Friday, March 13, 2020

திட்டத்தில் இல்லாத திடீர் தரிசனம் ! (பயணத்தொடர் 2020 பகுதி 26 )

காலையில் வழக்கம்போல் எழுந்து, கடமைகளை முடிச்சுட்டுக் கீழே தில்லானாவுக்கு ப்ரேக்ஃபாஸ்ட்க்குப் போனோம்.   உள் அலங்காரத்தை மாத்தி இருக்காங்க. பெரும்பாலும் வேற்றுநாட்டவர்கள் வந்து தங்கும் காரணம்போல... வகைவகையான அரிசிகளும், பருப்புகளும், நம்ம மசாலாச் சாமான்களுமா குட்டிக்குட்டிப் பாத்திரங்களில் காட்சிக்கு வச்சுருக்காங்க.  இத்தனை வகை அரிசியான்னு எனக்கும் தோணுச்சு.... சோழவளநாடு சோறுடைத்து, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்றெல்லாம் பெயர் பெற்றதில்லையோ  இந்தப் பகுதி!!!





முருகனும்  வெளியே போய் சாப்பிட்டுட்டு வந்ததும் ஒரு ஒன்பதே முக்கால் போல செக்கவுட் செஞ்சுக் கிளம்பினோம்.  ஒரு பத்து நிமிட் பயணத்தில் சட்னு என் கண்ணில் பட்டது புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் நுழைவு வாசல்... அந்த சாலையில் போகும் யார் கண்ணில் இருந்தும் தப்பமுடியாத வகையில் பெரூசா இருக்கு!   அதுக்குள்ளே ஒரு இருநூறு மீட்டர்  கடந்துருந்தோம்.

ஆமாம்.... எப்படி இதுவரை நம்ம கண்ணில் பட்டதே இல்லையேன்னு பார்த்தால்.... இந்தத் தஞ்சாவூர்  கும்பகோணம் சாலையில் முதல்முதலாப் பயணம் செய்யறோம்.  வழக்கமா, ஸ்ரீரங்கத்தில் இருந்து கும்பகோணமுன்னே பலவருஷங்களா நம்ம பயணம் நடந்துக்கிட்டு இருக்கு.  இந்தமுறையும் அப்படித்தான் இருந்துருக்கணும். ஆனால் கல்யாண சீஸன்னு சொல்லி, ஸ்ரீரங்கம் ஹயக்ரீவாவில் ஒரே ஒரு நாள் மட்டும்தான்  தங்க இடம் கிடைச்சதால்  இப்படிக்கா வந்துருந்தோம்.

நான் கேள்விப்பட்ட கோவில் தான் இது. தரிசனம் செய்ய வாய்ப்பு அமையலை. இன்றைக்கு அம்மனே கூப்பிட்டாள் போல!  வண்டியைத் திருப்பச் சொல்லி கோவிலுக்கு வந்தோம். கார்பார்க் போகும் வழியெல்லாம்  கோவிலுக்கே உரித்தான கடைகள். ஒரு பெரிய கூண்டில் கோழிகள் !   இங்கே கோழிகளைக் கோவிலுக்கு நேர்ந்து விடுவாங்களாம்.
கோவிலுக்குள் போகும் நுழைவுவாசல் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு. உள்ளே நுழைஞ்சால் நீளமாப்போகும் மண்டபம்...ரெண்டு பக்கங்களிலும் திண்ணைகளும் தூண்களுமா அதுபாட்டுப்போய்க்கிட்டே இருக்கு!



இன்னொரு வாசலில் முத்துமாரியம்மன் என்று போட்டுருக்காங்க.  கடந்தால், பலிபீடம் கொடிமரம், அடுத்து ஒரு முன்மண்டபம். அப்புறம்  மாரியம்மன் கொலுவிருக்கும் கருவறை!   கருவறைக்கு முன் ஒரு மேடையில் இருக்கும்  அம்மனுக்கு அருகில் ரெண்டு பூசாரிகள் நின்னுக்கிட்டு நமக்குத் தரிசனம் பண்ணி வைக்கிறாங்க.  'நம்மவர்' கழுத்துலே ஒரு மாலையும் விழுந்தது.  எனக்கு ரெண்டு எலுமிச்சம்பழம்!

