Wednesday, February 12, 2020

அஜந்தா குகைக்குள்ளே ..... ( பயணத்தொடர் 2020 பகுதி 13 )

இதோ முதல் குகை வந்தாச்சு.  இறக்கி வச்சாங்க. நன்றி சொல்லிட்டு எழுந்து உள்ளே போனேன். வெறும் ஓவியங்கள் மட்டுமில்லாமல்  சிற்பங்களும், சிலைகளும் கூட இருக்கு. இந்தக்குகைகளில்  சைத்யா ன்னு சொல்ற  குகைகள் புத்தர் சிலை/உருவம் வைத்து வழிபாடு செய்யும் கோவில்.  விஹாரா (விஹாரை)னு  சொல்ற குகைகள், புத்த சந்யாசிகள் தங்கும் மடங்கள். இங்கேயும்  சிலைகளும் சிற்பங்களும் இருக்குதான். நம்ம வீடுகளில் பூஜை அறைகள் போலன்னு.... சொல்லலாம்.




புத்தஜாதகக் கதைகளின்  சம்பவக்காட்சிகளைதான் ஓவியங்களா  வரைஞ்சு தள்ளி இருக்காங்க. புத்தர் முன்பிறவிகளில் என்னவாக இருந்தார், எப்படி அனைத்து உயிர்களையும்  காத்தருளினார்னு விளக்கும்  ஓவியங்கள்.       ( கௌதம புத்தருக்கு முன் ஏராளமான புத்தர்கள் இருந்துருக்காங்க.......)



பிரமாண்டமான தூண்கள் பனிரெண்டிலும் அழகான வேலைப்பாடுகள். கருவறையில் புத்தர்  'இருந்தார்' நிலையில்.  கைகள் பிடிக்கும் முத்திரை 'தர்மசக்ர ப்ரவர்த்தனா'
குகையை விட்டு வெளியே வந்தவுடன் தாயும் சேயுமா ஒரு தரிசனம்!  ஹைய்யோ.... என்ன அழகுடா !  நல்லா இருங்க!



அடுத்த ரெண்டாவது குகை, ஏறக்குறைய முதல் குகையைப் போலவேதான். மெல்லிஸான வெளிச்சம் போட்டு வச்சுருக்காங்க.  இதுவும் ஒரு அழகாத்தான் இருக்கு.



புஷ்பகவிமானம் ராவணன், ஜடாயு..........
கைடு வேணுமான்னு கேட்டார் ஒருவர்.  இங்கே வேலை செய்யறவர்தான்.  சார்ஜ் எவ்ளோன்னு கேட்டதுக்கு உங்க இஷ்டம்னார். சரி.  ஆய்க்கோட்டே....
சித்திரங்களையும் துண்களையும் காமிச்சு விளக்கம் சொல்லிக்கிட்டே போனார், 'நம்மவராண்டை'  !  கூடவே நான் போனாலும்.... அங்கே இங்கேன்னு க்ளிக்கிக்கிட்டு இருந்தேனா.... சரியாக் காதில் விழலை...
எவ்ளோ பெரிய பூசணிக்காயை நீங்க இதுவரை பார்த்துருக்கீங்க? ன்னார்..... நம்ம வீட்டுலே பெருசா ஒன்னும் காய்க்கலையே............ விதானத்துலே லைட் அடிச்சு( சின்ன டார்ச் வச்சிருக்கார்) காமிச்சார். ரெண்டுபேர் சேர்ந்து தூக்கறாங்க.
  நீல சாக்ஸ் போட்டுருக்கார் ஒருவர்.   ஓ.... அப்பவே சாக்ஸா !!!





யுனெஸ்கோ, உலகப்பாரம்பரிய இடங்களில் ஒன்னா  எல்லோரா போலவே இந்த அஜந்தாவையும் வரிசையில் சேர்த்தது 1983 இல்.  நாலாம் நம்பர் குகை, சுத்திவரத் தூண்களோடு பெரிய விஸ்தாரமான கூடம்.  இங்கே புகைப்படக் கண்காட்சி ஒன்னு இப்ப வச்சுருக்காங்க.  நாம் அங்கே போனது டிசம்பர் நாலாம் தேதி. இப்போ ஒரு பத்துநாளைக்கு முந்திதான்  உலகப் பாரம்பரிய வாரம் னு ஒரு வாரம் விழா நடத்தி இருக்காங்க.  அந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதி இப்போ நம்ம கண்முன்னே.... படங்களாக!

