Monday, August 17, 2015

தங்கக்கடற்கரை டயரிக் குறிப்பு (கோல்ட்கோஸ்ட் பயணம். மூன்றாம் நாள் )

மனசுக்குள் விழிப்பு வந்தவுடன்  கண்ணைத் திறந்து  ஜன்னலில் பார்த்தால்  சூரியன் வரப்போகும் அறிகுறி! எழுந்துபோய் பால்கனிக் கதவைத் திறந்து  பார்த்தேன். ஏற்கெனவே வந்தவன் இப்பத்தான் தலையை வெளியே காமிக்கிறான். மழை இல்லை.  ஒன்னுரெண்டு  வண்டிகளைத் தவிர சாலையில் போக்குவரத்துகூட இல்லை. கீழே நம்ம அக்வேரியஸின் அவுட்டோர் நீச்சல்குளம் அமைதியா இருக்கு!  அக்கம்பக்கம் இருக்கும் கட்டடங்களில் கூட அனக்கம் இல்லை!
காஃபியை முடிச்சுக்கிட்டு நடக்கப் போனோம்.  நேத்துப் பார்த்த  காதல் மடல் மழையிலும் அப்படியே இருக்கு.  ஆழமா உழுதுருக்கார் போல.  நம் அறையில் இருந்து தெரியும் இடம் இதுதான்னு புரிஞ்சதால்  துள்சின்னு பெயர் 'பொரி'ச்சேன்:-)இன்னொரு பக்கம் கோபால்னு இவர் !  நல்ல பெரிய போர்டுலேயே எறும்புத்தலை அளவு எழுத்துதான் இவருக்கு. இப்பக் கேக்கணுமா?  எங்கே 'பொரி'ச்சார்னு தேடவேண்டியதாப்போச்சு:-))))
ஈரக்கரை ஓரமா, அலை கொண்டுவந்து போட்ட சின்னக்கற்கள் டிசைன் போட்டு வச்சுருக்கு.  அலைகள் வந்து  முடியும் தரையில் நடந்தால் கால் அவ்வளவா வலிக்காது என்றாலும் குனிஞ்ச தலை நிமிராமல் அலர்ட்டா இருக்கணும். சின்ன அலைன்னு நினைக்கும்போது எதிர்பாராம வீச்சு அதிகமாகி நம்மைக் கடந்து போகும் சில.
அப்பதான் அலாடீனையும் ஜாஸ்மினையும் பார்த்தேன். .(பெயர் அப்புறம் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டதுதான்)அவுங்க அம்மாவும் பின்னால் வந்துக்கிட்டு இருந்தாங்க. ஏழு வயசு. இப்ப ஒரு  மூணு வருசமாத்தான் இப்படி. அலாடீனுக்குப் பக்கவாத நோய். இடுப்புக்குக் கீழே  வாதம்:-( நடக்க முடியலைன்னு இப்படி ஒரு ஏற்பாடு.  அந்தவரை அவனை வேணாமுன்னு சொல்லிடாமல்  இந்த ஏற்பாடு செஞ்ச  மருத்துவரையும், எல்லாத்துக்கும் மேலே அன்பா வச்சு ஆதரிக்கும் அம்மாவையும் மனம் நிறைய வாழ்த்தணும்.  கடவுள் ஆசீர்வதிக்கட்டுமுன்னு சொன்னதும், அம்மா முகத்தில் மகிழ்ச்சியும், கண்களில் கொஞ்சம் ஈரமும் தென்பட்டதா என் தோணல்.நடக்கும்போது அலாடீனின் பின்பக்கக் கால்கள் விலுக் விலுக்ன்னு துடிக்குது. எனக்குக் கண்ணுலே குபுக். இப்ப மணி ஏழரை.  இவுங்க எட்டுமணிக்குள் நடையை முடிச்சுக்கணும். இல்லேன்னா அபராதம் கட்டணும்:-(  எட்டுக்குப் பிறகு மனுசனுக்குத்தான்  இந்த உலகம் சொந்தமாம்!  ப்ச்....
 கடமையே கண்ணாக சர்ஃப் போர்டுகளுடன்  போய்க்கிட்டு இருந்தாங்க மக்கள்ஸ்.
மழை இல்லை. மூடுபனியும்  இல்லை. எல்லாமே பளிச் பளிச்! குளிரும் இல்லை.  இதமான கால நிலை.

