Friday, July 08, 2016

திருமணிக்கூடம், திருநாங்கூர் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 57)

அஞ்சு நிமிசப் பயணத்தில் நாம் போய்ச்சேர்ந்த கோவில் திருமணிக்கூடம். பெரிய மதில்சுவரின் நுழைவு வாயிலருகில்  ஒரே பெண்கள் கூட்டம்.  ஒரு  சொம்பில் தண்ணீர் எடுத்துக்கிட்டு ஓடிவந்த பெண்மணி, 'இந்தா இதைக் குடிப்பாட்டு'ன்னு சொல்லி கூட்டத்துக்குள் நீட்டறாங்க. கசமுசான்னு ஒரே பேச்சு சத்தம் வேற!  யார் யாரோட பேசறாங்கன்னு  யாருக்கும் தெரியலை.... பொத்தாம்பொதுவாப் பேசிக்கிட்டு இருக்காங்க.  எல்லோர் முகத்திலும் ஏதோ கவலைதான்.
வண்டிவிட்டு இறங்கிப்போனவள், 'என்ன ஆச்சு'ன்னு கேட்டேன்.  "கையை வெட்டிக்கிட்டாம்மா"  ஐயோன்னு இடுக்கில் எட்டிப் பார்த்தப்ப , இடது கையைத் தொங்கப்போட்டபடி ஒரு பெண், இன்னொருவர் மேல் சாய்ஞ்சு  உக்கார்ந்துருக்காங்க. கண் மூடி இருக்கு!

தோட்டத்தில் புதர் வெட்டிக்கிட்டு இருக்கும்போது  கை வெட்டுப் பட்டுருச்சாம் :-(

'அடப்பெருமாளே.... என்னடா இப்படிச் செஞ்சுட்டே?     உன் வீட்டுக்கு வேலை செய்றவங்க கிட்டெ  இப்படியா  இருப்பே' சத்தமாத்தான் சொல்லிட்டேன் போல......   'ஆமாம்மா.... கடவுளுக்குக் கண் இல்லாமப்போச்சே'ன்னு யாரோ எசைப்பாட்டு பாடுனாங்க.

ஆஸ்பத்திரிக்குப் போகலையான்னதுக்கு,  மேஸ்திரிக்கு ஆள் போயிருக்குன்னாங்க.

நூறுநாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்ய வந்திருப்பவர்கள் இவர்கள்.

மனக்கசப்போடு  வாசல் தாண்டி உள்ளே போனேன். பெரிய வெளிமுற்றம்தான். நடுவிலே சிமெண்ட் பாதை  விட்டு சுத்திவர செடிகள் ஒரு ஒழுங்கில்லாமக் கிடக்கு.....

பலிபீடம், பெரிய திருவடிக்கான சந்நிதி கடந்து (இங்கேயும்கொடிமரம் இல்லை)  இன்னொரு வாசலுக்குள் போறோம்.  முன்மண்டபம், அர்த்தமண்டபம் அடுத்துக் கருவறையில்  ஸ்ரீவரதராஜப்பெருமாள். நின்ற கோலத்தில் கிழக்கு திசை நோக்கி ஸேவை சாதிக்கிறார்.  ஸ்ரீதேவியும் பூதேவியும் உடன் இருக்காங்க. கேட்ட வரம் தரும் வரதராஜன்!   கஜேந்த்ர வரதன்! உற்சவருக்கு மணிக்கூட நாயகன் என்ற பெயர்.
காலை 6 முதல் 11, மாலை 5 முதல் எட்டு வரை கோவில் திறந்து இருக்கும். ஆனால் நாம் போனபோது பட்டர் ஸ்வாமிகள் இருந்தார்.  நம்ம குமாரின் கைங்கரியம்:-)
தூம்புடைப் பனைக்கை வேழம் துயர்கெடுத் தருளி, மன்னு
காம்புடைக் குன்ற மேந்திக் கடுமழை காத்த எந்தை,
பூம்புனல் பொன்னி முற்றும் புகுந்துபொன் வரண்ட, எங்கும்
தேம்பொழில் கமழும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே.

