காலண்டர் புதுவருஷம் முடிஞ்ச கையோடு, வரப்போகும் பொங்கல் பண்டிகைக்கு என்ன செய்யலாம்னு ஒரு யோசனை... ரொம்ப மெனெக்கெடவோ, ஏகப்பட்டப் பொருட்செலவோ செய்யாமல், 'உள்ளது கொண்டு ஓணம்' என்ற வகையில்தான் அலங்காரங்கள் எல்லாம்.
போனவருஷத்து அலங்காரத்தில் பத்திரமா எடுத்துவச்ச சிலபல பொருட்களைப் பரணில் இருந்து இறக்கிப் பார்த்தேன். எல்லாஞ்சரி. கூடுதலா எதாவது செஞ்சு காட்சிகளைப் புதுப்பிக்கணும். பேக்ட்ராப் தயாராச்சு.
முதல் ஆப்பு களத்துமேட்டுக்கு ! அந்த இடத்தில் ஒரு ஓலைகுடில் கட்டலாம் ! ப்ளான் ரெடியாச்சு. ரெண்டு லிட்டர் தயிர் வரும் கண்டெய்னர். அதுலே ஒரு திறப்பு. வாசல் வேணாமா ? கோலம் ஸ்டிக்கர்கள் வச்சு சுவரை அலங்கரிச்சாச். கூரைக்குப் போன வருஷத்து வைக்கோல் இருக்கு. வச்சுப்பார்த்ததில் நீட்டா இல்லை. குச்சிகுச்சியா இருக்கே.... ஆமாம்.... வைக்கோல் இங்கே ஏது ? ஏதா? அப்பப்போன வருஷத்து வைக்கோல் எங்கிருந்து வந்துச்சாம் ? அதுவா.... சம்பந்தி வீட்டுலே இருந்து மகள் கொண்டு வந்தது. ஸ்ட்ராபெர்ரி செடிகளுக்கு மேலே மூடி வைக்கப் பயன்படுத்தும் ரகம். பழங்களைப் பறவைகள் வந்து கொத்திப்போகாமல் இருக்க இப்படி ஒரு ஐடியா.
க்ராஃப்ட் கடைகளில் ஏதாவது கிடைக்குமான்னு தேடுனதில், பார்ட்டிகளில் ஹவாய்த் தீவு டான்ஸ் ஆடப் போட்டுக்கும் ஒரு பாவாடை ஆப்ட்டது. நார்நாராத் தொங்கும் மரவுரி. அதை வாங்கி, இடுப்புலே வச்சுப் பார்த்தால் என் பாதம் தாண்டி ஒரு பத்திஞ்சு இருக்கு. தாராளம். பாவாடையைப் பாழாக்காமல் கீழ்ப்பக்கம் பத்து இஞ்சு வெட்டிக்கலாம். ஆச்சு. மீதிப்பாவாடை அப்படியே இருக்கு. நம்ம ரஜ்ஜு எதாவது பார்ட்டிக்குப் போனால் கட்டிக்கிட்டுப்போய் ஆடட்டும். யார் வேணாங்கறாங்க :-)
அடுத்து ஒரு கிணறு வெட்டலாமுன்னு தோணுச்சு. கமலைக்கிணறாத்தான் இருக்கட்டுமே ! ஊதுவத்திப் பேக்கில் இருக்கும் அட்டைக்குழாய்தான் உத்திரம். தையலுக்கு வாங்கும் நூல்கண்டின் காலி ரீல் ராட்டினம். கருப்பு அட்டையில் கமலையும் ஆச்சு. கமலை இழுக்க ஜோடி மாடுகள், கமலைக்காரர், எல்லாம் ஜூஜுபி. வீட்டில் இருந்த மாடுகள்தான். நல்லாத்தான் வந்துருக்குன்னு நினைச்சதும் .......
பண்ணைவேலை செய்யும் அம்மா, சட்னு குடங்களைக் கொண்டு வந்து வச்சாங்க. மகளின் சின்னப்புள்ளை காலத்து அடுக்களை செட்டில் இருந்த குடங்கள் வாகாய் அமைஞ்சு போச்சு.
சட்னு மற்றவைகள் எல்லாம் ஏதோ ஏற்கெனவே திட்டம் போட்டாப்லெ அதனதன் இடத்தில் வந்து நின்னாச்சு. அரசமரத்தடி புள்ளையார், களத்துமேட்டு அய்யனார், சேவல், நாய், பூனை எல்லாம் நல்லபடி அமைஞ்சதும், ஒரு திருப்தி. வீட்டைக் கொண்டுவந்து வச்சதும் அமர்க்களம்.