எது எப்படி இருந்தாலும்  காலையில் எட்டுமணிக்கு முன்னால் கடற்கரை முழுசையும் சல்லடை போட்டுச் சலிச்சு, இல்லாத  குப்பைகளை(!!??)வாரி எடுத்துக்கிட்டுப் போயிருது  வண்டி. இப்படி நம்ம மெரினாவுக்கு ஏற்பாடு பண்ணக்கூடாதா?

 ச்சீ மனமே அடங்கு. அதென்ன  வெண்மணலைப் பார்த்ததும்  மெரீனா மெரீனான்னு  கூச்சல்?  கிறைஸ்ட்சர்ச் பீச்சுக்குப் போகும்போது சுத்தமா மெரீனாவை  நினைக்கறதே இல்லை.  இங்கே மட்டும் என்ன?  முடியலையேப்பா....  நீண்ட, பரந்த வெண்பரப்பைப் பார்த்ததும்  நினைவு எங்கியோ போயிருதே........


காய்ஞ்ச சுத்தமான மணலைப் பார்த்தால்  உக்காரத்தோணுதுல்லெ!  கொஞ்சநேரம் தியானம்.  கோலம் போட்டுட்டு, காயத்ரி சொல்ல ஆரம்பிச்சோம். போறவர்றவங்கெல்லாம் 'இண்டியன் யோகீஸ்'ன்னு நினைச்சுருப்பாங்க:-))))
லைஃப் கார்டுகள் வேலைக்கு வந்துட்டாங்க.


கரை ஒதுங்கிய விதவிதமான கிளிஞ்சல்களைப் பார்த்தபடி சர்ஃபர்ஸ் பேரடைஸ் மெயின் வாசலுக்கு வந்துருந்தோம்.  அப்படியே  ஷாப்பிங் சென்டருக்குள் ஒரு நடை. கடைகள் எல்லாம் இன்னும் திறக்கலை.  மூடுன மாலில் வேடிக்கை பார்ப்பதும் நல்லாத்தான் இருக்கு.
கண்ணாடிச்சுவர்களுக்குள்  கப்சுப்னு இருக்காங்க நங்கைகளும் குழந்தைகளும்.

நக அலங்காரம்!

ஷாப்பிங் சென்டருக்கு வெளிப்புறமா சர்ஃப் போர்ட், சைக்கிள் வாடகைக்கு விடும் கடை மட்டுமே திறந்துருக்கு.  ஆர்வம் இருக்கறவங்க ஊரில் இருந்து சுமந்துக்கிட்டு வரவேணாம்.

மறுபடியும்  பீச் ரோடு நடைபாதைக்கு வந்தோம்.  இங்கெல்லாம் நடை பாதை/நடை மேடை  என்பதெல்லாம் நடக்க மட்டுமே. நம்ம ஊருலே....  ப்ச்...வேணாம். விடுங்க...

மைக் ஃபேன்னிங் (Mick Fanning) போன்ற புகழ்பெற்ற சர்ஃபர்ஸ்களைப் போற்றி சர்ஃப்போர்டுகளை வச்சு அதுலே புகழ்மாலை சூட்டி இருக்காங்க. இவருக்கு வெள்ளை மின்னலென்ற (White Lightning) செல்லப்பெயர் இருக்கு. உலகப் போட்டிகளில்  மூணு முறை  அஸ்ட்ராலியாவுக்குப் புகழ் சேர்த்தவர்.
சுற்றுலாப்பயணி  ஒருவர்,  செல்ஃபோனில் கமென்ட்ரி கொடுத்துக்கிட்டே  இடங்களை ஷூட் பண்ணிக்கிட்டு இருந்தார். அவருக்கு ஒரு  வேலை  கொடுத்தோம்:-)


இருபத்தியொன்னாவது  காமன்வெல்த் கேம்ஸ்  அஸ்ட்ராலியா, கோல்ட்கோஸ்டில் நடக்கப்போகுது.  இப்ப இருந்தே விளம்பரமும் ஏற்பாடுகளும் ஆரம்பிச்சாச்சு ! கவுண்ட் டௌன் ஸ்டார்ட்டட். 2 வருசமும்  254  நாட்களும், 10 மணியும் 6 நிமிசங்களும் இருக்காம் அன்று!

