Monday, August 10, 2015

தங்கக்கடற்கரை டயரிக் குறிப்பு (கோல்ட்கோஸ்ட் பயணம். இரண்டாம் நாள் )

சூரிய உதயம் பார்க்கலாமுன்னு  அதிகாலை 6 மணிக்கே எழுந்தேன்.  மழை பேய்ஞ்சுக்கிட்டு இருக்கு.  அதுவும் கொஞ்ச நேரம் விட்டுவிட்டுத்தான். வானம் கருத்து  மேகமூட்டமா வேற :-( பல்லைத் தேய்ச்சு முகம் கழுவிட்டு, ஒரு காஃபி கலந்தேன். நாம் கொண்டுபோயிருந்த பால் பாத்திரத்தில் ரெண்டு காஃபிக்குண்டான பாலை ஊத்தி மைக்ரோவேவில் நாலு நிமிஷம். இந்த மைக்ரோவேவில் அதிகபட்சம் 900 வாட்தான்.   பல்தேய்ச்சு வர்றதுக்கும்  நாலு நிமிட் முடியவும் சரியா இருந்துச்சு. பெர்ஃபெக்ட்  டைமிங்.
கீழே பீச் மணலில் காதல் தூது ஒன்று.  பெரிய எழுத்தா எழுதி வச்சுருக்கு. 22 ஆம் மாடியில் இருந்தும்  பளிச்சுன்னு தெரிஞ்சது:-)
 கோபால்  வந்து பிஸ்கெட் பாக்கெட்டை திறந்து  மும்மூணு பிஸ்கெட்ஸ் எடுத்து வச்சார். குடிச்சு முடிச்சுட்டு  பீச் வாக் போகலாமுன்னு பார்த்தால் மழை நிக்கலை:-(  கொஞ்ச நேரம் நான்  மெயில் பார்த்துக்கிட்டு இருந்தேன்.  இவர் டிவி செய்திகளில். ஒருவழியா ஏழே முக்காலுக்கு மழை நின்னுச்சு.  கீழே இறங்கிப் போனோம். இந்தக் கட்டிடத்தின் கொல்லைப்புறம் போக நீச்சல் குளம் வழியா ஒரு கதவு இருக்கு. அது வழியாப்போனால்...

குழந்தைகள் விளையாட ஒரு ப்ளே ஏரியாவும்,  ஒரு பிக்னிக் ஏரியாவும் அடுத்தடுத்து. கொல்லைப்புற கேட்  தாண்டினால்  வெய்யில் காயறதுக்கான வசதி. சூரியக்குளியல்.  அங்கே இன்னொரு சின்ன கேட். அதைத் திறந்தால் பீச் மணல். இந்தக் கதவுகளுக்கெல்லாம்  செக்யூரிட்டி பலமா இருக்கு. நம்ம அபார்ட்மெண்ட் சாவியுடன் இருக்கும் ஒரு (Tag)டேகை,  அங்கு சுவரில் பொருத்தி இருக்கும்  ஒரு பாக்ஸில் காமிச்சால்தான் கதவே திறக்கும்.  வெளியாட்கள் யாரும் உள்ளே வர ச்சான்ஸே இல்லை.

இன்டோர் நீச்சல்குளப் பகுதியில்  மூணு குளம். எல்லாம் வெந்நீர்தான். ஸ்பாவும் இருக்கு. இன்னொரு அறையில்  Sauna. மெள்ளக் கதவைத் திறந்தாலே நீராவி மேலே அடிச்சுக் கண் தெரியாமப் போச்சு:-)
 வெளிப்புறம்  தனியா இன்னொரு நீச்சல் குளம். பச்சைத்தண்ணிதான்.

குளிர் இருப்பதால் ஒரு ஜாக்கெட் போட்டுக்கத்தான் வேணும்.  எது வேணாமுன்னு இங்கே வந்தேனோ....அது என்னை வேணாமுன்னு  சொல்லலை!
உசரமா இருக்கும் கட்டிடங்கள்  மேலே பனிப்புகை இருக்கு!

