Monday, August 03, 2015

தங்கக்கடற்கரை டயரிக் குறிப்பு (கோல்ட்கோஸ்ட் பயணம். முதல் நாள் )

சூரியனைத்தேடிப் போக வேண்டிய  காலநிலையில் இருக்கோம் நியூஸியில்.  மிட் விண்ட்டர் ப்ரேக்  எடுத்துக்கோன்னு  சொல்லி ஏர் நியூசிலாந்து கருணை காமிச்சது.  தங்கும் இடம்  ஏழுநாட்களுக்கும், விமானப் பயணத்துக்கும் சேர்த்து  அறுநூத்தி நாப்பத்தியொன்பது என்பது  கவர்ச்சியாத் தெரியவே  கொஞ்சம் என்னான்னு பார்த்தோம்.  அண்டைநாடுதான்.  ஏற்கெனவே சிலமுறை போய் வந்த இடம்தான் என்றாலுமே.........இந்தத்  தங்கக்கடற்கரையில்( Gold Coast) 'தங்குமிடம் 'என்பது கூடுதல்  கவர்ச்சி.

கடல் பார்க்கப் பிடிக்கும் என்பதால் கடலைப் பார்த்துக்கிட்டே இருக்கும் இடம் வேணுமுன்னதும்,   பட்டியலைப் பார்த்து  கடலாண்டையே நிக்கும் கட்டிடம் ஆப்ட்டது.  இதுக்குக் காசு கொஞ்சம் கூடுதல்.   ஒரு பெட் ரூம் அபார்ட்மென்ட் ஏழு இரவுகள், போகவர விமான டிக்கெட் .ஒரே ஒரு வேண்டுதல் .......  கடல் பார்க்கும் அறை.

கிளம்பறதுக்கு முதல்நாள் நம்ம ரஜ்ஜு கேட்டரிக்குப் போயாச்சு.  எப்பவும் அவனை விட்டுட்டு வந்துதான் பொட்டி அடுக்குவேன். இல்லைன்னா  பிள்ளை பார்த்து ஏங்கிருமே:-(


சிட்னியில் இருக்கும் தோழி, இந்த வருசம் அங்கே  அஸ்ட்ராலியாவில் குளிர் அதிகமா இருக்கு. குளிர்கால உடைகளை எல்லாம் எடுத்துக்கிட்டுப் போங்கன்னு  சேதி அனுப்பி இருந்தாங்க.


கொடுமை கொடுமைன்னு கோவிலுக்குப்போனா.....  அங்கே ரெண்டு கொடுமைன்னு  எதோ பழமொழி சொல்றதைப்போல....  இந்தக் குளிரில் இருந்து  ஒரு எட்டுநாள் தப்பிக்கலாமுன்னா....  ஹூம்....  எரிச்சலோடு ஒரு கார்டிகனும், ஒரு ஜாக்கெட்டும் எடுத்து வச்சேன். விமானநிலையம் போகும் வரையிலும், திரும்பி வந்தபின் வீடு வரும்வரையிலும் வேண்டித்தானே இருக்கு.  ரொம்பக் குளிரா இருந்தால்   முதுகுவலி தாங்கமுடியாமல் அவஸ்தைப் படுவேனோன்ற பயத்தில் ஒரு எலக்ட்ரிக் ப்ளாங்கெட்டையும் பொட்டியில் வச்சு அடைச்சார் நம்ம கோபால்.

மறுநாள்  காலை  அஞ்சரைக்கு ஏர்ப்போர்ட்டில் இருக்கணும்.  அஞ்சே காலுக்கு டாக்ஸிக்குச் சொல்லி இருக்கு. நாலுமணிக்கு எழுந்து குளிச்சு சாமி கும்பிட்டுக் கிளம்பணும்.  கட்டக்கடைசி வேலையா வீட்டில் இருக்கும்  டாய்லெட், கிச்சன் சிங்க், வாஷ் பேஸின்களில் எல்லாம் ஜனோலா  ( Liquid Bleach) ஊத்திட்டுக் கிளம்புவது என் பழக்கம்.  திரும்பி வந்து பார்த்தா எல்லாம் பளிச்ன்னு அழுக்கு இல்லாம இருக்கும். (வீட்டுக்குறிப்புகள்!)

பெரிய வேன் டைப் வண்டி (6  ஸீட்) டாக்ஸியா வந்து நின்னது.  வண்டி ஓட்டுனர் சீனர். ஆளுக்கு ஒரு பெட்டி, ஒரே ஒரு கேபின் பேக்தான் கணக்கு. இப்பெல்லாம் ஏர்லைன்ஸ் ஒரே கஞ்சத்தனம் காமிக்குதுங்க.  ஏர்போர்ட்டில் வண்டியை விட்டு இறங்கும்போதே......  ரொம்ப உசரமான படியில் கால் வச்சுட்டு முதுகுலே லேசா ஒரு பிடிப்பு.  சகுனம் சரி இல்லை....போச்சு நம்ம ஹாலிடேன்னு ........

எங்கூருலே  செக்கின் முதக்கொண்டு  இம்மிக்ரேஷன் வரை எல்லாமே  ஸ்மார்ட் கேட் சமாச்சாரம். டிபார்ச்சர் கார்டுலே கையெழுத்துகூட போட வேணாம்.  கோபால் தயவில் 'கோரு க்ளப்'(ஏர் நியூஸிலாந்து) போய் ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுக்கிட்டு  விமானம் ஏறிட்டோம்.  இது அஸ்ட்ராலியாவில் உள்ள ஒரு விமான சேவை.  விர்ஜின் Australia .....  ஏர்வேஸ்.

