Friday, December 19, 2014

ஸாண்ட்டாவுக்கு புது லிமோ!!

எண்ணிப்பாருங்க... இன்னும் அஞ்சே நாள்தான் இருக்கு யேசுவின் பிறந்த நாளுக்கு! கடைவீதிகளில்தான் மொத்தக்கூட்டமும் மால்களில்தான்  எல்லாக் கொண்டாட்டமும்.  சனத்துக்கு  எங்கே பரிசுப்பொருட்கள் வாங்கமுடியாமல் போய்விடுமோ என்ற 'பயத்தில்'  முக்கிய கடைகள் எல்லாம் நடுராத்ரிவரை திறந்து வச்சுக்கிட்டு இருக்காங்க.

எல்லா மால்களிலும், ஸாண்ட்டா    தன்னுடைய  சிஷ்யப்புள்ளைகளை விட்டு வச்சுருக்கார்.  வேலை நேரம் மட்டும்  மாலை ஆறரை வரைதானாம்.   மானுக்குத் தண்ணி காட்டணுமுல்லெ! நம்மூட்டாண்டை இருக்கும் மாலில்  இப்படி.



முந்தியெல்லாம்  பெரிய அலுவலகங்களில் , அங்கே வேலை பார்க்கும் மக்கள் ஷாப்பிங் செஞ்சு முடிச்சுக்கன்னே , விடுமுறை ஆரம்பம் கிறிஸ்மஸுக்கு முதல்நாள்  என்று இருக்கும்.  நம்ம கோபாலின்  கம்பெனியிலும் இப்படித்தான் இருந்துச்சு.  ஆனால் இந்த வருசம்  25 இல் இருந்துதான் விடுமுறை ஆரம்பமாம்.

"ஏன்............? "

"அதான்  நடுராத்ரி 12வரை கடைகள் இருக்குல்லே! அப்பப்போய் வாங்கினால் ஆகாதா......

அவுங்க  கம்பெனியில்  இந்த வருசம் ஸ்பெஷலா , இன்றைக்கு  ஊழியர்களுக்கு  பார்பெக்யூ  விருந்து  மதியம் போடறாங்கள்.    அதிகாரிகள் எல்லாம் சுட்டுத் தரணும். இவரும் சுடப் போயிருக்கார்.  அவசரப்படாம நல்லா சுட்டுத்தாங்கன்னு சொல்லி இருக்கேன்.  வீட்டுலே சமையலுக்கு ஹெல்ப்(!!??)  பண்ணுவது போல அங்கேயும் ஹெல்ப் பண்ணிருவாராம்:-)))

வருசாவருசம் நடக்கும் சாண்ட்டா பரேடு இந்த வருசமும் நடந்துச்சு. 'அந்தக் காலத்தில்'  நவம்பர் மூணாவது வாரமே நடந்துக்கிட்டு இருந்தது....  மெள்ள மெள்ள நகர்ந்து இந்த வருசம் டிசம்பர்   ஏழாம்தேதி. ஞாயிறாக இருக்கவேணும் என்பது கட்டாயம்.  வேடிக்கை பார்க்கக் கூட்டம் வேணுமா இல்லையா?

சிட்டி இல்லாமல் போனதால்  இப்ப நாலு வருசமா நம்ம பேட்டையில்தான் ஊர்வலம்.  கடமை தவறாத குடிமக்களா   ஆளுக்கொரு கேமெராவுடன் நாங்க போனோம்.  (ஆமா... ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாப்பாள்!)ஸ்ரீராமர் காட்டுக்கு  வில்லும் அம்புமா கிளம்பினாராம்.  அப்ப நாம்? வெறும் அம்பறாத்தூணியோடு கிளம்பினோம்.  முதல்நாள் ஸேலில் கிடைச்சது:-)  வீட்டுவாசலில்  செடிக்கடை போட்டு வச்சுருந்தார் ஒருத்தர்.  ஹெர்ப்.  எதையெடுத்தாலும்  அம்பது செண்ட்.

பகல் ஒரு மணியில் இருந்தே  ஊர்வலம் போகும் சாலையில் போக்குவரத்தை  நிறுத்திட்டாங்க. நாங்களும் வேற வழியில் போய்  நம்ம வழக்கமான இடத்தில் வண்டியை நிறுத்திக்கிட்டோம். இனி மூணு நிமிசம் நடந்தாப்போதும். அந்த சாலையில் போய்ச்சேரும் கிளைச்சாலைகளுக்கு   ட்ராஃபிக் கோன் வச்சுக்கிட்டு இருந்தாங்க. போகும் வழியிலேயே  ஊர்வலத்தில் பங்கெடுக்க ஆர்வமாக் கிளம்பின சர்தாரைப் பார்த்து ஒரு க்ளிக்.
மக்கள்ஸ் அதுக்குள்ளே  சாலையின் ரெண்டுபக்கங்களிலும் இடம்பிடிச்சு உக்கார்ந்துருந்தாங்க.   எதோ பட்டா போட்டு வச்சது போல நமக்கான இடம் காத்திருந்துச்சு.

