பூஜைகள், பாலிவுட் ம்யூஸிக் நைட்ன்னு தாளிச்சுக்கிட்டு இருக்கோம். கடவுளே.... கண் படாமல் இருக்கணும். டச் வுட் :-)
ஆடி மாசம் பொறந்துருச்சு. நம்ம மாரியம்மன் கோவிலில் விழான்னு ஏற்பாடுகள் ஆரம்பிச்சுக் கோவிட் காரணத்தால் விழா நின்னு போச்சு. பாவம்.... அம்மன். வீட்டுலே மாவிளக்கு போட்டு, மன்னிப்புக் கேட்டுக்கிட்டேன்.
என்னென்னவோ பரிசோதனைகள் காய்கறி உலகத்தில் நடந்துக்கிட்டு இருக்கு. தங்கத் தண்ணிப் பழம் அதுலே ஒன்னு.... ஒரு சின்னத்துண்டு வாங்கியாந்தோம். நிறம்தான் வேறே... ருசி பழசுதான். ஏற்கெனவே கிவி பழத்தைத் தங்கம் ஆக்கியாச்சு தெரியுமோ !
கவலைப்படாதே... எல்லாம் சரியாகுமுன்னு சொல்றாரோன்னு நினைச்சு ஒரு புத்தரும் புதுவரவானார்.
நல்ல குளிரும் பனியுமா நாட்கள் போகுது. சதர்ன் ஆல்ப்ஸ் மலைகளில் பனி உறைஞ்சு கிடக்கு.... ஒருநாள் போகணும். கொஞ்சம் வெயில் வரட்டுமுன்னு ஒரு காத்திருப்பு.
முதல் ஊசி போட்டு மூணுவாரம் ஆனதும் ரெண்டாவதும் ஆச்சு. இனி நமக்கொன்னும் வராது. பயணம் போக விட்டுருவாங்கன்னு கொண்டாட்ட மனநிலையில் பிகானிர்வாலா என்னும் ரெஸ்ட்டாரண்ட்க்குப்போய் பகல் சாப்பாட்டை (!) முழுங்கிட்டு வந்தோம். ஊசி போட்டா கை வலிக்கும்ல. சமைக்க முடியாதே..... :-)
நம்ம தமிழ்ப்புத்தக மன்றத்தில் 'வாசிக்கலாம், வாங்க' ன்னு ஒரு நிகழ்வு. பெரியவங்களுக்குமே இப்போல்லாம் புத்தகத்தைக் கையில் எடுத்து வாசிக்கும் வழக்கம் போயிருச்சே... அதை ஊக்குவிக்கவும், பிள்ளைகளுக்கு வாசிப்பில் ஆர்வம் தூண்டவும், முக்கியமா பிள்ளைகள் தமிழில் பேசவும்னு தான். பிள்ளைகளைக் கதை சொல்ல வைக்கும் முயற்சியில் வெற்றிதான்னு சொல்லலாம். தாயும் தந்தையுமா நல்லாவே பயிற்சி கொடுத்துருந்தாங்க.
அடுத்த கட்டமா.... பெரியவங்களைத் தமிழில் எழுத வைக்கணும். எப்பவும் கையில் வச்சுருக்கும் செல்ஃபோனிலேயே நாலு வரி எழுதப் பழக்கணும். பலருக்கு ஆர்வம் இருந்தாலும் தமிழ் எழுத்துரு இல்லையேன்னு எண்ணம்.
இதுசம்பந்தமா என்ன செய்யலாமுன்னு யோசிச்சு, 'எழுதிப் பழகலாம் வாங்க ' என்ற தலைப்பில் இகலப்பையைப் பிடிச்சு உழுதால் போதும், எப்படியெப்படி எங்கே இருந்து தரவிறக்கம் செய்யலாம், எப்படிப் பயன்படுத்துவதுன்னு காண்பிக்க நம்மவர் ஒரு ஸ்லைடு ஷோ ஏற்பாடு செஞ்சார். எழுத்துரு வந்தபின் எதை எழுத ஆரம்பிக்கறதுன்னு இருக்கும் தயக்கத்தை விரட்ட நான் ஒரு விளக்கம் கொடுக்கறதுன்னு முடிவு செஞ்சு அப்படியே ஆச்சு. நமக்கென்ன பேசத்தெரியாதா ?
நிகழ்வை ஏற்பாடு செய்த நண்பர் செல்வகணபதி.
