Friday, June 19, 2020

அஞ்சு மீட்டர் மல்லிச்சரம்....... ஆனால்... பூத்துருச்சு.... (பயணத்தொடர் 2020 பகுதி 66)

சட்னு தூக்கம் கலைஞ்சப்ப  மணி ரெண்டு !  இந்தப் பயணம் முழுசுமே கண்ட நேரத்தில் விழிப்பு வந்துக்கிட்டே இருக்கு.  பாடி க்ளாக் செட்டே ஆகலை.... விட்டால்தானே ?
திரும்ப விழிப்பு வந்தப்ப, பெருமாள் எழுந்தே எவ்வளவோ நேரமாகி இருக்கும். இனி அரக்கப்பரக்க ஓடி ஒரு பிரயோஜனமும் இல்லை. நிதானமே ப்ரதானம் !
நம்ம சிங்கைச் சீனுவுக்கு  மட்டும் எப்பவும் நான் ஒரு ஸ்பெஷல் உபசாரம்  செய்யறது வழக்கம். அதைச் செய்யலாமுன்னு கிளம்பினோம்.

இங்கேயும் ஹொட்டேல்களில் அறை வாடகையில் ப்ரேக்ஃபாஸ்ட்  சேர்த்ததும்  உண்டு. ஆப்ஷனல்தான்.  நாலெட்டு வச்சால் நம்ம  கோமளவிலாஸ்  இருக்கும்போது இங்கத்து ப்ரேக்ஃபாஸ்ட் யாருக்கு வேணுமாம் ?

நாலெட்டில்  கோமளவிலாஸ் போய்  ரெண்டு இட்லிகளும் அரைக் காஃபியும் ஆச்சு. கண்ணாடிப்பொட்டிகளில் ஜொலிக்கும் வடைகளைப் பார்த்தும் கூட, மனசைக் கல்லாக்கிக்கிட்டேன்.  இங்கே எல்லாமே பெரிய சைஸ் வடை, காஃபி இட்லி உட்பட.....  ஒரு மசால் வடையை முழுசும் தின்னு முடிக்க நேரமும் இல்லை..... வயித்தில் இடமும் இல்லை.....

முதலில் ஸ்ரீ வீரமாகாளியம்மன் வாசலுக்குள் நுழைஞ்சு, விஸ்ராந்தியா இருக்கும்  மூலவரின் தரிசனம் முடிச்சுக்கிட்டு, 'உங்க அண்ணன் வீட்டுக்கு போறோம்'னு  சொல்லிட்டுப் பொடிநடையில் பெருமாளை நோக்கிப் போறோம்.


காலை பத்து மணிக்கு முன்னால்  (சரியாச் சொன்னால், ஒன்பதரை வரை ) செராங்கூன் சாலையில் நடப்பது ஒரு சுகம்.  பூக்கடைகள் தவிர வேற கடைகள் ஒன்னும் திறந்துருக்காது.... நிம்மதியாக் காலை வீசிப்போட்டு நடக்கலாம். காமணியில் கோவில் வாசல்.


பெருமாளும் விஸ்ராந்தியாத்தான் இருக்கார். தன்வந்த்ரி மஹாயாகம் மட்டும் நடந்துக்கிட்டு இருக்கு!

ரெண்டு அர்ச்சனை டிக்கெட்டுகள் மட்டும் மகள், மருமகன் பெயரில் வாங்கி மூலவருக்கும் உற்சவருக்கும்  அர்ச்சனை செஞ்சாச்சு.



கோவிலை வலம் வந்தோம்.  தாயார் அழகு !  நம்ம  ஆண்டாளம்மா....  கொள்ளை அழகு.  கள்ளக்குரலில் 'தூமணி மாடத்து'ம் ஆச்சு!


ப்ரகாரம்சுற்றி வர மரத்தேரும் , பல்லக்குமா அழகோ அழகு.  தேர் புதுசு போல !  இங்கேயும் ஒவ்வொரு முறை நாம் வரும்போதெல்லாம்  புதுசுபுதுசா எதாவது  கண்ணில் படாமல் இருக்காது.  சாமிக் காசை, சாமிக்கே செலவு செய்யறாங்க,  நம்ம அடையார் அநந்தபதுமன் கோவிலைப்போலவே !  கோவில் முழுசும் அப்பழுக்கு சொல்லமுடியாத சுத்தம் ! ஆனால்....  ஆண்டாள் மேடைக்குக் கீழும், படிகளிலும் எண்ணெய்க் கறை.  மார்கழி வரணுமோ ?


