Monday, June 01, 2020

எண்பது மொழியும் எண்பது லக்ஷமும்.......... (பயணத்தொடர் 2020 பகுதி 59 )

உலகத்தின் தலைசிறந்த நூலகத்தில் ஒன்று என்பதுடன்......   இது ஒரு சரித்திர நிகழ்வையும் நினைவு 'படுத்துது'  என்றும் சொன்னாங்க.  ஜூலியஸ் சீஸர், தீவச்சுக் கொளுத்திப்பிட்டாராம் !  ஐயோ.....  ஏன்? எப்படி ?
கொளுத்திப்பிட்டாருன்னா தானே தீப்பந்தம் பிடிச்சுத் தீ வச்சாரா?  ஒரு ராஜா இப்படிச் செய்வானோ?  இங்கே படையெடுத்து வந்தப்ப, ஈஜிப்ட் நாட்டின் கப்பல்படை, குறுக்கே வந்து நின்னுச்சாம். கோபம் தாங்கலை.  'டேய்.....  கொளுத்துங்கடா' னு சொன்னதும்  நரப்படைகள், எதிரிக் கப்பல்கள்,   துறைமுகம், ஊர், இன்னபிற இடங்களைக் கொளுத்திவிட்டுருக்குதுகள்..... அப்படியே நூலகத்துக்கும்...... கட்டடமா இருக்கும் அதுக்குள்ளே என்ன இருக்குன்னு எட்டிப் பார்த்துருக்குமா என்ன ?

நல்லவேளை முழுசாப் பத்தியெரியும் முன்பு தீயை அணைச்சுட்டதால்..... போனது போக பாக்கியைக் காப்பாத்த முடிஞ்சுருக்கு !

பழசு கட்டுனது  ரெண்டாயிரத்து முன்னூத்தியெட்டு  வருசத்துக்கு முந்தி.....   குகைக்குள்ளே ரிஷபம் பார்த்துட்டு வந்தோமே,  அதைக் கட்டின காலகட்டத்தில்தான் இதுவும். அதே மன்னர்தான் Ptolemy I, புதுச்சாமி ஆரம்பிச்ச கையோடு, படிக்கவும் அறிவை வளர்த்துக்கவுமான இடமும்  இருக்கட்டுமுன்னு   நூலகத்தைக் கட்டிவுட்டுருக்கார்.
அநேகமா எல்லாமே கையெழுத்துப் பிரதிகள்தான்.  உக்கார்ந்து எழுதித் தள்ளி இருப்பாங்க, இல்லே ?
இப்போ நாம் பார்க்கும் இந்தக் கட்டடம், சமீபத்துலே ஒரு பதினெட்டு வருஷத்துக்கு முன்னாலே கட்டுனது.  இதுக்கே 1974 இல் திட்டம் போட்டு, 1995 இல் கட்ட ஆரம்பிச்சு, 2002 லே முடிச்சுருக்காங்க.

வளாகத்துலேயே நல்ல கூட்டம்..... வருஷத்துக்கு பதிமூணு லக்ஷம்பேர் வந்து போறாங்களாம் !  உள்ளூர் மக்களைத் தவிர்த்துன்னு இருக்கலாம்.....
உள்ளே போக ஆளுக்கு எழுபது பவுண்ட். உள்ளுர் மக்களுக்கு இலவசமுன்னு நினைக்கிறேன்.

இங்கெ நியூஸியில் லைப்ரரி, ம்யூஸியம், ஆர்ட் சென்ட்டர் இதெல்லாம் இலவசமே.....  பயணிகளும் பைசா செலவில்லாமப் பார்க்கலாம்.

உள்ளே நுழைஞ்சு போனால், அசப்பில் எங்க ஊர் (கிறைஸ்ட்சர்ச்)  சென்ட்ரல் லைப்ரரி மாதிரியே இருக்கு.  எங்கூரில் பழைய கட்டடம்  2011 இல் நிலநடுக்கத்தில்  அழிஞ்சு போச்சு...  புதுசா இதைக் கட்டி ஒன்னரை வருஷம்தான் ஆச்சு. என்ன ஒன்னு.... எங்கூரில் அளவில்  சின்னது.  இங்கே அலெக்ஸான்ட்ரியாவில் அளவில் பெரூசு !

எண்பது மொழிகளில் எண்பது லக்ஷம் புத்தகங்கள் இருக்காம்.  இதுலே  அன்பளிப்பா ஒரு அஞ்சு லக்ஷம் புத்தகங்களை ஃப்ரான்ஸ் நாடு கொடுத்துருக்கு !

