Monday, February 03, 2020

திருகைக்கல்லில் மாவு அரைக்கணுமா? (பயணத்தொடர் 2020 பகுதி 9 )

ஔரங்காபாத் நகரை நிர்மாணிச்சப்ப, ஊருக்குள் வர்றதுக்கு  எத்தனை நுழைவு வாசல் (Gate)கட்டி விட்டுருந்தாங்கன்னு  தெரியுமோ?  ஒன்னு ரெண்டு இல்லை.....  கொஞ்சம் மூச்சு விட்டுக்கறேன்....   மொத்தம் அம்பத்திரெண்டு !
அம்மாடியோ.......  எதிரி படையெடுத்து வரும்போது, 'கோட்டை வாயிலை மூடுங்கள்'னு உத்தரவு போடுவாரே அரசர்.....   இங்கே அம்பத்திரெண்டு வாசலை  மூடணுமுன்னா பாருங்க.... விடிஞ்சுரும்.......  இல்லே?  இந்த ஊருக்கே 'சிடி ஆஃப் கேட்ஸ்' னு  ஒரு பெயர் இருக்காம்!
அப்படி ஒரு கேட்டாண்டை வந்துருக்கோம் இப்போ.  கேட்டுக்கு முன்னால் ஒரு பாலம். பாலத்தையொட்டி இருக்குமிடம் சரித்திரப்புகழ் வாய்ந்தது!  பன்சக்கி!
தண்ணீரின் விசையால் மாவு அரைக்கும் இடம்.  பானி ன்னா தண்ணீர், சக்கி..ன்னா. அரைக்கும் இயந்திரம் (திருகைக்கல்)  அதான் பானி கா சக்கி என்றது பன்சக்கின்னு  ஆகி இருக்கு.

சொனேரி மஹலில் இருந்து  மூணு கிமீ தூரத்துக்கும் குறைவுதான்.  ஊருக்குள்ளே கம்நதின்னு ஒரு ஆறு ஓடுது. அதன் கரையில் இருக்குமிடம் இது.  உள்ளே போகப் பத்து ரூ கட்டணம் உண்டு.
சின்னதா ஒரு கேட் போட்டு வச்சுருக்காங்க. உள்ளே நுழைஞ்சதும்.... நமக்கிடதுபக்கம் ஆறும், வலதுபக்கம்  பெரிய குளம் போல ஒன்னும்... தண்ணீர் நிரம்பி வழிஞ்சுக்கிட்டு இருக்கு.  மேலே கட்டட அமைப்பில் இருந்து நீர்வீழ்ச்சி போல தண்ணீர் தபதபன்னு கொட்டிக்கிட்டு இருக்கு!
அகலமான பாதையின் ஒரு பக்கம் கடைகளோ கடைகள்.  மார்கெட் ஏரியாவுக்குள்ளே வந்துட்டோமா என்ன?  புடவைக்கடை முதல், கைவினைப்பொருட்கள் விற்கும் கடை வரை.....  சுடச்சுட 'பஜ்ஜியா' போட்டு  வச்சுக்கிட்டு இருக்காங்க. எண்ணெய்க் கடாயை எட்டிப் பார்த்தேன்.........  ஐயோ..........  இத்தனை கருப்பா, ஒரு எண்ணெயைப் பார்த்ததே இல்லை.......
இங்கே ஒரு பெரிய ஆலமரம்,இருக்கு. வயசு அறுநூறு !  இந்த மரத்தையும் , குளக்கரையில் இது நிற்கறதையும் பார்த்து, எனக்கென்னமோ நம்ம 'ஜ்யோதீசர்'  (கீதை சொல்லப்பட்ட இடம், குருக்ஷேத்ரம்) ஞாபகம் வந்தது உண்மை !
மரத்துக்கு அந்தாண்டை நமக்கிடதுபக்கம் இருக்கும் வாசல் வழியாப் போனால்,  அங்கே ஒரு தர்கா இருக்கு!  ஒரு மசூதியும்.  தொழுகைக்கு முன்னால் சுத்தப்படுத்திக்க ஒரு சின்னக்குளம் வச்சுருக்காங்க.  நம்ம செல்லங்கள்  ஏராளமா அங்கே சுத்திக்கிட்டு இருந்தாங்க. அழகான தோட்டம் வேற !





