Monday, March 16, 2020

தலைவர் பெயர் அவ்வளவா யாருக்கும் தெரியாது.... தலைவிதான் ரொம்பவே முக்கியம் ! (பயணத்தொடர் 2020 பகுதி 27 )

சண்டிகர் வாழ்க்கையில் நம்ம டென்டிஸ்ட்கிட்டே பல்லைக் காமிக்கப்போன ஒரு சமயம்,  திடீர்னு 'கர்ப்ரக்ஷக்  மந்திர்  கஹா ஹை'ன்னு கேட்டாங்க.  கும்பகோணம் பக்கத்துலேதான் இருக்குன்னு தெரியும் என்றாலும், நாம்  இதுவரைஅங்கே போகலைன்னு சொன்னேன். நம்மூர் கோவிலை விசாரிக்கறாங்களே.... சங்கதி என்னன்னு கேட்டால்....   குழந்தைக்காக வேண்டிக்கிட்டேன்.  அதான் போய் வரணும்னு சொன்னாங்க.  அட! ன்னு இருந்துச்சு.  கோவிலைப்பத்தி ஒன்னுமே தெரியாத நிலையில், யாரோ சொன்னாங்கன்னு வேண்டிக்கிட்டு,   பேபி பவ்யா....வீட்டை அதகளப்படுத்திக்கிட்டு இருந்தாள் அப்போ! ஆச்சு  பத்து வருஷம்...(வீடும், க்ளினிக்கும் ஒரே கட்டிடம்தான்)
அதுக்கப்புறம் பலமுறை கும்பகோணம் போய் வந்தாலும்,  கருக்காத்தவளைத் தரிசிக்கும் வாய்ப்பு அமையலை.  இதோ இன்றைக்கு நாம் அந்தக் கோவிலுக்குப் போறோம்.  புன்னைநல்லூர் மாரியம்மனிடமிருந்து ஒரு இருபது கிமீதூரம்தான். போறவழியெல்லாம்  விவசாயம் நடக்குது. பச்சைப்பசேல்னு இருக்கும் வயல்வெளிகளைப் பார்க்கும்போது மனசு ஜில்லுன்னு இருக்குதான் !

ஒரு அரைமணி நேரப்பயணத்தில் சாலியமங்கலம் வழியா திருக்கருகாவூர் வந்துருந்தோம்.  நாம் கோவில் வளாகத்துக்குள் நுழைஞ்சது தெற்குவாசல் வழியாக.

கிழக்குப் பார்த்தக் கோவிலும் ராஜ கோபுரமுமா இருக்குன்னாலும், கிழக்கில் கோவில் திருக்குளம் இடம் பிடிச்சுருக்கு! திருக்குளத்துக்கு க்ஷீரகுண்டம் என்ற பெயர்.  பாற்குளம். சாக்ஷாத் காமதேனுவே, தன் குளம்பினால் நிலத்தைக்கீறி உண்டாக்கியது என்ற பெருமைக்குரியது. நீராழி மண்டபத்தில் அம்மன்!

வளாகத்தில் ஒரு சின்ன தேர் இருக்கு.  திருக்குளத்துக்கு நேரெதிரா கோவிலின் கோபுரவாசல்.
ராஜகோபுரத்தைத்தான் முழுசாப் பார்க்க முடியலை. முன்மண்டபம் மறைக்குது.  வாசலாண்டையே   புள்ளையார்   இருக்கார்.   இவர் வெங்கடாஜலவிநாயகர்!!!
கோபுரவாசலைக் கடந்து உள்ளே போனதும்... நீண்டு போகும்  மண்டபத்துக்கந்தாண்டை உள்ப்ரகாரத்தில் ஸ்ரீ முல்லைவனநாதர் சந்நிதி !  பலிபீடம், கொடிமரம், முன் மண்டபம், அர்த்தமண்டபம், நவக்ரகம், நடராஜர், மூலவர் சந்நிதின்னு  பெரிய  அளவிலான கோவில்தான். 

வாசலுக்கு முன்னால் பள்ளத்தில் ரெண்டு நந்திகள் !   இதுலே ஒன்னு சுயம்பு !