ஆஞ்சியைக் கும்பிட்டதும், மண்டபம் ஓரமா உக்கார்ந்து நம்ம ஸ்பெஷலைச் சொல்ல ஆரம்பிச்சோம். பயணங்களில் எப்போதும் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் (பெரிய எழுத்து ) கையோடு கொண்டு போவேன்.  நிதானமா வாசிச்சு முடிக்க அரைமணிக்கூறு ஆகும். ஆச்சு !



பக்தர்கள்  அப்பப்ப வந்து போறாங்க.

ஒரு நாலைஞ்சு பேர் வந்து கோவில் உண்டியலைத் திறந்து வசூல்களை வாரிப் பைகளில் போட்டுக்கிட்டு இருக்காங்க. இங்கே முதல்முறையா இதைப் பார்க்கிறேன். அறநிலையத்துறையினர்தான்.  நண்பர் இந்தத் துறையில்தான் சீனியர் ஆடிட்டர்!  அவரைப் போய்ப் பார்க்க நேரம் இல்லை இந்தப் பயணத்தில்.  முந்தி, கோவிலுக்குப் பின்னால்தான் அலுவலகம் இருந்தது. வலம் வரும்போதே எட்டிப் பார்த்துடலாம். இப்போ அந்த இடம்தான் புதிய டைனிங் ஹால். ஆஃபீஸை  வேற இடத்துக்கு மாத்தி இருக்காங்க போல !
ஒரு பத்து நிமிட் போல  ஸ்ரீதன்வந்த்ரி மஹாயாகம் நடக்குமிடத்தில் உக்கார்ந்துட்டுப் பெருமாளிடம் போய். 'சீனு, போயிட்டு வாரேன்'ன்னு சொல்லி விடை வாங்கிக்கிட்டுக் கிளம்பினோம். பெரிய திருவடியிடமும் சொல்லிக் கொண்டோம்.
அடுத்த ஸ்டாப்,  முஸ்தாஃபாதான். எதிரில் இருக்கும் மசூதியை  ரெண்டு வருஷமாப் புதுப்பிச்சுக் கட்டிக்கிட்டு இருக்காங்க. அநேகமா வேலை முடிஞ்சமாதிரிதான்.  மசூதிக்கு வயசு 130 !
முஸ்தாஃபாவில்  இவருக்கு மூணு ஷர்ட்ஸ் (அதே நீலக்கட்டம்தான்..... ப்ச்....) இங்கே நியூஸியில் நம்ம 'உறவினர்' குழந்தைக்கு ஒரு டி ஷர்ட்,  நம்ம ஜன்னு அண்ட் கிருஷ்ணாவுக்குச் சில அலங்காரச்சாமான்கள் ஷாப்பிங் ஆச்சு.  ஜோதி புஷ்பக்கடையில் அஞ்சு மீட்டர் அன்றலர்ந்த மல்லியும் ரெண்டு மீட்டர் தில்லிக் கனகாம்பரமும்!
அறைக்குத் திரும்பி,  வாங்கியவைகளையெல்லாம்  நம்ம கேபின் பேகில் ஒரு மாதிரி அடைச்சாச்.  இங்கே செக்கவுட் டைம்  பகல் பனிரெண்டு. நமக்கு லேட் செக்கவுட் கிடைச்சது, ரெண்டு மணி வரை.

பனிரெண்டே முக்காலுக்குப் பதிவர் சந்திப்பு இருக்கு :-) நம்ம  மரத்தடி காலத்துப் பதிவர் தம்பதிகள்தான் !  நமக்கு நெருங்கிய நண்பர்களும் கூட !
சிங்கை எழுத்தாளர் சித்ரா ரமேஷும், அவுங்க ரங்க்ஸ்  ரமேஷூம் நம்ம குடும்பநண்பர்கள்தான். லஞ்சுக்குக் கூட்டிப்போக வந்தாங்க. புதுசா ஒரு  ஆர்யபவன் வந்துருக்கு. அதுவும் நாகர்கோவில் ஆர்யபவன் !  அவுங்க மூவருக்கும் தாலி. எனக்குத் தோசை !  பேச்சும் சிரிப்புமா வழக்கம்போல்..... கூடவே  வயிறும் நிறைஞ்சது.


