Wednesday, July 13, 2016

திருநகரி திருநாங்கூர் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 59)

கொடிமரம் இல்லை, கொடிமரமில்லைன்னு கூவிக்கிட்டே இருந்தேன் பாருங்க.....   அதுக்குப் பலனா  இந்தக் கோவிலில் ரெண்டு கொடிமரங்கள்!   இப்ப நாம் நின்னுக்கிட்டு இருக்கும் கோவில் திருநகரி  வேதராஜன் கோவில்!
ஏழடுக்கு ராஜகோபுரம்  இருக்கான்னு கூடத் தெரியாதபடிக்கு  வாசலுக்கு முன்னால்  கூரை ஷெட்  போட்டு வச்சுருக்காங்க. உள்ளே நம் கண் எதிரில் இன்னொரு மண்டப வாசல். அதன் முகப்பில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத  மஹாவிஷ்ணு!  ரெண்டுபக்கமும் பெரிய சிறிய திருவடிகள்.


மண்டபம் கடந்து அந்தாண்டை போனால் பலிபீடம், கொடிமரம் தாண்டி  இன்னொரு  (மொட்டை) கோபுரவாசலும்  உள்ளே நீளமாப்போகும் நடையுமா   இருக்கு.  நடையின் கோடியில் கோவிலுக்கு நெல் அளக்க வந்திருக்கும் வண்டியும் காளைகளுமா நின்னுக்கிட்டு இருந்தாங்க.

இது தை மாசம் பாருங்க....   அறுவடைக் காலம் இல்லையோ!   கோவில்நிலங்களைக் குத்தகைக்கு எடுத்தவர்கள், கொண்டு வந்து  சேர்க்கும் நெல் மூட்டைகள்தான் பல கோவில்களிலும்  நாம் பார்த்துக்கிட்டே வர்றோம்.


அப்படியே அடுத்த பிரகாரத்துக்குள் போறோம்.  கொஞ்ச தூரத்தில் படிகள் மேலேறிப்போகுது.  பத்துப்பனிரெண்டு படிகள்  ஏறிப்போறோம். இடது கைப் பக்கம் ஒரு சந்நிதி.  மூலவர்?  நம்ம திருமங்கை ஆழ்வார்தான்!
குமுதவல்லியுடன்,  திருஞானசம்பந்தர் அளித்த வெற்றிவேலுடன் இருக்கார்.
இங்கே வேடுபறி உற்சவம்  விசேஷம்!   நீலன் என்ற கலியன், திருமங்கை ஆழ்வார் ஆன கதையை அண்ணன்பெருமாள் கோவில் எபிஸோடில் சொல்லி இருந்தேன் பாருங்க. அந்த சம்பவம் நடந்த இடமே இதுதான்!
புதுமணத்தம்பதியாக  காட்டுக்குள்  வந்துக்கிட்டு இருந்த  பெருமாளைக் கொள்ளையடிச்சு, அவர் காலில் போட்டுருந்த  மெட்டியைக் கழட்ட வராமல் பல்லால் கடிச்சு எடுக்கப் பார்த்தது  நினைவிருக்குதானே? அப்போதான்  நீலன் காதில் எட்டெழுத்து மந்த்ரோபதேசம் செஞ்சார் பெருமாள்!


உற்சவர் சிலைகளும் நல்ல அம்சமாவே இருக்கு.  இவுங்கதான் கருடவேவைக்கு இங்கிருந்து  கிளம்பிப்போய் திரும்ப வர்றாங்க.  இவருக்கு நேரெதிரா  ஒரு நடைக்கு அந்தாண்டை வெளியே  பிரகாரத்துள் எட்டிப் பார்க்கும்விதமா திட்டிவாசல் போல ஒரு அமைப்பு. ஜன்னல்னு சொல்லலாம்.  அதன் வழியாப் பார்த்தால் ஒரு கொடிமரம்!

