Wednesday, May 13, 2020

கர்நாக் கோவில்கள் .... (பயணத்தொடர் 2020 பகுதி 51 )

 ஒரு கோவிலுக்கு வந்தால் அது ஆறு கோவில்களா  வளாகம் முழுசும் அங்கங்கே இருக்கு !  வெவ்வேறு காலக்கட்டங்களில் கட்டப்பட்டவை என்றாலும் கூட ஒரே மாதிரியான ஸ்டைல்தான். வளாகம் ரொம்பவே பெரூசு. இருநூறு  ஏக்கர்.  இந்த  கர்நாக் என்ற ஊர், அந்தக் காலத்துக்குக் கோவில் நகரம்  ! (எவனோ கரிநாக்குன்னு சொல்லப்போய் கர்நாக்னு ஸ்டைலா வச்சுட்டானோ ? )
கோவில் என்ற சொல்லைப் பொதுவா ஹிந்துக்கள்தான் சொல்றாங்க.  மற்ற மதத்துக்காரர்கள்  வெவ்வேற சொற்களால் குறிப்பிடறாங்க இல்லையா ?  தமிழ்நாட்டுலே க்றிஸ்துவர்களும் சிலசமயம் கோவில், பூசை என்று சொன்னாலும்....  அவர்கள் எல்லோருமே ஒரு காலத்தில் ஹிந்துவாக இருந்து மதம் மாறியவர்கள்தான். அதனால் பழக்க தோஷத்தில் அப்படிச்  சொல்றாங்கன்னு நினைக்கிறேன்.

இதிஹாப் போய் டிக்கெட் வாங்கிவந்தார். ஆளுக்கு இருநூறு ஈஜிப்ட் பவுண்ட்.  விஸிட்டர் சென்டருக்குள் கோவிலின் மாதிரி வச்சுருக்காங்க.  ஒரு பார்வையில் பார்த்துட்டு அடுத்த வாசல்  வழியா கோவில் முற்றத்தில் காலெடுத்து வைக்கிறோம்.  கொஞ்சம் பிரமிப்பு வந்தது உண்மை.
மத்யான நேர மொட்டை வெயில் மண்டையைப் பிளக்குது...... நல்லவேளை காலணிகளைக் கழட்டச் சொல்லலை...   இங்கே ஈஜிப்ட்டில் நிறைய இடங்களை உலகின் பாரம்பரிய வகைகளில் சேர்த்துருப்பதால்....  இதெல்லாம் பளிச்ன்னு சுத்தமாவே இருக்கு. மேலும் சுற்றுலாப்பயணிகள் வந்து போகும் இடங்களாச்சே !  கூடுதல் சுத்தம் தேவைதானே !

ரொம்ப தூரம் முற்றத்தில் நடந்து போய்,  கம்பி வேலியாண்டை டிக்கெட் பரிசோதிச்சு உள்ளே அனுப்பும்  இடத்துக்குப் போகணும். ஆச்சு.

ஒரு அகழிப்பாலம் கடந்து  உள்ளே போறோம்.  அகழியில்  சொட்டுத்தண்ணீர் இல்லை....  பாலத்துக்கு அந்தாண்டை இன்னொரு முற்றம் கடந்தால் ரெண்டு பக்கமும் நாப்பது ஆட்டுக்கிடாக்கள் வரிசை கட்டி உக்கார்ந்துருக்குதுகள்.
மேலே அசலும், கீழே நகலும்.....
ஹா.... எங்கியோ பார்த்துருக்கோமில்லெ? எஸ். நம்ம லாஸ்வேகாஸ் பயணத்தில்  லக்ஸர் ஹொட்டேல் வாசலில்தான்.  நகல் எல்லாம் அப்பழுக்கில்லாமல்  இருக்கு. இங்கே அசல் எல்லாம்  உடைஞ்சும் , சிதைஞ்சும்  கிடக்கு.  முக்கியமாத் தலைகளை வெட்டி இருக்காங்க.  என்ன வேண்டுதலோ ?
லாஸ்வேகாஸில் பார்த்தப்ப, எப்போ நமக்கு இதையெல்லாம் நேரில் பார்க்க வாய்க்குமோன்னு நினைச்சது... இப்போ பலிச்சுருக்கு! எல்லாம் 'அவன்' கருணை !
பெரிய மதில்சுவர்கள் போல இருப்பதின் நடுவில் ஒரு வழி ! நல்லா கற்களை இழைச்சுக் கட்டி இருக்காங்க. எப்படி பாலிஷ்  பண்ணியிருப்பாங்க ?
பத்தாள் உசரத்துக்கு  மணற் கற்களால் ஆன வட்டத்தூண்கள் வரிசை. அதுலே செதுக்கி வச்சுருக்கும் சித்திர எழுத்துகள்.

