Friday, March 27, 2020

அதிசயம் பார்க்கும் ஆசையில்........... (பயணத்தொடர் 2020 பகுதி 32 )

அடுத்த ஃப்ளைட்டுக்காகக் காத்திருந்தோம். அதே எமிரேட்ஸ்தான். அதே ஸீட் நம்பரும் கூட!  ரெண்டு நாப்பதுக்கு போர்டிங் ஆச்சு.  மூணுமணிக்கு டேக் ஆஃப்.  இங்கே எக்ஸ்போ நடக்கப்போகுதில்லையா.... எல்லா ப்ளேனும்  விளம்பரம் ஒட்டிக்கிட்டு நிக்குதுகள்.


பொதுவாப் படம் பார்க்கறதில்லை என்பதால்  கொஞ்சம் தூங்கினேன். கொஞ்ச நேரம் நோட்புக்கில் கதை வாசிப்பு, இல்லைன்னா ஃப்ளைட் பாத்ன்னு போகுது. நாலேகால் மணி நேரம் இப்படிப் போரடிச்சுக்கிட்டு இருக்கணும். 'நம்மவர்' சினிமாவே சினிமான்னு.....
சாயங்காலம் தொழுகை நேரம் எப்போன்னும் சொல்றாங்க. அந்த அஞ்சு நேரத் தொழுகையை ஞாபகப்படுத்துறாங்க போல.
வேடிக்கை பார்த்துக்கிட்டே போகும்போதுதான் உறைக்குது நாம் பாலைவனத்துக்குமேலே பறக்கறோமுன்னு....
கய்ரோ நேரம் அஞ்சேகாலுக்கு  தரையைத் தொட்டது விமானம்.  குளிர்காலம் என்றபடியால்  சீக்கிரமே இருட்டிப்போயிருக்கு. இங்கே விஸா வாங்கிக்கணும்.  விஸா ஆன் அரைவல்.

இந்த ஊர் நம்ம பக்கெட் லிஸ்ட்டில் இருக்கறதுதான். நியூஸியில் இருந்து போனால்  ரொம்ப தூரமாச்சேன்னு யோசனையா இருந்தப்ப, 'நம்மவர்'தான்  சொன்னார்,  ஒரு இந்தியப் பயணத்தில்  ஒரு வாரம்  சென்னையில் இருந்தே போயிட்டு வரலாமான்னு....  அதுவும் நல்ல ஐடியாதான். ஒருவாரம்தானான்னு  முணுமுணுத்துக்கிட்டே சரின்னேன்.  விஸா விவரம் தேடுனப்பதான்  அங்கே இறங்கினதும் வாங்கிக்கலாம்னு தெரிஞ்சது.

(அந்த ஒரு  பயணம், இந்தப் பயணத்தில் வாய்க்கும் என்பது  நமக்கு அப்போ தெரியாது.  சென்னையில் இருந்து டிக்கெட் புக் பண்ணினபிறகும்,  எனக்கு உடல்நிலை சரி இல்லையேன்னு  கேன்ஸல் பண்ணவான்னு இவர் கேட்டுக்கிட்டே இருந்தார். அரை மனசா இருந்துச்சு....)
எல்லா ஏர்ப்போர்ட்டுகளும் புதுவருஷத்தை வரவேற்க ரெடியா இருக்குதுகள்.
விஸா காசைக் கட்டி , அதை வாங்கிக்கிட்டு மத்த ஃபார்மாலிட்டீஸ் முடிச்சு வெளியே வரவே முக்கால் மணி நேரமாச்சு. நமக்கு செக்கின் பேக்ஸ் இல்லாததால் அதுக்குக் காத்திருக்கும் நேரம் மிச்சம். ஹொட்டேல் போறதுக்காக ஏற்கெனவே புக் பண்ண டாக்ஸி நமக்காகக் காத்திருந்தது.
 ஏர்ப்போர்ட்டில் இருந்து நாம் தங்கப்போகும் ஹொட்டேல், சுமார் இருபத்தியொரு கிமீ தூரத்தில், சிடிக்குள்ளே இருக்கு.  ஒருமணி நேரத்துக்கும் அதிகமான பயணம். பயங்கர ட்ராஃபிக் வேற.

