Wednesday, August 05, 2015

சங்கமபுரியில் ஜெகத்ரக்ஷகன்! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 68)

வையம் காத்தவனின் கோவில்  இங்கிருந்து ஒரு பனிரெண்டரை கிமீ தூரம்தான்.  108 திவ்ய தேசங்களில் ஒன்னு.  திருவையாறு ஊருக்குள்ளே  போகாமல் காவிரியை ஒட்டியே கிழக்கால் போய், ஈச்சங்குடி, கணபதி அக்ரஹாரம் தாண்டிப்போகணும்.  காமணியில் கோவிலாண்டை போயாச்சு.

 சிவன் கோவில் மதில் ஒன்னு கண்ணுலே பட்டதுதான்.  தயாநிதீஸ்வரர் கோவில். சிவசிவான்னு கன்னத்துலே போட்டுக்கிட்டேன்.  ( அப்ப, 'அது '  சாமி பேருதான், இல்லே! ஆனா.... சாமி இல்லைன்னு சொல்லிக்கிட்டு இருப்பதெல்லாம்....?  ச்சும்மானாச்சுக்கும் போல! )


நம்ம கோவிலில் ஏதோ விசேஷம் நடக்குது போல. அஞ்சு நிலை ராஜ கோபுரவாசலில் குலையோடுள்ள வாழைகளும், மாவிலைத் தோரணமும்,  அரை அரையா பக்கத்துக்கொன்னா திருஷ்டிப் பூசணிக்காய்த் துண்டுகளுமா இருந்துச்சு.






பலிபீடம். கொடிமரம், பெரிய திருவடி கடந்தால் கண்ணுக்கு நேரா மண்டபத்துக்கப்புறம்  கருவறையில்  பெருமாள்.  ரொம்பவே சிம்பிள்!  கோவிலில் யாரையுமே காணோம், பட்டரையும் சேர்த்து!  பெருமாள் நின்ற கோலத்தில் தேமேன்னு இருக்கார்.




உற்சவர் ஜெகத்ரக்ஷகன்.  தாயார் பத்மாசனவல்லி.


திருமங்கை ஆழ்வார் வந்து தரிசனம் செஞ்சு பத்துப் பாசுரங்கள்  பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்கார்.  அவர் வந்தபோதும் இப்படி ஆளரவம் இன்றி இருந்ததோ என்னவோ! அப்ப இந்த ஊருக்கு சங்கமபுரின்னு பெயராம்.   இப்போ  திருக்கூடலூர் என்ற பெயர்.   பெருமாள் கையில் ப்ரயோகச் சக்கரம் இருக்கு. ஒரு கையில் செங்கோல் வச்சுருக்கார்.    இங்கத்துத் தீர்த்தமும் சக்கரத் தீர்த்தம்தான்.


கிழக்குப் பார்த்து நின்ற கோலத்தில்  தரிசனம் கொடுக்கும் மூலவரை ஸேவித்தபின் பிரகாரம் வலம் வந்தோம்.  குட்டியா  ஒரு சந்நிதியில் உள்ளே சில சிலாரூபங்கள்.  அமர்ந்த நிலையில் முனிவர்கள் னு நினைக்கிறேன். புதுசா பெயிண்ட் அடிச்சுருக்கு.  ராமானுஜர்னு  மங்கிய எழுத்துகளில் பார்த்த நினைவு.

தேவர்கள் எல்லோரும் நந்தக முனிவருடன் சேர்ந்து பெருமாளை தரிசிக்க வந்ததால்  இந்த க்ஷேத்ரம் திருக்கூடலூர் என்ற பெயர் பெற்றதாம்!  ஆதிகாலத்தில் சோழர்கள் கட்டிய இந்தக் கோவில் காவிரி வெள்ளத்தில் புதையுண்டு போயிருக்கு.  அதன்பின்  ராணி மங்கம்மாவின் கனவில் வந்து பெருமாள் சொன்னபின்,  ராணியம்மாவின் கைங்கர்யத்தால்  திருப்பிக் கட்டின கோவிலாம் இது.