அசல் பஸ்தான் போங்க.  இருக்கைக்களுக்கு இடையில்  கை வச்சுக்கும் பிடி கூட இல்லைப்பா!  வழக்கம்போல் எனக்கு ஜன்னல். இருட்டுலே என்ன தெரியும்?

கோபாலுக்குப் பக்கத்தில் ஒரு (வருங்கால) ரக்பி ப்ளேயர்!  அஞ்சு மாசம் ஆன லிதியன். நாலரை மணி நேர ப்ளைட்டில் அப்பப்ப கோபாலிடம்  வந்து போய்க்கிட்டு இருந்தார்!  நானும்  அஜ்ஜுக்குட்டான்னு  கொஞ்சம் கொஞ்சிக்கிட்டு இருந்தேன்.  ஆனா.... ஒன்னு சொல்லணும்.  முழு நேரமும் ஒரு அழுகை, ஒரு சிணுங்கல் இல்லாம சிரிச்ச மூஞ்சோடு இருந்தான் குழந்தை.


இருக்கைக்கு முன்னால்....  ஒன்னுமே இல்லை. கம்மிக்காசுக்கு  இப்படித்தான் இருக்கும்!  இந்த முறை பயணத்துக்குப் படிக்க புத்தகமொன்னும் வசமா கையில் இல்லை.  போன இந்தியப் பயணத்தில் வாங்கிவந்தவைகளில்  கட்டக் கடைசியா ஒன்னே ஒன்னுதான் பாக்கி.  அதை வாசிக்க ஆரம்பிச்சு ஒரு  400  பக்கம் வந்துருக்கேன்.  கதையும் சரி புத்தகமும் சரி.... ஹெவி!  ஜெமோவின் கொற்றவை!  கோவலனைக் கொன்னு போட்டாச்சு. கண்ணகி  'பொற்கொல்லன் வீட்டு முகப்பில்' செம்புழுதியில் குருதிப்பிண்டமெனக் கிடந்த கோவலன் உடல்முன்  வந்து நிற்கிறாள்.  ஒரு பத்து நாளைக்கு அங்கேயே நிக்கட்டும்.........   (ஆமாம்...  கொலைக்களத்தில்  கோவலன் கொல்லப்படவில்லையா ?  பொற்கொல்லன் வீட்டு வாசலில் வச்சா  கொன்னுப்புட்டாங்க? )  


நம்ம பாலகணேஷ்  , காலச்சக்கரம் நரசிம்மாவின் நாலு புத்தகங்களை டவுன்லோடு பண்ணிப் படிக்க லிங்க் அனுப்பி இருந்தார்.  அப்புறம் தமிழ் நெஞ்சம் என்றொரு  பக்கத்தில்  இலவச மின்னூல்கள் கொட்டிக்கிடப்பதைப் பார்த்தேன்.  ரங்க ராட்டினமும்,  கிரேஸி மோகனின் சில (சிரிப்பு) சிறுகதைகளும்,  இந்திரா  சௌந்தர்ராஜனின் சிறுகதைத் தொகுப்பும்  நம்ம ஸாம்ஸங் நோட்பேடில்  இறக்கி எடுத்துக்கிட்டுப்போயிருந்தேன்.

கொஞ்சம் வாசிப்பு, கொஞ்சம் விளையாட்டு (கேண்டி க்ரஷ்)  இப்படி நேரம் போச்சு.  ப்ரிஸ்பேன் போய் இறங்கும்போது சரியான மழை.  ஏற்கெனவே  த்ரிஃப்டியில்  வண்டி ஒன்னு புக் பண்ணி வச்சுருந்தோம் ஒரு எட்டுநாளைக்கு. தினம்   வாடகை என்னவோ 20 டாலர்தான்.   ஆனா இன்ஷூரன்ஸ்,  ஏர்போர்ட் பிக்கப் & ட்ராப், ஜிஎஸ்டி, அது இதுன்னு தினம் 62 டாலர்.  சுண்டைக்காய் காப்பணம், சுமைகூலி முக்காப்பணம்!  புது  இடத்துலே   ஒன்னுகிடக்க ஒன்னு ஆனா.... அப்புறம் அழவேணாமேன்னு.... முன் ஜாக்கிரதை முத்தண்ணாஸ் இல்லையோ நாம்!





போனமுறை (2012ல்) டோல் கட்டலைன்னு  நம்ம கார்டுலே இருந்து காசைக் கழிச்ச நினைவு வந்ததேன்னு  டோலைப் பற்றி விசாரிச்சால் இந்த மூணு வருசத்துலே ரொம்ப  முன்னேற்றம் வந்துருக்கு.  வண்டிகளில் டோலுக்கான  டேக்  ஒட்டி வச்சுருக்காங்க.  டோல் ரோடில் போனா அதுவே கணக்குப் பண்ணிக்குமாம்.  நம்ம டெபாசிட் காசுலே இருந்து கழிச்சுக்கிட்டு மீதியை நம்ம கார்டுலே  திருப்பிப் போட்டுருவாங்களாம்.  ரொம்ப நல்லதாப் போச்சு.

ப்ரிஸ்பேன் நகருக்குள் போகாம... நேரடியா கோல்ட்கோஸ்ட் மோட்டர்வே பிடிச்சோம். 87 கிமீதான் என்றாலும்  மழையா இருக்கேன்னு கொஞ்சம் நிதானமாப் போனது,  நெராங் பக்கம்  தப்பான டர்னிங் எடுத்தது என்ற கணக்கில்  ப்ராட்பீச்சில் இருக்கும்  அக்வேரியஸ் அபார்ட்மெண்ட் போய்ச் சேர  ஒன்னரை மணி நேரம் ஆச்சு.  சில இடங்களில் ஸ்பீடு லிமிட் 110 கிமீ கூடப் போட்டுருக்காங்க.




