Friday, May 15, 2020

ஊருக்குள்ளேயே இன்னொரு கோவில்... (பயணத்தொடர் 2020 பகுதி 52 )

அடுத்த அஞ்சே நிமிட்டில்  லக்ஸர் கோவிலுக்கு வந்துட்டோம்.  நகரத்துக்குள்தான் இருக்கு.   கர்நாக் கோவிலுக்கும் லக்ஸர் கோவிலுக்கும்  இடையில் மூணு கிமீ இருந்தால் அதிகம்.  வர்ற வழியில்  ஏகப்பட்ட குதிரைகள் பக்கத்துலே வண்டிகளோடு  ஒருபக்கம்.....  பயணிகள் குதிரை வண்டிகளில் ஏறி ஊரைச்சுத்தி வரலாம்....

கோவில்நகரம் என்ற பெயர் நிலைக்கட்டுமேன்னு கோவில் கோவிலா கட்டி இருக்காங்க போல !
 இதுக்கொரு நூத்தியறுபது.

உள்ளே போனால்....   ஏறக்கொறைய  கர்நாக் கோவில் மாதிரி (!)தான்....  தெரியுது.... அப்போ வேற ஸ்டைலே இல்லை போல..... கோவில் என்றால் இப்படித்தான்னு ஒரு கணக்கு இருந்துச்சோ என்னமோ ?

அதே போல உயரத்தூண்கள், அதே மாதிரி உயரமான சிலைகள்,  அதே மாதிரி   ஸ்பிங்க்ஸ் வரிசை. ஆனால்  ஆட்டுக்கடா இல்லை. அதுக்குப் பதிலா மனுஷத்தலைகள்.
சட்னு 'என்ன இது இப்படி'ன்னு சலிப்பு வந்தது உண்மை....  எதாவது வித்தியாசம்....  ஆ.... இருக்கு. முகப்பு மதில் சுவராண்டை பக்கத்துக்கு மூணுன்னு...ஆறு பேர். அதுலே  ரெண்டு பேர் உக்கார்ந்துருக்காங்க.

நடுவில் இருக்கும் வாசலையொட்டி இந்தப்பக்கம் ஒன்னு அந்தப் பக்கம் ஒன்னு !

இவுங்களுக்கு முன்னால் இன்னொரு சதுரத்தூண்!  (Obelisk )
 இந்த மதில்சுவர்கூட கோவில் வளாகத்தைச் சுத்திக்கட்டாம  ஒரு facade மாதிரிதான். ஜஸ்ட் முன் பக்கம் மட்டுமே!
என்ன ஒன்னு.... அங்கே ஆறு கோவில், இங்கே ஒரே ஒரு கோவில்.

இது கர்நாக் கோவிலைவிட இளையது.  அதைப் பல மன்னர்கள் அவுங்கவுங்க காலத்துலே கட்டுனாங்க. இங்கே ஒரே ஒரு மன்னர்தான் இதைக் கட்டி இருக்கார். யாராம் ?

 ஹாஹா..

நம்ம டூட் டின் அப்பா ! ஒரே சாமி இருக்கணுமுன்னு அங்கே எல்லாத்தையும் ஒடைச்சுப் போட்டாரில்லையா....  அப்பவே தனியா 'அந்த ஒரே சாமி'க்குக் கோவில் கட்டலாமுன்னு எழுப்பியது இது.  அதைப்போல பெருசு இல்லை.  ஒரு முக்கால் ஏக்கருக்கும் குறைவு.

சரி, வாங்க உள்ளே போய்ப் பார்க்கலாம்....

உள்ளே Rameses II கோவில் இருப்பதால் அவரே த்வாரபாலகராட்டம்  வாசலில் உக்கார்ந்துருக்கார். டபுள் ஆக்ட் வேற :-)
இந்த ஊரே ஒரு காலத்துலே தலைநகராகவும் இருந்துருக்கு ! அதனால்தான் பேரரசர்கள் சமாதி இடங்களும், பேரரசிகளுக்கான சமாதிக் கோவில்களும்  இதே ஊர்லே கட்டி வச்சுருக்காங்கன்னு 'ஆராய்ச்சியாளர்கள் ' சொல்றாங்க.

