Friday, September 06, 2019

கேட்டது ஒன்னு, கிடைச்சது நாலு ! (பயணத்தொடர், பகுதி 139)

நகாசு வேலைன்னு சொல்வாங்க பாருங்க..... அதை ஒரு சின்னப்பொருளிலோ இல்லை சின்ன இடத்திலோ  செஞ்சுருப்பதைப் பார்த்திருக்கேன். ஆனால் இப்படி ஒரு பெரிய கட்டடம் முழுசும் செஞ்சுருப்பதை  இப்பதான்.....    எவ்ளோதான் கண்களை விரிச்சுவச்சுப் பார்த்தாலும்  கூட அடங்கலைப்பா!
காலையில்  ப்ரேக்ஃபாஸ்ட் போகும்போது கீழே பார்த்தால் புத்தர் அமைதியா உக்கார்ந்துருக்கார். இன்னும் வரவேற்பில் அமளி ஆரம்பிக்கலை.....   டைனிங் ரூம் வழியில் வாமனர் மாதிரி ஒருத்தர் :-)
நமக்கான இட்லி வடைகள், கூடவே கொஞ்சம் வெண்பொங்கல். தினமும் என்ன சட்னி வேண்டி இருக்குன்னு இன்றைக்கு இட்லிமொளகாப்பொடி எடுத்துக்கிட்டேன். இப்பெல்லாம் இட்லி இல்லாத பஃபே ப்ரேக்ஃபாஸ்ட் இல்லவே இல்லை, இந்த மாதிரி நார்த் இண்டியன் ஹொட்டேல்ஸில் ! (நமக்கும் நல்லதாப்போச்சுன்னு வச்சுக்கலாம் !)
ஒன்பது மணிக்கு வண்டி வரணும். என்னமோ  சரி இல்லைன்னு  கோபிந்த் வரும்போதே மணி ஒன்பதரை ஆகி இருந்தது.  இங்கிருந்து சுமார் பத்து கிமீ தூரம் இருக்கும்  ஜெயின் கோவிலுக்குப் போறோம்.  கொல்கத்தாவில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களில் ஒன்னுன்னு நம்மவர்  வலைவீசிப் பிடிச்ச இடம்.

கூகுள்காரன் இருபத்தியஞ்சு நிமிட்ன்னு சொல்லுவாந்தான். அதையெல்லாம் நம்பக்கூடாது நம்ம இந்தியாவைப் பொறுத்தவரை. ரெண்டாம் வாய்ப்பாடு எதுக்கு இருக்காம்?
'ஜெயின் கோவில் நமக்குப் புதுசா என்ன'ன்னு  கொஞ்சம் மமதையோடு உள்ளே நுழைஞ்சவள், அப்படியே வாயடைச்சு நின்னுட்டேன்.
தோட்டத்தின் அழகைச் சொல்லவா.... இல்லை கோவிலின் அழகைச் சொல்லவா...... கோவில் கோபுரம் ஷிகாரா ஸ்டைலில் !  அதுபாட்டுக்கு அடுக்கடுக்காப் போகுது!
இண்டு இடுக்கு விடாம ஒரு இன்லே வொர்க் என்பதை இப்பத்தான் என் வாழ்நாளில் முதல்முறையாப் பார்க்கிறேன்.  'இன்லே'ன்னதும் தாஜ்மஹல் நினைவு வராம இருக்காது.  ஆனால் இது அதைத் தூக்கி விழுங்கிரும்!  ரெண்டும் வெவ்வேறுவகையான கட்டடக் கலை என்றாலும் கூட......

அங்கே பாரசீகத்துக் கட்டடவேலை நிபுணர்கள்  ஒரு  பேரரசரால் கொண்டுவரப்பட்டாங்க.  இங்கே?  ஒரு சாதாரணக் குடிமகன் (செல்வந்தர்தான்) கட்டி இருக்கார். அப்ப எல்லோரும் உள்நாட்டுக் கலைஞர்களாத்தானே இருக்கணும் என்பது என் எண்ணம்.

ஒரு தூணையோ, ஒரு சுவரையோ, ஒரு உள்கூரை விதானத்தையோ, ஒரு தரையையோ விட்டு வைக்கலையேப்பா !!!!!
டூ மச் என்று கண்ணுக்கு மயக்கம் வந்ததும் உண்மை......

ஸ்ரீ ராய் பத்ரிதாஸ் பஹதூர், லக்நோவில் பிறந்து, 21 வயசில்  கல்கத்தாவுக்கு இடம் பெயர்ந்த ஒரு செல்வந்தர். தொழில் தங்கம் சம்பந்தப்பட்டது.  நகைக் கடை !  ராய் பத்ரிதாஸ் பஹதூர் & சன்ஸ். நேர்மையான தொழிலதிபர் என்பதால் ஊருக்குள் கொஞ்சம் நல்ல பெயர், கௌரவம் எல்லாம் கிடைச்சது.(நான் நினைக்கிறேன்  என்னாண்டை இருக்கும்  காளி & க்ருஷ்ணா பதக்கம் இவருடைய கைவேலைப்பாடோ என்னவோ! ) 
இந்தியாவை வெள்ளைக்காரன் ஆட்சி செய்துக்கிட்டு இருந்த சமயம். மாட்சிமை தாங்கிய  மஹாராணி விக்டோரியாவின் ஆட்சிக்குட்பட்ட இந்தியாவில்  அப்போ இருந்த கவர்னர் ஜெனரல் (1871 ஆம் ஆண்டு)  இவரைத் தன் ஆஸ்தான நகைத்தொழில்காரரா நியமிக்கிறார்.