நியூஸிக்கும் ப்ரிஸ்பேனுக்கும்  ரெண்டு மணி நேர வித்தியாசம் இருப்பதால்  நமக்கு லாபம் 2 மணி நேரம்:-)  அபார்ட்மென்ட் சாவியும், கார் பார்க் இடமும்  கிடைச்சது.  22 வது மாடி.  கதவைத் திறந்தால்  காற்று மட்டுமா? கடலே வருது!

 ஒரு படுக்கை அறைக்குப் பதிலா இது  ரெண்டு  படுக்கை அறைகள் உள்ள பெரிய  அபார்ட்மெண்ட்.   ஒரு ஜன்னல்கூடக்  கிடையாது. சிட்டிங் ரூம், ரெண்டு பெட்ரூம்ஸ் எல்லாம்  ஒரு பக்கச் சுவர் முழுசும் கண்ணாடிக் கதவுகள். வெளியே மூணையும் இணைக்கும் நீளத்துக்கு பால்கனி!   கடலின் இரைச்சல்..........  ஹோன்னு.........




வசதிகள் அட்டகாசம். நேர்த்தியான உள் அலங்காரம். ஃபுல்லி எக்யூப்ட் கிச்சன்.  எக்கச்சக்க ஸ்டோரேஜ். பார்த்தவுடன் எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு. எனக்குத் தேவையான சின்னச்சின்ன மாற்றங்களை (மனசுக்குள்) செஞ்சுக்கிட்டேன்:-) ஹால் டேபிள்  இவ்ளோ நீளமா இருக்கணுமா என்ன?  குளிமுறியில் இருந்து வரும்போது  இடிச்சுடாது?






நெட் கனெக்‌ஷனுக்கு  வைஃபை இருக்கான்னு  ரிஸப்ஷனில் கேட்டதுக்கு , 'இல்லை. இங்கே இதே லாபியில் வந்து  பார்த்துக்கலாம்.  வைஃபை வசதி இல்லை'ன்னுட்டாங்க.  இந்தக் கட்டிடத்தில் மொத்தம் 40 மாடிகளும்,  மாடிக்கு அஞ்சுன்னு 200 அபார்ட்மெண்டுகளும்  இருக்காம். இதுலே பாதிக்குமேல் சொந்த வீட்டுக்காரங்க.   எல்லா மாடிகளிலுமே  ஓனர் இருக்கும்  அபார்ட்மென்டுகளும்  இருக்கு என்பதால் வசதிப்படலை போல!


இந்தப் பயணத்தைப் பொறுத்தவரை இது  வெறும் சூரியன் பார்க்க மட்டுமில்லை. இன்னொரு காரணமும் இருக்கு.  இன்னும் கொஞ்ச மாசங்களில் நம்ம கோபால், வேலையில் இருந்து   ஓய்வு எடுக்கப்போறார்.  அப்ப நம்ம ரிட்டயர்ட் லைஃப் எப்படி இருக்கணுமுன்னு மனசுக்குள்ளே ஒரு ப்ளான் போட்டு வச்சுருக்கேன்.  அதை  (ஓரளவு) ஒத்திகை பார்க்கும் பயணம் இது. கூடவே  இங்கே  கடல் பார்த்த வீடு ஒன்னு வாங்கிக்கணும். நம்ம பட்ஜெட்டுக்குள்ளே  கிடைக்குமான்னு பார்க்கணும். அப்படி ஒன்னும்  கிடைக்கலைன்னா  நியூஸி குளிர்கால மூணு மாசங்களுக்கு வாடகைக்காவது கிடைக்குமான்னு  தேடிப்பார்த்து வச்சுக்கணும்....

நியூஸிக்கும் ஆஸிக்கும் ஒரு ஒப்பந்தம் இருப்பதால்  விஸா தேவைகள் ஒன்னுமில்லாமல்  இங்கேயும் அங்கேயும் போய்வருவதோ, இடம் மாறி வசிப்பதோ, வீடு வாங்கிக்கொள்வதோ  ஒன்னும் பிரச்சனையே இல்லை. தற்சமயம் நிறைய ஆஸிகள்  எங்கூருக்கு  இடம்மாறி இருக்காங்க.  நகரைக் கட்டும்  ப்ரமாண்டமான சமாச்சாரத்தில்  வேலை வாய்ப்பு  அதிகம் என்பதால்!


எனக்கும் இப்பெல்லாம் குளிர்கால டிப்ரெஷன் (SAD)  வரத்தொடங்கி இருக்கு.  மன ஆரோக்கியம் ரொம்ப முக்கியமானது, இல்லையோ! அப்ப உடல்நிலை எல்லாம் ஓக்கேவான்னு  கேக்கப்டாது.  வயசாகுதில்லே....  அதுபாட்டுக்கு அதுன்னு  சின்னச்சின்ன இயலாமைகள்.....


முதல்வேலை முதலில்னு கிளம்பி  அடுத்த நாலு கிமீ தூரத்தில் இருக்கும் பெரிய ஷாப்பிங் சென்ட்டர் Pacific Fair  போனோம். ஒவ்வொருமுறை இங்கே வரும்போது போய்வருமிடம் என்பதால் பிரச்சனை இல்லை.  போனமுறை நம்ம யானையைக் காணொமுன்னு  மனக்குறை.  இப்ப இருக்குமான்னு பார்த்தால்...  சுத்தம்.  பல பகுதிகளை இடிச்சு விரிவாக்கிக் கட்டிக்கிட்டு இருக்காங்க.  2016 இல்  வேலைகள் முடிவடையுமாம்.

