Friday, March 20, 2020

கொலுசு போட்ட கால்கள் ! (பயணத்தொடர் 2020 பகுதி 29 )

கடலூரைத் தாண்டுமுன், முருகனை ஒரு சின்ன டீ ப்ரேக் எடுக்கச் சொன்னார் 'நம்மவர்'.  நல்ல வெயிலில் அப்படியே கண்ணைக் கட்டிக்கிட்டே வருதே நமக்கும். முருகன் வரும்வரை வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருந்தால் நெல்லிக்காய் கண்ணில் பட்டது.  கொஞ்சமா வாங்கினோம்.  டேஷுக்கு நல்லதுன்னு எனக்கு நினைப்பு.  கடைசியில்  ஒன்னு கூட முழுசாத் தின்னலை....  நெல்லிக்காயைவிட  எலுமிச்சம்பழம் பெஸ்ட் இல்லையோ....  கைவசம்  நேத்து மாரியம்மன் கொடுத்த ரெண்டு பழங்கள் இருந்தும்....  தோணலையே.....

டூவீலரில் மூணுபேர் எட்டுக்கால்களோடு போய்க்கிட்டு இருந்தாங்க.
இதோ பாண்டிச்சேரி எல்லைக்குள் புகுந்தாச்சு.   மாநிலத்துக்குள் போக பெர்மிட் வாங்கிக்கணும்.  ஆச்சு.  எல்லாம் சரியாக இருந்தாலும் நூறு லஞ்சம்.....
அதிதியில் செக்கின் ஆச்சு.  எப்பவும் இங்கேதான்.  ஒரே ஒருமுறை இடம் கிடைக்கலைன்னு ஷெண்பகாவில் தங்கினோம்.  இந்த ஊரில் எனக்கு லக்ஷ்மியைச் சந்திக்கணும்.  'நம்மவருக்கு'  ஒரு ஃபேக்டரி  விஸிட்.  தொழில்நுட்ப ஆலோசகரா இருக்கார்.
கொஞ்சம் ஃப்ரெஷப் பண்ணிக்கிட்டுக் கோவிலுக்குப் போனோம்.  இன்றைக்குப் பிரதோஷமாம்.  கோவிலில் நல்ல கூட்டம்.  ஆனால் அதைப்போல டபுள் கூட்டம் லக்ஷ்மிக்கு முன்னால்.  பாவம் குழந்தை....  வாங்கிக் கொடுத்து,  ஆசிகள் வழங்கின்னு பயங்கர பிஸி. சோர்வில்லாத உழைப்பு.  பாகர், அவர்பாட்டுக்குப் பேச்சுக்கச்சேரியில் இருக்கார்.
அனிச்சையாக் கைக்குக் கை மாறி வருவதை எடுத்துக்கறார்.
அப்பாவி லக்ஷ்மி ! கூட்டத்தைப் பார்த்து அவளுக்கும் பிடிச்சிப்போச்சு போல.....    காசு கொடுத்தவங்களை ஆசிர்வதிக்கும் கையோடு அக்கம்பக்கம் இருக்கறவங்களுக்கும்  இலவச ஆசிகள் வழங்கிக்கிட்டு இருக்காள்.
அப்பப்ப சின்ன  ஸ்நாக்ஸ்.....  வாயில் போட்டுக்கறாள்.



கோவிலுக்குள் போய் ஸ்ரீமணக்குள விநாயகரை தரிசனம் செஞ்சுட்டு, அடுத்த மண்டபத்தில் கொஞ்சநேரம் உக்கார்ந்துருந்தோம்.  கேஸரி ப்ரஸாதம் ஒருத்தர் வீட்டில் இருந்து கொண்டுவந்து விளம்பினார். அங்கங்கே சனம்,  இப்படித் தனிப்பட்ட வகைகளில் சுண்டல், சக்கரைப்பொங்கல்னு  கொண்டு வந்து இங்கே விளம்பிக்கிட்டு இருக்கு. 
திரும்ப லக்ஷ்மியாண்டை வந்து சிலபல க்ளிக்ஸ் முடிச்சுட்டுக் கோவில்கடைகளை வேடிக்கை பார்த்தேன். ஒரு புள்ளையார்  நமக்காகக் காத்திருந்தார். நியூஸிக்கு வரணுமாம்.

அடுத்துப்போனது கடற்கரைக்கு. நல்ல குளிர்ந்த காற்று,  தலைசுத்தலுக்கு நல்லது! இந்த பீச் ரோடை, மாலை ஆறு முதல் மறுநாள் காலை ஏழரைவரை  போக்குவரத்து இல்லாமல்  வச்சுடறாங்க. சனம்  நிம்மதியா இஙேயும் அங்கேயுமா சாலையைக் கடந்து போய் வரலாம்.  ரொம்ப நல்ல விஷயம்.