லார்ட் லைட்டன்,   மஹாராணியின் சார்பாக,  தில்லியில் இருந்து வைஸ்ராய் பதவியில் இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த காலத்தில், நம்ம ராய் பத்ரிதாஸ் பஹதூரை தில்லிக்கு வரவழைச்சு மஹாராணியின் பாராட்டுப் பத்திரத்தை வழங்கினாராம்.
இப்படியாகப் பேரும் புகழும் வாய்த்த  ராய் பத்ரிதாஸ், ஒரு பண்ணைவீடு கட்டிக்கலாமுன்னு  இடம் வாங்கிப்போட்டார்.  அப்போ இவருடைய தாயார், 'அந்த இடத்தில் நம்ம சாமிக்கு ஒரு கோவில் கட்டுப்பா'ன்னதும், தாய்சொல்லைத் தட்டாம கோவில் கட்டி இருக்கார். கட்டி முடிக்க இருபத்தியஞ்சு வருஷம் ஆகி இருக்கு! அங்கேதான் இப்ப நாம் நிக்கறோம்.
1910 ஆம் ஆண்டு இவருக்கு ஒரு சிலை வச்சுருக்காங்க, கோவில் வாசலுக்கு முன்னால். நல்லவேளை... இந்த சிலையைப் பார்த்துட்டுத்தான் 'சாமி கிட்டே' போயிருக்கார் 1914 ஆம் ஆண்டு தன்னுடைய எம்பத்திமூணாம் வயசில்!
தோட்டப்பகுதியில் அங்கங்கே அழகழகான சிலைகள், வெள்ளைக்கார ஸ்டைலில். (  ஆமாம்....   இந்தியக் கோவிலில்  இந்த சிலைகள் ஏன்? ஒருவேளைக் கிழக்கிந்தியக் கம்பெனிக்காக இருக்கலாம், இல்லே?)


கோவிலுக்குள்ளே  மூலவர்  ஸ்ரீ ஷீதல்நாத், பளிங்குச் சிலையாய்!  உள்ளே படம் எடுக்கத் தடைன்னு தூணில் எழுதி இருக்காங்க. வாசலில் நின்னு கெமெராக் கண்ணை உள்ளே அனுப்பினதால் தெரிஞ்சது.
மேலே இந்தப் படம்  கோவிலின் வலைப்பக்கத்தில் அவுங்களே போட்டு வச்சுருக்காங்க.  நன்றி !

கோவில் வாசலுக்கு முன்னால் ரெண்டு பக்கமும் யானைகள் ஒரு மண்டபத்துக்குள், முதுகில் ரெண்டு மனிதர்களைச் சுமந்தபடி!  இந்த மண்டபத்தைக்கூட விட்டுவைக்கலைப்பா.... அப்படியே இழைச்சு வச்சுருக்காங்க!

நாம் போனப்ப, சில ஊழியர்கள்,  இந்த வேலைப்பாடுகளில் படியும் தூசிகளைத் துடைச்சுச் சுத்தம் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. கட்டிவிடறது மட்டும் முக்கியம் இல்லை..... இவ்ளோ அருமையானவைகளை மெயின்டெய்ன் செய்யறதும்  அத்யாவசியம் இல்லையோ!

தோட்டத்தில்  அங்கங்கே உக்கார்ந்து ரசிக்க பெஞ்சுகள் போட்டு வச்சுருக்காங்க. நேரம் இருந்தால் இன்னும் நின்னு நிதானமா ரசிக்கலாம். நமக்குத்தான் எதிலும் அவசரமாச்சே...... ப்ச்...
சித்திரங்களுக்குன்னு தனியா ஒரு கட்டடம். உள்ளே வேலைநடப்பதால் எட்டிப் பார்த்துட்டுக் கோவில் புஷ்கரணிப்பக்கம் போனோம்.  ஏகப்பட்டப் புறாக்கள்.... அப்போ அங்கே இருந்த ஒருவர், நம்மிடம் பேச்சுக்கொடுத்துக்கிட்டே (கோவிலைப் பத்திச் சொல்லிக்கிட்டுத்தான்)  தொடர்ந்து வந்தார். பெயர் பாஷா!  செல்ஃப் அப்பாய்ன்டட் கைடு ! வயசு அதிகமில்லை , வெறும் முக்கால் சதம் தான் !
இங்கே இன்னும் சில கோவில்கள் இருக்குன்னு  அங்கிருந்த இன்னொரு கேட் வழியாக் கூட்டிப்போனார் பாஷா.
(இல்லேன்னா  நாம் விவரம் தெரியாமல் திரும்பி வந்துருப்பமோ என்னவோ..... பெருமாள் அனுப்பிச்சார்னு நினைக்கிறேன்) 
ஸ்ரீ ஸ்வேதாம்பர் தாதாஜி கா டெம்பிள் ! இப்பப்  பார்த்துட்டு வந்த ஷீதல்நாத் கோவிலுக்கு நேர் எதிரா  இருக்கும் இந்தக் கோவிலின் நுழைவுவாசலே அட்டகாசமா இருக்கு!
அங்கிருந்து பார்க்கும்போது ... ஹைய்யோ!

