Friday, February 21, 2020

தாமரையை மீண்டும் சந்தித்தோம் ! (பயணத்தொடர் 2020 பகுதி 17 )

அடுத்துப்போனது இன்னொரு உறவை சந்திக்கத்தான். சமீபகாலச் சொந்தம் (ஒரு அஞ்சாறு வருஷம் இருக்குமோ?) என்றாலும் பிணைப்பு இறுகிப்போச்சு :-)
மூத்த பத்திரிகையாளர்!  அந்தக் காலத்தில் பத்திரிகைத் துறையில் பெண்கள் நுழைவதும், ஜெயிப்பதும்  ரொம்பவே கஷ்டம்தான்.  இப்போ ஃபேஸ்புக் ப்ரபலம்!

போன சந்திப்பில் இப்படி .....   அன்புமழையில் நனைந்தேன் 

கலைப்பொருட்களின் கைவேலைகளில் மன்னி ! (மன்னரின் பெண்பால் ) பன்முகத் திறமையாளர்!!!  எதையும் விட்டு வச்சதில்லையாக்கும், கேட்டோ!

கடந்த ஆறு மாசங்களா....   கிடப்புதான். அறுவை சிகிச்சை நடந்துருக்கு !  அப்பவும்  கைகள் சும்மா  இருக்கோ? மணிமாலைகள் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. இதுலே அவுங்களைப் பார்த்துக்கும் உதவியாளருக்கும்  இந்தக் கலையைச் சொல்லிக் கொடுத்தாச்சு !

வர்றோமுன்னு தகவல் அனுப்பியதும், ரொம்ப மகிழ்ச்சியா 'வா வா'ன்னுட்டாங்க. 'நம்மவருக்குத்தான்' அவுங்களைத் தொந்திரவு செய்யறோமோன்னு   ஒரு தயக்கம். போற வழியிலேயே எனக்கு உபதேசம் ஆரம்பிச்சது. "ரொம்பத் தொணத்தொணன்னு பேசாதே. அவுங்க ரெஸ்ட் எடுக்கட்டும்."  தலையை ஆட்டினேன்.
உதவியாளரின் உதவியுடன் புடவை கட்டிக்கிட்டு  வாக்கர் வச்சுக்கிட்டு மெள்ள நடந்து வந்தாங்க. பத்தடி நடக்கும்போதே களைப்பு தெரிஞ்சது.  முகத்தில்  வலியை மீறிய  மகிழ்ச்சி!  'ஆறுமாசத்துக்கப்புறம் இன்றைக்குத்தான் புடவை கட்டி இருக்கேன்'  ஆஹா.... துல்ஸிக்கான ஸ்பெஷல் தரிசனம்! கிடப்பில் இருந்ததால்  வசதியை முன்னிட்டு முடியைக் குறைச்சுருக்காங்க.  சிக்குப்பிடிச்சுக் கிடந்தால் அது(வும்) ஒரு வலி இல்லையோ ?
இன்னொரு மகளாக மருமகள் லதா ராஜாவின் அன்பான கவனிப்பில்  உடல் மெள்ளத்தேறி வருது. ஏற்கெனவே (போனமுறை) இவுங்களை சந்தித்த பரிச்சயம் இருப்பதால் சகஜமான பேச்சும், சிரிப்புமா நேரம் போனதே தெரியலை.
வச்சுக்கொடுக்கணும் என்ற நியதியை விடமாட்டாங்க போல....   செஞ்சு வச்சுருக்கும் மணிமாலைகளில் எதாவது எடுத்துக்கணுமுன்னு அன்புக் கட்டளை :-) இங்கே நான் என்ன பண்ணப்போறேன்? ( பேசாம  ஒன்னு எடுத்துக்கிட்டு, ஆக்ஸஸெர்ரீஸ் இருக்கு, அதுக்கேத்த புடவை இல்லைன்னு ஒன்னு வாங்கி இருக்கலாமில்லை? பாவம்.... 'நம்மவர்' போகட்டும் ) வேணாமுன்னு மறுத்ததும்,   வாங்கி வச்ச மணிகளைக் கொடுத்தாங்க.  அந்த நல்ல மனசை நோகடிக்க வேணாமேன்னு  'பவழம்' எடுத்துக்கிட்டேன். கூடவே ஒரு பென்டன்ட்டும் !