என்னன்னு பார்த்தால் முஸாஃபிர் பாபாவின் தர்காவாம். முன்ஹாலைக் கடந்துபோனால் அந்தாண்டை இன்னொரு ஹாலில் ரெண்டு சமாதிகள். சத்தர் விரிப்பு போர்த்தி இருக்காங்க. இதுக்குள்ளே போக பெண்களுக்கு அனுமதி இல்லைன்னு சொன்னதால் 'நம்மவர்' மட்டும் உள்ளே போயிட்டு வந்தார்.
அந்தக் காலத்துலே  ருஷ்யாவின் ஏதோ கிராமத்தில் இருந்து வந்த சூஃபி ஞானியின் சமாதியாம். ரொம்ப நல்ல அறிவுரைகளும் ஆலோசனைகளும்  சொல்லி, அது மக்களுக்குப் பிடிச்சுப்போய் அவரை குருவாக ஏத்துக்கிட்டுப் பலர் சிஷ்யப்பிள்ளைகளா ஆகி இருக்காங்க.  உள்ளூர் வெளியூர் மக்கள் பலர் இவர் தரிசனத்துக்காகவும், அறிவுரை, ஆலோசனைக்குமா வந்து குவிஞ்சுருக்காங்க.  இப்படி வந்தவங்களுக்குச் சாப்பாடு போடணுமே.... அதுக்கான மாவு அரைக்கத்தான் நீர்சக்தியைப் பயன்படுத்தியிருக்காங்க !  அப்புறம் ஔரங்கஸேபின் படை வீரர்களுக்கும்  இது பயனாகி இருக்கு!
மூணேமுக்கால்மைல் தூரத்துலே ஓடும் ஆற்றுத்தண்ணீரை, சுட்டகளிமண் (டெர்ரகோட்டா) குழாய்கள் வழியா இங்கே கொண்டுவந்து, அது மேலிருந்து கீழே விழும்போது, ஒரு ஃபேன் விசிறியைச் சுத்திவிட, அது சுழலும்போது திருகைக்கல் சுத்தும் விதம் அமைச்சுருக்காங்க. அந்தக் காலத்துலே எவ்ளோ அற்புதமான யோசனை பாருங்க ! வில்லேஜ் விஞ்ஞானம்! ( இதே போல  தண்ணீரின் விசையால் சுழலும் ப்ரேயர் வீல்ஸ் முக்திநாத் கோவிலில் பார்த்தமே நினைவிருக்கோ? )
இங்கே இருக்கும் திருகைக்கல்லைப் போய்ப் பார்க்க முடியுமாம்.  தனிப்பட்ட ஆளுக்குக் காசு கொடுத்தால் கூட்டிப்போய் காட்டுவாராம்.  ஆனால் அதுக்கான விவரம் ஒன்னும் அப்போ  நமக்குத் தெரியாமப் போச்சே.... அதனால் பார்க்கலை. அதுக்காக விடமுடியுமோ?   புண்ணியவான் யாரோ இங்கே யூட்யூபில் போட்டுவச்சது  இருக்கு.  ஒரு ஆறு நிமிட் வீடியோ க்ளிப். அதையே நாமும் பார்க்கலாம் ! அன்னாருக்கு நன்றி !

அதுக்கான சுட்டி ஒன்னும் கீழே கொடுத்துருக்கேன். எது வேலை செய்யுதோ அது !

https://www.youtube.com/embed/l--fCNJ94Dg

முஸாஃபிர் பாபாவுடைய சமாதியும் (Hazrat Mohammed Saeed. Musafir Baba) அவருடைய சிஷ்யப்பிள்ளை  Mohammed Ashur (also called Baba shah) சமாதியும்தான் உள்ளே இருக்கு!  இப்பவும் நிறையப்பேர் இங்கே வேண்டிக்கறதாகவும்,  அந்த வேண்டுதல்கள் நிறைவேறுவதாகவும்  சொல்றாங்க.  நம்பிக்கை வச்சாத்தான் கடவுள் என்பது ரொம்பச் சரி, இல்லையோ?   இந்த சூஃபி ஞானிகள் நம்ம சித்தர்கள் போலன்னு  நினைக்கிறேன்.

