Wednesday, July 27, 2016

நம்ம அபி அப்பாவுடன் ஊர் சுத்தலாமா? (இந்தியப் பயணத்தொடர். பகுதி 65)

ஹொட்டேல் பாம்ஸ்.     சுமாரான அறை. இதாவது கிடைச்சதே ன்னு  ஜன்னல் திரைச்சீலையைத் தள்ளினதும்...   க்குக்கும்  க்குக்கும் என்று புறாவின் கொஞ்சல்:-) ஒரு ஹை சொல்லிட்டுக் கீழே சாப்பிடப் போனோம்.

நம்மவருக்கும் சீனிவாசனுக்கும் தாலி மீல்ஸ். எனக்குச் சப்பாத்தியும் தயிரும்.  மணி ரெண்டரையைத் தாண்டி இருக்கு.

சாப்பாடு ஆனதும், வரவேற்பில் போய் wifi தொடர்பு விசாரிச்சால்,  அதாலே ரெண்டாவது  மாடி வரை ஏற முடியாதாம் :-(  நமக்கு  Non smoking floor  வேணுமுன்னு கேட்டதால் ரெண்டாவது மாடி கொடுத்துருக்காங்களாம்.  முதல் மாடின்னா அறையிலேயே wifi கிடைக்குமாம்.  இங்கே ரிஸப்ஷன் ஏரியாவில் பிரச்சனை இல்லைன்னு  சொன்னாங்க.  அதுக்கான தொடர்புக்கு அவுங்களே நம்ம செல்லில் போட்டுத்தந்தாங்க.  ரகஸிய  பாஸ்வேர்ட் கோட் :-)

மாயவரத்துலே நமக்கு வேண்டப்பட்டவங்கன்னா  அபி அப்பா, சீமாச்சு, கோமதி அரசு  அண்ட் பரிமள ரெங்கன் மட்டும்தான்.  சீமாச்சு நாட்டில் இல்லை. கோமதி அரசு இடப்பெயர்ச்சியில்.  ரெங்கனுக்கு செல்ஃபோனே கிடையாது.  அபி அப்பாவுடன் பேசிட்டு, கொஞ்ச நேரத்துலே வர்றதாச் சொல்லியாச்.

போனமுறை போனது  செப்டம்பர் 2012.  மூணரை வருசமாச்சு.  நட்டுவுக்கு ஏதும்  வாங்கி வரலை.  நியூஸியில் இருந்து சாக்லேட்கள்தான் வாங்கிப்போயிருந்தாலும், அவை எல்லாம் சென்னைக்குன்னே இருக்கு.  அங்கிருக்கும் சூட்டில் எல்லாம் உருகிப்போயிருது பாருங்க. அதிலும்  உள்ளூர் கார்ப்பயணத்தில் கேக்கவே வேணாம்.
முதலில் கடைவீதிப்பக்கம் போய் எதாவது வாங்கிக்கணும். போனோம். காளியாகுடி கண்ணில்பட்டது. இந்த முறையும்  தூரதர்சனம்தான். ஒரு 'பெரிய கடை'யில் சுமாரான      சாக்லேட்ஸ் கிடைச்சது.  அப்படியே நேரா அபி அப்பா வீட்டுக்குத்தான். நம்ம சீனிவாசனுக்கு  ஒருமுறை போன இடம் சட்னு  மறக்கறதில்லையாக்கும்.

போய்ச் சேரும்போது, என்னடா இதுவரை காணோமேன்னு  வெளியே தெருவில் வந்து பார்த்துக்கிட்டு இருந்தார் அபி அப்பா. இவரை இப்போதான் முதல்முறையா சந்திக்கறோம்.  ஆனால் மற்ற குடும்ப  அங்கத்தினருடன் இது நமக்கு ரெண்டாவது சந்திப்பு.
முதல்முறை சந்திப்பு என்ற உணர்வு கொஞ்சமும் இல்லை. தினம் பார்த்துப்பேசும் பக்கத்து வீட்டுக்காரர்கள் போல ஆக்கி இருக்கு வலையுலகம் :-)