பத்தாம் எண் குகையை எப்படி சீரமைச்சாங்கன்னு படங்கள் சொல்லுது!  ஆஹா.....

இந்த வருஷத்து இன்னொரு விசேஷம்.... அஜந்தா குகையை கேப்டன் ஜான் ஸ்மித் தற்செயலாக் கண்டறிஞ்சு இருநூறு வருஷங்களாச்சு !

அப்போ அவர் என்ன செஞ்சுருக்கார் தெரியுமோ? ஒரு ஓவியத்தில் தன்னுடைய பெயரையும், தான் வந்த தேதியையும்  கிறுக்கி வச்சுட்டு வந்துருக்கார்.... (விஷமி....!)

There Smith got out his hunting knife and inscribed over the body of a Bodhisattva (a previous incarnation of the Buddha) the words: "John Smith, 28th cavalry, 28 April 1819."



பள்ளிக்கூடப்பசங்க  குழு ஒன்னு வந்துச்சு.  பெரிய பிள்ளைகள்தான்.
குகை வாசலில் ஒரு அறிவிப்பு போட்டுருந்தாங்க. ஒரே சமயத்துலே  எல்லோரையும் ஒன்னா உள்ளே அனுமதிக்க மாட்டாங்களாம்.  ஒரு நாப்பது பேரை மட்டும் அனுப்புவாங்களாம். காமணி நேரம்தான் அதிகபட்சமா நாம் குகையில் இருக்கலாம்.  ஒவ்வொரு    கால்மணி நேரத்துக்கப்புறம், ஒரு அஞ்சு நிமிட் குகைக்குள்  யாரையும்  அனுமதிக்கறதில்லை.

நாங்களும்  பத்தாம் எண் குகைக்குப் போனப்ப,  கொஞ்ச நேரம் காத்திருந்துதான் உள்ளே போனோம். உள்ளே இருக்கும் விளக்குகள்  காமணி நேரம்தான் எரியுமோ?  அதை ரீஸெட் செய்யத்தான்  அந்த அஞ்சு நிமிட்டோ என்னவோ?

(டீஸல் பவர்னு நினைக்கிறேன்.....  இப்பதான் ஸோலார் பேனல்ஸ் வந்தாச்சே.....  சூரியசக்தி இலவசம் இல்லையோ..... அதுக்கு மாறப்டாதா? )



ஒரு ரெண்டடுக்கு குகையாண்டை வந்ததும் வாய்பிளந்து நின்னேன். ஹைய்யோ.... நம்ம யானை !  அதுவும் பெரூசு!  வாசலுக்கு ரெண்டு பக்கமும் யானைகள் நிக்க, நாம் உள்ளே நுழைஞ்சு படிகளேறிப்போறோம்.
மாடிக்குகையும்  ரொம்பவே பெருசாத்தான் இருக்கு! இங்கேயும் கைடு ஒருவர் கிடைச்சார்.  உண்மையில் இப்படி ஒரு கைடு இருந்தால்தான்  ஓவியங்களில் உள்ள நுணுக்கமான சமாச்சாரங்களைத் தெரிஞ்சுக்க முடியும். நாமும் ஒரு மூணு குகைகளில் கிடைச்ச கைடுகளைப் பயன்படுத்திக்கிட்டோம். இவ்ளோ சார்ஜ்னு வற்புறுத்தியெல்லாம் கேக்கலை. நம்ம இஷ்டமே!  அதிகப்பட்சம் நூறு நம்ம கணக்கில். ஒரு பத்து நிமிட் வேலைதான்!