மணி ஒன்பதாகுது. வீடு திரும்பலாமுன்னு  மீண்டும் மணற்புறத்துக்கு  இறங்கினோம். வரும்வழியில்  கரை ஒதுங்கிக் கிடந்த மீனை பறவைகள் கூட சட்டை பண்ணலை.  பார்த்தால் பஃப்பர் ஃபிஷ் போல இருக்கு.

அப்ப ஒரு சிறுவன்  ஓடிவந்து பார்த்துட்டு,  என்னிடம் பேசிக்கிட்டே அதுக்குப் புதைகுழி தோண்ட ஆரம்பிச்சான். நல்ல மனம். பெயர் ஜாங்.  பள்ளிக்கூடம், வகுப்பு விவரம் கேட்டதுக்கு,  'ஐ ஆம் ஃப்ரம் ச்சைனா. லிட்டில் இங்லிஷ் ' என்றான்.
தோண்டும்போதே அலை வந்து பள்ளத்தை நிரப்பிட்டு மீனையும் கொஞ்சதூரம் தூக்கிட்டுப்போச்சு.  ஷூஸ் நனையாமல் இருக்கத் தப்பியோடிய ஜாங் போயே போயிட்டான்:-)

அடுத்த அலையில்  மீன் திரும்பி வந்து சவ அடக்கத்துக்குக் காத்துக் கிடந்தது.  "உனக்கு ஜல சமாதிதான் போ!"
வீட்டுக்கு வந்ததும் துள்சி தெரியுதான்னு பார்த்தேன்.  இருக்காள்:-)

சீத்தாப்பழம்(!) நாம் ஊர் திரும்புமுன் பழுக்கறமாதிரி தெரியலை.  கொஞ்சம் நியூஸ் பேப்பரில் சுத்தி வச்சுருக்கேன்.  பார்க்கலாம்......
குளிச்சு முடிச்சு நிதானமா க்ராய்ஸன்ட், பழங்களுடன் ப்ரேக்ஃபாஸ்ட் ஆச்சு.

 குப்பைகளைப்போட ஒவ்வொரு தளத்திலும் ரெஃப்யூஸ் என்ற பெயருடன் ஒரு கதவு. குட்டியா  ஒரு அறை. மறுசுழற்சிக்குப்போக வேண்டிய பாட்டில்கள்,  செய்தித்தாள்களுக்கு  மூடி போட்ட ரெண்டு  ப்ளாஸ்டிக் தொட்டிகள். மற்ற கழிவுகளுக்கு  சுவரில் இருக்கும்  ச்சூட். மூடியைத் திறந்து  தள்ளிவிட்டால் போய்  தரை தளத்தில் உள்ள பெரிய தொட்டியில் விழுந்துரும்.

நம்மூர் அடுக்கு மாடிகளில் இப்படி ஒரு வசதி இருந்தால்  தெருக்கள் சுத்தமாகிரும்.  நாலு வீட்டுக்குப் போதுமான தொட்டிகளைத்  ஒரு முழுத்தெருவுக்கும் போதுமுன்னு நினைச்சு வச்சுருக்காங்க.  காலி செஞ்ச பத்தே நிமிசத்தில் அது நிறைஞ்சு வழிஞ்சு, தெருநாய்களும், குப்பையில் இருந்து பொருள்சேர்க்கும் மனிதர்களும் இழுத்து வெளியே போட்டு அது ஊர்முழுக்கப் பறந்துக்கிட்டு இருக்கு நம் சிங்காரச் சென்னையில்:-( குப்பை டிஸ்போஸலில் கவனம் செலுத்தினாலே  ஊர் முக்காவாசி சுத்தமாகிரும். 


