Monday, September 23, 2019

எட்டாம் வாய்ப்பாடு தெரியும்தானே? எட்டெட்டு.... அறுபத்திநான்கு..... (பயணத்தொடர், பகுதி 146 )

காலை ஒன்பதுக்கு வண்டி வேணுமுன்னு சொல்லி இருந்ததால் எட்டேகாலுக்குப் போய் ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுக்கிட்டோம்.  கல் இட்லி ஒன்னு, வடை ஒன்னு, கொஞ்சம் உப்புமா, ரவையில் செஞ்ச கேக் ஒரு துண்டு.  வண்டி வர்றவரை வெளியே தோட்டத்தில் கொஞ்சம் வேடிக்கை.

ஒன்பதேகாலுக்குக் கிளம்பிப் போனது  சுமார் இருபத்திமூணு கிமீக்கு அந்தாண்டை இருக்கும் அறுபத்திநான்கு யோகினி கோவிலுக்குத்தான்.  புபனேஷ்வர், நம்ம காஞ்சிபுரம் போல ஒரு கோவில் நகரம். தடுக்கி விழுந்தால் அது ஒரு கோவில் வாசலில்தான்.  ஒன்னரை நாள் மட்டும்தான் இங்கே தங்கறோம் என்பதால்  ரொம்ப முக்கியமான (!) சிலபல கோவில்களைத் தரிசிச்சால் போதும்.


ஆத்துப்பாலம், நடவுக்குக் காத்திருக்கும் வயல்கள் எல்லாம் தாண்டி முக்கால் மணிப்பயணத்தில் கோவிலாண்டை போயாச்சு.  ஜோகினி மந்திர்னு ஒரு இடத்தில் கண்ணில் பட்டது. யோகினி டெம்பிள் னும் ஒரு இடத்தில் பார்த்தேன்.
இவுங்களுக்கு இந்த வ போலவே  ய விலும் ஒரு குழப்பம் இருக்கு போல....

 எனக்குத் தெரிஞ்சு ஃப்ரெஞ்சுக்காரர்களுக்குத்தான்  ஜ வராதுன்னும்,   அந்த இடத்துலே  ய  சொல்றாங்கன்னும்....   நம்ம தோழி ஒருவரை ஒரு ஃப்ரெஞ்சுப் பாட்டி 'யயா'ன்னு கூப்பிடுவாங்க.  அந்தப் பாட்டியை மட்டும் நான் அப்பப்ப நினைச்சுக்குவேன். 

ஏன்னா....  நம்ம பழைய வீட்டுலே பேய் இருக்குன்னு  சொன்னதால்....  (என்னை பற்றியா? இல்லையே..... :-)  நாங்க அந்த வீட்டை வாங்கறதுக்கு முன்னாடி.... பேய் இருந்து அதை ஓட்டறதுக்கு ஸ்பெஷல் (க்றித்துவ) பூஜை  எல்லாம் செஞ்சாங்கன்னும்  பேய் அசைவேனான்னு இருந்துட்டதால் வீட்டை (நமக்கு)வித்துட்டுப் போயிட்டாங்கன்னும்..... பத்த வச்சது பாட்டிதான்.   அதான் போல , அந்த வீட்டு வார்ட்ரோப் மேல்தட்டில் ரொம்ப உள்ளடங்கி ஒரு மேரி சிலை இருந்தது. நானே  அங்கே  குடிபோன ரெண்டு மூணு வருசங்கழிச்சுத்தான் கண்டுபிடிச்சேன். அந்த ஃபாத்திமா(Our Lady of Fatima)  இப்போ இங்கே நம்ம வீட்டுலே :-) 

