Friday, May 01, 2020

பதிமூணா இல்லை பதினாலான்னு தாயைத்தான் கேக்கணும்.... (பயணத்தொடர் 2020 பகுதி 46 )

Ramses IV பார்த்துட்டு,  வெளியே வந்ததும் அடுத்த  கல்லறைக்குகைக்குக் கூட்டிப்போனார் இதிஹாப்.  அந்தப்பகுதியில் கொஞ்சம் அதிகமான கூட்டம்தான். செல்லம் ஒன்னு  சும்மா நின்னு வேடிக்கை பார்க்குது.  பாவம்.... இங்கே அதுக்கு யார் சாப்பாடு போடறாங்க?  ப்ச்....

பழைய ஈஜிப்ட்  நாட்டுலே  வம்சாவளியா  ஆட்சி நடத்துன  அரசர்கள்  முப்பது  பேராம்!  அந்த வரிசையிலே  பத்தொன்பதா இருந்தவருடைய கல்லறையைத்தான்  இப்போ நாம் பார்க்கப்போறோம்.  அவருடைய பெயர் Merenptah.   பேரரசர் Ramses II அவர்களின் மகன்.  பட்டத்து இளவரசனோ?  ஊஹூம்....


பதிமூணாவது பிள்ளையோ இல்லை பதினாலாவதோன்னு தெரியலை !  கணக்கெல்லாம் வச்சுக்கலை போல....     தகப்பனுக்கு ஆயுசு கெட்டி.  அறுபத்தியேழு வருஷம் அரியணையில் இருந்துருக்கார்.  அந்தக் காலக்கட்டங்களிலேயே    ஒவ்வொரு பிள்ளையா  பலவழிகளில்  சாமிகிட்டேப் போயிருக்காங்க. கடைசியில் மிஞ்சின புத்திரர், அரியணையில் ஏறுனபோது வயசு எழுபது !

(எனக்கென்னவோ இப்பத்து மஹாராணியும், புத்திரரும் நினைவுக்கு வர்றாங்க. எங்க நாட்டுக்கும் இவுங்கதான் மாட்சிமை தாங்கிய மஹாராணி !)


அரச பதவி ஏற்றதும் செஞ்ச முதல் வேலை...   தனக்கான கல்லறையைக் கட்ட ஏற்பாடு செஞ்சதுதான்.  இந்த மன்னர்கள் எல்லாம் அவுங்கவுங்க கல்லறைகளைத் தானே டிஸைன் செஞ்சு கட்டி வச்சுக்கறாங்க  போல !
பேரரசர் Pharoah Merenptah  சிறப்பான ஆட்சியைக் கொடுத்துருக்கார். இவர் ஆட்சி காலத்துலேதான் அண்டைநாடான லிபியா  சண்டைக்கு வந்து, அவுங்களைப் போரில் ஜெயிச்சுத் தன்நாட்டைக் காப்பாத்துனதால் மக்களுக்கு இவர்மேல் பெரும் மதிப்பு !  யாருடைய ஆட்சின்னாலும், தன் குடிமக்கள் நலனைப் பார்த்துக்கும்  தலைவருக்குத்தான்  மதிப்பும் மரியாதையும் தாமாய்க் கிடைக்கும், இல்லே?

ஆனாப் பாருங்க.... இவர் பத்தே வருஷம்தான் ஆட்சியில் இருந்துருக்கார்.

இன்னொரு சுவாரஸ்யமான சமாச்சாரம்....    மோசஸ் (டென் கமாண்ட்மென்ட்ஸ்) என்னும்  மூஸா  இவருடைய  சகோ வாம் !  இப்படி ஒரு தியரி இருக்கு!  ராஜகுமாரி நைல்நதியில் மிதந்துவந்த பொட்டியில் இருந்த ஆண் குழந்தையை எடுத்துப்போய் அரண்மனையில் வச்சு வளர்த்தாங்கன்னு  வாசிச்சு இருப்பது நினைவுக்கு வருது.
சரி, வாங்க உள்ளே போகலாம்.  இங்கேயும்  நீளமாப்போகும் சரிவான  மரப்பலகைப் பாதை. நூத்தறுபது மீட்டர் இறங்கணும்.  நடுநடுவில் குறுக்கே  இரும்புப் பட்டையுமா போட்டு வச்சுருக்காங்க. சறுக்காமல் இருக்க இந்த ஐடியாவும் நல்லாத்தான் இருக்கு. கைப்பிடியும் போட்டு வச்சுருக்காங்க.
 சுவரின் ரெண்டு பக்கமும்,  செதுக்குப் படங்களா நிறைஞ்சுருக்கு !   விதானத்தில்  சித்திரங்கள் போல  ஒன்னு....  வரைஞ்சதா இல்லை இயற்கையா கல்லில் இருந்த டிஸைனா ?