ஈரமண்ணில்  செருப்புக்கால் புதையப்புதைய நடப்பது கஷ்டமா இருக்கேன்னு கழட்டிக் கையில் பிடிச்சுக்க வேண்டியதாப் போச்சு.
கொஞ்சதூரத்தில்  லைஃப்கார்ட் ஒருத்தர்  குளிக்கவேண்டிய இடம் எது,கூடாத இடம் எதுன்னு  கொடி நட்டுக்கிட்டு இருந்தார்.  போய்ப் பேச்சுக் கொடுத்தேன்.  இங்கே கடற்கரை முழுசுக்கும்  நூறு, நூற்றம்பது மீட்டர் இடைவெளியில்  லைஃப் கார்ட் இருந்து கவனிக்கும்  கண்காணிப்பு மாடம் போட்டு வச்சுருக்காங்க.  நான் எண்ணியது 44 வரை. நம்ம வீட்டாண்டை இருப்பது 32 ஆம் எண் மாடம்.

இவர் பெயர் சாம்.  மக்கள் உயிர் காக்க  சிட்டிக்கவுன்ஸில் ஏற்பாடு செஞ்சுருக்கும் மக்களில் ஒருவர். 'தன்னார்வலராகவும் நிறையப்பேர் வேலை செய்யறாங்கன்னு  கேள்விப்பட்டேனே. எங்க ஊருலே   இந்த சேவை முழுசும் தன்னார்வலர்களால்தான்' என்றேன்.

ஆனால் ஒரு உண்மையைச் சொல்லணும், எங்க ஊரில்  தண்ணிக்குள்ளே ஒரு நாலைஞ்சு பேர் இருந்தாலே அதிகம். ஒரே கூட்டமுன்னு சொல்லிருவேன்:-) குளிர் குறைவில்லாத ஊர்  ஆச்சே:-(


கோல்ட் கோஸ்ட்லே கூடும் கூட்டத்துக்கு இப்ப இருக்கும் லைஃப்கார்ட்ஸ் போதலைன்னார்.
உண்மைதான்.  எங்க ஊரை விட இங்கே கூட்டம் அதிகம்.  மக்கள் தொகை போன வருசக் கணக்கின்படி 546,067. (எங்க ஊரில் 400,000தான்)  முக்கால்வாசிப்பேர் வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள். ரிலாக்ஸா வாழ்க்கை இருக்கட்டுமுன்னு இங்கே வந்து செட்டில் ஆகிடறாங்க. இதைத் தவிர வருசத்துக்கு  12 மில்லியன் பயணிகள் வந்து போறாங்க.  கோடைகாலத்துலே  எள்ளுப்போட்டால் அது எண்ணெயாத்தான் கீழே விழும்!   இந்தப்பயணிகளை வச்சுத்தான்  ஊருக்கே வருமானம்!  ஏகப்பட்ட அபார்ட்மென்ட் கட்டிக்கிட்டே இருக்காங்க. அப்படி இருந்தும் கோடை காலத்தில் இடம் கிடைப்பது குதிரைக்கொம்பு!
ஒரு மாடத்துக்கு  ரெண்டு இல்லே மூணு பேர். அங்கே இருந்து நேரா அவுங்க கண்பார்வையில் விரியும் இடங்களில்  மக்கள் நீந்தவேணும்.  அது நமக்கு எப்படித் தெரியும்? அதுக்குதான் ரெண்டு கொடிகளை நட்டு வச்சு அதுக்கிடையில் குளிக்கணும் என்பது.  மாடத்தில் இருந்து கவனமாப் பார்த்துக்கிட்டே இருக்காங்க. யாருக்காவது ஆபத்துன்னு  தோணிப்போச்சுன்னால் உடனே  தோணி ஓட்டிப்போய் காப்பாத்திடறாங்க.

இதுவரைக்கும் எத்தனை பேரைக் காப்பாத்துனீங்கன்னதும் ஒரு விநாடி திகைச்சவர்  ஒரு ஹேண்ட்ஃபுல் என்றார்.  ஓக்கே .... பத்துபேர்!  பத்துன்னா பத்து, இல்லையோ!

