Friday, July 22, 2016

திருநாங்கூர் கருட ஸேவை. (இந்தியப் பயணத்தொடர். பகுதி 63)

ரொம்பநாளா ஆசைப்பட்ட திருநாங்கூர் திவ்ய தேசக் கோவில்களை தரிசனம் செஞ்சுட்டு இந்தப் பகுதியில் இருந்து கிளம்பறோம்.  திருநாங்கூர்னு  சொன்னதும் அங்கத்து கருடசேவை நினைவுக்கு வராமப் போகாது. அவ்ளோ பிரபலம்!  நேரில் பார்க்காட்டாலும், அந்த சமயத்துலே  தினசரிகளில் இதைப் பற்றி எழுதி இருப்பதையெல்லாம் ஆர்வமா படிச்ச காலங்களும் உண்டு.

 இந்த  கருடசேவை தை மாசத்துலே நடக்குது.   நாமும் அதிசயமா இப்ப தை மாசத்தில்  இங்கே வந்துருக்கோம் என்றாலும்.........   விழாவைப் பார்க்கக் கொடுப்பனை இல்லை பாருங்க. இன்னும் எட்டு நாள் இருக்கு விழாவுக்கு.  நம்ம சூறாவளி  சுற்றுப்பயணத்தில்  எட்டுநாள் என்பது  ரொம்பப்பெருசு........  போகட்டும்....
கருடசேவையைப் பற்றியும், விழா நிகழ்வுகளையும் எனக்குத் தெரிஞ்ச விபரங்களையும்    இங்கே  பதிவு செய்வதன் மூலம் உங்களும் சொல்லிட எண்ணம்.


தை அமாவாசை, அதிகாலை ப்ரம்ம முஹூர்த்தத்தில்  திருநகரி கோவிலில் இருந்து நம்ம திருமங்கை ஆழ்வார் முதலில் அவருடைய அவதாரத் தலமான திருக்குறையலூருக்குப் புறப்பட்டுப் போறார்.  இங்கிருந்து ஒரு அஞ்சாறு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கு இந்த ஊர்.  போகும் வழியில்  பயிர் விளைஞ்சு நிக்கும் வயலில் இறங்கி அந்தப் பயிர்களை மிதிச்சுக்கிட்டுப் போறார்.
வயலுக்குச் சொந்தக் கார விவசாயி கோச்சுக்குவானா?   ஊஹூம்....   நம்ம வயலில் இறங்கி நடக்கமாட்டாரான்னு  ஏக்கம்தான் ஒவ்வொருத்தருக்கும்!   ஏனாம்?  திருமங்கை இறங்குன வயலில் அந்த வருஷம் விளைச்சல் அபாரமா இருக்குமாம்!  பின்னே கேட்பானேன்!

திருக்குறையலூர் போய்ச் சேர்ந்து ,  இங்கிருக்கும்  உக்ரநரசிம்ஹரை சேவித்து,  (இங்கே உக்ர  நரசிம்ஹர் கோவில் கொண்டிருக்கும்  விஷயம் நமக்குத் தெரியாததால் தவறவிட்டுட்டோம்.)
அங்கண் ஞாலமஞ்ச அங்கோர் ஆளரியாய் அவுணன்
பொங்க ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம்
பைங்கணானைக் கொம்பு கொண்டு பத்திமையால் அடிக்கீழ்
செங்கணாளி இட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றமே

என்று பத்துப் பாசுரங்கள் பாடி அஹோபில நரசிம்ஹருக்கு ஈடான இவரை மங்களாசாஸனம் செய்தபின், அங்கே தரும் மாலை மரியாதைகளை ஏற்றுக்கொண்டு, மங்கை மடம் என்ற  ஊருக்கு வந்து அங்கே  வீரநரசிம்ஹரை  மங்களாசாஸனம் செய்கிறார்.  இங்கேதான் குமுதவல்லி  கல்யாணம் செஞ்சுக்கப் போட்ட நிபந்தனையின்படி தினமும் ஆயிரம் வைணவர்களுக்கு அன்னதானம் செய்தாராம்!

