Friday, September 27, 2019

தங்கத்துலே பதிச்ச அபூர்வ வைரம்!!! (பயணத்தொடர், பகுதி 148 )

மேகேஷ்வரை தரிசனம் செஞ்ச கையோடு  ஒரு ரெண்டரை கிமீ தூரத்தில் இருக்கும்  முக்தேஸ்வர் கோவிலுக்கு ஒரு பத்துநிமிட்டில்  வந்துட்டோம்.  இது  மெயின் ரோடில் இருந்து கொஞ்சம் உள்ளே தள்ளி இருக்கு.
பெரிய தோட்டம் போலிருக்கும் இடம்.  நாம் போகும் வழியில்  சிலபல காவியுடை அன்பர்கள் , அவுங்க சுமந்து வந்த காவடிகளை, மதில் சுவரில்  'பார்க்' பண்ணிட்டு ஓய்வாப் பேசிக்கிட்டு இருந்தாங்க. அவர்களில் ஒருவரிடம் கொஞ்சம் பேச்சுக்கொடுத்து விசாரிச்சேன்.

காவடியில் இருப்பது அவுங்க ஊர்க் கோவிலின் புஷ்கரணித் தீர்த்தமாம். அதை எடுத்துக்கிட்டுப் பூரி நகருக்குப் பாதயாத்திரை போறாங்களாம்.  அங்கே போனதும், கொண்டுபோகும் தீர்த்த்தை  அங்கத்துக்கோவிலில் அபிஷேகம் செஞ்சுட்டு அங்கிருக்கும் புஷ்கரணியில் இருந்து மறுபடி தீர்த்தம் ரொப்பிக்கிட்டுப்போய் அவுங்க ஊர் கோவிலில் அபிஷேகம் செஞ்சு இந்த பக்தி யாத்திரையைப் பூர்த்தி செய்வாங்களாம். 
இதுவரை எவ்வளவு தூரம் நடந்து வந்தாங்களோ தெரியலை....  இங்கிருந்து சுமார் அறுபத்தியஞ்சு கிமீ  போகணும் பூரிக்கு! பக்தி யாத்திரை என்பதால் காலுக்குக் காலணி கூட இல்லை. வெறுங்காலில் இந்த வெயிலில்  நடந்து அவ்ளோதூரம் போறதை நினைச்சாலே எனக்கு 'திக்'ன்னு இருக்கு!
போற வழியில் அங்கங்கே தங்கி, ஓய்வெடுத்துக்கிட்டுப் போறாங்க. 'நல்லபடியாப் போயிட்டு வாங்க'ன்னுட்டு கோவில் வளாகத்தை நோக்கிப் போனால்.... சித்தேஸ்வரா கோவில்னு போர்டு இருக்கு.  இதுக்குள்ளே நுழைஞ்சால் முக்தேஸ்வரா இருக்கார். சித்தியடைஞ்சால் முக்தி என்பதுதான் உண்மை !

ஒரு அஞ்சாறு படிகள் இறங்கிக் கீழே இருக்கும் முற்றத்துக்குப் போகணும்.  நமக்கிடதுபக்கம்  ஒரு மேடையில் வரிசையா ஆறு சந்நிதிகள். மும்மூணா ரெண்டு செட்.
உள்ளே  சின்னதா சிவலிங்கங்கள் ஒரு சந்நிதியில் மட்டும். ரெண்டு சந்நிதிகளில்  தன்வந்த்ரின்னு நானாக நினைச்சுக்கிட்டேன். கையில் என்னவோ கலசம் ஏந்திய சிலை.... இன்னொன்னில் புள்ளையார் (போல) சிலை.




வலப்பக்கம் ஒரு தனிக் கோவில்.
நேராக் கண்ணுக்கெதிரே அந்தாண்டை  ஒரு மேடைப்பகுதியில் இன்னொரு கோவில்!
6 வித்யாசம் கண்டுபிடிங்கற மாதிரிதான் பெரிய கோவில்கள் எல்லாமே இருக்குன்னாலும்  இந்த வலப்பக்கம் இருக்கும் முக்தேஸ்வர் கொஞ்சம் விசேஷப்பட்டவர்.  10 ஆம் நூற்றாண்டு சமாச்சாரம்.  வழக்கமான கலிங்கக் கட்டடக்கலையில் ஒரு புதுமை புகுத்த ஆரம்பிச்ச காலக்கட்டமாம். கோவிலுக்கு முன்னால் இருக்கும் தோரணவாயில்தான் மனசை அப்படியே கொள்ளையடிக்குது!

உச்சியில் ஒரு முகம் (இதைப்போல ஒரு முகத்தைக் கம்போடியா கோவில்களில் பார்த்த நினைவு) ரெண்டு பக்கங்களிலும்  அப்சரஸ் என்னும் தேவலோக கன்னியர்கள்! ஒய்யாரமா சாய்ஞ்சுருக்காங்க.