 காப்பாத்துவது முக்கியம் என்றாலும் அதைவிட மக்களுக்கு எச்சரிக்கைவிட்டு அவர்களை  பாதுகாப்பாக இருக்கப் பழக்குவதுதான்  அதிமுக்கியம் என்றார்.  சாமுக்கு இன்றைய  ட்யூட்டி மாடம்  எண் 33 இல்.  வாரத்துக்கு 30 மணி நேர வேலையாம்.
இங்கத்து சம்மர் ஆன  டிசம்பர் ஜனவரியில் காலை 7.30 முதல்  மாலை 6.30 வரை  காவல்மாடத்துலே  ஆட்கள் இருப்பாங்க. கோடையில் சூரிய அஸ்தமனமும் லேட்தான்!

ஃபிப்ரவரிக்கும் மார்ச்சுக்கும் காலை  8 முதல் மாலை 6 வரை.

ஏப்ரல் முதல் நவம்பர் வரை காலை 8 முதல் மாலை 5 வரை.

வார இறுதிகளில் கூட  இவுங்களுக்கு வேலை இருக்கு.  என்னதான் மாசச்சம்பளம் கிடைச்சாலும் வருசம் பூராவும் மக்களைக் காப்பாத்தும் வேலை செய்பவர்களுக்கு நன்றி சொல்லணும்தானே! சொன்னேன்.


 நடந்து நடந்து  வார்மெமோரியலுக்குப் பக்கம் போய்   தரை ஏறினோம். இப்ப புதுசாக் கட்டி இருக்காங்க. ரெண்டு கம்பங்களில் கொடிகள். ஒன்னு அவுங்களுது, ஒன்னு எங்களுது.  பரவாயில்லையே!   எனக்கு  நியூஸியில் ஆஸி கொடி பார்த்த நினைவில்லை.

ஏற்கெனவே சுத்தமாக இருக்கும் இடத்தை மழை வந்து முறைவாசல் செஞ்சுட்டு போயிருக்கு. பளிச் பளிச்.


லேஸி த க்ரேட் என்ற பட்டப்பெயர் இருக்கும் பீட்டர் லேஸிக்கு ஒரு வெண்கலச்சிலை வச்சுருக்காங்க. இதோ வரேன் உங்களைக் காப்பாத்தன்னு  கிளம்பறார்.  இவர் புகழை எல்லாம் பொறிச்சு வச்சதைக் கிளிக்கினேன். நீங்களே  பார்த்துக்குங்க.




 கரை நெடுக  ஒருவித மரங்களை வச்சுருக்காங்க. எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு.  தாழம்பூ மரத்தின் இலைகளைப்போலத்தான் இருக்கு. மரத்தின் அடிப்பகுதியில் இருந்து mangroves மரங்களில் இருப்பதைப்போல்  தண்டுகளாட்டம் முளைச்சு வேரைப்போல் மரத்தை நல்லாப் பிடிச்சுக்குது. என்ன பெயர்னு தெரியலை:-(


அங்கங்கே குடிநீர் குழாய்கள்.  கடலில் குளிச்சு வந்தபின் உப்புத்தண்ணீரையும், கால்களில்  ஒட்டிவந்த மணலையும் கழுவிக்க நல்லதண்ணி  ஷவர்கள்.  முக்கியமா  கரையில் கிட்டத்தட்ட  50 மீட்டருக்கு ஒரு கழிவறைன்னு  வசதிகள்.


இதையெல்லாம் பார்க்கும்போது  என் மனசுக்கு ரொம்பவே ஏக்கமா இருக்கும்.  உலகின்  மூன்றாவது அழகிய நீண்ட கடற்கரையான நம்ம சென்னை மெரினாவை  எப்போ இப்படி ஆக்குவாங்க? சரியானபடி வசதிகள் செஞ்சு அழுக்கை ஒழிச்சால்.... இங்கே  சுற்றுலாப் பயணிகள்  வந்து தங்கி செல்வத்தைக் கொண்டுவந்து கொட்டமாட்டாங்களா என்ன? மாநிலத்துக்கு வரும்படி கொழிக்குமே! 'வேற வழி ' தேவை இல்லாமல் ஆகிவிடாதா என்ன?