இன்னும் போகப்போக.....தூண்களே தூண்கள்....  நூத்திமுப்பத்திநாலு !!!   (நான் எண்ணலை )ஆமாம்.... எதுக்கு இப்படி இத்தனை தூண்களாம்? அதுவும் அடுத்தடுத்துச் சின்ன இடைவெளியுடன்.....   (கண்ணாமூச்சி விளையாடச் சரியான இடம் !  ஒளிஞ்சுக்கிட்டால் யாராலேயும்  கண்டுபிடிக்க முடியாது.... கேட்டோ! )
 இந்த நூத்திமுப்பத்து நாலில் ஒரு பனிரெண்டு மட்டும்  இருபத்தினாலு மீட்டர் உசரம். பாக்கி நூத்தியிருபத்தியிரண்டு தூண்கள்  பனிரெண்டு மீட்டர் உயரம்தான்.  ஒவ்வொன்னும்  மூணரை மீட்டர் சுத்தளவு. நம்ம திருமலைநாயகர் மஹால்  நினைவுக்கு வரலை ?
இந்தக் கோவிலே  ஏறக்கொறைய அஞ்சாயிரம் வருஷத்துச் சமாச்சாரம். இவ்ளோ பழைய இடத்தில் இருக்கோமேன்ற நினைப்பே கூட   நல்லாத்தான் இருக்கு!
 பலதும் உடைஞ்சு பாதியாத்தான் இருக்கு....   'யார் எதிரி ? ஏன் உடைச்சாங்க ?' ன்னால்.....  இந்த அரசர்களிலும் கிறுக்கனுங்க இருந்துருக்க மாட்டாங்களா என்ன ?


அதெப்படி, சூரியனும் வாயுவும் சேர்ந்து ஒரே சாமியா இருக்க முடியும் ? சூரியன் மட்டும்தான் சாமி. அதனால் சூரியனை மட்டும் கும்பிடணுமுன்னு Pharaoh Akhenaten (நம்ம குழந்தை மன்னர்டூட் டோட  அப்பா) கோவிலில் இருக்கும் சிலைகளையெல்லாம்  அழிக்க ஆரம்பிச்சுருக்கார்.  பாதி அழிவு நடந்த காலம், இவரே சாமியாண்டை போனதும், அதுவரை அரசனுக்குப் பயந்து இருந்த சனம், திரும்பவும் பழையபடியே  சாமிகளைக் கும்பிட ஆரம்பிச்சதாம்.
பிரமிப்போடு சுத்திப் பார்த்துக்கிட்டே போறோம்.  கோவில்னு சொல்றது ரொம்பச் சரின்றது போல  அங்கே ஒரு புஷ்கரணி ! இறங்கிப்போக படிகள் எல்லாம் கூட இருக்கு. பூஜாரிகள் அங்கே இருந்து நித்ய அனுஷ்டானம் செஞ்சு  தீர்த்தம் எடுத்துக்கிட்டுக் கோவிலுக்குள் போவாங்களா இருக்கும்.
இதுக்குப் பக்கத்தில் நினைவுப்பொருட்கள் கடைகள் எல்லாம் இருக்குன்னாலும் நாம் அங்கே போகலை.  வளாகத்துக்குள் நுழையும்போதே உள்ளே ஆறு கோவில்கள்னு போர்டு பார்த்தேன்.  எனக்கு இந்த ஆறு கோவில்களையும் பார்க்கணும். இந்த முக்கிய கோவில்களைத்தவிர ஏகப்பட்ட சந்நிதிகளும் இருக்கு. ஆனால்   சிலைகள்னு  அதுக்குள்ளே ஒன்னும் இல்லை.