கோவில் காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். ஆனால்   பட்டர் ஸ்வாமிகள் எப்போது எழுந்தருளுவார்னு சொல்ல முடியாது.  அவர் இருக்குமிடம் பக்கத்து ஊராம்!



சரி. வையம்காத்த பெருமாளின் கதையைப் பார்க்கலாம்.   ஹிரண்யாக்ஷகன் என்னும் அசுரன், பூமாதேவியைக் கவர்ந்து கொண்டு போய் ஒளிச்சு வச்சுட்டான். பெருமாள் வராஹ அவதாரம் எடுத்து  பூமிக்குள் புகுந்து  பாதாள லோகம் போய்  அசுரனுடன் சண்டை போட்டு, பூமாதேவியை மீட்டு வந்தார். இங்கேதான் பூமிக்குள் புகுந்தார் என்றபடியால்  திருமங்கை ஆழ்வார் ' புகுந்தானூர்' என்று சொல்லி  பாசுரம் பாடி மங்களசாஸனம் செஞ்சு ருக்கார்.  ஆனபடியால் திவ்யதேசக் கோவில்களில் இதுவும் ஒன்னு. புகுந்தவர் வெளியே வந்தது ஸ்ரீமுஷ்ணம் என்ற ஊரிலாம்!


இப்படியாகத்தானே....   வையத்தைக் காத்து மீளக் கொண்டுவந்தபடியால்  வையம்காத்த பெருமாளானார். இவருக்கு அம்பரீக்ஷவரதர்னு இன்னொரு பெயரும் உண்டு.  இப்படித்தான் ஒவ்வொருவருக்கும் எதாவது உதவின்னு செய்வதும், அதுக்காக  ஒரு பெயரை  அவுங்க வைக்கறதுமாத்தான்  பெருமாள் வாழ்க்கை போய்க்கிட்டு இருக்கு:-)

அரசர் அம்பரீக்ஷன் ஏகாதசி விரதம் இருப்பதில் ரொம்பவே கண்டிப்பானவர்.  விரதநாளில் ஊர்வம்பு ஒன்னும் பேசாமல்  பெருமாளின் நாமஜபம் செஞ்சு அதுலேயே மூழ்கிருவார்.  இப்படி ஒரு ஏகாதசி நாளில் கோபக்கார முனிவர் துர்வாசர் மன்னரைக் காணவந்தார். கோபம் பாபமுன்னு  ஒவ்வொரு முறையும் இவர் கோபத்துக்கு ஆளானதும்,  தவப்பலன் கொஞ்சம் குறைஞ்சுரும்.  திரும்பத் தவம் செஞ்சு  கொஞ்சம் பலனை தன் அக்கவுண்டிலே ஏத்திக்குவார். இப்படி குறையறதும்  கூட்டறதுமா  இவருக்கு ஒரு வாழ்க்கை.


கண்ணைமூடி  மெய்மறந்து பெருமாளை தியானிக்கும் அரசன்,  தான் போய் நின்னவுடன் தனக்கு  மரியாதை செஞ்சு  உபசரிக்கலைன்னு  முணுக்னு கோபம் வந்துருச்சு. அரசனை சபிக்கிறார்.  இப்பப் பெருமாளுக்கே கோபம் வந்துருது. பக்தனை இப்படி  இம்சை செய்யலாமா?  கையிலே இருக்கவே இருக்கு சக்ராயுதம். அதுவும் இது ப்ரயோகச் சக்கரம். ரெடி டு டேக் ஆஃப். பெருமாள்  3 2 1 கூடச் சொல்ல வேணாம். நினைச்சாலே போதும் கிளம்பிப் போயிரும்.  துர்வாசரைத் துரத்திக்கிட்டுப் போகுது சக்ராயுதம். எங்கெங்கோ ஓடி ஒளியப்பார்த்தாலும்  நடக்கலை.  கடைசியில் பெருமாளிடமே  வந்து  அவர் காலடியில் விழுந்தார் முனிவர்.
இப்ப என் காலில் விழுந்து என்ன பயன்?  நீர்  அபசாரம் செஞ்சது என் பக்தனை. அவன் காலில் விழுந்து மன்னிப்புக் கேளும் என்றார் பெருமாள்.  அம்பரீக்ஷன் ரொம்ப மரியாதை தெரிஞ்சவன்.  ஐயோ....  முனிவர்  பெரியவர்.  அதெல்லாம்   என் காலில் விழவேணாம்.  அவரை மன்னிக்கிற அளவுக்கு நான் பெரிய ஆளா?  நீர்தான் பெரும் ஆள். நீங்க மன்னிச்சால் போதும். அதேபோல தவறை உணர்ந்த     அனைவரையும் மன்னித்து அருளவேணும் என்று பெருமாளை  வேண்டிக்கவும் செஞ்சான். இப்படி   அம்ரீக்ஷவரதன்  என்ற பெயர்   வந்தது.