முல்லைக்கொடிகள் அடர்ந்து வளர்ந்துருந்த வனத்தில் புத்து உருவில் இருந்துருக்கார்.  அதனால் முல்லைவனநாதர் என்ற பெயர் வந்துருக்கு.  முல்லைக்கு இன்னொரு பெயர் இருக்கு, தெரியுமோ?  மாதவி !  (மாதவிப்பந்தல் என்ற வலைப்பதிவின்  உரிமையாளர் ஞாபகம் வந்தது உண்மை ! )
மூலவர் முல்லைவனநாதரை வணங்கிட்டு, அம்பாள் சந்நிதிக்குப் போறோம்.  தனிக்கோவிலாகவே   இருக்கு!
முகப்பு வாசலில் நுழைஞ்சு  நீண்டு போகும்  மண்டபத்தில் வரும்போது, நமக்கு வலப்புறம் பிரிந்துபோகும் இன்னொரு நீள மண்டபத்தில்  போனால்,  நமக்கிடப்புறம் முன்மண்டபத்தோடு  இருக்கும் அம்பாள் சந்நிதிக்குள்  போகலாம்.
கருக்காக்கும் நாயகி, கர்பரட்சாம்பாள்.

அம்மன்  சந்நிதிக்குப் போகும்போது இடையில்  முருகனுக்கு ஒரு தனி சந்நிதி இருக்கு. ஐயனுக்கும் அம்மைக்கும் நடுவில் சோமாஸ்கந்தர் போல்  இந்தth  தனி சந்நிதியில் ஆறுமுகன், வள்ளி தெய்வானையோடு !
இந்தப்பகுதி முழுசும் முல்லைக்காடா இருந்த காலத்தில் நிறைய முனிவர்கள்  இங்கே இருந்து தவம் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. அவர்களில் கௌதமர், கார்கேயர் என்ற ரெண்டு முனிவர்களுக்கும் நித்துருவர் என்பவர், தன் மனையாள் வேதிகையுடன் பணிவிடை செஞ்சுவந்தார்.  அவுங்களுக்குக் குழந்தைச் செல்வம் வாய்க்கலை.  தங்கள் மனக்கவலையை மேற்படி முனிவர்களிடம் சொல்றாங்க.   அவுங்களும்  முல்லைவனநாதரையும் அம்பாளையும்  கும்பிடுங்க, உங்க மனக்குறை தீரும் என்றதும் அப்படியே ஆச்சு.
வேதிகை கர்ப்பிணியா இருந்த  காலத்தில்,  வருணலோகத்தில் நடக்கும் ஒரு யாகத்துக்கு நித்துருவர் போக வேண்டியதாச்சு. வீட்டில் வேதிகை தனியா இருக்காங்க. புள்ளைத்தாய்ச்சி....உடம்புவேற கொஞ்சம் சரியில்லை. களைச்சுப்போய்க் கண்ணை மூடிப் படுத்துட்டாங்க.

 அப்போ பார்த்து, ஊர்த்துவபாத முனிவர் அங்கே வர்றார்.
வாசலில் நின்னு பிக்ஷை கேக்கறார். அரை மயக்கத்தில் இருந்த வேதிகையால் சட்னு எழுந்துவர முடியலை.  வெளியே காத்திருந்த முனிவருக்குச் சுர்னு கோபம் வந்துருச்சு.

  (என்ன முனிவர்களோ? ஐம்புலன்களையும் அடக்கி  தவம் செய்யும் முனிவர்களுக்குக் கோபத்தை அடக்க முடியலையே.... எல்லாத்தையும் 'கொக்கு'ன்னு நினைச்சால் எப்படி ? ப்ச் )

தவவலிமை எதுக்கு இருக்குன்னு சாபம் கொடுத்துடறார்.  அவ்ளோதான்.... வேதிகையின்  வயிற்றில் இருந்த கரு, முற்றிலும் வளராத நிலையிலும் கூட வெளியே தள்ளப்படுது.... தாய்க்கு எப்படி இருக்கும்? முல்லைவனநாதரையும், அம்பாளையும் நினைச்சு  வேண்டறாங்க....   தங்களுடைய அனுகிரஹத்தால் உண்டான கர்ப்பத்தைக் காப்பாத்த வேண்டி, அம்பாள் ஒரு தெய்வீகமான குடத்தில் அந்தக் கருவை வைத்துக் காப்பாத்திக் குழந்தையாக் கொடுத்ததும் ,  தன் கருவைக் காத்த அம்பாள், இங்கேயே இருந்து  மற்ற பெண்களின்  கர்ப்பத்தைக் காப்பாத்திக்கொடுக்கணுமுன்னு வேண்டிக்கறாங்க வேதிகை.  அப்படியே ஆகட்டுமுன்னு அம்பாள் இங்கேயே கோவில் கொண்டாள்.


மேற்படி சம்பவங்களை எல்லாம்   அம்மன் சந்நிதி மண்டபத்தில் வரைஞ்சு வச்சுருக்காங்க.