இந்தப் பகுதியை இன்றைக்குக் காலையில் எழுதிக்கிட்டு இருந்தப்ப,  ஆடுமேய்க்கும் சின்னப்பசங்களுக்கு, 102 வருஷங்களுக்கு முன்னே ஃபாத்திமா 'காட்சி' கொடுத்தாங்கன்னதும் கொஞ்சம் விவரம்தேடி வலைவீசினால்.... கடைசியில் தலைசுத்தலே மிச்சம்.  இதுக்குத்தான் இப்படி எதாவது கேட்டால் சரின்னு தலையாட்டிட்டுப் போயிடணுங்கறது...... ஆனா ஒன்னு.... ப்ராச்சீன்னு சொன்னாச் சரி. இதெல்லாம் ஒரு நூறு வருஷ சமாச்சாரம் என்பதால்தான்....  ப்ச்... என்னவோ போங்க......  நம்புனாத்தான் தெய்வம் என்ற பாய்ன்ட் ஒன்னு இருப்பதால்.... நம்பினால் ஆச்சு! 

 பாட்டி சொன்ன  பேய்கூடப் பாருங்க..... நாம் அங்கே இருந்த பதினேழு வருசத்துலே ஒரு நாளாவது நம்ம கண்ணுலே பட்டதோ?  கெட்ட பேய்ப்பா..... அது :-)

போகட்டும்.... நாம் வந்த கோவிலைப் பற்றிப் பார்க்கலாம்.... பூஜை முறைகளில் தாந்த்ரீகம்னு ஒன்னு இருக்கு. இதுலே  சக்தி வழிபாடுதான் முக்கியம். ஆதிபராசக்தி தன்னில் இருந்து எட்டு சக்திகளை உண்டாக்கறாங்க.  அஷ்டமாசக்தி. (சப்தமாதர்களான ப்ராஹ்மிணி, வைஷ்ணவி, மஹேஸ்வரி, இந்த்ராணி, கௌமாரி, வராஹி, சாமுண்டி என்னும் எழுவரோடு  நரஸிம்ஹி என்னும் சிங்க முகத்தாள் ) இந்த அஷ்டமா சக்திகள் ஒவ்வொருவரும் தாங்களே எட்டுசக்திகளாக தோற்றம் எடுக்கறாங்க. எட்டுபேர் எட்டு வகைன்னா எட்டெட்டு அறுபத்துநான்கு ஆச்சா? இந்த அறுபத்துநான்கு பேர்களுக்குமா கட்டுன கோவில்தான் இது.

எட்டுன்றது ஒரு விசேஷ எண். அஷ்டதிக்கு, அஷ்டசித்தி, அஷ்டாங்கயோகம், அஷ்டபந்தனம், அஷ்டலக்ஷ்மி, அஷ்டப்ரபந்தம், அஷ்டவசுக்கள் இப்படி .....   நம்ம கண்ணன் பிறந்ததுகூட ஒரு அஷ்டமிதானே!

ஆமாம் இப்படி எட்டெட்டா அறுபத்திநான்கு தேவியர் எதுக்கு உருவாகணுமாம்? அதுக்கும் ஒரு காரணம் இல்லாமலா போகும்?

ரக்தபீஜன்னு ஒரு அரக்கன் இருந்தான். போர்க்கலையில்  சமர்த்தன்! ருத்ரரை இடைவிடாமல் ஜபிச்சு அவரிடமிருந்து ஒரு  அபூர்வ வரம் வாங்கிக்கிட்டான்.  அவனுடைய உடலில் இருந்து  கீழே விழும்  ஒவ்வொரு துளி ரத்தத்தில் இருந்தும்  ஒரு ரக்தபீஜன்  தோன்றணுமாம். நான் முந்தியே சொல்லி இருக்கேனில்லையா.... சிவன் ஒரு அப்பாவி.  சின்ன தவம் செஞ்சாலே மனம் குளிர்ந்து, 'பக்தா ... உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்' னு சொல்ற வழக்கம் உண்டுன்னு.....

  அதேதான் இப்பவும்.  வரம் வாங்கும் அரக்கன்கள் எல்லாம் தேவர்களை ஹிம்ஸிச்சுட்டுக்  கடைசியில் வரம் தந்தவரையே கொல்ல வருவான்கள். இவரும் ஐயோ தேவி, ஐயோ மச்சான்னு  ஓடிப்போய் உதவி கேட்பார்.