 அநேகமா எல்லா ஒவியங்களும் நிறம் போயும், பழுதாகியும்தான் இருக்கின்றன. அதிலும்  நாம் புத்தமதம் சேர்ந்தவர்களா இருந்தால் கொஞ்சத்துக்குக் கொஞ்சம் புத்தமதப்பிரிவுகள்,  புத்த ஜாதகக் கதைகளின் விவரமாவது தெரிஞ்சுருக்கும்.  எனக்கு புத்தரைப் பற்றிய அறிவு கொஞ்சமே கொஞ்சம்தான்....   இளம் குழந்தையையும், மனைவியையும்  விட்டுட்டுப் போனாரேன்னு   மனத்தாங்கலும்  உண்டு.  அரசகுடும்பம் என்பதால், அவர் பிரிவுக்குப்பின்னும் பொருளாதார ரீதியில் குறை ஒன்னும் இருந்துருக்காது. இதுவே ஒரு எளிய குடும்பமுன்னா....  அந்த இளம் மனைவி, கைக்குழந்தையோடு  என்ன பாடு பட்டுருப்பாங்கன்னு நினைச்சால் என் மனசு கொதிச்சுப்போகும்........ கடமை தவறிய  தகப்பன்..  ப்ச்....
மாயாதேவியின் கனவில் வெள்ளையானை வந்தது
 பெண், அலங்காரபூஷிதையாக.....


  பிக்ஷை வாங்க வரும் புத்தர்
ஷாமியானா பந்தல் போட்டு விழா நடத்தறாங்க !!!!

இந்த ஓவியங்களையெல்லாம் மூலிகைச்சாறு கொண்டு வரைஞ்சாங்கன்னு நான் கேள்விப்பட்டது உண்மையில்லைன்னு பழங்காலச் சரித்திரக்குழு சொல்லுது.  குகையின் கற்சுவரில்  களிமண்ணும் சாணகமும் (புலியோட சாணி? ) சேர்த்துப் பூசி அந்த மேடுபள்ளத்தையும், சொரசொரப்பான சுவரையும் சமப்படுத்தி அதுக்குமேல் சுண்ணாம்புக் கலவையைப் பூசிவிட்டு, இது முழுக்கக்காயுமுன் ஈரப்பதம் இருக்கும்போதே....  வண்ணவண்ணக் கற்களைப் பொடிச்சுத் தூளாக்கி அதையே வச்சு வரைஞ்ச ஓவியங்களாம். ( இருக்கும்தான்... இப்போ கூட ஜெம் ஸ்டோன் துகள் வச்சு வரைஞ்ச ஓவியமுன்னு விக்குதுதானே? என்னாண்டையே  வச்சுருக்கேனே.....)
குகைத்தரையில் அங்கங்கே சின்னக்குழிகள்  வெட்டி இருக்காங்க.... வண்ணக் கற்களை இடிச்சுத் தூளாக்க !
விஹாரைகளில் சின்னச்சின்ன அறைகளாக வெட்டி வச்சுருக்காங்க. பிக்ஷுக்களின் படுக்கை அறை.  தரையெல்லாம் கரடுமுரடுதான்.  பாவம் எப்படித்தான் படுத்துத் தூங்கினாங்களோ?  அறைக்குள்ளே கும்மிருட்டு வேற !   வாசலை விட்டுட்டு வெளியே கூடத்தின் சுவர்கள் முழுக்க ஓவியங்களே !  மேலே குகையின் உட்புற விதானத்திலும் கூட !

ஓவியங்கள் மட்டுமில்லாமல் சிற்பங்களையும் செதுக்கி இருக்காங்க. தேவர்கள், காந்தர்வர், மனிதர், மிருகம், பறவைன்னு எதையும் விட்டு வைக்கலை.  ஓவியங்களிலும் இப்படியேதான்!   அதிலும் யானைகள் அதிகம் !  என்னதான் சொல்லுங்க.... யானை ஒரு கவர்ச்சியான மிருகம்தான், இல்லே!  அதோட சைஸ் காரணமோ ?

அப்புறம் சிற்பங்களில் பெண்கள்........  அதீத அழகோடு இருக்காங்க. சந்யாசிக்குப்  பெண்ணுடலின் நெளிவுசுளிவு எப்படித் தெரிஞ்சதுன்னு.... இன்னும் கூட எனக்கு ஒரு சந்தேகம் இருக்கத்தான் செய்யுது.... (ச்சீ... அடங்கு மனசே... எப்பப் பார்த்தாலும், எதைப் பார்த்தாலும்,  எதையாவது சொல்லிக்கிட்டே இருக்கே... ) 

