Friday, July 15, 2016

திருப்பார்த்தன்பள்ளி (இந்தியப் பயணத்தொடர். பகுதி 60)

போற வழியில் ஒரு இடத்தில் சின்னதாக் கடைவீதி  இருக்கு. நம்ம  சீனிவாசன்  வண்டி ஓட்டும் அசதி இல்லாமல் இருக்க அப்பப்ப  டீ குடிப்பதுண்டு.  நமக்கு அந்தப் பழக்கம் இல்லை.  'டீ குடிக்கணுமுன்னா  போய் குடிச்சுட்டு வாங்க'ன்னு  சொன்னதும், குமாருடன் இறங்கிப்போனார்.  நான் சும்மாதான்  ரெண்டு மூணு படத்தைக்  கிளிக்கி வச்சேன்.  இந்த இடம்தான் மங்கை மடம்னு  அப்பத் தெரியலை.  இப்பப் பதிவு  எழுதும்போது படங்களைக் கவனிச்சால்....    அடடா....  கோட்டை விட்டுட்டோமேன்னு  இருக்குதான் :-(  போகட்டும். அடுத்த முறை பார்க்கலாம்.....

 திருப்பார்த்தன்பள்ளி என்ற பேட்டைக்கு வந்து சேர்ந்தோம்.  பளிச்ன்னு  இப்படி இருக்கும் ராஜகோபுரத்தை எதிர்பார்க்கலையாக்கும்!  கேட்டைக் கடந்ததும்  பலிபீடம், கொடிமரம், பெரிய திருவடிக்கான சந்நிதி எல்லாம் உண்டு. அதுக்குப்பிறகுதான் மூணு நிலையில்  கோபுரவாசல்!


உள்ளே நுழைஞ்சதும் இடது கைப் பக்கம்  கோவில் தேருக்கான தேர்ஷெட்!  முகப்பில் கருடசேவை!

 நேராப்போனால்  சின்ன மண்டபத்துக்கு எதிரில்  பக்கத்துக்கொன்னாக  வெள்ளையானைகள் நிற்கும்   ஏழு படிகள்.  படிகளுக்குப் பக்கமா சுவரில்  ஒரு சந்நிதி.  யக்ஞநாராயணர் இருக்கார்!  அவரைக் கிளிக்கின கையோடு
ஏழு படிகள்  ஏறியாச்.  உள்ளே இருக்கும் ஹால் மண்டபத்துக்குள்ளில் கருவறையில்  பார்த்தசாரதி!  நம்ம தில்லக்கேணி பார்த்தசாரதி போல ருக்மிணித் தாயாருடன் (மட்டும்)  இல்லாமல்   ஸ்ரீ  & பூ தேவியருடன் இருக்கார்.  இன்னொரு வித்தியாசமும் இருக்கு.  இவருக்கு நாலு கைகள்!!   மூணாவதும் ஒரு வித்தியாசம் உண்டு.  அவர்  உயரம் 9 அடி. இங்கே ரொம்பவே கம்மி.  ஏகாதச  ருத்திரர்களுக்கு பதினொரு விதமா தரிசனம் கொடுத்ததில் இங்கே பார்த்தசாரதி திருக்கோலம் என்கிறார்கள்.
அவருக்கு முன்பாக உற்சவர்கள் வரிசையில்    கதையுடன் மஹாவிஷ்ணுவும் மூணு தேவியர்களும்,   சந்தானகோபாலகிருஷ்ணன்,   கோதண்டம் ஏந்திய கையுடன் ஸ்ரீராமனும் சீதையுமா இருக்காங்க.  ராமனுக்கும் கைகள் நாலு!!!!     உற்சவப்பெருமாள்  கையில் கத்தி இருக்கு!


மூலவருக்குப் பெயர் என்னன்னு தெரியுமோ?  தாமரையாள் கேள்வன்!!   தாயார் தாமரை நாயகி!


 மண்டபத்துச் சுவரின் மேல்புறம் அழகான சித்திரங்கள் மூலம்  தலப்புராணம் சொல்லப்படுகிறது!

