Wednesday, May 20, 2020

கிளியூர்ப் பயணம்...... (பயணத்தொடர் 2020 பகுதி 54 )

அந்தக் க்ளியோபாட்ரா என்னமாத்தான் இருக்காள்னு பார்க்க.... இதோன்னு கிளம்பியாச்சு. மூணு மணி நேரப்பயணமாம்......

இன்றைக்குக் காலையில் சீக்கிரமா எழுந்து, கடமைகளை முடிச்சுட்டு ஆறரைக்கே ப்ரேக்ஃபாஸ்ட்டுக்குப் போனோம். நேத்து முதல் சரியாச் சாப்பிடலை. ராத்ரி டின்னரும்..... சரி இல்லை.   கொஞ்சம் நல்லாவே சாப்பிட்டேன். ப்ரெட் டோஸ்ட்,  கொஞ்சம்  வெள்ளரிக்காய், தயிர், கூடவே ஒரு பேஸ்ட்ரின்னு......   வயிறு இப்பதான் சமாதானமாச்சு.
ஏழரைக்கு நம்ம  ரெய்னா வந்துட்டாங்க. ரூட் 75 ன்னு இருக்கும் பாலைவனச் சாலையில் போறோம். இந்த சாலைக்கே ஒரு சரித்திரம் இருக்கு :-)
பெரிய பிரமிடு இருக்கும் ஊரான Giza வில் இருந்து ஆரம்பிக்கும் சாலை. டோல் ரோடுதான் !
ஒன்னுமே இல்லாமல் இருக்கும் அத்வானத்தில் ஒரு சாலை தயாராகுது  1935லே. ஷெல் கம்பெனி ரோடு போட்டாங்க. நீளம் ஒரு 220 கிலோ மீட்டர். அகலம் ஒரு ஆறு மீட்டர்ன்ற கணக்கு. பூராப்பூரா மணல்வெளி. அலெக்ஸான்ட்ரியா துறைமுகத்துக்கும், கய்ரோ நகரத்துக்குமான பாதை இது.  கப்பலில் இருந்து வரும் சரக்குகள்  அவ்வளவாக் கஷ்டப்படாமல் நகரத்துக்குள்  வர ஆரம்பிச்சது.  எங்கேயும் வியாபாரம் பெருகினால்  பொருளாதாரம் உயராதா என்ன ?

அடுத்து அரசு பண்ண காரியம்... 1959 இல் இது தார்சாலை ஆச்சு.  1971 இல் சாலையை ஒன்பது மீட்டரா அகலப்படுத்தினாங்க.  அப்புறம் ஒரு பத்து வருஷத்தில் பக்கத்துலேயே இன்னொரு சாலையும் ஆச்சு. இப்போ போக ஒன்னு வர ஒன்னு. நாளுக்கு 1500 வண்டிகள் போகவரன்னு பிஸியாச்சு.

1998 லே மூணாவது லேன். இப்போ வண்டிகள் நடமாட்டம் 13500.....   அஞ்சே வருஷத்தில் (2003) நாலாவது லேன்.  25200 வண்டீஸ்.  இப்போ ஆச்சு பதினாறு வருஷங்கள்.....   அட்டகாசமான ரோடாக மாத்தியாச்!    நம்ம  பெரிய பிரமிட் இருக்கும் ஊரான Giza விலிருந்து ஆரம்பிக்குது இந்த  டெஸர்ட் ரோட். எக்ஸ்ப்ரெஸ் வே !

வண்டி பறக்க ஆரம்பிச்சக் கொஞ்ச நேரத்தில்  என்னை அறியாமலேயே நான் தூங்கிட்டேன். சுமார் நூறு கிமீ பயணத்துக்குப்பின் ஒரு ப்ரேக். கண்ணைத்திறந்து பார்த்தா 'நம்மவர்' உறக்கத்தில். அட ராமா..........  இவராவது படங்கள் எதாவது எடுத்துருப்பாருன்னு  நினைச்சேன்............

இந்த டூர் ப்ரோக்ராமில்  Viator போட்ட ஐட்டிநரி  அவ்வளவாச் சரி இல்லைன்னு தோணுது. நாலு நாள் டூரில் முதல் இரண்டு நாட்கள் கய்ரோவிலும், அடுத்த ரெண்டு நாட்கள்   உள்நாட்டிலே வெவ்வேற ஊரும் என்று வச்சுட்டாங்க.  அதுக்குப் பதிலா முதல் நாளும் மூணாம் நாளும் கய்ரோ,  ரெண்டாம் நாளும் நாலாம் நாளும் வெளியூர்கள்னு வச்சுருந்தால் நமக்குக் கொஞ்சம் ஓய்வு கிடைச்சுருக்கும். இப்பப் பாருங்க நேத்து கய்ரோ திரும்பி ஹொட்டேலுக்கு வந்து தூங்கவே  மணி ராத்ரி ஒன்னே முக்காலாகிருச்சு. காலையில் அஞ்சே முக்காலுக்கு எழுந்தோம்.  நாலு மணி நேரத்தூக்கம் போதாதுதானே ? அதிலும் ஊர் சுத்தறதுலே உடம்பு  அலண்டு போகுது பாருங்க. இதை எதுக்குச் சொல்றேன்னா.... 'நீங்க எங்கியாவது டூர் போகும்போது  இப்படியெல்லாம் இல்லாமப் பார்த்துக்குங்க'ன்றதுக்குத்தான்.




