Wednesday, September 11, 2019

விக்டோரியா மெமோரியல் ( பயணத்தொடர், பகுதி 141)

வளாகத்தின் வாசலில் ஏகப்பட்டக் கூட்டம். நம்ம மைசூர் அரண்மனை பார்க்கப்போனோமே  அப்படித்தான் இங்கேயும்.  குதிரை வண்டிகள்  வேற அலங்காரம்  பண்ணிக்கிட்டுத் தெருவிலே நிக்குதுகள்.  கோச் வண்டியில்  உக்கார்ந்துக்கிட்டு மஹாராணி போல ஊர்வலம் போகணுமாம்!
அட்டகாசமா  பரந்து நிக்குது கட்டடம்!  மக்ரானா  மார்பிளாம். இதே வகைப் பளிங்குதான் தாஜ்மஹலுக்கும்  அந்தக் காலத்தில் பயன்படுத்தி இருக்காங்க. ராஜஸ்தானில் இருந்து கொண்டு வந்துருக்காங்க.
ஒருவேளை தாஜ்மஹலைப் பார்த்துட்டு அந்த ஆசையில் கட்டுனாங்களோ என்னவோ?   கூகுளாண்டவர் அருளிச்செய்த படம் ஒன்று என் எண்ணம் சரிதான்னு சொல்லுதோ?  படம் எடுத்த திரு Rama Warrier அவர்களுக்கு நன்றி !
மாட்சிமை தாங்கிய மஹாராணி விக்டோரியா  சாமிகிட்டே போனது 1901 இல்.  இந்த நினைவகத்தைக் கட்ட ஆரம்பிச்சது 1906 இல். கட்டி முடிச்சப்ப 1921  ஆகிப்போச்சு. பதினைஞ்சு வருஷம் !

தோட்டமும், கட்டடமுமா ( வெறுங்கட்டடமா?  மாளிகை இல்லையோ!)  64 ஏக்கர் நிலத்தை வளைச்சுப் போட்டுருக்காங்க.

நம்ம கெமெராவுக்குத் தீனின்னு  அங்கங்கே க்ளிக்கிக்கிட்டு இருக்கேன். வாசலிலேயே  மாட்சிமைதாங்கிய மஹாராணி விக்டோரியா, சிம்மாசனத்துலே  கையில் செங்கோலுடன் உக்கார்ந்துருக்காங்க. வெங்கலச் சிலை!  உடைமேல் போட்டுருக்கும் அங்கிக்கு ஸ்டார் ஆஃப் இண்டியான்னு பெயராம்.......   !!!!

உள்ளே போக ஒரு கட்டணம் இருக்கு. முப்பதுன்னு நினைவு. சரியே.
கெமெராவுக்குக் கட்டணம் இல்லை.
முன்பக்க வாசல் ரொம்பவே க்ராண்டா இருந்தாலும், நாம் உள்ளே போக பின்பக்க வாசலைத்தான் திறந்து வச்சுருக்காங்க.   முதல் கூடத்துலேயே  நிறைய சனம் பிலுபிலுன்னு மொய்ச்சுக்கிட்டு இருக்காங்க.....
நானும்  கண்ணில் பட்ட 'நல்ல' காட்சிகளையெல்லாம் க்ளிக்கிக்கிட்டே போறேன். கெமெரா என்னமோ சொல்லுது.....  அதுக்குள்ளேயா பேட்டரி பவர் தீர்ந்துருக்கும்? இருக்காதேன்னு கவனிக்காம நான் பாட்டுக்கு என் வேலையில்.....   கூட்டத்தில் கிடைத்த இடைவெளியில் சட்னு 'நம்மவரை' நிக்க வச்சு சில க்ளிக்ஸ்.

பழைய கல்கத்தாவில் தொடங்கி சரித்திர நிகழ்வுகள், அந்தக் கால  அரசாங்க நிகழ்ச்சிகள்னு மொத்தம் 25 பகுதிகளாப் பிரிச்சுக் காட்சிக்கு வச்சுருக்காங்க.
மாட்சிமை தாங்கிய  மஹாராணி விக்டோரியாவின் குடும்பப்படம் !  ஒரு பகுதி முழுசும் ஏகப்பட்ட ஆயில் பெயிண்டிங்ஸ்  வச்சுருக்காங்க !