இங்கே ரக்தபீஜனின் அட்டகாசங்கள்  அளவுமீறிப் போனதும்..... தங்க்ஸ் கிட்டே 'என்ன செய்யலாமுன்னு சொல்லு, எனக்கு நீதான் உதவணுமு'ன்னு கேட்டதும்,  இவனுடைய முக்கிய பாய்ன்ட் என்னன்னு பார்த்தால் ரத்தத்துளி  நிலத்தில் விழறதுதான்.  அதைக் கீழே விழுமுன்  பிடிச்சு விழுங்கும் பவர்ஃபுல் சக்தி ஒன்னு வேணும்.  ஒருதுளி கூட தப்பித்தவறிச் சிந்திடக்கூடாது என்பதால்  சக்திகளின் எண்ணிக்கையைக் கூட்டத்தான் வேணும். அதான் சின்னக்கூட்டமா அறுபத்துநான்குபேர்! ஓக்கேவா?

ரக்தபீஜனுடன் பராசக்தி போரை ஆரம்பிச்சாள்.  கடுமையான சண்டை. அறுபத்துநாலுபேர் ஆன் ட்யூட்டியில்!  ரத்தமெல்லாம் இழந்த ரக்தபீஜன் கடைசியில் செத்தொழிஞ்சான்.  அதுக்குப்பிறகு செய்யறதுக்குன்னு ஒரு வேலையும் இல்லாமல் போரடிச்சுக்கிடக்க வேணாமேன்னு யோகினிகள் எல்லோரும்  மானிடகுலத்துக்கு வேண்டியவைகளை தாராளமா அள்ளித்தரும் வேலையைச் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. நாம் செய்ய வேண்டியதெல்லாம் இவுங்களைப் பூஜிப்பது மட்டுமே !  வணங்கிப் பூஜை செய்யணும்.

இந்தப் பகுதிக்கு ஹிராப்பூர்னு பெயர். அந்தக் காலத்துலே இந்தப் பகுதியை ஆட்சி செய்த  அரசி ஹிராதேவியின் பெயரே ஊருக்கும் ஆச்சு! இந்தக் கோவிலைக் கட்டியதும்  இந்த அரசிதானாம். இந்தக் கோவில் தாந்த்ரீக முறைப்படிக் கட்டுன கோவில். இதுவுமே  எட்டாம் இல்லே ஒன்பதாம் நூற்றாண்டு சமாச்சாரம்.
காலப்போக்கில்  மண்மூடிக்கிடந்த இந்தக் கோவிலை, டாக்டர் கேதார்நாத் மஹாபாத்ரா என்ற ஆராய்ச்சியாளர் 1953 ஆம் வருஷம் கண்டுபிடிச்சு வெளிக் கொணர்ந்துருக்கார்.  இவர் ஒரிஸ்ஸா மாநில ம்யூஸியத்து அதிகாரி!  சிதைஞ்சு கிடந்தவைகளைச் சரிப்படுத்தி இப்ப நாம் பார்க்கும் இந்தக் கோவிலை இந்த அளவுக்கு மீண்டும் உருவாக்கித்தந்த  டாக்டர் கேதார்நாத் மஹாபாத்ராவுக்கு எவ்ளோ நன்றி தெரிவிச்சாலும் போதாதுதான் !
இப்பத்  தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால் நல்ல சுத்தமான பராமரிப்புடன் பளிச்னு இருக்கும் வளாகத்துக்குள் நுழையறோம். வாசல் கேட்டாண்டையே  சின்னதா ஒரு கோவில்/ சந்நிதி இருக்கு.
உள்ளே இருக்கும் சாமி,  அகழ்வாராய்ச்சி நடந்த சமயம் பக்கத்துலே இருக்கும் வயல்வெளியில் புதைஞ்சு இருந்தாராம். லிங்க ரூப சிவன். இவரை இங்கே பிரதிஷ்டை செஞ்சு தலைக்குமேல் கூரை இருக்கட்டுமேன்னு  குட்டியா பூஜை மாடம் போல ஒன்னு கட்டிவிட்டுருக்காங்க. இவருக்கு எதிரில் கொஞ்சம் உயரமான மேடையில் ஒரு நந்தி. (அதானே.... கார் இல்லாம முடியாதுல்லே ! )

