Wednesday, August 19, 2015

கருவறைக்குள்ளே நாய் பாய்ஞ்சுருக்கு !... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 72)

உள்ளே விடாத கோபமா ?   வாசலில்  இருக்கலாம்.  உள்ளே நோ என்ட்ரி. ஆனால் பூனைக்கு மட்டும்  எப்படி 'எஸ் என்ட்ரி' என்ற கோபமா என்ன?

காலையில் பொழுது விடிஞ்சதும்  மகாமகக் குள தரிசனமும் கோபுர தரிசனமும் லபிச்சது.  மார்னிங் வாக் போகும் மக்கள் குளத்தைச் சுத்தியே நடந்து போறாங்க. இப்ப  காலை ஆறரைதான்.  ஆரவாரங்கள் ஒன்னும் ஆரம்பிக்கலை.
நாங்களும் தயாராகி கீழே காலை உணவு சாப்பிடப்போனோம். வழக்கம்போல் எனக்கு  இட்லி அண்ட் வடை. காஃபியும் ஆச்சு. இந்த ராயாஸ் க்ராண்டில்  அறை வாடகையில்  ப்ரேக்ஃபாஸ்ட் சேர்க்கலை(யாம்). ஆனால்  வாடகை மலிவுதான் என்பதால் போயிட்டுப் போகுதுன்னு விடலாம். சீனிவாசனும் ரெடியாகிட்டார். கிளம்ப வேண்டியதுதான்.

இன்றைக்கு செண்பகம்! நல்லா இருக்கோ?  எல்லாம் ரங்கநாயகி உபயம்தான்:-)


34 கிமீ தூரத்தை 50 நிமிசத்துலே  கடந்துருக்கோம்.  சாலையில் அவ்வளவா  ட்ராஃபிக் இல்லை. திருக்கண்ணமங்கை வந்து இறங்கும்போதே  கோபுரவாசலில் சின்னக்குட்டிகள் மூணுபேர் கண்ணில் பட்டாங்க. தாயைக் காணோம்.  'பெருமாளே நீரே கதி'ன்னு பூரண சரணாகதி  செஞ்சுட்டுப் போயிருக்கு!

கோபுரவாசலுக்கு நேர் எதிரில் கோவில் திருக்குளம்.  மஹாவிஷ்ணு உலகளக்க ஒரு காலை சத்யலோகம் வரை  தூக்கினார்னு  சொல்றோம் பாருங்க....  அப்ப  அங்கே ஓடிக்கிட்டு இருந்த ஆகாய கங்கையில் இருந்து  ஒரு  கமண்டல தீர்த்தம் மொண்டு  மகாவிஷ்ணுவின் பாதத்தை கழுவினார் ப்ரம்மா.  அப்போ கால் வழி இறங்கி வந்தவள்தான் கங்கை என்பது  உங்களுக்குத் தெரியும்தானே? ஹரித்வார் பயணத்தில் இதைச் சொல்லி இருக்கேன்.  அப்படி கீழே வழிஞ்ச நீரில்  ஒரு துளி இந்தக் குளத்துலே(யும்)  விழுந்ததாம். தர்ஸன புஷ்கரணின்னு பெயர்! கண்ணில் பார்த்தாலே பாவங்கள், சாபங்கள் எல்லாம் போச்! சுத்தமான குளம் என்பதால் என் மகிழ்ச்சி கூடுதல்தான் கேட்டோ.