திருமங்கை ஆழ்வார்  வழக்கம்போல் பத்துப் பாசுரங்கள் (1288-  1297)

 ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் கைங்கரியத்தால்  இந்தப் பத்துப் பாசுரங்களும் பளிங்குக்  கல்வெட்டில்....
சந்திரனுக்குப் ப்ரத்யக்ஷம் ஆனவராம் நம்ம வரதராஜர்.  எதுக்காம்?  27 பெண்களைக் கட்டிக்கிட்டு, ஒரு பெண்ணுக்கு மட்டும் அதீத   அன்பு காமிச்சு, மற்ற 26 மனைவிகளின் மனசை நோகடிச்சதால்  மாமனார் சாபம் கொடுத்துட்டார்.  அந்த சாப நிவர்த்தி சமயம் பெருமாள்  காட்சி கொடுத்தாராம்.  இந்தக் கதை  நம்ம துளசிதளத்துலே சோம்நாத்  பயணத்துலே எழுதுனதை   இங்கேயே பார்க்கலாம். நம்ம பதிவில் இருந்து சுட்டதுதான்.  இது  கருத்துத் திருட்டு இல்லைதானே:-)

சோமனுக்கு 27 மனைவிகள். அது என்ன இந்த 27ன்ற எண்ணிக்கைமேலே இவ்வளோ ஆசைன்னு தெரியலையே! அங்கே என்னன்னா..... சுதாமருக்கு 27 குழந்தைகள். இங்கே என்னன்னா....தக்ஷன் என்ற அரசனுக்கு 27 பெண்மக்கள், 27 மாப்பிள்ளை பார்க்கச் சோம்பல் பட்டுக்கிட்டோ என்னவோ ஒரே மாப்பிள்ளைக்குக் கலியாணம் கட்டிக் கொடுத்துட்டான். தொல்லைவிட்டதுன்னு ஜாலியா இருந்துருப்பான் இல்லே?

சோமவாரத்துக்கு அதிபதியான சோமன் (எல்லாம் இந்த சந்திரன்தான்) அந்த 27 பேரையும் அன்பா அரவணைச்சுக் 'குடும்பம்' நடத்தாம ஒரே ஒரு மனைவியைமட்டும் தலையில் தூக்கிவச்சுக் கொஞ்சிக்கிட்டு இருந்தான். சக்களத்திகள் என்னதான் உடன்பிறப்பு, ஒரு தாய் மக்கள் என்றாலும்...... புருஷன் அன்பு கிடைக்கலைன்னா எரிச்சல் வரத்தானே செய்யும்? சக்களத்திகளுக்குன்னு இருக்கவேண்டிய பொறாமைக்குணம் இல்லைன்னா இதுகள் என்ன சக்களத்திகள்? அந்தப்புரத்தில் ஒரே களேபரம்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்துச் சகிக்கமுடியாமல் மற்ற 26 பேரும் தகப்பன் தக்ஷனிடம் போய் முறையிட்டாங்க.

"என்ன நைனா... இப்புடிச் செஞ்சுட்டே? ஏழை பாழையா இருந்தாலும் தனித்தனிப் புருஷனா எங்களுக்குக் கட்டிவச்சு இருந்தால், இருக்குதோ இல்லையோ எவ்வளோ சந்தோஷமாக .இருந்துருப்போம். இப்படி ஒருத்தனுக்கே எங்க எல்லோரையும் கட்டிவச்சு இப்போ நாங்க படும் கஷ்டத்தைப் பாரு நைனா."

"கண்ணுகளா.... என்னாங்கடா இப்படிச் சொல்றீங்க?"

"ரோகிணி மட்டும்தான் சோமனுக்குச் செல்லப் பொண்டாட்டி. நாங்க எல்லோரும் ஒப்புக்குத் தாலிகட்டுன மனைவிகளாக் கிடந்து அழுதுக்கிட்டே இருக்கோம். நீ கண்டி அந்த ஆளைக்கூப்புட்டுக் கண்டிச்சு வைக்கலைன்னா நடக்கறதே வேற "

"அடப்பாவி. இப்படியா இருக்கான்? கூப்புடு அவனை"

சோமனுக்கு நல்ல டோஸ் கிடைச்சது. எல்லாரிடமும் ஒரே மாதிரி ப்ரியம் காமிக்கணுமுன்னு கட்டளை இட்டார் மாமனார். எல்லாம் நடக்கற காரியமா? சின்னக் குடும்பங்களில் கூட தாய்க்கு எல்லாப் பிள்ளைகளும் சமம்ன்னு சொல்லிக்கிட்டாலும் செல்லப்பிள்ளைன்னு ஒன்னு கொஞ்சமே கொஞ்சம் கூடுதல் செல்லத்தோடு இருக்கறது உண்டுதானே?

