Wednesday, March 11, 2020

அம்மன் வந்து இறங்குனது ஆஞ்சி வீட்டில் ! ( பயணத்தொடர் 2020 பகுதி 25 )

சின்னக்குழந்தைக்கு அம்மை போட்டுருக்கு என்பதால்   ஒரு சின்ன பல்லக்கில் நிறைய வேப்பிலைகளைப்போட்டுக் குழந்தையைப் படுக்கவச்சுத் தூக்கிக்கிட்டுப் போறாங்க. பல்லக்கை எட்டிப் பார்த்தால், துணி சுத்திக் கிடத்தியிருக்கும் குழந்தை முகமெல்லாம் கருத்துக்கிடக்கு.   அப்பெல்லாம் அம்மை நோய்ன்னு சொன்னாலே சனங்களுக்கு பயம்தான்.

காஞ்சிபுரத்தில் இருந்து கிளம்புன குழந்தை  நாகூர், சிக்கல், உடையார்பாளையம், திருவாரூர் வழியா  தஞ்சாவூருக்கு வருது.  அப்ப இந்தப்பகுதியை ஆண்டுகொண்டிருந்த மராத்திய  அரசர் ப்ரதாப்சிம்மன், குழந்தையை ஆசையா வரவேற்கிறார் (!)

குழந்தையைத் தூக்கிவந்த கும்பலுக்குப் பரம சந்தோஷம். குழந்தை நல்ல கனம் கேட்டோ !   பின்னே.... சொக்கத்தங்கம் காத்துப்போல லேசா இருக்குமா என்ன?

ஒரே கலவரமான காலக்கட்டம். இந்தியாவுக்குள் நுழைஞ்சு இடம்புடிச்சுக்கிட்டு இருந்த  ப்ரிட்டிஷ் & ஃப்ரெஞ்ச் அரசுகளுக்குள் சண்டை. போதாததுக்கு உள்ளூர் மன்னர்கள், சிற்றரசர்கள் தங்களுக்குள்ளும்  சண்டை போட்டுக்க ஆரம்பிக்க, உதவறேன்னு மேற்படி  ப்ரிட்டிஷ் & ஃப்ரெஞ்சு படைகள் புகுந்து  எரியற தீயில் எண்ணெய் ஊத்திக்கிட்டு இருக்காங்க. இதுமட்டுமில்லாம, இந்தியாவில் நுழைஞ்சு வடநாட்டின் பகுதிகளைப் பிடிச்சுக்கிட்டு ஆட்சி செஞ்சுக்கிட்டு இருந்த  இன்னொரு அந்நியமதத்தினருக்கு ஹிந்துக்கோவில்கள் மேல் ஒரு கண்.  விலைமதிப்பற்ற ரத்தினங்களும், தங்கம், வெள்ளின்னும் கோவில்களில் ஸ்வாமிக்குப் போட்டு அலங்கரிச்சுக் கொண்டாடுறது அங்கெதானே!  கோவில் பொறுப்பாளர்கள், அரசர்கள், சனங்கள் எல்லாம் சாமிக்குக் கொடுக்கறது மட்டும்தான்.  சாமியாண்டை இருந்தே திருடும்  வழக்கம் எல்லாம் அப்போ இல்லை.

சரி. இதுக்கும் குழந்தைக்கும் என்ன சம்பந்தம்?  இருக்கே!
குழந்தை, காமாக்ஷி அம்மன் விக்ரஹம்தான். தங்கத்தில் செஞ்சுருக்காங்க. காஞ்சிபுரம்  சங்கரமடத்தின் பொறுப்பில் இருக்கும் கோவிலில் இருந்து அருள் பாலிக்கிறாள். 

அந்நியமதத்தினரின் கொள்ளையில் இருந்து இவளைக் காப்பத்தத்தான், இவளை இடமாத்தம் செய்யத் தூக்கிக்கிட்டுப் போனது. தங்கத்தின் பளபளப்பு வெளியே தெரியாமல் இருக்க, மஞ்சள் அழகிக்குப் புனுகு சார்த்தி, முகத்தைக் கருப்பாக்கி இருந்தாங்க.