 வர்றவழியில் ஒரு சுரங்கப்பாதையில்  போறோம்.  2.6 கிமீ  நீளமாம்.  ஆனால் என்னமோ அது பாட்டுக்குப் போய்க்கிட்டே இருந்தமாதிரி தோணுச்சு. வெளிவேடிக்கை இல்லை பாருங்க.....
ஒருவழியா நம்மை ஹொட்டேலில் கொண்டு சேர்த்தார் அஹ்மத்.  ராம்ஸேஸ்  ஹில்டனில் தங்கறோம். இந்த ஒரு வாரமும் இங்கேதான். Hotel Ramses Hilton, Cairo. ரிவர் வியூ வேணுமுன்னு கேட்டே புக் பண்ணி இருந்தோம். முப்பத்தியாறு மாடி இருக்கும் இங்கே நமக்குப் பதினெட்டாம் மாடியில் அறை.  நமக்கு வைஃபை  ஃப்ரீயாம். மனசு சமாதானமாச்சு :-)

உள்ளே போனதும், அந்த ரிவர் வியூ என்னமாத்தான் இருக்குன்னு பால்கனிப் பக்கம் பார்த்தால் மூச்சு நிக்காத குறை !  வாவ்!
நைல் நதியைப் பார்க்கிறேன் என்றதை என்னால் முதலில் நம்பவே முடியலை!  எத்தனை நாள் கனவு !
நைல்நதிப் பாலத்தில்  ட்ராஃபிக் ஜாம் ஆகி இருக்கு.  வேலை முடிச்சு வீட்டுக்குத் திரும்பும் கூட்டம்!
நதியின் எதிர்க்கரையில் ஏகப்பட்ட பெரியபெரிய அடுக்குமாடிப் படகுகள். அதெல்லாம் ரெஸ்ட்டாரண்டுகளாம்.  அப்புறம் சின்னச் சின்னப்படகுகள் இங்கேயும் அங்கேயுமாச் சுத்திக்கிட்டு இருக்குதுகள். டின்னர் க்ரூஸ்  என்ற வகையில் சில பெரிய படகுகள்....
அகலமா இருக்கும் நதியின் தண்ணீர், ஓடாம நிக்கறதைப்போல இருக்கு.
ராச்சாப்பாடுக்கு ஒரு பீட்ஸா, ரூம் சர்வீஸில் சொல்லியாச்சு. ரொம்பப் பெரூசா ஒன்னு வந்தது.....  நைலைப் பார்த்துக்கிட்டே சாப்பிட்டால் நல்லாத்தான் இருக்கு :-)

காலையில் எட்டுமணிக்கு நாம் ரெடியா இருக்கணும்.  அதுக்குமுன்னால் போய் ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுக்கணும். எட்டுமணின்றதை எட்டரை ஆக்கலாமான்னு கேட்டதுக்கு சரின்னுட்டாங்க.

நமக்கான டூர் கைடு, கார், ட்ரைவர் எல்லாம் வயாடர் கம்பெனி ( Viator ) ஏற்பாடு. போனமுறை நம்ம க்ராண்ட் கேன்யன் பயணத்துக்கு இவுங்களிடம்தான்  புக் பண்ணினோம். அருமையா நம்மைக் கூட்டிப்போய்க் கொண்டுவந்தாங்க. நல்ல  டூர் கம்பெனி. அதான் இப்பவும்  வயாடரில் புக் பண்ணினோம்.
காலையில்  கண் முழிச்சதும்  நைல் தரிசனம்!  ராத்ரியெல்லாம் ஜிலுஜிலுன்னு மின்னிக்கிட்டு இருந்த  எதிர்சாரி, இப்போ 'நான் அப்படியெல்லாம் இல்லையாக்கும்' என்றதுபோல் அமைதியா அடக்கமா  இருக்கு!  கீழே சாலையிலும் பாலத்திலும் போக்குவரத்து....  ஊமைப்படம் போல் பார்க்கலாம் :-)

ரெடியாகி, கீழே ப்ரேக்ஃபாஸ்ட்டுக்குப்போனால்......   ஐயோ...........  அப்படி ஒரு கூட்டம். பஃபேதான்.  உக்கார்ந்து சாப்பிட இடமே  இல்லை.  முக்கால்வாசிப் பயணிகள், இந்தியர்கள்.  உண்மையில் இந்தியாவில் இருந்து  இப்படிக் குழுவாகச் சுற்றுலா வந்தால்  கொஞ்சம்  விலை மலிவுதான்.  வாராவாரம்  டூர் இருக்கு. நமக்கு அப்படிப் போகணுமுன்னா ... முன்னாலேயே  புக் பண்ணி இருக்கணும்.  நமக்குத்தான்  நேரமும் நாளும் ஒத்துவர்றதில்லை.