திருமங்கை குமுதவல்லி தம்பதியருடன், திருமங்கையின் தினசரி       பூஜையில் இருக்கும்  சிந்தனைக்கினியன்


அங்கிருந்து புறப்பட்டு திருக்காவளம்பாடி, திருபார்த்தன்பள்ளி கோவில்களுக்குப்போய் அங்கிருக்கும் பெருமாள்களை வணங்கி மங்களாசாஸனம்  செய்து, சாற்றுமுறை ஆனதும்  காவேரிக்கரையில் உள்ள மஞ்சக்குளி மண்டபத்துலே  மஞ்சக்குளி வைபவத்துக்குப் போறார்.  அங்கே திருநறையூர் நம்பி, அழகிய மணவாளர் ஆகியோருக்கு மஞ்சக்குளி (இது  மஞ்சள் சூர்ணாபிஷேகம்தானாம்) செய்தபின்,  திருமங்கைக்கும்  மஞ்சக்குளி நடக்கிறது.  இது  நம்ம்  பெருமாளே இவருக்குச் செய்த மரியாதையாம்!


கொஞ்ச நேர ஓய்வுக்குப்பின்  மறுபடி கிளம்பி திருவண் புருஷோத்தமம், வைகுந்த விண்ணகரம், செம்பொன்செய் கோவில், திருத்தெற்றி அம்பலம், அரிமேய விண்ணகரம் ஆகிய கோவில்களுக்குப்போய்  பாசுரம் பாடி மங்களாசாஸனம் செய்து பதில்மரியாதை பெற்று,  திருமணிமாடக்கோவிலுக்கு வந்து பத்ரிநாராயணரை வணங்கி  பாசுரங்கள், மங்களாசாஸனம் செய்த பின் இங்கேயே இரவு தங்கி விடுகிறார். எல்லாம் முடிச்சு வந்து சேரவே காலை 4  மணி ஆகிடுமாம்.  இப்படி முதல் நாள் உற்சவம் நிறைவாகிறது.

திருமங்கை ஆழ்வாராக பூவுலகில் இருந்தப்ப எப்படி  பெருமாள் கோவில்களுக்கு  எல்லாம் போய் பாசுரங்கள் பாடி வழிபட்டாரோ  அதை விடாமல்  இப்பவும்  அதேபடிக்குச் செய்கிறார் என்று நாம் புரிஞ்சுக்கவேணும்.   ( அதானே....        ஓடியோடி தரிசிச்ச  கால் சும்மா இருக்குமோ!) 


மறுநாள் (ரெண்டாம் நாளுக்கான ப்ரோக்ராம் ) என்னன்னு பார்க்கலாம்.
நேற்று இவர் போய் தரிசனம் செஞ்சு வந்த மற்ற எல்லாக் கோவில் பெருமாள்களும் கருடவாகனத்தில் ஏறி அவரவர்  ஊரில் இருந்து புறப்பட்டு இங்கே  திருமணிமாடக் கோவில்  வந்து சேர்ந்துடறாங்க. அதான் வாசலில் பெரிய பந்தல்  போட்டு வச்சுருக்காங்க பாருங்க. முத்துடைத்தாமம் நிறைதாழ்ந்த மாபெரும் பந்தல்!
மேலே நம்ம        கைலாஷியின் பதிவில் இருந்து  இந்த பதினொரு கருட வாகனங்களில்   ஒன்பதைச்  சுட்டுப் போட்டுருக்கேன்.

நண்பர் கைலாஷி அவர்களுக்கு நம் துளசிதளத்தின் மனம் நிறைந்த நன்றிகளை இங்கே பதிவு செய்கிறேன்.

நன்றி கைலாஷி.