அப்போ இருந்துதான் கருக்காத்தநாயகி, கர்பத்தை ரக்ஷித்துக் காப்பாத்துன கர்பரக்ஷாம்பிகை என்றெல்லாம் பெயர்  ஏற்பட்டுப்போச்சு.

குடத்தில் உருவான குழந்தைக்குத் தாய்ப்பால்  கிடைக்க வழி இல்லையேன்னு,  காமதேனுவை வேண்ட,  தன் குளம்பால் நிலத்தைக்கீறி பாற்குளம் உண்டாக்கித் தந்துருக்கு  காமதேனு.   இந்தக்குளம் தான்  ராஜகோபுரத்துக்கு முன்பக்கம் இருக்கும் க்ஷீரகுண்டம்.

குழந்தை இல்லாத குறையை ஏதோ பெரும்பாவம் என்றதுபோல் சமூகம் நினைச்சுக்கிட்டுக் குறிப்பாக  பெண்களை எவ்ளோ மன அழுத்தத்துக்குத் தள்ளி விடறாங்கன்னு உங்களுக்குத் தெரியும்தானே?  குறை ஆணிடத்திலும் இருக்கலாம் என்ற புரிதல் இல்லாமல் எப்பவும் பெண்ணையே குறை சொல்லிக்கிட்டு இருந்த காலம் .....  ப்ச்..

வேதிகையின் வேண்டுகோள் ரொம்ப நல்லதாப் போயிருக்கு!  குழந்தைவரம்  வேண்டி , அம்பாளிடம் வேண்டுதல் வச்சால்  கண்டிப்பாகக் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையில்  மக்களிடையே இப்போ ரொம்பவே பிரபலமான கோவிலா இருக்கு!  இல்லாமலா... எங்கோ வடக்கிலிருக்கும் நம்ம டென்டிஸ்ட், வேண்டுதல் வச்சு, அது நிறைவேறவும்  செய்தது !  என்ன ஒன்னு..... அம்பாளை மனசார  நம்பணும். நம்பினால்தான் சாமி.
அம்பாள் தரிசனம் ரொம்ப நல்லபடியாக் கிடைச்சது. தனியா ஒரு துலாபாரம் , இங்கே  உள்மண்டபத்தில் வச்சுருக்காங்க. வேண்டுதல் நிறைவேறின சந்தோஷத்தில்  குழந்தையின் எடைக்கு எடை, நெய், வெல்லம்  போன்ற பொருட்களைக் காணிக்கையா செலுத்தறாங்க மக்கள்.
சுத்தமான நெய்யால் என்ன செய்யணும் என்றெல்லாம் நாம்  ராஜகோபுர வாசல் வழியாக் கோவிலுக்குள் நுழையும்போதே  மண்டபத்தில் அங்கங்கே விவரங்கள் கொடுத்துருக்காங்க.

குழந்தை பிறந்தவுடன்,  அம்பாள் சந்நிதியில் ஒரு வழிபாடு செஞ்சு, தங்கத்தொட்டிலில் போட்டு கருவறையை வலம் வரலாம். இதுக்கு ஒரு குறிப்பிட்ட கட்டணம்  செலுத்தவேணும். அதிகம் இல்லை, கேட்டோ ! குழந்தை பிறந்தவுடனே கொண்டு வரணும் என்ற நிர்பந்தமெல்லாம் இல்லை.  கொஞ்சம் வளர்ந்த குழந்தையாக  ஆனபிறகுகூட வரலாம். நாம் அங்கே இருக்கும்போது , தங்கத்தொட்டிலில் ஒரு குழந்தை வலம் வர்றதைப் பார்த்தோம். பெற்றோர் அனுமதியுடன் க்ளிக்ஸ் ஆச்சு!


கோவிலின் தலவிருட்சம் அந்த மாதவி அல்லாது வேறு எது?  பக்கத்திலேயே ஒரு தீர்த்தக்கிணறு இருக்கு. திருமஞ்சனக் கிணறுன்னாங்க. ஈஸனுக்கு இங்கே அபிஷேகம் கிடையாது.  புத்துருவில் இருக்காரே!   அதனால் புனுகுச்சட்டம் சார்த்தறாங்க. வெளியில் இருந்து வாங்கிவரும் புனுகு அனுமதிக்கப்படாதாம்.  அதுக்குன்னு ஒரு கட்டணம் கட்டுனோமுன்னால்.... கோவிலே தங்கள் வசம் இருக்கும் புனுகு சார்த்துவாங்களாம்.