கர்த்தம ப்ரஜாபதிக்கும் தாமரை என்ற கன்னிகைக்கும் பிறந்தவன் வருணன்.  இவன் ஒரு சமயம் கங்கைக்குக் குளிக்கப் போயிருந்தப்ப முதலை  ஒன்னு  இவனை விழுங்கி, சமுத்திரத்துக்குள் கொண்டு போயிருது.  அங்கே சமுத்திரராஜன் இவனை வரவேற்று உபசாரம் செஞ்சு , 'இதே முதலை இன்று முதல் உமக்கு வாகனமா இருக்கட்டுமு'ன்னு சொல்லி,  முதலைமேல் ஏற்றி திருப்பி அனுப்பிடறார்.   (இந்த முதலை உருவம் கொஞ்சம் வேறமாதிரி இருக்கே!  முக்கியமா கொம்புவச்ச மான் மாதிரி  ஒரு தலை !!!   )        தகப்பனிடம் வந்து   சேர்ந்தான். அதன்பிறகு   சிவபெருமானை நினைச்சுக் கடுந்தவம் செய்ததன் பயனாக,  இவனுக்கு தேவர்களில் ஒருவன் என்ற அந்தஸ்து கொடுத்து,  தண்ணீருக்கு அதிபதியா நியமனம் ஆச்சு.
மனு சாஸ்த்திரத்தில் மனித குலங்களுக்கு  விதிக்கப்பட்ட செயல்களுக்குத் தண்ணீர் இன்றியமையாததால் அதற்கு அதிபதியான வருணனை  முன்னிலைப் படுத்தித்தான்  மனிதகுலத்தில் கடமைகளுக்கான பிரிவுக்கு  வருணாஸ்ரமம் என்று பெயர் வந்ததாம்.

இப்ப இந்த வருணாஸ்ரமத்து சமாச்சாரம் நிறைய  வாதங்களுக்கு ஆளாகிப்போய், ஏறக்கொறைய அடிபட்டுப் போயிருச்சு. அதுவும் நல்லதுக்குத்தான். அதுலே இருந்துதான் சாதிப்பேய்கள் கிளம்பி வந்து  மனிதகுலத்தைப் பிடிச்ச பீடைகளா ஆகிக்கிடக்கு :-(

இவன்  ஒரு சமயம், ப்ரகஸ்பதி (தேவர்களின் குரு) தவம் செய்துகொண்டு இருக்கும்போது அவருடைய  யானையைத் திருடிக்கிட்டு (!!!???) போயிடறான். கோவில் சித்திரத்துலே யானைன்னுதான் போட்டுருக்காங்க.

 (இன்னொரு இடத்துலே யானையின் இடத்தில்  ப்ரகஸ்பதியின் மனைவி ன்னு வாசிச்சேன்.  அது தப்பாகத்தான் இருக்கணும்.  பிறன்மனை விழைவது மகாபாபம். அதுவும் இவுங்க குருபத்தினி. அடுக்குமா?  அதான் யானைன்னு மாத்திட்டாங்க போல!)

தவத்தில் இருக்கும் ப்ரகஸ்பதி, தன்னுடைய ஞானதிருஷ்டியால் திருட்டைத் தெரிஞ்சுக்கிட்டு வருணனை சபிச்சுட்டார்.    தவறை உணர்ந்த  வருணன், அந்த சாபத்தில் இருந்து மீள்வதற்கு  என்ன செய்யணுமுன்னு வேண்டிக் கேட்க,  அவரும் பலாசவனத்தில் போய்  தவம் செய்யச் சொல்றார்.

(அப்பெல்லாம் சாபம் கொடுத்தவங்களே சாப விமோசனத்துக்கு வழியும் சொல்வாங்க)

இங்கே வந்து மனசை அடக்கி தவம் செய்யறான்.  அந்தக் காலக் கட்டத்தில்தான் இங்கே ஏகாதசருத்திரர்களின் யாகமும் நடக்குது.  அந்த யாகத்துலே பதினொரு  விதமாக பதினொரு இடங்களில்  தரிசனம் கொடுத்த பெருமாள், வருணனுக்கும் தரிசனம் கொடுத்து அவன் சாபத்தைப் போக்கினார் என்று கதை.

இதே பெருமாள்   இதே இடத்தில்  நம்ம அர்ஜுனனுக்கும் தரிசனம் கொடுத்துருக்கார்னு இன்னொரு கதையும் இருக்கு. அது என்னன்னா...
மஹாபாரதம் யுத்தம்  முடிஞ்சு, தருமர் பட்டத்துக்கு வந்துட்டார். தன்னுடைய குருவான த்ரோணரையும்,  குலமூத்தோரான பீஷ்மரையும் கொன்னுட்டமேன்னு   ஒரு எண்ணம்  அர்ஜுனனை வதைக்குது.  அதுக்குப் பரிகாரமா இருக்கட்டுமுன்னு  தீர்த்தயாத்திரைக்குக் கிளம்பிப்போறான்.  தற்காப்புக்கு எதாவது ஆயுதம், முக்கியமா அவனுடைய காண்டீபத்தை எடுத்துக்கிட்டுப் போன்னு  மற்ற பாண்டவர்கள் சொல்றாங்க.
'அதால் வந்த வினைதான் எல்லாமும். ஆயுதம் எதுவுமே வேணாம். வெறுங்கையாத்தான்  போகப்போறேன்'னு  சொல்லிக் கிளம்பிப் போய்க்கிட்டே இருந்தான்.  அப்படிப்போன  சமயம் ஒருநாள் இங்கே  வந்து சேர்ந்தான்.  அன்னிக்குன்னு பார்த்து ஒரே தண்ணிதாகம்.  கண்ணுக்கெட்டிய தூரம் வரை  நீர்நிலை ஒன்னும் இல்லை.