மேலே படம், நம்ம பவளசங்கரியின் பதிவில் இருந்து. நம் நன்றிகள் !

கோவில்தலவரலாறு, கோவில்நிர்வாகம்  போட்டு வச்சுருக்காங்க.

தஞ்சை மன்னர் வெங்கோஜி மஹாராஜா தலயாத்திரை செஞ்சுக்கிட்டு, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குப் போயிருக்கார். அங்கே அவர் கனவில் அம்மன் , தான்  தஞ்சைக்கருகில் புன்னைவனக்காட்டுக்குள்ளில் புத்துருவில்  இருப்பதாகச் சொல்றாள். (அஞ்சு கிமீ தூரத்துலேன்னு போட்டுருக்காங்க.  காலக்கட்டம் 1680 என்பதால் கிமீ கணக்கெல்லாம் வந்துருக்க வாய்ப்பே இல்லை. இப்ப நம்ம மக்களுக்குத் தெரியணும் என்பதால் இப்படிப் போட்டுருக்காங்க போல !)

மன்னரும் அந்த இடத்தைத் தேடிப்போய்ப் பார்க்க,  பெரிய புத்து ஒன்னு இருக்கு. சின்னதா ஒரு கூரை போட்டுக் கோவில் எழுப்பி, அந்த புன்னைக்காட்டைச் சுத்தம் செஞ்சு அந்த இடத்தையும் கோவிலுக்குன்னே கொடுத்துடறார். புன்னைநல்லூர் என்ற பெயரில் சின்ன கிராமம்தான்.  கோவில்னு வந்ததும் மக்களும் சாமி கும்பிட வர ஆரம்பிச்சாங்க.
ரொம்ப வருஷங்கள் இப்படியே போய்க்கிட்டு இருந்துருக்கு.  துளஜா மன்னர் ( மன்னர் ப்ரதாப்சிம்மனின்  புதல்வர் துளஜேந்திர சிம்மன். இவர்தான் நம்ம பங்காரு காமாக்ஷிக்குக் கோவில் கட்டுனவர் ) ஆட்சிகாலத்தில்,  அவருடைய  மகளுக்கு  வைஸூரின்ற அம்மை போட்டுக் கண்பார்வை போயிருச்சு. மனக்கவலையில் இருந்த மன்னரின் கனவில் வந்த  புன்னைநல்லூர் அம்மன், தன்னை வந்து வணங்குமாறு சொல்ல, மன்னரும் மகளுமா  கோவிலுக்குப் போறாங்க.  அம்மனை வழிபட்டக் கொஞ்ச நாளில் கண்பார்வை திரும்பிருச்சு.  உடனே  மன்னர், அம்மனுக்குக் கோவில் கட்டறார். ஒரு பிரகாரம்தான் அப்போ.
நம்ம சதாசிவ ப்ரம்மேந்த்ராள் என்ற  ஞானி வாழ்ந்திருந்த காலக்கட்டம் அது.  அவரே இந்தப் புத்தம்மனுக்கு, மாரியம்மன் உருவம் கொடுத்து, ஸ்ரீசக்ரம் ப்ரதிஷ்டை செஞ்சார்.  புத்து உருவம் என்பதால் அபிஷேகம் எல்லாம் இல்லை.  கருவறைக்கு முன் மேடையில் இருக்கும் விஷ்ணுதுர்கைக்கும்,  உற்சவருக்கும்தான் தினப்படி அபிஷேகம் எல்லாம்.

புத்து உருவில் இருக்கும் மூலவருக்கு அஞ்சு வருஷத்துக்கொருமுறை  தைலக்காப்பு சார்த்தி ஒரு மண்டலகாலம்  சிறப்பு வழிபாடு நடத்தறாங்க. அப்போ அம்மனுக்கு எதிரே ஒரு திரையில் அம்மனை வரைஞ்சு அதில் அம்மனை ஆவாஹனம் செஞ்சு பூஜைகள் செய்யறாங்க.
மாரியம்மன் என்றபடியால்  அம்மை நோய்களை அடக்கிஆள இவளுக்குத்தான் அதிகாரம்!  நோயின் கடுமையில் இருந்து மக்களைக் காப்பாத்தறது இவளோட கடமை!  அம்மை மட்டுமில்லாம எல்லா விதமான சுகக்கேடுக்களுக்கும் இவளே கதின்னு எல்லாப் பொறுப்பையும் இவளுக்கேக் கொடுத்துட்டதால், மக்களின் குறைகளைத் தீர்த்துக்கிட்டு இருக்காள். நம்பணும். நம்பினால்தான் சாமி.

