Monday, February 10, 2020

அஜந்தா பார்க்கப்போகலாமா? ( பயணத்தொடர் 2020 பகுதி 12 )

அஜந்தா........ ஹைய்யோ !   பழையகாலக் கல்கியில்  மணியம் அவர்கள் வரைந்த படங்களில் அரைக்கண் மூடுனாப்போல இருக்கும் ஓவியங்கள் எல்லாம் அஜந்தான்னு அக்காக்கள் சொன்னது இன்னும் நினைவிருக்கு!
மஹாராஷ்ட்ரா ஸ்டேட் ஹைவே எட்டு.  நில்லோட், ஸில்லோட், பாலோட்ன்னு   ஊர்கள் பெயர்.....   இதுலே ஸில்லோட்தான் கொஞ்சம் பெரிய ஊர்.  ஒரு கடையில்  'நோ சண்டே, நோ மண்டே ஒன்லி அண்டே'ன்னு....    முட்டைக்கடை :-)  நகைச்சுவை மிக்க ஓனர் !

கரும்பும் பருத்தியுமா   விளைச்சல்....   இந்தப் பருத்திப் புடவைதான் அந்த ஹிம்ரூ இல்லே?

சாலைகளை விரிவுபடுத்திப் புதுசா  நாலு லேன் ரோடு போடறாங்க. பல இடங்களில் ஊர்ந்துதான் போறோம்... ப்ச்....இந்த அழகில் போனால் சாயங்காலம்தான் போய்ச் சேருவோம் போல....

ஆனால் என்ன ஆச்சரியம்...........   பத்தே முக்காலுக்கே ஹொட்டேல் வ்யூ பாய்ண்ட் வந்துட்டோம்.

அஜந்தா ஊரில்  ஒருநாள் தங்கி, ஓவியங்களை 'நல்லா' ரசிச்சுட்டு, மறுநாள்  கிளம்பி  நேரா ஔரங்காபாத் ஏர்ப்போர்ட் வந்துடணும் என்றதுதான் நம்ம ப்ளான். ஹொட்டேல் நல்லதா இருக்கான்னு வலைவீசுனதில் வ்யூபாய்ன்ட் ஆப்ட்டது. அது ஒன்னுதான் இருக்காம்!  ப்யூர் வெஜ்  ரெஸ்ட்டாரண்ட் வேற ! வாவ் !!!!   அங்கெதான் தங்கறோம்.
வாசலில் செக்கவுட் பண்ணிக்கிட்டு இருந்த ப்ரிட்டிஷ் குடும்பத்தோடு ஒரு நலம் விசாரிப்பு.  ஹொட்டேல் வசதி எப்படி இருக்குன்னு கேட்டதுக்கு 'ஸோ ஸோ' ன்னாங்க. நியூஸிக்கெல்லாம் வந்துருக்காங்களாம். அதுவும் நம்மூர்லே சிலகாலம் தங்கி வேலைபார்த்தாராம். இதுபோதாதா..... நமக்கு:-)  க்ளிக் க்ளிக்.....
கீழே கடையும், மாடியில் தங்கும் அறைகளுமா இருக்கு.  செக்கின் செஞ்சுட்டு மாடிக்குப் போனோம். ஓனர்  மாலிக்  அவர்கள் ரொம்ப நல்லவரா இருக்கார்.
நாங்க  வலையில்  (மேக் மை ட்ரிப்) பார்த்து புக் பண்ணியதால் விலை கூடுதலா இருக்குன்னும், நேரடியா இவரிடம் புக் பண்ணி இருந்தால்  இன்னும் குறைவுன்னார்.  'அதைக் கேன்ஸல் செஞ்சுருங்க. இங்கே புக் பண்ணிடலாமு'ன்னு சொன்னார்தான்.... ஆனால் நமக்கு அது கேன்ஸல் ஆகவே இல்லை.... தொலையட்டும்.... வேற வழி?
பெரிய முற்றமும்,  சுத்திவர அறைகளுமான அமைப்பு. நல்ல காற்றோட்டம் இருக்கு.  முற்றத்தில் கூட்டமா உக்கார்ந்து வானம் பார்த்தபடி கதை பேசலாம் :-)
எல்லாஞ்சரி. ஃப்ரெஷப் பண்ணிக்க நம்ம அறையில் இருக்கும் ரெஸ்ட்ரூம் போனேன். ஐயோ.....  அப்பாஸ் வர்ற விளம்பரம் எல்லாம்  வட இந்தியாவில் காமிக்கறதில்லை போல.......  சுடுதண்ணியும்  வராதாம்.  காலையில் குளிக்க, பக்கெட்டில் தண்ணி கொண்டு வந்து தருவேன்னார் ரூம் பாய் சைய்யது.
என்ன இப்படி இருக்கேன்னு.....   ஜஸ்ட் ஒரு இரவுதானே.... காலையில் கிளம்பிருவோமே..... 