காலை ஒரு பத்து மணிக்கு திருமணிமாடக்கோவில் நாராயணப்பெருமாள், திருவீதி  ஊர்வலம் போயிட்டுத் திரும்ப வாசலில் உள்ள பந்தலுக்கு வந்து சேர்கிறார்.  ஹோஸ்ட் இல்லையா? அதான் போய் ஊரை அழைச்சுட்டு வர்றார் போல!


மற்ற பத்து கோவில்களில் இருக்கும்  உற்சவர்கள்  வந்து சேர எப்படியும் பகல் 11 மணி ஆகிருமாம். கோவிலுக்குள் இருந்து ஆழ்வார்  வெளியே வந்து  ஒவ்வொரு பெருமாளுக்கும் பாசுரம் பாடி மங்களாசாஸனம் செய்யறார். சம்ப்ரதாயமா கோஷ்டி, அவரவருக்கு உண்டான பாசுரங்களைப் பாடி சாற்றுமுறை ஆகும்.

அப்புறம் திருமங்கை ஆழ்வாரை,  மணவாள மாமுனிகள்  பாசுரங்களால் மங்களசாஸனம் செய்யறார்.

அந்த பதினொரு கருடவாகனங்கள் என்னென்ன கோவில்களில் இருந்து வருதுன்னு பார்க்கலாம்.

1 திருமணிமாடக்கோவில்
2  வைகுந்த விண்ணகரம்
3 அரிமேய விண்ணகரம்
4 திருத்தேவனார் தொகை
5 திருவண் புருஷோத்தமம்
6 செம்பொன்செய் கோவில்
7 திருத்தெற்றியம்பலம்
8 திருமணிக்கூடம்
9 திருக்காவளம்பாடி
10 திருவெள்ளக்குளம் அண்ணன்கோவில்
11  திரு பார்த்தன்பள்ளி

அப்புறம் மாலை திருமஞ்சனம்.  எல்லாப் பெருமாள்களுக்கும் ஒரே சமயத்தில்!  கூடவே திருமங்கையாழ்வார் தம்பதிகளுக்கும். மனைவி குமுதவல்லியோடுதான் இவர்  கையில் வேல் பிடிச்சு  திரு நகரியில் இருந்து முதல்நாள் கிளம்புவது வழக்கம். இந்த வேல்?  அது திரு ஞானசம்பந்தர்  சீர்காழி தாடாளன் கோவிலில் இவருடைய பெருமையைப் புரிஞ்சுக்கிட்டுப் பரிசாகக் கொடுத்த வேல் ஆக்கும்!

திருமஞ்சனம் ஆனதும் அலங்காரங்கள் நடக்கும்.  கிட்டத்தட்ட  நடு ராத்திரி ஆகும்போது, இந்த பதினொரு பெருமாள்களும்  கருட வாகனத்தில் புறப்பாடு. திருவீதி வலம்! கூடவே  ஹம்ஸ வாகனத்தில்  திருமங்கை ஆழ்வார் ஜோடி.  இப்படி பனிரெண்டு வகையில் ஊர்வலம் பார்க்கக் கொடுத்து வச்சுருக்கணும்.   அவரவருக்கு அவரவர் கூட்டம் கூடவே போகும்!  அடடா... மனக்கண்ணால் பார்க்கும்போதே........   ஜிவ்ன்னு இருக்கு!ஒரு நாலு நிமிட் வீடியோ கிடைச்சது:-)   வலையேற்றியவருக்கு நம் நன்றி.


ஊர்வலம் முடிச்சுத் திரும்ப மணிமாடக்கோவில் முத்துப் பந்தலுக்குத் திரும்பி வரும்போது எப்படியும் மூணரை நாலு மணி!   அப்புறம் திருவந்திக் காப்பு.  அடுத்து அர்த்தஜாமம் (!!!) பூஜை.

தோ....   பொழுது விடிஞ்சு  மூணாம் நாள் ஆரம்பிச்சுருச்சே!


காலை நேரத்துக்குண்டான  பூஜைகள் எல்லாம்  அவரவருக்கு நடந்த பிறகு, வந்த வேலை ஆச்சுன்னு  எல்லா கருடன்களும் தங்கள்தங்கள் பெருமாளைச் சுமந்தபடியே அவரவர் இருப்பிடத்துக்குப் போய்ச் சேர்ந்துடுவாங்க.

