Wednesday, May 06, 2020

ஆஹா... நம்ம பூனைச்சாமி !!! (பயணத்தொடர் 2020 பகுதி 48 )

வேலி ஆஃப் த கிங்ஸ் லே இருந்து இன்னொரு இடத்துக்குப் போகும் வழியில் (20 நிமிட் போயிருக்கும்போது ) ஒரு ஸ்டாப்பிங் போட்டார் இதிஹாப்.  இது ஒரு தொழிற்சாலை !   வாசலில் ஒரு பக்கம் போட்டுருக்கும் ஷெட்டில்  ஏழெட்டுப்பேர் உக்காந்து என்னமோ தயாரிப்பில் இருக்காங்க. இடத்தின் பெயரைப் பார்த்ததும் எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு !  Sekhmet for Alabaster Factory.
Sekhmet   = பூனைச்சாமி.
இந்த டூர் கைடுகள் எல்லாம் இப்படி ஒரு கடைகண்ணிக்குக் கூட்டிப்போவது வழக்கம்தானே.... பார்த்துட்டுப்போகலாம். அதுவும் நம்ம பூனைன்னு உள்ளே போனால்....  ஹைய்யோ..... என்னத்தைச் சொல்வேன்.....




வகை வகைக் கற்களால் செஞ்ச  பூனைகள், பிரமிடுகள், இன்ன பிற பொருட்கள். எல்லாம் சுற்றுலாப்பயணிகளைக் குறி வச்சே செஞ்சுருக்காங்க.  அதிலும் இப்பதான் இந்த Pharoah சமாச்சாரங்களையெல்லாம் பார்த்துட்டு வந்துருக்கோமா..... அதனால் வாங்கியே ஆகணும்ங்கற  வெறி வந்துருது.


"ஆசையே அடங்கு"  மண்டையில் ஒரு தட்டுத் தட்டி உக்காரவச்சேன். ஏற்கெனவே நம்ம லக்கேஜ் எடை அதிகமுன்னு  'நம்மவர்'  வயித்துலே புளி......


'ச்சும்மாப் பார்க்கலாமு'ன்னு  ஆறுதலாச் சொல்லி வச்சுட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சேன்.


அடடாடா.....  ச்சும்மாச் சொல்லப்டாது..... ஒவ்வொன்னும் என்ன அழகுன்றீங்க.....




தனித்தனியா வகைப்படுத்தி அந்தந்தக் கற்களால் செஞ்சு அடுக்கி வச்சுருப்பதைப் பார்த்துக்கிட்டே வரும்போது....  இன்னும் பகட்டா வண்ணம் தீட்டி இருக்கும்  வகைகளும் நம்ம கண்ணை இழுத்தது உண்மை. நான் தேடிக்கிட்டு இருந்த  'டூட் 'தலையும் இருக்கு.  அதைவிட இன்னொரு சமாச்சாரம்  ரொம்பவே நல்லா இருக்கு.
நரித்தலை சாமி !  ( தினம் நரி மூஞ்சுலே முழிக்கலாம். அதிர்ஷ்டம்!  இல்லே ? )  இந்த சாமிக்குப் பெயர் Anubis.   இறந்தவர்களை மம்மிஃபைடு பண்ணும்  வித்தை தெரிஞ்ச சாமி இவர்.  அதனால்தான்    மம்மி செய்யும்போது, நரித்தலை  முகமூடி போட்டுக்கிட்டுச் செய்வது மரபு. இறந்த பேரரசரை  மம்மி செஞ்சுக்கிட்டு இருக்கும் 'பொம்மை'  ரொம்பவே நல்லா இருக்கேன்னு 'ஆசை' இருந்தாலும் அதோட சைஸைப் பார்த்து வாங்கலை. ஒரு அடிக்கு ஒரு அடிதான்.  ஆனால் மெல்லிய நளினமான விரல்கள் எல்லாம் பார்த்துட்டு, கொண்டு வரும்போது 'எதாச்சும்' ஆனால்  என்ன  செய்ய என்ற பயமும் காரணம்.