கர்நாக் கோவில்களில் Opet  னு ஒரு சாமிக்குத் தனிக்கோவில் இருக்குன்னு பார்த்துட்டு வந்தோமில்லையா,  அந்த நீர்யானை சாமி....    அதுக்கு ஒரு திருவிழா கொண்டாடுவாங்களாம். Opet Festival.

லூனார் கேலன்டரில் ரெண்டாவது மாசம் (நம்ம  மாசி- பங்குனி மாசம்! ) அப்போ  அங்கே இருக்கும்  சாமி குடும்பத்தை (அப்பா,அம்மா புள்ளை) அலங்கரிச்சு எடுத்துக்கிட்டு பல்லக்கில் வச்சு இங்கே தூக்கிட்டு வருவாங்களாம்.   இருபத்திநாலு நாட்கள், இந்தக் கோவில்  முற்றத்தில்  குடும்பத்தை வச்சு பூஜைகள் செஞ்சுட்டுத் திரும்ப அங்கே கொண்டு போவாங்களாம்.
ஓ.... நம்ம பக்கங்களில் உற்சவர் உலா போறது போலத்தான்!  கள்ளழகர்  மதுரை வரும் வழியில் ஸ்ரீப்ரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் தங்கிப்போறாரே.....  ஹைய்யோ ஹைய்யோ .....

இதைப்பத்தி இன்னும் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமுன்னு  என்ஸைக்ளோப்பீடியா ப்ரிட்டானிக்காவில் பார்த்தால் இன்னொரு ஆச்சரியமும் கிடைச்சது. இந்தத் திருவிழாவை, நம்ம பூரி ஜகந்நாத் ரத யாத்ரையோடு ஒப்பிட்டு எழுதி இருக்காங்க !  கொஞ்சம் யோசனை  பண்ணினால்  ரொம்பச் சரின்னு தோணுதே!!
அப்போ ரெண்டு கோவில்களுக்கும் இடையில் இருக்கும் வழியில் எழுநூறு மனுஷத்தலை ஸ்பிங்ஸ் வச்சுருந்தாங்கன்னும்  ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க.  அந்த எழுநூறில்  போனது போக  இருப்பவைதான்  இங்கே !


 எதுக்கு இப்படித் தலையை வெட்டிக் கீழே வச்சுருக்காங்க ?


கோவிலில் மொத்தம் எழுபத்திநாலு தூண்கள் ! இதென்ன  கலையோ தெரியலை...  இவுங்க கோவில்களில் எல்லாம் தூணே தூண்கள். ஒருவேளை நம்ம ஆயிரங்கால் மண்டபம்  மாதிரியா என்ன ?
நல்ல வேளை....    நம்ம ஹிரண்யகசிபுவின் சபையில் இவ்ளோ தூண்கள் இருந்துருக்காது....  நரசிம்ஹன் தப்பிச்சார் :-)
 உள்ளே கோவில். அதுக்கு முந்திகாலத்தில்  நடுவில்  நல்ல வாசல் இருந்துருக்கும். இப்போ  ஒரு பக்கமா செஞ்சு வச்சாப்போல இருக்கு.  அலெக்ஸாண்டர் (த க்ரேட் ) இங்கே வந்து சாமி கும்பிட்டதாக 'வரலாறு '









நம்ம டூட் அண்ட் மனைவி ஒரு இடத்தில் உக்கார்ந்துருக்காங்க. அதானே.... தகப்பன் கட்டுன கோவிலில் மகனுக்கு இடமில்லையா என்ன ?