ஒரு வழியா இடம் கிடைச்சு, சாப்பிட்டு முடிச்சுட்டு, கெமெரா, பேக்கப் பேட்டரி, எல்லாம் எடுத்துக்கிட்டு, நிறைய நடக்கவேண்டி இருக்கும் என்பதால் ஷூஸ்  மாட்டிக்கிட்டு எட்டரைக்கு அஞ்சு நிமிட் இருக்கும் போது கீழே  வரவேற்புக்கு வந்துட்டோம்.  நம்ம டூர் கைடு வந்துட்டாங்க. அறிமுகம் ஆச்சு. கிளம்பிட்டோம். ரெய்னான்னு பெயர் சொன்னாங்க.  ட்ரைவர் பெயர் இஸ்லாம். எனக்குக் கொஞ்சம் ஆச்சரியமா இருந்தது.

உலக அதிசயங்கள்  ஏழுன்னுதான் அந்தக் காலத்தில் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. அப்புறம் புராதன  உலகம், புதிய உலகம், இடைப்பட்ட காலத்து உலகம், கின்னஸ் புக்கிலே அந்தந்த வருஷத்துக்கான  ஏழு அதிசயம், பத்து, இருபத்தியஞ்சுன்னு  ஏகப்பட்ட அதிசயங்களாக் கிடக்கு உலகமெல்லாம்.

இந்த அதிசயங்களில் நாமும் ஏதோ கொஞ்சம் பார்த்துருக்கோமுன்னு சொல்லிக்கலாம். ஆனா இப்பப் பார்க்க வந்துருக்கறது கொஞ்சம் மூத்த அதிசயம்.

தொடரும் :-)


9 comments:

said...

உங்கள் வழி நாங்களும் இந்த இடங்களுக்கெல்லாம் சென்று வருகிறோம்.

நைல் நதி - அழகோ அழகு...

தொடர்கிறேன்.

said...

மிக அருமை, நன்றி.

மனைவியும் நானும், Cyprus ல் இருக்கும் போது சில அலுவலக நண்பர்களோடு சென்று வந்தோம் (2002).

said...

நைல் நதி மிக அழகு. பகல் படங்கள் தொடரும்னு நினைக்கிறேன்.

எனக்கு மம்மிக்கள் பார்த்த போதுதான் (பாரிஸ்) முதல் முதலில் அலர்ஜி வந்தது. அடித்துப் பிடித்து 3/4 மணி நேரம் பிராயணம் செய்து தங்கியிருந்த ஹோட்டலுக்குப் போனேன். அப்புறமும் இன்னொரு தடவை அதுமாதிரி மம்மி வைத்திருந்த பெட்டிகள் இருந்த அறைக்குப் போனபோதும் அலர்ஜி ஆரம்பித்தது.

எகிப்த் பயணத்தை ஆவலுடன் தொடர்கிறேன். முடிந்த அளவு விவரமாக எழுதவும்.

said...

நதியே நைல் நதியே ..வாவ்

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

நாம் காணாதது உலகில் எவ்ளோ இருக்குல்லே? நானும் அந்தமானை உங்கள் கண்களால் பார்க்கிறேன்.

பயணங்கள் எப்போதுமே முடிவதில்லை.....

said...

வாங்க விஸ்வநாத்,

ஆஹா.... இப்போ ஏகப்பட்ட மாற்றங்கள் வந்துருக்குமே !

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

அடடா... மம்மி இப்படி அலர்ஜி ஆகிப்போச்சே.....


விவரமாக எழுதணும்தான்.... ஆனால் அந்தப் பெயர்கள் எல்லாம்.... எழுதுவது கஷ்டம்தான்.... பார்க்கலாம் முடிந்தவரை.....

said...

வாங்க அனுப்ரேம்,

தினம் தினம் நைல்தான் :-)

said...

நைல் நதி கரை ஓரத்தில்.......