வீட்டுக்குள்  காலெடுத்து வைக்குமுன் அபி அம்மா ஓடிவந்து  'வாங்க'ன்னு  சொன்னதும்  எனக்கு அக்கா நினைவு வந்துருச்சு.  ஏன் என்பதை இங்கே பார்க்கலாம்:-)


உறவினர் வீட்டுலே குழந்தை பிறந்துருக்குன்னு  போயிட்டு அவசர அவசரமா வந்துருக்காங்க. கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்தோம். பள்ளிக்கூடம் போயிட்டு வரேன்னு அபி அப்பா கிளம்பிப்போய் கொஞ்ச நேரத்துலே  வந்துட்டார்!  பின்னாலேயே நட்டு த க்ரேட்!

அபி அப்பாவுடன் வெளியே கிளம்பினோம்.  அபி அம்மா வரலை. நட்டுவும் வரலை. நண்பர்களுடன் விளையாடப் போறாராம். வரேன்னு வாக்குக் கொடுத்ததை மீற முடியாது !  ஆஹா....
 அபி அப்பா வழிகாட்ட முதலில் நாங்க போய்ச்சேர்ந்த இடம் விளநகர். இதில் ஆறுபாதி என்ற  பகுதி.   மயிலாடுதுறையில் இருந்து சுமார் 8 கிமீ தூரம். பெருமாள் கோவில்  வாசலில் இறங்கியதும், வலப்பக்கம் இருக்கும் சிறிய திருவடி கைகூப்பிய நிலையில் இருக்க அவருக்கு நேர் எதிரா இருக்கார் பெருமாள்.


சிறிய திருவடியையொட்டியே ஒரு கோவில் உருவாகிக்கிட்டு இருக்கு. சின்ன இடம்தான். அதுலே குறுக்குவாட்டிலே கோவில் எழும்புது. என்ன கோவிலாக இருக்குமுன்னு போய் எட்டிப் பார்த்தேன்.

ஷீரடி சாயிபாபா கோவிலாம். இங்கே கோவில் வருவதன் காரணம்?  மரத்தில் தோன்றிய சுயம்பு சாயிபாபா!

 பக்தர் ஒருவர் மரத்தாண்டை கூட்டிப்போய் காமிச்சார். இலவம் பஞ்சு மரத்தில்  கீறியது போல் இருந்தது.  நெற்றியில் விபூதி குங்குமம் வச்சுருந்தாங்க.  இவர் மரத்தில் தோன்றி  டிசம்பர் 20, 2015 தேதி   ஒரு வருசம் ஆகி இருக்குன்னு   முதலாம் ஆண்டுவிழா கொண்டாடி இருக்காங்க.
இன்றைக்கு (ஃபிப்ரவரி 1 2016)  கோவில் மளமளன்னு  வளர்ந்து வருது.  அடுத்த  மாசம் கும்பாபிஷேகம் ஆகிருமாம்.

 கோவில் கருவறைக்கான மூலவர் சிலை வந்துருச்சு. வாங்கன்னு  பக்தர்  ஒரு வீட்டின் வெளிப்புறம் போட்டுருந்த தாற்காலிக  ஷெட்டுக்கு கூட்டிப்போனார்.  மூடி இருந்த  ஷெட் கதவைத் திறந்ததும் பெரியதும் சிறியதுமா ரெண்டு மார்பிள் சிலைகள் இருந்தன.  இங்கேதான் பூஜைகள் இப்போ நடந்துக்கிட்டு இருக்கு.

கோவிலைப் பார்த்துக்கிட்டு  எல்லா வேலைகளுக்கும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் சாயி பன்னீர்.  சிலைகள்,  ஷீரடி கோவிலில்  ஒரு மண்டலம்  வைக்கப்பட்டு, பூஜைகள் நடத்தி, ஆசிர்வதிச்சு  அனுப்பினாங்களாம்.