சரி  டூட் தலை மட்டும் வாங்கிக்கலாமுன்னு பார்த்தால் இதிலும் ஏகப்பட்ட சைஸுகள்.  சுமாரான அளவில் ஒன்னு எடுத்தேன்.  உடையவே உடையாதுன்னு  ரெண்டு தலையை எடுத்து ஒன்னோடொன்னு மோதிக் காமிச்சார் விற்பனையாளர் மொஹம்மத்.  சரின்னு சமாதானமாகி இன்னொரு தலையை வாங்கினோம்.  பேரம் பேசிக்கலாம். பிரச்சனை இல்லை. நல்லா பேக் பண்ணித்தரேன்னு சொல்லி, பபிள் ராப் போட்டு, அதுக்கு மேலே ப்ரௌண் பேப்பர் எல்லாம் வச்சுச் சுத்திக்கொடுத்தார்  மொஹம்மத்.
இன்னொரு முக்கிய சமாச்சாரம்.... இங்கே ரெஸ்ட் ரூம்ஸ் அருமை !   நிம்மதி :-)

(இவ்ளோ நல்லா பேக் பண்ணியும் நியூஸி வந்தபின் பிரிச்சுப் பார்த்தால் ஒரு பாம்பின் தலை கட். அதென்ன நம்ம வீட்டுக்கும் பாம்புக்கும் ஒத்துவர்றதில்லை?  முன்பொருக்கில்  ஆதிசேஷன் கழுத்துலே ஹெர்லைன் ஃப்ராக்ச்சர். இப்போ  இதன் கழுத்து......  நியூஸியில் பாம்பு  இல்லை என்ற காரணமோ ? )


அதுக்காக விட முடியுமோ ?   ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணிட்டேன்.  இதோ நம்ம வீட்டு டூட். :-)
யாபாரம் முடிஞ்சு வெளியில் வந்ததும், ஒரு ஓரமா உக்கார்ந்துருந்த தொழிலாளர்கள் எல்லோரும், கைவேலையைக் கீழே வச்சுட்டு, இன்னொரு பக்கம் வச்சுருந்த  இசைக்கருவிகளை எடுத்து வாசிக்க ஆரம்பிச்சாங்க. இதை எதிர்பார்க்காததால்  சட்னு வீடியோவோ, படமோ எடுக்கத் தோணலை. அவுங்களுக்கு முன்னால் வச்சுருந்த கூடையில் கொஞ்சம் அன்பளிப்பு போட்டதும் ம்யூஸிக் சட்னு ஆஃப் :-)

பழங்கால ஈஜிப்ட் பகுதியிலே நம்ம மதத்தில் இருப்பதைவிட   ஏகப்பட்ட சாமிகள் இருக்காங்கன்னு சொன்னேனில்லையா....   அதைப்போல ஏகப்பட்ட சாமிக் கதைகளும் இருக்கு!  அதுலே சாம்பிளுக்கு ஒன்னு சொல்றேன் இப்போ...

பூமித்தகப்பனுக்கும்  வானத்தாய்க்கும் ஒரு மகள் பிறக்கறாள். இவளுடைய பெயர் Isis.  அப்புறம் உடம்பொறந்தவங்கன்னு இன்னும் சிலர்.  இவளுக்கு ரொம்பவே சக்தி இருப்பதால், எல்லாக் கடவுளர்களுக்கும் மேலே இவள்தான்னு கொண்டாடறாங்க. சந்திரனுக்கும் சூரியனுக்குமே இவள்தான் அதிபதி.  இவளுக்குக் கல்யாணம் நடக்குது.  தம்பியையே கல்யாணம் கட்டி வைக்கிறாங்க. அந்தக் கால வழக்கம் அப்படி இருந்துருக்கு. க்ளியோ கூட உடம்பொறந்தானைக் கட்டுனதா சொல்லி இருக்கே.  அரச ரத்தத்தோடு  வேற ரத்தக்கலப்பு ஆகிருமோன்னு பயந்துதான் இப்படி ஒரு ஏற்பாடாம்..... என்னமோ போங்க.....
கட்டிக்கிட்டவன் பெயர்  Osiris.  இவந்தான்  முதல் ராஜாவா ஆகி நாட்டை ஆளத்தொடங்கினான்.  இவனுக்கு  ஒரு தம்பி இருக்கான். அவன் பெயர்   Seth. தம்பிகாரனுக்கு அண்ணன்காரன் மேல் ஒரே பொறாமை. ஒருநாள் அண்ணன்கிட்டே நைச்சியமாப் பேசி அவனை வெளியே கூட்டிட்டுப்போய், எதோ மயக்கமருந்து  கொடுத்துருக்கான்.  அண்ணன் மயங்கிக் கட்டை ஆனதும்,  ஒரு  நார்ப்பொட்டியில் அவனைப் படுக்க வச்சு, அந்த நார்ப்பொட்டியை இன்னொரு மரப்பொட்டிக்குள் வச்சு நைல்நதியிலே கடாசிடறான்.  தொலைஞ்சான் எதிரி. இனி தனக்கே அரசபதவின்னு  இருக்கான்.
நைல்நதியில் யாராவது மூழ்கி இறந்து போயிட்டா.... டைரக்ட்டா சொர்கம்தான்னு  இங்கத்து மக்களுக்கு ஒரு நம்பிக்கை இருந்துருக்கு !

