Wednesday, August 12, 2015

விதியாகப்பட்டது வலியது. அதை யாரும் வெல்ல முடியாது... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 70)

கபிஸ்தலம் விட்டு கும்மோணத்துக்கு வந்து சேர்ந்தோம். நாப்பது நிமிசம் ஆச்சு. இத்தனைக்கும் 16  கிமீ தூரம் கூட இல்லை.  சாலை அழகு அப்படி!  எனக்குக் கும்பகோணம் என்றதும் ஆசையா இருந்தது 'ஆனந்தம்'தான்.  அங்கே போனா தங்கி கிராமத்தை அனுபவிக்கணும்.  போனமுறை  மூணு நாட்கள் அங்கே தங்கினாலும்  ரிலாக்ஸ் செய்யமுடியாமல்  சுத்திக்கிட்டே இருந்துட்டோம்.  இந்த முறையும் அப்படித்தான் ஆகப்போகுது நினைக்கும்போதே....   'பேசாம ராயாஸ்லே தங்கிருங்க.  ஊருக்குள்ளேயெ இருக்கு. நின்னு நிதானமாக் கோவில்களைப் பார்க்கமுடியும் 'என்றார் அண்ணன்.

அதுவும் சரிதான்னு வலையில் தேடுனப்ப.... 'புதுசா இன்னொன்னு ஆரம்பிச்சு இருக்காங்க'ன்னு  சொன்னார் கோபால்.  இந்தப் பயணத்தில் முன்னேற்பாடா முதலிலேயே  தங்கும் ஊர்களைத் தீர்மானிக்காமல்  அந்தந்த ஊர்களுக்குப்போகும் தினமோ இல்லை முதல்நாளோதான் ஃபோன் புக்கிங் செஞ்சுக்கிட்டே போனோம்.  வலையில் விவரங்கள் இருப்பது ரொம்பவே பயனாக இருக்கு.

நேத்து, திருச்சி சங்கம் ஹொட்டேலில் இருந்து  ஃபோன் செஞ்சப்ப, இந்த புது ஹொட்டேல் விவரம் கிடைச்சது. குளத்துக்கு முன்னால் இருக்குன்னதும் ஓக்கேன்னுட்டேன்.

இது ஹொட்டேல் ராயாஸ் க்ராண்ட். வரவேற்பே அட்டகாசமா இருக்கு.  அங்கு  வச்சுருந்த பெரிய பெரிய வெங்கல/பித்தளை  விக்கிரகங்கள்  அப்படியே  மனசை மயக்கிருச்சு. நடராஜரும், நந்திகளும்,  என்னைவிட உசரமா நிக்கும் குத்துவிளக்குகளும்,  கண்ணாடிப்பொட்டிக்குள் இருந்த கீதோபதேசமும்  இன்னும்கூட மனசை விட்டுப்போகலை!
நமக்கு ராயாஸ் க்ளப் ஸ்யூட்  கிடைச்சது. ரெண்டாம் மாடி. அறைக்குப்போய் கதவைத் திறந்து  ஜன்னலில் பார்த்ததும்.... ஹைய்யோ!!!  மஹாமகக்குளம்  கண்ணெதிரில்!  ஸிட்டிங் & டைனிங் வசதிகளுடன் ஒரு பெரிய அறை,  இன்னொரு பெரிய படுக்கை அறை, ரெண்டு பாத்ரூம் எல்லாம் சூப்பர்.
குளியலறையில் ஃபேன் போட்டுருந்தாங்க.  சண்டிகர் வீட்டில் இப்படிப் பார்த்தபிறகு  இங்கேதான் மறுபடி ஃபேன் இருக்கும் பாத்ரூம் பார்க்கிறேன். வேர்த்துக்கொட்டாமல் இருக்க இது  ஒரு நல்ல ஏற்பாடு.  சண்டிகர் வீட்டில் வெளியே பால்கனிகளுக்குக்கூட ஃபேன் போட்டுருந்தாங்க.

தரை தளத்தில் இவுங்க ரெஸ்ட்டாரண்ட் (Rice n Spice) இருப்பதால் சாப்பாட்டுக்கும் பிரச்சனை இல்லை. கீழே போய் மெனுகார்டைப் பார்த்தால்....  தமிழ்நாட்டுக்கு என்னவோஆகிக்கிடக்குன்றது தெளிவாச்சு.  Lung  fung soup, Manchow soup, Tom yum soup......எதுக்காக இப்படி ச்சைனீஸ்  வகைகள்? நம்ம சாப்பாட்டு வகைகளில் என்ன குறை கண்டார்களாம்?

தென்னிந்திய தாலி மீல்ஸ்க்குச் சொன்னோம். சீனிவாசன்  வேற இடத்துக்குச் சாப்பிடப் போயிட்டார். நல்லாத் தெரிஞ்ச ஊராச்சே! எனக்குக் கொஞ்சம் நெய் கேட்டதும் வந்தது. சாப்பாட்டை முடிச்சுக்கிட்டுக் கொஞ்சநேரம் வெளியே வேடிக்கை பார்த்தேன்.


ஹொட்டேலுக்கு உள்ளெ வரும் கேட்டையொட்டின சுவரில் 12 ராசிகளுக்கான தெய்வங்கள், மாதங்கள், கீழ்வரிசையில் 27 நட்சத்திரத்துக்கான  தெய்வங்கள் என்றெல்லாம்  அழகா  வரைஞ்சு வச்சுருக்காங்க. பளிங்கு ஸ்வாமிமாடத்தில் புள்ளையார், நவநதிகளும், மஹாமகக்குளத்தில் நீராடுவதன் விசேஷங்களும் விவரமா சுவத்துலேயே இருக்கு.  க்ளிக்கி வச்சேன்.