தோரண வாசலுக்கு அந்தாண்டைக் கொஞ்சம் இடம்விட்டு, சின்னதா ஒரு ஆள் உயரச் சுத்துச்சுவர். அதுக்கொரு வாசல்.  வாசலுக்குள் நுழைஞ்சு போனால் கோவில் வாசப்படி.  இதுவும் அரைவட்டமா இருக்கு. (கொஞ்ச நேரத்துக்கு முன்னே போன  மேகேஷ்வரிலும் இதே ஸ்டைல்தான். ) மேலே  பத்மாசனத்தில் ஒரு சாமி, நாலு கைகளுடன்.
ஜகமோஹனாவுக்குள் நுழையறோம்.  வாசலுக்கு ரெண்டுபக்கச்சுவர்களிலும்  செடிகொடிபோல வளைஞ்சு போகும் சிற்பத்தைப் பார்க்கணுமே..... மனுஷங்க.....

 நாகஸ்தம்பங்கள்கூட  இருக்குன்னாலும் அவை கோவிலின் பக்கவாட்டுச் சுவர்களில்தான்.

ஜகமோஹனாவில் குறிப்பிட்டுச் சொல்லும்படியா ஒன்னும் இல்லை. மேலே விதானத்தில்  எட்டு இதழ் பூ!  அதைச் சுத்திக் குட்டிகுட்டியா மனித உருவங்கள் போல தேவதைகளைச்  செதுக்கி இருக்காங்க. (சரியான லைட்டிங் இல்லாததால் நம்ம படம் நல்லா வரலை. கூகுளாரிடம் கேட்டதும் கொடுத்தார். நம் நன்றி  !    By the way  கூகுளாருக்கு இன்றைக்குப் பொறந்தநாளாம்.  ஆச்சு 21 வயசு !  நல்லா இருக்கட்டும்.  )

(எத்தனை மனித, தெய்வ உருவங்கள் பாருங்க....)

 அந்தாண்டை  கருவறைக்குப் போகும் வாசல் முகப்பில்   கஜலக்ஷ்மி. கஜலக்ஷ்மியின் தலைக்கு மேலே  நவகிரஹங்கள். கொஞ்சம் பெரிய அளவில் வச்சுருக்காங்க. மற்ற ஏழுபேரைவிட ராஹும் கேதுவும் ஸ்பெஷல்!  கேதுவுக்கு மூணுதலை நாகம் !

கருவறையில் சிவன், லிங்க ரூபத்தில் அமைதியா இருக்கார். தரிசனம் ஆச்சு!
நம்ம பக்கங்களில் கோவில்களுக்கு  முகப்பு வாசலா ராஜகோபுரமும், உள்ளே சந்நிதிகளுக்கு விமானமும் வெவ்வேற ஸ்டைலில் இருப்பதைப்போல்  இங்கே கட்டலை.  ஒரே மாதிரி  கூம்பு வகையில்  சின்னதும் பெருசுமா இருக்கு. நெடுநெடுன்னு உயரமா இருப்பது  மூலவர் கருவறை விமானம்தான்! ரேகான்னு சொல்றாங்க இதை !
கோவில் வெளிப்பக்கச் சுவர்களில்தான்  அப்படிக் கூட்டங்கூட்டமா சிற்பங்கள். இப்பெல்லாம்  க்வில் க்ராஃப்ட்ன்னு பேப்பர் சுருளில் என்னென்னவோ கைவேலை செய்யறாங்க பாருங்க..... கல்லில் அதைப்போலச் சுருள்சுருளா சுத்திவச்சுருக்காங்க....!  என்னதான் மிருதுவான சாண்ட் ஸ்டோன் என்றாலும் கூட.... இப்படி எப்படி? ஹா.....  ன்னு பார்க்கத்தான் வேணும்!

விதவிதமான  போஸில்  நடனப்பெண்கள், சாமிகள், சிங்கங்கள், யானைகள், குதிரைகள், தேவதைகள்னு அட்டகாசம் போங்க.....  சில சிலைகள் எல்லாம்  என் கையில் ஒரு சாண் அளவுதான்!
எதைச் சொல்ல எதை விடன்னு  இருக்கு.... பேசாம ஒரு ஆல்பம் போட்டாகணும்..... செஞ்சுருவோம்....


கல் பலகணி... வெளிச்சத்துக்கு !