கோவிலில் சின்னச்சின்னதா ஏகப்பட்ட சந்நிதிகள். ஒரு பள்ளத்தில் ரெண்டு நந்திகள். ரெட்டை நந்திகளைச் சுத்திச் செங்கல் சுவர் எழுப்பி இருக்காங்க. ஏன்னு தெரியலை.... இதுலே ஒரு நந்தி சுயம்பு. இங்கே இருக்கும் ஒரு புள்ளையாரும்  சுயம்புதானாம். ஸ்தல கற்பக விநாயகர். ஸ்வாமி சந்நிதி அர்த்த மண்டபத்தில் இருக்கார்.
கோஷ்டத்தில்   வழக்கமா லிங்கோத்பவர் இருக்குமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் ! கோஷ்டத்தின் மேற்பகுதியில் நம்ம யானை !



துவார பாலகர்கள் போல துவார விநாயகர், துவார ஸ்கந்தர் !


கோவில் எப்போ கட்டுனாங்க என்ற 'சரித்திர' விபரங்கள் ஒன்னும் கிடைக்கலை. இது பாடல் பெற்ற தலம் என்பதால் ரொம்பப் பழைமையான கோவில் என்பதே உண்மை. ஸ்கந்தபுராணத்தில் க்ஷேத்ரவைபவக் காண்டத்தில் சனத்குமார சங்கிதையில் இந்தக் கோவிலைக் குறிப்பிட்டு இருக்காங்கன்னு கோவில் தலவரலாறு புத்தகத்தில்  இருக்கு.
கோவிலுக்கு  வயசு ரெண்டாயிரமுன்னு சொன்னாங்க. இங்கே இருக்கும் கல்வெட்டுகள் முதல் பராந்தகசோழன் (கி.பி. 907 - 953)முதலாம் ராஜராஜன்  ( 985–1014) காலத்து சமாச்சாரம்  என்பது கூடுதல் தகவல்கள். இதுவரை முப்பத்தியொரு கல்வெட்டுகளுக்குப்  படி எடுத்திருப்பதாகக் கோவில் தலவரலாறு விளக்கத்துடன் சொல்லுது.

ப்ரம்மனும், சந்திரனும், இன்னும் பல தேவர்களும்,   இங்கே வந்து மாதவிவனேஸ்வரர் என்ற முல்லைவனநாதரை பூஜித்து, சாபவிமோசனமும் பெற்றுத் திரும்பியிருக்காங்க.   முனிவர்களும், தபஸ்விகளும் நிறைஞ்ச  முல்லைவனமா இருந்த  இடம் இது.  கௌதமமுனிவர்,  மற்ற முனிவர்களின் சூழ்ச்சியில் அகப்பட்டு, பசுவதை செஞ்சதாக வீண்பழி சுமத்தப்பட்டார்.  இங்கே வந்து  ஒரு சிவலிங்கத்தை வச்சுப் பூஜை செய்து, அந்தப் பழியில் இருந்து மீண்டாராம்.  இவர் பூஜித்த சிவன், இங்கெ கௌதமேஸ்வரர் என்ற பெயரில் தனிச்சந்நிதியில் இருக்கார்.ச்வ்      ச்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்ட்ஃப் (நம்ம ரஜ்ஜுவுக்கும் பதிவு எழுதணுமாம்!)

பஞ்ச ஆரண்ய க்ஷேத்ரங்களில் இந்தத் திருகருகாவூரும் ஒன்னு. திருக்கருகாவூர், அவளிவநல்லூர், அரித்வாரமங்கலம், ஆலங்குடி, திருக்கொள்ளம்புதூர்னு  இந்த ஐந்து தலங்களையும் ஒரே நாளில் தரிசிக்கணும் என்றெல்லாம்  கண்டிஷன்ஸ் இருக்கு. அப்பதான் மோட்சம் ! நல்ல வேளையா தரிசன சமயங்கள் உஷத் காலம், காலை சந்தி, உச்சிகாலம், சாயரக்ஷை, அர்த்தஜாமம்னு வெவ்வேறாக் கொடுத்துருக்காங்க. எல்லாம் ஒரு முப்பத்தியஞ்சு கிலோ மீட்டருக்குள்ளில்தான்.

காலை அஞ்சரைக்கெல்லாம்  கோவில் திறந்துடறாங்க உஷத் கால பூஜையில்  ஆரம்பிக்கணுமே!  பகல் பனிரெண்டு வரையிலும், மாலை மூணுமுதல் எட்டுவரையிலும் நடை திறந்து வைக்கிறாங்க.