வரவேற்பில் போய்  வைஃபை  பற்றிக் கேட்டால் ஒரு ரெண்டு நிமிசம் பேய்முழி முழிச்சவர், இருந்தது இப்ப இல்லை. அது ரிப்பேராயிருச்சுன்னார். ஃபோனில் கேட்டப்ப இருக்கு என்றீரேன்னா  இன்னொரு முழி. அப்புறம்  எங்க ஆஃபீஸ்லே இருக்கும் கணினியைப் பயன்படுத்திக்குங்கன்னார்.  அவர் வந்து கதைவைத் திறந்து பாஸ்வேர்ட் போட்டுக்கொடுத்தார்.  டெஸ்க்டாப் படம் சூப்பர்!  பத்து நிமிசம்  மெயில் பார்த்துட்டு, முக்கியமா பதில் அனுப்பவேண்டியவைகளுக்கு ஒரு வரி எழுதிப்போட்டுட்டு இருக்கும்போதே.... ' சாவி அட்ரெஸ் ஞாபகம் இருக்கா'ன்னார் கோபால்.
 கண்கள் வியப்பால் விரிய,  'ஊர் தெரியும். இதோ வழி பார்க்கிறேன்'னு சொல்லி கூகுளாரின் மேப் திறந்து  தேடினால் நாச்சியார் கோவில் வழியாகப்போ. 20.4 கிமீதான் என்றது. எப்படியும் கோவில்கள் எல்லாம் 4 மணிக்கு மேல்தான் திறப்பாங்க. அதனால் இப்பக் கிளம்பிப்போய் கிடைச்சால் பார்த்துட்டு வந்துடலாம் என்றார்.

கும்பகோணம், தஞ்சாவூர் பக்கம் வரும்போதெல்லாம் சாவியின் நினைவு என்னப் படாதபாடு படுத்தும்.  சந்திக்கணும் என்று நினைச்சதெல்லாம் ஒவ்வொருமுறையும் நிறைவேறாமலேயே போயிருந்தது.

சீனிவாசன் சாப்பிட்டு வரட்டும். கொஞ்சம் ஓய்வும் அவருக்கு வேணும்தானேன்னு  மூணு மணிக்குக் கிளம்பலாமுன்னு அவருக்குச் சொல்லிட்டு அறைக்கு வந்து  கொஞ்சம் ஃப்ரெஷப் பண்ணிக்கிட்டேன். அப்பத்தான் நினைவுக்கு வருது நேத்து வாங்கி வச்ச தாயார் சந்நிதிப் பூக்கள்.

செண்பகமா மனோரஞ்சிதமான்னு  மனசுக்குள் சீட்டுக்குலுக்கிப் பார்த்ததில் மனோ வென்றது.  மனோ காம்னா பூர்த்தி ஹோ ஜாயேகான்னு  எடுத்து வச்சுக்கிட்டேன். இன்னும் அவ்வளவா வாசம் வரலை. கொஞ்சம் பழுக்கணுமோ? பச்சையாவே இருக்கே....

நாச்சியார் கோவில்-பூந்தோட்டம்  மெயின் ரோடுன்னு  போர்டு பார்த்ததும் சரியான வழிதான்னு  நிம்மதி.  என் சாவி எப்படி இருப்பாளோ? இருப்பாளா முதலில் என்னென்னவோ   பயங்கர எண்ணங்கள். ச்சீ...நல்லதாவே நினைக்கத்தெரியலை பாரு இந்த மனசுக்கு:-(
அரசிலாறு கரைப்பக்கமாவே போகுது ரோடு. ஆஹா...  இந்த ஆற்றில் எத்தனைமுறை முங்கிக் குளிச்சுருக்கேன்! நம்ம வானதி கூட இங்கேதானே முதலைக்குப் பயப்பட்டாள். இல்லையோ?
சாவியைப் பற்றித்  தெரியாதவங்களுக்காக  இங்கே ஒரு சுட்டி கொடுக்கறேன்.  போய்ப் பாருங்களேன்... என்னமாதிரி மனுஷின்னு  தெரிஞ்சுக்கலாமில்லையா? 


வழியில் தென்பட்ட சில வீடுகளின் அருகில் நின்னுக்கிட்டு இருந்தவரிடம், கூந்தலூர் இதுதானேன்னு கேட்டுத் தெளிவுபடுத்திக்கிட்டு அக்ரஹாரம் எந்தப்பக்கமுன்னு  விசாரிச்சதுக்கு  இன்னும் கொஞ்சதூரம் போய் வலது பக்கம் பிரியும் மண்ரோடு வழியாப் போங்கன்னார்.

நம்ம கோபால் வேற  இதுதானா வழின்னு எங்கிட்டே கேட்டுக்கிட்டே வர்றார். 42 வருசத்துக்கு முன்னால் வந்து போன இடத்துக்கு வழி சரியான்னு எப்படிச் சொல்ல? எவ்வளவோ மாற்றங்கள் வந்துருக்குமே! இதை இடிச்சுக் கட்டி அதை இடிச்சுக் கட்டி, புது வீடுகள் முளைச்சுன்னு... எவ்ளோ இருக்கு!