சொன்னபேச்சைக் கேக்காத மருமகனைக் கூப்பிட்டு, 'என் கட்டளையை மீறிநடந்த உன்னுடைய பிரகாசம் மங்கிப்போகக் கடவது'ன்னு சாபம் விட்டார். தினமும் கொஞ்சம் கொஞ்சமா ஒளி மங்கி அமாவாசை ஆனான் சோமன்.( அதுக்குப்பிறகு தினம் கொஞ்சம் கொஞ்சமா ஒளிவந்து பவுர்ணமி ஆனானேன்னு யாரும் கேக்கப்பிடாது ஆமாம்.) திரும்ப ஒளிவருமுன்னு தெரியாத பயபிள்ளை, பயந்துருச்சு. தடாலுன்னு மாமனார் காலடியில் விழுந்து சாபவிமோசனம் சொல்லுன்னு அழுதான்.. அந்தக் காலத்துலே சாபம் விட்டவுடன் அதுக்கு விமோசனமும் சொல்வாங்க. இந்தக் கலியுகத்தில்தான் சாபம் மட்டுமே வருது, விமோசனத்தைக் காணோம்!

"அதெப்படி.... நான் போட்ட சாபம் போட்டதுதான். அதை வேணுமுன்னாக் கொஞ்சம் மாத்தி அமைக்க சிவனால்தான் முடியும். பூலோகத்தில் ஒரு புனிதமான இடம் இருக்கு. நீ என்ன செய்யறே...நேரா அங்கே போய் அங்கே பூமியில் புதைஞ்சு கிடக்கும் சிவனைப் பூஜிக்கணும். ஒரு மாசத்துலே உனக்கு ஒளி திரும்ப வரும். ஆனா இது பர்மெனண்ட் இல்லை. ஒளி, குறைஞ்சு கூடி, குறைஞ்சு கூடின்னு உன் ஆயுசு முழுசுக்கும் இப்படித்தான் இருப்பே. போ..போய் பிரம்மதேவனைக் கேளு. சிவன் இருக்குமிடம் சரியாக் காமிச்சுருவார்!"

ப்ரம்மாவும் வந்து பூமியில் புதையுண்டு கிடந்த சிவலிங்கத்தைக் காமிச்சுக்கொடுத்தாராம். அதைக் கொஞ்சமா வெளியில் கொண்டுவந்து வச்சு சந்திரன்  தங்கக்கோவில் கட்டி வழிபட்டானாம்.  அப்போவும் இங்கே தனியா வராம அந்தச் செல்ல மனைவியுடன்தான் வந்து கும்பிட்டதா ஒரு கதை(யும்)  இருக்கு.

மேலே சொன்ன கதைக்  களம்,   நம்ம குஜராத் பயணத்துலே சோம்நாத் கோவிலுக்கானது. ஆனால்  இங்கே இதே கதைக்கு, ' சாபம் தீர விஷ்ணுவைக்  கும்பிடு'ன்னு  சந்திரனுக்குச் சொல்லிட்டாப்லெ.
இந்தக் கதையைத் தவிர  இன்னொரு கதை கொஞ்சம் பொருத்தமா இருப்பதாக எனக்குத் தோணுது. இந்தப் புதுக்கதையை வெளிமண்டபத்தில் ஸ்தலபுராணமா எழுதி வச்சுருக்காங்க. கொஞ்சம் படிக்கக்கூடிய நிலையில் இருந்தது சந்தோஷமே!

முன்பு தேவாஸுரயுத்தத்தில்  தேவர்கள் தோற்றுப்போய்  சங்கசக்ரதரனும், சர்வசரண்யனுமான விஷ்ணுவை சரணம் அடைந்தனர். பிறகு விஷ்ணுவின் ஆக்ஞையால் மந்திரமலையை மத்தாகவும், வாசுகியைக் கயிறாகவும் வைத்துக்கொண்டு க்ஷீரஸாகரத்தைக் கடைந்தனர். ஹாலாஹலவிஷம் உண்டாயிற்று. அதை சிவன் குடித்துவிட்டார்.  பிறகு அம்ருதகலையை உடைய சந்திரனையும் பெற்று சிரஸில் வைத்துக்கொண்டார்...