 சிம்பிளா  அஞ்சுநிலை ராஜகோபுரம் கடந்து உள்ளே போறோம். பலிபீடம், கொடிமரம், பெரிய திருவடியை ஸேவிக்கும்போதே   கண்முன்னே உலாத்தும் பூனைக்குட்டிகள்.  என்ன ப்ரீடுன்னு தெரியலை.  ஆனால் ஒவ்வொன்னும்  பஞ்சத்தில் அடிபட்டாப்ல  இருக்குதுகள்:-(
 வழக்கம்போல் முதலில் பெருமாளைப் பார்க்க வேகமா ஓடறேன். கிழக்கு பார்த்து நின்ற திருக்கோலம். மூலவர் பக்தவத்ஸலப்பெருமாள். இவருக்கு பத்தராவிப்பெருமாள் என்றும்  ஒரு பெயர் இருக்காம். தாயார் அபிஷேகவல்லி.  உற்சவர் பெயர் பெரும் புறக் கடல்!   பாற்கடலை விட்டுட்டு இங்கே வந்ததால் இந்தப் பெயராம்!

எதுக்கு  வந்தாராம்?  லக்ஷ்மிதேவி, இங்கே லக்ஷ்மிவனத்தில் (புராணப்பெயர்)  பெருமாளைக் கல்யாணம் செஞ்சுக்க தவம் இருந்தாளாம். 'தோ....வந்தேன்'னு   புறப்பட்டு வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டார். முஹூர்த்தத்துக்கு  முந்தி இந்த தர்ஸனப்புஷ்கரணி  தீர்த்தத்தால்  அபிஷேகம் செஞ்சதால்  தாயாருக்கு  அபிஷேகவல்லின்னே பெயர்!



ஆமாம்... லக்ஷ்மி  இவர் திருமார்பில் வசிப்பவள்தானே? பின்னே என்னத்துக்கு இப்படி தவம்?

பாற்கடலைக் கடைந்த சமயம் அதிலிருந்து வந்த பதினாறு செல்வங்களில் இருந்த லக்ஷ்மி, வெளியே வந்ததும் கண்திறந்து பார்த்தபோது, முதல்முதலா கண்ணில் பட்டவர் மஹாவிஷ்ணு.(நல்லவேளை... அசுரர்கள் யாரும் கண்ணில் படலை!) இவரையே அடையணுமுன்னு  இங்கே வந்து தவம் செஞ்சு கல்யாணம் கட்டுனவுடன்தான்  குடியிருக்க மார்பு கிடைச்சது. அப்போ இங்கே ஒரே இலந்தைக் காடா இருந்துருக்கு. பத்ரிவனம். தவம் செய்ய உகந்த இடம்.

நம்ம சென்னைக்குப் பக்கம் இருக்கும் திருநின்றவூர்  (திண்ணனூர்) பக்தவத்ஸலரும் இவரும்  ரெட்டைப் பிறவிகளாட்டம்தான்!  இந்தத் தலத்துக்கு  'சப்தாம்ருதக்ஷேத்ரம்' என்ற பெயரும் உண்டு.   அமிர்த க்ஷேத்ரங்கள் ஏழு. அதில் இது ஒன்னு. மற்றவை... நைமிசாரண்யம், பத்ரிநாத், ஸ்ரீரங்கம், திருநின்ற ஊர்,  திருக்கடல்மல்லை, திருக்கண்ணங்குடி.

இதுதவிர ஒரு தலத்துக்குரிய ஏழு அம்சங்கள் ( விமானம், ஆரண்யம், மண்டபம், தீர்த்தம், க்ஷேத்ரம், நதி, நகரம்) இருந்ததால் சப்தபுண்ய க்ஷேத்ரம் என்ற பெயரும் லபிச்சுருக்கு.
ரோமாச முனிவருக்கும், சந்த்ரனுக்கும்  காட்சி கொடுத்துருக்கார் நம்ம பெருமாள். சாபத்தால் பீடிக்கப்பட்ட சந்த்ரன் கவலையோடு  ஆகாயத்தில்  வந்துக்கிட்டு இருந்தப்ப  இங்கத்து புஷ்கரணி கண்ணுலே பட்டதாம். சட்னு  சாபம் விலகியதும் கீழே இறங்கி வந்து பெருமாளை  ஸேவிக்க, அவர் காட்சி கொடுத்துருக்கார். அதான் புஷ்கரணிக்கு  தர்ஸன புஷ்கரணின்னு பெயர்.