பழைய கோவில் மாதிரி இருக்கும் ஒன்னைத் தாண்டிப்போனதும் கண் எதிரில் அக்ரஹாரம். அப்படிக்கப்படியே இருப்பது போல் எனக்கொரு தோணல். திண்ணை வச்ச ஓட்டு வீடுகளின் வரிசை. ஒரு வீட்டுத் திண்ணையில் நாலைஞ்சு பேர் உக்கார்ந்துருந்தாங்க. கையில் சீட்டுக்கட்டு!
வண்டியை அங்கே நிறுத்தச் சொல்லி நான் மட்டும் இறங்கிப்போய் அங்கிருந்த பெரியவரிடம், 'நமஸ்காரம். இங்கே சுந்தரேச குருக்கள் வீடு எது?' என்றேன். கொஞ்சம்  யோசனையோடு நெற்றியைச் சுருக்கினார். எங்கே தெரியாதுன்னுடுவாரோன்னு  அவர் மகன் சிவகுமார் என்றதும், புன்சிரிப்போடு எதிர்வீட்டைக் கை காமிச்சு  'அது'  என்றார். என்னாலேயே நம்பமுடியலை. சரியான இடத்துக்கு வந்துருக்கேன்!



எதுத்தவீட்டுக்குப்போய்  திறந்திருந்த கதவில் நாசுக்காய்  ரெண்டு தட்டு.  உள்ளே யாரும் இல்லை போல. முற்றம் மட்டும் கண்ணில் பட்டது. வீடு கொஞ்சமே கொஞ்சம் முன்பக்கம் மாறி இருக்கே தவிர  அந்த முற்றம் பரிச்சயமானதாவே மனசுக்குப் பட்டது.  ரேழியைக் கடந்து உள்ளே போகும்போது எதிரில் வந்த ஒரு பெண்மணியிடம், சாவித்ரி இருக்காங்களான்னு  கேட்டதும், நான் யாரோன்னு  முழிச்சவங்களுக்குப் பின்புற அறையில் இருந்து  ஒருத்தர் வந்தார்.  முகம் எனக்குத் தெரிஞ்சதே!  சிவகுமார்தானேன்னதும், ஆமாம்னு  சொன்னவரிடம், நான் சாவியின் தோழி. ரொம்ப வருஷத்துக்கு முன்னே  அப்பா இருந்த காலத்தில் இங்கே வந்து தங்கி இருந்தேன்.  சாவி இங்கெ தானே இருக்காள்னு  படபடன்னு  பேச ஆரம்பிச்சதும், உக்காருங்கோ உக்காருங்கோன்னார் சிவகுமார்.

நான் சட்னு வெளியே போய்  சிந்தனையோடு நின்னுருந்த கோபாலிடம், இந்த வீடுதான், வாங்கன்னு உள்ளே கூட்டிவந்து  சிவகுமார் தம்பதிகளுக்கு அறிமுகம் செஞ்சு வச்சேன். சாவி எங்கே, சாவி எங்கேன்னதும்.... இங்கெதான் இருக்காள். இதோ கூப்பிடறேன்னு செல்லைக் கையில் எடுத்தார்.

'உன் ஃப்ரெண்டு வந்துருக்காங்க'ன்னு சொல்லி என் கையில் செல்லைக் கொடுத்தார்.  சாவி நான் துளசி பேசறேன். ஞாபகம் இருக்கா?  ஙேன்னு  முழிக்கறது என் மனக்கண்ணில் தெரியறது.  இதோ அஞ்சு நிமிசத்துலே வரேன்னதும் செல்லை சிவகுமார் கையில் கொடுத்தேன்.  அதுக்குள்ளே  சுடச்சுட காஃபி ரெண்டு டபரா டம்ப்ளர்களில் வந்தாச்சு.

வெளியே போயிருக்காள் போல. அதான்  இதோ வரேன்னு சொல்றாள்ன்னு மனசை சமாதானப்படுத்தும்போது, பக்கத்துத்தெருவில்தான்  வீடு. இதோ வந்துருவாள்னு சொல்லி என்னை இன்னும் நன்றாகவே குழப்பினார் சிவகுமார்.

தொடர்ந்து  'அவா மூணு பேரும் தனி வீடு எடுத்து அங்கே இருக்கா'ன்னதும்  இன்னும் குழப்பம் அதிகமாச்சே தவிரக் குறையலை:-(

அப்போ, பரபரன்னு வீட்டுக்குள் நுழைஞ்சவங்களைத் திகைச்சுப்போய் நான் பார்க்க, என்னை அவுங்க பார்க்கன்னு  ....

இதுவா என் சாவி?  -நான்.

 இவுங்க யாரா இருக்கும்?-சாவி.

முகச்சாயல் லேசா புரிஞ்சது. மனசில் இருக்கும் முகத்துக்கு 42 வயசைக் கூட்டி வரைஞ்சேன். சாவியேதான். எழுந்துபோய் கைபிடிச்சுக் குலுக்கினேன். நீங்க.... நீங்கன்னு  தடுமாறும் சாவியை முதலில் உக்காரச்சொல்லிட்டு,  என்னைத் தெரியலையான்னு கேட்டு பழைய நாட்களின் சம்பவங்கள் சிலதை எடுத்து விட்டதும்.... தெளிஞ்ச முகத்தோடும் புன்முறுவலோடும் 'இருங்க காஃபி கொண்டுவரேன்'னு எழுந்தாள்.