ஆனா ஒன்னு....,  நம்மூர்லே ஒரு அரசியல் வியாதி  நியாயப்படுத்திச் சொன்னதைப்போல தேனெடுக்கறவன் இங்கே எல்லாம் கையை நக்கறதில்லையாக்கும், கேட்டோ!

ஒரு அம்பது வருசத்துக்கு முன்னே இப்படி இருந்த இடத்தை  இப்போ குபேரனின் கஜானாவா மாத்துனதை எவ்ளோ கொண்டாடினாலும் தகும்!


'கண்களை உறுத்தாத  வகையில் வச்சுருக்கும்' முக்கிய சேவைகளைச் செய்தவர்களுக்கான நினைவுச் சின்னங்கள்.  இது 'The suntan man -Baldwin' நினைவுச் சின்னம்.


திரும்பச் செருப்பைக் கையில் பிடிச்சுக்கிட்டே மணலில் இறங்கி நடந்தோம் நம்ம அபார்ட்மென்ட் வரை.  வழியில்  அலை அடிச்சுக் கொண்டு வந்து போட்ட எதோ மரத்தின் விதை, வர்ற வழியிலேயே முளைக்க ஆரம்பிச்சுருக்கு.  உயிர்வாழணும் என்ற ஆசை எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் பொது!
ஸீகல்  பிடிச்சாந்த மீன். அதுக்கு  வேண்டாத வகையோ என்னமோ ... கடாசிட்டுப்போய் இருக்கு.
ஒன்பது மணி ஆகி இருக்கு வீடு திரும்ப. சர்ஃபர்ஸ் பாரடைஸ் மெயின் பீச் வரை போகவரன்னு  நடை இன்றைக்கு மூணு கிமீ.  குளிச்சு முடிச்சு  ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடும்போது,  இன்னொரு அட்டகாசமான பெரிய இண்டியன் கடை சௌத் போர்ட்டில் இருக்கு. அங்கே போகலாமுன்னு இவர் சொன்னார். நெட்டிலே பார்த்து வச்சதுதான். சாமி விக்கிரகம் கூட விக்கறாங்களாம்.  நம்ம வீட்டு  முதல் ஆஞ்சநேயர்  கூட  பிரிஸ்பேனில்  இருந்து வந்தவர்தான். கொக்கி போட்டாச்சு.
மழை மழைன்னு வந்த இடத்தில் உக்கார்ந்துருக்க முடியாதேன்னு  போனோம். ஒரு ஆறரை கிமீ தூரம். த இண்டியன் ஸ்பைஸ் ட்ரெய்ல்.  கடை கொஞ்சம் நீட்டாத்தான் இருக்கு. வலையில் சொன்னாப்லெ சிலைகள் கொஞ்சம் இருக்கு.  ஆனால்....   தீ பிடிச்ச விலை.  கலைமகள் இருந்தாள்..........  375.  ஊஹூம்.....

தவம் செய்யும் புத்தர் மடியில் உக்கார்ந்து அவரைக் கட்டிப்பிடிச்சு மயக்கறாள் ஒருத்தி. போதுண்டா சாமி. வளை,  பொட்டு, அகர்பத்தின்னு கொஞ்சம் சாமான்கள். ஒரு கொத்து மயிலிறகு (விற்பனைக்கல்ல!)

ஒரு கிருஷ்ணர் ( துணி பொம்மை)நல்லா இருந்தார். விலை விசாரிச்சால் விற்பனைக்கில்லையாம். கடைக்காரம்மாவின் பூஜைக்காம். மும்பை பார்ஸி அவுங்க.
பொதுவா இண்டியன் கடைகளில் நம்ம கம்யூனிட்டி நியூஸ், விளம்பரமெல்லாம்  உண்டு. அந்தவகையில் அனுஷ்கா படம் போட்டு பரதநாட்டிய  வகுப்புகளுக்கு ஒரு விளம்பரம்.  வாரம் ஒரு நாள் முக்கால்மணிவீதம்  10 வகுப்புகளுக்கு  175$ தானாம். பாலிவுட் அஸ்ட்ராலியா நடத்துது.  சினிமா ஒரு வியாபாரம் கொழிக்கும் தொழிலாகிருச்சு. பாலிவுட் என்ற பெயர் எல்லோருக்கும் தெரியுதே!  எங்கூரில்கூட பாலிவுட் டான்ஸ்ன்னால் போதும். ஆனா பரதம்  பாலிவுட்டில் சேர்த்தியான்னு தெரியலையே! போகட்டும், ஆடி ஆடி அனுஷ்கா ஆனால் சரி.

