Monday, July 18, 2016

திருத்தேவனார்தொகை (இந்தியப் பயணத்தொடர். பகுதி 61)

இந்தக் கோவிலைப் பார்த்தேன்னு சொல்றதா? இல்லை பார்க்கலைன்னு சொல்றதான்னு  எனக்கு இன்னும் புரியலை. இப்படி வச்சுக்கலாம்.  நான் பார்க்கலை. ஆனால் பெருமாள் பார்த்துருப்பார்!
திருப்பார்த்தன்பள்ளியில் இருந்து  திரும்ப திருநாங்கூர் வழியாகத்தான் போறோம். வழியில் ஒரு ப்ரமாண்டமான குளம்!  வெயிலுக்குத் தகதகன்னு மின்னும் தண்ணீர் நிறைஞ்சு...       ஒரு  இடத்துலே அல்லி இலைகளும் மொட்டுக்களும் கூட்டமா....    ஹைய்யோ!!
யாரோ ஒரு பெண், துணிகளைத் துவைச்சு எடுத்துக்கிட்டுக் கிளம்பறாங்க. இவ்ளோ தண்ணீர்ன்னா  துவைக்கும் சிரமம்கூட அவ்வளவா இருக்காது இல்லே?

திருத்தேவனார்தொகை என்று சொல்லும்   கீழச்சாலை கோவிலுக்கு கால்மணியில் வந்து  சேர்ந்தோம். ஆறரை கி மீ தூரம்.
பலிபீடம், பெரிய திருவடி மட்டும் தான். கொடிமரம் இல்லை. நேரெதிரா ஒரு மூணடுக்கு  ராஜகோபுரம்.   கோவில் கதவு சாத்தி இருக்கு.

பட்டர்ஸ்வாமிகளுக்கு ஃபோன் செஞ்சு பார்த்த  குமார், அவர் வீடுவரை போய் பார்த்துட்டு வரேன்னு  சொன்னதும்,  நம்ம சீனிவாசனையும்  வண்டியோடு அனுப்பி வச்சுட்டு நாங்க மட்டும் கோவில் வெளி முற்றத்தில் நின்னுக்கிட்டு இருந்தோம்.

நல்ல வெயில். மண்டையைத் துளைக்குது. பக்கத்தில் இருந்த மரநிழலில் நின்னு அக்கம்பக்கம் பார்த்தப்ப, நாம் நின்னுக்கிட்டு இருந்த  காம்பவுண்ட் சுவருக்கு அந்தாண்டை சில சிற்பங்கள்!  அட... ஒரு கல்லுரல் கூட இருக்கு.

கோவிலைச் சார்ந்த இடம்தான் போல.  கோவில் நாயார் ஒருவர், வெயிலுக்குப் பயந்து அரைத்தூக்கத்தில் இருந்தார்.  நம்ம குரல் கேட்டுத்  தலையைத் தூக்கிப் பார்த்தார்.

நான் இங்கே வந்து போனதுக்கு பைரவர் சாட்சின்னு  நினைச்சுக்கிட்டேன்.

 அதுக்குள்ளே பட்டரைத் தேடிப்போனவங்க வந்துட்டாங்க.  எதோ வீட்டு விசேஷம்னு  கிளம்பிப் போயிருக்காங்களாம்.   எப்ப வருவாங்கன்னு  தெரியாதாம்.   அக்கம்பக்கத்தார் சொன்ன தகவல்.  செல்லில் கூப்பிட்டால் பதில் இல்லை.

சாயங்காலம்   இங்கே கோவில் திறக்கறதில்லை என்பதால்   அவருடைய வேலையைப் பார்க்கப் போயிருப்பார்.  மேலும் இவர் இன்னும் ரெண்டு மூணு கோவில்களிலும் உத்யோகமாம்.

பாவம் பெருமாள்.  சாயங்கால இருட்டில் கொட்டக்கொட்ட  முழிச்சுக்கிட்டு இருப்பாரோ....   ப்ச்......    இத்தனைக்கும் இங்கேதான் பெருமாளுக்குக் கல்யாணமே ஆச்சாம்.  அந்த விசேஷத்துக்கு  முப்பத்து முக்கோடி தேவர்கள் வந்து கூடிய இடம் என்பதால்தான் திருத்தேவனார்தொகை என்ற பெயரே அமைஞ்சுருக்கு!