தாதாபாரி மந்திர்னு சொல்றாங்க. இந்தக் கோவில் வயசில் மூத்தது. 1810 ஆம் ஆண்டு கட்டி இருக்காங்கன்னு தெரிஞ்சது. இன்லே வொர்க் ஒன்னும் இல்லாத சாதாரண,  அழகானத்  தனிக் கட்டடம். தனியா ஒரு புஷ்கரணியும் உண்டு.  கூடத்தைச் சுத்திவரத் தூண்வரிசைகளும் நடுவிலே மேடையுமா இருக்கும் இதன் உள்ளே குருமார்களுடைய  பாத தரிசனங்கள்.
உள்ளே கருவறையில் நாலு குருமார்களின் சிலைகள். தயவுசெஞ்சு சாமி மேலே காசு (ரூபாய் நோட் & நாணயம்) எறிய வேண்டாமுன்னு போர்டு  வச்சுருக்காங்க. சரின்னுட்டேன் :-) ச்சும்மாக் கும்பிட்டால் ஆச்சு !
இங்கேயும் சின்ன அளவில் தோட்டம் உண்டு. அங்கங்கே 'இந்திய அழகி'களின் சிலைகள்.  இந்த சிலைகள் எல்லாம்  பிற்காலத்தில் வச்சுருப்பாங்க போல.....   பாவம்,  திகம்பர சந்யாசிகள் தோட்டத்தில் அழகிகளுக்கு என்ன வேலை?
சிங்க வாசலைக் கடந்து அடுத்த பகுதிக்குள் நுழையறோம். பெரிய வெளிமுற்றம். ஒருபக்கம் உயரத்துலே கோவில். பதினெட்டுப்படிகள் ஏறிப்போகணும். ஸ்ரீ மஹாவீரருக்கானத் தனிக் கோவில்.

வெளியே பார்க்கும்போது சிம்பிளாக இருந்தாலும் உள்ளே அதே அழகு!  எல்லாம் பளிங்கே!
ஜெயின் மதத்து இருபத்திநான்கு தீர்த்தங்கரர்களுக்கும் ஆதிநாதர் தொடங்கி, மஹாவீரர் வரை (Adinatha, Ajita, Sambhava, Abhinandana, Sumati, Padmaprabha, Suparshva, Chandraprabha, Suvidhi, Shital, Shreyansa, Vasupujya, Vimala, Ananta, Dharma, Shanti, Kunthu, Ara, Malli, Muni Suvrata, Nami, Nemi, Parshva and Mahavira)  சேர்த்தே (ஸ்ரீ சந்த்ரப்ரபு ஜைன் கோவில்) இந்தக் கோவில்களைக் கட்டி இருக்காங்க. நம்ம சார்தாம் மாதிரி, இந்த நாலு கோவில்களையும் சேர்த்து  'கல்கத்தா தீர்த்' னு சொல்றாங்க!
அதான் ஒரு கோவில்னு நினைச்சதுக்கு நாலு மடங்காப் புண்ணியம் கிடைச்சுருச்சு.  உங்க எல்லோருக்கும் பகிர்ந்து கொடுக்கிறேன்!

இந்தக் கோவில்களைக்  காலை 6 முதல் 11 வரையும், மாலை 4 முதல் 7 வரையும் தரிசனத்துக்குத்  திறந்து வைக்கிறாங்க.

தொடரும்...... :-)


7 comments:

said...

ஆஹா... எத்தனை சிறப்பான கலைவண்ணம்...

இந்த வேலைகளைச் செய்து முடிக்க 25 வருடங்கள் ஆனது என்பதில் வியப்பில்லை. எவ்வளவு நகாசு வேலைகள்....

உங்கள் மூலம் நாங்களும் இக்கோவில்களுக்குச் சென்று வந்தோம்.

தொடர்கிறேன்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

முதல் கோவில் மட்டும்தான் இத்தனை அமர்க்களம். மற்ற மூணும் ஆடம்பரமில்லாத அழகே!

அடுத்த கொல்கத்தா பயணத்தில் போயிட்டு வாங்க. உங்க கெமெராவுக்கு நல்ல தீனி !

said...

வாவ்! கோவிலின் அழகு கண்ணை இழுத்துக்கொண்டே போகுது. தோட்டமும் அழகோ...அழகு.

said...

மிக அருமை, நன்றி

said...

வாங்க மாதேவி,

ஆமாம்ப்பா... இன்னும் மனசுக்குள்ளேயே நிக்குது !

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாவ் ...என்ன அழகு ...கண்ணை பறிக்குது மா