தூரக்கே ஒரு முனிவர் உக்காந்து ஜெபம் பண்ணிக்கிட்டு இருக்கார். பக்கத்தில் கமண்டலம் இருக்கு. கிட்டேபோய்ப் பார்த்தால்   அந்த முனிவர் அகத்தியர்.  அவர் எப்போ ஜெபம் முடிச்சுக் கண் திறப்பாரோன்னு தெரியாத  அர்ஜுனன்,  அவர் தியானத்தைக்  கலைச்சு, ' கமண்டலத் தண்ணீரை எடுத்துக்கவா?'ன்னு  கேட்டான்.  ஓக்கேன்னார் முனிவர். கமண்டலத்தை எடுத்துப் பார்த்தால் சொட்டுத் தண்ணி இல்லை !  (எல்லாத்தையும் காக்கா கவுத்து காவிரி ஆக்கிருச்சோ!)


அகஸ்தியருக்குத் தனியா ஒரு சந்நிதி இங்கே!


இது என்னடா எனக்கு வந்த சோதனைன்னு  நினைக்கும்போது, முனிவர் சொல்றார்..... ' உன்னுடைய ப்ரிய நண்பனான க்ருஷ்ணனைக் கேட்டிருக்கலாமே?  ஏன் கேட்கலை?'

அட! ஆமாம்லெ!  எப்படி மறந்தேன்னு  கிருஷ்ணனை  வேண்டிக் கேட்டான்.

(இப்படித்தான் நாமும் நம்ம  மனசுக்கு அடுத்து இருக்கும்  சிலரை சிலசமயங்களில் மறந்துடறோம்!)

கிருஷ்ணன், உடனே தரிசனம் கொடுத்து, கூடவே ஒரு கத்தியையும்  அர்ஜுனனிடம் கொடுத்துட்டு,  உனக்குத் தாகம் ஏற்படும்போது இந்தக் கத்தியால் தரையில் கீறினால்  தண்ணீர் கிடைக்குமுன்னு  வரம் தந்துட்டுப் போனார்.

இவனும் தரையில் கீறி, கங்கையை வரவழைத்துத் தாகம் தீர்த்துக்கிட்டான் என்று  தலப்புராணம் சொல்லுது.  பார்த்தனுக்கு தரிசனம் கொடுத்த இடம் பார்த்தன்பள்ளி ஆனது!

கோவில் காலை 6 முதல் 10 வரை, மாலை 5 முதல் 8 வரை திறந்திருக்கும். நாம்போனபோது  மணி பகல் பனிரெண்டு.   ஆனாலும்   குமாரின் தயவால் தரிசனம் கிடைச்சது. பட்டர்ஸ்வாமிகள் வந்துட்டுப் போனார்!

இப்ப ஒரு ஏழு மாசத்துக்கு முன்புதான் திருப்பணி முடிஞ்சு, கும்பாபிஷேகம் ஆகி இருக்கு!  இந்தக் கைங்கரியத்தில்  நம்ம முரளீதர ஸ்வாமிகள்  பங்கெடுக்கலை போல!   எங்கேயும் அவர் பெயரைக் காணோம்!
கவளயானைக் கொம்பொசித்த கண்ணனென்றும் காமருசீர்க்
குவளைமேக மன்னமேனி கொண்டகோனென் னானையென்றும்
தவளமாட நீடுநாங்கைத் தாமரையாள் கேள்வனென்றும்
பவளவாயா ளென்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே.
பளிங்குக் கல்வெட்டில்   திருமங்கை ஆழ்வாரின் பாசுரங்கள்  பொறிச்சு வச்சுருக்காங்க.   கூடவே  பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் எழுதிய  நூற்றியெட்டு திருப்பதி அந்தாதியில் இருந்து, பார்த்தன் பள்ளிக்கான பாடலும்!