இந்த ஆறில் ஒரு மூணு குடும்பக்கோவிலாப் போயிருக்கு !  Amun Re, அவருடைய  மனைவி  Mut,   இவுங்க மகன் Khonsu
இந்த Amun தான்   வாயு பகவான்.  இவர்  Ra/ Re  என்ற சூரியக் கடவுளுடன் இணைஞ்சு புது அவதாரம் எடுத்துட்டார்.  அதான்  Amun Reன்ற பெயரில் இருக்கும்   சூரியன் கோவிலுக்கு  மட்டுமே அறுபத்தியொரு ஏக்கர் நிலம் !  சந்நிதிக்குள்ளே போகலாம்.  சாமி மேடை மட்டுமே இருக்கு. சூரியன் என்ன ஆனாருன்னு தெரியலை.....
சாமி  இருந்த பீடம் !
ஏகப்பட்ட சாமிகள் இவுங்களுடைய ஆதிகால மதத்துலே இருந்துருக்குன்னாலும், இப்படி வெவ்வேற சாமிகள்  வெவ்வேற சாமிகளுடன் சேர்ந்து ஒருத்தருக்கொருத்தர் உதவி செய்து  அவுங்க ட்யூட்டிகளைப் பங்கு போட்டுக்கிட்டாப் போலத்தான்  புதுப்புது பெயர்களுடன்  இருக்காங்க.
சகஸ்ரநாமம் போல இந்த சாமி பெயர்களையும் சேர்த்து ஒரு நாமாவளி பண்ணிக்கலாம்.

கோவில்  தீர்த்தத்துக்கும்தான்  பெயர் வைக்கலை . Sacred Lakeன்னு போட்டுருக்கு ! சூர்யதீர்த்தம்னு நாமே ஒரு பெயரும் வச்சால் ஆச்சு. இதையடுத்துதான்  சூரியனுக்கான கோவில். சாமி பெயர் Amun Re.  Amun & Ra ரெண்டும் சேர்ந்துருக்காம். (அதனால் கூடுதல் பவர் ! )
மனைவி Mut........ தலையில் கழுகு க்ரீடம் வச்சுக்கிட்டு, எல்லாரையும் பாதுகாத்துக் காப்பாத்தும்  கடவுள்.  அவுங்க பெயருக்கே  தாய் ன்னுதான் அர்த்தமாம்.   ஆஹா....   தாயார் !
மகன்  Khonsu சந்திரன். அட!  சூரியனின் பிள்ளை சந்திரன் !  இவருடைய விசேஷங்களில் ஒன்னு.... இவர் பெயருக்குப் பயணின்னு பொருள்!  அப்ப  நம்ம சாமி :-)
நோயாளிகளையும், பொறந்த குழந்தைகளையும் பாதுகாத்துக் காப்பத்துவாராம். கெட்ட ஆவிகளை ஓடஓட விரட்டுவாராம்.  நிலத்தையும், பெண்களையும்  போற்றி  உற்பத்தி பெருகி வரச் செழிப்பா வச்சுப்பாராம்.  ஓ.....

அப்ப  மற்ற மூணு... ?

Ptah என்ற கடவுள்..... ஆர்க்கிடெக்ட், ஓ......  அப்ப    இவுங்களோட விஸ்வகர்மா !!
 Montu ,   War God !    பருந்துத்தலை. ஆனால் அப்பப்ப எருது வேஷமும் கட்டுவாராம். சண்டைக்குப் போகணுமுன்னா.... கொம்பைத் தீட்டிக்கிட்டுக் கிளம்பிடுவார்!