நந்தி சிலை இருக்கும் பீடத்தில் கீழ்ப்பக்கம் ஒரு ஆஞ்சியை வரைஞ்சு வச்சுருக்காங்க. முதலில்  முருகன்னு நினைச்சேன். வாய் பார்த்தபிறகுதான்....   ஆஞ்சின்னு தெரிஞ்சது :-)


 இந்தாண்டை ஒரு அம்மன்.  பழையகாலத்துச் சிலைதான் !  இதுவும்  வயல்வெளியில் கிடைச்சதுதானாம். மஹாமாயா! இவளுடைய மனசில் இருந்து  அஷ்டசக்திகள் வெளிப்படறதுமாதிரி இருக்கு சிற்பவேலைகளில்! நல்ல அகலமான சிற்பம்தான். தனிச்சிற்பமா இல்லாமல் பெரிய கல்லில் உண்டாக்கிய  செதுக்குச் சிற்பம். அம்மன் என்பதால்  உடைகள் போட்டு வச்சுருக்காங்க. அதனால் சிற்பங்களை முழுசுமாப் பார்க்க முடியலை.

 Chaunsathh  ச்சௌ(ன்)சத்  (ஹிந்தியில் 64 )மந்திர்னு  சொன்னாலும், ஊர்சனத்துக்கு இந்தக் கோவில் மஹாமாயா கோவில்தானாம்.
பண்டிட் சந்தோஷ் திருப்பாதியும்(Santhosh Tirupathi) அவருடைய நண்பர் மனோஜ் மஹாபாத்ராவுமா கோவில் பூஜைபுனஸ்காரங்களைக் கவனிச்சுக்கறாங்க.  'இப்ப எவ்வளவோ பரவாயில்லை..... உள்ளூர் சனம் நிறையப்பேர் வர்றாங்க. முந்திக் காலத்தில் யோகினிகள் என்றாலே ஒரு பயம்தான். அவ்வளவா யாரும் வரமாட்டாங்க. அதுவும் கொஞ்சம் பொழுது சாய்ஞ்சுட்டால்  இந்தப் பக்கம் ஆள் நடமாட்டம் கூட இருக்காது'ன்னார். தாந்த்ரீகமுன்னாலும் .... மாந்த்ரீகமுன்னாலும் பயம் இருக்கத்தானே செய்யும், இல்லையோ?