பெருமாள் தன் தவறை உணர்ந்தவர்களை  மன்னிப்பதோடு, தன்னை வணங்குபவர்களின் பாபத்தையும் போக்கிடுவார். இதுக்கும் ஒரு கதை உண்டு.
மக்கள், தங்கள் பாபங்களைப் போக்கிக்க, தீர்த்த யாத்திரைக்குப் போய் புண்யநதிகளில் நீராடுவாங்க. இப்ப அவர்கள்  செஞ்ச பாபங்களை எல்லாம் நதிகளிடம் போயிரும்.  இப்படிப் பாபமூட்டைகளைச் சுமக்கும் நதி தேவதைகள்,  கங்கையிலும் புனிதமான காவிரியிடம் வந்து முங்கி  அவுங்க பாவத்தைப் போக்கிக்கிட்டுப் போவாங்க. கடைசியில் பார்த்தால்...  மொத்தப் பாபமும் காவிரி தலையில் விடிஞ்சுருது:-(

துக்கம் தாளாத காவிரி,  நம்ம பெருமாளை  ஸேவிச்சு, தன் மனக்குறையைச் சொன்னதும் 'உன்னிடம் சேர்ந்த  பாபங்கள் எல்லாம் நீங்கட்டும்' என்று  பாபத்தைப் போக்கினாராம்  பெருமாள்.

நான் படைத்த காவிரித் தண்ணீரைத் தரமாட்டோமுன்னு சொல்லும்  அ. வியாதிகள் தலையிலும்  அவுங்க  வம்சத்துக்கும் இந்தப் பாபம் போகட்டுமுன்னு சொல்லி இருப்பார் என்று நம்புவோமாக.  நான்  மட்டும் பெருமாளுக்கு  ஆஃபீஸ் வேலைகளில் உதவியாளரா இருந்தால்   இப்படி  எழுதி அவரிடம் கையெழுத்து  வாங்கி இருப்பேன்.


கொஞ்சம்  கோவிலைப் பற்றி விசாரிக்கலாமுன்னா பட்டரும் இல்லை.  கோவில் நாட்டாமைகளா அவதாரம் எடுத்திருக்கும்  காவல்காரரும்  இல்லை.
வையத்தையே காத்தவன், என்னைக் காப்பாத்திக்க மாட்டேனா என்னும் தோரணையில்  ஜெகத்ரக்ஷகர். அதானே  கையில் சக்கரம் இருக்கும்போது  காவல் என்ன காவல்?

பத்தே நிமிட்டில்  தரிசனம் முடிஞ்சது.  ஒரே ஒரு ப்ரகாரமுள்ள சின்னக்கோவில்தான். அதைக்கூட சரியா சுத்தப்படுத்தமாட்டோமுன்னு   வேண்டுதல் இருக்குபோல:-(


அடுத்த திவ்யதேசத்துக்குப் போறோம்.  அது முடிச்சுதான் பகல் சாப்பாடு . சரியா? இப்ப மணி காலை 11.20தான்.