பத்மா மணி அம்மாவை, சின்ன வயதுத் தோழிகளில் தமிழ் ஆர்வமுள்ள சிலர்  தாமரைன்னுதான் கூப்பிடுவாங்களாம். பத்மம் = தாமரை இல்லையோ!  பள்ளிக்கூடத்தில்  சேர்க்கும் போது  பத்மாசனின்னு  பெயரைக் கொடுத்துட்டாங்க......
(அவுங்களே சொன்னதுதான்....

துளசி. உன் மனதில் இந்த ' தாமரை' பூத்துக்கொண்டேயிருக்கும்..

சில நெருங்கிய தமிழ் ஆர்வ நண்பிகள் என்னை தாமரை என்றுதான் அழைப்பார்கள். சிலர் பத்மம் என்று அழைப்பார்கள் பள்ளி நாட்களில் என் நண்பி சுலோசனா பத்மினி என்றுதான் அழைப்பாள்.

ஏன் தெரியுமா, அரை கிளாசில் சேர்க்க மாடியாத்து கமலா மாமி தன் இடுப்பில் என்னைத்தூக்கிக்கொண்டு மெமோரியல் ஹால் தெருவில் உள்ள எட்டியப்ப நாயக்கர்எலிமெண்டரி ஸ்கூலில் என்னைச்சேர்த்தபோது என் பெயர் பத்மாசனி என்று கொடுத்து விட்டார் . சனி என்று முடிவதில் என். நண்பிகளுக்கு விருப்பமில்லை அதனால்தான் இத்தனை பெயர்மாற்றம் அலுவலகம் சேர்ந்த பிறகு திருமணத்திற்கு பிறகு கணவர் மணி என்பதால் சனி போய் மணி வந்தது.

ஆமாம்... பத்மாசினி இல்லையோ?  இப்பதான் எனக்கு ஞாபகம் வருது.... என்னுடைய சின்ன வயதில் (வேலை பார்த்த காலம்! ) என்னுடன் பத்மாசினி என்ற தோழி இருந்தாங்க.  ஆஃபீஸில் எதோ ஒரு சிந்தனையில்  ஆழ்ந்துபோய் இருந்த சமயம்,  மேலாளர் அவுங்களைப் பார்த்துட்டு, 'பத்மாசனி, என்ன யோசனை?' னு கேட்டதுக்கு 'சனி இல்லை. சினி. பத்மாசினின்னு சொல்லுங்கோ. ஆமாம்...மனுஷன்னா யோசனையே இருக்காதா?' கேட்டதும்  நாங்கெல்லாம் 'கொல்'லுன்னு சிரிச்சுட்டோம் :-)
இன்றைக்கு ரெண்டு பெரியவர்களின் சந்திப்பினால் சந்தோஷம் மனசு பூரா நிறைஞ்சுருக்க, அப்படியே அண்ணன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம்.   பேச விஷயங்களா இல்லை? :-)


காலையில் இருந்து சுத்திக்கிட்டு இருக்கோம். ட்ரைவருக்குக் களைப்பா இருக்குமுன்னு 'நம்மவர்'  கவலை.  திரும்ப லோட்டஸ் வரும்போது மணி ஏழு.

நம்ம பத்மா மணி அவர்களைப்பற்றி இன்னும் தெரிஞ்சுக்கணுமுன்னா.... ஃபேஸ்புக்கில் பாருங்க.  பத்திரிகையாளர் என்ற வகையில்  அவர் சந்திக்காத பிரபலங்களே இல்லையாக்கும்!

தொடரும்........ :-)


5 comments:

said...

மிகச் சிறப்பு, அருமை, நன்றி;

said...

சிறப்பான சந்திப்பு.

தொடரட்டும் சந்திப்புகள்.

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

நன்றி!

said...

மகிழ்சியான சந்திப்பு.