பண்டிட் சந்தோஷ், நம்மைக் கூட்டிப்போய் யோகினிகள் தரிசனம் செஞ்சுவச்சார். இவர்தான் நமக்கு கைடும் கூட !
வளாகத்தில் கொஞ்ச தூரம் நடந்து  கோவிலுக்கு வந்துருக்கோம். வட்டவடிவமான அமைப்பு.   மேற்கூரை கிடையாது. திறந்த வெளிதான். வட்டமான சுத்துச்சுவரின் வெளிப்பக்கம் நவ கார்த்தியாயினி சிலைகளா ஒன்பது சிற்பங்கள். ஒரு 2.4 மீட்டர் உயரம்தான் இந்த சுவரும். கோவில் சுற்றளவு  27.4 மீட்டராம். பக்காவா அளந்து தகவல்பலகையில் எழுதி வச்சுருக்காங்க.
உள்ளே போக சின்னதா ஒரு வாசல். வாசலுக்கு ரெண்டுபக்கமும் த்வாரபாலகர் போல இருவர். காலன், அகாலன் (கால், அகால்) என்று பெயராம் !உயரக்குறைவான வாசல் என்பதால் தலையைக் கொஞ்சம் தாழ்த்திக்கணும். உள்ளே வட்டத்துக்கு நடுவில் சதுரமா, உயரமான   ஒரு  மேடை அமைப்பு.  சண்டி மண்டபம்.  மேடையின் நடுவில் சாமி சிலை எல்லாம் இல்லை. மேடையின் பக்கவாட்டுச் சுவர்களில்  பக்கத்துக்கு ரெண்டுன்னு  மாடத்தில் சிலைகள்.
உள்பக்கச் சுவரில் சுத்திவர இருக்கும் அறுபத்திநான்கு யோகினிகள் சிலைகளைக் காமிச்சுக்கிட்டே பண்டிட் சந்தோஷ் பாதி ,அவர்கள் பெயரை, மடமடன்னு சொல்லிக்கிட்டே போனார்! சின்ன மஸ்த்தா, பிந்தியா பாஸினி, சாமுண்டின்னு தெரிஞ்ச பெயர்களைக் கேட்டதும் மகிழ்ந்தது உண்மை 😻😻😻
சின்னதா ரெண்டுமூணு வீடியோ க்ளிப் எடுத்தார் 'நம்மவர்'.


சிலைகள் எல்லாம் க்ளோரைட் கற்களில் செதுக்கியவை.  நளினமான வேலைப்பாடுகள் செய்ய எளிதாக இருக்கும் ஒருவகை உப்புக்கல்.  ரொம்ப மிருதுவான கல் போல இருக்கு. இதன் காரணமோ,  காலம் செஞ்ச கோலமோ, இல்லை அந்நியர் அழிச்சதோ......  சிலைகள் எல்லாம்  அங்கங்கே உடைஞ்சும் சிதைஞ்சும் கிடக்கு.  ஆனாலும்  இருக்கும் சிலைகளின் தலையலங்காரங்களும், முகஅழகும், நிற்கும் ஸ்டைலும் அட்டகாசம். ஒன்னுபோல் ஒன்னு இல்லை.....


சிலைகளின் உயரம் ரெண்டடி இருந்தால் அதிகம்.  சின்ன மாடத்துக்குள் ஒவ்வொன்னும்.... பார்க்க ரெண்டு கண்கள் போதாது நமக்கு!  யானை முகத்தோடு ஒரு கணேஷி கூட உண்டு !

ஆஃப்கானில் இருந்து வந்த ஒரு எதிரி மன்னனின் தளபதி காலாபஹாட் என்றவன் கலிங்கநாட்டுக்குள் புகுந்து ஹிந்துக்கோவில்களை நிறைய அழிச்சுட்டான். அதுலே இந்தக் கோவிலும் ஒன்னுன்னு  கேட்டதும்  மனசுக்குக் கஷ்டமாப் போயிருச்சு....  பெயர் மட்டுமா காலா..... மனசும் காலாதான். இல்லைன்னா இவ்ளோ அழகான சிற்பங்களையெல்லாம் ஒடைச்சுப்போட எப்படி மனசு வந்துருக்கும்? ப்ச்....
வாசலுக்கு நேரே இருக்கும் சண்டி மண்டபத்துக்கு அந்தாண்டை துர்கா ! மூலவர் !   மஹாமாயா துர்கை பத்துக் கைகளுடன்  !!
ஜிலுஜிலுன்னு துணிகள் போட்டு வச்சுருக்காங்க. பூஜைகள் எல்லாம் துர்கைக்கு மட்டும்தான்!   ஒரு சின்ன பூஜையும் ஆச்சு நம்ம குடும்பத்துக்கு.

உள்ளூர் மக்கள்  (ரெண்டு குடும்பங்கள்)வந்து விளக்கேத்திவச்சு கும்பிட்டாங்க.  மக்கள் வரவர, பண்டிட் தரிசனம் பண்ணிவச்சு பூஜையும் நடத்திக் கொடுக்கறார்!