ஒரு பிஸ்கட் பாக்கெட்டில் இருந்து மூணு பிஸ்கட்ஸ் எடுத்துப் பூஜைத்தட்டில் வச்சு  பாபாவுக்கு  தீபஆரத்தி எடுத்துட்டு, நமக்குப் பிரஸாதம் வழங்கினார்.
நாங்களும் கும்பிட்டுக்கிட்டோம்.  இங்கே ஃபேஸ்புக்கிலும், பதிவர் உலகிலும் எனக்குத் தெரிஞ்ச சாயி பக்தர்கள் நினைவு வந்தது என்பது உண்மை.
எந்த நிகழ்வானாலும் சரி, சம்பந்தப்பட்ட  பதிவர்கள் நினைவுவருவது இந்த 12 வருசத்தில் சகஜமாத்தான்  போயிருக்கு.
கடவுள் என்பதே  நம்பிக்கைதான். நம்புனாத்தான் கடவுள்!   அவரவர் நம்பிக்கையை நாம் மதிக்க வேணும் இல்லையா?

சமீபகாலமாக நிறைய இடங்களில்  சாயிபாபா கோவில்கள் பெருகி வர்றதை கவனிச்சுக்கிட்டு இருக்கேன்.  யாருக்கு எங்கே மனம் லயிக்குதோ அங்கே பக்தி செலுத்துதல் தப்பே கிடையாது!

வாங்க நாம் வந்த வேலையைப்  பார்க்கலாமுன்னு  கிளம்பினோம்.


 PIN குறிப்பு:  இந்தப்   பதிவு எழுதும்போது  கும்பாபிஷேகப்படங்களை ஃபேஸ்புக்கில் பார்த்தேன். மார்ச் 26  நடந்துருக்கு.  சுட்டபடங்கள்  சில  உங்களுக்காக! படத்தில் நம்ம சாய் பன்னீரைத் தேடினேன்.  காணோம் :-(






தொடரும்.......... :-)



17 comments:

said...

//படத்தில் நம்ம சாய் பன்னீரைத் தேடினேன். காணோம் //
கோவில் பிரபலமான பின்னே பழைய ஆள் எதற்குன்னு நெனச்சிருப்பாங்க.

said...

சமீபத்துல மயிலாடுதுறை வழியாப் போக நேர்ந்தது. ஆனா நிக்கில. எறங்கல. நேராப் போயிட்டோம். காளியாகுடி காபி கிளப் பத்தி சமஸ் எழுதிப் படிச்சிருக்கேன்.

அபி அப்பா பழைய பதிவராச்சே. மறுபடியும் அவரைப் பத்திப் படிப்பதில் மகிழ்ச்சி. இன்னமும் பதிவுகள் எழுதுறாரா?

சீரடி சாய்பாபா கோயில்கள் இப்பல்லாம் முக்குக்கு முக்கு வந்துருச்சு. எங்க ஏரியாவிலும் ஒரு கோயில் சிறுசாத் தொடங்குனாங்க. இப்போப் பெருசா வளந்திருக்கு. கோயில் வளரல. அதுக்கு வர்ர கூட்டமும் ஆகுல செலவும் பூஜைகளும் நல்லா வளந்திருக்கு.

said...

தொடர்கிறோம். கோவில்களோடு, பதிவர்களையும் போகிற வழியில் தொடர்பு ஏற்படுதிக்கொள்றீங்க. வாழ்க.

மாயவரம் காளியாகுடியைப் பத்தி குமுதத்தில் பல வருடங்களுக்கு முன்னால் வாசித்தது. நானும் அப்போலேர்ந்து அங்க போகணும்னு நினைக்கிறேன்.. வாய்ப்பு வரலை. உங்களுக்கும் அதைத் தாண்டிச்சென்றும் சாப்பிடும் வாய்ப்பு வரவில்லை.

said...

மாயவரத்திலும் உங்களுடன் தொடர்கிறேன் டீச்சர்..

said...

அபி அப்பாவுக்கு இன்னுமா இளமை ஊஞ்சலாடுது? பார்க்க சின்னப் பையனாட்டம் இருக்கார். அப்படியே பள்ளிக்கூடத்துக்கே அனுப்பிடலாம். :)
அபி எப்படி இருக்கா? அவரைப் பத்திச் சொல்லவேயில்லையே டீச்சர்?
நட்டு வளர்ந்துட்டார் இல்ல? எல்லோரும் நல்லா இருக்கணும்.

said...