சரி வாங்க,  வந்த  வேலையைப் பார்க்கலாம்...... நிறைய நடக்கவேண்டி இருக்குமுன்னு இந்த  அஜந்தா எல்லோராப் பயணத்துக்குன்னே ஷூஸ் கொண்டு போயிருந்தேன்.  எல்லோராவுக்கு அதை போட்டுக்கலை. இப்ப மறக்காம எடுத்துப் போட்டுக்கிட்டேன்.  ஓ மை அஜந்தா.... ஹியர் ஐ கம்...........  சலோ....
இங்கிருந்து இன்னும் ஒரு பதிநாலு கிமீ  போகணும் குகைகளுக்கு.  கார்பார்க் பெருசாத்தான் இருக்கு.  நதீம்  குகைக்கு வரலையாம்.  நாங்க இறங்கிப்போனோம்.   நினைவுப்பொருட்கள், தீனி, தண்ணீர்  விற்கும்  கடைகள்  ஒரு பத்துப்பதினைஞ்சு.
அதுலே ஒரு கடைக்காரர் (பெயர் ராஜ்) கடைக்குள் வாங்க வாங்கன்னு  ரொம்பவே வற்புறுத்திக் கூப்பிட்டாரேன்னு எட்டிப் பார்த்தால்,  ஒரு படம் மட்டும் பார்த்துட்டுப் போங்கன்னு அவர்  காமிச்ச படம் யாரோடது தெரியுமா?  'அம்மா' !!!!  அட!
திரும்பி வரும்போது இந்தக் கடையில் எதாவது வாங்கிக்கணும். இப்போ நேரமில்லை.....   அவரே நம்மோடு அடுத்த பகுதிக்கு வர்றார். கூடவே அவருடைய நாய் டோனி !

தோட்டம் கடந்து ஒரு சின்ன பாலம். அதுக்கு அந்தாண்டை ஷட்டில் பஸ்  சென்டர்.  இங்கிருந்து பஸ்ஸில்  குகை இருக்கும் பகுதிக்குப் போகணும். நாலு கி மீட்டர் தூரமாம். தனியார் வண்டிகளுக்கு அனுமதி இல்லை.
இருபது ரூ டிக்கெட்.  ஒரு வண்டியும் கிளம்பலையேன்னா.... அப்பதான் ஓட்டுநர்கள் வர்றாங்க.  டீ டைம் !
டீ குடிக்கும் பழக்கம் இல்லாதவர், மத்தவங்களுக்காகக் காத்திருந்தார். கூடவே நாமும். க்றிஸ்டல் வாங்கிக்கோன்னு  ஒருத்தர் தொந்திரவு செஞ்சுக்கிட்டே இருந்தார்.  வரும்போது பார்க்கலாமுன்னா....  இதை வாங்கினால் உடனே நல்லது நடக்கும்னார்.  உண்மைதான்.... அவருக்கு நல்லது
நடக்கும்தானே...
அதுக்குள்ளே பஸ் கிளம்புச்சு. ஒரு பத்து நிமிட் பயணம்தான். மலைப்பாதையில் மேலேறிப்போறோம். கீழே  பள்ளத்தாக்கில்  ஆறு ஒன்னு.... நல்ல உயரத்துக்குத்தான் போறோம் போல.... எழுபத்தியாறு மீட்டர் உயரமாம்.....