வெயில் காலத்தில் அம்மன் சிலையின் முகத்தில் முத்துமுத்தா வேர்வைத் துளிகள் வர்றதால், இவளுக்கு முத்துமாரியம்மன் என்ற பெயரும் லபிச்சுருக்கு!

தஞ்சை மன்னர் சர்ஃபோஜி அவர்கள் காலத்தில்  அம்மன் கோவிலைக் கொஞ்சம் விரிவுபடுத்தி மஹாமண்டபம், நர்த்தன மண்டபம், ராஜகோபுரம் எல்லாம்  கட்டி  ரெண்டாம் ப்ரகாரமும் எழுப்பி இருக்கார்.  இப்ப இருக்கும் மூணாம் ப்ரகாரத்தைக் கட்டுனவர் மன்னர்(தஞ்சை) சிவாஜி .  இவர் சர்ஃபோஜி மஹாராஜாவின்  புதல்வர்.  தஞ்சை மன்னர்களின் வரிசையில் கடைசியா இருந்தவரும் இவரே.  இவருக்கு ஆண் வாரிசு இல்லைன்னு சொல்லி, இவருக்கப்புறம்  இவர் ஆண்ட இந்தப் பகுதியை நைஸாத் தங்களோடு இணைச்சுக்கிட்டது, கிழக்கிந்தியக்கம்பெனின்னு நாட்டுக்குள்ளே வந்து, நாட்டையே பிடிச்சுக்கிட்ட ப்ரிட்டிஷ் அரசுதான். இத்தனைக்கும் தஞ்சை சிவாஜி மன்னரின் மனைவி ஒரு  பிள்ளையை தத்து எடுக்கும் முயற்சியில் இருந்தார். அப்போதைய சட்டப்படி அதற்கான வேலைகள் நடந்துக்கிட்டு  இருந்துருக்கு.  ஆனால்  காலதாமதம் ஏற்பட்டு, மன்னர் இறந்த பிறகே பிள்ளையை தத்து எடுக்கும்படி ஆச்சு. ஆனால்  கம்பேனி சொல்லிருச்சு.... அது செல்லாதுன்னு ! எப்படியோ எதையாவது சொல்லி, வாரிசு இல்லாமல்தான் மன்னர் இறந்தார்னு நிரூபிச்சு, சமஸ்தானத்தை அபகரிச்சுட்டாங்கதான், இல்லையா?

 உண்மையான சரித்திரம்ன்றது உள்ளே புகுந்து பார்த்தால் ஏராளமான ரகசியங்களும், சுவாரஸ்யங்களும் நிறைஞ்சதுதான்.  மன்னர் சர்ஃபோஜி, துளஜா மஹாராஜாவின்  புத்திரர்னு சொன்னாலும், அவரும் தத்துப்பிள்ளைதான்.  மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜி மஹாராஜாவின் அரசகுடும்பத்தில் பிறந்த இவரை, அவருடைய பத்தாவது வயசில் துளஜா மஹாராஜா, தத்துப்பிள்ளையா ஸ்வீகாரம் செஞ்சுக்கிட்டார். கொஞ்ச நாளிலேயே  துளஜா மஹாராஜா  சாமிகிட்டே போக, அவர் மறைவுக்குப்பின், இளவரசர் சர்ஃபோஜி சார்பில் ஆட்சியை நடத்துனது  மன்னரின் ஒன்னுவிட்ட தம்பி அமரசிம்மன் (ராமசாமி அமரசிம்ம போஸ்லே ) ஆறுவருஷம் இப்படியே போச்சு.