நாம் நுழைஞ்சவாசலுக்கு நேரா இன்னொரு சந்நிதி  கல்யாணரங்கனுக்கு போல!   சந்நிதிக்குள் போகும் கதவு மூடி இருக்கு. வாசலுக்கு ரெண்டு பக்கமும் ஜயவிஜயர்கள். கதவின் மேல் நிலையில் ரங்கன் கிடந்த கோலத்தில்!    உள்ளே மூலவர் ஸ்ரீ  வேதராஜன்.  தாயார் அம்ருதவல்லி.இந்தப்பக்கம் சுவரோர மேடையில்   நம்மாழ்வார், நாதமுனிகள், திருமங்கை ஆழ்வார்கள், பரமபதநாதன்,லக்ஷ்மிநாராயணன் இப்படி ஒரு வரிசை.
திரும்பப் படிகள் இறங்கி பிரகாரத்தை வலம் வரலாமுன்னு போறோம்.


கருவறையை  ஒட்டி  வெளிப்பக்கம் உயரமான ஒரு இடத்தில்  ஹிரண்யநரசிம்மர் இருக்கார்.  தங்கக் கவசம் போட்டு வச்சுருக்காங்க.  முகம் மட்டும் தெரியுது!  கவசத்தில்  சிம்மத்தின் கைகளையும், மடியில் கிடக்கும் ஹிரண்யனையும் பார்க்கலாம்.
சுத்திப்போகும்போது கருவறை விமானம் தெரிஞ்சது.  சுத்தமான பிரகாரம்தான். கோவில் கிணறு தாண்டி வலப்பக்கம் திரும்பினால்  மேடை அமைப்பில் மண்டபம், உள்ளே யோகநரசிம்மர் சந்நிதி.  அவருக்கு எதிரில் சின்ன மேடையில் நாகர்கள்.குறிப்பா   எதை வேணாமுன்னு சொல்றாங்களோ....  அதை செஞ்சால்தான் சனத்துக்கு  மனசு ஆறும். அதேதான் இங்கேயும்..............   ப்ச்...:-(

திருநாங்கூரைச் சுற்றியே பஞ்ச நரசிம்மர்களை  தரிசிக்க முடியுமாம். அவர்களில்  இருவர்  இந்தக்கோவிலில்.   நாம்   தரிசித்த  ஹிரண்யநரசிம்மரும்  யோக நரசிம்மரும். உக்ர நரசிம்மர்  திருக்குறையலூர் கோவிலிலும், வீர நரசிம்மர் மங்கைமடம் கோவிலிலும், லக்ஷ்மிநரசிம்மர்  திருவாலி கோவிலிலும் சேவை சாதிக்கறாங்க. நமக்கு முதலிரண்டு கோவில்களைப் பற்றிய விவரம் அப்போ தெரியாததால் கோட்டை விட்டுருக்கோம்.  நம்ம  வழிகாட்டி குமாரும்  இந்தக் கோவில்களைப் பற்றி மூச்சு விடலை.  அவரையும் ஒரேதாக் குற்றம் சொல்லமுடியாது. நாம்தான் 108 கோவில்கள் லிஸ்ட்டைக் கையில் வச்சுக்கிட்டு, இந்த ஏரியாவில்  திவ்யதேசக் கோவில்கள் போகணும் என்றுதானே சொல்லி இருந்தோம்.  மேற்படி ரெண்டு கோவில்களும்  108 பட்டியலில் இல்லை என்பதையும் சொல்லிக்கறேன்.

ஒரு சிவிகை  கண்ணில் பட்டது.   ஆஹா....   கருடஸேவையின் போது   இதுலேதான்  கிளம்பிப்போவாங்க நம்ம திருமங்கைத் தம்பதிகள். வயலில் இறங்கி விழுந்தடிச்சுக்கிட்டு ராத்ரி இருட்டில் போவாங்களாமே....   அதுதான்    பெருமாளுக்கு     வயலாளி மணவாளன்  என்ற பெயரும் வந்துருக்கலாம்.வெளிப்ரகாரத்தில் சுத்தும்போது நந்தவனம்  இருக்கும் பகுதியில் ஒரு கம்பி கேட். உள்ளே அப்படி ஒன்னும் பசுமையா இல்லை போல. பார்க்கவே காய்ஞ்சு கிடக்கு. இதன் மதில்சுவரில் இருக்கும் பளிங்குக் கல்வெட்டில் ஸ்ரீ கல்யாண ரெங்கநாதஸ்வாமி திருக்கோவில் என்றுதான்  இருக்கு.  பழைய பெயர் இதுதான் போல!