பரிப்பு வடை கிடைச்சது. ஃப்ரோஸன் ஃப்ரம் கேரளா. இந்த ப்ராண்ட் எங்க ஊரில் இல்லை.  9 வடைகள் இருக்கு. இவர் கொஞ்சம் நொறுக்குத் தீனி வேற வாங்கினார்.

Carrara என்னும் பகுதிவழியா வந்துக்கிட்டு இருந்தோம்.  இங்கே  பெரிய மார்கெட் ஒன்னு வீக் எண்டுகளில் மட்டும் திறந்திருக்குமாம்.  சாலையின் அடுத்து இருந்த ஒரு ஷாப்பிங் சென்டருக்குப் போனோம்.  Aldi food store  என்னும் புதுக்கடை, ஏற்கெனவே பழம்தின்னு கொட்டை போட்டுருந்த  woolworth, countdown சூப்பர்மார்கெட்டுகளை அடிச்சு நொறுக்கி முன்னேறிக்கிட்டு இருக்கு. ரொம்பவே மலிவுன்னு உள்ளூர் தினசரி சேதி. இங்கே அந்தக் கடை இருக்கு.

அப்படி என்ன மலிவுன்னு தெரிஞ்சுக்க உள்ளே போனோம். சூப்பர் மார்கெட்டில் கொஞ்சம் ஹார்ட்வேர் ஸ்டோரில் கொஞ்சமுன்னு கலந்து கட்டி இருக்கு பொருட்கள். அப்படி ஒன்னும் ரொம்பவே மலிவா எனக்குத் தெரியலை. ரெடி டு ஈட் சாப்பாடு வகையில் ஒரு பீட்ஸாவும், இன்னொரு கறியும் வாங்கினார் கோபால்.

இன்னொரு கடையில் பக்கெட் பனானாஸ் என்று வாழைப்பழங்களைச் சின்ன ப்ளாஸ்டிக்  வாளியில் போட்டு வச்சுருந்தாங்க. ச்சும்மா ஒரு பெயர்தான்.  கிலோக்கணக்கு விற்பனையே!


பல்க் பில்லிங் டாக்டர்ஸ் என்றதைப் பார்த்தேன்.  நியூஸியில் குறிப்பா எங்க ஊரில் இதைப்போல் இல்லை. அஞ்சு பாகிஸ்தானி டாக்டர்ஸ் சேர்ந்து கடை வச்சுருக்காங்க. டாக்டர் ராவ் ஹமீதுன்னு ஒரு பெயர் பார்த்தேன். நமக்கு மருத்துவக் காப்பீடு இருந்தால்  நமக்கான கன்ஸல்ட்டிங் ஃபீஸ் வகைகளை நேரடியா  இன்ஷூரன்ஸ் கம்பெனிகிட்டே(யே) வாங்கிப்பாங்களாம். ஆனால் எப்படியும் நமக்கு 80%தானே திருப்பிக்கொடுக்கறாங்க. அப்ப மீதி 20% காசு மட்டும் டாக்டருக்குக் கொடுத்தால் போதும்போல!

 பச்சை விளக்குக்காக காத்திருந்த போது பார்த்த Cockatoo வெள்ளைக்கிளி:-)

மழை வலுக்க ஆரம்பிச்சதும் வீடு திரும்பிட்டோம். அதுக்கப்புறம் மழை நிக்கவே இல்லை. மாலை நேர பீச் வாக்கும் இன்றைக்கு இல்லை. குளிரும் ஆரம்பிச்சது. ஹீட் பம்ப் இருப்பதால் 23 இல் போட்டு வச்சுட்டு எலக்ட்ரிக் ப்ளாங்கெட்டை சரண் அடைஞ்சேன்.