சனம் உக்கார்ந்து படிக்க ஒரு இருபதாயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் இடம்... பெத்தாம்பெரூசா ஹால்......  பதினொரு அடுக்குகள்......
இதுலே பாருங்க .... ஒரு முப்பத்தியிரண்டு மீட்டர் உசரத்துலே மேற்கூரை. நடுவிலே எந்தத் தடங்கலும் இல்லாம (தூண்களைத்தவிர )  இயற்கையான வெளிச்சம் கூரைக்குப் போட்டுருக்கும் கண்ணாடி மூலமே வருது!  எல்லாமே பளிச்!
குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள், பார்வைக்குறைபாடுள்ளோர் இப்படி அனைவருக்குமான  வசதிகள்....... இதைத்தவிர நாலு ம்யூஸியம்கள், ஆர்ட் சென்டர், தாற்காலிக கண்காட்சிகள் நடத்திக்கும்  கூடங்கள், ஒரு Planetarium  இப்படி.....வாவ் !

காலத்துக்கேத்தபடி....  கம்ப்யூட்டர்கள்....   100 TB Data !
அதைத்தவிர.....  சுவாரஸியமான சிலபகுதிகள் சிலவும் உண்டு. மல்ட்டிமீடியா......

மம்மிக்குள்ளே என்னன்னு பார்க்கலாம். அதைவிட  கார்விபத்துலே 'போன' ஒருத்தரின் எலும்பு முறிவுகளை என்னென்னன்னு பார்க்கும்விதம் ....



பழைய காலத்து அச்சு யந்திரங்கள்   ஒரு இடத்தில் நம்ம பார்வைக்கு!


இஸ்லாமியர்களின் புனித  காபா(Kiswah Kaaba ) கட்டடத்துக்குமேல்  போர்த்திருந்த  போர்வை (!) ஒன்னு கண்ணாடி ப்ரேம் போட்டுக் காட்சிக்கு வச்சுருக்காங்க.   சுமார் ரெண்டு  நூற்றாண்டுக்கு முந்திய சமாச்சாரம்.  பட்டும் சரிகையுமான  வேலைப்பாட்டில்  அவுங்க மொழியில் இறைவனின் புகழ்பாடும் வசனங்கள் எம்ப்ராய்டரி செஞ்சுருக்காங்க.  வெறுமனே படம் எடுத்தது போதாதுன்னு மரியாதை நிமித்தம் என் தலைமூடி இன்னொரு படமும் எடுத்துக்கிட்டேன்.  (அதான் வாகா துப்பட்டா இருக்கே!)
அடுத்தபகுதிக்குப் போகலாமுன்னு கீழ்தளத்துக்குப் போனால்.... நம்ம அய்யனார் குதிரை !
பரந்து நீண்டு போகும் ஹாலில்  அங்கங்கே  மாடர்ன் சிற்பங்களும், மண்பாண்டப் பொருட்களுமா.....இங்கே இருக்கும் ம்யூஸியங்களில் ஒன்னு இது !




நைல்நதி பள்ளத்தாக்குலே கிடைச்ச நகைநட்டுக்கள்......  புல்லாங்குழல்கள் கூட.....  !!!
அப்புறம் பழங்கால ஆடைஅலங்காரம்,

 'தேவனே என்னைப் பாருங்கள்'னு ஒரு மண்டூகம் !
ரிஷபச்சாமி...... ! ஸிம்பிளா , சூப்பரா இருக்கு !
முடிஞ்சவரை நின்னு பார்த்து, ரசிச்சு, க்ளிக்கின்னு ஆனதும்   மேல்தளத்துக்கு வந்தோம். வாசல் முகப்பிலேயே  ரெண்டாயிரத்து முன்னுத்தியம்பது வருஷங்களுக்கு முன்னால் ரிஷபக்கோவில் கட்டுன அரசருக்கு,  இங்கே லைப்ரரி ஒன்னு  வைக்கலாமுன்னு ஆலோசனை சொன்னவர் சிலை !  Demetrius Phalereus

இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கு !  சொன்னால் நம்புறது கஷ்டம் :-)

நூலகத்தின் முகப்புக் கட்டடம் டிஸைன் பார்த்தீங்கதானே ?  என்னமோ  க்ரே கலர்லே  வட்டமா இருக்கும் சுவராட்டம் இருக்குல்லே ?  இது முழுக்க முழுக்க  அஸ்வான் பகுதியில் இருக்கும் க்ரானைட் கல். இதுலே  உலகின் பழமையான மொழிகளில் இருந்து சில எழுத்துகளை அங்கங்கே செதுக்கி இருக்காங்க. நாலாயிரத்து இருநூறு எழுத்துகள்னு கணக்கு சொல்றாங்கப்பா !
பழமையான மொழின்னதும் நம்ம தமிழும்தானேன்னு தேடத்தானே தோணும்.....  இல்லையோ....  ரொம்ப உயரத்தில் இருக்கேன்னா.... இந்த சுவர்  வளைவாத்திரும்பி அடுத்தபக்கம்  கடலை நோக்கி நிக்குது.  என்ன எழுத்து இருக்குமோன்ற  அங்கலாய்ப்பில் வலை வீசியதில் கிடைச்சுருச்சு !   ஈ, உ, ணி......