இங்கேயும் எல்லாக் குகைகளையும் போய்ப் பார்க்க முடியாது. சிலபல குகைகளில் ஒன்னுமே இல்லையாம். தோண்டும் வேலை பாதியில் நின்னு போயிருக்கு. சிலதில் உள்ளே சரியான பாதுகாப்பு இல்லாம இடிஞ்சு போயிருக்கு.  அதனால்  நமக்குப் பார்க்கக்கிடைச்சதெல்லாம் 1  2  3  4   9 10 16 17 ன்னு எட்டு குகைகளே! 
மலைகளின் அடிவாரத்தில் ஓடும் ஆற்றின் பெயர்  வாகுர்  ( Waghur), இந்தப் பகுதி புலிகள் வாழ்ந்துவந்த பகுதின்றதுக்கு சான்று. மராத்தி மொழியில் புலி = வாகா (Whaga)
அதான் புலிவேட்டைன்னு வரப்போய், நமக்கு இந்தக்குகைகள் விவரம் வெளிவந்தது!
இந்த ஆற்றைக் கடந்து அந்தாண்டை இருக்கும் மலைக்குப்போக ஒரு நீளமான பாலம் போட்டுருக்காங்க. இந்த மலையில் இருக்கும் ஒரு கிராமத்தில்தான் நம்மைச் சுமந்துவந்த நால்வரும் வசிக்கிறாங்களாம். நண்பர்கள் நால்வரும் வெவ்வேறு மதம் சார்ந்தவர்கள்.  ஹிந்து, க்றிஸ்டியானிட்டி, இஸ்லாம், பௌத்தம் !

எதிர்மலையில் இருக்கும் வீட்டிலிருந்து தினமும் நாலு கிமீ  நடந்து இங்கே இந்த வேலைக்கு வர்றாங்களாம். நால்வரும் சொன்னது இதுதான்.... 'தகப்பன்கள் குடிகாரர்களாக இருந்து குடும்பத்தைக் கவனிக்காமல், பிள்ளைகுட்டிகளைப் படிக்க வைக்காமல், குடிச்சுக்குடிச்சே சீக்கிரம் மண்டையைப் போட்டதால்,  பிழைக்க வேற வழி இல்லாம இப்படி டோலி சுமக்கும் வேலைக்கு வந்துட்டோம்.'

உங்க பிள்ளைகளையாவது படிக்க வைக்கறீங்களா இல்லையா?  "படிக்க வைக்கிறோம்மா.  அங்கே மலையில் இருக்கும் பள்ளிக்கூடத்துக்குப் பசங்க தினமும் மலைப்பாதையில் நாலைஞ்சு கிமீட்டர் நடந்துதான் போய் வர்றாங்க. அங்கே முடிச்சுட்டால்  பெரிய பள்ளிக்கூடத்துக்கு இங்கே அஜந்தா (ஊர்)வந்துதான்  ஆகணும். "

கீழே இறங்கி வரும்போது  சரிவுப்பாதையில்  போகாமல் படிகள் வழியாவே தப தபனு இறங்கிட்டதால் சட்னு  கீழே போய்க் சேர்ந்து, 'நம்மவர்' வருகைக்காகக் காத்திருந்தப்பப் பேசுனதுதான்.  இவர் வந்து சேர்ந்ததும் அவுங்களுக்குச் சேர வேண்டிய டோலி சார்ஜுடன்,  கொஞ்சம் அதிகமாகவே அன்பளிப்பும் கொடுத்துட்டு, சில க்ளிக்ஸும் ஆச்சு.
(இவுங்க பெயர்களைத்தான் ஒரு  பேப்பரில் எழுதி வச்சது இப்பக் கிடைக்கலை.  பார்க்கலாம். 'துண்டுக்கடுதாசி' கிடைச்சால் இங்கே பெயர்களைச் சேர்த்துடலாம்)

இப்பதான் நிறைய தினுசுலே  சக்கரநாற்காலிகள் வந்துருச்சே... அதைப்போல இருந்தால் சுமப்பவர்களுக்குத் தோள்வலி வராமல் இருக்குமே......  உருட்டிக்கிட்டே கொண்டு போகலாம்தானே!