இதே கல்வெட்டில் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள்  & ஸ்ரீ கோலவில்லிராமர் திருக்கோவில்னு  சேர்த்தே எழுதி இருக்கு.  அதான்   உற்சவர் சிலைகளில் ராமனும் சீதையும் இருக்காங்களோ!  உற்சவர்  மட்டும் இருந்தால் எப்படி? மூலவர் எங்கேயாம்?
இங்கேயேதான் ஒரு நாலெட்டு தூரத்தில் தனிக்கோவில் கொண்டிருக்கார் ஸ்ரீராமர். அந்தக் கோவில் மூடி இருந்ததால் நாம்  உள்ளே போகலை.

ஏற்கெனவே பட்டர்ஸ்வாமிகள் அவசரமா  வந்துட்டுப் போனார். ட்யூட்டி டைம் இல்லே பாருங்க.  கோலவில்லியைப் பற்றி அப்போ  தெரிஞ்சுருந்தால்   அங்கேயும் திறக்கச் சொல்லிக் கேட்டுருப்பேன்.

 (டீச்சர் ஹோம் ஒர்க் பண்ணிக்காமப் போனால் இப்படித்தான் ஆகும், கேட்டோ !) 


 கோவிலை வலம் வந்தோம். ப்ரகாரம் படு சுத்தம்.  யாகசாலை கட்டி இருக்காங்க.  உள்ளே பெயிண்ட் அடிச்ச பக்கெட்டுகளை வச்சு ஸ்டோர்ரூம் ஆக்கலாமா?
 கிணறு, அடுத்து மடப்பள்ளி, பத்து தேய்க்கும் இடம் (!)  எல்லாம் ஓக்கே.
தளிகை, விறகடுப்பில் என்பதால் பாத்திரங்கள் கரிபிடிக்கத்தான் செய்யும் இல்லையோ?


நம்ம ஆஞ்சிக்கு ஒரு தனிச்சந்நிதி.  உள்ளே குட்டியா இருக்கார்.
தாயார்,  தாமரை நாயகிக்குத் தனிச் சந்நிதி. அழகா இருக்கு. ஆனால்    தரிசனம்   கம்பிக்கதவினூடாகத்தான்.

மண்டப விதானங்களில்  கலையழகோடு அழகா வரைஞ்சு வச்சுருக்காங்க.


பளிச்ன்னு  இருக்கும் கோவிலைப் பார்த்த மகிழ்ச்சியில்    பெரிய திருவடிக்கு இன்னொரு கும்பிடு போட்டுட்டு இதோ கிளம்பறோம் அடுத்த கோவிலுக்கு!


தொடரும்............:-)21 comments:

said...

கோயில்கள் எல்லாம் சுத்தமா இருக்கு.

said...

கோவில் மிகச் சுத்தம்.
ஓவியங்கள் அற்புதம்.
நன்றி.

said...

// இப்படித்தான் நாமும் நம்ம மனசுக்கு அடுத்து இருக்கும் சிலரை சிலசமயங்களில் மறந்துடறோம்! //
சரிதான் டீச்சர். கோபால் சார் நோட்ஸ் எழுதிட்டிருக்காரு - walking encyclopedia நீங்க பக்கத்துலேயே இருக்கும்போது.

said...

(டீச்சர் ஹோம் ஒர்க் பண்ணிக்காமப் போனால் இப்படித்தான் ஆகும், கேட்டோ !)

டீச்சரே ஹோம் ஒர்க் பண்ணாமல் போனால் என்ன பனிஷ்மெண்ட்,பெஞ்சு மேல ஏறணும் அல்லது 10 தொப்புக்கரணம் போடனும்.

படங்கள் பளிச் பளிச், கட்டுரையும் அபாரம், அதுனால நோ பனிஷ்மெண்ட்.

said...

உங்களோடு வந்தோம் பார்த்தன்பள்ளிக்கு. பெருமாளைக் கண்டோம். நன்றி. அடுத்த கோயில் பதிவைக் காண காத்திருக்கிறோம்.

said...

superu!!!!!!

said...

நன்றி துளசி, மறுபடியும். இனிய நினைவுகளை கிளறிவிட்டதற்கு.

மங்கைமடத்துக்கு வட கிழக்கே 1 மைலில் என் சொந்த ஊர், இலையமதுகூடம்.

said...

கோவில் சுத்தமாக இருப்பதைப் பார்த்ததில் மகிழ்ச்சி. சமீபத்தில் தான் பெயிண்ட் அடித்ததால் இப்படி இருக்கிறது போலும். இன்னும் கொஞ்ச நாளில் பக்த கோடிகள் ஆங்காங்கே எண்ணையையும், பிரசாதக் கையையும் தடவி அழுக்காக்கி விடுவார்கள்.....