இளவரசருக்கு அதிகாரத்தைத்  திருப்பித்தரும் சமயம் வந்தப்ப, ஒரு சுணக்கம்.  யாருக்குத்தான் தன் கையில் இருக்கும் அதிகாரத்தை விட்டுத்தரத் தோணும்? அப்ப நம்ம நாட்டை ஆண்டுக்கிட்டு இருந்த  பிரிட்டிஷ் அரசுதான் தலையிட்டு இளவரசருக்கு உதவி செஞ்சு அவருக்குப் பட்டம்  கிடைக்க வழிசெஞ்சது. இதன் காரணம் ப்ரிட்டிஷ் அரசுக்கு நன்றியுள்ளவரா மாற வேண்டியதாகிப்போச்சு, அரசருக்கு. ப்ச்....




மூலவர் தரிசனம்  முடிச்சு மனநிறைவோடு கோவிலுக்குள் வலம் வந்தோம். சுமாரான கூட்டம் இருக்கு.  இன்றைக்கு சனிக்கிழமை. நாளைக்கு நல்ல கூட்டம் இருக்குமாம்! பசங்க உள்ளே வந்துருக்காங்க. ஆனால் நம்ம கையில் வெறும் எலுமிச்சம்பழம்தான்.... ப்ச்.... வாழைப்பழமோ தேங்காயோ இல்லாமல் போச்சே.....  
இன்னும் மூணுநாளில் இங்கே லக்ஷதீபம் விழா நடக்கப்போகுது. பத்துநாள் உற்சவம்.  நிகழ்ச்சி நிரல் போட்டு வச்சுருக்காங்க.   ஆட்டமும் பாட்டமுமா.....  ஹைய்யோ !!!


இந்தக் கோவிலில் எனக்குப்பிடிச்ச இன்னொரு நல்ல விஷயம், காலை அஞ்சு மணிக்குக் கோவில் திறந்து, இரவு ஒன்பதுக்குத்தான் நடை சாத்தறாங்க.   விசேஷ நாட்களானா, காலை நாலு மணிக்கே திறக்கும் கோவில்,  இரவு பதினொன்னு வரை திறந்தேதான்  இருக்குமாம்.  பக்தர்களுக்கு, முக்கியமா தீர்த்தயாத்திரை வரும் பயணிகளுக்கு எவ்ளோ நல்லது பாருங்க. பிற்பகலில் நடை மூடிக்கிடக்கேன்னு  தேவுடு காக்க வேணாம்.

தொடர்ச்சியாத் திறந்து  வைக்கறதால் பக்தர்கள்  எந்த நேரமுன்னாலும்   வந்து தரிசனம் பண்ணிக்கிட்டுப் போய்க்கிட்டே இருக்காங்க.  காட்சிக்கு எளியவராக் கடவுள் இருக்க வேணும் என்கிறது இப்படியும்தான்.

 தேவையில்லாமல் ஆடுமாடுகளைப்போல் பக்தர்களை அடைச்சு வச்சு, நெடுநேரம் காக்க வச்சு, கண்ணைத் திறந்து கடவுளைப் பார்க்க விநாடி நேரம் கூடக் கொடுக்காமல் இழுத்து வெளியே  கடாசும் வேலையெல்லாம்  இங்கே இல்லை என்றது மனசுக்கு எவ்ளோ ஆஸ்வாசம் பாருங்க. இந்தக் கோவிலிலும் ஆகம விதிப்படி நாலு காலப் பூஜை உண்டு.

தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தின் பொறுப்பில் எம்பத்தியெட்டு கோவில்கள் இருக்குன்னு சொன்னாங்களே... அதுலே இந்த மாரியம்மன் கோவிலும் ஒன்னு.  இதுக்குப்பின் பக்கத்திலே கைலாச நாதர் கோவில் ஒன்னும், கொஞ்ச தூரத்துலே  கோதண்டராமர் கோவில் ஒன்னும்  இருக்குன்னாலும் அங்கெல்லாம் நாம் போகலை.  இப்பத்தோணுது.... போயிருக்கலாமோன்னு......  ப்ச்....

மாரியம்மனுக்குத் திருவிழா நடக்கும் நடக்கும் நாட்களில் ஏராளமான கூட்டம் இருக்குமாம். அப்ப நமக்கு வர்றதுக்குச் சான்ஸே இல்லை. முத்துப்பல்லக்கு அட்டகாசமா இருக்குமாம்.  யூட்யூபில் கிடைச்சாப் பார்த்துக்கணும்.
வாங்க நம்ம  பயணத்தைத் தொடரலாம்.....