தொடரும்..........:-)




12 comments:

said...

இதுவரை பார்த்திராத கோயிலுக்கு அழைத்துச்சென்றமைக்கு நன்றி. அடுத்த திவ்யதேசம் செல்ல காத்திருக்கிறோம்.நன்றி.
இம்மாதப்பதிவாக புத்தர் தொடர்பான ஒரு வரலாற்று நாடகத்தைக் காண அழைக்கிறேன்.
http://ponnibuddha.blogspot.com/2015/08/blog-post.html

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

நாடகம் பார்க்க வருவேன். இப்போதைக்கு இந்த வின்டோஸ் 10க்கு மாறியதால் கணிணியில் ஓரே பிரச்சனை. அதை ஒருவிதம் சரி செய்யாவிடில் தலைவலிதான்.

said...

கதைக்குள் கதையாக எத்தனை கதைகள்!
சங்கமபுரி கோவில்வரலாறூ அருமை,
அதை சொன்னவிதம் மிக அருமை.

said...

வாங்க கோமதி அரசு.

பயணம் முடிச்சு ஊருக்கு வந்துட்டீங்களா?

நம்ம கோவில்கள் கதைக் கருவூலங்கள் இல்லையோ!

said...

Romba arumai.Enga amma porantha ooru Thiruvayaru,enga appa pirantha ooru Srimushnam.

said...

ஜெகத் ரக்ஷகனையே அறிமுகப் படுத்த மக்கள்ஸ் தேவைப் படுகிறார்கள் பார்க்க அன்புடன் போர்ட்

said...

தயாநிதி மட்டுமில்ல. எந்தப் பேரு வெச்சாலும் அது சாமிப் பேர்தான். அழகன்னு சொன்னாலும் முருகன் பேருதான். அறிஞன்னு சொன்னாலும் முருகன் பேருதான். :)

சாமி இருந்தாப் போதாதா... பூசாரி எதுக்கு? யாரும் இல்லைன்னா நிம்மதியா ஆண்டவன் கூடப் பேசி மகிழலலாம். நீங்க கொடுத்து வெச்சவங்க.

துர்வாசர் வெரி பேட். முந்தி சகுந்தலைக்குச் சாபம் விட்டாரு. இப்ப அம்பரீசனுக்குச் சாபம் விட்டிருக்காரு. ஏந்தான் இப்படிப் பண்ணாரோ.

said...

ஜெகத்ரக்ஷகன் ஆச்சே அவர். தன்னைக் காப்பாத்திக்க மாட்டரான்னு பட்டர் வீட்டுக்குப் போய்விட்டார் போலும்.

said...

வாங்க சரவணன் ராம்.

ஸ்ரீமுஷ்ணம் இதுவரை போகலை. அடுத்த பயணத்தில் முடியுதான்னு பார்க்கலாம்.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

சாமிக்கு ஆசாமிகள் தேவை. ஆசாமிகளுக்குச் சாமிகள் தேவை. இப்படித்தான் அவரவர் தேவைக்குன்னே உலகம் நடந்துக்கிட்டு இருக்கு பாருங்கள்.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ஜிரா.

துர்வாசர் பெயரிலேயே துர்குணம் வாசம் செய்யுது போல! எப்படியோ ஆரம்பத்துலேஒரு கெட்ட பெயர் வாங்கி இருப்பார். இனி வரும் கெட்ட செயலெல்லாம் அவர் செஞ்சதுன்னு பழி சுமக்க வச்சுட்டாங்க போல. போலீஸ்காரங்க, கண்டுபிடிக்க முடியாத சின்னச்சின்ன கேஸ்களையெல்லாம் அப்பாவி குற்றவாளி ஒருத்தன் தலையிலே போட்டு வச்சு கேஸை முடிப்பது போலத்தான்.

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

ஓ... அப்படியும் இருக்கலாம்! நம்பினோர் கெடுவதில்லை, திருடன் வராதவரை!