ஆனால் எல்லாம் ஒரே நாளில் செஞ்சுறக்கூடாது. இடத்தைத் தெரிவு செஞ்சதும் ச்சும்மா ஆரம்பிச்சு வச்சுக்கணும். மனசுலே அதுபாட்டுக்கு ஊறிக்கிட்டு இருக்கட்டுமுன்னு விட்டுடணும். பொங்கலுக்கு முதல்நாள் வரை டைம் இருக்கு. போகவர அந்த இடத்தைப் பார்த்தால் எதாவது ஐடியா வரும். அதை அப்படியே கொஞ்சம் கொஞ்சமா அபிவிருத்தி செஞ்சுக்கணும்.
அடுப்பு, பொங்கப்பானை, பால் எல்லாம் போனவருஷத்துச் சமாச்சாரம்தான். கரும்பும் அப்படியே.... வண்ணம் போனதுக்குக் கொஞ்சம் மேக்கப் போட்டேன். போனவருஷத்துக் கரும்புச்சோலைதான் காய்ஞ்சுபோய் இருந்துச்சு. நெச இலைன்னா இப்படித்தான். போனவருஷம் வீட்டுலே மக்காச் சோளம் விளைஞ்சு நிக்கும்போது அதன் இலைகளை எடுத்துக்கிட்டேன். இந்த வருஷம் காலநிலை சரியில்லை. சோளம் விதைச்சு வச்சால் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு ஒரே ஒரு செடி. அதுவும் காலம் போய் அரை அடி உயரம் கூட வளரலை.
க்ரேப் பேப்பர் வாங்கி செஞ்சுக்கலாமுன்னா.... சொன்னால் நம்பமாட்டீங்க..... கடைகளில் பேப்பர் கிடைக்கலை! எல்லாத்துக்கும் சீனனை நம்பி இருக்கோமுல்லெ..... கப்பல் வரலைன்னு கடைகள் எல்லாமே முக்கால்வாசிக் காலியாக் காத்து வாங்குது. வீட்டுலே ஏதாச்சும் கிடைக்குமான்னு தேடப்போய்த்தான் போனபதிவில் பார்த்த பூ ஜடை கிடைச்சது. நல்ல ஃப்ளாக்ஸ் செடிகள் ஊர்மொத்தமும் அங்கங்கே இருந்தாலும், அது அரசாங்க சொத்து. நாம் கை வைக்கக்கூடாதுல்லெ ?
நம்ம வீட்டுத் தோட்டத்தையேச் சுத்திச் சுத்திவந்ததில் சின்னக் கரும்புக்குத் தோகை ஆப்டது. க்ளாடியோலஸ் செடிகள் ! இப்ப பூத்து நிக்குது. ஒரு வாரத்துலே பூக்கள் வாடிக் கொட்டிரும். அதுக்குப்பிறகு நமக்கு எடுத்துக்கலாம். பெரிய கரும்புதான்.......... இப்போ.......... ப்ச்..... எதாவது கிடைக்காமப் போகாது..... இன்னும் நாள் இருக்கு..... பார்க்கலாம்.
யதேச்சையாக் கமலை மாடுகளைக் கவ்னிச்சால், ஜோடியில் ஒன்னு பசு ! அச்சச்சோ... நெசமான ஜோடியால்லெ இருக்கு ! இன்னொரு காளை இருந்தால் கொள்ளாமுன்னு காளை வேட்டைக்குப் போனோம். காளை ஆப்ட்டது. ஆனால் நம்மதைவிடக் கொஞ்சமே கொஞ்சம் சின்ன சைஸு. அதனால் புது ஜோடியே (ஐ மீன் காளை ஜோடி)வாங்கினோம்.
கரும்பு கரும்புன்ற எண்ணமே மனசுலே ஓடிக்கிட்டு இருந்துச்சா.... பேசாம சின்னக்கரும்பு நாமே செய்யலாமே... எடு அந்த பேப்பரை..... பேங்க் ஸ்டேட்மென்ட் வர்ற பேப்பர், நல்லா திக்காவே இருக்கு! சுருட்டி ஒட்டி, நம்ம கைவேலையைக் காட்டி வண்ணம் தீட்டியாச். ஒரு கட்டுக் கரும்பை சந்தைக்குப்போய் வித்துட்டுவாடான்னா.... எப்படித் தூக்கிப்போக ? வண்டி இல்லை என்றான் ரஜ்ஜு.
ஐஸ் ப்ளாக் குச்சிகளை வச்சு வண்டி நிர்மாணம். மாடுகள்? புதுக்காளை ஜோடிதான். சாலையில் போகும்போது எதிரில் வரும் வண்டிக்கு எச்சரிக்கை கொடுக்க, மாடுகளின் நெற்றியில் ரிஃப்லெக்டர் பதிச்சேன். நல்லா ஹெட்லைட்டாட்டம் பளபளக்குது. இந்த மூவுலகிலும் ஹெட்லைட் வச்ச மாடுகள் நம்மதுதான் ! அப்பப்ப நம்ம ரஜ்ஜு வந்து பார்த்து, டிஸைனை அப்ரூவ் செஞ்சான்.