தஞ்சமுன்னு தஞ்சைக்கு வந்த  காமாக்ஷிக்குக் கோவில் கட்டிக்கொடுத்தார்  அரசர்.  சங்கரமடமும் தாற்காலிகமா இங்கே (கும்மோணத்தில் )  இருந்து செயல்பட ஆரம்பிச்சது. 
கலவரங்கள் ஓய்ஞ்சபிறகு, திரும்பிப்போக காமாக்ஷிக்கு விருப்பமில்லை. இங்கேயே தங்கிட்டாள்.

 தங்கம் என்பதால் பங்காரு என்னும் பேரும் ஒட்டிக்கிச்சு. விஜயநகர அரசர்கள்தான் முதல்முதலில் இப்படிச் சொல்ல ஆரம்பிச்சாங்கன்னு கேள்வி. அவுனா ? அரசியல் ரீதியாக  மொழிவாரி மாநிலங்கள் பிரியாத  காலக்கட்டம். தெலுகு பேசும் மக்களும் தமிழ் பேசும் மக்களும்  கலந்தேதான் இருந்துருக்காங்க. (இப்பவும் தமிழ்நாட்டில் தெலுகைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள்  அதிகமே! என்ன ஒன்னு.... வீட்டில் பேசும் மொழி தெலுகு, வெளியே படிப்பு, பேச்சுன்னு இருப்பது தமிழ்னுதான்  )

அப்புறம் காஞ்சியில் இருக்கும் காமாக்ஷி கோவிலுக்கு இன்னொரு தங்க விக்ரஹம் செஞ்சு பிரதிஷ்டை பண்ணிட்டாங்க. ஒரு வித்தியாசம் என்னன்னா.... பழையவள் நின்ற கோலத்திலும், புதியவள்  அமர்ந்த கோலத்திலுமாக !

ஏற்கெனவே  நாம் சிலமுறை தஞ்சாவூர் வந்துருந்தாலும், பெரிய கோவிலைத்தவிர வேறெந்தக் கோவிலுக்கும் போக வாய்ப்பே கிடைக்கலை. அங்கேதான் உள்ளே போனால் நேரம் பறந்துருதே!  இந்த முறை பங்காருவை தரிசிக்கணுமுன்னு  மூளையில் முடிச்சு போட்டு வச்சுருந்தேன்.  நாம் நினைச்சால் போதுமா? அவளும் நினைக்க வேணாமா? 
இந்த பங்காரு என்ற பெயர் எனக்கு ரொம்பப் பிடிக்கும்!  தங்கம் பிடிக்காதா என்னன்னு கேக்காதீங்க. எங்க அம்மம்மாவின் பெயர்  பங்காரு . பிள்ளைகளைத் தங்கமேன்னு கொஞ்சறோமே....  அதேதான்.....
பெரிய கோவிலில் இருந்து கிளம்பின  ஆறாவது நிமிட்,  மேல மாசி வீதியில் இருக்கும் கோவிலுக்கு வந்துருந்தோம்.  தெருவில் இருந்து சாதாரணமாப் பார்த்தால்  தோளோடு தோள் ஒட்டிப்பிடிச்சமாதிரி கட்டி இருக்கும் திண்ணை வச்ச வீடுகளில் இதுவும் ஒன்னு என்றது போலத்தான் தெரியுது. அண்ணாந்து பார்க்கும்போது கோபுரம்!
உள்ளே போனால்  அர்த்தமண்டபம் கடந்து கண்ணுக்கு நேரா கருவறை.  கோவிலில்  உண்மையில் யாருமே இல்லை.... ஏகாந்த தரிசனமா...... ஹைய்யோ....   ஆள் நடமாட்டம் பார்த்துட்டு குருக்கள் வந்தார்.  தீபாராதனை காமிச்சுக் குங்குமப் பிரஸாதம் கொடுத்தவர்,  இன்னொரு சின்னப் பொட்டலமும் எடுத்துக் கொடுத்தார். அதிலும் குங்குமம்தான் என்றாலும் கூடவே ஒரு தாலிக்கயிறும் இருந்தது.  திரும்ப ஒருக்கா நம்ம பங்காருவைக் கை கூப்பி நமஸ்கரிச்சேன்.
நிகுநிகுன்னு நிக்கறாள்.  தங்கத்தின் ஜொலிப்பு, அந்த  மெல்லிசான கருவறை விளக்கில் கண்ணைக் கட்டி இழுக்குது!  உற்சவரா ஒரு சின்ன விக்ரஹமும் இருக்கு.