பேரரசரும், சூரியனும்  ஹலோ சொல்லிக் கைகுலுக்கறாங்க. அந்த நாட்டுலே  Pharoahவே சாமி  மாதிரிதான் இல்லையோ...

படகுப்பயணம்....
முதலைச்சாமி.....
அறைகளாட்டம் ரெண்டு பக்கமும் இருக்க நாம் கீழிறங்கிப்போறோம். தூண்கள் கூட  வச்சுக் கட்டி இருக்காங்க . கூரை இடிஞ்சு விழாமல் இருக்க சப்போர்ட்!


விதானம் முழுசும் நக்ஷத்திரங்கள்.......

நல்லாத்தான்  கட்ட ஆரம்பிச்சுருக்கார். ஆனால் சண்டைகளில் ஈடுபட்டு அதுலேயே காலம் கடந்து போயிருக்கு.  பத்தே வருஷத்துலே போயிருவாருன்னு தெரிஞ்சு போச்சோ என்னமோ....  கல்லறை வேலைகள் எல்லாம் அவசரடியா நடந்தாப்டி இருக்குன்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க... ப்ச்....
இதைப்பாருங்க.... இது கால் வச்ச பாம்போ?  இப்படி கால்கள் வச்சுக்கிட்டு நடக்கும் மீன்களை ஒருமுறை சிங்கப்பூரில் பார்த்துருக்கேன்.


சரிவுப்பாதைக்கிடையில் கொஞ்சம் சமதளம்.
ஒருவழியாக் கீழிறங்கினதும்  சமாதியும், அதுக்குப் பின்னால் இன்னும் ஒரு ஹாலும் இருக்கு!  சட்னு பார்த்தால் நம்மூர்லே   ரெண்டு பக்கமும் திண்ணை வச்ச வீடு இருக்குமே அப்படி !
திண்ணைமேலே ஏறிக்கூடப் பார்க்கலாம். படிகள்  இருக்கே !  கொல்லைப்புறம் தெரியுதான்னு நான் பார்த்தேன் :-) இல்லை.  கம்பிக்கதவு இருக்கு !   உள்ளே போக ஒரு  ரகஸியப் பாதை கூட  இருக்கலாம் !  யார் கண்டா?



ஹாலில் ஒரு  கல்லில் செஞ்ச சவப்பொட்டி. மம்மி டிஸைன், மம்மியை வைக்கிறதுக்கு! இதுக்குள்ளே இன்னும் ஒரு  பொட்டி இதே மாதிரி இருக்கு. அதுக்குள்ளேதான் இவர் கிடக்கிறார்!
இந்தக் கல்லறைக்குள் இருந்த இவரை ஏதோ ஒரு  காலத்தில் வேறெ கல்லறைக்குகையில் இன்னும் நாலு மம்மிகளில் ஒருத்தராகச் சேர்த்து விட்டுருந்தாங்கன்னும்,  அப்புறம்  கண்டுபிடிச்சு இங்கே கொண்டு வந்து வச்சாங்கன்னும் ஒரு தகவல் கிடைச்சது. எப்படிக் கண்டுபிடிச்சாங்களாம் ?  இவர் ஆர்த்தரைடீஸ் நோயாளியாம்.   கால் முட்டி எல்லாம் கலாஸ்.....   ( ஆ.... நம்ம கேஸ் !!!!)   
  
அதுலே கால் வைக்கும் பகுதியில்  நீண்ட ரெக்கைகள்  உள்ள  தேவதை காலை மடிச்சு உக்காந்துருக்கு ! நல்ல பெரிய பெரிய சிறகுகள் !  நெருப்புக்கோழியின்  சிறகுகளாம்!   தேவதையின் பெயர்....  Goddess Maat .   ஓ.... சாமி!  நீதி, நேர்மை, சட்டம்,  உண்மை இப்படி முக்கியமானவைகளுக்கு அதிபதி.நீதியும் சட்டமும்  மட்டும்  எல்லோருக்கும் ஒரே மாதிரி இருந்தால்  அதுக்கப்புறம் வேறெதற்கும்  தேவையே இல்லைதானே?  அதது ஒரு ஒழுங்கில் நடக்குமா இல்லையா?    Egyptian Goddess Maat .   Goddess of truth, justice, wisdom, the stars, law, morality, order, harmony, the seasons, and cosmic balance. Maat was both the goddess and the personification of truth and justice. Her ostrich feather represents truth.