அதெல்லாம் ஆச்சு. எப்படி இருக்கேன்னதுக்கு, நல்லா இருக்கேங்க என்றாள்.  ஐய்ய.... இது என்ன நீங்க வாங்கன்னுக்கிட்டு  அந்நியப்படுத்தறே...  நான் எப்பவும்  உன் துளசிதான்னு  ஹாஸ்டல் வாழ்க்கையை எடுத்துவிட்டு,  அறைத்தோழிகளின் பெயர்களைச் சொன்னதும்.... தடுமாற்றத்தோடு ஒருமைக்கு வந்தாள்.

எனக்கே நல்லாத் தெரியும், என் முகம்  அப்படியே கம்ப்ளீட்டா மாறி இருப்பது. இதுலே கோபாலை அவளால் ஞாபகப்படுத்திக்க முடியலை என்றதில் என்ன ஆச்சரியம்?

நானும் கோபாலும் ரெஜிஸ்ட்டரார் ஆஃபீஸில் கையெழுத்துப் போட்ட நாள்  மாலை, இவள் வேலையில் இருந்து திரும்பட்டும் எனக் காத்திருந்து அவள் வீட்டுக்குப்போய்  நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம்டின்னு இவளிடம்தான் முதல்முதலாச் சொன்னேன்.  திகைச்சுப்போனவள், கை குலுக்கிட்டு,  அரை ஸ்பூன் சக்கரையை என் வாயில் போட்டுட்டு, ப்ரெட் உப்புமா செஞ்சு கொடுத்தாள். அப்பவும் கோபால் திருதிருன்னு முழிச்சுக்கிட்டு இருந்தார்:-))))

இப்போ இதைக் கேட்ட சிவகுமாருக்கு ஒரே வியப்பும் சிரிப்பும்!  எங்களைப் பேசிக்க விட்டுட்டு எல்லோரும் இடத்தைக் காலி செஞ்சுட்டாங்க.

ஹாஸ்டலில் கொஞ்சம் தகராறு ஆகிப்போச்சு அப்போ. அவுங்க பாட்டுக்கு  வாடகையை ஏத்திக்கிட்டே போக , சிலருக்குக் கொடுக்கமுடியாத தொகையா ஆகிப்போச்சு. அதுலே நம்ம சாவியும் ஒன்னு. இதைக் கேள்வி கேட்ட என்னிடம் வார்டனுக்குக் கோபம். நீங்கெல்லாம் அடுத்தமாசமே காலி செய்யணுமுன்னு  சொல்லிட்டு, மூஞ்சைத் தூக்கிக்கிட்டுப் போயிட்டாங்க.

எங்க அறையில் இருந்த கோதையும், சாவியுமா  சுங்குவார் அக்ரஹாரம்,  கெயிட்டித் தியேட்டர் பக்கம் ஒரு வீட்டுலே  ஒரு அறையை வாடகைக்கு எடுத்துக்கிட்டுத் தனியா சமைச்சுச் சாப்பிடுவதா ப்ளான் பண்ணிப் போயிட்டாங்க.

நான் ரெயில்வேஸில் வேலை செய்யும் கமலாச் சேச்சி நடத்தும்  ஹாஸ்டலுக்கு இடம் மாறிக்கிட்டேன். பக்கத்தறை ரமணிக்கு அப்போ ஒரு பாய்ஃப்ரெண்ட் இருந்தார்.  அவர் ஏதோ ஏற்பாடு செய்யறேன்னு  சொல்லி இருந்தாராம். சுப்புலக்ஷ்மிக்கு   வீட்டுலே கல்யாண ஏற்பாடுகள் நடந்துக்கிட்டு இருந்துச்சு.  ரங்கநாயகி  ஏற்கெனவே கமலாச்சேச்சி ஹாஸ்டலுக்கு முதல்வாரம்தான் இடம் மாறி இருந்தாள். அவள் சொல்லித்தான்  அப்படி  ஒன்னு இருந்ததே எனக்கும் தெரிஞ்சது. நான் போன மறுவாரம், பக்கத்தறை  நீலாவும் எங்க ஹாஸ்டலுக்கு வந்துட்டாள்.  சகுந்தலா டீச்சர்,  சொந்தக்காரங்களோடு போய்  இருக்கப்போறேன்னு  கிளம்புனாங்க. பக்கத்துப் பக்கத்து அறைகளில் இருந்த  நாங்க ஏழு பேரும்தான் அப்போ ரொம்பவே ஒருவருக்கொருவர்  நெருக்கமா இருந்தோம்.

"ரமணி  என்னடி ஆனாள்? ஒருசமயம், எக்மோர் ஸ்டேஷனில்  தாம்பரம் போக நின்னுக்கிட்டு இருந்தேன்.  நான் வர்றதுக்குள்ளே ரயில் கிளம்பிருச்சு.  என்னக் கடந்த போன பெட்டியில் ரமணி ஒரு குழந்தையோடு நின்னுக்கிட்டு இருந்ததைப் பார்த்துட்டுக் கையாட்டினேன்.  அடுத்த ஸ்டேஷனில் இறங்குன்னு கத்தினேன்.  அடுத்து வந்த ரயிலில் நான் ஏறி சேத்துப்பட்டில் இறங்கினால், ரமணி அங்கே காத்திருந்தாள்.  குழந்தைக்கு எட்டு மாசம் என்றாள்.  குழந்தை அச்சு அசலா ரமணியைப்போலவே கொள்ளை அழகு!  அடுத்த ரயில் வரும்வரை  பேசிக்கிட்டு இருந்து  ரயில் வந்ததும் ஒன்னாவே கிளம்பினோம். தி.நகரில் வீடு. நல்லா இருக்காள் என்று தெரிஞ்சதும் மனசுக்கு நிம்மதி ஆச்சு."