மூணே எழுத்து வேணுமுன்னு  என்னாண்டை கேட்ருந்தால்.... த   மி    ழ் னு சொல்லி இருப்பேன்.

ஈ யாவது பறந்து வந்துருக்குமுன்னு நினைக்கலாம்..... இந்த உ, ணி எப்படி இடம் பிடிச்சதுன்னு தெரியலையே.............
இருக்குன்னு சந்தோஷப்படறதா?  இதுவா இருக்குன்னு  நினைச்சு சந்தோஷப் படாமல் இருப்பதா ? ஒன்னும் புரியலை போங்க.......

வலையில் ஆப்ட படங்களைப் போட்டுருக்கேன்.  கூகுளாருக்கு நன்றி !
வளாகம் ரொம்பவே பெரூசு என்பதால்  முழுசுமாச் சுத்திப் பார்க்க நேரம் எடுக்கும்.....  நமக்குத்தான் ....  இன்னொரு மூணு மணி நேரப் பயணம் இருக்கே.....

நம்ம கிளி இந்த ஊர்க்காரிதான்.... இங்கே தான் அக்கம்பக்கத்துலே எங்கியோ   சமாதி இருக்கணுமுன்னு  சொல்றாங்க. ஆன்ட்டனியையும், க்ளியோவையும் ஒன்னாத்தான் சமாதியில் வச்சாங்களாம். இதுவரை அது எங்கே இருக்குன்னு கண்டே பிடிக்கமுடியலையாம்..... தேடிக்கிட்டே இருக்காங்க......  கண்டு பிடிச்சப்பிறகு, நாம் ஒருக்காப் போய்ப் பார்த்துட்டு 'என்னமாத்தேன் இருக்கா ? எவ்ளோ அழகு'ன்னு பார்க்கணும். அதுக்காக இன்னும் ஒரு அலெக்ஸாண்ட்ரியா பயணம் இருக்கு, நமக்கு !


திரும்பி கய்ரோவுக்கு வரும்போதும் கண்ணை இழுத்துருச்சுத் தூக்கம்.  இஸ்லாமோ நூத்திநாப்பது, நூத்தியம்பது கிமீ வேகத்துலே பறக்கிறார். (இங்கே நியூஸியில்  அதிகப்பட்சமா நூறுதான் போகமுடியும் ! ) எங்கேயும் நிறுத்தவேண்டிய தேவை இல்லாததால்.... ஆறுபத்துக்கெல்லாம் ஹொட்டேலுக்கு வந்துட்டோம்.
நம்ம கைடட் டூர்  இந்த நிமிட்டோடு முடிஞ்சது. நம்ம  ரெய்னாவுக்கும், இஸ்லாமுக்கும் அன்பளிப்புகளுடன் நன்றி சொல்லி க்ளிக்கும் ஆச்சு.  இப்ப ரெய்னா நம்ம பேஸ்புக் ஃப்ரெண்ட்தான்.  ரெய்னாவும், இஸ்லாமும் நம்மை நல்லபடியாப் பார்த்துக்கிட்டாங்க.  பத்திரமாக்கூட்டிப்போய், பத்திரமாக் கொண்டு வந்து சேர்த்தாங்க.  கொஞ்சம் வயசான பயணிகளுக்கு அனுசரணையா இருந்தாங்கன்றதும் முக்கியம் இல்லையோ !   நல்லா இருக்கட்டும் !


நம்ம ரெய்னாவுக்கு இந்தப் பயணம் பற்றி எழுதறதை வாசிக்க ஆசையாம்.  அதான் கூகுள் ட்ரான்ஸ்லேஷன் இருக்கேன்னாங்க. முழுசும் வாசிக்க முடியலைன்னாலும்  படங்கள் பார்த்துக்குவாங்கதானே ? :-)

மனநிறைவுடன் அறைக்குப் போனோம்.  நமக்கு  இங்கே இன்னும் ரெண்டு ராத்ரிகளும் ஒரு பகலும் இருக்கு !

தொடரும்....... :-)


7 comments:

said...

ஈ, உ,ணி - தமிழ் நு எழுதி இருந்தா நல்லாதான் இருக்கும்! :)

தகவல்கள், அருங்காட்சியகப் பொருட்கள் என அனைத்தும் சிறப்பு.

தொடர்கிறேன்.

said...

தமிழ் எழுத்துக்கள் எகிப்து கட்டிட முகப்பிலா... அருமை.

said...

அருமை, வெகு சிறப்பு, நன்றி.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

ஏதோ ஒரு மூணுன்னு இருந்துருக்காங்க... ப்ச்....

தொடர்வருகைக்கு நன்றி !

said...

வாங்க நெல்லைத்தமிழன்,


எனக்கும் சர்ப்ப்ரைஸ்!!!

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

'நாலாயிரத்து இருநூறு எழுத்துகள் ' கேட்கவே திகைப்பாக இருந்தது.

கிளியை பார்க்க இன்னொரு பயணம் போகலாம் நாமும் கண்டு களித்திடுவோம்.