தொடரும்.......... :-)



15 comments:

said...

எங்கள் மகமாயியைப் பற்றி விரிவாக எழுதியிருக்கின்றீர்கள்...

அற்புதங்களை நிகழ்த்தி வரும் அன்னை அவள்!...

said...

மகமாயியின் சந்நிதிக்குத் தென்புறமாக வடதிசை நோக்கியவாறு ஸ்ரீ விஷ்ணு துர்க்கை..

அவளுக்கே நித்ய அபிஷேகங்கள்...

said...

மாரியம்மன் கோயிலின் பயணம் சிறப்பான பகிர்வாக உள்ளது. நீங்கள் குறிப்பிட்டுள்ள, செல்ல விடுபட்ட இரு கோயில்களைப் பற்றி விக்கிப்பீடியாவில் நான் எடுத்த புகைப்படங்களுடன் பதிந்துள்ளேன். (புன்னைநல்லூர் கோதண்டராமன் கோயில், புன்னைநல்லூர் கைலாசநாதர் கோயில்) தகவலுக்காக.

said...

எங்க இஷ்ட தெய்வக் கோவில் இது.

நன்றி.

said...

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில்...அற்புத படங்களுடன் இனிய தரிசனம் மா ...

said...

திருச்சியில் இருந்தபோது ஓரிரு முறை சென்றிருக்கிறோம் எதுவுமே நினைவுக்கு வரவில்லை

said...

எத்தனை எத்தனை கோவில்கள் உங்கள் நாட்டில் பார்க்கும் இடம் எங்கும். முத்து மாரியம்மன் மகிமை அறிந்தோம்.
எனது பிறந்த ஊருக்கு அண்மையிலும் முத்துமாரிஅம்மன் குடிகொண்டுள்ளாள் அம்மை வந்தவர்கள் நேர்த்தி வைத்து நீர்பாளையம் கொடுப்பார்கள்.

said...

நானும் ஒரு பயணத்தில் இங்கே குடும்பத்தினருடன் சென்று வந்தேன். நல்லதொரு கோவில்.

said...

வாங்க துரை செல்வராஜூ.

உள்ளூர்க்காரவுங்களா இருக்கீங்க. அம்மன் தரிசனம் அநேகமுறை கிடைச்சுருக்கும்!

முத்துபல்லக்கு விழா படங்கள் இருந்தால் எங்களோடு பகிர்ந்துக்குங்க....

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா,

நீங்க சொன்னதும் அங்கே போய்ப் பார்த்தேன். அருமை !

நமக்கும் அங்கே தரிசனம் வாய்க்குதான்னு பார்க்கணும். எல்லாம் 'அவன்' செயல் அல்லவா!

said...

வாங்க விஸ்வநாத்,

ஆஹா.... தகவல் பிழை ஏதும் இருக்காதுன்னு நம்புகிறேன் !

said...

வாங்க அனுப்ரேம்,

நன்றிப்பா !

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.


அப்போ நாம் கோவில்களுக்குப்போய்க் கும்பிட்டு வருவதோடு சரி. இப்ப எல்லாம் போய் வந்த விவரங்களைப் பதிவாக எழுதிடறதால்..... எப்போ வாசிச்சாலும் போய் வந்த அனுபவம் கிடைச்சுருதே! வலையில் உள்ள வசதி !

திருச்சியில் இருந்தகாலம், சமயபுரமும் போய் வந்துருப்பீங்கதானே!

said...

வாங்க மாதேவி,

இந்தியாவில் உள்ள அனைத்துக் கோவில்களுக்கும் போய் வரணுமுன்னா ஒரு ஆயுள் காலம் போதாது..... நிறையப்பிறவி எடுக்க வேணும்.....

மாரியம்மந்தான், அம்மைக்கு எஜமானி ! அவளால்தான் கட்டுப்படுத்தமுடியும் !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

குடும்பத்துடன் தரிசனமா!!! ரொம்ப சந்தோஷம்!

இன்னும் சமயபுரம்போல் முழுக்க முழுக்க கமர்ஸியல் ஆகலை.