Opet  னு ஒரு சாமிக்குக் கோவில்.     நீர்யானை  உருவத்தில் இருக்கார்.   எதோ ஒரு சமாதிக்கோவிலில் இருந்த சுவர்ச்சித்திரத்தில் நீர்யானையைப் பார்த்தோமே.... அதுவும் சாமிதானா !!!
ஸ்தூபி . வெற்றித்தூண்கள்/ விஜயஸ்தூபிகள் ( Obelisk ) சதுரவடிவில் ஆரம்பிச்சு அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக் குறுகிக்கிட்டே போய் ஊசி முனை மாதிரி முடிஞ்சுருது !  இதே டிஸைனில் அங்கங்கே இருந்தாலும்  இது ரொம்பவே உயரமுன்னு கணக்கு சொல்றாங்க. இதனுடைய ஜோடி ஸ்தூபி, உடைஞ்சு விழுந்துட்டது. அதையும் இங்கே பார்க்கலாம்.

ஒரு ரெண்டு மூணாள் உயரச் சிலைகள் வளாகம் முழுசும் ஏராளம்.  இதுலே  மன்னர்  Rameses II  தன் மனைவியுடன் இருக்கார்.

க்ரானைட் கல்லில் ஒரு வண்டு (Scarab  Beetle  )செஞ்சு வச்சுருக்காங்க.  நகர்ந்து போயிருமோன்னு இதுக்கொரு வேலியும் கூட :-)  (ச்சும்மா!)  இதை ஏழு முறை இடம் வந்தால்  குட் லக். அதிர்ஷ்ட தேவதை அப்புறம் உங்களோடுதான் இருப்பாள் !
இந்த வண்டு இருக்கே.... இதுவும் இங்கே ஒரு கடவுள்தான்.  தூணிலும் துரும்பிலும் இருக்கும் இறைவன் வண்டில் இல்லையான்னு கேக்கப்டாது.....  நம்ம ஹிந்து மதத்தைவிடக் 'காணும் பொருள் எல்லாம் அவனே'ன்னு  அந்தக் கால மதம் இருந்துருக்கு பாருங்களேன் ! நம்ம பக்கங்களில்  சாணியை உருட்டிக்கொண்டுபோகும் வண்டுதான் இது !
இங்கேயும் பழுதுபார்க்கும் வேலைகள் நடக்குது...க்ரேன் நின்னுருக்கு ஒரு பக்கம். ஆனால் நாம் பார்க்கும்போது வேலைகள் ஒன்னும் நடக்கலை.



ஆரம்பகாலத்தில் ( இருபதாம் நூற்றாண்டு ஆரம்பம்)  இங்கே சீரமைக்கும் வேலைகள் தொடங்கும்போது எழுநூறு சிலைகள் இருக்குன்னு கணக்கெடுப்பு. இதுதவிர பதினேழாயிரம் உடைஞ்சு கிடந்த துண்டுகள்  இருந்ததாம்.    எல்லாம் சரியாக்கி இணைச்சுப் பொருத்த இன்னும் எத்தனை காலம் செல்லுமோ....
  நல்ல கூட்டம்......   சொல்லி வச்ச மாதிரி,   சுற்றுலாப்பயணிகளை லஞ்சுக்குப்பிறகு இங்கே கூட்டிவந்துடறாங்க போல.....
இடிபாடுகளாக் கிடந்தாலும்..... முக்கிய கோவில்களுக்கு ஒரு பெயர்ப்பலகை வச்சுருக்கலாம்.  எது எந்தக் கோவில்னு குழப்பம்தான்  கடைசி வரையில்....

லக்ஸரில் இன்னும் பார்க்க வேண்டியது பாக்கி இருக்குன்னு இதிஹாப் சொன்னதால் இங்கிருந்து கிளம்பி வந்த வழியே வாசலுக்குப் போனோம்.  நினைவுப்பொருட்கள் கடைகள். கூடவே என்னவோ நாட்டு மருந்து போல சில சமாச்சாரங்கள்.  எதோ தின்ற வகைகள்னு நினைக்கிறேன்.....
அடுத்த இடத்துக்குப் போய்க்கிட்டு இருக்கோம்.  கார்ப்பார்க்கைத் தாண்டிக் கொஞ்ச தூரத்தில்  வழியில் கடைவீதிகள் போல  இருக்கும்  இடத்தைக் கடக்கும்போது  சில கடைகளின்  மாடியில் 'ப்ரைவேட் பாத்ரூம்ஸ்'  போர்ட் அங்கங்கே!  டூரிஸ்ட் வரும் இடங்களில் இது  ஒரு நல்ல ஐடியா !