  ஃபுட் கோர்ட்டில் போய் சாப்பாடு.  அடுத்து வேடிக்கை பார்த்துக்கிட்டே போய்,  அங்கே இருக்கும் சூப்பர் மார்கெட்டில் அத்யாவசியத் தேவைக்கான  ஷாப்பிங்.  ஹொட்டேலில் போய் தங்குவதற்கும், இப்படி ஹாலிடே அபார்ட்மென்ட்டில் தங்குவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. ஹொட்டேல் மாதிரி கீழே இருக்கும் ரெஸ்ட்டாரண்டில் சாப்பிடுவதோ, இல்லை ஃபோனில் ரூம் சர்வீஸ்  ஆர்டர் செஞ்சு, கொண்டுவரச் சொல்வதோ கிடையாது பாருங்க. வீட்டில் வசிப்பதைப்போல் நம் தேவைகளை நாமே பார்த்துக்கணும்.

தங்கப்போவது வெறும் ஏழு நாட்கள் என்பதால் அதிகம் சமைச்சுக்க வேணாமுன்னு  இருந்தேன். ஆனாலும்  பொழுது விடிஞ்சவுடன் கடை தேடி ஓட முடியுமா ப்ரேக்ஃபாஸ்ட்க்கு?  நம்ம கோபால் கூட, மைக்ரோவேவ் ரைஸ் குக்கர்  கொண்டு போகலாமுன்னு  சொல்லிக்கிட்டு இருந்தார். அதெல்லாம் வேணாமுன்னு பால் காய்ச்சிக்க மட்டும் ஒரு சின்ன  மைக்ரோவேவ் பாத்திரம் கொண்டு போனேன்.  பச்சைப்பால் ஊத்துன காஃபி, டீ என் நாக்குக்குப்  பிடிக்காது:-(


ஜூஸ், பால்,  பழங்கள் (ஆரஞ்சு,வாழைப்பழம், தக்காளி)    சின்ன சைஸ் ஜாம் பாட்டில், மார்ஜரீன்,  சில பேக்கரி ஐட்டம்,  இன்ஸ்டன்ட் காஃபி , சக்கரை  இப்படி வாங்கிக்கிட்டோம். பால் விலை பார்த்து அதிர்ந்து போச்சு!  எங்கூர் விலையில்  பேர்பாதி!   ரெண்டு லிட்டர் ,ரெண்டே டாலர்!  இத்தனைக்கும் நியூஸியின் பால் பெருக்கத்தின் அளவு ஆஸியைவிடக் கூடுதல்!  காஃபி கூட  100 கிராம் ரெண்டே டாலர்!


பழவகைகள் பகுதியில் பார்த்தால் சீத்தாப்பழம்!   காய்ஞ்ச மாடு கதைதான். ஆனால் ஆசைக்கு ஒன்னே ஒன்னு. காயாத்தான் இருக்கு. எப்படியும் 6 நாளில் பழுத்துடாதா?  ஆனாலும் அநியாய விலை. கிலோ 9 டாலர். நம்மது  707  கிராம் என்பதால் $ 6.35

வீட்டுக்குப்போய்   சாமான்களை வச்சுட்டு,  கோபால் வலையில் பார்த்துச் சொன்ன இண்டியன் கடைக்குக் கிளம்புனோம்.  அருமையான இனிப்பு வகைகள் எல்லாம் இருக்கும் ப்ரமாண்டமான இண்டியன் கடை, கோல்ட் கோஸ்ட்லேயே இருக்குன்னு  சொல்லி கடையின்  வலைப்பக்கத்தில் இருக்கும் வீடியோ க்ளிப்பைக் காமிச்சுருந்தார்.  தேடிக்கிட்டுப்போய் ரெண்டு சுத்து சுத்துனபிறகு  கண்டு பிடிச்சோம்.  நல்லாத்தான் வீடியோ எடுத்துருக்காங்க.  வரிசைக் கடைகள் ஒன்னில்  டெய்ரி ஷாப் போல்  இடுக்கமான   ஷெல்ஃப் வரிசைகளுக்குள் இருக்கு அந்த ப்ரமாண்டம்:-(



 பஞ்சாபி ஓனர்.  போனதுக்கு  இருக்கட்டுமுன்னு  ரெடிமேட் சப்பாத்தியும், தில்லி ஸ்டைல் பனீர் மக்கானியும்  வாங்கியாந்தோம்.  இதுக்குள்ளே  மாலை 4 மணி. மழையோ இன்னும் விட்டபாடில்லை. வர்றதும் போறதுமா.....
உலகப்புகழ் பெற்ற  கோல்ட் கோஸ்ட்டின்  மெயின்  பீச்சான  சர்ஃபர்ஸ் பாரடைஸ்வரை போகலாமுன்னு  போனால்...


இது நம்ம(!) வீட்டில் (ப்ராட் பீச்சில்) இருந்து சரியா ஒன்னரை கிமீ தூரத்தில் இருக்கு.  நம்ம வீட்டில் இருந்து பார்த்தாலே தெரியுதுதான். இந்தக் கடற்கரையில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு பெயர் வச்சு விட்டுருக்காங்க.  நம்ம சென்னையில் கண்ணகி பீச், காந்தி பீச், பெஸண்ட்நகர் பீச்ன்னு இருப்பதைப்போலத்தான்.

எப்போதும் மக்கள் கூட்டம் நெரியும் ஷாப்பிங் பகுதி. மால்களும் ஹொட்டேல்களும், அபார்ட்மென்டுகளும்  ஒரு புறம்  இடம்பிடிச்சு  ஜேஜேன்னு இருக்க, எதிர்ப்புறம்  கடற்கரைக்கான நுழைவு வாசல்!

 பார்க்கிங் பெரிய பிரச்சனை. பகல் கொள்ளை! அப்படியும்  பாரடைஸ் சென்டரில் இடம் கிடைக்குமுன்னு  போனால்....    அங்கே இருக்கும் சூப்பர் மார்கெட்டில் 15 டாலருக்குச் சாமான் வாங்கினால் ஒரு மணி நேரம் பார்க்கிங் இலவசம்.

