Wednesday, September 25, 2019

தலையில் கங்கையை வச்சுக்கிட்டு மழைக்கு பயந்தால் எப்படி? (பயணத்தொடர், பகுதி 147 )

யோகினிகள் தரிசனம் ஆன கையோடு , ஹிராப்பூருக்கு நாம் போன வழியிலேயே திரும்பி புபனேஷ்வரை நோக்கி வர்றோம். ஆற்றுப்பாலம் கடந்ததும் புபனேஷ்வர் பழைய நகரம் வந்துருது. டங்கபானி ரோடு வழியில்தான் வரணும். இதே ரோடில் இன்னொரு பழைய கோவில் இருக்குன்றதால் நேராப் போனது அங்கேதான்.
ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் பனிரெண்டாம் நூற்றாண்டுக்கும் இடையில் கட்டுன கோவிலாக இருக்கணும் என்றும் கங்கர்கள் ஆட்சியில் கட்டுன கோவிலாக இருக்கணும் சில பல கருத்துகள் இருந்தாலும்  வெளியே வச்சுருக்கும் பெயர்ப்பலகையில்  காலக்கட்டம் வேறன்னு தொல்லியல் துறை சொல்லுது !
ஷ்ரீ ஷ்ரீ மேகேஷ்வர்தேவ்  ஆலயம்.  சிவன் கோவில்னு சொல்றதைப்போல, நாங்கள்  கோவிலுக்கு எதிர்வாடையில் நிறுத்தின வண்டியில் இருந்து இறங்கி, சாலையைக் கடக்கும்போது நந்தி ஒன்னு நிதானமான பார்வையுடன் குறுக்கே படுத்துருக்கு.  சாதுதான் போல !  நம்மவரை ஒன்னும் செய்யலை :-)
ரொம்பவே அழகான தோட்டம், புல்வெளியுடன் ரம்யமா இருக்கு.  பெரிய மதில்சுவரின் நடுப்பக்கம் நுழைவாசல்.   உள்ளே போனால்.... மூச்சடைக்கும் விதம் படு சுத்தமான  பிரகாரத்தின் நடுவில்  தேர் போல ஒரு அமைப்பும், அதுக்குப்பின்னே நெடுநெடுன்னு போகும் கோபுரமும்!  சப்தரத அமைப்பாம் !  வாவ்!!
ஜகமோஹனா......வைப் பார்த்தபடி நந்திகள்.  மூவர், மூணு சைஸில்!  ஒருத்தருக்குத் தலையைக் காணோம்...ப்ச்....

நாம் வளாகத்துக்குள் போகும்போதே  நந்திகளுக்கு என்னவோ பூஜை செஞ்சுக்கிட்டு இருந்த பண்டிட்டைப் பார்த்தேன்.  கிட்டபோனபிறகுதான் தெரிஞ்சது  பால்,தயிர்  எல்லாம் அபிஷேகம் ஆகி இருக்குன்னு.....   கடைசியில் தண்ணீர்  ஊத்தக்கூடாதோ.... எல்லாம் காய்ஞ்சு போய் ஒட்டிப் பிடிச்சுருக்கே.....

கோவிலின் நுழைவு வாசலில் ரெண்டு பக்கமும் தூணைச் சுற்றி இருக்கும் நாகதேவதைகள்!  நாகஸ்தம்பம் னு பெயராம்!  வாசல் முகப்பில் மேலே ஒன்பது சின்ன சிற்பங்கள்.  நவகிரஹங்கள்! அதுக்குக் கொஞ்சம் கீழே நடுவாந்திரமா மஹாலக்ஷ்மி. என்னவோ செம்மண் நிறத்தில் இருக்காள்.  சமீபத்திய சமாச்சாரமா இல்லை யாராவது செந்தூரம் பூசி வச்சுருக்காங்களோ....  க்யா மாலும்?
கிட்டே போனாட்டுதான் தெரிஞ்சது.... செந்தூரப்பூச்சுன்னு....
முன்மண்டபத்துக்குள்ளே ஒரு மூலையில் புள்ளையார். இன்னும் சில சிலைகள். என்னன்னு  சரியாத் தெரியலை....  அம்மன்னு நினைக்கிறேன்....   செந்தூரச்சிம்மம் இருந்தது....

இடத்தைச் சுத்தமா வச்சுக்கப்டாதோ? (தொல்லியல் துறை வெளிப்பக்க சுத்தம் மட்டும்தான் பார்த்துக்குது.  உள்ளே  பொறுப்பு கோவில் ஊழியர்களுக்குத்தானே?  )

நேரா அந்தாண்டை கருவறை.  தரை மட்டத்தில் இருந்து ஒரு அடி தாழே! லிங்க ரூப சிவன்.  தலைக்குக் குடை பிடிக்கும் பாம்பு.  தலைக்குமேல்  அபிஷேகப்ரியனுக்குக்கான  தாராபிஷேகச் சொம்பு.  தரையோடு பதிஞ்சிருக்கும் குட்டியூண்டு சிவனை உத்துப் பார்க்க வேணும். பூக்களுக்கும் ஒளிஞ்சிருக்கார்.  கருவறைக்குள் நமக்கு அனுமதி உண்டு.  பண்டிட் உள்ளே வரச் சொன்னார். படம் எடுத்துக்கவும் அனுமதி கிடைச்சது.
நம்மிடமும் ஒரு சின்னச் சொம்பு கங்கை கொடுத்து  அபிஷேகம் பண்ணச்சொல்லி, தரிசனம் செஞ்சு வச்சுப் பிரஸாதமும் கொடுத்தார். செண்பகப்பூ! (ஹைய்யோ!  பார்த்தே ரொம்ப நாளாச்சு ! )