நம்ம திருமங்கை, அவருடைய இருப்பிடமான திருநகரிக்குக் கிளம்பிப் போயிருவாரா?  ஊஹூம்.... இல்லை. இவர் வழி தனி வழி :-)


 எல்லோரையும்  நிதானமா வழி அனுப்பி வைத்தபிறகு, பகல் 12 மணி போலக் கிளம்பி, 'திருவெள்ளக்குளத்துறைவோனே... எல்லா இடரும் கெடுமாறு அருளாயே'ன்னு  அண்ணனிடம் போய் சரணாகதி செய்து  அண்ணன் பெருமாளை ஸேவித்து, மாப்பிள்ளை ஜோரில் (குமுதவல்லி இங்கத்துப் பொண் இல்லையோ!) கிளம்பி நேரா  திருத்தேவனார்தொகை மாதவப்பெருமாளிடம் (கீழச்சாலை)  போய்  அவரையும் வணங்கி மங்களாசாஸனம் செஞ்சபின்,  தன் இருப்பிடமான திருநகரிக்கு எழுந்தருளுகிறார். (  கீழச்சாலையில் ஒரு கால பூஜைன்னு  அன்றைக்கு மதியம் கோவில் மூடி இருக்காதுன்னு நம்பலாம். நமக்குத்தான்  உள்ளே போக உத்தரவு ஆகலை....)

பத்ரிநாராயணர்  இங்கே திருமணிமாடக்கூடத்தில் எழுந்தருளும் போது  கருடன் மீதேறி வராமல் தேரில் வந்துட்டாராம். நான்கு குதிரை பூட்டுன தேர்.

 இந்த நான்கு குதிரைகளும் நாலு வேதங்கள். சூரியனும் சந்திரனும் தேர்க்கால்கள்! இதனால் கருடனுக்கு மன வருத்தம். இதைப் போக்கத்தான்  இங்கே பதினொரு கருட வாகனங்களில் ஒரே சமயம்  ஊர்வலமாக வருகிறார் என்றும்  சொல்றாங்க.

ஒரு கருடசேவை பார்த்தாலே புண்ணியமாம்.  அப்ப பதினொரு ஒரே சமயம் பார்த்தால்..............   ஹைய்யோ!!!!கீழே    இருக்கும் படங்கள் நம்ம  அடையார் அநந்தபதுமனின் கருடசேவை. புண்ணியம் கிடைச்சது  2009  டிசம்பர் 29 வைகுண்ட ஏகாதசியில் :-)


தொடரும்.........  :-)

16 comments:

said...

என்ன அழகு....அருமை...

said...

நன்றி. நன்றி. நன்றி.

said...

பல ஊர்களிலும் இருந்து வரும் கருட சேவையைத் தொலைக்காட்சியில் பார்த்த நினைவு எந்தக் கோவில்கள் ஊர்கள் என்பது மட்டும் நினைவுக்கு வரவில்லை

said...

இந்தக் கருட சேவையை ஒரு முறை தனியாகவும் இன்னொரு முறை சகதர்மிணியுடனும் தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன்.

said...

பிறந்த ஊரான கும்பகோணத்திலும், தொடர்ந்து தஞ்சாவூரிலும் கருடசேவை பார்த்துள்ளேன். தங்களது இப்பதிவு மூலமாக திருநாங்கூர் கண்டேன். நன்றி.

said...