மறுபடி ஆலமரம் வழியாக் கடைகளைக் கடந்து வெளியே போகும்போது, ஒரு கடையில் வச்சுருந்த வளைகள் கண்ணை  இழுத்தது.  மகளுக்காக   ஒரு ஜோடி வாங்கினேன். உண்மையில் இது ஒன்னு மட்டும் போட்டால் போதும்தான். ஆனால் தனி வளையல் விக்கறதில்லையாம்.  அப்ப வேறொரு  டிஸைன் மிக்ஸ் &  மேட்ச்சா  வாங்கலாமுன்னா அதுவும் முடியாதாம்.  போகட்டும், ஆளுக்கு ஒன்னு ஆச்சு :-)
விலைகூட அதிகமில்லை.....   ஜோடி நூத்தியம்பது ரூதான்.  பொதுவா நான் வாங்குற சமாச்சாரங்களை எங்கூர் டாலரில் மாத்திக் கணக்குப் பார்த்துக்குவேன். சின்ன எண்ணாக வருமே,  அதுக்குத்தான்! ஜஸ்டிஃபை பண்ணனுமா இல்லையா ?  ஹாஹா
தொடரும்.... ..  :-)

12 comments:

said...

செல்லங்கள் .படம் அழகு.  ஐம்பத்திரெண்டு கேட்டுகளையும் ஒரே ஆளா ஓடிஓடி இழுத்து மூடுவார்? 104 ஆட்களையாவது வைத்திருக்க மாட்டாரா மன்னர்?!!

said...

வாங்க ஸ்ரீராம்,

ரொம்பச் சரி. ஆனால் அம்பத்திரெண்டும் ஒரே இடத்தில் இருக்குமோ? ஊரைச் சுத்தி ஓடிப்போய் தகவல் சொல்ல என்ன ஏற்பாடுன்னு தெரியலையே.... முரசு அறைதலா இருக்குமோ!

அப்பப்பார்த்து ஒரு கேட்டுக்காரன் டீ குடிக்கப்போயிருந்தான்னா? :-)

said...

அருமை நன்றி

said...

எத்தனை தகவல்கள்.... அனைத்தும் சிறப்பு.

52 வாயில்கள்! பிரமிப்பு.

தண்ணீரால் இயங்கும் இயந்திரம்! அந்தக் காலத்திலேயே எப்படியெல்லாம் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

தகவல்கள், படங்கள் என அனைத்துமே சிறப்பு.

தொடரட்டும் பதிவுகள்.

said...

https://www.youtube.com/watch?v=1L5Pt4BLeos

said...

தண்ணீரால் இயங்கும் மாவு இயந்திரம் நல்ல யுக்தி. இத்தனை வாயில்கள் ஆச்சரியம்.

said...

மூணேமுக்கால்மைல் தூரத்துலே ஓடும் ஆற்றுத்தண்ணீரை, சுட்டகளிமண் (டெர்ரகோட்டா) குழாய்கள் வழியா இங்கே கொண்டுவந்து, அது மேலிருந்து கீழே விழும்போது, ஒரு ஃபேன் விசிறியைச் சுத்திவிட, அது சுழலும்போது திருகைக்கல் சுத்தும் விதம் அமைச்சுருக்காங்க. அந்தக் காலத்துலே எவ்ளோ அற்புதமான யோசனை பாருங்க ! வில்லேஜ் விஞ்ஞானம்! ....




அடடா...என்ன ஒரு அமைப்பு...படிக்கவே வியப்பா இருக்கு..

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

சனம் சட்னு ஊருக்குள் வர்றதுக்கு எல்லாத்திசையிலும் வாசல்கள் வச்சதும் கூட ஒரு சிறப்புதான், இல்லே!

ஆனாலும் இத்தனை எதுக்குன்னுதான் இன்னும் புரியலை !

said...

வாங்க கலை,

சுட்டிக்கு நன்றி !

said...

வாங்க மாதேவி,


ஆமாம்ப்பா !!

said...

வாங்க அனுப்ரேம்,

நம்ம வில்லேஜ் விஞ்ஞானம் சூப்பர் !