திரும்பிப்பார்க்கலாமுன்னு போனவள் எப்படியோ ரொம்பவே உள்ளே போயிட்டேன் போல.....
இருக்குமா ஒரு முப்பத்திரெண்டு வருஷம்.......
மதர் ஹெல்ப்பர் என்ற பெயரில் பெரும்பாலான நேரங்களில் மகளின் பள்ளிக்கூடத்துலேதான் இருப்பேன். காரணம்... ரொம்ப சிம்பிள். மகளை யாராவது அடிச்சுருவாங்களோன்ற பயம்தான். ஏற்கெனவே கிண்டர்கார்டனில் சேர்த்துவிட்ட முதல்வாரமே குழந்தை முகத்தில் ஒரு பயம் வந்துருச்சு. மத்த பசங்க யாரும் இவளை விளையாட்டுலே சேர்த்துக்கற மாதிரித் தெரியலை. நானும் மதர் ஹெல்ப்பரா ஆரம்பநாளில் இருந்தே அங்கே வேலை செஞ்சுக்கிட்டு இருக்கேனே ! இங்கே வந்த புதுசு வேற. லோக்கல் ஆளுங்க கூடக் கொஞ்சம் பழகி வச்சுக்கிட்டால்தான் நல்லது. முதலாவது அவுங்க பேசறது புரிய வேணாமோ ? கிவி ஆக்ஸென்ட்... கொஞ்சம் இழுத்து இழுத்துப்பேசறதுதான்.
அப்ப இங்கே இந்தியர்கள் ரொம்பவே குறைவு. அவுங்களுக்கு நாமும், நமக்கு அவுங்களும் ஏலியனாத்தான் இருந்தோம். ரெண்டாவது வாரத்துலே ஒரு பையன், நம்ம பாப்பாவை அடிச்சுட்டான். பெரிய டீச்சரிடம் குற்றப்பத்திரிகை வாசிச்சால்.... அதெல்லாம் ஒரு விஷயமே இல்லைன்ற மாதிரி இருந்தாங்க. அன்னையோடு அந்த கிண்டிக்கு முழுக்குப் போட்டாச்சு.
அதுக்கடுத்த வாரமே அங்கே இருந்து ஃபோன் பண்ணி ஏன் வரலைன்னு விசாரிச்சாங்க. அடிச்சதால் வர விருப்பமில்லைன்னு சொல்லிட்டேன். வீட்டுலேயே சொல்லிக்கொடுத்தால் ஆச்சு. நாலு பிள்ளைகள் கூடப் பழகணுமுன்னுதானே கிண்டியில் கொண்டுபோய் சேர்த்தது, இல்லையா?
வீட்டாண்டை இருந்த நீச்சல் குளத்தில் நீச்சல் படிக்கச் சேர்த்துவிட்டோம். தினமும் போறதும் வாறதுமா ஆச்சு. இந்த ஆறுமாசத்துலே ஊர் நிலவரம், கடைகண்ணி, அது இதுன்னு எல்லாம் ஒரு விதமா பழகிட்டோம். நம்மவருக்கும் புது இடத்தில் வேலை இல்லையோ ! இதுக்கிடையில் ஒரு வீட்டையும் வாங்கி, அங்கே போயிட்டோம். ஆரம்பப்பள்ளிக்கூடத்துக்கு நடந்து போய் வர்ற தூரமாப் பார்த்து வாங்குன வீடுதான். மகளையும் பள்ளிக்கூடத்துலே சேர்த்துட்டு, அங்கேயும் 'என் வேலை'யைத் தொடர்ந்து செஞ்சுக்கிட்டு இருந்தேன் :-) வாலன்ட்ரி வேலைக்கு என்ன பஞ்சம் ? இருக்கவே இருக்கு பள்ளிக்கூட லைப்ரரி.