இன்னொரு சமாச்சாரம் இங்கே என்னன்னா....   இந்தக் கோவிலுக்குள் ஒரு சர்ச்சைக் கட்டி வச்சுருக்காங்க 'ஆரம்பகால Coptic Christians.'  இவ்ளோ பரந்து விரிஞ்சுருக்கும் ஊருலே  சர்ச் கட்ட வேற இடமா கிடைக்கலை?  அப்போ இருந்தே  மற்ற மதங்களை விடத் தன் மதமே பெருசுன்ற 'ஒரு கெட்ட எண்ணம்'  இருந்துருக்கு பாருங்க.  இப்ப அந்த சர்ச் எங்கே போச்சு ?
ஹாஹா....  அந்த சர்ச்சுக்கு மேலேயே ஒரு மசூதி கட்டிட்டாங்க இஸ்லாம் பரவுன கால கட்டத்தில்  :-) ஸோ....சகிப்புத்தன்மை என்பது  அறவே கிடையாது, இல்லே? 1
க்ளிக்ஸ் முடிச்சுட்டுத் திரும்ப வெளிமுற்றத்துக்கு வந்தோம். இங்கே ஒரு சதுரத்தூண் இருக்கு பாருங்க.... இதுக்கொரு ஜோடி இருந்துருக்கு!
அதைப் பண்டமாற்று பண்ணிட்டார்  பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் (1805 - 1848) ஈஜிப்ட் நாட்டை ஆட்சி செஞ்சுக்கிட்டு இருந்த Muhammad Ali Pasha.  சுமார் இருபத்திமூணு மீட்டர் உயரம் உள்ள  சிகப்பு க்ரானைட் கல்லில்  செஞ்ச Obelisk இது.


சரி, இதை  யார்கிட்டேக் கொடுத்துட்டு, என்ன  பண்டம் பதிலுக்கு வாங்கினாராம்?

ஒரு கடிகாரத்தைத்தான். ஃப்ரான்ஸ் நாட்டோடு பண்டமாற்று. தூணைப் பெயர்த்தெடுத்துக் கொண்டுபோன பிறகு  கடிகாரம்  வந்து சேர்ந்துச்சு.  மணி என்னன்னு பார்க்கலாமுன்னா....  அது வேலையே செய்யலை.... பயணத்தில் பழுதாகிப் போச்சு. அப்படியும் விடாம இதுக்கொரு மணிக்கூண்டு  கோபுரம் கட்டி அதுலே வச்சுட்டாங்க.  இதை நாம்  கய்ரோ கோட்டையைப் பார்க்கப்போனோமே,  அப்போ அங்கே பார்த்தோம். (அப்ப இந்தக் கதை நமக்குத் தெரியாது, கேட்டோ !)
கண்களை விற்றுச் சித்திரம் வாங்கின கதை.... ப்ச்.... என்னவோ போங்க....

ஃப்ரான்ஸ் நாட்டுலே தூணை என்ன பண்ணாங்க ?

இருபத்திமூணு மீட்டரை வீட்டுக்குள்ளேயா வைக்க முடியும் ?  பாரீஸ் நகரச் சதுக்கத்தில் கொண்டு போய் நட்டு வச்சுட்டாங்க.  Luxor Obelisk in the Place de la Concorde, Paris.  இந்தக் கதையும் தெரியாமலேயே 1999 ஆம் வருஷம் நம்ம  யூரோப் பயணத்துலே பார்த்துட்டு வந்துருந்தோம். டிஜிட்டல் கேமெரா இல்லாத காலக்கட்டம் என்பதால்......  ஆல்பத்துலே இருக்கான்னு தேடணும்.... அதுவரை கூகுள் ஆண்டவர்அருளிச்செய்தது.... கீழே படம் :-)
லக்ஸர் கோவில் கார்பார்க் பக்கத்துலேயே இன்னொரு மசூதியும்  இருக்கு. நம்மூர் புள்ளையார் கோவில்கள் போலத்தான் மூலைக்கு மூலை மசூதிகள்  இந்த நாட்டில் !
இந்த லக்ஸர் கோவில்களைச் சுத்தியே நிறைய குடியிருப்புகள் வந்தாச்சு.  சந்நிதித் தெருக்கள் !