ரோமாச முனிவர் , வனவாச காலத்தில்  இந்தப்பக்கம் வந்திருந்த பாண்டவர்களுக்கு  நளன் கதையைச் சொன்னாராம். சனியிடம் அகப்பட்டால் என்னெல்லாம் ஆகுமுன்னு விளக்கி இருக்கார்.  அதைப் பார்த்த  பெருமாள்  ரோமாச முனிவருக்கு காட்சி கொடுத்தார் என்று  சொல்றாங்க.

எப்பேர்ப்பட்ட பாபாத்மாக்களும் ஒரு  இரவு இந்த தலத்தில் தங்கினால், மேலே போனதும் முக்தி கேரண்டீன்னு அடிச்சுச் சொல்றாங்க. கும்மோணம் வெறும் 34 கிமீதானே. அருள்வீச்சு அதுவரை வராதா என்னன்னு எனக்கொரு சமாதானம்:-)


கருவறை விமானம் கொள்ளை அழகு.  பளிச்சுன்னுதான் இருக்கு.  கும்பாபிஷேகம் நடந்து நாலு வருசம்தான்  ஆச்சு.  கோவிலும் ஓரளவு சுத்தமாத்தான் இருக்கு.  கல்பாவிய தரையில்  முளைக்கும் புற்களையும்  விமானங்களிலும் கோபுரத்திலும் முளைச்சு நிக்கும் செடிகளையும்  உடனே  எடுத்தெறிஞ்சால்  இன்னும் கொஞ்சநாளைக்கு  ஆபத்தில்லை. உளவாரப்படை ஒன்னு இனிமேல் கையில் வச்சுக்கணும் போல.



நல்ல பெரிய கோவில்தான். ரெண்டு நாமங்களும் கண்ணில் பட்டன!  க்ரேட்.  சண்டை இல்லாமல் இருக்கட்டும்!  ததாஸ்து!

ஸ்ரீஹயக்ரீவர் சந்நிதியும் ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகன் சந்நிதியும் இருக்கு.  ஆனால்  பூட்டிக் கிடந்ததால் உள்ளே போகமுடியலை.

தாயார் சந்நிதியில் ஒரு தேன்கூடு( மாதிரி ஒன்னு) இருக்கு.  கல்யாணம் பார்க்க வந்த தேவர்கள் தேனீ உருவத்தில்  அங்கேயே தங்கிட்டாங்களாம். அப்போ தேவலோகம் காலிதானா?  என்னமோ போங்க.... எல்லாத்துக்கும் ஒரு கதை, ஒரு விளக்கம்!

தாயார் சந்நிதியின் வெளிச்சுவர்களின் கதியை நீங்களே பாருங்க.....   கோவிலில் கிறுக்கி வைக்கிறோமேன்னு  யாருக்குமே ஒரு குற்ற உணர்ச்சி இருக்காதா? என்ன சனங்களோ?

ஆண்டாள் சந்நிதி ஒரு தனிக்கோவில் போல பெருசு. நீளமான மண்டபம்.  கண்ணன் வந்து போன கால்சுவடு!    ஆமாம்... அது ஏன் கோவில் வாகனங்களை உடைஞ்சநிலையில் ஆண்டாள் சந்நிதியிலேயே பல கோவில்களிலும் போட்டு வைக்கிறாங்க?  வெளியே போனா  காலை உடைச்சுருவேன்னு  சிம்பாலிக்காச் சொல்றாங்களோ?
வழக்கம்போல் தூமணிமாடம் பாடிக் கும்பிட்டேன். அவளுக்கே போதும்போதுமுன்னு இருக்கும். அடுத்த கோவிலில் வேறெதுனா பாடலாம். ஒருத்தி மகனாய் பிறந்து ஓக்கேவான்னு கேக்கணும்.
கோவில் கிணறு,  வழக்கம்போல் உள்ளே ப்ளாஸ்டிக் பாட்டில்களுடன்.  அதென்ன நம்ம மக்களுக்கு அழுக்கு போடுவதில் இவ்ளோ மகிழ்ச்சி?  கேட்டால்   கம்பி வலை ஏன் போடலைன்னு நம்மையே மிரட்டுவாங்களா இருக்கும்:-(  போதாக்குறைக்கு  செடி வேற வளர்ந்து வருது.