புள்ளைகளை வகுப்பறைக்குள் அடைச்சு வச்சுச் சொல்லித் தர்றதெல்லாம் அதிகம் இல்லை. எப்பப்பார்த்தாலும் கதை படிச்சுச் சொல்றது, படம் வரையறது, இன்டோர் கேம்ஸ், அவுட் டோர் கேம்ஸ்ன்னே போய்க்கிட்டு இருக்கு. வீட்டுப்பாடம் என்ற சமாச்சாரமே கிடையாது. புத்தகம் ? அதுவும் இல்லை. ஆனால் ஸ்கூல் பேக் இருக்கு. அதுலே லஞ்ச் பாக்ஸ் மட்டும்தான். என்னடா... இங்கெல்லாம் ஒன்னுமே சொல்லித்தர மாட்டேங்கறாங்க.... எப்படி இது படிச்சு பெரிய ஆளாகப்போகுதோன்னு கவலை ஒருபக்கம் இருந்தாலும், குழந்தைகள் , குழந்தைகளாக வளர்றதும், கூடவே வாழ்க்கைக் கல்வி கத்துக்கறதும் நல்லாத்தான் இருந்துச்சு.
பசங்களை அக்கம்பக்கம் கூட்டிக்கிட்டுப்போற நாட்களில் முன்னாலேயே 'தாய்மார்கள் உதவி வேணுமு'ன்னு சொல்லிருவாங்க. ஆறு பிள்ளைகளுக்கு ஒரு அம்மான்ற கணக்கு. சில சமயம் அப்பாக்களும் வர்றதுண்டு. நம்ம அப்பாதான் பள்ளிக்கூடப்பக்கம் எட்டியே பார்க்காத ஆளு.
ஒருநாள் இப்படி ஒரு தோட்டத்துக்குப் புள்ளைகளைக் கூட்டிப் போனோம். Rhododendron Garden. ரோடோஸ்ன்னு சுருக்கிக் கூப்புட்டுக்கறதுதான். கொத்துக்கொத்தா, கலர்க்கலரா பூச்செண்டுகள் மாதிரி பூக்கும் செடிகள். இப்ப சீஸன் என்பதால் ஒரு செடி விடாமல் பூத்துக்குலுங்குது. குலுங்குதுன்னா............. உண்மையாகவே தரையெல்லாம் கொட்டிக்கிடக்கு. நல்ல ஆளுயரச்செடிகள் !
கையோடு கொண்டுபோயிருந்த பகல் சாப்பாட்டை எல்லோரும் செடிகளின் நிழலிலேயே உக்கார்ந்து சாப்பிட்டோம். அப்புறம் பிள்ளைகள் எல்லோரும் ஓடி விளையாட, அவுங்கமேல் ஒரு கண் வச்சுக்கிட்டே பெரியவங்களின் பேச்சுக்கச்சேரி நடந்துக்கிட்டு இருக்கு.
இந்த ஊரில் ப்ளாக்ஸ் செடின்னு ஒன்னு இருக்கு. கரும்புச்சோலைபோல நீளநீளமான இலைகளோடு இருக்கும் புதர் வகை. நியூஸி நேடிவ் வகை என்பதால் வெட்டியெல்லாம் களைய முடியாது. எல்லாத் தோட்டங்களிலும் அங்கங்கே இருக்கும். காய்ஞ்சு உதிர்ந்துபோன இலைகளைக் கிழிச்சால் நீளமா நார் வரும். பறவைகள் கூடு கட்டும் சமயம் இதே வேலையாத்தான் இருக்கும். மரவுரி !
பேச்சு வாக்கில் நான் கைக்கு அகப்பட்ட நாரில், கீழே உதிர்ந்து கிடந்த பூக்களைத் தொடுக்க ஆரம்பிச்சேன். பூச்சரம் வளர வளர , மொத்தக்கூட்டமும் என்னைச்சுத்தி நின்னு கண்கள் விரியப் பார்க்குது !
ஊசி இல்லாமல் எப்படி இப்படி ? வெறுங்கையாலா ? நூல் இல்லையா ? ஹா..... இது போதாதா எனக்கு ? எப்படி தினமும் தலையில் பூச்சுட்டிக்கும் வழக்கம் இந்தியர்களுக்கு இருக்குன்னு பிரசங்கம் ஆச்சு :-)
ஒரு அஞ்சாறு மாசம் கழிச்சு, நம்ம ஊர் சிட்டிக்கவுன்ஸில் இருந்து எனக்கொரு கடிதாசி! அடுத்து வரும் ஃப்ளவர் ஷோவில் உதவி செய்ய முடியுமான்னு ! இங்கத்து சம்மர் கடைசி மாசத்தில் ஃபிப்ரவரி ரெண்டாம் வாரம் ஃப்ளவர் ஷோ ன்னு ஒரு நாலைஞ்சுநாள் விழா உண்டு. அந்த சமயம் வேலன்டை டே வேற வருதே ! எங்க ஊர்தான் நியூஸியின் கார்டன் சிட்டி வேற !