எனக்கு கோல்ட் டர்க்கி வரப்போகுதே என்ற பயத்தில்  நெட் கனெக்‌ஷன்  வாங்கிக்கத்தான்  இப்போ இங்கே வந்துருக்கோம். நான் வேற, கஞ்சப்பேர்வழி என்பதால்  'இன்னும் கொஞ்சம்  பொருட்கள் வாங்கிக்க வேண்டித்தானே இருக்கு. அதை வாங்கிக்கிட்டால் பார்க்கிங் காசு மிச்சம்' என்று கணக்குப் பார்த்தேன். முதலில்  நெட் கனெக்‌ஷன் வாங்க வோடஃபோன் கடைக்குப்போனால்  3 ஜிபி  39.95 டாலர்.  பாஸ்போர்ட்டைக் காமிக்கணும்.  நோட் பேடைப் பின்னால் கழட்டி அந்தச் சிப் பொருத்திக்கணுமாம்.

அடுத்த கடையில்  கேட்டால் அநேகமா இதேதான்.  நமக்கு யூஎஸ்பி ஸ்டைல் கிடைச்சால் வசதி.  Optus  கடையில் விசாரிங்கன்னதும்  அங்கே போனோம்.  இருக்கு. விலை 29.95 தான். அதே 3 ஜிபி.  ஒரு மாசம் வரை பயன்படுத்தலாம். அப்புறமும் நம்ம கனெக்‌ஷன் 2025 வரை நீடிக்குமாம்.  வேணும் என்கிறபோது , வேணுமென்ற அளவுக்கு  நெட்டிலேயே டாப் அப் பண்ணிக்கலாமாம். ஓக்கே!


வுல்வொர்த் சூப்பர் மார்கெட்  போய் கொஞ்சம்  பிஸ்கெட்டுகள்,  ரெண்டு பாட்டில் பச்சத்தண்ணி,  கால் வாசி  தர்பூசணி,  தயிர், இன்னும் சில   பேரிக்காய்கள் வாங்குனதும்தான்  என் மனசுக்கு சமாதானமாச்சு.  ஃப்ரீ பார்க்கிங்:-)


இனி அறைக்குத் திரும்பி  வலையில் உலாவலாம். மழை மட்டுமில்லாமல், அஞ்சரைக்கே இருட்டி வேற போச்சு.  'இங்கே நம்ம வீட்டில்  மாசத்துக்கு 80 ஜிபி. அதை நினைச்சுக்கிட்டு நீ பாட்டுக்கு  உலாவறேன்னு ரொம்ப தூரம் போயிடாதே.   இது வெறும் 3 ஜிபிதான்.மெயில் பார்த்துக்கோ, பதில் அனுப்பிக்கோ. சட்னு  முடிச்சுக்கணும்.  எட்டு நாளைக்கு  இதை வச்சுக் கொஞ்சம் கொஞ்சமாப் பார்த்து செலவு பண்ணு'ன்னு உத்தரவாச்சு! அப்படியே  அவரோட மணிக்கணினியை எனக்கு தானம் வழங்கிட்டார்.

 சூடா காஃபி போட்டு  வச்சுக்கிட்டு மழையை ரசித்தபடி அவரவர் வேலையில் மூழ்கினோம்.  கோபால் டிவி. நான்  ரங்கராட்டினம்.

இரவு  லைட் மீல் கணக்கில்  ஒரு பேக்கரி ஐட்டமும் பழங்களும்.
நாளைக்கு மழை  நிக்குதான்னு பார்க்கலாம்.  மழை இல்லைன்னா  மார்னிங் வாக்  போகலாம்.

இப்போ குட்நைட். ஸ்லீப் டைட்!

தொடரும்..........:-)



PINகுறிப்பு:  டயரிக்குறிப்புன்னு பெயர் வச்சதே எட்டு பதிவுகளோடு அடக்கணும் என்ற எண்ணத்தால்தான்.  பெருமாளே..... கையை இழுத்துப்பிடி!

25 comments:

said...

நீங்கள் எழுத எழுத இயல்பாக வந்துகொண்டேயிருக்கின்றது. அதனால் பதிவு சற்று பெரிதாகத் தெரிகிறது. சுருக்கவேண்டாம். இவ்வளவு செய்திகளை நாங்கள் தெரிந்துகொள்ள தங்கள் தளம் வாய்ப்பாக உள்ளது. புகைப்படங்களும் வழக்கம்போல அருமை. வாழ்த்துக்கள்.

said...

வளர்ச்சியடைந்த நாடுகள் மேல் தொடக்கத்தில் மிகப் பெரிய மரியாதை இருந்தது. ஆனால் ஓரளவுக்கு அதன் வரலாற்றுப் பாதைகளை படித்த போது குறிப்பிட்ட சில நாடுகளின் மேல் இருந்த மரியாதை அப்படியே ரிவர்ஸ் ஆகி விட்டது. இந்தியா என்பது கடந்த ஆயிரம் ஆண்டுகளாக பல வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு கொடுத்து கொண்டே (பல வழிகளில்) கொடுத்துக் கொண்டே இருந்த தேசம். இன்று வரையிலும். ஆனால் எடுத்துக் கொண்ட தேசம் எல்லாம் அதை தெளிவாக உள் கட்டமைப்பு, மக்கள் நலன், அடிப்படைக் கட்டுமானம், கல்வி, பொது சுகாதாரம் போன்றவற்றோடு சேர்த்து நவீன விஞ்ஞானத்திலும் கவனம் செலுத்திய காரணத்தால் இயல்பாக மக்களிடம் சுத்தம் சுகாதாரம் போன்ற எண்ணங்கள் இயல்பாக உருவாகி விட்டதோ என்று நினைத்துக் கொள்வேன். நீங்கள் கொடுத்து இருக்கும் பல படங்களில் பொது இடங்களில் கூட காணும் சுத்தம் நம் நாட்டுக்கும் வர இன்னும் எத்தனை காலங்கள் ஆகுமோ? என்ற கேள்வி எழுகின்றது.