ஒரு கல் கட்டடத்தாண்டை பஸ் நின்னது.  தொல்பொருள் இலாகாவினர்  வரவேற்பு.......   கட்டடத்தைச் சுத்திப்பின்பக்கம் போனால் டிக்கெட் கவுண்ட்டர். இந்தியர்களுக்கு முப்பது. வெளிநாட்டவர்க்கு  ஐநூறு.   கூடவே ஒரு அஞ்சு ரூ லைட் சார்ஜ்.   இருட்டுக்குகைகளுக்குள்  வெளிச்சம் போட்டுக் காமிக்க. நாலு குகைகள் ரொம்ப இருட்டாம். ஒன்னரை மணி நேரத்துக்கு வெளிச்சம் போடுவாங்களாம்(! )  அட!  ரொம்பவே மலிவு இல்லையோ?

கீழே ஓடும் ஆற்றோரத்தில் இருந்து உசரக்கே சுமார் 76 மீட்டரில் இருக்கும் மலைப்பகுதியில் குகைகளை வெட்டி இருக்காங்க அந்தக் காலத்தில்.  அந்தக் காலமுன்னா ஒரு ரெண்டாயிரத்து இருநூற்று இருபது வருஷங்களுக்கு முன்....  ( கிமு 200ன்னு  சொல்றாங்க.  அந்த கிமு  எல்லாம்  குகை வெட்டுன காலத்தில்  ஏது? அதுவும் நம்ம பாரதத்தில்! இல்லையோ.....  அதனால் நாம் அந்தக்காலம் பத்திச் சொல்லும்போது  ரெண்டாயிரத்தைக் கூட்டிக்கிட்டால் ஆச்சு.....  நாம இப்படிக்காப் போலாமே.... என்ன நாஞ்சொல்றது?

கீழே ஆற்றோரத்திலிருந்து  மலை ஏறிவர படிக்கட்டாட்டம்  வெட்டி வச்சு ஏறி இறங்கி இருக்காங்க.
மொத்தம் முப்பது குகைகள் இருக்கு. ஆரம்பிச்ச வேலையை முடிக்க எட்டு நூறு வருஷங்களாச்சுன்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றதைக் கேக்கும்போதே பிரமிப்பா இருக்கு.  ஹைய்யோ.....   இதே வேலையா  எண்ணூறு வருஷமா?  புத்த சந்யாசிகள் என்பதால்  அவுங்க தலைமுறைகளா  சீடப் பரம்பரைதான் இருந்துருக்கணும், இல்லையோ !!!!
இப்ப நாம் பார்க்கும்போது குகைகள் தனித்தனியாத் தெரிய கீழே பொதுவான பாதை  அமைப்பு இருக்கு. எல்லாம் நம்ம தொல்துறையினர் செஞ்சு வச்சதுதான். இல்லேன்னா நாம் எப்படி இங்கெல்லாம் போய்ப் பார்த்து ரசிக்க முடியும் சொல்லுங்க !  இங்கே ஒரு பதினைஞ்சு கிமீ தூரத்துலே குகைகளுக்கான வ்யூ பாய்ன்ட் ஒன்னு இருக்காம். அங்கே இருந்து பார்த்தால்  குகைகளின் அமைப்புகள்  குதிரை லாடம் டிஸைனில் தெரியுமாம். பார்க்கலாம், நாளைக் காலை அங்கே போய் பார்த்துட்டுப் போனால் ஆச்சு....

மலையும் காடுமா இருந்த பகுதியில்  மரங்கள் அடர்ந்து வளர்ந்து  குகைகளே கண்மறைவா ஆகிப்போச்சு.  ஒரு வெள்ளைக்காரர், கேப்டன் ஜான் ஸ்மித் (பிரிட்டிஷார் நம்ம நாட்டைப் புடிச்சு வச்சு ஆண்டுக்கிட்டு இருந்த காலக்கட்டம்) எதோ புலிவேட்டையாடன்னு காட்டுக்குள்ளே வந்தவர்                ( ஏப்ரல்  18, 1819)  இல் எதேச்சையாக் கண்டு பிடிச்சுச் சொல்ல,  'இப்படியா சமாச்சாரம்'னு பிரமிச்சுப்போனவங்க....  இதைக் கொஞ்சம் என்ன ஏதுன்னு 'தோண்டித்துருவி'ப் பார்க்க இந்த  முப்பது குகைகள் வரிசைகட்டி இருந்தது  வெளிச்சத்துக்கு வந்துருக்கு!