தரிசனம் முடிஞ்சு, வெளியே ப்ரகாரம்  வலம் வர்றோம்.  நெடுநெடுன்னு உசரமாப் போகும்  விமானகோபுரத்தில்  கீழ்ப்பகுதியில்  பெரிய மாடங்களில்  பிள்ளையார், கார்த்திகேயன், பார்வதி சிலைகள்!  வளையல் போட்டு வச்சுருந்தால் அது பெண் தெய்வம் என்று புரிஞ்சுக்கணும்.
புள்ளையார் ஓரளவு பரவாயில்லை. கார்த்திக் ஸ்வாமிதான் சிதைஞ்சு போயிருக்கார். பக்கத்தில் இருக்கும் மயிலை வச்சுத்தான் அடையாளம் கண்டு பிடிக்க வேணும்!


ரொம்பவே அழகான நுண்ணிய வேலைப்பாடுகளுடன்  ரெண்டு வரிசையில் சிற்பங்கள். பலதும் உடைஞ்சும்  சிதைஞ்சும்.....   ஹூம்...

தரையில் ஒரு சிவலிங்கமும் அதன் தலையில் பாம்புமா.... நானும் கொஞ்சம் சீறிவச்சேன்.... நம்மவருக்காக :-)
பின்பக்கத்துலே மழைத்தண்ணி தேங்கி இருக்கேன்னு விசாரிச்சால்....   கடும் மழைகாலத்துலே  கர்ப்பக்ரஹத்துலே தண்ணீர் வந்துருமாம். சிவன் தண்ணீரில் நிற்கத்தான் வேணும். அதுசரி.....   இங்கத்து மூலவர் மேகேஸ்வர்னு  பெயர் வச்சுக்கிட்டா, மழை பெய்யாமலா போயிரும்?
கருங்கல்தரைக்குள்ளே தண்ணீர்.... எனக்கு நம்ம திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் நினைவுக்கு வந்தார்.... 

ரொம்பப்பெரிய கோவில்னு சொல்ல முடியாது. வெளியே சுத்திவர இருக்கும் தோட்டத்தை ஒரு பிரகாரமுன்னு வச்சுக்கிட்டால், உள்ளே ஒரு பிரகாரம். அவ்ளோதான்!
அழகெல்லாம் வெளிப்பக்கம்தான்!   நல்ல நுணுக்கமான கலிங்கத்துக் கட்டடக்கலை.... கலிங்கத்துப்பட்டுன்னுதான் கேள்விப்பட்டுருக்கோம்.   கட்டடக்கலையுமா !!!




தொடரும்...... :-)



12 comments:

said...

மிக அருமை. நன்றி.

said...

அம்மா என் முதல் பதிவு பார்த்துவிட்டு திருத்தம் இருதல் சொல்லுங்க

நன்றி

https://gangaisenthilprasad.blogspot.com/

said...

சப்தரத அமைப்பு அசத்தலாகத்தான் இருக்கிறது. கலிங்கத்து கட்டிடகலை அழகு.
பாம்பு படம் எடுக்கிறதே மகுடி திரு.கோபால் கைகளிலா :)))

said...

ஷ்ரீ ஷ்ரீ மேகேஷ்வர்தேவ் ஆலயம்....சப்தரத அமைப்பு ...வாவ்

லிங்க ரூப சிவன். ...ரொம்ப குட்டி யா இருக்கார் ..


அருமையா இருக்கு மா இந்த இடம் ...

said...

ஒடிஷா கோவில்கள் பலதும் சிதைந்த நிலையில்...

தொடர்கிறேன்.

said...

கோவில் கலைநயம் வியக்க வைக்கிறது.

வரலாற்றைச் சிதைவுறாமல் அரசு பாதுகாக்கவேண்டும்.

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க செந்தில்பிரசாத்,

வலை உலகத்துக்குள் வந்தமைக்கு நல்வரவும் வாத்துகளும்!

எழுதி முடிச்சதும் பிழைகள் இருக்கான்னு ரெண்டுமுறை வாசிச்சுட்டு வெளியிடுங்க. சிலபல தட்டச்சுப் பிழைகள் வரத்தான் செய்யும். காலப்போக்கில் சரியாகும்.

said...

வாங்க மாதேவி,

இது வேற வகைப் பாம்பு..... இச்சாதாரி ! கோபாலின் மகுடிக்கு ஆடாது :-)

மேலும் கோபாலுக்கு பாம்புன்னாவே..... ப....... ய......... ம்...........

said...

வாங்க அனுப்ரேம்,

உண்மையில் ரொம்பவே அழகான கட்டடக்கலைப்பா !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

எப்படித்தான் மனம் வருதோ.... இப்படிச் சிதைச்சுப்போட....... ப்ச்....

said...

வாங்க நெல்லைத்தமிழன்,


காலம் தின்றது போக மனிதக்கைகள் தின்றது அதிகம்....

மக்களுக்குத் தெரியணும்.... இதெல்லாம் பொக்கிஷம் என்று ! அரசு வந்து பார்க்குமுன்னு மெத்தனமா விடமுடியாது....