ஆத்தோட போனவன் பெண்டாட்டி, புருஷனைக் காணாமல் எல்லா இடத்திலும் தேடிப்பார்த்துட்டு, அவனுக்கு என்னமோ ஆகிப்போச்சுன்னு துக்கத்தில் மூழ்கிடறாள்.  தலைமுடியை எல்லாம்  வெட்டி வீசிட்டு, போட்டுருந்த  உடையை எல்லாம் கிழிச்சு விட்டுக்கிட்டுத் துக்கமான துக்கம்.

ஆத்துலே வீசுன பொட்டி ஆத்தோட அடிச்சுக்கிட்டுப்போகுது.  அப்போ பெருமழை பேய்ஞ்சு  ஒரே வெள்ளக்காடாகி... பொட்டி அப்படியே பக்கத்து தேசத்துலே ஒரு மரத்தோட உச்சியில் போய் மாட்டிக்கிட்டு அங்கேயே நிக்குது.  வெள்ளம் வடிஞ்சாட்டுப் பார்த்தால்...... மரத்துலே ஒரு மரப்பொட்டி.  அந்த ஊர் ராஜா அதை எடுக்கச் சொல்லி, அரண்மனையிலே கொண்டு போய் வச்சுடறார்.

இங்கே துக்கத்தில் மூழ்க்கிக்கிடந்த  மனைவி,  எங்கெதான் போனான் புருஷன்னு தேடிக்கிட்டு ஊர் ஊராப் போய்க்கிட்டு இருந்தவள் ,  பக்கத்து தேசத்துக்குப் போய்ச் சேர்ந்தாள்.  அப்போ அங்கத்து ராணியம்மா, தன்னோட புள்ளையைப் பார்த்துக்க ஒரு   ஆயா நர்ஸ் வேணுமுன்னு  சொல்ல, இவளுக்கு அந்த வேலை கிடைக்குது.

இவளும், தான் யாரு என்னன்ற விவரம் ஒன்னும் சொல்லாம வேலைக்குச் சேர்ந்துக்கிட்டு, ராஜகுமாரனுக்கு ஆயா வேலை பார்த்துக்கிட்டு இருக்காள். துக்கப்பட்ட மனசுக்குக் குழந்தை ஆறுதலா இருக்கு. இவளுக்கும் அந்தப்புள்ளை மேலே பாசம் அதிகமாயிருக்கு.

இவள்தான் பவர்ஃபுல் சாமி இல்லையோ.... அதனால், இப்படி ஆசை வச்சுருக்கற புள்ளைக்கு  எதுவும் ஆகாமல் சிரஞ்சீவியா இருக்கட்டுமுன்னு  அதுக்காகத்  தீ வளர்த்து பூஜை ஒன்னு ஆரம்பிக்கிறாள்.  (யாகம் ? )  கொழுந்து விட்டு எரியும் அக்னிக்கு மேலே குழந்தையைக் கையிலேந்திப் புடிச்சுக்கிட்டு  மந்திரம் சொல்லிக்கிட்டு இருக்கும்போது, ராணியம்மா அந்த இடத்துக்கு வந்துடறாங்க.  ஐயோ... குழந்தையைத் தீயிலே போட்டுடப் போறாளேன்னு  குய்யோ முறையோன்னு கத்த, கண் திறந்து பார்த்த  ஆயாக்காரி, சட்னு  மந்திர  உச்சாடனத்தை நிறுத்திட்டுக் குழந்தையைத் தாய்க்காரியாண்டை கொடுத்துடறாள்.

ராணியம்மா என்ன ஏதுன்னு விசாரிச்சதும், இவள் தான் யாருன்றதை விளக்கிட்டு, இந்த மாதிரி ரொம்ப நாளுக்கு முன்னால்  காணாமப்போன புருஷனைத் தேடி வந்த சமாச்சாரம் சொல்ல,   'வெள்ளத்திலே மொதந்து வந்த பொட்டி ஒன்னு எங்க அரண்மனையில்  இருக்கு'ன்னாள் ராணி. 