மூலவர் தெய்வநாயகன்.  உற்சவர் மாதவப்பெருமாள்.  ஏற்கெனவே  வேற சில கோவில்களில்  தெய்வநாயகன், தேவநாதன் என்ற பெயர்கள் இருப்பதால்...   இங்கே இந்தக் கோவிலுக்கே  உற்சவர் பெயரை வச்சுருக்காங்க(ளாம்!)  மாதவப்பெருமாள் கோவில்.

 ( அப்ப நம்ம சிங்காரச் சென்னையில் கூட  மயிலையில் ஒரு மாதவப்பெருமாள் இருக்காரே! )


தாயாருக்குக் கடல் மகள் நாச்சியார்ன்னு பெயராம். பாற்கடலில் பிறந்தவளாச்சே!

(என்னமோடியம்மா...   உன்னைப்  பார்க்க முடியலையேன்னு   மனம் தவிச்சது உண்மை!)

போதலர்ந்த பொழில்சோலைப் புறமெங்கும் பொருதிரைகள்
தாதுதிர வந்தலைக்கும் தடமண்ணித் தென்கரைமேல்
மாதவன்றா னுறையுமிடம் வயல்நாங்கை வரிவண்டு
தேதெனவென் றிசைபாடும் திருத்தேவ னார்தொகையே.

திருமங்கை ஆழ்வார் இங்கேயும் பத்துப் பாசுரங்கள் பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்கார். அதிலும் இந்தக் கோவிலை 'மாதவன் தான் உறையுமிடம்' னு  பாடுனதால்    மாதவப்பெருமாள் கோவில்னு அந்தக் காலத்தில் இருந்தேதான் சொல்றாங்கன்னு புரிஞ்சது!

நம்ம பிள்ளைப்பெருமாள்  அய்யங்காரும் தான் இயற்றிய    நூற்றெட்டு திருப்பதி அந்தாதியில் பாடியிருப்பது  இப்படி.

ஆர்க்கும் வலம்புரியால் , அண்டமும் , எண்திசையும் ,
கார்க்கடலும் , வெற்பும் கலங்கினவால் - சீர்க்கும்
திருத்தேவனார் தொகை மால் செவ்வாய் வைத்து ஊதத்-
தருத்தேவனார் தொகையும் சாய்ந்து


சமீபகாலமாகத்தான் ஒரு காலப்பூஜை திட்டத்தின் கீழ்கோவில் வந்துருக்கு.
காலை 10 முதல் 12 வரை மட்டும்தான்  கோவில் திறந்திருக்கும். ஆனால்  பட்டர்ஸ்வாமிகள்  பெயர் எழுதிப்போட்டவங்க, அவரோட செல் நம்பரையும் எழுதிப் போட்டுருக்கக் கூடாதோ?   நம்ம குமாருக்கு வீடு தெரியும் என்பதால்  நமக்குப் பிரச்சனை இல்லைன்னாலும்.... நாம் வந்த நாள் சரியில்லாமப் போயிருச்சே....

மூடியிருந்த கோபுரவாசல் கதவருகில் நின்னு  பெருமாளை மனசில் நினைச்சுக் கும்பிட்டுக்கிட்டேன்.


இப்ப சொல்லுங்க....  இந்தக் கோவில் தரிசனம் செஞ்ச கணக்கில் வருதா ? இல்லைன்னா இன்னொருக்கா வரணுமா?

தயங்கி நின்ன குமாரிடம், 'பரவாயில்லை.  நம்மை பெருமாள் பார்த்துருப்பார்' னு சொல்ல வேண்டியதாப் போச்சு.
பெரியதிருவடியான கருடாழ்வாரைக் கும்பிட்டு,  'நான் வந்து போனேன்'னு  உள்ளே இருக்கும்  பெருமாளிடம் சொல்லணும் என்று விண்ணப்பித்தேன்.  அப்பத்தான் கவனிக்கிறேன்,  சந்நிதிப் பூட்டு திறந்தே இருக்குன்னு!