ஆனா அதுக்கு முன்னாலேயே அங்கே  சுத்துவட்டாரத்தில் இருந்த மலைவாசிகள்   பலர் குகையைப் பார்த்துவச்சுக்கிட்டு, உள்ளே இருக்கும் 'சாமி'யைப் பூப்போட்டுக் கும்பிட்டு வந்துருக்காங்க !  வெளியுலகத்தோடு அவுங்களுக்குத் தொடர்பில்லாததால்  சமாச்சாரம் அவுங்களோடு மட்டும் தங்கிப்போச்சு.
ஆனா... சும்மாச் சொல்லக்கூடாது.....  இந்த  வெள்ளைக்கார சனத்துக்கு  பயமில்லாமக் காடுமேடுகளிலும், கடல்தண்ணியிலும் தேடுதல் வேட்கை/வேட்டை அதிகம்தான்.  அப்படித்தேடித்தானே  பூலோகத்தின் பலபகுதிகளைக் கண்டடைஞ்சாங்க (நியூஸி உட்பட) இல்லையோ !  நம்ம அங்கோர்வாட் இருக்கும்  கம்போடியாப் பகுதிக் கோவில்களைக்கூட இப்படியான ஒரு தேடுதலில்தான் கண்டடைஞ்சாங்கன்னு...  சரித்திரம் சொல்லுதே!
டிக்கெட்டை வாங்குன கையோடு குகைகளுக்குப்போகும் வழின்னு அம்பு காமிச்ச இடத்துக்கு வந்தால் சாதுவான படிகள் கொஞ்சம் மேலே  போகுது.  நின்னு நிதானமா ஏற ஆரம்பிச்சேன்.  மணி சரியாப் பனிரெண்டு. நட்ட நடுப்பகல். சாயங்காலம் அஞ்சரைக்கு  வெளியே கேட்டை மூடிருவாங்களாம்.  அஞ்சரை மணி நேரம் இருக்கே போதாது?
சொல்ல மறந்துட்டேனே........  அஜந்தாவுக்குத்  திங்கக்கிழமை  வாராந்திர விடுமுறை.    செவ்வாய்க்கிழமை எல்லோராக் குகைகளுக்கு விடுமுறை. மறக்காம ஞாபகம் வச்சுக்குங்க. இவ்ளோ தூரம் வர்றதே இந்த குகைகளுக்காகத்தானே !