கோவிலைச் சுத்திப் பார்த்து அனுபவிக்கணும்! பின்பக்கம்  சுத்துச்சுவருக்கு  அந்தாண்டை கோவில் புஷ்கரணி, நீச்சல் குளம் போல !  பாதயாத்ரீகர்கள்  குதிச்சுக் கும்மாளம் போட்டுக்கிட்டு இருக்காங்க.  படம் எடுத்துக்கிட்டே போன நான், சனம் தண்ணீரில் இருப்பதைப் பார்த்துச் சட்னு நின்னதும்,  'என்னைப்படம் எடு, என்னைப்படம் எடு'ன்னு போஸ் கொடுக்கறாங்க.  க்ளிக்க வேண்டியதாப் போயிருச்சு :-)  

பெரும்பாலும்   இளைஞர் கூட்டம்தான் இப்படிக் கோவிலுக்கு நடையா நடந்து போய்க்கிட்டு இருக்காங்க.
நீச்சல்குளத்துக்கு இந்தாண்டை  ஒரு பத்துப்படிகள் இறங்கிப்போகும் வகையில் இன்னொரு குட்டிக்குளம். மரிசி குண்ட் என்று பெயர்!  கம்பிக்கதவெல்லாம் போட்டு பூட்டி வச்சுருக்காங்க.  ரொம்ப விசேஷமான குளமாம்.  குழந்தை  இல்லாத பெண்கள், இதுலே முங்கி எழுந்தால் 'மகன்' பிறப்பானாம் !!!!!  என்னவோ குழந்தை இல்லாமைக்குக் காரணம் பெண்கள் மட்டும்தான்னு ஒருநினைப்பு அந்தக் காலத்துலே.... ப்ச்....

மக்கள் தொகை அதிகமாகிப்போச்சுன்னு பூட்டி வச்சுருக்காங்க போலன்னு நினைச்சால்... இல்லையாம்.  இந்தக் குளத்துத் தண்ணீரை, குடங்குடமா எடுத்து  ஏலத்தில் வித்துருவாங்கன்னு  ஒடிஷா பத்திரிகை செய்தி! 

அசோகாஷ்டமின்ற நாளில் பெண்கள், மரிசி குண்ட் தண்ணீரில் குளிச்சால்  மகன்  பிறப்பது கேரண்டின்னு .......    ப்ச்.... ( என்னமோ மாதொருபாகன் நினைவு வந்தது உண்மை...... )   
சித்தேஸ்வரரை தரிசனம் செஞ்சுக்கப் பத்துப்படிகள் ஏறிப்போகணும்.  பஞ்சரத அமைப்பாம் !  ஜகமோஹனாவைக் கடந்து கருவறைக்குள் போய் தரிசனம் ஆச்சு.  முக்திக்கும் சித்திக்கும் ஆவுடையார் வெவ்வேறு திசைகளில். வேறொரு வேறுபாடும் தெரியலை. இங்கே சிவன் கொஞ்சம் பெரியவர்னு தோணுச்சு.
இங்கேயும் கருவறை முகப்பில் நவக்ரஹங்கள். கூடவே கீழே இன்னொரு வரிசையில்  செதுக்குச் சிற்பங்கள். யார், என்னன்ற  விவரம் தெரியலை. இதுக்குத்தான் விவரம் உள்ள கைடு வேணுங்கறது.... 
  இதுவரை நாம் இங்கே போன கோவில்களில் இங்கேதான் கூட்டம் அதிகம். இளவயசு மக்கள்  !
முக்தியும் சித்தியும் நமக்கு ஆச்சு.  இந்தப்பகுதியில் இன்னும் ஏகப்பட்டக் கோவில்கள் இருக்கு என்பதால்  இன்னும் சில கோவில்களைப் பார்க்கணும். ம்ம்ம் கிளம்பலாமா?

தொடரும்........... :-)


8 comments:

said...

"கல்லில் சுருள்சுருளாக"
மிக நுண்ணிய வேலைபாடுகள் கல்லில் இப்படியா என திகைக்க வைக்கிறது.

said...

மிக அருமை. நன்றி.

said...

கோவில்களும், சிற்பக் கலைநயமும் மிக அருமை. கண்டிப்பா பார்க்கவேண்டிய கோவில்களைத் தொடராக நீங்கள் தருவது சிறப்பு

said...

அருமையான வேலைப்பாடுகள்....

தொடர்கிறேன்....

said...

வாங்க மாதேவி.

கண்கள் அப்படியே திகைச்சு நின்னது உண்மைப்பா !!!!

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க நெல்லைத்தமிழன்.

கண்டிப்பாப் பார்க்க வேண்டிய கலைஅழகு இது ! சந்தர்ப்பம் கிடைச்சால் விடவே கூடாது!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

ஒரே மாதிரி பிசிறே இல்லாமல் எப்படிச் செதுக்கி இருப்பாங்கன்னு நினைச்சுக்கிட்டே இருக்கேன்!