இப்படி ஆரம்பிக்குது   சுவரில்  !  அதைப் படிச்சுட்டு, நம்ம ஸ்டைலில் இங்கே கொஞ்சம் மசாலா தூவி  எழுதிட்டேன் :-)

எல்லாம் மோஹினி அவதாரக் கதைதான்!

  பலஹீனமாக இருக்கும் தேவர்களுக்கு  இப்ப அமுதம்  கொடுத்து அவுங்களை அமரர் ஆக்கணும் என்றதும்  பாற்கடலைக் கடையணும் என்றார் விஷ்ணு.  கடலைக் கடைவது சுலபமா?  அதான் முப்பத்துமுக்கோடி தேவர்கள் இருக்காங்களே....   ரெண்டு க்ரூப்பாப் பிரிஞ்சு நின்னு கடையப்டாதா?  கடையலாம்தான். ஆனால் கயிறு  இங்கே அரவமாச்சே!  தலைப்பக்கம் நின்னாலது வலி தாங்காமல்  விஷத்தைக்  கக்கிருச்சுன்னா...........  அம்பேல்:-(

தேவர்களுக்கே உரித்தான நயவஞ்சகம் இங்கே ஆரம்பிக்குது.  இது    சாதுர்யம் என்ற கலையாம்! அசுரர்களுக்குத் தூது அனுப்பறாங்க.

"இந்தமாதிரி திருப்பாற்கடலைக் கடையப்போறோம்.  அமுதம் எடுத்துட்டோமுன்னா, நாம் எல்லோரும் அதைப் பகிர்ந்து சாப்பிடலாம்.  ஒரு கை கொடுக்க வாறீகளா? "

"அட! அமுதம் தின்னா நமக்கும் அழிவில்லை. தேவர்களோடு சண்டை போட்டு, தினம் செத்துச் செத்து பிழைக்கலாம். ரொம்ப தமாஷா இருக்கும்"

அசுரர்களுக்குக் கொஞ்சம் புத்தி குறைவோ இல்லை, தேவர்கள் நல்லவர்கள்னு  ஒரு நம்பிக்கையோ தெரியலை. சரின்னு ஒப்புக்கிட்டாங்க.

பாற்கடல் கரையாண்ட எல்லோரும் வந்து கூடியாச்சு. யாருக்கு எந்தப் பக்கமுன்னு  டாஸ் போட்டுப் பார்க்கப்டாதோ?  முதலில் தேவர்கள் எல்லோரும் போய்  வாசுகியின் தலையாண்டை நின்னாங்க. அவ்ளோதான்...

 "ஐய.... எங்களுக்கு வாலா?  ஊஹூம்....  கேவலமா இருக்கே....  நாங்க தலைப் பக்கமுன்னா  உதவி செய்வோம். இல்லை,  வாலேதான்னு சொன்னா... நாங்க  அப்பீட்"

ஐடியா ஒர்க்கவுட் ஆனதுலே தேவர்களுக்கு  ரொம்ப மகிழ்ச்சி. ஆனாலும்    ஞாபகமா முகத்தைக் கொஞ்சம்  சோகமா வச்சுக்கிட்டு  வாலாண்டை போய் நின்னாங்க.

 கடைய ஆரம்பிச்சதும்  முதல்லே வந்தது ஆலகால விஷம்!  இதன் காற்றுப் பட்டால்கூட  உயிர்கள் அழிஞ்சுருமாம். அவ்ளோ கடுமை.   அதை எங்கே வைக்கறதுன்னு தெரியாம முழிச்சப்ப, உலக நன்மைக்கு வேண்டி, சிவன் அதை எடுத்து லபக்னு முழுங்கிட்டார். அப்பதான் பார்வதி பார்த்துட்டு, லபோ திபோன்னு வந்து  புருஷன் வயித்துக்குள்ளே விஷம் இறங்கிடாமல் தொண்டையை அமுக்கிப் பிடிச்சு  அவர் நீலகண்டர் ஆனது.  என்னதான் விஷம்  உள்ளே இறங்கலைன்னாலும் அதோட வீச்சு காரணம் சிவன் மயக்கமா கீழே விழுந்துட்டார்.   இவரை நாம் சுருட்டபள்ளிக் கோவிலில் பார்த்தோமே  நினைவிருக்கோ!


