Monday, March 23, 2020

அன்பெனும் மழையிலே..... (பயணத்தொடர் 2020 பகுதி 30 )

ஸீ வியூன்னு கிடைச்ச  அறை இது. நேத்து வந்தவுடனே அவசரமாக்கிளம்பி லக்ஷ்மியை தரிசிக்கப்போனதால் வியூவைப் பார்க்க மறந்துட்டேன். காலையில் பார்த்தால்.... ரொம்ப கஷ்டப்பட்டு  அந்த ஸீயை ஸா. சூரியன் கிளம்பி வந்துட்டான்....



அக்கம்பக்கம் பார்த்தால் மாடித்தோட்டமெல்லாம் இருக்கு!  நெருங்கிய தோழியின் நினைவு வந்தது உண்மை !  ஸோலார் பேனல்ஸ் போட்டு வச்சுருக்காங்க  சில வீடுகளில். அடிக்கும் வெயிலுக்குப் பஞ்சமில்லைதானே !

குளிச்சு ரெடியானதும் முதலில் கோவிலுக்குப் போயிட்டு வந்துடலாமேன்னு போனோம்.  ரொம்பப் பொடிநடையில்  அஞ்சே நிமிட்.   ரொம்ப சுத்தமான அழகான கோவில் !  பெருமாள் ஸ்ரீ வரதராஜர், சொல்லமுடியாத அழகர் !   கோவிலைப்பற்றித் தனியா எழுதலை இப்போ. அப்போ எழுதுனது இங்கே.  கோவிலுக்கு வயசு எண்ணூறு !



பெருமாள் தரிசனம் அருமை. கருவறையைச் சுற்றி வரும்போது நூத்தியெட்டு திவ்யதேசப்பெருமாள்கள் தரிசனமும் அருமையே!



பிரகாரம் வலம் வர்றோம்.  வரதருக்குப் பின்னால் யோக நரசிம்ஹர் இருக்கார். தனி வாசல். அந்தாண்டை பொய்கை !
ஆண்டாள் சந்நிதியில் ' தூமணிமாடத்து' ஆனதும் வசந்தமண்டபம் பக்கம் வரும்போது மனசு திக் திக்குன்னு அடிச்சுக்கிச்சு. அந்தச் சித்திரங்கள் இருக்கோ இல்லையோன்னுதான்..... ஹப்பாடா..... இருந்ததைப் பார்த்ததும் தான் நிம்மதி ஆச்சு!
மனத்திருப்தியோடு அதிதிக்குத் திரும்பி வர்றோம்.  மணி எட்டாகப்போறது. வர்றவழியில்  ஒரு தையல்கடை.  ப்ளவுஸ்கள்  அழகாக இருக்கு. ஒரு ரெண்டுநாள் தங்கும்படியா அமைஞ்சால், மகளுக்கு ஒன்னு தைச்சு வாங்கிக்கலாம்.
ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுக்கலாமுன்னு போறோம். பஃபேதான்.  அதுலே ஒரு பக்கம் கூழ் வச்சுருக்காங்க.  கூல் !!!!  தொட்டுக்க  வறுத்த மோர் மிளகாய்.   ஆம்லெட் போடப் பொடியா நறுக்கின வெங்காயம் வச்சுருந்தாங்க. அதுலே இருந்து ஒரு ஸ்பூன் எடுத்துக்கிட்டேன்:-)  சம்ப்ரதாயமாக் கூழ் குடிக்கணும், இல்லே!

ஒன்பது மணிக்கு 'நம்மவர்'  ஆஃபீஸ் கிளம்பிப்போயிட்டார்.  ரெண்டு மணிக்குச் செக்கவுட் செஞ்சுக்கிட்டு நான் கிளம்பணும்.  முருகனோடு போய் அவரை ஆஃபீஸ்லே இருந்து பிக்கப் செஞ்சுக்கிட்டு நேராச் சென்னைன்னு ப்ளான்.

அதுவரை?

நம்மைச் சந்திக்கத் தோழிகள் வர்றாங்க. ஆஹா.....