சந்தையில் இருந்து ராத்ரி திரும்பிவரும்போது ஏத்திவைக்க ஒரு லாந்தர் இருந்தாக் கொள்ளாம். ஐடியா வந்ததும், கருப்புக் காகிதம், பெரிய பட்டன்ஸ், ஒரு கண்ணாடி கோலிகுண்டு சேகரிச்சேன். உண்மையைச் சொன்னால் நம்ம டிஸ்ப்ளேயில் மனநிறைவா அமைஞ்சது, வண்டியும், கரும்பும், லாந்தரும்தான்!
வண்டி ரெடியானதும் பூனையார் வண்டிக்காரரா வந்தாரா.... பின்னாலேயே புள்ளையை தூக்கிக்கிட்டு, அவர் சம்சாரம் ஓடிவந்து வண்டியில் ஏறி உக்கார்ந்தாங்க. பசங்களா போய் சரக்கை வித்துட்டு வாங்க :-)
க்ரேப் பேப்பர் வேட்டைக்குப் போனப்பெல்லாம் பசுக்களும் காளைகளுமாவே கண்ணில் ஆப்ட்டா நான் என்ன செய்ய ? சின்ன வயசில் ஒரு நண்பரின் நண்பரை (கைரேகை பார்த்துப் பலன் சொல்லுவார் ) போய் பார்த்துக் கை காமிச்சதில் 'பால் பாக்கியம்' இருக்குன்னு சொல்லி இருந்தார். படிச்சுக்கிட்டு இருந்த காலத்தில் பாலாவது பாக்கியமாவது..... ஹாஸ்டலில் காஃபி ஒழுங்காக் கிடைச்சால் போதாதா?
வெளிநாடு வந்தபின் பார்த்தால் ஃப்ரிட்ஜில் எப்பவும் ரெண்டு லிட்டர் பாலாவது இருந்துக்கிட்டெ இருப்பதால் அதுதான் ஜோஸியர் மணி சொன்ன பால்பாக்கியம்னு இருந்தேன். ஆனால் இவ்ளோ லேட்டாப் பால் பாக்கியம் கைகூடுமுன்னு நினைக்கவே இல்லை. ஆமாம்... பால்பாக்யமுன்னா மாடுதானே ? விடப்டாதுன்னு அங்கங்கே மாடுகளை வாங்கினதில் மொத்தம் பத்தாகிப் போச்சு ! அதுலே அஞ்சு பசுக்கள் ! அலங்காரம் எல்லாம் நம்ம ரஜ்ஜுவின் பெயரில் என்பதால் பத்துமாடு வச்சுருக்கும் பணக்காரன் ஆகிட்டான் ரஜ்ஜு :-)
கடைசியில் ஒரு கொரியன் கடையில் க்ரேப் பேப்பர் கிடைச்சது. நமக்கு வேண்டிய அழுத்தமான பச்சை இல்லை. ஆனாலும் ஒன்னுமில்லாததுக்கு இதுவாவது கிடைச்சதேன்னு...... இனி வேட்டைக்குப் போக மாட்டேன்.
ஏறக்கொறைய எல்லாம் சரியாச்சு. ஆனாலும் என்னவோ குறையுதேன்னு.....
கோவிலுக்கு மணி கட்டிவிடலாமா ? க்றிஸ்மஸ் மரத்தில் தொங்கவிடும் குட்டி மணிகள், வேறொரு அலங்காரத்துக்கு வாங்கியது இப்ப வகையாக் கைவசம் இருக்கு. நுழைவாசலில் மணிகள் தொங்கவிடலாம். நம்ம நேபாள் பயணத்தில் இப்படி எல்லாக் கோவில்களிலும் சின்னப்பசங்க கைக்கெட்டும் உயரத்தில் தொங்க விட்டுருப்பதைப் பார்த்தோமே! இங்கே கொஞ்சம் உயரத்தில் தொங்கவிடணும். பழைய போட்டோ ஃப்ரேம், மருந்து மாத்திரைவரும் குட்டி டப்பாவில் நிக்கவச்சேன். ஆஹா... பக்காவா உள்ளூர் ரக்பி விளையாட்டுக்கான கோல்போஸ்ட் ! சின்னக்கம்பிகளில் வளையம் செய்து மாட்டிவிட்டாச் !
எல்லாம் ஆனதும் பண்ணையாரும் மனைவியும் ரெட்டை மாட்டுக் கூண்டு வண்டியில் வந்திறங்கினாங்க.