மாலை நேரக் காப்பிக்குத் துணையா இருக்கட்டுமுன்னு வாங்கி வந்த தீனியைப்  பிரிச்சால்.... யக். நல்லாவே இல்லை.  வெளிநாட்டு இந்தியர்களின்  அலையும் நாக்கு ருசியைக் காசாக்கும் மக்கள் ஏராளம். என்னென்னவோ ப்ராண்ட் தீனிகள் மெட்ராஸ் மிக்ச்சர்,முறுக்குன்னு  அழகான படம் போட்ட  பேக்கட்டில்  வருது பாருங்க.  அவைகளில் படங்கள் மட்டுமே அருமை.

 இந்தக் கணக்கில் போகுது நம்ம ஹாலிடே. நாளை பொழுது விடியும்போது பார்க்கலாம்.
 தொடரும்..............:-)




19 comments:

said...

அழகான புகைப்படங்கள். அருமையான செய்திகள்.நிகழ்விடத்திற்கே எங்களை அழைத்துச்செல்லும் உங்களது எழுத்துத் திறனுக்குப் பாராட்டுக்கள். நன்றி.

said...

இப்படியும் ஒரு சொர்க்கம் அம்மா...

படங்கள் அனைத்தும் அருமை...

said...

Maranthum Indian stirela vaangida koodathu,drya,kasadu taste la.Antha kaasuku,veetulaye senju saapidalam.

said...

//என்னென்னவோ ப்ராண்ட் தீனிகள் மெட்ராஸ் மிக்ச்சர்,முறுக்குன்னு அழகான படம் போட்ட பேக்கட்டில் வருது பாருங்க. அவைகளில் படங்கள் மட்டுமே அருமை.//

ஹா.ஹா... தில்லியிலும் இதே கதை தான். ஆசைப்பட்டு வாங்கினா ஒரே சிக்கு நாத்தம் - இல்லைன்னா வாயில் வைத்தவும் உமிழத் தோன்றும் வகையில் சுவை.

படங்கள் அனைத்தும் அழகு. தொடர்கிறேன்.

said...

சென்னை மெரீனா? இன்னும் 50 வருடம் காத்திருக்கனும். போன வாரம் போனபோது இருபது ரூபாய் பார்க்கிங்க் கொடுத்துட்டு பக்கத்து டாய்லெட்டில் இருந்து வழிந்து ஓடும் கழிவு நீரை தாண்டி கடலை பார்க்க போனேன். ஒரு இடத்தை சுற்றுலா பயணிக்கு என்று ஒதுக்கும் போது என்ன சேவைகள் செய்ய வேண்டும் என்பதை பற்றி யோசிப்பதே இல்லை.

said...

மக்கள் கூட்டம் என்று எதையும் பார்க்க முடியலையே ! ! உங்களைத்தவிர யாரும் மழைநாளில் வெளியே வரமாட்டார்கள் போல ! ! !

said...

//எது வேணாமுன்னு இங்கே வந்தேனோ....அது என்னை வேணாமுன்னு சொல்லலை!//

கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப்போனா அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சாம்ன்னு சொல்லுவாங்க. :-)



said...

அழகான படங்களுடன் உங்கள் எழுத்தும் நேரில் பார்த்தது போல் இருக்கிறது.
மெரினாவிற்கு செல்லும் போதெல்லாம் தோன்றும் வருத்தம் தான்.
அதைத் தான்,
"நிலக்கடலைக் கொறிக்கலாம்
நீலக்கடலைக் குப்பையாக்கலாமோ?" என்று எழுதினேன்.

said...

படங்கள் எல்லாம் கொள்ளை அழகுக்கா .! நாங்களும்3நாள் பீச் போய் வந்தோம் .
கொரிப்பான்ஸ் ரொம்ப மோசம் :( இப்பெல்லாம் வாங்கறதில்ல .
அட அதிகாலையே மணலில் காதல் தூது விட்டதாரு :)


ALDI ஜெர்மன் கடையாச்சே .இங்கும் (UK )அவங்களுக்கே நல்ல பிசினஸ் .