தினம் தினம் ஃபேஸ்புக்கில் ரெண்டு மூணு படங்களோடு பயணத்தில் எங்கே இருக்கோமுன்னு  சொல்லிக்கிட்டு இருக்கேனில்லையா.... அதுலே  நல்லதும் இருக்கு.  லக்ஷ்மியின் படத்தைப் பார்த்துட்டு, 'பாண்டிச்சேரிக்கு வந்துருக்கீங்களா? எத்தனை நாள் இருப்பீங்கன்னு நேத்து இரவே சேதி அனுப்பினாங்க, நம் அண்டைநாட்டுத் தோழி !  ஒரு இரவுதான். நாளைக்குப் பகல் கிளம்பணுமுன்னு சொன்னேன். கட்டாயம் வந்து பார்க்கிறேன்னு பதில் சொன்னாங்க.
சொன்னாப்டியே ஒரு பதினொரு மணி வாக்கில்  'வந்துட்டேன்'னு சேதி வந்ததும் கீழே போனேன். கூட ஒரு நண்பரும் வந்துருந்தார். எங்களுக்குத்தான் முதல்முறை பார்க்கும் உணர்வு வரலைன்னா நண்பர் அதுக்குமேலே....  ரெண்டுபேரும் அம்மா அம்மான்னு கூப்பிட்டதும் மனசே நிறைஞ்சு போச்சு.
தோழின்னு சொல்றேனே தவிர என் மகளைவிடச் சின்ன வயசுதான்.  இன்னொரு மகள் கிடைச்சது போலவே மகிழ்ச்சி. இவுங்க ரெண்டுபேருமே பத்திரிகை ஆளுங்க. வெவ்வேற பத்திரிகைகள். தமிழ்தான்.

நண்பர், நம்ம துளசிதளத்தைப் பார்த்ததே இல்லையாம்.....  இனி பார்க்கப்போறார்னு நினைக்கிறேன். (இல்லைன்னாலும் இந்தப் பதிவைப் பார்த்துருவார். டேக் பண்ணிடமாட்டேனா என்ன? ஹாஹா )

பேச்சுவாக்கில் எங்கெ இருக்கீங்கன்னு விசாரிச்சதும் 'ஐயோ' வாயடைஞ்சு போச்சு எனக்கு. மூணு மணி நேரம் பயணம் செஞ்சு வந்துருக்காங்க. இப்ப நினைச்சாலும் என்னால் தாங்கவே முடியலை.   இதுவே,  இவ்ளோ தூரமுன்னா..... நான் போயிருப்பேனோ?  ஊஹூம்..... இந்த அன்பு கிடைக்க என்ன தவம் செஞ்சுருப்பேன், போனபிறவிகளில்?

எதுக்கு இவ்ளோதூரம் பயணப்பட்டு வரணுமுன்னு கடிஞ்சதுக்கு.... அந்த 'அண்டை நாட்டுலே' இருந்து எங்கூருக்கு வந்து சந்திக்கறதைவிட இது ரொம்பக் கிட்டே இல்லையோன்னு சிரிக்கறாங்க ! இப்பக் கொஞ்சநாளா இந்தியவாசம் அவுங்களுக்கு.

இன்னொரு பேஸ்புக் தோழியும், இன்பாக்ஸில் விவரம் எல்லாம் கேட்டுட்டு,  சந்திக்க வர்றதாச் சொன்னாங்க.

கொஞ்ச நேரத்துலே  இன்னொரு தோழியும் கணவரும்  வந்துட்டாங்க.  உள்ளூர் ஆட்கள்தான்.  அதிதிக்குப் பக்கம்தான் அவுங்க ஆஃபீஸே இருக்குன்னதும் நிம்மதி ஆச்சு. இன்னொரு மூணு மணின்னு சொல்லி இருந்தால் எனக்கு இதயமே நின்னு போயிருக்கும்!  காப்பாத்திட்டாங்க.
ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனதும் எங்க பேச்சுக்கச்சேரிக்குக் கேக்கணுமா?

அன்பெனும் மழையிலே  நனைஞ்சோம், எல்லோரும் !  இந்த அபூர்வ கணத்தை அனுபவிக்க 'நம்மவருக்கு'க் கொடுத்துவைக்கலை.....

மகள்தோழியின் அன்பளிப்பா ஒரு குட்டி புத்தர்.  உள்ளுர்த்தோழியின் அன்பளிப்பு அழகான ரோஜா ! கூடவே  இனிப்பும் காரமுமா !

திரும்ப மூணு மணி நேரப்பயணம் இருக்குன்னு கிளம்பிட்டாங்க 'மகளும், மகனும்'!