மேலே படம் வலையில் இருந்து. காப்பி பண்ண வரலைன்னு படம் க்ளிக்கிப் போட்டுருக்கேன். ஒரிஜினல் படம் எடுத்தவருக்கு நன்றி.

பங்காருவுக்கும் நம்மைப்போல் பழைய நினைவுகளின் ஊர்வலம்  மனசில் வந்து போகுதோ என்னமோ..... சிலநாட்களில்  முகத்துக்குப் புனுகு பூசிக்கிட்டுக் கருப்பழகியாக் காட்சி கொடுக்கறாளாம். நம்ம சங்கீத மும்மூர்த்திகளில் ஷ்யாமா சாஸ்திரிகள், பங்காரு காமாக்ஷியின் பக்தர். ஏராளமான பாடல்களை இவள் முன்னால் அமர்ந்து கண்களில்  நீர்வழியக் காமாக்ஷிக்காகவே இயற்றிப் பாடி  இருக்கார்.

(இந்தக் கோவிலில் இருக்கும்  ஒரு குருக்கள் எண்ணைத்தான் தோழியின் கணவர் நேத்துக் கொடுத்துருக்கார்.  அது 'நம்மவருக்கு' ஞாபகமே இல்லையாம்.....  பங்காருவே மறக்கடிச்சுருப்பாளோ?  அதான்  நல்ல தரிசனமே கொடுத்துட்டாளே! )
இப்பவும் சங்கரமடம்தான் இந்தக் கோவிலை நிர்வகிக்குது.  2017 இல் கும்பாபிஷேகம் பண்ணி இருக்காங்க.


ப்ரகாரம் வலம் வரலாமுன்னு போறோம்.  ரொம்பவே சுத்தமா, பளிச்ன்னு இருக்கு ! பிரகாரத்தில்  தலவிருட்சம், நாகர், துளசி எல்லோரும் இருக்காங்க.  கருவறை விமானம் அழகு! 
அடுத்தாப்லெ இருக்கும் சுவரில் இன்னொரு வழி இருக்கேன்னு அதுக்குள்ளே போனால்  ஸ்ரீநவநீத கிருஷ்ணன்,  பங்காருவின் பக்கத்து வீட்டுக்காரரா  இருக்கார் !
தனிக்கோவில்தான். தனி வாசலும் இருக்கு.  சந்நிதிக்கதவு மூடி இருந்ததேன்னு பெரிய திருவடியைக் கும்பிட்டு, கிருஷ்ணனிடம் சேதி சொல்ல விண்ணப்பிச்சேன்.  பாமா ருக்மிணியுடன்  இருக்காராம்! அட!   வடக்கே பெரும்பாலும் ராதை கூடத்தான் ஆட்டம், கேட்டோ....
இங்கே பகவத் கீதா மண்டபம் ஒன்னு நல்லாவே இருக்கு! 




அப்பப் பார்த்துப் பால்காரர் ஒருவர்  பசுமாடும் கன்னுமா ஓட்டிவந்து பசுவைக் கட்டிப்போட்டார். கன்னுக்குட்டி ஆசை ஆசையா பால்குடிக்க  வந்துச்சு. அஞ்சு நிமிஷம் கூட  ஊட்ட விடாமல் கன்னுக்குட்டியை இழுத்து அந்தாண்டை விட்டதும் எனக்கு மனக் கசப்பாப் போயிருச்சு. பாவம் குழந்தை.... அப்புறம் இவர் பால் கறந்து கிருஷ்ணனுக்குக் கொடுத்தும் கூட என்ன பயன்....ப்ச்...  மனசு கேக்கலை.... வெளியில் வந்துட்டேன்.