ஒரு செட் படிகள் முடிஞ்சதும்  இப்படி ஒரு தகவல்.  இங்கிருக்கும் படிகள் கொஞ்சம் உயரமா இருக்கேன்னு   சரிவுப்பாதையில் போக முடிவு செஞ்சு அதில் போக ஆரம்பிச்சேன்.  'நம்மவர்'  இன்னும் கொஞ்சம்  ஃபிட்டாக இருப்பதால்  எந்த வழின்னாலும் பிரச்சனை இல்லைன்னுட்டார்.  எல்லாக் குழப்படியும் என்னால்தான் எப்பவும். இந்த கால் மூட்டு, சொன்ன பேச்சைக் கேக்கறதில்லையேப்பா.........
கொஞ்ச தூரம்  சரிவுப்பாதையில் ஏறுனதும்  மூச்சு வாங்க ஆரம்பிச்சது.  நல்லவேளை அங்கங்கே பெஞ்சு போட்டு வச்சுருக்காங்க.  ரெண்டு நிமிட் உக்கார்ந்துட்டு நடக்கலாமுன்னு ஆரம்பிச்சா.....  கூடவே ஒளிஞ்சுருக்கும் ஆஸ்த்மா , இதோ நானும் வெளியே வரேன்னு .......  'நம்மவர்' (வழக்கம்போல்) பயந்துட்டார்.
ஆபத்பாந்தவனா  அங்கே வந்த ஒரு நபர்,  டோலி கொண்டு வரவான்னதும், நான் வேணாம் வேணாமுன்னு சொல்லிக்கிட்டு இருக்கும்போதே......  நம்மவரின் தலையாட்டலால்  வந்தே வந்துருச்சு  டோலி. ரெண்டு பேர் தூக்கி வந்து வச்சாங்களா.... நான் பயந்தே பயந்துட்டேன்.  யானையின் கனம் யானைக்குத் தெரியாதா?
ஏற்கெனவே டோலியின் போன அனுபவம் ஒன்னு இருக்கு, நம்ம சோளிங்கர் மலையேற்ற எபிஸோடுலெ. ஆனா அதைப்போல தொட்டில் இல்லாமல் இது நாற்காலி.  ஏத்தம்தான் என் பிரச்சனை. இறக்கம் ஜூஜுபி. இந்த ஆஸ்த்மா காரணம் ஒரு தடவை பஸந்தி மேலே உக்கார்ந்து போனேன், முக்திநாத் எபிஸோடுலெ :-)
இதுக்குள்ளே இன்னும் ரெண்டு பேர் வந்துட்டாங்க.  முதல்லெ அந்த நாற்காலியில் உக்கார்ந்து  பார்த்துட்டுச் சொல்றேன்னேன்.  நாட் பேட்.
சரிவுப்பாதையிலும் அங்கங்கே படிகள்  வருது.
1951 ஆம் வருஷம்,  இந்தக் குகைகளை நம்ம நாட்டின் முக்கியமான நினைவுச்சின்னம் என்று  அறிவிச்சதும்,  நம்ம தொல்பொருள்துறையின் பொறுப்பில் வந்துருக்கு இந்த இடங்கள்.  மக்களின் பாதுகாப்பு,  போய் வர எளிதான பாதைகள், படிக்கட்டுகள்,  குகைக்குள்ளே இடிஞ்சு விழாமல் இருக்க,  தாங்கும் தூண்கள், வெளிப்புற அமைப்பு இப்படி பலதையும் ரொம்ப நல்லபடியாவே செஞ்சு வச்சுருக்கு நம்ம தொல்பொருள்துறை.

ஓவியங்கள் பலதும் பழுதாகிப்போனாலும், இன்னும் பலதும்  நல்லாவே இருக்கு. இவைகளைப் பாதுகாத்து வைக்கிறது பெரிய சமாச்சாரம் இல்லையா?  அதனாலே மக்கள் ஃப்ளாஷ் இல்லாமல் படம் எடுத்துக்கச் சொல்றாங்க. நல்லவேளை... சில இடங்களைப்போல் படமே எடுக்க அனுமதி இல்லைன்னு மட்டும் சொல்லி இருந்தால்......  நம்ம கதை கந்தல்...  எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துருக்கும், கேட்டோ....
இப்போ நாம் பார்க்கும் ஓவியங்களையெல்லாம் அந்தக் காலத்துலே (1920 - 1922) பாதுகாத்து வச்சது  யாரோட முயற்சின்னா....   ஹைதராபாத் நிஜாம் !  அவரோட ஆளுகை எல்லைக்குள்தான்  இந்தப் பகுதி இருந்ததாம். அந்தக்கால முப்பது லக்ஷம் ரூபாய் செலவில் இவைகளைப் பாதுகாத்தாராம்.  ( அப்போ தங்கம் பவுனு பத்து ரூ. நீங்களே கணக்குக் போட்டுக்குங்க! ) இதுக்காக ரெண்டு ஓவியக்கலை நிபுணர்களை இத்தாலியில் இருந்து வரவழைச்சுருக்கார் !
புதுசா  அஜந்தா  விஸிட்டர்ஸ் சென்ட்டர் ஒன்னு திறந்துருக்காங்களாம். அங்கே இந்தக் குகைகள், ஓவியங்களின்  ரிப்ளிகா ஏற்பாடு செஞ்சுக்கிட்டு இருக்காங்கன்னும், அந்த வேலை முடிஞ்சதும், பயணிகளுக்கு இங்கே குகைக்குள் வந்து பார்க்க அனுமதி இருக்காதுன்னும் ஒரு தகவல் கிடைச்சது....  ஓவியங்களைப் பாதுகாத்து வைக்க வேற வழி இல்லைன்னு இப்படி ஒரு ஏற்பாடாம்........ அச்சச்சோ........  அப்படியா?  நாளைக்கு அந்த விஸிட்டர்ஸ் சென்டரைப்போய்ப் பார்க்கணும்.
நாலுபேர் தூக்கட்டுமுன்னு விட்டுட்டு 'நம்மவர்' பாட்டுக்கு விடுவிடுன்னு முன்னால் நடந்து போய்க்கிட்டு இருக்கார். கனம் தாங்காமல் தொபுக்கடீர்னு  கீழே போட்டுட்டால் திரும்பிப் பார்ப்பார் போல :-)   எதுக்கு ஓட்டம்னு கேட்டதுக்கு.... முன்னால் போய் நின்னு என்னைப் படம் எடுக்கலாமுன்னு போனாராம்!