மணி ஒன்னரை ஆகி இருக்கு. திரும்பி ஹொட்டேலுக்கு  நம்மைக் கொண்டு வந்து விடணுமுன்னா....  ஒன்வே காரணம் சுத்திச் சுத்தி வரணும் என்பதால்  நடந்துபோனால் காமணி கூட ஆகாதுன்னு சித்ரா & ரமேஷ்  தம்பதிகளிடம் அங்கேயே விடை வாங்கிக்கிட்டு கிளம்பிட்டோம். முஸ்தாஃபா சென்டருக்குப் பின்னால் தான் இருக்கு இந்த ஆர்யபவன்.
வர்ற வழியில் அடையார் ஆனந்தபவனில் கொஞ்சம் இனிப்பும், ஒரு ராஜபாளையம் தட்டையும் வாங்கியாச்சு.  ராஜபாளையத்துலே தட்டை விசேஷமா என்ன ?  ராஜபாளையம் என்றதும் நெருங்கிய தோழி (நம்ம கவிதாயினி!)நினைவு வந்ததால் உடனே வாங்கிட்டேன்:-)
அறைக்குப்போய் உடை மாற்றியதும் பொட்டிகளை
எடுத்துக்கிட்டு வந்து  செக்கவுட் செஞ்சதும்,  ஹொட்டேல் வாசலிலேயே டாக்ஸி கிடைச்சுருச்சு.

நகை பார்க்கப் போறோம்.  அப்படியே  ஏர்ப்போர்ட் போகணும்.....

ஆமாம்......   எத்தனை பவுன்லே வாங்கப்போறோம் ?

தொடரும்........ :-)


8 comments:

said...

அருமை.

//அதே நீலக்கட்டம்தான்//
அது வானின் நீல வண்ணம்.
இது கடல் நீல வண்ணம்.

அது பெரிய 3x3 கட்டம்
இது சிறிய 2x2 கட்டம்

//எத்தனை பவுன்லே வாங்கப்போறோம் ?//
வெயிட் ஏறிடும் ன்னு கோபால் சார் சொல்லிருப்பாரே;

said...

சிங்கையில் ஒரு நாள்.... இனிமையான நிகழ்வுகள்.

ராஜபாளையம் தட்டை - பார்க்க நல்லா இருக்கு.

சந்திப்புகள் தொடரட்டும்.

said...

சிங்கப்பூர் பயணவிவரம் பதிவர் சந்திப்பு அருமை

ராஜபாளையம் தட்டை - ரொம்ப காரம். எனக்குப் பிடிக்கலை

said...

சீனுவும் செராங்கூன் வீதிகளும் கடைகளும் முஸ்தபாவும் மீண்டும் சிங்கிக்கு வா என அழைக்கிறது .

said...

வாங்க விஸ்வநாத்,

ஹாஹா.... இனி நீலக்கட்டம் டிஸைன் புதுசாக் கண்டுபிடிச்சால்தான்......

பவுனை விடப் போலிகள் இன்னும் அழகழகாய் வந்துருச்சே ! இனி எல்லாம் இதுவே போதும்னு இருக்கப்போறேன்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,


சந்திப்புகள் எப்போதும் இனிமையேதான் ! அதுவும் பதிவர் சந்திப்புன்னா கேட்கணுமா ?

நம்ம நொறுக்குத்தீனிகள்தான் நியூஸியில் கிடைக்கறதில்லை. நார்த் இண்டியன் வகைகள் ஹல்திராம், பிக்கானிர்வாலா, இன்னும் ஏகப்பட்டவை உண்டு. எல்லாத்திலும் ஆம்ச்சூரோ என்னவோ போட்டு வச்சுப் புளிப்புதான்...

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

இங்கே கோபாலும் மகளும் காரம் விரும்பிகளே !

said...

வாங்க மாதேவி,

இந்தக் கரோனா ஒழியட்டும். மீண்டும் ஒரு சிங்கைப் பயணம் போகலாம். அங்கேயே நம்ம சந்திப்பு கிடைச்சால் நல்லது !