இப்போ திருநகரி வேதராஜன் கோவில் என்றுதான் சொல்றாங்க.  தோட்டத்தில் ஒரு பலாமரம்!  தலவிருட்சமாக இருக்கும் போல. குண்டக்க மண்டக்கன்னு  குட்டிக்குட்டிக் காய்கள் ! பலாவுக்கு  இருக்கவேண்டிய அம்சமாவே இல்லை :-(
திருநகரி கோவிலுக்கான கதை என்னன்னு பார்த்தால்.....  சின்னதா ஒன்னு இந்த பலாக்காய் சைஸ்லே  ஆப்ட்டது.

ப்ரம்மாவின் புத்திரன் கர்த்தம ப்ரஜாபதி, பெருமாளிடம் மோட்சம் வேண்டி தவம் செய்கிறான்.  அவனுக்கு உடனே தரிசனம் கொடுத்து அருள் செய்யலைன்னு   மஹாலக்ஷ்மித்தாயார்  கோச்சுக்கிட்டு  இங்கெ வந்து  குளத்தில் இருக்கும் தாமரைப்பூவில் ஒளிஞ்சுக்கிட்டாளாம்.  மனைவியைக் காணாமல் தேடியலைஞ்சு இங்கே வந்து அவளைக் கண்டுபிடிச்சு ஆலிங்கனம் செஞ்சு மடியில் உக்கார்த்தி வச்சுக்கிட்டாராம் பெருமாள்.


எனக்கு  வியப்பான இன்னொரு விஷயம் என்னன்னா.........      இதுக்கு முன்னேநாம் பார்த்த சின்னச்சின்னக் கோவில்களுக்குப்பெரிய பெரிய கதைகள்.   இந்தப் பெரிய சைஸ் கோவிலுக்குக்   குட்டியூண்டு  கதை !!!!!

நாம் இதுவரை  இங்கே திருநாங்கூர் கோவில்களில் பார்த்த தகவல்களில்   திருநாங்கூர் ஏழுகோவில் ஆதீனம். பரம்பரை தர்மகர்த்தாக்கள்ன்னு பார்த்துக்கிட்டே வந்துருக்கோம். அப்புறம் திருநாங்கூர் வரை படத்தில் (இதுவும் கோவிலில் வச்சுருந்ததுதான்) திருநாங்கூர் என்ற பெயரில்  6 கோவில்கள் பெயர்தான் இருக்கு. அப்ப அந்த ஏழாவது என்னவா இருக்குமுன்னு  ஒரு யோசனை வராமல் இல்லை.

இந்தத் திருநகரி கோவிலின் பெயரும் இல்லை.  இன்னொரு கோவிலான திருவாலியின் பெயரும் இல்லை. அப்புறம் திருநகருக்கும் திருவாலிக்கும் ஒரே கதை. ரெண்டும் ஒரே கோவில் கணக்குன்னு வேற சொல்லறாங்க.

அப்படி ஒன்னும் அது அடுத்த தெருவிலும் இல்லை. இங்கிருந்தே ரெண்டரைக் கிமீ தூரத்துலேதான் திருவாலி.  இவுங்க சொல்றபடியே திருநகரி, திருவாலி ரெண்டும் ஒரே கோவில் என்றால், வரை படத்தில் இருக்கும் ஆறுடன் இது ஏழாவது கோவில் என்றாகிறது. ஏழு கோவில் ஆதீனம் என்பது இந்த ஏழும் சேர்ந்ததுதான்னு நினைக்கிறேன். சரித்திர  டீச்சரை  இப்படி கணக்குலே குழப்பியடிச்சுருப்பதை  அந்தப் பெருமாள்தான்  கவனிச்சு, குழப்பம் தீர்த்தருள வேணும்.

காலை  7.30  முதல் 11.30  மாலை 4.30 முதல் 9.30 வரை கோவில் திறந்திருக்குமாம்.

பெரிய  கோபுரத்துடன் இருக்கும் பெரிய இடத்துலே  சுமாரான சைஸில் ரெண்டு பிரகாரங்களுடன்  இருக்கும் இந்தக் கோவிலில்  வாகன மண்டபம் எங்கே இருக்குன்னு  தேடணும்.  கருட வாகனம் உண்டோன்னு  தெரிஞ்சவங்க   சொல்லலாம்.  ஏன்  இவ்ளோ சிறப்பு கவனம்?   காரணம் இருக்கு!