அப்புறம் ஆடிய காலும் பாடிய வாயும் சும்மாயிருக்காதே? தலைவர் ஓய்வு பெற்ற பிறகு இனி சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களே உங்கள் பட்டியலில் இருக்காதே? என்ன செய்யப் போறீங்க?

said...

கடல் அருகே... ஆகா...! சொர்க்கம் தான் அம்மா...

said...

Nice Pics.

said...

ரீச்சர் ஒரு சந்தேகம். உங்க ஊரில் குளிர்காலம்ன்னா ஆஸ்திரேலியாவிலும் அப்படித்தானே இருக்கும். நீங்க பூமியின் வடப்பகுதியைப் பார்த்துல்ல வரணும்? பேசாம எங்க ஊருக்கு வந்திருங்க. குளிரும் கிடையாது ஒண்ணும் கிடையாது. இப்படி ஊர் ஊரா அலைய வேண்டாம்.

said...

செட்டில் ஆக வேண்டிய இடங்கள் லிஸ்டில் ஸ்ரீரங்கம் இல்லையா துள்சிக்கா?

said...

ரொம்ப நல்லாருக்கு. "வாழ்க்கை வாழ்வதற்கே'ன்னு நல்லாக் காண்பிக்கிறீர்கள். I should appreciate your adaptability. வாழ்க வளர்க.

படியேறி தரிசனம் பண்ணவேண்டிய இடங்களையெல்லாம் லிஸ்ட் போட்டு முதலில் முடிச்சுடுங்க.. பக்கத்து ஊர் சமாசாரங்களெல்லாம் எப்போ வேணும்னாலும் பார்த்துக்கலாம்.

said...

டீச்சர் அற்புதம். எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

ஆஹா.... சொல்லிட்டீங்கல்லே! செஞ்சுருவோம்:-)

மனம் நிறைந்த நன்றிகள்.

said...

//பச்சைப்பால் ஊத்துன காஃபி, டீ என் நாக்குக்குப் பிடிக்காது:-(//

அட, எனக்கும் அப்படியே டீச்சர்;)
திருச்செந்தூர் அபிடேகப் பாலைக் கொஞ்சம் சூடு பண்ணிச் சர்க்கரை போட்டுத் தந்தா தான் என்னவாம் -ன்னு சிணுங்கி இருக்கேன் அவன் கிட்டயே;)

//ஒரு பக்கச் சுவர் முழுசும் கண்ணாடிக் கதவுகள். வெளியே மூணையும் இணைக்கும் நீளத்துக்கு பால்கனி! கடலின் இரைச்சல்.......... ஹோன்னு.........//

அப்படியே, அலுவல் நிமித்தமாத் தங்கும் Brazil, Rio அறை போலவே இருக்கு; குதிச்சாக் கடல்ல விழுந்தறலாம்;)

//இன்னும் கொஞ்ச மாசங்களில் நம்ம கோபால், வேலையில் இருந்து ஓய்வு எடுக்கப்போறார்//

இனிய honeymoon வாழ்த்துக்கள் கோபால் சாருக்கு; நான் சொன்னே-ன்னு சொல்லீருங்க;)

//அப்ப நம்ம ரிட்டயர்ட் லைஃப் எப்படி இருக்கணுமுன்னு மனசுக்குள்ளே ஒரு ப்ளான் போட்டு வச்சுருக்கேன்//

இன்பமாய், இரண்டு பறவைகள் போல, மனம் போல் வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள், டீச்சர்
--

’யவன ராணி’ -ன்னு ஒரு நூல்..
அதே போல் ஒங்களுக்குப் ‘பயண ராணி’ -ன்னு பட்டம் தருகிறேன்;)

said...

வாங்க ஜோதிஜி.

சுத்தம் எந்த விமானத்தில் ஏறி வரணும்? எல்லாம் மக்கள் கையில் அல்லவா இருக்கு! ஒவ்வொருவரும் தங்கள் கடமை. நாட்டைச் சுத்தமா வச்சுக்கணுமுன்னு மனசுலே நினைச்சு, கொஞ்சம் கவனமா இருந்தால் போதுமே!

சுத்தம் சோறு போடும் என்ற பழமொழியை எல்லோரும் வசதியா மறந்துட்டாங்க:-(

இதுவரை கண்டது கடுகளவு. காணாதது உலகளவு என்னும் நிலையில்தான் இருக்கேன்! உடல்நலம் கொஞ்சம் பரவாயில்லாமல் இருக்கும்போதே இன்னும் சில ஊர்களைப் பார்த்துக்கணும். பெருமாள் என்ன நினைக்கிறாரோ.....

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

சொர்கமேதான். ஆனால் அறை வாடகை, ஆளைத் தூக்கி சாப்பிட்டுருதே:-(

இது நமக்கு ரினொவேஷன் ஸ்பெஷலில் கிடைச்சது. டிசம்பரில் வேலைகள் முடிஞ்சதும் டபுள் த ரேட் .

said...

வாங்க குமார்.

நன்றி.

said...

வாங்க கொத்ஸ்.