எதிர்ப்புறம் கொஞ்சம் தள்ளி நிறுத்தியிருந்த வண்டிக்குப் போகும்போது தற்செயலாத் தலையைத் திருப்பினால் இன்னொரு கோவில் இருக்கு!  நம்ம ஆஞ்சி !  சட்னு அங்கே போயிட்டோம்.  ஸ்ரீ ப்ரதாப வீர ஆஞ்சநேயர் !  இவருக்கு இன்னொரு பெயரும் இருக்கு.... மூலை அனுமார் ! ஹா....
கோவில் கட்டுன காலக்கட்டத்தில் ஊரின் வடமேற்கு, வாயு மூலையில்  கட்டுனதால் இவரை  மூலை ஆஞ்சின்னு சொல்லிட்டாங்க. இப்ப ஊர் வளர்ந்து விரிந்து போயிருச்சுன்னாலும் வச்ச பேர் போயிருமோ?
மூலவர் புடைப்புச் சிற்பம் வகை. (நிறைய கோவில்களில் அப்போ இப்படித்தான்  செதுக்கி இருக்காங்க! )
கோவிலுக்கு எப்படியும் வயசு இருநூத்தியம்பதுக்குக் குறையாது !  சுமாரான  சுத்தமாத்தான் இருக்குன்னாலும்,  துண்கள் எல்லாம் பழசா, வண்ணம் போய் இருக்கு. பழுது பார்த்தால் தேவலாம்.
 ப்ரகாரம் அருமை! தஞ்சை மன்னர் ப்ரதாப்சிம்மன் காலத்தில் கட்டுன கோவில்தான் இதுவும். (ஓ... அதான் ப்ரதாப வீர ஆஞ்சநேயர் !  )  ராஜகோபுரம், பலிபீடம், கொடிமரம்னு சம்ப்ரதாயமாக் கட்டி இருக்காங்க. 
கொடிமரம்தாண்டி அலங்காரமண்டபத்தில்  பதினெட்டு தூண்கள் வேற ! பிரகாரத்தில் பாண்டுரங்கனும் ருக்மாபாயும்!  ஆஹா.....



நம்ம பங்காரு காமாக்ஷி முதல்முதலில் இங்கே , இந்த ஆஞ்சி கோவிலில்தான் வந்திறங்கினாளாம்.  மன்னர்  ப்ரதாப்சிம்மனின்  மகன் இரண்டாம் துளஜாதான் நம்ம பங்காரு காமாக்ஷிக்கு கோவில் கட்டியவர்.




தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்கு எம்பத்தியெட்டு கோவில்கள் இருக்கு தெரியுமோ... அதுலே இதுவும் ஒன்னு. 
இந்த  மேல மாசித்தெருவிலேயே ஏகப்பட்ட கோவில்கள் இருக்குன்னாலும்  மழை ஆரம்பிச்சதால் அறைக்குத் திரும்பிட்டோம்.

ராச்சாப்பாட்டுக்கு வெளியில் போகலாமுன்னா  மழை நிக்கலை.  ரூம் சர்வீஸில் இட்லியும் தோசையுமா ஆச்சு. 

தொடரும்............ :-)

14 comments:

said...

தஞ்சைக் கோயில்களின் தரிசனம் ... மகிழ்ச்சி...

ஸ்ரீ காமாக்ஷி அம்மன் கோயில், ஸ்ரீ விஜய ராமர் கோயில், ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் கோயில், ஸ்ரீ கொங்கணேஸ்வரர் கோயில், ஸ்ரீ பிரதாப வீர ஆஞ்சநேயர் கோயில் -

இவையெல்லாம் அமைந்திருப்பது மேல ராஜ வீதியில்!...

வாழ்க வளமுடன்!...

said...

பங்காரு காமாஷி அம்மன் தரிசனமும் மூலை ஆஞ்சநேயர் தரிசனமும் அருமை. இரு கோவில்களும் நான் சென்றிராதவை.

said...

//வீட்டில் பேசும் மொழி தெலுகு, வெளியே படிப்பு, பேச்சுன்னு இருப்பது தமிழ்னுதான்//
வீட்டினுள் நாங்கள் பேசுவது மராட்டி. வெளியே தமிழ்.