 திருநாங்கூர் பதினொரு கருட சேவையில் இங்கத்துப்பெருமாள்  இல்லையாக்கும்.  ஏன்? ஏன்?ஏன்?


தொடரும்............  :-)
14 comments:

said...

படங்கள் அழகு அம்மா...
விவரம் அறியத் தந்தீர்கள்... அருமை.

said...

நரசிம்மருக்குக் கவசம் பெருசா இருக்கே. அளவு சரியா எடுக்கலை போல. ஆனா புதுசு போல. பளபளன்னு இருக்கு. நரசிம்மரைச் சாக்கா வெச்சு இரணியனுக்கும் கவசம் கெடைச்சிருச்சு பாத்தீங்களா?

தூய்மையா வெச்சுக்கிறதைப் பத்தி நம்ம மக்களுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது. வைத்தீசுவரன் கோயில் பிரகாரங்கள்ள குடும்பத்தோட உக்காந்து புளியோதரையும் பூரியும் கொண்டு வந்து சாப்பிட்டுட்டு பருக்கையையும் குப்பையையும் அங்கயே போட்டுட்டுப் போனாங்க. அதாச்சும் தாவலங்குற அளவுக்கு இருக்கு கோயில் பரிபாலனம். ஒன்னும் சொல்றதுக்கில்ல.

said...

//திருநாங்கூர் பதினொரு கருட சேவையில் இங்கத்துப்பெருமாள் இல்லையாக்கும். ஏன்? ஏன்?ஏன்?//

மனைவியத் தேடி
மணவாளன் போகையில
மத்தியில நாம எதுக்கு
நந்தி மாதிரி குறுக்கன்னு
கருடர் நெனச்சிருப்பாரோ ?

said...

கோயில் உலா வந்தேன்.அருமையான படங்களைக் கண்டேன். நன்றி.

said...

தொடர்கிறேன். கோபால் சார், விஷ்ணு சகஸ்ர'நாமம்தான் சொல்கிறாரோ என்று Zoom பண்ணிப்பார்த்தேன்.. ஒருவேளை அடுத்து எந்தக் கோவில் என்று புஸ்தகத்தைப் பார்க்கிறாரோ என்னவோ.

கோவிலில் விளக்கு ஏற்றுவது என்பது, கோவில் விளக்குக்கு எண்ணெய் கொடுப்பது என்றுதான் அர்த்தம் (எனக்குத் தெரிந்த வரையில்). இதை அகல் விளக்கு ஏற்றுவது என்று தவறாகப் புரிந்துகொண்டு சிலர் கோவில்களில் அகல் விளக்கு ஏற்ற ஆரம்பித்தார்கள். இதில் வியாபார சந்தர்ப்பம் ஒளிந்திருப்பதை அறிந்தவர்கள், சிறு சிறு அகல்கள் விற்க ஆரம்பித்து, இப்போது சிறிய டப்பாக்களில் உலகத்தில் காணக்கிடைக்காத எண்ணெய் இட்டு (கட்டியாய்ப்போன வனஸ்பதி மாதிரி ஒரு வஸ்து) குறைந்த செலவில் விற்க ஆரம்பித்தார்கள். காசு குறைவு என்பதால் கண்ட கண்ட இடத்தில் அகல்களை வைக்க ஆரம்பித்தவுடன், கோவில் நிர்வாகமே என்ன செய்வது என்பது புரியாமல் இப்போது பெரிய பெரிய தட்டுகளை (மெட்டல்) வைத்து, அதில் இந்த சிறிய அகல்களை வைக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றன (சமீபத்தில் அடையாறு அனந்த பத்மனாபன் கோவிலிலும் இவ்வாறு பல இடங்களில் தட்டுக்கள் வைத்திருப்பதைப் பார்த்தேன்). இதுபோல், எண்ணெய் விளக்கு என்பது ஒன்று நெய் அல்லது எள் எண்ணெய். இப்போது இதிலும் வியாபாரத்துக்காக பிராண்டுகள் வந்துவிட்டன. அதில் கண்ட கண்ட எண்ணெய்களைக் கலப்பதும், கடவுளுக்கே இது இதமானது என்று வியாபார வாசகங்களோடு பக்தர்களை சென்டிமென்டாகக் குழப்புவதும் ரொம்ப அதிகமாகிவிட்டது. ஆளாளுக்கு புதிது புதிதாக சாத்திரங்களைக் கண்டுபிடிப்பதில்தான் நாம் வல்லவர்களாகியிருக்கிறோம்.

said...