அதுக்குப்பிறகு கொஞ்சம் கொஞ்சமா திரண்டு வருது பாற்கடலில் இருக்கும் செல்வங்களில் பலதும் !  பொதுவா 16 வகைன்னுருவாங்க.  அது என்னென்னன்னு  விலாவரியாப் பார்த்தீங்கன்னா........   ஹம்மாடியோன்னு இருக்கு(ம்)

தேவலோக அழகிகள் எல்லோரும் அங்கிருந்து வந்தவங்கதான். மொத்தம் அறுபதினாயிரம் அரம்பையர்.

 நமக்குத் தெரிஞ்சவங்க(!) எல்லாம் ஊர்வசி, ரம்பை, மேனகைன்னு சினிமாவுக்காகப் பெயரை மாத்திக்கிட்டவங்கதானே:-) திலோத்தமைன்னு கூட ஒரு அழகி. சினிமாநடிகைகளில் இந்தப் பெயரை யாருக்குமே வைக்காததால் இந்தப் பெயர் கூட பலருக்குத் தெரியாது!

ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை, கிருகத்தலை, சிகத்தலை, சகசந்திசை, பிரமலோசத்தி, அநுமுலோசை, கிருதாசி, விசுவாசி, உருப்பசி, பூர்வசித்தி,சங்கநிதி, பதுமநிதி, சிந்தாமணி, இரதி, இலக்குமி, அகலிகை, இந்திராணி, ஸகேசி, மஞ்சுகோஷ், சித்திரலேகை என அறுபதாயிரம் அரம்பையர்கள்

ஐராவதம் என்ற வெள்ளை யானை  வந்தது. அதை இந்திரனுக்குக் கொடுத்துட்டாங்க. தேவர்களுக்கு அரசன் அவன்.  இந்த யானையைத் தவிர  புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்பதந்தம், சார்வபௌமம், சுப்பிரதீகம் ன்னு இன்னும் ஏழு யானைகள்.  ஆக மொத்தம் யானைகள் எட்டு!

உச்சை சிரவஸ் எனும் வெள்ளைக்குதிரை  வந்ததும், அதை பலிச்சக்ரவர்த்திக்குக் கொடுத்தாங்க.

கௌஸ்துபமணி , சிந்தாமணி  வந்ததும் அதை விஷ்ணு எடுத்துக்கிட்டார்.

அப்புறம்    கற்பக மரம், பாரிஜாதம், ஹரிசந்தனம், சந்தனம், மந்தாரம் முதலிய ஐந்து மரங்கள் தேவலோகத்துக்குன்னு எடுத்து வச்சாங்க.

காமதேனு வந்ததும், முனிவர்களுக்குக் கொடுத்தாங்க, நித்ய பூஜைகளுக்கு  பயன்படட்டுமேன்னு!

பிரம்ம தண்டலம் என்னும் பிரம்ம கமண்டலம், ப்ரம்மாவுக்கு.

தேவதத்த சங்கு ,புஷ்பகவிமானம், நந்தி கோஷ ரதம், சூரியன், சந்திரன், சங்க நிதி, பதுமநிதின்னு நவநிதிகள் எல்லாம் வரவர ஆளாளுக்கு எடுத்து வச்சுக்கிட்டு இருக்காங்க. சிவனுக்கு ஒன்னுமே அலாட் ஆகலை.  இவ்ளோ விஷத்தை முழுங்குனவர் எங்கே பிழைச்சு எழுந்து வரப்போறாருன்னு  அசட்டை :-(  ப்ச்...  பாவம், பார்வதி.  எங்கே புருஷன் 'போயிருவாரோ'ன்னு கண்ணீரும் கம்பலையுமா அவர் தலையை எடுத்து மடிமேல் வச்சுக்கிட்டு  எப்படியாவது பொழைச்சு வந்துரணுமேன்னு  கவலையோடு கண்கொட்டாமல் உக்கார்ந்துருக்காங்க.

அந்தப் பக்கம் இருக்கும் அசுரர்களுக்கும் எதாவது கொடுக்கணுமேன்னு  இருக்குதான். ஆனால் வர்ற பொருட்களின் அம்சத்தையும் அழகையும் பார்த்தால், இந்தா'ன்னு  கொடுக்க மனசு வரலை.