// மேல மாசி வீதியில் இருக்கும் கோவிலுக்கு //
மேலமாசி வீதி - மதுரையில்.
இது மேலராஜ வீதி.


அருமை சிறப்பு நன்றி.

said...

காமாட்சி இப்படியாகவா வந்து சேர்ந்தார்கள். ஆச்சரியம்!.அக் காலத்துக்கு ஏற்ற கோலம் பூண்டிட்டாங்கள்.
பிரதாப்வீர ஆஞ்சநேயர் அருகே அமர்ந்து இருப்பது சிறப்பு.

said...

வாங்க துரை செல்வராஜூ,

அந்தத் தெருவில் போகும்போதே நிறையக் கோவில்கள் கண்ணில் பட்டன. முதலில் பங்காரு காமாக்ஷின்னு முடிவு பண்ணிட்டதால் அங்கே முதலில் போனோம். மழை இல்லாமல் இருந்தால் இன்னும் சில கோவில்கள் வாய்ச்சுருக்கும்.

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

தஞ்சாவூரில் ஏகப்பட்டக் கோவில்கள் இருந்தாலும், அதென்னமோ பெரியகோவில் மட்டும் மனசுலே மணைபோட்டு உக்கார்ந்துருக்கே! அங்கே போயிட்டால்.... உலகமே மறந்தும் போறது, இல்லையா?

said...

வாங்க விஸ்வநாத்,

நானும் வீட்டில் தெலுகு, வெளியில் தமிழ்னு வளர்ந்தவள்தான்.

மேலமாசி வீதின்னு தமிழ்நாடு டூரிஸம் எழுதி இருப்பதைப் பார்த்து அது சரியாக இருக்கவேணும் என்று நினைச்சேன். ஆனால் உள்ளூர்வாசி நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

https://tamilnadu-favtourism.blogspot.com/2016/05/bangaru-kamakshi-temple-thanjavur.html

said...

வாங்க மாதேவி,

அந்நியருக்கு பயந்துட்டாளேன்னுதான் எனக்கு..... ப்ச்...

அந்த தெரு முழுசும் ஏகப்பட்டக் கோவில்கள் இருக்குப்பா !

said...

பங்காரு காமாக்ஷி தரிசனம் மிக அருமை.
அன்பு துளசி, நீங்கள் செய்யும் புண்ணியம் எங்களையும் வந்து அடைகிறது.

மன நோய், உடல் நோய் எல்லாம் அவள் போக்குவாள்.
குங்குமத்தோடு தாலிக் கயிறு வந்தது மிக மிக மகிழ்ச்சி.
மாசிக் கயிறாகக் கட்டிக்கொள்ளுங்கள்.
நீங்களும் கோபாலும் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்க என் பிரார்த்தனைகள்.

said...

வாங்க வல்லி,

உங்கள் அன்புக்கு என்ன கைமாறு செய்யமுடியும்? என் பணிவான வணக்கங்கள்ப்பா !

said...

ப்ரதாப வீர ஆஞ்சநேயர் ..தரிசித்துக் கொண்டேன் மா ..

தங்கத்தின் ஜொலிப்பு, அந்த மெல்லிசான கருவறை விளக்கில் கண்ணைக் கட்டி இழுக்குது! உற்சவரா ஒரு சின்ன விக்ரஹமும் இருக்கு....பங்காரு காமாக்ஷி அம்மன்
..ஆஹா

ஆஹா திருச்சியில் இருந்தும் இவர்களை தரிசித்தது இல்ல மா ...அடுத்தமுறை தஞ்சை போகும் போது கண்டிப்பா போகணும் ..

said...

தஞ்சை பயணங்களில் பெரும்பாலும் பெரிய கோவில் மட்டும் பார்த்து விட்டு திரும்பி விடுவேன். பங்காரு காமாக்ஷி கோவிலோ மற்ற கோவில்களோ சென்றதில்லை. உங்கள் வழி பார்த்ததில் மகிழ்ச்சி. அடுத்தொரு பயணம் வாய்த்தால் சென்று வர வேண்டும்.

said...
This comment has been removed by the author.
said...
This comment has been removed by the author.