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

ரசித்து வாசித்தமைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

'டானிக்' குடிச்சாப்லெ இருக்கு!

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

சொர்கம்தான். ஆனாலும் கலையும் பாரம்பரியமும் சிறந்த நாடுன்னு சொல்லிக்கிட்டு இருக்கும் நம்ம ஊரை, நினைக்காமல் இருக்க முடியலையே! கொஞ்சம் மக்களும் அரசும் மனசு வச்சால் இதைவிட பெட்டரா மாத்திக்காட்டலாம்தானே!

said...

வாங்க சரவணன் ராம்.

எல்லா ஊர்களிலும் இண்டியன் ஸ்டோர்ஸ் இப்படித்தான் போல:-(

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ஆசையே துன்பத்திற்குக் காரணமுன்னு புத்தர் சொல்லியும், நாக்கு அடங்குதா பாருங்களேன்! வாங்கி அதைக் குப்பையில் கொட்டினால்தான் நிம்மதியா இருக்கும்போல:-(

வருகைக்கு நன்றி.

said...

வாங்க குமார்.

சிங்காரச்சென்னையை சிங்கப்பூர் ஆக்குவாங்களா மாட்டாங்களான்னு சிறப்புப் பட்டி மன்றம் வைக்கலாம்.

said...

வாங்க பொன்சந்தர்.

வணக்கம். முதல் வருகைக்கு நன்றி.

கடற்கரையில் மழை காலத்தில் மக்கள் கூடுவது குறைவுதான். மற்றபடி தெருக்களில் பொதுவாகவே மக்கள் நடமாட்டம் இருக்காது. வாகன ஓட்டம்தான். கூட்டம் பார்க்கணுமுன்னா மாலுக்குள் போகணும்:-)

said...

வாங்க அமைதிச்சாரல்.

அதே அதே! கொடுமை நம்மகூடவே பயணத்தில் (டிக்கெட் இல்லாமல்) வந்துக்கிட்டு இருப்பதை நாந்தான் கவனிக்கலை!

said...

வாங்க தேன்மதுரத்தமிழ் கிரேஸ்.

ஒரு மணி நேரம் வாயை மெல்லாமல் நம்ம மக்கள்ஸ் இருக்கமாட்டாங்கப்பா:-( குறைஞ்சபட்சம் செல்லிலாவது வாயை மெல்லணும். அது இல்லேன்னா இது. இது இல்லேன்னா அது. மொத்ததில் வாய்க்கு செமவேலை!

உங்க கவிதை சொல்வது உண்மை!

said...

வாங்க ஏஞ்சலீன்.

ஆல்டி ஜெர்மனா? புது நியூஸ் எனக்கு.

இன்னும் நியூஸிக்கு வரலை.

கொரிப்பான்ஸ்... சூப்பர் சொல். நினைவு வச்சுக்கறேன். காப்பி ரைட் உங்களுக்குத்தான்:-)

said...

உங்க புகைப்படங்களை என்னனு சொல்றது....அழகோ அழகுப்பா...உங்க வர்ணனை என்னவோ நாங்களும் உங்க கூட வந்தா மாதிரி இருக்கு...நீங்க கைடு மாதிரி ஹஹ

அப்புறம் ஒண்ணு சொல்ல மறந்துட்டோம்..அந்த அப்துல்லா அட்லீட் ஏதோ பேரு நாலு கால் செல்லம் வாதம் வந்தா கூட அந்த அம்மா அழகா அதுக்கு வீல் கட்டி கூட்டிட்டுப் போறாங்களே அந்த அம்மாவ மேலே உள்ளவன் ரக்ஷிப்பானாக! சத்தியாமாக நல்ல மனது...இங்குள்ளதுங்க ஏன் இங்க பொறந்து இப்படி அல்லாடுதுங்களோ...அங்க பொறக்கக்கூடாதோ...அடுத்த ஜென்மம்னு ஒண்ணு இருந்தா இந்தியாவுல நாலு கால் கள் எல்லாம் அந்த ஊர்ல பொறக்கனூம்...இல்லைன அந்த் மக்கள் இங்க பொறக்கணும்...