நால்வருக்கு  நன்றி சொல்லிட்டு நகர்ந்தோம்.  இங்கேயே  டிக்கெட் ஆஃபீஸுக்குப் பக்கம்  மஹாராஷ்ட்ரா சுற்றுலாக் கழகம் நடத்தும் ரெஸ்ட்டாரண்ட் இருக்கு.  பகல் ரெண்டு மணிக்குக்கிட்டே ஆனதால்  லஞ்ச் முடிச்சுக்கலாமுன்னு 'நம்மவர்' சொல்றார்.  நம்ம நதீம் காத்திருப்பாரே.... அவருக்கு எப்படி சாப்பாடு?  கார்பார்க் பக்கம் எங்கியாவது சாப்பிடச் சொல்லலாமுன்னா.... மலைப்பகுதியா இருக்கறதால் செல்ஃபோன் வேலை செய்யலை.  சிக்னல் இல்லை...  ப்ச்....
நாங்க ரெஸ்ட்டாரண்டுக்குள்  போனோம்.  ரெஸ்ட் ரூம்  வசதிகள்  ஓரளவு  பரவாயில்லை....
தாலி மீல்ஸ்.... எதுக்குதான் இவ்ளோ அதிக அளவில் கொடுக்கறாங்கன்னு தெரியலை. இதில் அரைவாசியே நமக்கு அதிகம் இல்லையோ.... கறிகள் பயங்கரக் காரம் என்பதால் கொஞ்சம் சாதம் அண்ட் பருப்போடு நான் முடிச்சுக்கிட்டேன்.

வெளித்தோட்டம் கடந்தால் பஸ் நிறுத்தம். அதே இருபது ரூ ஆளுக்கு! கீழே வந்து சேர்ந்து, ஆத்துப்பாலம் கடந்து வந்தால் ராஜ் ரெடியா நிக்கறார் நம்மைப் பிடிக்க :-)

அம்மா ஆதரவாளராச்சேன்னு எதாவது நினைவுப்பொருட்கள் வாங்கலாமுன்னா... மனசுக்குப் பிடிச்சமாதிரி ஒன்னும் இல்லை. அப்புறம்  அஜந்தா குகைக் கல்லில் செதுக்கிய குட்டிச் சிற்பம் ஒன்னு உள்ளங்கையில் அடங்கும் அளவு காமிச்சாரா.... ஓக்கேன்னு தோணுச்சு. ஆனால் விலை படியலை....  வேணாமுன்னாலும் விடறதில்லைப்பா....
நாங்க  கடைப்பகுதியை விட்டுக் கார்பார்க் தேடிப் போகும்போதும் பின்னாலேயே வர்றார் ராஜ்.

போறவழியில் தங்குமிடங்கள் இருக்குன்னதும், எப்படி இருக்குன்னு பார்க்கலாம். நல்லா இருந்தால்,  இங்கே வந்து தங்கிட்டு நாளைக்கு இங்கிருந்தே போனால் ஆச்சு, இல்லே?
அங்கே போனால் தனித்தனி காட்டேஜ்  அஞ்சு இருக்கு. மஹாராஷ்ட்ரா  சுற்றுலாக் கழகம் நடத்துது. அங்கத்துப் பொறுப்பாளரிடம் ஒரு காட்டேஜைத் திறந்து காட்டச் சொன்னோம்.  பரவாயில்லை. சுத்தம் தான்.  ஆனால்  என்னவோ சரி இல்லாதது போல் இருக்குன்னார் 'நம்மவர்'. தனியா காட்டுக்குள்ளே இருக்கணுமான்றார்....

பக்கத்துலே ஒரு ரெண்டு கிமீ தொலைவில் ஃபர்தாபூர் என்ற இடத்திலும் மஹாராஷ்ட்ரா  சுற்றுலாக் கழகம்  ரிஸார்ட் வச்சுருக்காங்கன்ற விவரம் அப்போதான் அங்கே கிடைச்சது. ஆஹா.....   28 அறைகளும்,  ஒரு டார்மிட்டரியும் இருக்காம்!