தொடர்கிறேன்.

said...

கோயில் புதுசாக் கட்டிய கோயில் மாதிரி இருக்கு.

தாமரையாள் கேள்வன்.. அடடா! என்ன அழகான தமிழ்ப் பெயர். இது போல நூற்றெட்டு திவ்ய சேத்திரங்களுக்குமான தமிழ்ப் பெயர்களை நீங்கள் பட்டியல் போடுங்க டீச்சர். படிக்கிறவங்களுக்கு வசதியா இருக்கும்.

நீங்க கொடுத்திருக்கும் திருமங்கையாழ்வாரின் பாசுரத்தில் எனக்குப் பிடிச்ச சீர் “கவளயானை”. மதயானை அந்த யானை இந்த யானைன்னு நெறையாச் சொல்லியாச்சு. கவளங் கவளமாச் சாப்பிடும் யானைன்னு கவளயானைன்னு சொல்லிருக்காரு திருமங்கையாழ்வார். வீட்டுல கொட்டாரத்துல வளரும் யானைதான் கவளங்கவளமாச் சாப்பிடும். காட்டு யானைக்கு யாரும் அப்படி ஊட்ட மாட்டாங்க. அழகான சொல்லாடல்.

said...

வாங்க கந்தசாமி ஐயா.

சுத்தமா இருப்பது மகிழ்ச்சி என்பதும் உண்மையே!

said...

வாங்க விஸ்வநாத்.

இந்தப் பயணத்துலே குறிப்பெடுக்கும் வேலையைத் தானே செய்வதாக முன்வந்த தன்னார்வலர். அவரை முழுசுமா நம்பிட்டேன். கடைசியில் பதிவு எழுதும்போது பார்த்தால்.... முக்கால்வாசி சமாச்சாரம் மிஸ்ஸிங் :-(

வருகைக்கும் ரசனைக்கும், படங்களைக் கவனமாகப் பார்த்தமைக்கும் நன்றிகள்!

said...

வாங்க பித்தனின் வாக்கு.

பனீஷ்மெண்ட் இல்லையா! தப்பிச்சுட்டேனா!!!!

நன்றீஸ் :-)

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

தொடர்ந்து வருவதற்கு மனம் நிறைந்த நன்றிகள்.

said...

வாங்க நாஞ்சில் கண்ணன்.

நன்றி.

said...

வாங்க வாசன்..

இலையமுதுகூடம்!!!! அந்த ஆயிரம் இலைகளில் விளம்பிய விருந்தா? ஆஹா...

இன்னும் மங்கைமடம் கோவிலுக்குப் போகலை. அடுத்த முறை போகும் எண்ணம் இருக்கு. பார்க்கலாம்.... பெருமாள் கூப்புடுவார்தானே?

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

சனம், எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லையே.....


பேசாம... கோவில்களில் பிரஸாதம் கொடுப்பதை நிறுத்திடலாமா?

said...

வாங்க ஜிரா.

சீரமைச்சு இப்பதான் ஏழுமாசம் ஆகி இருக்கு. அதுதான் பளிச்சோ பளிச்!

யானைக்குக் கவளம் கொடுப்பதை.. பார்த்து அனுபவிக்கணும். நல்ல பெரிய உருண்டையா ரெண்டு கைகளாலும் உருட்டிக் கொடுப்பாங்க. வாயை 'ஆ' ன்னு அழகாத் திறந்ததும் நாக்கில் வைக்கும் உருண்டையை லபக் என்று உள்ளே தள்ளும் அழகே அழகு!!!!

said...

அருமையான கோவில். அதிலும் அருமையான புதிய கோவில். பார்த்தன் பள்ளி என்றால் வேற அர்த்தம் எடுத்துவிட்டேன்.
அப்பெல்லாம் சாபம் கொடுத்தவங்களே சாப விமோசனத்துக்கு வழியும் சொல்வாங்க)

பரவாயில்லையே. தெரிந்தால் தபஸ் செய்துக்கலாமே. நல்ல வண்ணப் படங்கள்.

said...

படங்களும், தகவல்களும் அருமை.தொடர்கிறேன் டீச்சர்..

said...

வாங்க வல்லி.


இப்பவே நமக்குத் தவ வாழ்க்கைதான். தனியா தபஸ் செய்யணுமா என்ன? :-)

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

தொடர்வருகைக்கு நன்றிப்பா!