ஏகபாத மூர்த்தி தரிசனம் ஆச்சு.  (உள்ளே உடைஞ்சு போன சிலைகளில் ஏகபாதங்களா சிலபல யோகினிகள் ! )  அறுபத்தி நான்கு சிலைகளில் ஒருத்தர் மிஸ்ஸிங். மாடம் காலியா இருக்கு!  சர்வமங்களா சிலை எதோ ம்யூஸியத்துலே இருக்குன்னார் பண்டிட்.
இந்த யோகினிகள் அப்படியே காற்றில் எழும்பிப் பறந்துக்கிட்டே போவாங்களாம்.  அதுவும் ஒருவர் கையை ஒருவர் பிடிச்சுக்கிட்டு.... எங்கியாவது இறங்கும்போது அப்படியே  நேரா  நிலத்தில் இறங்குவாங்களாம். அதனால்தான் மேற்கூறை இல்லாமல் யோகினி கோவில்களைக் கட்டி வைப்பது வழக்கம் என்றார் பண்டிட் சந்தோஷ் த்ருப்பாதி.
எங்கியோ அத்துவானக்காட்டிலே இப்படி ஒரு கோவிலைப் பார்ப்போமுன்னு நாம் நினைச்சுக்கூடப் பார்க்கலை...  யோகினிகளுக்குக் குறைந்த எண்ணிக்கையில்தான் கோவில்களைக் கட்டி இருக்காங்கன்னும் அவற்றில் இந்த ஹிராப்பூர் கோவில்தான் மூத்ததுன்னும் ஒரு தகவல்.
பழமையான கோவிலைத் தரிசிச்ச மகிழ்ச்சியில் நாமும் அங்கிருந்து கிளம்பினோம். வளாகத்தையொட்டியே ஒரு கால்வாய் ஓடுது. பூரிக்குப் போகுதாம்!  உள்ளுர் சனம் குளிச்சுத் துவைச்சுக்கிட்டு இருந்தாங்க.

மரத்தடி மேடைகளும், வயலுக்கு நடுவில் வீடுகளுமா இங்கே கிராமியச் சூழல்  ரம்மியமா இருக்கு!  சனங்களும்  ஓட்டமும்  பாய்ச்சலுமா இல்லாம  நிம்மதியா இருக்காங்க!

நமக்கும் ஆசையா இருந்தாலும்....  நடக்கற காரியமா?   பயணத்துலே ஓடிக்கிட்டே இருந்தால்தான்  நாலு இடங்களை தரிசிக்க முடியும்....

வாங்க... இன்னும் சில இடங்களைப் பார்த்துக்கலாம்....

தொடரும்......   :-)


17 comments:

said...

//எட்டுன்றது ஒரு விசேஷ எண். // அஷ்டகணபதி - பூனா சுற்றி;

//நம்ம பழைய வீட்டுலே பேய் இருக்குன்னு சொன்னதால்// நீங்க இருந்த இடத்திலேயா ? என்ன தைரியம் அந்த பேய்க்கு ….

said...

யோகினி கோவில்....அதிர்ஷ்டம் செய்தவர்தாம் நீங்கள். காலத்தால் அழிந்துபட்டிருந்தாலும் அந்தக் கோவில்களில் காலடி எடுத்து வச்சிருக்கீங்களே

said...

அறுபத்தி நான்கு யோகினி கோவில் புதுமைதான். சிலைகள் அழிந்துபோய் கிடப்பதுதான் துயரம். இருந்தும் காணகிடைத்தது மகிழ்சி.

said...

வழக்கம்போல் அருமையான விரிவான பதிவு. ஆமாம் ஏன் 2018 இல் எடுத்தது இப்போ போஸ்ட். மேலும் ரெண்டு பேரும் ரொம்ப மெலிஞ்சு இருக்கீங்க , பேலியோவா :)

said...