தமிழ் நூலகத்தில் இருந்து மூணு புத்தகங்கள் எனக்கு.ஒரு நாப்பதுபேர் வந்துருந்தாங்க. ஓரளவுக்குப் பயனாக இருந்திருக்குமுன்னு நினைக்கிறேன். எடுத்தவுடனே பெரிய பெரிய பதிவுகள், வலைப்பக்கம் வச்சுக்கறதுன்னு போக வேண்டாம். இப்பப் பரவலா புழக்கத்தில் இருக்கும் ஃபேஸ்புக்கில் ஏற்கெனவே இங்லிஷில் நாலு வரி எழுதறதைப்போலவே ஒரு நாலு வரி தமிழில் எழுத ஆரம்பிங்க. கொஞ்சநாள் பழகின பிறகு இன்னும் பத்துவரி கூடுதல்னு எழுதிப்பழகலாமுன்னு சொன்னேன். கண்ணையும் காதையும் திறந்து வச்சு அக்கம்பக்கம் பார்த்தாலே ஏகப்பட்ட சமாச்சாரங்கள் சிக்கும். அதை சுவையாக எழுதணும். அவ்ளோதான், இல்லெ ?
https://www.facebook.com/1309695969/videos/556982709070964/
தமிழ்புத்தக மன்றதுக்குன்னு ஒரு வெப்சைட் ஆரம்பிச்சாங்க. அதுலே எனக்கும் ஒரு இடம் கிடைச்சது. நம்ம 'முழிபெயர்ப்பில்' வந்த மவொரி கதைகளை, அதுலே வாரம் ஒன்னுன்னு வெளியிட முடிவு. அதுக்குள்ளே நுழைஞ்சு பார்த்தால் வேர்டுப்ரெஸ்லே ! அதென்னவோ என்னாலே லாகின் செஞ்சுக்கவே முடியலை.முந்தி ஒரு காலத்தில் 'தேசி பண்டிட்' பக்கத்துலே அளந்துக்கிட்டு இருந்ததெல்லாம் வேர்டுப்ரெஸ்தானே! இப்ப என்னன்னா.... பழைய பாஸ்வேர்டில் வான்னு சொல்லுது. யாருக்கு ஞாபகம் இருக்கு ? ஙேன்னு முழிச்சுட்டு, மன்றத்தின் முக்கியஸ்தருக்குக் கதையை அனுப்பி விட்டு, அவரையே சேர்த்துறச் சொன்னேன். அப்படித்தான் ஆகிக்கிட்டு இருக்கு இப்பவும்.
9 comments:
அருமை நன்றி
வாங்க விஸ்வநாத்,
நன்றி !
இவ்ளோ கலாட்டாவிலும் ரொம்பவே திருப்தியா இருந்தது ரஜ்ஜு மட்டுமே ! ஹாஸ்டல் போக வேணாமே :-) //
ஹாஹாஹாஹாஹ் அதானே!! நிஜமாவே சந்தோஷமா இருந்திருப்பார் ஐயா!!
எல்லாமே சுவாரசியம்தான். தங்கநிற தண்ணிப் பழம் இங்கயும் வந்திருச்சே. கிவ்விதான் வரலை. இதுவரை கண்ணுல படலை
அண்ணாவின் கண்ணுப் பிரச்சனை சரியாகிடும்.
கடைசில சொன்னிங்க பாருங்க அதுதான் கண்ணையும் காதையும் திறந்து வைச்சா அக்கம் பக்கம் எல்லாம் கிடைக்கும் ஆனா அதை சுவாரசியமா சொல்லணுமே அதுதான்..அது உங்களுக்குக் கைவந்த கலை!! துளசிக்கா.
எல்லாமே ரசித்தேன்.
கீதா
தமிழ் புத்தக மன்றத்தில் நல்ல பல நிகழ்வுகள் நடத்தப்படுவது மகிழ்ச்சி அதில் உங்கள் பங்களிப்புகளும் இடம்பெறுவது சிறப்பு .பாராட்டுகள்.
நல்ல நல்ல விஷயங்களை தொடர்ந்து செய்து வருகிறீர்கள். பாராட்டுகளும் வாழ்த்துகளும். காலில் குண்டு கட்டிக்கொண்டார் போல ஊர்சுற்ற முடியாமல் எனக்கும் அவதி தான். பயணம் செய்து பல மாதங்கள் ஆகிவிட்டன. திட்டமிட்ட பல பயணங்கள் ரத்து செய்ய வேண்டியதாகிவிட்டது. பயணம் செய்ய காத்திருக்கிறேன்.
எக்கச்சக்க படங்கள்.. எக்கச்சக்க விவரங்கள்..!
வாங்க கீதா,
ரசிப்புக்கு நன்றி. எக்கச்சக்க சுவாரஸியமான சமாச்சாரங்கள் நம்மைசுத்தி நடக்குதுல்லே !!!
வாங்க மாதேவி,
பாராட்டுகளுக்கு நன்றிப்பா !
வாங்க வெங்கட் நாகராஜ்,
//பாராட்டுகளும் வாழ்த்துகளும்// மிகவும் நன்றி.
பயணம்தான் எப்போ எப்போன்னு இருக்கே..... ப்ச்.....
Post a Comment