நடுவிலே வட்டமான கூடம், மேலே ஹை டோம்னு  பக்கா வெள்ளைக்கார ஸ்டைல் !  சுழல்படிகளில் ஏறி ஒவ்வொரு நிலையாப் பார்த்துக்கிட்டே மேலே போகலாம். போனோம். நானும் விடாமல் க்ளிக்கினேன்.



அந்தக்கால கம்பளம் ஒன்னு யானையும் குதிரையுமா இருந்தது.  ஒரு மிய்யாவ் ஆர்ட் கூட  அழகுதான். நாமக்காரப்பூனை  என்ன சொல்லுதுன்னு தெரியலை.....
'பந்தே மாதரம்' னு ஒரு வாரப்பத்திரிகை வந்துக்கிட்டு இருந்துருக்கு!   நாஞ்சொல்லலை..... வங்காளிகளுக்கும்  வ வராதுன்னு.....
திருப்பித்திருப்பிக் கெமெரா என்னமோ சொல்லுதேன்னு மாடிக்குப்போனபிறகு, கூட்டம் குறைவான பகுதியில்  கவனிச்சுப் பார்த்தால்.....    அட ராமா......   'உள்ளே எஸ் டி கார்டு இல்லே' ன்னு கூவிக்கிட்டு இருந்துருக்கு, இவ்ளோ நேரமா.....
திறந்துபார்த்தால்... இல்லை !

பொதுவாப் பயணங்களில் நம்மவர் அவரோட லேப்டாப்பைக் கொண்டு வருவார். நான் என்னுடைய நோட்புக் மட்டும்.  இப்பெல்லாம் ஸ்மார்ட் ஃபோனில்  எல்லாமே இருப்பதால்  வலை மேய்ச்சல் எல்லாம் கூட ஓரளவு ஃபோனில்தான்.
என்னுடைய கெமெராவில் அன்றன்று எடுக்கும் படங்களை, ஒரு பேக் அப்புக்காக நம்மவரின் லேப்டாப்பிலும்,  அதையே ஒரு பென் ட்ரைவிலும் எடுத்து வச்சுக்குவோம். இதெல்லாம் முதல்நாள் இரவுச் சடங்கில் சேர்த்தி.  இப்படிச் செஞ்சதில் நேத்து  லேப்டாப்பில் எடுத்துப் போட்ட எஸ்டி கார்டை திரும்ப எடுக்க மறந்துருக்கார் 'நம்மவர்'. நானும் பேட்டரியை ரீசார்ஜ் பண்ணிக் கெமெராவில் போட்டவள் கவனிச்சுருக்க வேணாமோ? கோட்டை விட்ருக்கேன்....

காலையில் ஜெயின் கோவிலிலும், கைப்பையில் இருக்கும் கெமெராவை வெளியே எடுக்கவேயில்லை.  செல்ஃபோனிலேயே படங்களை எடுத்ததும் பிழையாப் போச்சு. இல்லைன்னா அப்பவே கவனிச்சுருக்கலாம்....  என்னவோ போங்க..... இப்படி ஆகணுமுன்னு 'அவன்' கணக்கு போட்டுருக்கான்.... ப்ச்....

நம்மவர் பொதுவா அவருடைய செல்ஃபோனில் கெமெரா இருப்பதை மறந்துருவார். அப்படியே எடுத்தாலும் நான் பத்து படம் எடுத்தால் இவர் ஒன்னு என்ற கணக்குதான்.... இன்றைக்கு என்னவோ அத்தி பூத்தாப்லெ  அவரும்  படம் எடுத்துக்கிட்டே வந்ததால்.... இந்தப் பதிவுக்குப் படங்கள்  போட முடிஞ்சது. தரம்  ரொம்பவே சுமாராகத்தான் இருக்கும்....   பொருட்படுத்த வேணாம்.....    சுட்ட படங்கள்  ரெண்டு  மூணு  சேர்த்துருக்கேன்....

கெமெராவில் படங்கள் ஒன்னும் பதிவாகலை என்றவுடன் மனசு அப்படியே நொறுங்கிப் போச்சு.....   இன்னொருமுறை வாய்க்கப்போகுதா என்ன?