'ஐட்டிநரியில் இருந்த எல்லாம் பார்த்தாச்சு'ன்னு சொன்ன இதிஹாப், அடுத்து ஒரு குண்டைத் தூக்கிப்போட்டார்.... 'உங்களை ஏர்ப்போர்ட்டில் கொண்டு விடவா ?'

மணி என்னன்னு பார்த்தால் மத்யானம் மூணு இருபத்தியஞ்சு.   நம்ம  கய்ரோ ஃப்ளைட் எப்போ.....?     ராத்ரி பன்னெண்டு அடிக்கப் பத்து நிமிட் !

கிட்டத்தட்ட ஏழரை மணி நேரம்.... தேவுடு காக்கணுமா ?
கூப்பிடு அந்த டூர் டைரக்டர்,  அஹமத் மொஹமத் அஹமதுவை !

தொடரும்........... :-)



10 comments:

said...

பிரம்மாண்ட தூண்கள் பிரமிக்க வைக்கின்றன.

ஏர்போர்ட்ல விடவா? அதுவும் ஏழு மணி நேரம் காத்துக் கொண்டிருக்கும் அளவு! இது டூ மச்.:( சில சமயங்களில் இப்படி சொதப்பி விடுகிறார்கள் டூர் ஆபரேட்டர்கள்.

படங்கள் வழமை போல சிறப்பு.

தொடர்கிறேன்.

said...

இந்த பயண கட்டுரைகள் 51 பதிவு வந்தாச்சு...

நான் ரொம்ப லேட் மா...

இனி தொடர்ந்து வரணும்...

said...

அருமை நன்றி
சிறப்பு.

said...

அட...டா ..இருபத்தி மூன்று மீட்டர் பரீஸ் வந்து இருந்தது இப்படியா!

said...

நீங்கள் குறிப்பிட்ட தூணை நான் பாரீசில் பார்த்திருப்பதாக நினைவு. டிஜிடல் புகைப்படங்களில் தேடணும்.

மற்றபடி இன்றைய பதிவில் வந்த கோவில், எத்தனையோ இடங்களைப்போல இன்னொன்று என்றுதான் தோன்றியது.

நம்ம ஊர் பிள்ளையார் கோவில், முச்சந்தில வச்சிருப்பாங்க, அதைத்தவிரவும் கோவில். ஆனால் மசூதி என்பது, அவங்க 5 முறை கூடித் தொழுவதற்காக. வேலை பார்த்துக்கொண்டிருப்பவர்கள், பக்கத்திலேயே மசூதி இருந்தால் அங்குபோய்த்தான் தொழுவார்கள். வேறு வழியில்லை என்றால்தான் அதற்கென்று இருக்கும் ஆண்/பெண் அறைகளில் போய்த் தொழுவார்கள். அதனால்தான் இஸ்லாமிய நாடுகளில் ஏராளமான மசூதிகளைக் காண முடியும். கூடித் தொழும் இடம். அவ்ளோதான்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

ஒரு ரெண்டு இல்லை மூணு மணி நேரமுன்னாலும் கூட ஓரளவு சமாளிக்கலாம். இப்படி ஏழரைன்றது ரொம்பவே பேஜார் :-(

said...

வாங்க அனுப்ரேம்,

வலையில் இது ஒரு வசதி இல்லே? நேரம் கிடைக்கும்போது வாசிச்சால் ஆச்சு !

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க மாதேவி,

ஈயம் பித்தாளைக்குப் பேரீச்சம்பழம் :-)

said...

வாங்க நெல்லைத்தமிழன்.

அதுவுஞ்சரிதான் !