"ரமணி கல்யாணத்துக்கு  நீ வரலையே....  உன்னைத் தேடினோம். நீ ஊருக்குப் போயிருக்கேன்னு ரங்கநாயகி சொன்னாள். கல்யாணம் திருத்தணியில் வச்சுருந்தாங்கன்னு  நாங்கெல்லாம் கிளம்பி  திருத்தணிக்குப்போய்  மலையேறி கோவிலுக்குப்போய் காத்திருந்தோம். அங்கே கல்யாணம் ஒன்னும் நடக்கலைன்னு சொன்னாங்க.  காத்திருந்து பார்த்துட்டு, சாமி கும்பிட்டுட்டு, கீழே இறங்கி வரும்போது, மாலையும் கழுத்துமா  பொண்ணும் மாப்பிள்ளையும் படி ஏறி வர்றாங்க. கீழே ஒரு  அறை எடுத்து அங்கே கல்யாணம் நடந்துருக்கு.  ரூம் போட்ட விவரம்  எங்களுக்குத் தெரியாம கோவிலுக்கு நேராப் போயிட்டோம்.  எல்லாம்  கடைசி நிமிச ஏற்பாடாம்."

"அதானே அப்போ செல்லா இருந்துச்சு, உடனுக்குடன் தகவல் சொல்லிக்க?  "

"அப்புறம் திரும்பவும் அவுங்ககூடவே மலை ஏறி சாமி தரிசனம் செஞ்சு, கீழே வந்து  ஒரு ஹொட்டலில் கல்யாண விருந்து சாப்பிட்டுட்டு பஸ் ஏறினோம்."

"அப்பா இறந்த சில வருசத்தில் அம்மாவும் போயிட்டா.  சிவகுமார் கல்யாணம் அப்பதான்  நடந்து முடிஞ்ச சமயம். வீட்டுலே ஒரு கல்யாணமாவது பார்த்தாளேன்னுதான்  நினைச்சுக்கிட்டேன்."

"அப்பா இருந்தவரை உன்னைப்பத்தித்தான் அடிக்கடி பேசுவார். சினிமாவுக்கு அவரைக் கூட்டிப்போனது நீதானே? நல்ல பொண்ணுன்னு வாயாறச் சொல்வார்டி."

பழங்கதைகள் பேசி நேரம் ஓடுனதே தெரியலை.  உள்ளே  டிஃபனுக்கு ஏற்பாடு நடக்குது. 'அதெல்லாம் வேணாம். இன்னொருமுறை ஆகட்டும். இப்போ இடம் தெரிஞ்சு போச்சு. இந்தப் பக்கம் வரும்போது கட்டாயம் வரேண்டி'ன்னு கிளம்பவேண்டியதாப் போச்சு.

அதுக்குள்ளே  சாவியின் பெரியக்கா, சின்னக்கா இருவரும் வந்துட்டாங்க. பெரியக்காவுக்கு என்னை நினைவிருக்காம்!  புவனா எப்படி இருக்காள்னதுக்கு  சென்னையில் இருக்காளாம். ரெண்டு குழந்தைகள். பெரியவனுக்குக் கல்யாணம் ஆயாச்சுன்னு பதில்.

ஆமாம்...ஏன் தனி வீட்டில்  இருக்கீங்க? இங்கே என்ன ஆச்சுன்னதுக்குக் கிடைச்ச பதில் தூக்கிவாரிப் போட்டது. சிவகுமாரின் மகன் இப்போ நல்ல வேலையில்.  சாஃப்ட்வேர்தான். ஆனால் கல்யாணத்துக்குப் பொண் கிடைக்கலையாம். கல்யாணம் ஆகாத  முதிர்கன்னிகளா மூணு அத்தைகள் வீட்டோடு   இருக்கும்  பிள்ளைக்குப் பெண் தர  யோசிக்கிறாங்களாம்  பெண்ணைப் பெற்றவர்கள்.  அதனால்  மூணுபேரையும் தனி வீட்டுக்கு அனுப்பிட்டாங்க:-(


திடுக்னு இருந்தாலும் கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தால்.... அதுவும் பெண்ணைப்பெற்றவர்கள் சார்பில் நின்னு .... நியாயம்தான்னு படுது! மாமியார் மாமனார் என்றாலும் பரவாயில்லை. மாமனாருக்கு  மூணு அக்காக்கள் வீட்டோடெயேன்னால்.....  சிரமம்தான்.
வாசல்வரை வந்து  வழி அனுப்பினாள் என் சாவி. ஒரொருத்தர் விதி எப்படி எல்லாம் இருக்கு பாருங்க......

கனத்த மனதோடு  திரும்பும் வழியில் எல்லாம்  எங்கள் சம்பாஷணையில்  சாவி ரெண்டு மூணு முறை  சொன்னது வரி ஒன்னு  திரும்பத் திரும்ப  மனசில் வந்துக்கிட்டே  இருந்துச்சு.