தொடரும்.............. :-)


13 comments:

said...

அஜந்தா பயணம் அருமை. படங்களுக்குக் காத்திருக்கிறேன்.

சோளிங்கர் டோலி அனுபவம் படித்திருக்கிறேன். அஹோபிலம் டோலியில்லாமல் எப்படிப் போனீர்கள் என்று மறுபடி படிக்கணும். நான் இரண்டு நரசிம்ஹர் சன்னதி (பார்க்கவ, பாவன) சேவிக்க டிராக்டர் பயணம் கொஞ்சம் கஷ்டப்பட்டேன். அதிலும் பார்க்கவ. டிராக்டர் பயணம் கஷ்டத்திலும் கஷ்டமாக இருந்தது.

said...

அஜந்தா மற்றும் எல்லோரா குகை ஓவியங்கள் பார்க்க இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

உங்கள் பகிர்வு மூலம் காட்சிகள் பார்க்கக் கிடைத்தது. ஓவியங்களை பார்க்க காத்திருக்கிறேன்.

said...

அருமை நன்றி

//எல்லாக் குழப்படியும் என்னால்தான் எப்பவும்// ஹிஹிஹி;

said...

அஜந்தா எல்லோரா சென்ற்தில்லை படங்களில் பார்த்ததுதான்

said...

வெகு நாள்களாக நான் செல்ல விரும்புகின்ற இடம். அங்கு பயணம் செல்ல உங்கள் பதிவு மிகவும் உதவியாக இருக்கும்.

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

இன்றைக்குத்தான் அஜந்தா குகைக்குள்ளே ஓவியங்கள் பதிவு போட்டுருக்கேன்.

அஹோபிலத்தில் டோலியில் போகலை. என் கனம் தாங்காது அந்த துணி டோலின்னு ....

பார்க்கவ, பாவன் எல்லாம் மனக்கண்ணில் தரிசனம். பத்தில் அஞ்சுதான் போனோம்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நீங்க நினைச்சாப் போகக்கூடிய தூரம்தான். வேளை வரலைன்னுதான் சொல்லணும். பதிவு ஒன்னு போட்டாச்சு. ஏகப்பட்ட படங்களை எடுத்துட்டோம். பேசாம ஆல்பம் ஒன்னு போடணும். அதுக்கும் நேரம் அமையணுமே....

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க ஜிஎம்பி ஐயா,

நலம்தானே? ரொம்ப நாளா உங்க பதிவுகள் ஏதும் வரலையே.............


சில பயணங்கள், உடம்பு நம்ம சொன்ன பேச்சைக் கேக்கும்போதே போனால்தான் உண்டு. சிறுவயதிலேயே பயணத்தைத் தொடங்கணும். நான் ரொம்ப லேட்.....

இப்பவும் நீங்க போகலாம். டோலி சர்வீஸ் இருக்கு. ஆனாலும் கொஞ்சம் நடக்கத்தான் வேணும்.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா,

விரைவில் பயணம் அமையட்டும்!

said...

நாம் பார்க்கும் ஓவியங்களையெல்லாம் அந்தக் காலத்துலே (1920 - 1922) பாதுகாத்து வச்சது யாரோட முயற்சின்னா.... ஹைதராபாத் நிஜாம் ! அவரோட ஆளுகை எல்லைக்குள்தான் இந்தப் பகுதி இருந்ததாம். அந்தக்கால முப்பது லக்ஷம் ரூபாய் செலவில் இவைகளைப் பாதுகாத்தாராம். ......


சிறப்பான தகவல் மா...


said...

வாங்க அனுப்ரேம்,

நன்றிப்பா !

said...

அஜந்தா மிகுந்த ஆவலுடன்........