தொடர்கிறேன்...

said...

வாங்க பரிவை சே குமார்.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ஜிரா.

கவசம், இந்த கருடசேவைக்கான ஸ்பெஷலாக இருக்குமோ என்னவோ! அதான் பளபளன்னு புதுசா இருக்கு.

உண்மையைச் சொன்னால் ஹிரண்யனைப்போல் பாக்கியசாலிகள் யாருமே இல்லை. பெருமாள் தன் மடியில் ரெண்டு தொடைகளிலுமா வச்சுக்கிட்டது இவனைத்தான்!

நம்ம சனத்துக்கு இன்னும் சுத்தம் பற்றிய உணர்வு வரவே இல்லை பாருங்களேன் :-(

said...

வாங்க விஸ்வநாத்.


திருமங்கை , மனைவியுடந்தான் பல்லக்கிலே போறார்! அதான் இடைஞ்சலா இருக்கவேணாமுன்னு பெருமாள் போகலை, போல !

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

நீங்க சொன்னது ரொம்பச் சரி. கோவிலுக்கு எண்ணெய் கொண்டு கொடுப்பதுதான் விளக்கேத்தி வைக்கறேன் என்ற வேண்டுதல்.

எனக்குத் தெரிஞ்சே, ஆமணக்கெண்ணெய் ஒரு பெரிய தூக்குலே கோவிலுக்கு அனுப்புவாங்க எங்க பாட்டி. விளக்கேத்தும் எண்ணெய் என்பதால்தான் அதுக்கு விளக்கெண்ணெய் என்று பெயரே வந்துருக்கு.

அம்மா இருந்த காலத்தில் மாசாமாசம் மளிகை வாங்கும்போது ஒரு வீசை நல்லெண்ணெய் கோவிலுக்கு வாங்கி அனுப்புவாங்க. தவிர கோவிலுக்கு வீட்டுலே இருந்து யார் போனாலும் ஒரு சின்னக்கிண்ணத்துலே எண்ணெய் எடுத்துக்கிட்டுப்போய் அங்கு எரியும் விளக்கில் ஊத்திட்டு வருவோம். எண்ணெய்க் கிண்ணம் என்று வீடுகளில் வச்சுருப்பாங்க.

போனவாரம் யாரோ ஃபேஸ்புக்கில் கோவிலில் விற்கும் எண்ணெய் விளக்கைப் பத்திக் குறிப்பிட்டு இருந்தாங்க. கடைக்காரர்கள் சமையலில் பயன்படுத்திய எண்ணெயை வாங்கி, வடிகட்டி அதில் மாவு சேர்த்துக் கலக்கி மஞ்சள் நிறம் போட்டு, வனஸ்பதியும் கலக்கி அகலில் ஊத்தி ரெடிமேட் விளக்கு விக்கறாங்களாம். எல்லாத்துலேயும் வியாபாரம். காசு பார்க்கணும். அவ்ளோதான்.

மக்களும் வீட்டில் இருந்து எதுவும் கொண்டுபோகாமல், அங்கேயே விளக்கை வாங்கிக் கொளுத்திட்டுப்போறாங்க.

நோகாமல் நோம்பு கும்பிடும் பழக்கம் எல்லாருக்கும் வந்துருச்சு :-(

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

தொடர்வருகைக்கு நன்றி.

said...

விதவிதமான புராணங்கள். விவரங்கள். ஆனால் இவ்வளவு
சிரமம் எடுத்து நீங்கள் எழுதி இருப்பதே இன்னோரு பெரிய புராணமாகிறது.
சக்கரத்தாழ்வார் சன்னிதி தனியாக இருக்குமே.
இல்லாவிட்டால் அதற்கும் ஒரு கதை இருக்கும்.

said...

பெரிய கோவிலுக்கு சின்ன கதை...காரணம் என்னவோ!!! தொடர்கிறேன் டீச்சர்..