"நீ நல்லா செட்டில் ஆயிட்டே இல்லெடீ"

தொடரும்............:-)

31 comments:

said...

வாழ்க்கைதான் எத்தனை விசித்திரமானது. ஒன்றாக இருந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான வாழ்க்கை. அதே பழைய துளசியாக சாவியை நீங்கள் வீடு தேடி சென்று பார்த்தது நெகிழ்ச்சியான விஷயம்தான். படித்து முடிந்ததும் நானும் கனத்த இதயத்தோடு அடுத்த பதிவிற்கு சென்றேன்.

said...

உங்களது பதிவுகளில் முற்றிலும் மாறுபட்டு இருந்தது. நாங்களும் இழந்த எதையோ பெற்றதைப் போன்ற உணர்வுடன் படித்தோம். கால எல்லைகளைத் தாண்டிய நட்பு, பரிமாற்றம், அன்னியோன்னியம் இவற்றை விவரிக்க வார்த்தைகளே கிடையாது. நெடுநாள் நண்பரைச் சந்தித்து, உரையாடி, பகிர்ந்துகொண்ட வகையில் உண்மையில் நீங்கள் கொடுதது வைத்தவர். வாழ்த்துக்கள்.

said...

தன் சிநேகிதியாவது வாழ்க்கையில் நல்லா செட்டில் ஆகியிருக்கணுமேங்கற ஆதங்கம் தொனிக்குது அந்த ஒற்றை வரியில்.

said...

நானும் ஒரு முறை கோவையில் நண்பன் ஒருவன் வீட்டை நினைவுபடுத்திக் கொண்டு போனேன் , வீடு அதுதான் ஆனால் அவன் வீட்டைவிட்டுக் காணாமல் போய் விட்டான் என்னும் பதில் கிடைத்தது.

said...

மனதைத் தொடும் பதிவு. நம் வாழ்க்கைமுறையே மாறி, நாம் அந்தப் பழைய சூழலில் ஐக்கியமாகவே முடியாது. இந்த வீட்டிலா நாம் இருந்தோம் என்றெல்லாம் தோன்றும். இப்போதுதான் மீண்டும் சந்திப்பீர்கள் என்றிருந்திருக்கிறது.

said...

சாவி வாழ்க!

அந்தக் கடைசி படத்தில், அவங்க தெருவில் வந்து ஒங்களை வழியனுப்பும் ஏக்கமான சிரிப்பு..
அந்தப் படம், அந்த ஒத்தைச் சிரிப்பு = நீங்க சொல்லாத பல கதைகளையும் சேர்த்தே சொல்லுது டீச்சர்

நல்ல ”நட்பின்” அடையாளம் என்ன தெரியுமா?
என்ன நினைச்சிக்குவாங்களோ, ஏது நினைச்சிக்குவாங்களோ? -ன்னு தடுமாறாது..
“உள்ளத்தை அப்படியே தோழனிடம் திறந்து காட்டல்”= "நீ நல்லா செட்டில் ஆயிட்டே இல்லெடீ?"

கூந்தலூர்ச் சாவிக்கு = இன்ப வாழ்வு தரலீன்னாலும், நிம்மதியான வாழ்வாச்சும் தந்து, அருள் புரி முருகா!


said...

ennaa



















endha nalil entha ooril engu kaanbomo

andha nalil indha naalai ennip paarppomo
......................................
pasumai niraindha ninaivukale...







tha

said...

//நானும் கோபாலும் ரெஜிஸ்ட்டரார் ஆஃபீஸில் கையெழுத்துப் போட்ட நாள் மாலை//

துளசி கல்யாண வைபோகமே!
அந்தக் கல்யாண ”மாலை”யின் பதிவு எழுதி இருக்கீங்களா டீச்சர்?

//அவள் வீட்டுக்குப்போய் நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம்டின்னு இவளிடம்தான் முதல்முதலாச் சொன்னேன். திகைச்சுப்போனவள், கை குலுக்கிட்டு, அரை ஸ்பூன் சக்கரையை என் வாயில் போட்டுட்டு, ப்ரெட் உப்புமா செஞ்சு கொடுத்தாள்//

என்னமோ தெரியலை.. கண்களில் ஈரம்..
தோழன், சில நினைவுகள்..
யாரிடமும் சொல்லாமல், என்னிடம் மட்டும் முதலும் முற்றுமாய்ச் சொல்லும் நட்பு
அது தன் மேல் இடியென விழுந்தாலும்,
அவன் இன்பம் என்ற நினைச்ச மாத்திரத்தில்.. சுதாரிச்சி எழுந்து கொண்டு,
அவர்கள் இன்பத்துக்கே வாழ்ந்துவிட முடிவு செஞ்சி, வாய் நிறைய வாழ்த்து..
வாழ்க்கையின் பெரும் முடிவுகளைக், கண நேரத்தில் எப்படித் தான் இந்த மனசு எடுக்கிறதோ? வியப்பிலும் வியப்பு..

//இதுவா என் சாவி? -நான்.

இவுங்க யாரா இருக்கும்?-சாவி//

புணர்ச்சி பழகுதல் வேண்டா - “உணர்ச்சி” தான்
நட்பாம் கிழமை (உரிமை) தரும்!