நகர மையத்தில் ஓடும் ஏவான் நதியில் ( சின்ன ஆறுதான். ஜீவ ஆறுன்னு சொல்லிக்கலாம். எப்பவும் வற்றாதது ) அங்கங்கே மலர் அலங்காரங்கள், சதுக்கத்தில் தொட்டிகளில் கொண்டு வந்து வைக்கும் பூச்செடிகள், முக்கியமா எங்க கதீட்ரலில் ஃ ப்ளோரல் கார்பெட்னு நல்லாத்தான் இருக்கும். ( இருந்தது.... இப்போ இல்லை..... )
போகட்டும்.... என்ன உதவின்னு கேட்டதுக்கு, Brides of the world என்ற தீம். நம்மூரில் வெவ்வேற நாட்டு மக்கள் இருக்காங்களே ! இவுங்க உதவியால் மணப்பெண் அலங்காரம் எப்படி இருக்குமுன்னு காமிக்கப்போறாங்களாம். நமக்கு இந்திய மணமகள்.
என்னாண்டை அலங்காரத்துக்கு அதிகமான பொருட்கள் இல்லை. சௌத் இண்டியன் மணமகளை ஓரளவு சிம்பிளாச் செய்ய முடியும்னு சொன்னேன். ஓக்கேன்னுட்டாங்க. புடவை, கொஞ்சம் நகை (அதான் சிம்பிள்னு சொல்லியாச்சே )இருக்கே. பூச்சரம் தொடுத்துக்கலாம். ஆனால் கல்யாணப்பொண் என்ற வகையில் ஜடையில் பூ வச்சுத் தைக்க வேணாமோ ?
உக்கார்ந்து யோசிச்சு, கொஞ்சம் க்ரேப் பேப்பர் வாங்கி அட்டையில் வச்சுத் தைச்சு வச்சேன். மகளுக்கு அலங்கரிச்சுப் பார்த்தப்ப நாட் பேட் னு ஓரளவுக்குப் பரவாயில்லை. ஆனால் மகளை மேடையேத்த முடியாது. குழந்தைத் திருமணம்னு சொல்ல விடலாமா ?
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரிடம் காமிச்சப்ப, அவுங்களுக்கு பயங்கர சந்தோஷம்.(உண்மையான பூ ஜடையைப் பாத்திருக்க மாட்டாங்கதானே ? ஹிஹி )கொஞ்சம் நீள முடி இருக்கும் மாடலை ஏற்பாடு பண்ணிருங்கன்னேன்.
குறிப்பிட்ட நாள், எல்லாத்தையும் கொண்டுபோய், அவுங்க மாடலை அலங்கரிச்சு நிகழ்ச்சியும் நல்லாவே நடந்தது. நேரமாகுதுன்னு நான் வீட்டுக்கு வந்துட்டேன். அப்புறம் மறுநாள் நம்ம பொருட்களைக் கொண்டு வந்து தந்தாங்க, ஒருக்கிணைப்பாளர். கூடவே ஒரு பூங்கொத்தும் !
அப்பதான் கேட்கறேன்.... எப்படி நம்மாண்டை உதவி கேக்கத்தோணுச்சுன்னு?
நம்ம பூத்தொடுக்கும் எபிஸோடைப் பார்த்த அம்மாக்களில் ஒருவர் மூலமா சேதி பரவி, சிட்டிக்கவுன்ஸில் வரை போயிருக்குன்னு! ஹாஹா.....
நம்ம க்ராஃப்ட் சமாச்சாரம் வைக்கும் அலமாரியில் யதேச்சையாக் கண்ணில் பட்ட பூ ஜடை , இப்படி ரொம்பவே திரும்பிப்பார்க்க வச்சுருச்சே :-) உச்சிப்பூதான் காணோம். போகட்டும் விடுங்க.....
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் .......... பொழைச்சுக்கிடந்தா, அடுத்த இந்தியப்பயணத்தில் பூஜடை ஒன்னு நம்ம ஜன்னுக்கு வாங்கிவரணும். இப்பெல்லாம் ரொம்ப அழகழகா ரெடிமேட் கிடைக்குதுல்லே !!!!