ஆங்.....  சொல்ல மறந்துட்டேனே..... விஸிட்டர் சென்டர்லே   டாய்லெட் வசதிகள் இருக்கேன்னு அங்கே போனால்  வாசலில் நின்னுக்கிட்டு இருந்த ஆள் கையை நீட்டிக் காசுன்னு சைகை காமிச்சதும், கட்டணம் இருக்குன்னு பத்து பவுண்ட் (ஈஜிப்ஷியன்) கொடுத்துட்டு உள்ளே போனால்.... எல்லாம் உடைஞ்சு கிடக்கு. தண்ணியே இல்லை... இது வேணாமுன்னு   வெளியில் கம்ப்ளெய்ன்ட் பண்ண வந்து பார்த்தால் காசு வாங்குனவனைக் காணோம்.....  இப்படிச் சின்னச்சின்ன ஏமாத்து வேலைகளும் இருக்கு....

தொடரும்......... :-)


10 comments:

said...

THE GREAT HYPOSTYLE HALL

COULMNS - எழுத்துப்பிழை ?

said...

எத்தனை பிரம்மாண்டம். ஆனால் பல சிலைகள் அழிந்து போனதைக்கண்டால் மனதில் வலி. பாரம்பரியச் சின்னங்களை அழிப்பதில் மக்களுக்கு என்ன தான் சிலிர்ப்போ...

ஒவ்வொரு சிலையும் பிரமிக்க வைக்கிறது. எத்தனை எத்தனை கதைகள். தொடரட்டும் கதைகளும் பயணமும்.

ஏமாற ஆள் இருக்கும் வரை ஏமாற்றவும் ஆள் இருக்கும் - அது எந்த ஊராக/நாடாக இருந்தாலும்! :)

said...

நம்ம ஊர்லேர்ந்து ஏதேனும் பூசாரிக்கூட்டம் 5000 வருடங்களுக்கு முன் அங்கு போய், புதிய கல்சரை உருவாக்கியிருக்குமோ? இல்லை அஸ்வத்தாமன் பரம்பரை பாரதத்தை பகிஷ்கரித்துவிட்டு அங்கு போயிருக்குமோ? தீர்த்தக் குளம், கோவில், கடவுளர்க்கு மேடை இதெல்லாம் பார்த்தா இப்படித் தோணுது.

said...

ஏமாற்று வழிகள் எல்லா இடங்களிலும் உண்டு.

said...

இருநூறு ஏக்கர் வியப்புதான் .காணும் இடமெல்லாம் பிரமாண்டமான உயர்ந்த தூண்களும் ...செய்வதற்கு எவ்வளவு காலம் எடுத்து இருக்கும் நினைத்தால் ஆச்சரியம் தான்.

said...

வாங்க விஸ்வநாத்,

போகட்டும் போங்க அதையாவது எழுதி வச்சுருக்காங்களே!

இன்னொரு 'நோக்கரா' இருக்கீங்க போல :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,


உடைக்கறதுக்கு முன்னால் ஒரு விநாடி யோசிச்சுப் பார்த்துருந்தால்...... ப்ச்

எல்லாம் மூளை இருப்பவன் செயலா ?

இங்கேயும் ஏகப்பட்டக் கதைகள் இருக்கு!

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

இருக்குமோ என்னவோ !!!! சகுனியும் அந்தப்பக்கத்து ஆள் இல்லையோ......

அடுத்த பதிவு பாருங்க.... உங்க சம்ஸயம் உறுதிப்படலாம் :-)

said...

வாங்க பெயரில்லாதவரே.....


உண்மை

said...

வாங்க மாதேவி,

தூண் செய்வதுதான் சுலபமோ என்னவோ.... அச்சுலே வார்த்தாப்லெ ஒரே மாதிரி....