முக அடையாளம் மாறினாலும்
அக அடையாளம் மாறுவதே இல்லை டீச்சர்..
அது எப்படியோ, ஆத்மார்த்தமான நட்பை, மீண்டும் உங்களிடமே கொண்டு வந்து சேர்த்து விடும்.. ஏனென்றால்.. சில தோழமைகளில் உள்ளது இறைமை!

said...

இந்தப் பதிவைப் பல முறை படிச்சிட்டேன் டீச்சர்..
நீங்க எத்தினி திவ்யதேசம் போய் என்ன? எத்தினி படைவீடு போய் என்ன?
சாவி போன்ற ஆத்மாக்களைச் சந்திக்கும் தலமே= திவ்ய தேசம்!

இப்படி, மனத்தில் வச்சிருந்து, அவங்களுக்கு முன்கூட்டியே சொல்லக்கூட இல்லாமல்,
தேடிப் போய்ப் பார்த்த தரிசனமே= திருமலை திருப்பதி எம்பெருமான் தரிசனம்!

ஒங்களுக்கு இந்தத் தோழியின் பயணத்தை நினைவுபடுத்தி,
ஒங்க கூடவே இருந்து ரெண்டு பேரையும் புகைப்படம் எடுத்துக் குடுத்த கோபால் சார் போலொரு காதலர்... நல்லாருக்கணும், வாழி!

இந்தப் பதிவையும், நாங்கள் சாவி பற்றிச் சொன்ன சொற்களும் print எடுத்து, முடிந்தால் சாவி-க்கு அனுப்பி வைக்கவும்..
மகிழ்வார்கள், உணர்ச்சிகளை உள்ளேயே வைத்து வாழ்பவர்கள்!

பார்க்க, எங்க ஆண்டாள் அத்தை போலவே இருக்காங்க..

Dunno why, I am so happy after a long time..

said...

இப்படி பழைய நட்புக்களைப் போய்ப் பார்த்துப் பேசி விட்டு வரக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!! சூப்பர் !!

said...

//என்னைவிட ஒரு ஆறேழு வயசு கூடுதல். கொஞ்சம் உயரம் குறைவுதான். பெரிய கண்கள். நீளமான சடை.முகத்துலே மட்டும் ஒரு அமைதி. கொஞ்சமா எத்துனாப்போல பற்கள்.//



அன்னிக்கு நீங்க சாவி அவர்களை வர்ணித்தது .

தேடி போய் பார்த்தது மிகவும் திருப்தியும் , சந்தோஷத்தையும் உண்டாக்கி இருக்கும் இல்லையா துளசி .


முன்பே படித்துஎப்பேர்பட்ட மனம் ,ஆழ்ந்த நட்பு என்று நெகிழ்ந்தேன் , அவர்களின் போட்டோவை பார்த்து விட்டு மீண்டும் படித்து மனம் குழைந்தது, பாரமாகி விட்டது துளசி மனம் . அவங்க குறை எதுவும் இல்லாமல் சந்தோஷமா இருக்காங்களா ? சந்தோஷமாக இருக்க கடவுளை வேண்டிக்கறேன்

said...

Omg!!!!!!! Never thought I'll get to see any of the everyday ppl! 😍

said...

எத்தனை வருடங்களுக்குப் பிறகு உங்கள் தோழியைச் சந்தித்து இருக்கிறீர்கள்... நினைக்கும் போதே எங்களுக்கும் மகிழ்ச்சி ஒட்டிக் கொண்டது. நட்புகளை சந்திப்பதில் இருக்கும் ஆனந்தம்.... வாவ்....

said...

எனக்கும் என் ஆறுமுகத்தாயைப் பார்க்க ஆவல்.
விருதுனகர் போய்க் கூவினால் வருவாளோ.
சாய்த்திரி பார்த்த இவரம் கண்ணில் நீர் வரவழைக்கிறது.
இந்தக் கஷ்டத்திலும் முகத்தில் சிரிப்பு அன்பு.
துளசி உங்கள் அன்பு மனமும் தேடலும் என்றும் நன்றாக இருக்கணும்.

துணை அமைந்த இதமும்,அவர் குணம் அமைந்தவிதமும் பெருமாள் கொடுத்தவரம்.
கோபாலுக்கு நன்றி.

said...

தோழியைச் சந்தித்ததில் சந்தோஷம் என்றாலும் கூந்தலூர் போவதாய்ச் சொன்னால் அங்கிருந்து நேரே அருகிலிருக்கும் சற்குணேஸ்வரபுரம் என்னும் கருவிலியையும், அருகே இருக்கும் பரவாக்கரையையும் போய்ப் பார்க்கச் சொல்லி இருப்பேன். கோயில் பூசாரி, பட்டாசாரியார், குருக்களிடம் முன் கூட்டிச் சொன்னால் ஏற்பாடுகள் செய்வார்கள். சொல்லவே இல்லையே உங்கள் திட்டத்தை! போனால் போகட்டும், அடுத்த முறை போனால் சொல்லுங்க. பரவாக்கரைப் பெருமாள் கோயில் தான் எங்க மாமனார் குடும்பம் அறங்காவலர்களாகப் பரம்பரையாக இருந்து வந்த கோயில். அதைச் சமீபத்தில் 2011 ஆம் ஆண்டில் தான் புதிப்பித்துக் கும்பாபிஷேஹம் செய்தோம்.

said...

வாங்க தமிழ் இளங்கோ.

வணக்கம்.நலமா? ரொம்பநாளா உங்களைக் காணோமே!