உங்க ஊருக்கு ஒரு டிக்கெட் எடுக்கும் காசுலே இங்கே ரெண்டு பேர் போய் வந்தாச்சு. அஸ்ட்ராலியாவின் வடக்கே போயிருந்தால் நல்ல காலநிலையா இருந்துருக்கும். என் ச்சாய்ஸ் எப்பவும் டார்வின் தான். ஆனால் அது சுற்றுலாப்பயணிகள் அவ்வளவாகப் போகாத இடம் என்பதால் ட்ராவல் ஏஜெண்டுகள் கண்டுக்கறதில்லை.

உங்க ஊர்ப் பயணம் ஒன்னு அநேகமா அடுத்த வருசம் வருது! உங்க கோடை விடுமுறை முடிஞ்சு பள்ளிக்கூடம் திறந்தவுடன் வரலாமுன்னு இருக்கோம்.

said...

வாங்க சாந்தி.


செட்டில் ஆக முடியாதாம். பவரே இல்லைன்னு புலம்பறார். ஆனால் கூடிப்போனால் ஒரு மாசம் இருக்கலாமாம். அதுக்கு முன்னோடியா அடுத்த பயணத்தில் ரெங்கனுக்கு ஒரு வாரம் எடுத்து வச்சாச்:-)

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

இந்தியக் கோவில்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் படியேறி முடிச்சுக்கறது நடக்குற காரியமா?

அது பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இதுன்னு ஸைட் பை ஸைடா வாழ்ந்து முடிச்சுடணும்.

said...

வாங்க விஸ்வநாத்.


நலமா?


வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி. மீண்டும் வருக!

said...

வாங்க கே ஆர் எஸ்.

இந்த நாக்காலே படும் பாடு அப்பப்பப்பா.....

வருசம் இருமுறைன்னு கிளம்பிக் கொஞ்சம் கொஞ்சமா பயணம் செஞ்சுக்கணும். அதிக நாள் முடியாது. ராஜலக்ஷ்மி ஏங்கிடுவான்:-(

பயண ராஜான்னு கோபாலுக்குத் தனிப் பட்டம் உண்டா இல்லையான்னு எனக்குத் தெரிஞ்சாகணும், ஆமா:-)))))

said...

//எனக்கும் இப்பெல்லாம் குளிர்கால டிப்ரெஷன் (SAD) வரத்தொடங்கி இருக்கு. மன ஆரோக்கியம் ரொம்ப முக்கியமானது, இல்லையோ!//

மன நலம் வாழி
மனமே= முருகனின் மயில் வாகனம்

தட்டில் உள்ள அத்தனை பழங்களிலும்.. சீத்தாப்பழத்துக்கே என் ஓட்டு..
அப்படியே பனங்கெழங்கு கிடைக்குதான்னும் விசாரிங்க;)

--

//ஆமாம்... கொலைக்களத்தில் கோவலன் கொல்லப்படவில்லையா ? பொற்கொல்லன் வீட்டு வாசலில் வச்சா கொன்னுப்புட்டாங்க? ) //

ஆமாம்!

'விறல் மிகு வேந்தற்கு விளம்பி யான் வர,
**என் சிறு குடில்** அங்கண் இருமின் நீர்’ என,

1. வீதியில் பொற்கொல்லன் 100 சீடர்கள் பின் தொடர வரான்
2. அவன் படோபடத்தில் மயங்கிய கோவலன், அவனை அணுகுறான்

3. அப்பவும், தன் வாணிக உத்தி தவறாது, விசாரித்த பின்னரே.. அரசி காலுக்கு ஒரு அணி கொண்டாந்துருக்கேன்.. ஒன்னால விலை சொல்ல முடியுமா?-ன்னு கேக்குறான்

4. அந்தச் சிலம்பின் நேர்த்தியைப் பாத்த பின்னரே, கொல்லன் மனசுக்குள் திட்டம் உருவாகுது
5. என் வீட்டில் அமர்ந்து இரு, மன்னனிடம் விசாரித்து வருகிறேன்-ன்னு கொல்லன் சொல்ல

6. கோவலன், நானும் மன்னன் முன் வருவேன் -ன்னு சொல்லத் தயக்கம்; ஏன்னா பெரு வணிகன் மாசாத்துவான் (கோவலன் அப்பா); அவரை மூவேந்தரும் அறிவர்..
கோவலனோ, வீட்டுக்குத் தெரியாமல் வந்திருக்கும் ‘புலம் பெயர் புதுவன்’

7. வெட்கத்தால், தான் மன்னன் முன் வாராது, நம்பி உட்கார்ந்து இருக்கான்.
ஒரே நம்பிக்கை= கொல்லன் வீடு தான்;
எங்கும் ஓடிவிடாது, எப்படியும் வீட்டுக்கு வந்து தானே ஆகணும்? ங்குற நம்பிக்கை

8. அரசி ஊடலால், காம மயக்கத்தில் இருக்கும் மன்னன் கிட்ட போய், கொல்லன் பொய் சொல்ல,
மன்னனும் ‘கன்றிய கள்வன் கையது ஆகின், கொன்று, அச் சிலம்பு கொணர்க ஈங்கு’
அவன் கையில் திருட்டுச் சிலம்பு இருந்தாஆஆஆல், கொன்று, எடுத்து வா-ன்னு கட்டளை;

9. சிலம்பு கையில் இருந்தாலே, அது திருட்டுச் சிலம்பு தான்-ன்னு ஒரு காவலாளிக்கு எப்படித் தெரியும்? விசாரிக்க வேண்டியது மன்றம்-ன்னு மறந்து போகும் அளவுக்கு மன்னன் காமம்;(
10. காவலர்களை, சிலம்பு பார்க்க வந்தோர்-ன்னு சொல்லி, சிலம்பு அவர்கட்குக் காட்டப்பட.. அவிங்களுக்குக் குழப்பம்

11. இவன் கள்வன் போலத் தெரியலையே-ன்னு ஒரு காவலன் சொல்ல, கொல்லன் அவர்களைப் பேசி மயக்கி, பெரும் கள்வர்கள் நல்லவர்கள் போலவே தெரிவார்கள், மாய வித்தைக்காரர்கள்-ன்னுல்லாம் சொல்ல..
12. ஒரு காவலன், இதே போல், முன்பொருமுறை தான் ஏமாந்த சேதி சொல்ல..