நாம் இங்கே  வர ஏற்பாடு செஞ்சுக்கிட்டு இருந்த சமயம், வலைவீசியதில் அந்தப் பகுதியில் ஹொட்டேல் வ்யூ பாய்ன்ட் மட்டும் இருப்பதாகச் சொன்னதால் அங்கே ரூம் புக் பண்ணோம். இப்படி இந்த விவரங்கள் தெரியாமப் போச்சே......  போகட்டும், துளசிதளத்தில் போட்டு வச்சால் யாருக்காவது பயனாகும்,இல்லே?
ஃபர்தாபூர் போய்ப் பார்க்கலாமான்னு  இருக்கும்போதே.... எங்க ரெண்டு பேருக்கும் ஒரே நேரம் ஒரே ஐடியா வந்துச்சு.  பேசாம நாம் திரும்பி ஔரங்காபாத் போயிட்டால் என்ன?  அதான் அஜந்தா குகைகளைப் பார்த்தாச்சே.  மணி மூணுதான் இப்போ.  ஹொட்டேல் வ்யூபாய்ன்ட் போய்  அறையைக் காலி செஞ்சுட்டு நாலு மணிக்குக் கிளம்பினாலும் ஏழுக்குள் ஔரங்காபாத் போயிடமாட்டோம்? ஒருநாள் வாடகை போனால் போகட்டும், கிளம்பலாம். 

கார்பார்க்கில் நதீமைத் தேடிப்போறோம்.  இப்பவும் ராஜ் நம்ம கூடவே வர்றார். ரொம்ப கஷ்ட நிலையில் இருக்காராம்.  நம்ம பேரத்தை இன்னும் கொஞ்சம்  உயர்த்தி, அதை வாங்கிக்கிட்டேன். போகட்டும்.... இப்போ  அறை வாடகை தொலையட்டுமுன்னு  இருக்கோமில்லை... அதைப்போல ஆகட்டும்.... போங்க.
அரைக்கண் மூடாத பத்மபாணி  சிற்பம் இப்போ என்னிடம் :-)  அஜந்தான்னா அரைக்கண் மூடியிருக்க வேண்டாமோ? முழிச்சுப் பார்த்தா நல்லவா இருக்கு? என்னவோ போங்க.....

திரும்பிப்போகும் சமாச்சாரம் நதீமிடம் சொல்லி, அவருக்கு ஓக்கேவான்னு கேட்டதுக்குப் 'போயிடலாம் . பிரச்சினை இல்லை'ன்னார்.

விஸிட்டர்ஸ் சென்ட்டர் ஒன்னு ரொம்ப நல்லாக் கட்டி இருக்காங்கன்னு போர்ட் பார்த்தும் அங்கே போகலை. நம்ம பழைய திட்டத்தின்படி ஒருநாள் இங்கே தங்கி இதையெல்லாம் பார்த்துட்டு, மறுநாள் ஔரங்காபாத் திரும்பும் முன்னால் அந்த வ்யூபாய்ன்ட் போய் அங்கிருந்து குகைகளைப் பார்த்துட்டு அப்படியே   ஏர்ப்போர்ட் போறோம். அதையெல்லாம் இப்போ  மாத்தியாச்.
அரைமணியில் ஹொட்டேல் வ்யூ பாய்ன்ட் போய்ச் சேர்ந்தாச்.  நதீம் பகல் சாப்பாடை மிஸ் பண்ணிட்டார் என்றதால்  இங்கே கீழே இருக்கும் ரெஸ்ட்டாரண்டில் அவருக்கு ஒரு பிரியாணியும், நம்ம மூணு பேருக்கும் சாயாவும்  ஆச்சு.
சாப்பிட்டு முடிச்சதும் ஓனர் மாலிக் அவர்களிடம், அறையைக் காலி செய்யறோமுன்னதும் அவருக்குத் திகைப்பாப் போயிருச்சு. 'ஏன் எதுக்கு'ன்னு கவலையோடு கேட்டார்.  அதான் அஜந்தா வந்த வேலை சீக்கிரமாவே முடிஞ்சது. பகல் வெளிச்சம் இருக்கும்போதே   திரும்பி ஔரங்காபாத் போயிட்டால், நாளைக்கு   நிதானமா ஏர்ப்போட் போகலாமுன்னதும்... மனசில்லா மனதோடு    தலையை ஆட்டினார்.
நம்ம சைய்யது பொட்டிகளை எடுத்துவந்து  வண்டியில் வச்சார்.  இவுங்க செல்லம் டாமி, நல்ல உயரம்!  ரொம்ப ஃப்ரண்ட்லிதான் !