இன்றைக்கு நிதானமாத்தான் வெளியே கிளம்பறோம்.  மணி பதினொன்னாகப் போகுது. ஊர்சுற்றல் மட்டும்தான்.  தங்கக்கடற்கரையை ஒட்டியே போகும் கடற்கரைச் சாலையில் பயணம்.  அங்கங்கே  பீச் ஆக்ஸெஸ் இருக்கும் இடங்களில் போய் நின்னு கடலைப் பார்ப்பதும்,  ப்ராட்பீச், சர்ஃபர்ஸ் பாரடைஸ் கட்டிடங்கள்  தெரியுதா  , முக்கியமா நம்ம  அக்வேரியஸ் கண்ணில் படுதான்னு பார்ப்பதிலும் ஒரு (அல்ப) சந்தோஷம்.

Miami Beach , Mermaid Beach, Palm Beach, Burleigh Head   என்ற பெயர்களிலெல்லாம்  பீச்சுகள்.  வேடிக்கை பார்த்துக்கிட்டே குரும்பின் பீச் போய்ச் சேர்ந்தோம்.  உள்ளே போகுமுன்பே  யானை  இருக்குன்னு ஒருபோர்டு.  ஆஹா  விடப்டாது! இந்த பீச், கோல்ட்கோஸ்ட் பீச்சுகளிலேயே மிகவும் சுத்தமானதுன்னு  அவார்டு வாங்கி இருக்கு. யானையைத் தேடக் கண்ணாடி வேணுமா என்ன?  எலஃபெண்ட் ராக் லுக் அவுட்!
யானையைத் தொட்டுக்கிட்டே ஒரு ரெஸ்ட்டாரண்ட். படிகளேறிப் போறோம் அம்பாரியில் போய் உக்கார! ரெஸ்ட்டாரண்டுக்கும் இந்தப் படிகளில் ஏறித்தான் போகணும்.   அங்கிருந்து ஒரு பத்து எட்டு வச்சால் யானை உடம்பையொட்டியே போகும் படிகள்.  மொத்தம் ஒரு அம்பது படிகள் இருக்கும்.மெள்ள ஏறிப்போனேன். நமக்குத்தான் படியைக் கண்டதும் பனிரெண்டு நாமங்கள் வந்துருமே!  கேசவா நாராயணா  கோவிந்தா, மாதவா, மதுசூதனான்னு  மனசுக்குள்ளே சொல்லிக்கிட்டே ஏறினால் களைப்புத் தெரியாது.

மேலே பத்தடிக்குப் பத்தடின்னு ஒரு சதுர இடம். அம்பாரி! சுத்திவர இடுப்பளவுக்கு  கம்பித் தடுப்பு.  எதுவுமே கண்பார்வை போகும் தூரத்தை மறைக்காது. அதோ வளைவு திரும்பிப்போகும் கடலுக்கு அந்தாண்டை  இருக்கு  நாம் கிளம்பின இடம்!  மூணுபக்கம் கடலும் ஒரு பக்கம் குரும்பின்  ஊருமா , சூப்பர் வியூ!
பிரியா வரம்வேண்டும் என  ஒரு ஜோடி  பூட்டிட்டுப்போயிருக்கு!

ரெஸ்ட்டாரண்டு கொடிக்கம்பத்தில்  ஆஸிக்கொடி. அரைக்கம்பத்தில் இருந்ததைக் கண்டு மனசுக்கு திக் ன்னு ஆச்சு.  யார் போயிட்டாங்க?  யாரும் இல்லை.  அடிக்கும் காற்றில் முடிச்சு லூஸாகி இருக்கு!

இறங்கி வரும் போது படிக்கட்டில் நமக்கெதிரா ஒரு அம்மாவும்,  ஒரு மூணு /நாலு வயசுள்ள குழந்தையும். செல்லம் நின்னு நிதானமா  கம்பியைப் பிடிச்சுக்கிட்டுப் படியேறி வந்தான்.  குட் பாய்!  ஒரு வளைவில் நான் ஓரங்கட்டி நின்னு ரசித்தேன்.