இன்னொரு கல்லாக் காவலன், வாள் எறிந்து வெட்டி விடுகிறான்;(
*இது= கொல்லன் வீட்டின் முன்பு தான் நடக்குது..
*வீட்டின் முற்றமே= கொலைக் களம் ஆகி விடுகிறது

’என் சிறு குடில் அங்கண் இருமின் நீர்’ என,
கோவலன் சென்று, அக் குறுமகன் இருக்கை
...
...
கல்லாக் களிமகன் ஒருவன் கையில்
வெள் வாள் எறிந்தனன்; விலங்கூடு அறுத்தது;
புண் உமிழ் குருதி பொழிந்துடன் பரப்ப,
மண்ணக மடந்தை வான் துயர் கூர,
காவலன் செங்கோல் வளைஇய,
வீழ்ந்தனன் கோவலன், பண்டை ஊழ்வினை உருத்து!!

said...

யவன ராஜா -ன்னு சாண்டில்யன் எழுதியிருந்தா, கோபால் சாரும் பயண ராஜா தான்;)
யவன ராணி சாண்டில்யா, என்னைக் காப்பாத்து-ய்யா;)
பயண ராணி வாழ்க;)

said...

வணக்கம் துளசி madam,
நீங்க optus prepaid internet data card வாங்கிருகீங்க இல்ல, அந்த Optus company க்கு தான் நான் வேல செய்றேன். Australiala இல்ல. இங்க. இந்தியால இருந்தே.

Optus online sales முழுக்க இங்க பெங்களூர்ல தான் நடக்குது. Broadband, postpaid லாம் பெங்களூர் பசங்க தான் பாத்துக்றாங்க. BPO இங்க பெங்களூர் la தான் குடுத்ருகாங்க optus காறாங்க.

அப்புறம் அந்த கோலம் லாம் என்னோட அக்கா போட்டது madam. கதகளி, விஷ்ணு மட்டும் அக்கா போட்டது. மற்ற படங்கள் எங்க தெருல கோலபோட்டி வெச்சிருந்தாங்க. அந்தந்த வீட்டு கோலங்கள் மற்றவை எல்லாம்.

உங்க பதிவு அப்டியே உங்க கூடவே பயணம் செய்ற மாறி இருக்கு. ரொம்ப நல்ல இருக்கு.

said...

வாங்க கே ஆர் எஸ்.

மகளுக்கு சீத்தாப்பழம் ரொம்பப்பிடிக்கும். அவளை நினைச்சுக்கிட்டுத்தான் வாங்கினேன். பனங்கிழங்கு விவகாரம் எல்லாம் ஆஸிகளுக்கு இன்னும் தெரியலைன்னு நினைக்கிறேன். வடக்கே பனைமரம் இருக்கான்னு பார்க்கணும்.

பாவம்.... கோவலன். வீட்டு வாசலிலேயே பொலி போட்டுட்டாங்களா....:-(

நம்மூட்டு பயணராஜா.... உங்க பின்னூட்டம் பார்த்து சிரிக்கிறார்:-)

said...

வாங்க சிவா.

முதல் வருகைக்கு நன்றி. நலமா?

நீங்களும் optus என்பது மகிழ்ச்சியே. இன்னும் 10 வருசத்தில் வாங்குனது வேலை செய்ய்லைன்னா உங்ககிட்டேதான் கேட்பேன்:-))))))

பயணம் போவது மட்டுமில்லாமல் படிக்கவும் பிடிக்குமுன்னால்... நம்ம துளசிதளத்தில் ஏராளமாக் கொட்டிக்கிடக்கு. நேரம் இருக்கும்போது நினைவும் இருந்தால் எட்டிப் பாருங்க. இந்தத் தொடரின் ஆரம்பமே பெண்களூரில் இருந்துதான்:-)

said...

Thanks for your reply madam. I'm following ur blog around 2 -3 months. Neenga nadula Tamilnadu templesum sethu yeludhradhu konjam kolapama irukum. Irundhaalum I manage. Yenakku romba pudichadhu unga abroad payanak katturaigal daan .

Daily unga blog a yetti paathupen. Pudhu post potuteengalaanu.

said...

@சிவா,

நடந்து முடிஞ்ச ரெண்டு பயணங்களை எழுதிக்கிட்டு இருக்கேன். ஒன்னை முடிச்சுட்டு இன்னொன்னு எழுதலாமுன்னா முதலில் ஆரம்பிச்சது இப்போ முடியுமுன்னு தோணலை.அனுமார்வால்..... அதுக்குள்ளே நடக்கும் சிறு பயணங்கள் எழுதப்படாமல் விட்டுப்போகுது. பலசமயம் சம்பவங்கள் மறந்தும் போகுது.
நம்ம போஸ்ட் கணக்கு வாரம் மூணு! திங்கள், புதன் , வெள்ளி. வீகெண்ட் நோ பதிவு.

அதனால் மூணில் ரெண்டு இந்தியப்பயணம், மீதி ஒன்று உள்ளூர் பயணம் மற்றும் இதர உள்ளூர் சமாச்சாரங்கள்.

எனக்கும் வெளிநாட்டுப் பயணங்கள் பிடிக்கும். இந்தியா எனக்கு வெளிநாடுதான்:-)

தொடர்ந்து வாசிப்பீர்கள்தானே? முன்கூட்டிய நன்றி.