துளசி

வணக்கம்.

நன்றி (சொல்ல) மறப்பது நன்றன்று ; 20 வருடங்களாக நான் போகாத, வளர்ந்த பூமி பற்றி தொடராக எழுதியுள்ளமைக்கு, நன்றி. அதுமட்டுமில்லாமல் தற்போது மனைவியும் மகனும் அங்கே,
நான் ஒரு 13 வயது 4 - 1/4 - சுயநல பைரவியை பார்த்துக் கொண்டு , மற்றும் புலிவால் பிடித்த நாயராக தொழிலுடன் peerlessnm.com எங்கள் ஊரில்.

காளியாகுடி ஹொட்டெல் எப்போதும் போலவே இருட்டாக முகத்தில் தெரிகிறது. ஆறுபாதி பக்கத்தில் கஞ்சா நகரம் எனும் சிற்றூர் உண்டு. பெயர் என் அமேரிக்க நண்பர்களுக்கு பிடித்தமானது.

வரும்காலத்தில் நீங்கள் வட அமேரிக்க பயண செய்தால் உங்களை வரவேற்க காத்திருக்கிறோம் - http://www.newmexico.org/true-culture/

பஞ்சு மரத்தில் சாமியார் முகம் தெரிகிற செய்தி போல எங்கள் ஊரில் உண்டு, http://www.roadsideamerica.com/attract/images/nm/NMCHIchimayo_mw0497.jpg படத்தில்
இருக்கிற மண்ணை கத்தோலிக்கர்கள் பூசிக்கிறார்கள், சிலர் நீரில் கலந்து குடிக்கிறார்கள் என் கேட்டதுண்டு.

said...

மயிலாடுதுறை , திரு இந்தளூர் ஞானக்கூத்தன் இறந்து விட்டார். எத்தனை பேருக்கு இவரை தெரியும்.... அதனால் என்ன விட்டுடுவோமா.... எங்க ராயர் சாரை.....




//அபி அப்பாவுக்கு இன்னுமா இளமை ஊஞ்சலாடுது? பார்க்க சின்னப் பையனாட்டம் இருக்கார். அப்படியே பள்ளிக்கூடத்துக்கே அனுப்பிடலாம். :)//


ஆமாம் ரிஷான்....சத்தியமா சொல்றேன்.. “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” . நான் சத்தியமா என் மனைவிக்கோ அல்லது எனக்கோ அல்லது என் குழந்தை அபிக்கோ அல்லது நட்ராஜ்க்கோ பத்து ரூபாய் கூட மெடிகல் செலவு செய்தது இல்லை. உண்மை.

நல்ல உணவு, அதும் ஆரோக்கியமான உணவு ... அன்பான மனைவி அதை “எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை”ன்னு பாடிகிட்டே கொடுக்கனும்னு அவசியம் எல்லாம் இல்லை.... விக்ரமன் படம் எல்லாம் எடுபடாது.... ரியல் சண்டை வரனும்..... சமரசம் வரனும்..... ஆனா பல பேர் கேட்கிறாங்க ‘அபிஅப்பாவுக்கு சர்கரை நோயா”ன்னு... எனக்கு பிரஷர் சுகர் என எந்த எழவும் இல்லை. எல்லா டெஸ்டும் எடுத்து விட்டேன். சரி.... ஜாலியா கிட்னி பக்கம் போவோம்னு அதையும் டெஸ்ட் செஞ்சேன்... அதும் பக்கா நார்மல்.

எனக்கு அய்யோன்னு போச்சுது....

இரண்டு வருஷம் முன்னே....


சரின்னு ஹார்ட் செக் பண்ணலாம்னு கும்பகோணம் அழைச்சுகிட்டு போனாங்க என் வீட்டுகாரம்மா. கண்ணன் ஆஸ்பத்திரி....