சின்ன ஓய்வுக்காக நிறுத்தின இடத்துக்குப் பெயர் மாஸ்டர்  (ரெஸ்ட் ஹௌஸ் ) இது ஒரு மாடர்ன் பாலைவனச் சோலை :-) பாலைவனச்சாலையில் ஒரு பாலைவனச் சோலை !  ஒரேதா மூணுமணி நேரம் நிறுத்தாமப்போனா.... ஓட்டுநர்களுக்குக் களைப்பு வந்துருமேன்னு  சாலை ஆரம்பிச்ச நாட்களில் தொடங்கியது... இப்போ காலத்துக்கேத்த விதமா  ஏராளமான கடைகளோடு இருக்கு. மூடும் நேரம்னு ஒன்னும் இல்லை.  இருபத்திநாலு மணி நேரமும் திறந்தே வைக்கிறாங்க. அடுத்தாப்லெயே பெட்ரோல் ஸ்டேஷன்.   நல்ல ஐடியாதான்.
கய்ரோ -அலெக்ஸான்ட்ரியா 'எக்ஸ்ப்ரெஸ் வே'யில்  ஏறக்குறைய பாதி தூரத்தில் !  மாஸ்டர்னு பெயர் வைக்காம மிட் வே ன்னு வச்சுருக்கலாம்..... 

இன்னொன்னு இந்த 'எக்ஸ்ப்ரெஸ் வே' யில்   அக்கம்பக்கம் இருக்கும்  மற்ற ஊர்களுக்கு  (?) கிளைபிரிஞ்சு போகும் எக்ஸிட் ஒன்னும் கிடையாது. என்னமோ பாய்ன்ட் டு பாய்ன்ட் தான் போல !

2007 ஆம் வருஷம், மெயின் ரோடுக்கு நெடுக்க  ரெண்டு பக்கமும் சர்வீஸ் ரோடு போட்டுட்டதால்.....  விபத்து நடப்பது குறைஞ்சே போச்சு.  இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சு (2025 ) இதே ரோடில் போனால்..... பயண நேரம் கணிசமாக் குறையும் விதத்தில் இன்னும் மேம்பாடு செஞ்சுக்கிட்டு இருப்பதா ஒரு தகவலும் உண்டு !

நாமும் கொஞ்சநேரம் மாஸ்டரைச் சுத்திப் பார்த்துட்டுக் கிளம்பினோம். ரெஸ்ட் ரூம்ஸ் நல்லாவே இருக்கு!  நம்ம ரெய்னா, இங்கே இருக்கும் மெட்ரோ மார்ட்டுக்குப் போயிருந்தாங்க. வரும்போது பார்த்தால்,  சிப்ஸ், சாக்லெட்,  ஃபேன்ட்டா, கோக், தண்ணீர் பாட்டில்னு வாங்கி வந்து எங்களுக்கெல்லாம்  ஆளுக்கு ஒரு செட்ன்னு கொடுத்தாங்க.
அடுத்த ஒரு ஒன்னேகால் மணி நேரத்துலே ஊருக்குப் பக்கம் வந்துருந்தோம்.  ஒரு ஃபுட்பால் ப்ளேயரின் சிலை, ஊருக்குள் நம்மை  வரவேற்குது.  இங்கத்து சனத்துக்கு இந்தக் கால்பந்து விளையாட்டு உயிராம்.  இந்த ஊருக்குள்ளேயே நாலு ஸ்டேடியம் இருக்குன்னா பாருங்க. !   ஊரின் சனத்தொகை அம்பத்தியிரண்டு லக்ஷம். (எங்க நியூஸியில் இப்போ அம்பது லக்ஷம் ஆயிருச்சு. நாங்க வரும்போது  (ஆச்சு 32 வருஷம்) நாப்பதுக்கும் குறைவு)



ஊருக்குள் வண்டி நுழைஞ்சதும் பார்த்தால் ரொம்பப் பழைய ஊராகவும், இருக்கும் கட்டிடடங்கள் எல்லாம்  பெயின்ட் என்ற சமாச்சாரத்தைக் கண்ணில் காணாததாகவும் இருக்கு.  சமீபத்தில் கட்டுனவை நல்லா இருக்கும் போல.... நாம் போகும் பாதையில் கண்ணில் படலை.