ரெஸ்ட்டாரண்டில் நல்லகூட்டம். மணி இப்போ பதினொன்னே முக்கால்தான். நமக்கு சாப்பாட்டுக்கு இன்னும் நேரம் இருக்கு. நல்லவேளை இப்பவே யானையைப் பார்த்தேன்.  இன்னும் சில வருசம் கழிச்சு வந்துருந்தால் கஷ்டம்.  யானையேற இங்கே  வீல்சேர் ஆக்ஸெஸ் இல்லை:-(

உண்மையைச் சொன்னால் இந்தப் பாறைக்கும் யானைக்கும் ஸ்நானப்ராப்திகூட கிடையாது.  பெருசா இருக்குன்னு இந்தப் பெயர் வச்சுருக்காங்க போல.

குரும்பின் வனவிலங்குகள் பூங்காவைக் கடந்து போறோம்.  உள்ளே போகலை. போனமுறை அஸ்ட்ராலியா வனவிலங்குகள் பூங்கா ( நம்ம  ஸ்டீவ் இர்வின் அமைத்தது. அங்கே பயில்வானுக்குப் பொரிகூட ஊட்டியாச்! ) பார்த்தோமே அதே போலத்தான்.  மகள் கூட வந்துருந்தால் ஒன்னு விடமாட்டாள்.

கூலங்கட்டாகிட்டே வந்துருக்கோம்.  Coolangatta தான் கோல்ட் கோஸ்ட்டுக்கான  விமான நிலையம்  இருக்குமிடம். பன்னாட்டு விமான நிலையம்தான்.  எங்கூரில் இருந்து  டைரக்ட்டா  இங்கே வந்தும் இறங்கிக்கலாம்.  ஆனால் குறைந்த  அளவிலான  விமானங்கள்தான். ப்ரிஸ்பேன் என்றால்  நமக்குச் சாய்ஸ் இருக்கு.

அப்புறம்போன இடம் Tweed Head.  இதோடு  க்வீன்ஸ்லேண்ட் மாநில எல்லை முடிஞ்சு நியூ சௌத்வேல்ஸ் ஆரம்பமாகுது. எல்லை தொட்டோம் என்ற திருப்தியுடன் திரும்பறோம். வெவ்வேற மாநிலம். ஆனால்...ஒரே மொழி, ஒரே நாடு என்பதால் எல்லைப் பிரச்சனை ஒன்னும் இல்லை. ஒரு கால் இங்கேயும் மறுகால் அங்கேயுமாக்கூட நிக்கலாம்.  கேட்க மனுஷர் வேணாமா?

வந்தவழியே திரும்பி பாதி தூரம் வந்ததும்  கடற்கரையையொட்டிய சாலையில் போகாமல் ஊருக்குள் போகும் சாலையில் வண்டியைத் திருப்பினோம்.  ஏகப்பட்ட அடுக்குமாடிகள் குடி இருப்பு.  அவ்வளவாச் சுற்றுலாப்பயணிகள் வராத  ஊர்கள் என்பதால் எல்லோரும் நிம்மதியாக  இருக்காங்க. சின்னச்சின்ன ஷாப்பிங் சென்டர்கள், உள்ளூர் மக்கள் தேவைக்கான  கடைகள் இப்படி இருக்கு. ஓய்வு வாழ்க்கைக்கு வசதியான இடம்.  ஆனால் பீச்சுக்கு ஒரு அஞ்சு நிமிசமாவது  நடக்கணும்.  கடற்கரையில் கட்டடங்கள் ஏதுமில்லை.

நமக்கு 'ஒத்திகை' பார்க்க வீடு வாடகைக்கு (3 மாசங்கள்) கிடைக்குமான்னு விசாரிச்சால் 6 மாசம் என்றால்  சுலபமாக் கிடைக்கும்னு ரியல் எஸ்டேட் ஏஜெண்டு சொன்னார்.  கொஞ்சம் முயற்சி செஞ்சால்  கிடைக்கலாமாம்.  நமக்கு உடனே வேணாம்.  கிடைக்குமான்னு தெரிஞ்சுக்கத்தான் கேட்டு வச்சுருக்கோம்.