சரின்னுட்டுக் கிளம்பி அடுத்த கோவிலுக்குப் போனோம்.

அனல் பறக்கும் ஆடல்மா க்ரூப்ஸாமே!!!!   



தொடரும்........  :-)

PIN குறிப்பு :   இன்னொரு சமயம் இங்கே  வரும்படி வாய்ச்சால்  விவரமா எழுதிட்டு  இதே       பதிவில்  சேர்த்துக்கலாம். சரியா?

14 comments:

said...

நன்றி.

said...

தேவனார் வளாகம் கேள்விப்பட்டு இருக்கும். இப்படி ஒரு கோவிலா. இப்படிப் பூட்டு இல்லாமல் இருந்தால் என்ன பாதுகாப்பு தெரியவில்லை. பைரவர் பாது காவலோ என்னவோ.

said...

நீங்கதான் கோயிலைப் பாத்துட்டீங்களே. கணக்குல வரும். அதுவுமில்லாம பெரிய திருவடி பூட்டைத் திறந்து வெச்சதே இந்தக் கோயிலும் கணக்கில் வரும் என்பதற்குத்தான். பைரவர் அட்டெண்டென்ஸ் போட்டதும் அதுக்குதான். கோயில் வாசல்ல உங்களைக் கொஞ்ச நேரம் நிக்க வெச்சதும் அதுக்குதான். நீங்க நின்ன எடத்துலதானே திருமங்கையும் நின்னிருப்பாரு. அதை விடச் சிறப்பு என்ன வேண்டும்?

said...

கதவெல்லாம் ஊனுடம்புக்குத்தானே.. ஞானக்கண்ணால் செய்த தரிசனம் கணக்கில் வரும்.

said...

ஞானக்கண்ணால் தரிசனமா இங்கே.... நல்லது....

தொடர்கிறேன்.

said...

கணக்கில் சேர்த்திருப்பார்
கோவில் பிரகாரங்கள் பழமையான கோவில் என்பதையும்
பராமரிப்புக் குறைவு என்பதையும்
பறை சாற்றுகிறது
பயணம் தொடர நல்வாழ்த்துக்கள்

said...

வாங்க விஸ்வநாத்.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க வல்லி.

ஒரு கால பூஜை என்பதால் மற்ற நேரங்களில் பூட்டிதானே வைக்கணும். திறந்த பூட்டு நம்ம பெரிய திருவடிக்குத்தான். ஆனாலும் அவர்பறந்து போகாம வாசலைப் பார்த்தபடிக்குத்தான் இருக்கார்:-)

said...

வாங்க ஜிரா.

ஆஹா.... அப்ப சரி சரி.

ஆனாலும் அந்த குறையலூர், மங்கை மடம் விட்டுப்போயிருக்கேன்னு ஒருக்கால் போனால், இவரையும் கண்டுக்கணும்.

said...

வாங்க சாந்தி.

துல்ஸி ஆஜர் ஹோ............. :-)

கணக்கு சொல்லிடலாம்!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.


எல்லா கண்ணுலேயும் தரிசனம்தான் :-)

தொடர் வருகைக்கு நன்றி.

said...

வாங்க ரமணி.


பழைய கோவில்களின் அருமையை இன்னும் பலர் புரிஞ்சுக்கலை என்பதுதான் எனக்கு(ம்) மனத்தாங்கல்.

புதுப்பிக்கறோமுன்னு சொல்லி, இந்தக் காலத்துக்கேத்தபடி என்னத்தையோ பண்ணி வச்சுடறாங்க..... ப்ச்....

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

பெருமாள் உங்களை பார்த்திருப்பார்... கவலை கொள்ள வேண்டாம் டீச்சர்..

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

நன்றீஸ்ப்பா. பெருமாள் கேட்டால் நீங்கதான் சாட்சின்னு சொல்லிருவேன்.ஆமா !