கோவிலின் சொத்துக்களா நஞ்சையில் 65.61 ஏக்கரும், புஞ்சையில் 22.99 ஏக்கரும், மற்றும் சில மனைக்கட்டுகளும் இருக்காம்!   விளைச்சலில் யாரும் ஆட்டையைப் போடாமல் இருக்கணும், சாமி.  சிவன் சொத்து குலநாசம் இல்லையோ? கோவில் தமிழக அரசின் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கு.
இங்கே பொதுவா எல்லா வழிபாடு/நேர்ச்சைகளும்  ஆன்லைனில் நடத்திக்க ஏற்பாடு செஞ்சுருக்காங்க. வெளியூர் பக்தர்களுக்கு வசதியாக இருக்கு.  ஆனால் எல்லாம் உள்நாட்டு பக்தர்களுக்கு மட்டுமே. வெளிநாட்டு மக்களுக்கு இன்னும்  இந்த வசதி (நெய், எண்ணெய் போன்ற ப்ரஸாதம் அனுப்பிக் கொடுப்பது) எல்லாம் நீட்டிக்கப்படலை.

காலத்துக்கேத்தபடி அம்பாள்  வெப்ஸைட் கூட வச்சுருக்காள் !

தரிசனம் நல்லபடியாக் கிடைச்சது மனசுக்குத் திருப்தியா இருந்தது.

வாங்க,  வந்த நோக்கம் முடிஞ்சது. கிளம்பலாம். இனி நேரா கும்மோணம் ராயாஸ் க்ராண்ட்தான் ! இருபது கிமீக்கும் கொஞ்சம் குறைவு.

தொடரும்.... :-)


13 comments:

said...

அருமை நன்றி

said...

தலவரலாறு தெரிந்து கொண்டோம்.
அம்மா இவ்வளவு வரலாறுகள் எழுத பார்துக்கொண்டு இருக்க முடியுமா ரஜ்ஜூ :))பதிவு எழுதுவதில் மகிழ்ச்சி.

said...

முல்லைவனநாதர் கர்ப்பரட்சாம்பிகை கோவில் உலா மிக நன்று..... தொடர்கிறேன்.

said...

குழந்தை பிறந்தவுடன், அம்பாள் சந்நிதியில் ஒரு வழிபாடு செஞ்சு, தங்கத்தொட்டிலில் போட்டு கருவறையை வலம் வரலாம். இதுக்கு ஒரு குறிப்பிட்ட கட்டணம் செலுத்தவேணும். அதிகம் இல்லை, கேட்டோ ! குழந்தை பிறந்தவுடனே கொண்டு வரணும் என்ற நிர்பந்தமெல்லாம் இல்லை. கொஞ்சம் வளர்ந்த குழந்தையாக ஆனபிறகுகூட வரலாம். நாம் அங்கே இருக்கும்போது , தங்கத்தொட்டிலில் ஒரு குழந்தை வலம் வர்றதைப் பார்த்தோம். பெற்றோர் அனுமதியுடன் க்ளிக்ஸ் ஆச்சுஎங்கள் இரண்டாம் பேரனுக்கும் தங்கத்தொட்டில் ஊர்வலம் இருந்தது !

said...

ஸ்ரீ முல்லைவனநாதர் அழகான திருநாமம் ...

கருக்காக்கும் நாயகி... அருமையான தகவல்களுடன் சிறப்பான தரிசனம் கிடைத்தது மா ...

said...

எங்கள் பயணத்தில் நாங்களும் இக்கோவிலுக்குச் சென்று வந்தோம். அழகான கோவில்.

உங்கள் மூலம் மீண்டும் ஒரு முறை தரிசனம்.

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க மாதேவி,

உண்மையான ஹெல்ப்பரா மாறிக்கிட்டு இருக்கான் நம்ம ரஜ்ஜூ :-)

said...

வாங்க நெல்லைத் தமிழன்,

நன்றி !

said...

வாங்க ஜிஎம்பி ஐயா!

தங்கத்தொட்டில் அருமையான ஏற்பாடுதான் ! பெற்றோருக்கும் மனநிறைவு தருதே!

said...

வாங்க அனுப்ரேம்,

உண்மையில் சிவன்கோவில்களில் அம்மன் பெயர்கள் தூயதமிழில் அழகாக இருக்குப்பா !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

குடும்பமாப் போறதுதான் எவ்ளோ மகிழ்ச்சி !

said...

7 ம் நூற்றாண்டு சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. ஆதாரம்: தெய்வீகம் இணையதளம்