19 comments:
அருமை சிறப்பு நன்றி
சிறப்புப் பதிவு. ரோடோஸ் மற்றும் கதீட்ரல் கார்பெட் அழகாக உள்ளன. ஓணத்துக்கு பூக்களம் அமைத்தது போன்று கார்பெட் நன்றாக இருந்தது, 32 வருடமாக படங்களை பத்திரமாக காப்பாற்றியிருக்கிறீர்களே!
Jayakumar
ரசனையான புகைப்படங்கள். குறிப்பாக பூ தைத்தது..அதிகம் ரசித்தேன்.
பதிவும் பதிவு வழி சொன்ன விஷயங்களும் சுவாரசியம். ரொம்பவே பின்னோக்கி சென்றாலும் சிறப்பாகவே இருந்தது.
மிகப் பிரமாதமான நிகழ்வுகள்.
அதை அப்படியே விவரிக்கிற படங்கள். எத்தனை
திறமை அன்பு துளசிமா.
பூ ஜடை மிக மிக அழகு. பேசும் கைகள்.
அனபு வாழ்த்துகள் மா.
சுவாரஸ்யமான அனுபவங்கள். அவர்களுக்கு பூத்தொடுப்பது எல்லா ஆச்சரியமாக இருந்திருக்கிறது!
துளசிக்கா சூப்பர் உங்க பூ ஜ்டை. உங்களுக்கு லெட்டர் வந்தப்பவே தோணிடுச்சு நீங்க பூ தொடுக்கும் போது பார்த்த அம்மாக்கள் ல யாரோ வழியா சிட்டி கவுன்சில் வரைக்கும் போயிருக்குனு. அங்கெல்லாம் வித்தியாசமான நிகழ்வுகள் ஈசியா பரவிடும்தான் அவங்களுக்குப் பூ தொடுக்கறது எல்லாம் புதுசு இல்லையா..
படங்கள் அழகு. பின்னோக்கிச் செனறாலும் உங்கள் அனுபவங்கள் ரொம்ப சுவாரசியம்.
கீதா
நடந்த எதையும் மறைக்காமல் நேற்றைக்கு நடந்தது போல விவரித்திருக்கும் விதம் அருமை. புகைப்படங்கள், பூ ஜடை எல்லாம் செம ஃப்ரஷ்!
கடந்த நிகழ்வுகள் அருமை.
வாங்க விஸ்வநாத்,
நன்றி !
வாங்க ஜயகுமார்.
ஃபோட்டோ ஆல்பங்களா ஒரு அலமாரி நிறைஞ்சு கிடக்கு. நல்லவேளை டிஜிட்டல் கேமெரா வந்து, கோபாலைக் காப்பாத்திருச்சு:-)
இனி சர்ச்சும் இல்லை, மலர்த்திருவிழாவும் இல்லை என்பதே..... உண்மை. ஹூம்....
வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
தேவைன்னா... மனுசன் எதையும் கண்டுபிடிச்சுருவானாக்கும் :-) பூப்பின்னலும் இப்படி ஒன்னு !
வாங்க வெங்கட் நாகராஜ்.
நினைவாற்றல் பல சமயம் அருமை, சிலசமயம் கொடுமை !
வாங்க தமிழ் கவிதைகள்,
நன்றி.
வாங்க வல்லி,
உங்கள் அன்புக்கு நான் அடிமை !
வாங்க ஸ்ரீராம்.
அது ..... வெறுங்கையிலே பூத்தொடுத்தல் இல்லையோ :-)
நாமெல்லாம் வாயிலேயே வடை சுடுவோம்ங்கறது இன்னும் அவுங்களுக்குத் தெரியாது இல்லை :-)))
வாங்க கீதா,
மக்கள் கண்கள் விரியும் அளவுக்கு மேஜிக் பண்ணி இருக்கேன், இல்லை :-)
வாங்க பானுமதி,
ஒரு சம்பவம் பற்றிப்பேச்சு வந்தாலும் அதோட நடந்த பலவும் நினைவுக்கு வந்துருதே. இதாலேயே வீட்டுலே சண்டை :-)
வாங்க மாதேவி.
கடந்தகாலத்திலும் கலக்கி இருக்கொம்லெ :-)
Post a Comment