அடுப்புப் பத்தவச்சுப் பொங்கல் பானையை ஏத்திப் பாலும் ஊத்துன கையோடு பொங்கல் விழா இனிமையா ஆரம்பிச்சது :-)
தை மாசம் முதல் தேதியில் வரும் இந்தப் பொங்கல் பண்டிகையை இந்தியாவின் பல மாநிலங்களில் வெவ்வேறு பெயரில் கொண்டாடுறாங்க. முந்தாநாள் எங்கூர் HSS நடத்தும் சங்கராந்தி விசேஷ நிகழ்ச்சிக்குப் போய் வந்தோம். வெவ்வேற மாநிலங்கள் ஸ்லைடு போட்டுக்காமிச்சாங்க. தமிழ்நாடு காமிச்சப்ப, அடுத்திருந்த தோழி , விவரம் சரியான்னு கேட்டாங்க. ஆமாம்னு சொன்னேன்.
கூடி இருக்கும் மக்களிடம், அவுங்க மாநிலத்தில் கொண்டாடும் விதத்தைப் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கணும். நம்ம பண்பாட்டை விட்டுறக் கூடாதுன்னு சொன்னது ரொம்பப் பிடிச்சிருந்தது.
நம்ம வீட்டில் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்துட்டமில்லெ :-)
12 comments:
மிக அருமை, நன்றி
ரஜ்ஜுவின் மேற்பார்வை சுவாரஸ்யம்! என்ன நினைத்திருக்குமோ....
கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் பலே. ரசித்து ரசித்து செய்வதினால் எல்லாமே சிறப்பாக அமைந்துவிட்டது. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
வித்தியாசமான நவராத்திரியைப் பார்த்ததுபோலு இருந்தது.
துளசிக்கா அட்டகாசம் போங்க டிஸ்ப்ளே!!! நீங்க இப்பவும் இப்படி உங்கள் க்ரியேட்டிவிட்டியை அதுவும் அசாத்தியமான கிரியேட்டிவிட்டி!! அழகா யூஸ் செய்யறீங்க. கற்பனை அபாரம். எலலமே நீங்க ரசித்து ரசித்து செய்வதினால் படு அட்டகாசமா ஆயிடுச்சு டிஸ்ப்ளே!!! ஹையோ ரசித்து முடியலைக்கா. ஒவ்வொண்ணும் எப்படி செஞ்சுருக்கீங்கன்னு வாசித்தேன்...(என் இள வயதை நினைவுபடுத்திடுச்சு!! நானும் இப்படித்தான் கைல கிடைப்பதை எல்லாம் மாத்துவேன். அதுக்கு அப்புறம் வூடு வூடா மாத்தினதுல எல்லாம் சுமக்க முடியாம ...என்ன சொல்ல!! போச்!!!)
ரஜ்ஜு வை ரொம்ப ரொம்ப ரசித்தேன் என்ன அழகா உக்காந்து வாச் பண்ணுது பாருங்க இந்த அம்மா நம்ம பெயர்ல எல்லாம் தொடங்கிட்டு நம்ம பெயரை காப்பாத்தணுமேன்னுட்டு!! ஹாஹாஹா...சமத்து ரஜ்ஜு
உங்கள் கற்பனைத் திறனை பாராட்ட வார்த்தைகளே இல்லை.
கீதா
பொங்கல் அலங்காரங்கள் கவர்கின்றன.
வாங்க விஸ்வநாத்,
நன்றி !
வாங்க ஸ்ரீராம்.
ரஜ்ஜு எல்லா வேலைகளையும் கண்காணிப்பான். அவனுக்குத் தெரியாமல் வீட்டில் எதுவும் நடக்கக்கூடாது.... நடக்காது !
வாங்க வெங்கட் நாகராஜ்,
எதைச் செய்தாலும் மனப்பூர்வமா ரசிச்சுச் செய்யறது, மனக்கவலையை மறக்க ஒரு வழி, இல்லே? அதான்... :-) அதிலும் சிறப்பா அமைஞ்சு போச்சுன்னா.... திருப்திதான் !
வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
மன தெலுகு தேசம்லோ.... சங்கராந்திக்கு பொம்மலு கொலுவு வைக்கறது வழக்கம். கூடவே பட்டம் விடுவதும் உண்டு.
வாங்க கீதா....
ஹைய்யோ.... பாராட்டு மழையில் நனைக்கிறீங்க.... இப்ப ரொம்பவே குளிருது !
ரஜ்ஜுதான் இப்ப நம்ம உலகம். அவனும் பெருந்தன்மையா நம்மை ஏத்துக்கிட்டான் :-)
வாங்க மாதேவி.
டிஸ்ப்ளே அருமையா அமைஞ்சது. நண்பர்கள் வந்து நேரில் பார்த்துப் பாராட்டினாங்க.
Post a Comment