Monday, September 16, 2019

லிங்கராஜா....... (பயணத்தொடர், பகுதி 143 )

ட்ராவல் டெஸ்கில் ஒரு வண்டிக்குச் சொல்லிட்டு அறைக்குப்போய் ஒரு அரைமணி ஓய்வு. அதுக்குள்ளே வண்டி ரெடின்னு தகவல் வந்துருச்சு. ஏகப்பட்ட கோவில்கள் இருக்கு இங்கெ, இந்த புபனேஷ்வரில்! (இவுங்களுக்கு  வ வராது. I mean only V. But W   வருது. )
எங்கே இருந்து ஆரம்பிக்க?  லிங்கராஜாவாக இருக்கட்டும்!

லிங்கராஜா கோவிலை நடுவிலே வச்சு, சுத்து வட்டாரத்துலே பார்த்தால் சுமார் நூத்தியம்பது கோவில்கள் சின்னதும், கொஞ்சம் பெருசுமா இருக்குன்னு  சுற்றுலாத்துறை கொடுத்த புத்தகத்தில் இருக்கு!  இந்த  மாநிலம் முழுக்க சிவனைக் கும்பிடுபவர்கள்தான்  அதிகமாம். (அப்ப பூரி ? )
சிவன்தான் முக்கியம் என்பதால் ஊருக்கே அவரை வச்சுதான் பெயரே!  த்ரிபுவனேஷ்வர் என்று வச்ச பெயர் புவனேஷ்வராகி இருக்கு.  அவுங்க உச்சரிப்பில் புபனேஷ்வர்!

ஸ்வொஸ்தியில் (நம்ம ஹொட்டேல்) இருந்து  ஒரு ஒன்பதரை கிமீ தூரத்தில்  இருக்கார் லிங்கராஜா.  கொஞ்ச நேரத்துக்கு முன்னால் ஏர்ப்போர்ட்டில் இருந்து வந்தமே அதே வழியாகத்தான் இப்போவும் போகணும்.   ஏர்ப்போர்ட் பக்கத்துலே உள்ளே போகாம நேராப் போகணும் இப்போ!  போனோம்.  கிளம்புன கொஞ்ச தூரத்துலே நம்ம ஜன்னு, மருத்துவமனை எல்லாம் வச்சுருக்காள்!  ஹாஹா...

கோவில் இருக்கும் பேட்டை, லிங்கராஜ் நகர்.  கோவிலாண்டை போய்ச் சேர்ந்ததும்  பூஜைப்பொருட்களை  விற்கும் வழக்கமான கோவில்கடைகள். இதையொட்டி செருப்பு வைக்கும் ஸ்டாண்டு,  போலிஸ் ஸ்டேஷன் எல்லாம் இருக்கு!  பொதுமக்களுக்கான வெயிட்டிங் ரூம் வேற! என்ன எழுதி இருக்கு பாருங்க.....

கோவிலுக்குள்ளே  யார் போகலாம், என்னென்ன கொண்டு போகப்டாதுன்னு கறாரா எழுதிப் போட்டுருக்காங்க. நோ கெமெரா....  ப்ச்... எல்லாத்தையும் பையில் போட்டு, ட்ரைவரிடம்  கொடுத்துட்டுப் போனோம். அப்புறம் வெளி வந்த பிறகு  வெளியே இருந்து சில படங்களை க்ளிக்கினேன்.

There is a viewing platform for Non Hindus to see the inside of the temple !

கோவில் முகப்பு வாசலில் உள்ளே இருக்கும் கடவுளர்களை ப்ரிவ்யூ போல வரைஞ்சு வச்சுருக்காங்க. உள்ளே இருக்கும் சாமி ஹரிஹரன் !!!  அப்புறம்   அர்த்தநாரியா உமையொருபாகனும்!   வாவ்......  சிங்கத்வாரா என்னும் சிங்கவாசல் இது.   ஒரு சிங்கம் பட்டையும், ஒரு சிங்கம் நாமமுமா.....   பட்டைபோட்ட சிங்கத்தாண்டை பயமே இல்லாமல் ஒரு நிஜ மிய்யாவ் :-)
சிங்க வாசலுக்கு நேரா உள்ளே கொடிமரம்.....?
இத்தனை சந்நிதிகள்  இருக்கும் கோவிலில்  அநேகமா எல்லோருமே இருப்பாங்கதான் !  நிறைய சந்நிதிகள் உள்ளே ஒன்னுமில்லாமல்தான் இருக்கு.  சாமி இருக்கும் சந்நிதிகளில் பார்த்தால் சிவலிங்கங்களே....  சின்னதும் பெருசுமா...... நித்யப்படி பூஜை இல்லை போல.... தூசியும் தும்புமாத்தான் இருக்கு.