திருநாங்கூர் 11 பெருமாள் கருட சேவையைப்பார்த்திருக்கிறேன் திருமங்கையாழ்வார் 11 பெருமாள் மேலேயும் தனித்தனியாக பத்துபத்து பாடல்கள் பாடியிருக்கிறார். ஒவ்வொரு பத்திலிருந்தும் சில பாடல்களையும் ஓவ்வோரு பெருமாளும் திருமங்கையாழ்வார்-குமதவல்லித்தாயார் முன்பே வரவும், கோஷ்டி அப்பாடல்களைப்பாடும். அவர்களோடு பக்த கோடிகளும் சேர்ந்து பாடுவர். இதற்க்காகவென்றே சில வசதிபடைத்த பக்தர்கள் இப்பாடல் தொகுப்பை இலவசப்பதிப்பாக விநியோகம் பண்ணுவர். இதைத்தான் திருமஙகையாழ்வார் ஒரே நேரத்தில் 11 பெருமாள்களையும் மங்களாசாசனம் செய்கிறார் என்பர். இதற்கு பின்னர் பெருமாள் எங்கு நின்றாரோ அங்கு திருமங்கையாழ்வார்-குமுதவல்லி தாயார் நிற்பர். இத்திவ்ய தம்பதிகள் நின்றவிடத்தில் மணவாள மாமுனிகள் வந்து நிற்பார். அவர் பாடும்விதமாக பிரபந்த கோஷ்டி ஆழ்வார் மேலே முனிகள் பாடியதைப்பாடுவர். அவர்க்ளோடு பக்த கோடிகளும் பாடுவர். அதாவது முனிகளின் ஆழ்வாரை மங்களாசாசனம் செய்து முடியும்போது மாலை நான்கு மணியாகும். தொடங்குவது மதியம். பின்னர் எல்லாரும் மணிமாடக்கோயில் பெருமாளை வணங்குவர். அங்குதான் பெருமாள் இருப்பார். மற்ற 10 கோயில்களும் பூட்டிக்கிடக்கும்.

நள்ளிரவுக்குப்பின் விடிகாலை கருட சேவை மணிமாடக்கோயிலுக்குள்ளேயே நடக்கும். அது முடிந்தவுடன் வீடு திரும்பலாம்.

11 பெருமாள்களின் மேல் ஆழ்வார் 110 பாடல்கள் பாடியிருக்க அவற்றுள் ஒன்று கூடவா உங்களுக்கு கிடைக்கவில்லை? அஹோபில நரசிம்மரின் மேல் பாடிய பாடலொன்றை - அதுவும் சரியாக இல்லாமல் - போட்டிருக்கிறீர்கள். வருத்தம். மணிமாடக்கோயில் பாடல்களிலும் மற்ற 10 ஊர்க்கோயில்களைப்பற்றியும் ஆழ்வார் ந்னகு இரசித்து இயற்கை வருண்ணன்களோடு பாடியிருப்பார். படிக்கவும். பச்சைபசேலென்ற வயல்களின் நிற்கும் கதிர்மணிகள்; அங்கு நீர்நிலைகள்; அவற்றில் துள்ளிக்குதிக்கும் வாலை மீன்கள். அவற்றப் பிடித்துண்ண காத்திருக்கும் கோக்குக்களும் நாரைகளும் என்றெல்லாம் எழுதி அசத்தியிருப்பார்.

அஹோபில் நரசிம்மர் பாடல்கள் பத்து. அங்கே போவதற்கு ரொம்ப தில் வேண்டுமென முடித்திருப்பார். நீங்கள் போட்டதில் என்ன குறை. இறுதிவரி நீங்கள் போட்டது>


அங்கண் ஞாலமஞ்ச அங்கோர் ஆளரியாய் அவுணன்
பொங்க ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம்
பைங்கணானைக் கொம்பு கொண்டு பத்திமையால் அடிக்கீழ்
செங்கணால் இட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றமே

உங்கள் இறுதிவரி பாடலில் பொருளையேத் தரவில்லை.

செங்கண் ஆளி இட்டி இறைஞ்சும் சிங்க வேள் குன்றமே

என்றிருக்க வேண்டும்.