சுத்தமும் கொஞ்சம் போறாது.....   பழைய ஊர் என்பது ரொம்பச் சரி.  அப்போ இதுக்குப் பெயர் Rhacotis.  மத்தியத்தரைக் கடலையொட்டிய ஒரு மீனவர் கிராமம். Mediterranean Sea. இந்தக் கடலில் ஒரு விசேஷம் என்னன்னா..... பத்தொன்பது நாடுகள் இதைப் பங்கு போட்டுக்கிட்டு இருக்கு. கூடவே இதில் இருக்கும் ரெண்டு தீவுகளும் !

இந்த இடத்துக்குத் தன் கப்பல்படையுடன் வந்து சேர்ந்த மன்னர், ஒரு பெரிய நகரத்தை நிர்மாணம் செய்து அதுக்குத் தன் பெயரையே வச்சுட்டார்.  இது நடந்தது சுமார் 2351 வருசங்களுக்கு முன்னே !  ஊருக்குப்பெயர் அலெக்ஸாண்ட்ரியா !  Alexandria.
இது நம்ம கிளியோட சொந்த ஊரும் கூட.  கடைசியில்  போனதும் இங்கிருந்துதான்.

இந்த ஊருக்கு வர்றதுக்கு சாலை வழி மட்டும் இல்லாம, ரயில், விமானம்  வழிகளும் இருக்கு!   விமானத்தில் நூறு  யூஎஸ் டாலர், ரயிலில் வரணுமுன்னா... ரெண்டு  யூஎஸ் டாலர் !!!!!

தொடரும்....:-)


9 comments:

said...

//கூடவே இதில் இருக்கும் ரெண்டு தீவுகளும் !//

One is CYPRUS, I stayed for 3+ years while working in a MNC there.

The other one is - may be Rhodes island. We visited there too for a weekend outing.

said...

பயணங்களில் இப்படிதொடர்ந்து பயணிப்பது, ஓய்வே இல்லாமல் கொஞ்சம் கடினமான விஷயம் தான். ஒரு முறை குஜராத் சென்ற போது இரவு நேரப் பயணங்கள், பகல் முழுவதும் சுற்றல் என்றானது! ஓய்வே இல்லை! கடினமாக இருந்தது அப்பயணம்.

தொடர்கிறேன்.

said...

தொடர் அலைச்சல் - இதைத் தவிர்க்கணும்னா கொஞ்சம் ரிலாக்‌ஸ்டாகவோ அல்லது ரொம்பவும் திட்டமிட்ட பயணமாவோ இருக்கணும்..

கிளியோபாட்ரா என்றதும், அவங்களைச் சந்தித்து அவங்க படத்தைப் போடப்போறீங்க என்று ஆவலா இருந்தேன்.. அது சரி..அந்தம்மாவின் மம்மி (அதாவது அவரோட மம்மி ஹாஹா) இருக்கா?

said...

கிளியோபாட்ரா கழுதைப்பாலில்தான் குளித்தார்களா என்பதையும் கேட்டு பதில் பெற்றிருப்பீங்க என்று நினைக்கிறேன்.

said...

கால் பந்தாட்ட வீரர் சிலை நன்றாக இருக்கிறது. கட்டிடங்கள் பழையதாகவே தெரிகின்றன.

said...

வாங்க விஸ்வநாத்,

நிறையத் தீவுகள் இருந்தாலும் அவையெல்லாம் மற்ற நாடுகளைச் சேர்ந்ததா இருக்கே. சைப்ரஸ் & மால்ட்டா தான் தனி நாடுகளாகவே அங்கே இருக்குதானே !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

ஆமாங்க. இந்த முறைக் கொஞ்சம் கஷ்டமாத்தான் போச்சு. தனிப்பட்ட வகையில் நாம் போயிருந்தோமுன்னா..... அந்தந்த இடங்களில் ஒரு நாள் தங்கிட்டுப் புறப்படுவோம். களைப்பு அவ்வளவாத் தெரியாது. இது Day Trip என்றபடியால் .... இப்படி.... ப்ச்....

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

உண்மை. அலைச்சலாகிப்போச்சு.....

இன்னும் கிளியின் சமாதியைக் கண்டுபிடிக்கலை. தேடிக்கிட்டுத்தான் இருக்காங்க..... இல்லேன்னா சந்திக்காமல் வந்துருப்பேனா........ அவ்ளோ அழகி இல்லைன்னுதான் கேள்வி.

கழுதைப்பால்..... ஒரு டீஸ்பூன் குளிக்கும் தண்ணீரில் கலந்துருப்பாங்க போல ! டெட்டால் ஊத்தறமாதிரி :-)

said...

வாங்க மாதேவி,

அந்த ஊர்க்காரருக்கு இப்படி ஒரு மரியாதை, நல்லாவே இருக்கு !