பார்வதி, புள்ளையார், கார்த்திக்ஸ்வாமி, தருமன், சாவித்ரின்னு  சில சந்நிதிகள் ஓரளவு  பரவாயில்லை.
ஏகப்பட்ட கோபுரவரிசைக் கூட்டங்களுக்கு நடுவில் ஸ்ரீ லிங்கராஜாவின்  கோபுரம் நூத்தி எம்பதடி உசரத்தில் நெடுநெடுன்னு  நிக்குது!   கலிங்கநாட்டுக் கட்டடக்கலை!
இங்கே நியூஸியில் Pan Cake Rocks  என்று தோசைகளை அடுக்கி வச்சாப்லே இருக்கும் டிஸைன் போலவே  அடுக்கடுக்காய் உசரமாப் போகுது. தோசை போல அவ்ளோ மெல்லிஸா இல்லை. பிஸ்கெட்ஸ்ன்னு வச்சுக்கலாம்.
இந்தப் பெரிய கட்டடத்துக்குள்ளே  ஜக மோகனா, நட மந்த்ரா, போக மண்டபான்னு  பகுதிகள். (எல்லாம் நம்ம கோவில்களில்  முகமண்டபம், அர்த்த மண்டபம்,  மஹா மண்டபம், மடப்பள்ளின்னு  இருக்கும் பாருங்க அதேதான் ) 

கருவறையில் ஹரிஹரன், லிங்க ரூபமாத்தான் இருக்கார்! ஸ்வயம்பு என்று சொல்றாங்க. பெருமாள் , இதே லிங்கத்தில் ஐக்கியமாகி இருக்காராம். அதனாலே அர்ச்சனைப் பூக்களில் வில்வமும் துளசியும்  வச்சுருக்காங்களாம். நாம் பொதுவா எதுவும் வாங்கறதில்லை என்பதால் துளசியைக் கவனிக்கலை. .  ஹரிஹரன் என்பதை உறுதிப்படுத்தறாப்போலக் கருவறை வாசல் சுவரில் ஒருபக்கம் திரிசூலமும், இன்னொருபக்கம் விஷ்ணுசக்ரமும் செதுக்கி இருக்காங்க.


காலையில் ஆறுமணிக்குக் கோவில் திறந்துடறாங்க.  ராத்ரி ஒன்பதுக்குத்தான் மூடறாங்க.  லிங்க ராஜா சந்நிதியை மட்டும் பகல் பனிரெண்டு முதல் மூணுவரை மூடிட்டு, உள்ளே அபிஷேகம், ஆராதனை, போக் (சாமிக்கு விருந்து சாப்பாடு) இப்படி நடத்தறாங்களாம்.  அப்போ பொதுசனத்துக்கு அனுமதி இல்லை.....
கோவிலுக்கு என்ன வயசுன்னு சரியாச் சொல்ல முடியலை. ஆயிரம் வருஷத்துக்கு மேலாச்சுன்னுதான்.....   சமஸ்க்ரத நூல்களில் ஆறாம் நூற்றாண்டுலேயே இந்தக் கோவில் இருந்ததாகக் குறிப்புகள் இருக்காம். இப்போ நாம் பார்க்கும் கோவிலை பத்தாம் நூற்றாண்டு, பதினோராம் நூற்றாண்டுகளில் கட்டுனதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க.   மூணு மன்னர்களின் தொடர்ந்த ஆட்சியில் கட்டுனதாகவும் சொல்றாங்க. மணல்கற்கள் என்ற சேண்ட்ஸ்டோனால்  கட்டி இருக்காங்க.  காலப்போக்கில் நிறமெல்லாம் மங்கி, அழுக்கு ப்ரவுணாத்தான் தெரியுது.
ஆகக்கூடி, புபனேஷ்வர் ஊரிலேயே வயசுலே மூத்ததும், அளவிலே பெருசாவும் இருக்கற கோவில் இந்த லிங்கராஜா கோவில்தான்!  வெளியே இருந்து பார்த்தால்  அங்கங்கே சில விமானங்கள் தெரியுதே தவிர,  உள்ளே வேறேதும் தெரியாத வகையில் உசரமான மதில் சுவர்கள்தான் கோவிலைச் சுத்தி!
இங்கே இந்தக் கோவில் கட்டும் காலக்கட்டத்தில்தான் விஷ்ணு வழிபாடும் கொஞ்சம் தீவிரமடைஞ்சு  ஜெகந்நாதருக்குப் பூரியில் கோவில் கட்டுனாங்கன்னும் ஒரு சேதி இருக்கு!
கூகுளாண்டவர் அருளிச்செய்த  சில படங்களையும் இந்தப் பதிவில் சேர்த்துருக்கேன். ஆண்டவருக்கு நன்றி!
சரி வாங்க இன்னொரு கோவிலுக்கு போகலாம்....

தொடரும்...... :-)


8 comments:

said...

அருமை நன்றி

said...

லிங்கராஜா கோவில்... அழகு.

தொடர்கிறேன்.

said...

எங்கு காணிலும் கோபுரமடா....

said...

Pan Cake Rocks என்று தோசைகளை அடுக்கி வச்சாப்லே இருக்கும் டிஸைன்....

ஆஹா அழகு

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

நல்ல பெரிய கோவில்தான். சரியான பராமரிப்பு இல்லைன்னு தோணுது.....

said...

வாங்க மாதேவி,

சின்னதும் பெருசுமா ஏராளம்..... கோபுர டிஸைனே சந்நிதி விமானங்களுக்கும்!

said...

வாங்க அனுப்ரேம்,

தோசைக்குப் பதிலா இங்கே ஃப்ரெஞ்சு ப்ரெட் :-)