பின்பக்க வாசல் தோட்டத்தில்  கர்ஸன் பிரபு நின்னுக்கிட்டு இருந்தார்.....  தோட்டமும் அழகுதான்.  இந்தத் தோட்ட வேலைக்கே 21 தோட்டக்கலைஞர்கள் இருக்காங்களாம்!  கொல்கத்தாவின் அழுக்குச் சுவடு படாத இடம்  பார்த்த  திருப்திதான் நமக்கு.
திரும்பிவரும் வழியில் நேத்துப் பார்த்துவச்ச பல்ராம் முல்லிக்  இனிப்புக் கடைக்குள் போய்  கெமெராக் கண்ணால் நிறைய இனிப்புகளை முழுங்கிட்டு, கொஞ்சம் இனிப்புகளை ( வகைக்கு ஒன்னுன்னு கொஞ்சம், ரெண்டு மிஷ்டி தோய்) வாங்கிக்கிட்டு ஹொட்டேலுக்குத் திரும்பிட்டோம்.


மிஷ்டி தோய் என்ற பெயரைப் பார்த்தாலே பிடுங்கித்தின்னலாம் போல இருக்குல்லே? இது  இனிப்புத்தயிர்தான். பாலைச் சுண்டக்காய்ச்சி சக்கரையோ வெல்லமோ போட்டுக் கலக்கி ஒரு மண் சட்டியில் ஊத்தி கொஞ்சம் ஆறினாட்டு தயிர் ஒரு ஸ்பூன் சேர்த்து உறைக்குத்தினால் ஆச்சு!   மண்பாத்திரம் என்பதால்  ரொம்பக் கெட்டியா, ஸ்பூனில் எடுத்துத் தின்னும் வகையில்  உறைஞ்சுரும்.

மறுநாள் காலையில்  எட்டுமணிக்குக் கோபிந்தை வரச் சொன்னோம்.

இன்றைக்கு இனிமேல் எங்கேயும் போறதா இல்லை.  இந்த நசநச மழையில் வேறெங்கும் போய் மாட்டிக்கும் உத்தேசமும் இல்லை.

ஈரத்துணிகளை முடிஞ்சளவு காயவச்சு எடுத்துக்கணும். ராச்சாப்பாடு இங்கேயே எதாவது ரூம் சர்வீஸில் வாங்கிக்கலாம்.  சப்பாத்தி, ஜீரா ரைஸ், ஆலுபாலக் கறி.

தொடரும்....... :-)

8 comments:

said...

அடடா... மெமரி கார்ட் இல்லாமல் போச்சே... நான் கேமரா பையில் கூடுதலாக ஒரு கார்டு வைத்து இருப்பேன்.

அங்கே சென்றபோது நான் எடுத்த படங்கள் என் பக்கத்தில் இருக்கிறது.

http://venkatnagaraj.blogspot.com/2017/02/blog-post_21.html?m=1

தொடர்கிறேன்.

said...

குதிரை வண்டிகள் அலங்காரத்துடன் அட்டகாசம்.
அறுபத்திநாலு ஏக்கர் !!அம்மாடியோ....பெரி...ய..மாளிகை.
அசத்துகிறது.

said...

கோபால் சார் எடுத்த படங்கள் எல்லாம் அருமை.
நன்றி.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

கூடுதல் பேட்டரி, எஸ் டி கார்ட் எல்லாம் கொண்டு போகும் நான், அன்றைக்குப் பார்த்து அவைகள் போட்டு வச்சுருக்கும் சின்னப் பையை ஹேண்ட் பேகில் வைக்க மறந்துட்டேன். விதி அப்படி இருக்கும்போது, அதுக்குத்தகுந்தாப்லெதான் எல்லாம் நடக்குது....

உங்க படங்கள் எல்லாம் பளிச் ன்னு இருக்கு. நாந்தான் உங்க பதிவுகளை நிறையக் கோட்டை விட்டுருக்கேன்...... ப்ச்....

said...

வாங்க மாதேவி,

நாட்டையே பிடிச்சுக்கிட்டவங்களுக்கு அறுபத்திநாலு ஏக்கர் எல்லாம் ஜூஜுபி இல்லையோ!!!

சாரட் வண்டி அழகு. ஆனால் மழையில் உக்கார்ந்து ப்ளாஸ்டிக் போர்வை போர்த்திக்கிட்டுப் போகணும்.....

said...

வாங்க விஸ்வநாத்,

கோபால் சார் எடுத்த படங்கள்..... க்க்கும்.... ஆண்பாவம் கூடாதுன்றதால் ச்சும்மா இருக்கேன் :-)

said...

வெள்ளை நிற பிரம்மாண்டம் ...இந்த மாளிகை ...சூப்பர்



சார் எடுத்த எல்லா படங்களும் அருமை ...

said...

வாங்க அனுப்ரேம்,

நன்றி !