அங்கே போய்  அந்தப் பொட்டியை எடுத்துக்கிட்டு இவள் தன்னுடைய தேசத்துக்குத் திரும்பி வர்றாள்.  (அவனைப் பொட்டியில் வச்சுத் தண்ணிக்குள் விட்டது இவளுக்கு எப்படித் தெரியும்னு  கேட்ட மனசின் மண்டையில் ஒரு போடு போட்டேன். அண்ணன் தொலைஞ்ச சந்தோஷத்தில் இந்த  Seth  ஒருநாள் உளறிக்கொட்டியிருப்பான் போல..... )

பொட்டியைத் திறந்து பார்த்தால்..... எப்பவோ செத்த சவம்.... எப்படியோ கிடந்துருக்கு.  தன்னுடைய வலிமையால்  அதுக்குத் திரும்ப உயிரை வரவழைச்சுடணுமுன்னு அதுக்கான ஏற்பாட்டில் இருக்காள்   இந்த ISIS  ( இப்ப இருக்கும் ஐ எஸ் ஐ எஸ் கூட  குழப்பிக்கக்கூடாது ,கேட்டோ !)

இந்தத் தம்பிகாரன் இருக்கான் பாருங்க..... அவன் என்னடா இது வம்பாப் போயிரும்போல... நம்ம கதி என்னாறதுன்னு , யாருக்கும் தெரியாம 'சவத்தை'க் கொண்டுபோய்  துண்டுதுண்டா வெட்டி எல்லாத்திசையிலும்  எறிஞ்சுட்டான். மொத்தம் பதினாலு கஷணம், கேட்டோ !

பொண்டாட்டிகாரி, பூஜைக்கு ஏற்பாடு பண்ணிட்டுப் பார்த்தால் 'சவம் '  மீண்டும் மிஸ்ஸிங். திரும்பத் தேடக்கிளம்பினாள்.   எப்படியோ எல்லா திசைகளுக்கும் போய்  ஒவ்வொன்னா துண்டுகளைப் பொறுக்கி எடுத்துட்டாள். பதிமூணு ஆப்ட்டது. ஒன்னு மட்டும் மிஸ்ஸிங். அதுவும் என்ன பார்ட் ?  ஐயோ.... ஆணுக்குரிய முக்கியப் பகுதி.

இனியும் காத்து நின்னால் வேலைக்காகாதுன்னு  துண்டுகளைப் பொருத்திட்டு, மிஸ் ஆன பார்ட்டை மட்டும் தங்கத்தால் செஞ்சு அதுக்குண்டான இடத்தில்  ஒட்டி வச்சுட்டுக்  கடைசியில் பூஜையை வெற்றிகரமா முடிச்சுச் சவத்துக்கு உயிரை  வரவழைச்சுக் கொடுத்துட்டாள்.! ஒரு பறவை ரூபம் எடுத்து, தன் சிறகுகளால் விசிறி விசிறி மூச்சுக்காத்தை உள்ளே அனுப்பிட்டாள்னு  சொல்றாங்க.
'ஹா.... நான் எங்கிருக்கிறேன்'னு கேட்டு மலங்க மலங்க முழிச்சுக்கிட்டு எழுந்து உக்கார்ந்துருப்பான் இல்லே ?

செத்துப்போன சவம்  உயிர்த்தெழுந்ததுக்கு  இதுதான் முன்னோடி !  அன்றுமுதல் செத்த உடலை எம்பாமிங் செஞ்சு மம்மியாக்கறது இவனுடைய அரசக் கடமைகளில் ஒன்னாகிப் போச்சு. இந்த மம்மிஃபைடு கலையை ஆரம்பிச்சு வச்சவனே இவந்தான்.

அதுக்குப்பிறகுதான் ரெண்டுபேருக்கும் ஒரு குழந்தை பொறக்குது. பையன். பெயர் Horus.  வானப்பாட்டி  & பூமித்தாத்தாவின் ஒரே பேரன் !   (Horizon என்பதின் சுருக் ? ) 

இவள் இந்தப்புள்ளையைப் புள்ளையாண்டு இருந்தப்ப, அந்த  கெட்ட தம்பிக்காரனுக்குப் பயந்து, நைல்நதிக்கரையில் விளைஞ்சு நிக்கும் பாபிரஸ் புதருக்குள்ளே ஒளிஞ்சுருந்தாளாம். குழந்தை ஓரளவு வளர்ந்தபின் அரண்மனைக்கு வந்துட்டாள்.
அப்பக்கூட அந்த கெட்டவன்  Seth  சும்மா இல்லை.  ஓடிவிளையாடிக்கிட்டு இருந்த புள்ளைக்கு விஷம் வச்சுட்டான். அடப்பாவி.....
நல்ல சமயத்தில்  தாய்க்காரி கண்டுபிடிச்சுட்டு, தன்னுடைய சக்தியால் குழந்தைக்கு ஒன்னும் ஆகாமல் காப்பாத்திட்டாள்.  உடம்புக்குள் போன விஷத்தால் குழந்தைக்கு பவர் கூடிப்போச்சு ! அன்று முதல்,  எல்லா விஷக்கடிகளுக்கும்  அந்த  சின்னப்புள்ளைச் சாமியைக் கும்பிட்டுக்கிட்டால்  விஷம் முறிஞ்சுருமுன்னு  சனம் கும்பிட்டுக்கிட்டு இருக்கு.