பெரிய திருவடிக்குத் தனியா ஒரு சந்நிதி.  பெரிய சைஸில் இருக்கார்.
கோவில் காலை  எட்டு  முதல் பனிரெண்டுமணி  வரையும்  மாலை   அஞ்சு முதல் எட்டரை வரையும் திறந்துருக்கு.  தினம் ஆறுகால பூஜை.
நம்ம திருமங்கை ஆழ்வார் 14 பாசுரங்கள் பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்கார். இவரே திருநின்றவூர் பக்தவத்ஸலனுக்கு ரெண்டே ரெண்டு பாட்டு.  பாடு பாடுன்னு  தொல்லைப்படுத்தினால் இப்படித்தான் ஆகுமோ!

 108 திவ்யதேசக் கோவில்களில்  இதுவும் ஒன்று.

திருநின்றவூர் பக்தவத்ஸலனை  இங்கே பார்க்கலாம்.


காவிரி  ரெண்டாய் பிரிஞ்சு  கோவிலைச் சுற்றி வந்து மீண்டும் சேர்ந்துக்கறாளாம்.  இப்ப அப்படியொன்னும் தெரியலை.  தண்ணி இல்லாம வறட்சிதான் காவிரிக்கும்.


நாதமுனி ஸ்வாமிகளின்  சீடரான திருக்கண்ணமங்கை ஆண்டான், பிறந்த இடம் இது. தினமும்  கோவிலைச் சுத்தம் செஞ்சு, துளசி மாலை கட்டி பெருமாளுக்குப் போட்டு கைங்கர்யம் செஞ்சுக்கிட்டு இருந்துருக்கார்.  வேதபாராயணம் செய்வாராம். ஒருநாள் பாராயணம் செஞ்சு கொண்டிருக்கும் போதே சட்னு நாயா  ரூபம் எடுத்துக் கருவறைக்குள்ளே பாய்ஞ்சு போனவர், இறைவனோடு கலந்துட்டார்னு  கோவில் வரலாறு சொல்லுது. இங்கேயே வெளிப்ரகாரத்தில் இவருக்கொரு திருவரசு (ப்ருந்தாவனம்) உண்டு.


கோபுரவாசலுக்கு முன்னாடி குளத்தின்  கட்டைச்சுவரையொட்டி நம்ம ஆஞ்சிக்கும் ஒரு சந்நிதி  உண்டு. அவருக்கு முன்னால்தான் நாக்குட்டிகள். நான் போய் ஆஞ்சியைக் கும்பிடும்போது, செல்லங்கள் வந்து காலை மெதுவா மோந்து பார்த்து நக்கின.  பாவம்....  பொறந்தாலும் நல்ல நாட்டில் பொறக்கணும்.  என்ன சாபமோ.....   ப்ச்...



சட்னுதான்  தரிசனம் முடிச்சுருக்கோம்.  அரைமணிதான் ஆகி இருக்கு.  ஒன்பதே முக்கால்தான்.  கிளம்பிப்போய் இன்னும் ஒரு கோவிலைப் பார்க்கலாமா?

  தொடரும்.............:-)



24 comments:

said...

ஒவ்வொரு இடத்தையும் பற்றி கேட்டுக் கொண்டே பின் தொடர்கிறோம் அம்மா...

said...

Dihvyamana dharishanam

said...