என்னை நெஞ்சுல எல்லாம் சளி வச்சு ஒட்டி, ஒயர் எல்லாம் வச்சி டிங்கு டிங்கா எடுத்தும்.... அதுலயும் ஒன்னும் இல்லை...

பின்ன என்னை தூக்கி, நடக்க முடிந்த என்னை மீண்டும் அவங்க தோளில் கை போட்டு நடக்க வைச்சு.... அதாவது ஓடும் மெஷினில் செக் பண்றாங்களாமாம்......

அந்தம்மா சொன்னுச்சு ரிசல்ட் எடுக்கும் ஆள் கிட்டே .... “இந்தாங்குறேன்... அவன் நல்லா பக்காவாக்கீறான். தொர்த்தி வுடு. நஞ்சொல்றேன் பாரு. போம்போது பிரியாணி துன்னுட்டு போவான்”



நடந்து வந்தேன்...

“உனக்கு பசிக்குதா?”

“ஆமாம்! எனக்கு இன்னிக்குன்னு பார்த்து பிரியாணி சாப்பிட ஆசை. ஆனா நான் வெஜ் ஆச்சுதே”



குறிப்பு: இந்த கதையில் புள்ளி, கமா, அரைப்புள்ளிகள் தான் விஷயம் சொல்லும்! அதை தேவையானவர்கள் பயன் படுத்திக்கலாம்!

said...

அபி அப்பாவுடன் ஒரு பயணம்....

தொடர்கிறேன்......

said...

வாங்க விஸ்வநாத்.

அப்படி இருக்குமா? ஒருவேளை அவர் கோவிலுக்குள் பிஸியாக இருந்துருக்கலாம்!

said...

வாங்க ஜிரா.

அபி அப்பா ஃபேஸ்புக்கில் அப்பப்ப எழுதறார்! எல்லாம் கட்சி சமாச்சாரம்தான்.

புதுக்கோவில்கள் ஏராளமாப் பெருகி வருவதை கவனிச்சேன். வெவ்வேற ரூபத்தில் கடவுள் பெருகிட்டார். அவருக்கும் லிமிட்டட் உருவங்கள் போரடிச்சுப்போயிருக்கலாம்!

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

பதிவர் குடும்ப உறவுகள் இன்னும் நீடிப்பதும் மகிழ்ச்சிதான்!

அடுத்தமுறை காளியாக் குடியை விடுவதில்லைன்னு இப்பவே சபதம் எடுத்துக்கலாமா?

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

மாயவரத்தில் மட்டுமா? நான் போகுமிடமெல்லாம் கூடவே வரணும், கேட்டோ!

அட்வான்ஸ் நன்றிகள்:-)

said...

வாங்க ரிஷான்.

அருமையான மனைவி இருந்தால் கணவருக்கு வயசு ஏறுவதே இல்லையாக்கும்!

அபி இப்போ சென்னையில் படிப்பதால்.... சந்திக்க முடியலை. வீட்டில் நட்டுவின் அரசாங்கம்தான் :-)

said...

வாங்க வாசன்.

வணக்கம்.

நீங்க சொல்வது கஞ்சனூர்தானே? :-)

மரத்தில் பால் வடியுது. அம்மன் இருக்காள், பிள்ளையார் பால் குடிக்கிறார் இப்படி மரத்தில் சாமி தோன்றுவதும் ஒரு நம்பிக்கை சார்ந்ததுதான் இல்லையா?

எப்படியோ கடவுள் இருக்கார்னு நம்புவதும், நம்பாததும் தொடர்ந்து இருந்து வருது பாருங்க!

said...

வாங்க அபி அப்பா.

உங்களுக்கு எவ்ளோ ரசிகர்கள் பார்த்தீங்களா!!!!


ஆரோக்கியத்தைவிட அரும் செல்வம் வேறென்ன இருக்கு? நல்லா இருங்க!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

தொடர்வது 'மகிழ்ச்சி'!

said...

>>நீங்க சொல்வது கஞ்சனூர்தானே? :-) <<

இல்லை. தகவலுக்கு : கஞ்சாநகரம்