அப்ப  கையில்  மாலையோடு  ஸ்ரீதேவி மஹாலக்ஷ்மி  பாற்கடலில் இருந்து வர்றாங்க.  தேவர்கள் திகைச்சுப் பார்க்கும்போதே  மாலையை  மஹாவிஷ்ணு கழுத்துலே போட்டுட்டாங்க. மற்ற யாருக்கும்  வாய்ஸ் எழுப்பச் சான்ஸே இல்லாமப் போச்சு.

ஸ்ரீதேவி கூடவே  அவளுடைய அக்கா மூதேவி வர்றா.  இந்தா,  இவள் உங்களுக்குன்னு தாராள மனசோட  அசுரர்களுக்குத் தள்ளியாச்.

வாருணி என்ற தேவதை  ஒன்னு வருது. இது போதையையும் மயக்கத்தையும் தருமாம்.  இதையும் அரக்கர்க்ளுக்கே தானம்.  இப்படி வேண்டாததை எல்லாம் அந்தப்பக்கம் நைஸாத் தள்ளிட்டாங்க.

கடைசியா தன்வந்திரி, கையில் அமுத கலசத்தோடு  வர்றார்.  தேவர்கள் கொஞ்சம் அசந்துருக்கும் சமயம். அரக்கர்கள் சட்னு  கலசத்தைத் தூக்கிக்கிட்டு ஓடறாங்க.

தேவர்கள் குய்யோமுறையோ....  மஹாவிஷ்ணுவிடம் வழக்கம்போல் சரண்.

 அவரும் சொல்லவொண்ணாத அழகோடு மோஹினி ரூபமெடுத்து அரக்கர்களிடம் போறார். அங்கே அம்ருதம் யாருக்கு மொதல்லே என்பதில் சண்டை, மண்டை உடையறமாதிரி.

வரிசையா உக்காருங்க. நானே பரிமாறித்தரேன்னு  மோஹினி, மயக்கும் குரலில் சொன்னதும் தலையைத் தலையை ஆட்டிக்கிட்டு வரிசையில் உக்கார்ந்தாங்க. (இதுலே யார் முதல்லென்றதுக்கும் சண்டை வந்துருக்கும்தான்)

'இத பாருங்க..... தேவர்களுக்கும் உங்களுக்கும் சரிபாதி பங்குன்னுதான் பேச்சு. இப்போ அவுங்களை விட்டுட்டு உங்களுக்கு மட்டும் பரிமாறினா நல்லா இருக்குமா? அவுங்களும் வந்து  பந்தியில் உக்காரட்டும். எல்லோருக்கும் போதுமான அளவு இருக்கு. நியாயமாப் பரிமாறுவேன்'னு ஆசை  வார்த்தையெல்லாம் சொல்லி, தேவர்களையும் பந்தியில் உக்கார வச்சுட்டாள் மோஹினி.

அரக்கர்களுக்கு மோஹனப் புன்னகையைத் தாராளமாக் கொடுத்துக்கிட்டே தேவர்களுக்கு மட்டும் அமுதம் விளம்பிக்கிட்டுப் போறாள் இந்த மோஹினி.

அரக்கர்கள் வரிசையிலிருந்த ஸ்வர்பானு என்றவனுக்கு எங்கே தனக்கு அமுதம் கிடைக்காதோன்னு பயம் வந்துருது. பந்திக் கடைசியில் உக்கார்ந்துருந்தான் போல.

ஸ்வர்பானு என்ற அஸுரன் அப்போது அமுதம் குடிக்கும் ஆசையால் அஸுர பந்தியை விட்டு நைஸா  தேவபந்தியில் மெல்ல உட்கார்ந்தான். மோஹினி அங்கே ஒரு கண்ணும் இங்கே ஒருகண்ணுமா விளம்பிப்போன  அவசரத்தில் கவனிக்காம விட்டதில் இவன் வாய்க்குள் அமுதம் போயாச்சு.  பந்தியில் உக்கார்ந்துருந்த சூரியனும், சந்திரனும்  மோஹினிக்குக் கண் ஜாடையில் அரக்கன் வந்து தேவ வேஷத்தில் உக்கார்ந்துருக்கான்னு  சேதி அனுப்பினதும், மோஹினி வந்து அம்ருதம் விளம்பும் கரண்டியால்  கழுத்துலே  ஒரு அடி  அடிச்சாள்.