அடுத்த காமணியில் உள்ளூர்த்தோழியும், கணவரும்!
சட்னு வெறுமை சூழ்ந்தமாதிரி இருந்துச்சு..... 
ஒன்னரைமணியானப்ப, மூட்டை முடிச்சுகளைக் கட்டி வச்சுக்கிட்டு இருந்தேனா.... 'நம்மவர்'  திரும்பிட்டார். போன வேலை ஆச்சாம்.  முக்காவாசி வீடியோ கான்ஃபரன்ஸ், ட்ரெய்னிங்னு  நியூஸியில் இருந்து  வேலை நடந்துருதே, இப்பெல்லாம்.  இணையம் வந்தபின்  கிடைச்ச பல நல்லவைகளில் இதுவும் ஒன்னு, இல்லையோ!
தொழிலதிபர் நண்பர்,  அங்கே புதுசா ஒரு க்ரிக்கெட் ஸ்டேடியம் கட்டி இருக்கார். அதையும் விஸிட் பண்ணிட்டு வந்தாராம். ஒரு காலத்துலே நானும் க்ரிக்கெட் பைத்தியமாத்தான் இருந்தேன். அதிலும் ஊழல் வந்து, பைத்தியத்துக்கு வைத்தியம் பார்த்தமாதிரி தெளிய  வச்சுருச்சு....


 ஒன்னே முக்கால் போல செக்கவுட் செஞ்சுட்டுக் கிளம்பி நேரா அடையார் ஆனந்தபவன்தான்.  கோவில் பக்கம் போகலை. நடை சாத்தி இருக்கும் நேரம்.   எனக்குக் கொழுக்கட்டை  உப்பும் இனிப்புமா கிடைச்சது. மூணு பேருமா சாப்பிட்டு முடிச்சுட்டு ரெண்டே முக்காலுக்குப் பாண்டியை விட்டாச்சு !

தொடரும்........ :-)

8 comments:

said...

இனிய பயணம்.

சந்திப்புகள் தொடரட்டும். பயணம் போகும் இடத்தில் இந்த மாதிரி சந்திப்புகள் அமைவதும் வரம்.

பாண்டியில் என்னுடைய சில நட்புகளும் உண்டு.

said...

/கூழ் கூல்/ படிச்சதும் சிரிச்சிட்டேன். வெகுவாக ரசித்தேன்.

பேச்சு நடையில் அனுபவத்தை விவரித்திருப்பது வாசிப்பு அனுபவத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக நீங்களே நேரில் பேசியது போன்ற உணர்வை வெளிப்படுத்துகிறது.

அன்பு கொண்ட நெஞ்சங்கள் அருகிலிருந்தாலென்ன! தொலைவில் இருந்தாலென்ன! எண்ணம் ஒன்றெனில் தொலைவு ஒரு பொருட்டல்ல.

இதன் தொடர்ச்சியாக எகிப்து குறித்து எழுத தயாராய் இருப்பீர்கள். நானும் வாசிக்கத் தயாராய் இருக்கிறேன். எனக்குப் பிடித்த "கிளியோபாட்ரா" குறித்து நீங்கள் எழுதும் குறிப்புகளை படிக்க ஆர்வமாக உள்ளேன்.

உங்களை சந்தித்ததும் பேசியதும் உங்கள் ஆசிர்வாதம் கிடைக்கப் பெற்றதும் என்னுடைய அதிர்ஷ்டம் அல்லாது வேறில்லை.

said...

அருமை நன்றி

said...

நண்பர்கள் சந்திப்புடன் கூழ்,கொழுக்கட்டையும் வயிற்றை நிறைந்தது.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

நண்பர்கள் சந்திப்பு.... மனசுக்குத் தரும் உற்சாகத்தைச் சொல்ல வார்த்தைகளே இல்லையே!

said...

வாங்க சுந்தரபாண்டியன் ராஜா,

ஆரம்பத்தில் பலநடைகளில் எழுதிப்பார்த்து, என் நடை இதுதான்னு தெரிஞ்சுக்கிட்டு அதுலேயே நிக்கறேன். பேச்சு நடை, வாசகர்கள் மனசுக்குப் பக்கம் நிக்குதே!

க்ளியோபாட்ரா..... ஆரம்பிச்சாச்சு.... பார்த்துட்டுச் சொல்லுங்க....

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க மாதேவி,

வயிறும் கூடவே மனமும்தான்!