நெருப்புக்கோழியின் இறகுகள் ரொம்பவே உயர்ந்த பொருள் போல ! நம்ம Tutankhamun (குழந்தை மன்னர் ) கல்லறையில்  தங்கப்பிடி போட்ட இறகுகள் விசிறி இருந்துருக்கு !  அதைத்தான் நேத்து ம்யூஸியத்துலே பார்த்தோம்.

நெருப்புக்கோழி வேட்டைக்கு மன்னர்கள் போவாங்களாம். அப்படிப் போனப்பதான் தேர்ச்சக்கரம் உடைஞ்சு, அதுலே இருந்து கீழே விழுந்ததால்  குழந்தைமன்னர் காலில் அடிபட்டுருச்சுன்னும் ஒரு தியரி இருக்கே ! இவரோட  கல்லறைக்குள்  தேர்கள்  கூட இருப்பதாக  ஒரு தகவல்.
திண்ணையில் இருந்து எடுத்த படம்  மேலே ! சமாதியை நல்லா இன்னும் கீழிறக்கிக் கட்டி இருக்காங்க.  நாம் மேலே மரத்தரையில் நின்னு பார்க்கிறோம்.
இந்த சமாதியிலும் ரிப்பேர் வேலை நடந்துக்கிட்டு இருக்கு.  உதிர்ந்து போன டிஸைனை எல்லாம் புதுப்பிக்கிறாங்க.




 கூடியவரை 'சுத்தி'  பார்த்துட்டுத் திரும்ப மேலேறி வந்தோம்.
அடுத்த இடம் பார்க்கக் கூட்டிப்போனார் இதிஹாப். அப்போதான் பார்க்கிறேன்... நம்ம Tut (குழந்தை மன்னர்) கல்லறை அடுத்தாப்லேயே இருக்கு !
இதுக்குள் போகத் தனிக்கட்டணம்.  நம்ம மூணில் இது வராது.  ஆனால் உள்ளே இருக்கும் முக்கியமான செல்வங்கள் வகைகளையெல்லாம்தான் இப்போ ம்யூஸியத்தில் கொண்டு போய் வச்சுட்டாங்களே....    இப்போதைக்கு டூட் மட்டும்தான் அங்கே இருக்கார். குகையும் சாதாரண வகைதானாம்.   உண்மையைச் சொல்லணுமுன்னா.... எல்லா மம்மிகளும் ஒரே மாதிரிதான் இருக்காங்க. பாடம் பண்ணி வச்சாலும் காய்ஞ்ச கருவாடுதான், இல்லே !
குழந்தை மன்னர் டூட்டின் பெயர்  ரொம்பவே பிரபலமாகிட்டதால்  இங்கே கூட்டம்  வருதுன்னார் இதிஹாப்.  அதுவுஞ்சரி. வாசலில் நின்னு ஒரு க்ளிக், ஆச்சு :-)
வாங்க நம்ம மூணாவதுக்குப் போகலாம் :-)

தொடரும்..... :-)


6 comments:

said...

எங்கெங்கும் கல்லறைகள்...

அதில் வரைந்திருக்கும் ஓவியங்கள் அசத்தலாக இருக்கின்றன.

தொடர்கிறேன்.

said...

படங்கள் விளக்கங்கள் அருமை.

பல ஆயிரம் வருடங்கள் ஆனதால் முகம்லாம் வற்றிப்போயிருக்குமே. ஒரிஜனல் முகம் எங்காவது செய்து வைத்திருக்காங்களா? ரீ கன்ஸ்ட்ரக்ட் செய்து

said...

எப்படி எல்லாம் கட்டி இருக்கிறார்கள்!!திண்ணைவீடு :) அழகாகத்தான் இருக்கிறது.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

தொடர்வருகைக்கு நன்றி !

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

ஒரிஜினல் முகமெல்லாம் இல்லை. அங்கங்கே சிலபல சிலைகள் ம்யூஸியத்தில் இருப்பவைகள் மட்டும்தான்.

said...

வாங்க மாதேவி,

திண்ணைன்னதுமே அழகு வந்துருது இல்லே? திறந்த முற்றமும் திண்ணையும் இப்பவும் என் கனவுதான் !