கடற்கரைக்கு எதுத்தாப்ல ஒரு பார்க் இருக்கு.  பலமுறை அதைக் கடந்து வந்துருக்கோம், உள்ளே போனதே இல்லை....  இன்றைக்குப் போயாச்.   சின்னத்தோட்டம். நடுவிலே ஒரு சிலை வச்சுருக்காங்க. எம் என் செல்வராட்ஜ் செட்டியார் .... அந்த 'ட்' எதுக்குன்னு தெரியலையே... 

இவரைப்பற்றிய விவரம் எதாவது கிடைக்குமான்னு கூகுளிச்சால்.....  சரியா ஒன்னும் ஆப்டலை.  ஆனால் அப்போ அந்தக்காலப் பாண்டிச்சேரியில்  வெள்ளையர், தமிழர்கள்னு  தனித்தனி இடங்கள் இருந்துக்குன்னும் ( White Town, Black Town ) ரெண்டு பகுதிகளுக்கும் இடையில்  ஒரு வாய்க்கால் / கால்வாய்  ( Grand Canal )  இருந்துருந்ததுன்னும்  தெரிஞ்சது.  இப்பவும் இருக்கா என்ன?

கடற்கரையில் இருந்து ரெண்டு தெரு தள்ளித்தான் வண்டியை நிறுத்தணும் என்றதால்  நடந்து போறோம்.  வழியில் சிலபல தீனிக்கடைகள். தள்ளுவண்டியில் வெள்ளரிக்காய் பார்த்து வாங்கினோம். அதான் நம்மாண்டை 'தோல்சீவி' இருக்கே!  தள்ளுவண்டிக்காரர், முழுசாத்தர முதலில் சம்மதிக்கலை. சீவி, பத்தை போட்டுத்தரேன்னு சொன்னார். அப்படிச் செஞ்சால்  கூடுதல்  காசுக்கு விற்கலாம். நாமும் கூடுதலாத் தர்றோமுன்னு சொல்லி வாங்கினோம்.  ரெண்டு வெள்ளரிக்காய்க்கு   மார்கெட் தேடிப்போகச் சோம்பல்தான்.... 

அதிதிக்குத் திரும்பினோம். ராச்சாப்பாடு ரூம் சர்வீஸ்தான். கூடவே  நம்ம வெள்ளரிக்காய் :-)
இங்கேயும் தங்கல் ஓரிரவுதான் !

தொடரும்........... :-)

10 comments:

said...

டேஷுக்கு பெஸ்ட் உப்பு நாரத்தை இல்லைனா கொஞ்சம் உப்பு சேர்த்த இஞ்சி.

கோவில்களில் யானையைக் கட்டிப்போட்டு, பக்தர்கள் தங்கள் பாவம் தீர கண்ட உணவு எல்லாம் அளவுக்கதிகமாக யானைக்குக் கொடுத்து யானையை சீக்காளியாக்குவதும், யானையை ஆசீர்வாதம் செய்யச் சொல்லிப் படுத்துவதும் பாவம் இல்லையோ?

said...

அருமை நன்றி

said...

அப்பாவி லக்ஷ்மி ! ..அழகு

ஆடும் பிள்ளையார்... வாவ் வாவ்

said...

வர்ண நர்த்தன விநாயகர் அழகு.
'இலவச ஆசிகள் வழங்கினாள் ' அய்யோ பாவம் என்னவென்று சொல்வது.

said...

இனிய பயணம் = தொடரட்டும்.

டேஷ் - கஷ்டம் தான்.

லக்ஷ்மி - பாவம் தான் அவளும்! தொடர்ந்து ஆசி வழங்குவதும் கடினம் தான்!

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

இந்தியப் பயணத்தில் இனி உப்பு நார்த்தங்காய் கையில் வச்சுக்கணும்தான்.

யானை.... ரொம்பவே பாவம். கோவில்களில் யானை தேவையே இல்லை இந்தக் காலத்தில். அப்படி கட்டாயம் இருக்கணுமுன்னால்... ரெண்டு யானைகளா இருக்கணும்.

இப்படிப் பழக்கப்படுத்திட்ட யானைகளைக் காட்டில் கொண்டுபோய் விட்டால் அதால் ஜீவிக்க முடியாது... ப்ச்....

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க அனுப்ரேம்,

லக்ஷ்மி ரொம்பவே அப்பாவிப்பா.... செல்லம்.... சூதுவாது தெரிஞ்சுவச்சுக்க அது மனுஷனா ?

said...

வாங்க மாதேவி,

தூக்கின கையை இறக்குமுன் அக்கம்பக்கம் ஆசி கொடுத்தால் என்ன தப்பு என்கிறாளே !
பாவம்.... குழந்தை ..

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

பாவம்தான் லக்ஷ்மி. இங்கே வந்து நிக்கும் நேரத்தைக் குறைக்கலாம். ஆனால் வருமானம் வர்றதைப் பாகர் விடமாட்டாரே....