செங்கண் - சிவந்த கண்களையுடைய
ஆளி - சிங்கம் )பன்மையாக எடுக்கவும்)
இட்டு இறைஞசும் - பெருமாள் முன் படைத்து வணங்கும்

திரண்ட பொருள்:

உலகத்தோரெல்லாம் பயந்து நடுங்கும்படி நரசிம்ம உருவம் எடுத்து வந்து ஹிரண்யனின் வயிற்றைத் தன்கூரிய நகங்களால் பிளந்த பெருமாள் உறையுமிடம். ஆனைகளை வேட்டையாடி அவற்றின் தந்தங்களை பெருமாள் முன் படைத்து வணங்கும் சிங்கள் உலாவும் இடமிது.

செங்கணால் என்றெழுதியதில் இப்பொருள் வருமா?

இப்பாடலின் உட்பொருள் நிறைய. விரிவஞ்சி விடலாயிற்று.

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க விஸ்வநாத்.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

கருட சேவைகள் பல எண்ணிக்கைகளிலும் பல இடங்களில் நடக்குது. காரைக்காலில் கூட ஸப்த கருடசேவைன்னு ஏழு பெருமாள் ஊர்வலம் உண்டு.

யூ ட்யூபிலும் கருடசேவைகளைப் பார்க்க முடிகிறது.

அநேகமா எல்லா கருடன்கள் உருவிலும் ஒரு ஒற்றுமை இருப்பதால் நினைவு வைத்துக்கொள்வது சிரமம்தான்.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க கந்தசாமி ஐயா.

அதிர்ஷ்டசாலி நீங்க!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

எனக்கு நேரில் பார்க்க ஆசை இருந்தாலும், சமயசந்தர்ப்பம் சரியாக அமையலை என்ற வருத்தம் உண்டு.


வருகைக்கு நன்றி.

said...

வாங்க பால சுந்தர விநாயகம்.

வணக்கம். முதல் வருகைக்கு நன்றி.

தங்களின் மேலதிகத் தகவல்களுக்கும், நீண்ட பின்னூட்டத்திற்கும் என் மனம் நிறைந்த நன்றி.

நீங்கள் சுட்டிக் காட்டியபின் தான் 'ஆளி' யை விட்டதைக் கவனித்தேன். தட்டச்சுப்பிழைக்கு மன்னிக்கணும்.

இந்த 108 வைணவ திவ்ய தேசக் கோவில்களின் பதிவுகளில் கூடியவரை ஒரு பாசுரம் சேர்ப்பது உண்டு.

திருநாங்கூர் திருப்பதிகளிலும் சேர்த்தே எழுதியிருக்கின்றேன்.

ஆர்வம் உள்ள வாசகர்கள், தேடி வாசித்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

said...

காணொளி மூலம் எங்களுக்கும் கருட சேவை வாய்த்தது. நன்றி டீச்சர்.

தொடர்கிறேன்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

தொடர்வருகைக்கு நன்றி.

said...

பதினோரு கருடசேவைகளையும் கண்குளிர பார்த்து மகிழ்ந்தேன்..நன்றி டீச்சர்.

முன்பு இருந்த இடத்தில் ஒவ்வொரு திருநாளின் போதும் புறப்பாட்டிற்கான கொட்டு சத்தம் கேட்டவுடன் ஓடி விடுவேன்..

இப்போ அப்படி போக முடிவதில்லை என்ற வருத்தம் இருந்தது. ஆனா வருடத்தில் ஒருமுறை நம்ம வீட்டு வழியா கருடசேவை உண்டு...அதுவும் தங்க கருடனில்..

இது போக தெப்பத்தின் சமயம் காவிரிக்கரையோரத்தில் உள்ள ஜீயபுரம் என்ற கிராமத்தில் உள்ள மண்டபத்திற்கு போவதும், வருவதும் எங்கள் வீட்டு வழியே தான்..

ரங்கனைக் காண வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி..

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

நாலைஞ்சுமுறை திருவரங்கம் வந்தும் ஒருமுறை கூட நம்பெருமாள் பவனியைப் பார்க்க முடியலைப்பா.................

தங்கக் கருடனில் ஜொலிச்சுருப்பார்!!