என் உணர்வையும் மனநெகிழ்ச்சியையும் புரிந்துகொண்டமைக்கு நன்றி.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

பயந்துக்கிட்டேதான் போனேன். மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் திரும்பி வந்தேன்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க அமைதிச்சாரல்.

ஆமாம்ப்பா. சாவிக்கு நல்ல & பெரிய மனசு. அவள் நல்லா இருக்கணும் என்பதுதான் இப்போதைய பிரார்த்தனைகள்.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

சில நட்புகள் மனசுலே அழுத்தமா பதிஞ்சு போயிருது.

உங்கள் நண்பர் கிடைச்சுட்டாரா?

ஒரு சமயம் (1979)பெங்களூர் போனபோது, கோபாலின் நண்பர் ஒருவரை சந்திக்கணுமுன்னு அவர் வீட்டுக்குப் போனோம். அவர் என்னமோ நண்பரைக் கண்ட மகிழ்ச்சிகூட இல்லாமல் ஏனோதானோன்னு பேசினார். பத்தே நிமிசத்தில் கிளம்பிட்டோம். இதென்ன நட்புன்னு கோபாலிடம் கடிந்தேன். இப்ப யோசிச்சுப் பார்த்தால் அப்ப அவர் என்ன கஷ்டத்தில் இருந்தாரோ?

ஒவ்வொரு நட்பும் ஒருவகை!

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

உண்மைதான். அததுக்கு ஒரு நேரம் வரணும் இல்லையா!

said...

வாங்க கே ஆர் எஸ்.

ப்ரிண்ட் அவுட் எடுத்து அனுப்பச்சொன்னது சூப்பர் ஐடியா. செஞ்சுடலாம்:-)

கல்யாணமாலை எல்லாம் எழுதலை. இதுலேதான் முதல்முறையா ஒரு கோடி காமிச்சுருக்கேன்:-)

சுயசரிதம் எழுதிடலாமா? இன்னுமொரு சத்திய சோதனை!!!!!! சத்தியத்துக்கே வந்த சோதனையா இருக்குமே:-)))))

said...

வாங்க சிஜி.

வணக்க்கம். நலமா? ஹைய்யோ.... பார்த்து எவ்ளோ நாளாச்சு!!!!

"எந்த நாளில் எந்த ஊரில் எங்கு காண்போமோ
அந்தநாளில் இந்த நாளை எண்ணிப் பார்ப்போமோ"

அடடா.... என்ன வரிகள்!!! எனக்கு நினைவில்லை பாருங்க!

said...

வாங்க அன்புடன் அருணா.

நலமாப்பா?

எதிர்பாராத சந்திப்பு மனசில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திருச்சுப்பா!

said...

வாங்க சசி கலா.

நானும் பெருமாளை அனுதினமும் வேண்டிக்கிட்டுத்தான் இருக்கேன்ப்பா.

நல்லா இருக்கணும்!

said...

வாங்க பொற்கொடி.

எவ்ரி மனிதர்களில் கேரளாவில்கூட ஒருவரை சந்திக்க முயற்சி செய்தும் இடம் கண்டுபிடிக்க முடியலை. இத்தனைக்கும் அந்த வீட்டில் நாம் குடி இருந்தோம்!

பேசாம அந்த 26 மனிதர்களைச் சந்திக்கும் ப்ராஜெக்ட் ஒன்னு ஆரம்பிக்கவா:-))))

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

வருசங்கள் போனாலும் நினைப்பு பசுமையா இருக்கு பாருங்க. இது மனிதமனத்தின் அற்புதம்தான்!

அனுபவம் மகிழ்ச்சியை அளவிலாமல் அள்ளித்தருதே!

said...

வாங்க வல்லி.

சத்தியமான உண்மை.

கடவுளின் கருணையில் கொஞ்சூண்டு என் மேலும் விழுந்துருக்குதான்.

அவருக்கே நன்றீஸ்.

said...

வாங்க கீதா.

அன்று மதியம் வரை, கூந்தலூர் போவோம் என்று கூடஎனக்குத் தெரியாதுப்பா. இன்ப அதிர்ச்சி கொடுத்துட்டார் கோபால்.

இப்பதான் இடம் தெரிஞ்சு போச்சே! அடுத்தமுறை போகும்போது பரவாக்கரை பெருமாளை தரிசனம் செஞ்சுக்க ஆவல். இன்னும் கும்மோணம் பக்கம் பாக்கி வச்சுட்டுத்தான் வந்துருக்கேன்.

தகவலுக்கு நன்றீஸ்ப்பா.

said...

நான் கூட அங்கு ஒரு முறை தங்கினேன்;நல்லாத்தான் இருக்கு.
நல்ல பகிர்வு

said...

வாங்க குட்டன்.

வணக்கம். முதல் வருகைக்கு நன்றி.

நல்ல வசதியான ஹொட்டேல்தான். சுத்தமாவும் இருக்கு! அடுத்தமுறையும் அங்கேதான் தங்கப்போறோம். அப்ப எப்படி இருக்கப்போகுதோ!

said...

மனதை நெகிழ வைத்த பதிவு சகோதரி! சாவி...தங்கள் தோழியை பல வருடங்களுக்குப்பிறகும் நினைவு வைத்து சந்தித்து இருக்கின்றீர்க்ள் பாருங்கள்...உங்கள் மனதை என்னவென்று சொல்ல...உங்கள் மனம் உயர்ந்த மனம்....சகோதரி...வாழ்த்துகள் பல...