கடைசிவரை ஒரு சொட்டு அம்ருதம்கூட   மற்ற அரக்கர்கள் இருக்கும் பக்கமே  போகலை.

ஸ்வர்பானுவுக்குக் கழுத்தும்  உடலும் ரெண்டு துண்டுகளா ஆனாலும்,  உயிர் போகலை. அதான் அமுதம் குடிச்சுட்டானே!

எப்படியும் எனக்கு மரணமில்லைன்னு தேவர்கள்கூடப்போய் சேர நினைச்சால்,  நீ அரக்கன். எங்களுக்குச் சமமில்லைன்னு தேவர்கள் துரத்தினாங்க. சரி. அசுரர் கூட்டத்துக்கே போயிடலாமுன்னா, அங்கேயும் 'சுயநலக்கார வஞ்சகன்  நீ.   எங்களுடன் சேராதே போ போ'ன்னு அவுங்களும் விரட்டிட்டாங்க.

அதுக்குள்ளே அம்ருதப் பானை காலி ஆனதும், மோஹினி மீண்டும் மகாவிஷ்ணுவா மாறிட்டார். அவராண்டையே போய்   அழுதான் ரெண்டு  துண்டுகளா  இருந்தவனுக்கு  இன்னும் ரெண்டு பகுதிகளைச் சேர்த்து  ராகு கேதுன்னு பெயர் வச்சார் பெருமாள். (  எப்படியோ  பாம்பு ஒன்னு இதேபோல் வெட்டுப்பட்டு, பாம்புத்தலையும் மனித உடலுமா ராகு என்றும்,  அரக்கன் தலையும் பாம்பு உடலுமா கேது என்றும் ஆகிருச்சு. )

ஏற்கெனவே சப்த கிரகங்களா வானத்தில் சுத்திக்கிட்டு இருந்த ஏழுபேருடன்,  இந்த ராகுவையும்  கேதுவையும் சேர்த்து விட்டதும் நவகிரகமா ஆனாங்க.

 என்னதான் ஸ்பெஷல் இடத்துலே போய் சேர்ந்துட்டாலும்,  ஜென்ம சுபாவம் போகாமல், தேவர்கள் மேல் வெறுப்பில் இருந்தார்கள் இந்த ராகும் கேதுவும்.     அதிலும்   தன்னைக் காட்டிக்கொடுத்த சூரியன் சந்திரன் மேல்  மகா வெறுப்பு. சமயம் கிடைக்கும் போதெல்லாம் இவங்களை  முழுங்கிருவாங்க. கிரகணம் புடிச்சுரும் அப்பெல்லாம்!

இந்தத் தொந்திரவுக்குப் பயந்து சூரியனும் சந்திரனும் பூலோகத்துக்கு வந்து ரெண்டு குளங்களை உண்டாக்கி அதில் ஒளிஞ்சுக்கறாங்க. வெளிச்சம் இல்லாமல் தேவலோகமே இருண்டு போகுது.

(  பாற்கடல் கடைஞ்சப்பதான் சூரியனும் சந்திரனும் வந்தாங்கன்னா அதுக்கு முன்னால் இருட்டத்தானே இருந்துருக்கணும் இல்லையோ...... மனஸே   அடங்கு. கதையில் குறுக்கிடாதே !)


வழக்கப்படி விஷ்ணுவிடம் போய்ப் புலம்ப, அவர் இங்கே வந்து  குளக்கரையில் நின்னு, சூரிய சந்திரர்களை வெளியே வரச்சொல்லி, இப்படி உலகம் இருண்டு கிடக்கப்டாது.    போய் உங்க வேலையைப் பாருங்க.    கிரகணம் பிடிச்சதும் விலக வச்சுடறேன்.  அரக்கனுடைய சுபாவத்தை மாத்தறது  எனக்குமே கஷ்டம்தான். ஆனால்  அப்படி முழுங்க வரும்போது என் சக்ராயுதத்தால் அடக்கி வைக்கிறேன்.  முழுசுமா முழுங்க முடியாம  துப்பிருவான்னு  சொல்லி இருக்கலாம்.