போற வழியிலேயே அம்பாஸிடர் அஜந்தாவுக்கு ஃபோன் செஞ்சு ' இன்றைக்கு ஒரு  அறை வேணுமு'ன்னா.... எல்லாம் ஃபுல்னு சொல்றாங்க.  இன்னொரு கல்யாண வீட்டுக்காரங்க வந்துட்டாங்க போல..... அஷ்வினிக்கு ஃபோன் செஞ்சால்  ரிங் மட்டும் போகுது....  பழையபடி மேக் மை ட்ரிப்லே  புக்  பண்ணால் கிடைச்சது. அது எப்படி? எல்லாத்தையும் ப்ளாக் பண்ணி வச்சுடறாங்க போல.....

ஆறரை மணிக்கு ஊருக்குள் வந்துட்டோம். கொஞ்சம் தயிர் வாங்கிக்கலாமேன்னு நல்ல கடையா நிறுத்தச் சொன்னால்....  நதீம்,  ஒரு தயிர் ஸ்பெஷலிஸ்ட் கடைக்கு எதிரில்  நிறுத்திட்டு, தானே போய் வாங்கி வந்தார். (ரோடைக் கடக்கணுமேன்னு நான் போகலை )  'நம்மவரும்' கூடவே போய் கொய்யாப்பழங்கள்னு நினைச்சுக் கொய்யாக்காய்களை வாங்கியாந்தார். இருட்டிப் போச்சுல்லெ :-)

நம்ம அல்ஃபா டூர் கம்பெனி ஆஃபீஸுக்குப்போய், ப்ளான் மாறிப்போய் இன்னைக்கே திரும்பிட்டோமுன்னு சொல்லி, மறுநாளைக்கு ஏர்ப்போர்ட் ட்ராப்க்கும் சேர்த்து பில் போடச் சொன்னால் கம்ப்யூட்டர் டௌன்.  அப்புறம்  சேதி அனுப்பறோமுன்னு சொன்னாங்க. ஓவர்நைட் ஸ்டே இல்லாததால் ரெண்டாயிரம் கம்மியாச்சு.

ஒரு ஏழு மணி போல அம்பாஸிடர் அஜந்தாவுலே செக்கின் ஆச்சு.  காலையில் நாம் விட்டுப்போன அறை, இப்போ நம்மை விட்டுப்போச்சு....  அதுக்குக் கல்யாணவீட்டுக்காரர்கள் வந்துட்டாங்க.

அதே மாடியில் இன்னொரு அறை கிடைச்சது. போகட்டும்.... இன்றைக்கு ஓரிரவு தானே!

தொடரும்..........:-)


9 comments:

said...

மிக மிக சிறப்பு. நல்ல வர்ணனை. நன்றி.

said...

சிறப்பு அருமை நன்றி

said...

அழகான ஓவியங்கள்.

நிறைய விவரங்கள். பயன்படும் - எனது பயணம் அங்கே இருந்தால்! :)

தொடர்கிறேன்.

said...

அப்பப்ப....


எத்தனை எத்தனை அற்புதமான ஓவியங்கள்....

கண் கொள்ளா காட்சிகள் அனைத்து...😍😍😍😍

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா,

நன்றி !

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

விவரங்களை அங்கே போகும் சமயம் பயன்படுத்தினால் ஆச்சு ! இல்லையோ ?

பல ஓவியங்கள் சிதைஞ்சு போனதுதான் மனசுக்குக் கஷ்டம்.... ப்ச்....

said...

வாங்க அனுப்ரேம்,

இவ்வளவாவது கிடைத்ததேன்னு சந்தோஷப்படறதா இல்லை... இன்னும் நல்லாப் பாதுகாத்து வைக்கலாமேன்னு வருத்தப்படறதா?

எத்தனை அற்புதம்!

said...

மிகஅழகிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஓவியங்கள். கண்டு மகிழ்ந்தோம்.நேரடியாக காண கொடுத்து இருக்குமா தெரியவில்லை. எமதுநாட்டின் சிகிரிய ஓவியங்கள் கண்டிருக்கிறேன் காசியப்ப மன்னரால் அமைக்கப்பட்டவை இவற்றில் அஜந்தா,சித்தனவாசல் ஓவியங்களின் சாயல் இருக்கிறது என்கிறார்கள்.