வாங்க விஸ்வநாத்,

அந்த அஷ்டகண்பதி படம் ( கேலண்டரில் இருந்தது) இந்த 41 வருஷமா நம்மகூடவேதான் இருக்கு. லாமினேட் பண்ணி வச்சுருக்கேன்.

அந்தப்பேய் ஒரு பயந்தாங்கொள்ளி..... பதினேழு வருஷம் அந்த வீட்டுலே நாம் இருந்தும் தலையைக் காமிக்கலைப் பார்த்தீங்களா?

எல்லாம் இரு கோடுகள் தத்துவம்தான் :-)

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

கோவிலை ஒருமாதிரியாத் திரும்பவும் கட்டி வச்சுட்டார் கேதார்நாத் மஹாபாத்ரா. உடைஞ்ச சிலைகளா இருந்தாலும் கொள்ளை அழகு!

said...

வாங்க மாதேவி.

அற்புதம் என்றுதான் சொல்ல வேணும்! ஒவ்வொன்னும் ஒரு ஸ்டைல்ப்பா !!!

said...

வாங்க தேனே!

ரொம்ப நாளுக்கு ரொம்ப நாளு..... நலம்தானே?

போன வருஷம் ஆகஸ்ட் மாசம் எழுதத்தொடங்கிய பயணக்கட்டுரை, கூட்ஸ் வண்டி கணக்கா மெள்ள ஊர்ந்து போய்க்கிட்டு இருக்கு. அதுலே யோகினி ஸ்டேஷன் வர்றது இப்போதான்.....

மெலிஞ்சுட்டோமா!!!! ஹாஹா.... நல்ல கேமெரான்னு நினைக்கிறேன் :-)

said...

கோபால் சாருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

பதினாறு வயது துளசிதளத்திற்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும். பயணம் பல்லாண்டுகளுக்குத் தொடரட்டும்!

said...

படங்களும் பகிர்வும் அருமை. காணொளிகளைத் திறக்க முடியவில்லை.

காலப் போக்கில் சிதிலமடைவது வேறு. இப்படி உடைத்துப் போடப்பட்ட சிற்பங்கள் வருத்தம் அளிக்கின்றன.

said...

வாங்க ராமலக்ஷ்மி,

அடடா..... காணொளிக்கு என்ன ஆச்சு? ஙே...

இந்தச் சுட்டியில் தெரிகிறதா பாருங்கள்....

https://www.facebook.com/gopal.tulsi/posts/10215625762739685

வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி !

said...

அழகான கோவில்... நாங்கள் சென்றபோது இதே போல வேறு ஒரு கோவில் பார்த்தோம்.

said...

இருந்த காலத்தை எட்டெட்டாக பிரித்து எந்த எட்டில் சந்தோஷம் அதிகம் என்று எழுதி இருந்தேனே

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

அநேகமா அங்கே எல்லாக் கோவில்களும் சட்னு பார்க்கும்போது ஒரே மாதிரிதான் தெரியுது. ரொம்ப உத்துப்பார்த்தால் 6 வித்தியாசம் தெரியலாம் :-)

நாங்களும் ஒரு ஏழெட்டு கோவில்கள்தான் போனோம்.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா,

அந்த எட்டாவது எட்டுதானே !

said...

பாட்டி சொன்ன பேய்கூடப் பாருங்க..... நாம் அங்கே இருந்த பதினேழு வருசத்துலே ஒரு நாளாவது நம்ம கண்ணுலே பட்டதோ? கெட்ட பேய்ப்பா..... அது :-).....

ஹாஹா...ஹா...


அறுபத்துநான்கு பேர்களுக்குமா கட்டுன கோவில்தான் இது....அட்டகாசமா இருக்கு மா..சின்ன சின்ன சிலைகள் என யோகினிகள் தரிசனம் மிக அழகு ...

said...

காணொளிகளின் இணைப்புக்கு நன்றி. இவ்வளவு அற்புதமான சிற்பங்களை எப்படித்தான் சிதைக்க மனம் வந்ததோ?