அன்று முதல் இந்தக் கோவிலில் இருக்கும் தீர்த்தங்களுக்கு சூரியன் சந்திரன் பெயர்களே அமைஞ்சுருச்சு.
கதையை வாசிச்சுக்கிட்டே க்ளிக் செஞ்சுக்கிட்டு,  வெளியே வந்து  பெரிய திருவடிக்கு  இன்னொரு  கும்பிடு போட்டுட்டுத் தோட்டம் கடந்து வாசலுக்கு வந்தோம்.
பெண்கள் கூட்டம் அப்படியேதான் இருந்தது. என்ன ஒன்னு,   கூட்டமா முந்தி பார்த்தமாதிரி இல்லாமல்  கை வெட்டுப்பட்டவங்களை விட்டு அங்கங்கே இருவர் மூவரா பேசிக்கிட்டு நின்னாங்க. இன்னும் ஆஸ்பத்திரிக்குப் போகலை.  இப்ப வந்துருவாங்க கூட்டிப்போறதுக்குன்னு  சொன்னாங்க.
இரத்தம்   வந்தது நின்னு போச்சு.  ஆரம்ப அதிர்ச்சி குறைஞ்சு போன  ஆக்ஸிடெண்ட் ஆன பெண்மணி   வெறித்த பார்வையுடன் உக்கார்ந்துருந்தாங்க. எப்படி இருக்கீங்கன்னு கேட்டுட்டு , 'ஆனாலும்  கத்தி காயம் நல்லது இல்லை. கட்டாயம் ஆஸ்பத்திரிக்குப்போய் ஊசி போட்டுக்குங்க'ன்னேன். நம்மவர் ஒரு தொகை எடுத்து அந்தப் பெண்ணுக்குக் கொடுத்துரு. ஆஸ்பத்ரி செலவுக்கு  வச்சுக்கட்டும் என்றார்.

இந்த மாதிரி சமயங்களில்தான் நம்மவரைப் பற்றி எனக்குத் தாங்கமுடியாத பெருமிதம் வந்துரும். இப்பவும் வந்துச்சு :-)


தொடரும்..........  :-)
14 comments:

said...

பல கதைகள், ஒரே போஸ்ட்;
அருமை நன்றி;

said...

அமுதம், பாற்கடல், ....என பல செய்திகள்....பசங்களுக்கு சொல்ல ஒன்னு,இரண்டு கதை சேர்த்தாச்சு...

said...

இந்தப் பதிவிலேயே எத்தனையெத்தனையோ சொல்லியிருக்கீங்க. அத்தனையிலயும் டாப் எது தெரியுமா? பதிவு முடியும் போது கோபால் சார் செஞ்ச உதவி. யார்னு தெரியாது. எவர்னு தெரியாது. வயித்துப் பாட்டுக்கு வேலைக்கு வந்துட்டு கை பாட்டுக்க வெட்டுப்பட்டு கிடந்த பெண்ணுக்கு செய்த உதவி காலத்தினும் மானப் பெரிது. வாழ்க. முருகனருள் முன்னிற்கட்டும்.

said...

பல கதைகள்.... தொடர்கிறேன் டீச்சர்.

said...

கடைசியில் சொன்னது தான் ரொம்பவே பிடிச்சது......

வாழ்த்துகள் கோபால் சார்....

said...

Sema!!! Gopal sirku oru big salute... sorry for Tanglish #office laptop :)

said...

நான் பார்க்காத கோயிலுக்கு உங்கள் பதிவு மூலமாகச் சென்றேன். பாதிக்கப்பட்டவருக்கு உதவிய விதம் கண்டு நெகிழ்ந்தேன்.

said...

வாங்க விஸ்வநாத்.

ரசித்தமைக்கு நன்றி.

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

கோவில் கதைகள் எக்கச்சக்கமா இருக்கே. பிள்ளைகளுக்குச் சொல்லும்போது கொஞ்சம்மாற்றி அமைச்சுக்கணும்:-)

said...

வாங்க ஜிரா.

நம்ம கோபால் நல்லவருப்பா :-)

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

தொடர்வருகைக்கு நன்றி.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

வாழ்த்துகளுக்கு நன்றி! சொல்லச் சொன்னார் :-)

said...

வாங்க நாஞ்சில் கண்ணன்.

நன்றீஸ் !

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.


நம்மூரைப் பொறுத்தவரை, பார்க்காத கோவில்கள் ஏராளமாக இருக்கே!