விடியற்காலை மகாமகக்குளக்கரைக் காட்சி அருமை. தங்களின் பதிவால் திருக்கண்ணமங்கை சென்றோம். நன்றி.

said...

துளசிதளம்: கருவறைக்குள்ளே நாய் பாய்ஞ்சுருக்கு !... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 72) - திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாள் கோவில் - அருமையான, படங்களுடன் கூடிய பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி அம்மா Tulsi Gopal

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

தொடர்வது மகிழ்ச்சி!

said...

வாங்க செந்தில் குமார்.

நலம் உண்டாகட்டும்!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

ரசித்தமைக்கு நன்றி.

said...

வாங்க ரத்னவேல்.

பகிர்வுக்கு நன்றி.

said...

குளம் என்ன விஸ்தாரம் பார்த்தீர்களா துளசி. இதே போல பஞ்சசார க்ஷேத்ரமும் நன்றாக

இருக்கும். குளத்தில் காவிரித்தாயும் இருப்பாள்.

said...

அட படங்களும் தகவலும் அருமை...புகைப்படங்கள் மிகவும் அழகு...அதுவும் அந்த நாலுகால்கள்...பூச்சைகளும், பட்டிக்குட்டிகளும் மனதைக் கொள்ளை கொண்டுவிட்டன...அந்தக் கிணறு மனதை வேதனித்தது...

said...

நன்றி அம்மா

said...

படங்களுடன் கூடிய விரிவான தகவலுக்கு நன்றி அம்மா!

said...

பகீரதனால் கொண்டு வரப்பட்டத்து கங்கை. சிவன் முடியிலிருந்து வழிவது கங்கை என்றெல்லாம் கேட்டிருக்கிறேன் உங்கள் கதை புதிசு.

said...

நல்லாருக்கு. தொடர்கிறேன். உழவாரப்படை, கோயிலின் நிலையை உங்களுக்கு உடனே சொல்லவேண்டும் என்பதால் உளவாரப்படை என்று சொல்லிவிட்டீர்களோ.

said...

nice pictures!!

said...

சிறப்பான படங்கள், நிறைய தகவல்கள் என நல்லதொரு பகிர்வு.

said...

வாங்க வல்லி.

//இதே போல பஞ்சசார க்ஷேத்ரமும்...//

பஞ்சக்ருஷ்ண க்ஷேத்ரங்கள்னு சொல்லவந்தீங்கன்னு நினைக்கிறேன். ஆனாலும் நீங்க சொன்ன பஞ்சசார எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு! அவனே அப்படித்தான்!

பஞ்சசார = சக்கரை (மலையாளம்)

said...

வாங்க துளசிதரன்.

கோவில்களில் இப்படி அழுக்கு போடுவது மஹாபாபம் என்று ஏன் மக்களுக்குப் புரியலை:-(

எப்பவும் எனக்குக் கோவில் பூச்சைகள் கண்ணில் படும். இந்தமுறை கோவில் பட்டீஸ்!

said...

@ செந்தில்குமார்.

நல்லது.

said...

வாங்க செந்தில் குமார்.

தொடர் வருகைக்கு நன்றிகள்.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

இந்த கங்கைக் கதையை நம்ம ஹரித்வார் பயணத்தில் எழுதி இருக்கேன். கங்கைக்குக் கதைகள் பல! நேரம் கிடைத்தால் பாருங்க.

http://thulasidhalam.blogspot.co.nz/2011/02/blog-post_11.html

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

ஆழமா உழுது எடுத்தெறியணும் என்பதால் உழவாரப்படைன்னாலும் உளவு பார்த்துச்சொன்னதால் உளவாரப்படை ஆக்கிட்டேன் போல!
ச்சும்மா செதுக்குனாப் போதாது.

நன்றீஸ்.

said...

வாங்க சசி கலா.

நன்றீஸ்ப்பா.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றீஸ்.