போக வரன்னு  ஒரு  64 கிமீ ஆகி இருக்கு. பஸிஃபிக் ஃபேர் மாலில் பகல் சாப்பாடு. கலர்ஃபுல்லா  இருக்கும் கடைகள் இருந்தாலுமே திரும்பத்திரும்ப இண்டியன் கடையைத்தான் நான் தேர்ந்தெடுத்துக்கிட்டு இருக்கேன். வேற வழி?

சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு  இங்கியே ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்குப் போனோம். செயின் ஸ்டோர்வகைதான். Myers.  நாளைக்கு ஒரு நண்பரைச் சந்திக்கப்போறோம். புதுவீடு கட்டிப் போயிருந்தாங்க. அது ஆச்சு 11 வருசம்.  அப்போ வாடகை வீட்டில் இருந்தாங்க. அப்பப் போய் பார்த்தபிறகு  சந்திக்கவே சந்தர்ப்பம் அமையலை. ஆனால் ஒவ்வொருமுறை  ப்ரிஸ்பேன் வரும்போதும்  அவுங்களை சந்திக்கணும் என்ற திட்டம்  இருக்கும்தான்.

 இங்கே நம்மூரில்தான்  முதலில் இருந்தாங்க. எங்க மகளும் அவுங்க மகளும் ஒரே நாளில் பிறந்தாங்க.  ஆனால் இடையில் வருசம் பத்து:-) நம்ம யூனியில் வேலையா இருந்தாங்க. அப்புறம் ஆஸி யூனிக்கு மாறிட்டாங்க. மறுநாள் சனிக்கிழமை என்பதால்  'ரெண்டு பேரும் வீட்டில் இருக்கோம். கட்டாயம் வரணுமு'ன்னு  சொல்லி இருந்தாங்க.

வெறுங்கையாப் போக வேணாமேன்னு  சின்னதா ஒரு பரிசுப்பொருள் வாங்கிக்கணும். அங்கே  ஹேண்ட் மேட் கண்ணாடிச் சாமான்கள்  பார்க்க சிம்பிளாகவும் நீட்டாகவும் இருந்துச்சு. பூச்சாடி ரெண்டு வாங்கினோம். ஒன்னு தோழிக்கு ஒன்னு எனக்கு.  லைக் லைக் ஸேம் ஸேம். அப்பதானே தோழிகள்னு தெரியும், இல்லையோ!

வீட்டுக்கு வந்து சேரும்போது மணி மூணரை.  அப்புறம்  சின்ன தூக்கம்.  மாலை  ஸ்நாக், மசால்வடை!  க்ராய்ஸண்ட் வந்த அலுமினியம் ஃபாயில் ட்ரேயில் ரெண்டு வடைகளை அடுக்கி 'அவனில்'  10 நிமிசம் 180 டிகிரியில் வச்சேன்.  டீயோடு மொறுமொறுன்னு தின்னும்போது  சூப்பர்!

 தின்னது கரைய  பீச் வாக் மூணு கிமீ. திரும்பி வரும்போது இருட்டியே போச்சு.அதென்னவோ இந்த விடுமுறையில் தினமும் பகல்தூக்கம் வேற  வந்துக்கிட்டு இருக்கு. இது நல்லதில்லையே.......  நடை அதிகம் என்பதால் இருக்குமோ!

மூணு ஜிபியில் நிறைய இருக்கு.  கொஞ்சம்  வலை மேயணுமுன்னால்  மேய்ஞ்சுக்கோன்னு  அருள் புரிந்தார் நம்மவர். கரும்பு தின்னக்கூலி வேணுமா என்ன? அவருக்கு டிவி ஒன்றே போதும்..... உலகத்தையே மறந்துருவார்:-)

ராத்திரி சாப்பாடா இன்றைக்கு  பாலும் பழமும்:-)

நாளைக்கும் மழை இல்லைன்னு  வெதர்மேன் சொல்லிட்டார்.  காலை நடைக்குக் கிளம்பலாம். ஓக்கே?

தொடரும்............:-)21 comments:

said...

ஒவ்வொரு படத்தையும் விட்டு கண்கள் நகர மறந்தன...

said...

ஆஸியில் இருப்பது போன்ற உணர்வு வந்துவிட்டது.

said...