இந்தப்புள்ளையை நடுவில் வச்சுத் தாய்தகப்பன் இருக்கும் சிலைகள் இருக்கு. சோமாஸ் ஹோரஸ்.  குழந்தையை மடியில் தூக்கி வச்சுருக்கும் தாயின் சிலைகளுக்கும் பஞ்சமில்லை.  இப்ப நாம் பார்த்த கடையிலும் இந்தச் சிலைகள் வகைவகையா இருக்கு.

இந்தத் தாய்மடிக் குழந்தையைத்தான்  க்றிஸ்தியானிகள்  மேரியும், ஜீஸஸுமா ஆக்கிட்டாங்கன்னும்.......     இருக்கலாம். இதெல்லாம் சுமார் அஞ்சாயிரம் வருசத்துக்கு முன் 'நடந்ததாமே!'
சரி... இப்போ மிச்சக்கதையைப் பார்க்கலாம்....  புள்ளை வளர்ந்து பெரியவனானதும்,  தகப்பன் கூடச் சேர்ந்து  சண்டை போட்டு அந்த வில்லன் Seth ஐக் கொன்னுடறாங்க. இனி எல்லாம் சுபமே !

தகப்பன்காரன், பையனுக்குப் பட்டம் கட்டிட்டுப் பாதாள லோகத்துலே இருக்கும்  செத்த உயிர்களுக்கு  அரசனாப் போயிட்டான்.  அப்படிப் போகுமுன் தன்னுடைய  கடமையா இருந்த எம்பாமிங் டிபார்ட்மென்டை, நரித்தலை   Anubis வசம் ஒப்படைச்சுட்டுத்தான் போயிருக்கான்.

செத்துப்பொழைச்ச Isiris அரசரைத்தான்  கொஞ்ச நேரத்துக்கு முன்னால்  மூணாவதாப் போன கல்லறைக்குகையில் செல்லில் படம் எடுத்துக்கிட்டு இருந்ததைப் பார்த்தோம் :-)

கதை எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்க.....

அடுத்த இடம் நோக்கிப்போறோம் இப்போ...

தொடரும்........ :-)

PIN குறிப்பு :  கதைக்கான படங்களை கூகுளாண்டவர் கொடுத்துருக்கார். எதாவது பிரச்சனை வந்தால் தூக்கிடலாம்.

 Thanks to Google  for  the images in this story.


10 comments:

said...

ஸ்வாரஸ்யமான கதை.

எல்லா கதைகளிலும் இப்படி ஒரு வில்லன் - அது தானே ஸ்வாரஸ்யத்தினைக் கூட்டுகிறது!

தொடர்கிறேன்.

said...

கதை அருமை, சிறப்பு;
நன்றி

said...

கதை நல்லாத்தான் இருக்கு.

கொஞ்சம் ஆழ்ந்து படிச்சால், எல்லா இதிகாசங்களிலும் இந்த மாதிரி கதையின் சாயலைக் காணமுடியும் போலிருக்கு. ஒருவேளை எல்லாம் இங்கிருந்து சென்றதுதானோ?

said...

பொருட்கள் படம் பார்தபோதே நினைத்தேன் ஒன்று ஒட்டிக்கொள்ளும் என்று :) நியூசிக்கு வந்த டூட் அழகு. கதை சுவாரசியம்.

said...

அருமையான பதிவு

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

வில்லன் இல்லைன்னா ஏது கதை ? நகராதுல்லே !


வாழ்க்கைக்கு சுவாரஸ்யமே வில்லன்களால்தான் :-)

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

கம்யூனிகேஷன் இப்ப மாதிரி இல்லாத காலக்கட்டங்களில் எப்படி ஒரே மாதிரி அப்போதைய ஆட்கள் சிந்திச்சு இருப்பாங்க ? வியப்புதான் !

said...

வாங்க மாதேவி,

துளசியைச் சரியாப் புரிஞ்சு வச்சுருக்கீங்க ! நன்றிப்பா !

said...

வாங்க தமிழ் மொழி !

நன்றி !