எல்லாமே நல்லாருக்கு. உலகமே இப்போ சின்னதாப் போனமாதிரி எண்ணம்.

said...

Romba nallarukku madam

said...

இவ்வளவு பிசியிலும் அமைதியாக மணலில். அருமையான புகைப்படங்கள். நன்றி.

said...

Arumai azhagu nadai kanmunne paranthu viriyum ulagam

said...

madam
romba nalla walk poye vandachhu ungakudda tks. the colourful teddy bear is cute. the sweet dog i also cry when i read about him tks for his mom. tks for sharing every moment you are great mam

said...

nalla walk poye vandachhu ungga kooda.very nice that colourful teddybear is cute. so sweet dog tks for his mom. one of my dog is also same like this before 20 years . when i saw this i cried. may be he is myne one his name is cheets very clever. but that time ved doctor says we cant do anything. after 2 years he died. thanks for sharing every moment.my daughter is same like to wrote her name in beachsand

said...

ப்ரிஸ்பேன் மிக அழகாகத் தெரிகிறது உங்கள் புகைப்படங்கள் வழியாக. துளசி கலையாமல் இருப்பது மிக சந்தோஷம். நிறையத் தான் நடந்திருக்கிறீர்கள் வாழ்த்துகள் மா. யானை மலையும் ,ஜோடி தியானமும் சூப்பர்.

said...

படங்கள் கண்களை விட்டு அகல மறுக்கின்றன.... அனைத்தும் அழகு....

சுத்தம் - இந்தியா இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும் மாறுமா என்பது சந்தேகம்....

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ரசிப்புக்கு நன்றி.

said...

வாங்க குமார்.

அப்படியா! எழுதுனது சரியாத்தான் இருக்கு!

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

டிவியும் ஸாட்டி லைட்டும் வந்தபின் உலகம் சின்னதாப் போனது உண்மை:-)

said...

வாங்க சிவா.

ரசித்தமைக்கு நன்றீஸ்.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

மனசு அடங்குனா உலகமே அமைதி ஆகிருமே! எல்லாம் ஒரு முயற்சிதான்.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க செந்தில் குமார்.

ரசித்து வாசித்தமைக்கு நன்றி.

said...

வாங்க மீரா பாலாஜி.

செல்லங்களின் பிரிவு மனசை உடைச்சுப் போட்டுருதுப்பா:-(

எங்க அம்மம்மா சொல்வாங்க ஈரமணலில் ராமான்னு எழுதுனா உடனே அலை வந்து கொண்டு போயிருமுன்னு. அப்பச் சின்ன வயசு. அப்புறம்தான் தெரிஞ்சது அலை தொடும் இடத்தில் என்ன எழுதினாலும் கொண்டுபோயிருமுன்னு:-))))

இப்ப எதாவது செல்லம் வீட்டில் உண்டா? நமக்கு இங்கே ராஜலக்ஷ்மி 'இருக்கான்':-)

said...

வாங்க வல்லி. ப்ரிஸ்பேன் கூட்டம்ப்பா. பெரிய நகரம். இது கோல்ட்கோஸ்ட். கடற்கரை கிராமம்:-)

நல்ல நடைதாம்ப்பா. திரும்பி வந்தபின் பயங்கர கால்வலி!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

மக்கள் மனசு வச்சால் சுத்தம் வந்துரும். அரசும் உதவணும். எல்லோரும் பணம் பண்ணுவதில் பிஸியா இருக்காங்க.... மற்றவைகளுக்கு நேரம் இல்லை என்பதே குறை:-(

said...

அனைத்தும் அருமை..படங்கள் மனதைக் கொள்ளைதான் போங்க...நமக்கெல்லாம் சுத்தம்னா என்னானு கேக்கப்ப்டாது....பல வருடங்கள் ஆகலாம். செய்ய முடியாது என்றில்லை...ஆனால் செய்ய மனம் இல்லை யாருக்கும் என்பதுதான் ...

உங்கள் விவரணம் அருமை...

said...

வாங்க துளசிதரன்.

ஏன் செய்ய மனம் இல்லைன்னுதான் என் மனசு வருத்தப்படுது!