 காவல்துறையினர்  ச்சும்மா பேருக்கு இங்கெயும் அங்கெயுமா உலாத்தல்.  மக்களைக் கட்டுப்படுத்தும் ட்யூட்டி.  அவுங்களுக்கு வேலையில்லாமப் பண்ணும் சனம் இங்கே. என்னதான் சொல்லுங்க... எங்கூரு சனத்துக்கு  சட்டத்தைப்  புறம் தள்ள  வராது.  போரடிக்குதுன்னு போலீஸ் நின்னு கதை பேசிக்கிட்டு இருக்கு:-)  என் பக்கமொரு சின்ன வயசுப் பையன்.  பால்மணம் மாறாத முகம். இப்பதான் வேலைக்குச் சேர்ந்திருக்கணும். என் மகனா இருக்கக்கூடாதான்னு நினைப்பு வந்தது நிசம். அதோ நம்ம பையன்னு கோபாலிடம் சொன்னேன்:-)

எங்கூர் சாண்ட்டா பரேடுக்கு வயசு 68.  கொழும்புத்தெருவில் நடந்துக்கிட்டு இருந்துச்சு முந்தி.  ஊரின் மெயின் கதீட்ரல் (நகர மையம்) அங்கெதான் இருக்கு. தேவாலயம் இடிஞ்சு போன நிலையில்  சாண்ட்டா ரூட்டை மாத்திக்கிட்டார்.  அவருக்கும் வேற வழி இல்லை பாருங்க.

இருவது நிமிச பராக்கு. பாண்டு வாத்தியங்கள் முழங்க ஊர்வலம் சரியா ரெண்டு மணிக்கு ஆரம்பிச்சது.  பரேடில் முக்காலே மூணு வீசம் எல்லா வருசமும் வரும் அலங்கார வண்டிகள்தான்.  இந்த  27 வருசமாப் பார்த்துக்கிட்டுத்தானே இருக்கோம். அதனாலே போனவருசம்வரை  இல்லாதது என்ன புதுசா வருதுன்னு பார்க்கும் ஆர்வம் ஏராளம்.
தாய்லாந்து மக்கள்ஸ், அவுங்க பாரம்பரிய உடைகளில் ரொம்ப  ஜோரா அலங்கரிச்சுக்கிட்டு வந்தாங்க.

முதல்முறையா ஃபிஜித் தீவு!  ஃபிஜியன்ஸ்,  தாப்பா (மரவுரி . மரப்பட்டைகளால் நெய்யப்பட்ட  துணிகள்)  போட்டுக்கிட்டு கையில் ஃபிஜியன் க்ளப் ஏந்தி வந்தாங்க.  ஃபிஜி இந்தியர்கள்  ஒன்னு ரெண்டு பேர்தான்.  ஏன் வரலை? ஏராளமா இருக்காங்களே!








நம்ம வீட்டுக்கு  ஒருவீடு தள்ளி இருக்கும் பாலே ஸ்கூல்  பசங்க.



பிலிப்பைன்ஸ்   மக்கள்.



ஃபலூன் டாபா   வழக்கம் போல  பெரிய கூட்டம்.  ஒழுங்குன்னா அப்படி ஒரு ஒழுங்கு  அவுங்களிடம்!

கொரியன்ஸ்  பள்ளிக்கூடம் வச்சுருக்காங்களாமே!

பீகிள் க்ளப் பசங்க   ரொம்ப க்யூட்:-)  குடும்பத்தினரைக் கூட்டி வந்துருக்காங்க.

டாய்வான் நாட்டு மக்கள்கூட இந்த வருசம்  இடம்பிடிச்சுருக்காங்க! புதுவகை அலங்காரம் நமக்கு!

ஸால்வேஷன் ஆர்மி....  சமூக சேவை செய்வதில் முதலிடம்  இவுங்களுக்குத்தான். ஸூப் கிச்சன் இவுங்கதான் நடத்தறாங்க.

கிறைஸ்ட்சர்ச் ஏர்ப்போர்ட், ஜெட் எஞ்சின்களைக் கொண்டாந்து காமிச்சது. பயமில்லாம பறக்கலாம் வாங்க!

எங்க  ஊர்  விஸர்ட்க்கு  (Wizard of Christchurch) இப்ப வயசு 82.  டிசம்பர் 4 அவருக்குப் பொறந்தநாள்.  கொண்டாட வந்துருந்த சிஷ்யப்பிள்ளைகளுடன்  அன்னிக்கு (டிசம்பர் 7)  ஊர்வலத்தில்  வந்தார்.  இவ்ளோ கூட்டமா மந்திரவாதிகளை நான் இதுவரை பார்த்ததே இல்லை.  லார்ட் ஆஃப்  த ரிங்ஸ், எஃபெக்ட்:-)

நாங்க நியூஸி வந்த மறுவருசம் முதல் மூன்று முறை நகரத்தாயா இருந்த விக்கி பக்  (Vicki  Buck) அரசியலில் இருந்து விலகி, 14 வருசம் புள்ளைகுட்டிகளைப் படிக்க வச்சுட்டு மறுபடி  போனவருசம் அரசியலுக்கு  திரும்பி வந்து  இப்ப நகரத்தின் துணைத்தாயா இருக்காங்க.

நம்ம இந்தியன் சோஸியல் & கல்ச்சுரல் க்ளப் வரிசை அடுத்து.    போன முறை வெறும் இந்தியக்கொடியை மட்டும் தூக்கி வந்தவங்க....  என் புலம்பலைக் கேட்டு நியூஸிக் கொடியையும் பிடிச்சுக்கிட்டு வந்தது  நல்லா இருந்துச்சு.

நமக்குத்தான் வகைவகையா மாநிலங்கள் இருக்கே!  பாரம்பரிய உடைகளின் அழகு   வண்ணக்கலவையா இருந்துச்சு!


 சீனர்கள்  வழக்கம்போல்  சிங்க டான்ஸ், ட்ராகன் டான்ஸ்ன்னு அட்டகாசம்.  நேர்த்தியான உடைகளில் பிரமாண்டமான கூட்டம்!

பொலிட்டிக்கல் சயின்ஸ், கலைப்பிரிவு மாணவர்கள்  குழு ஒன்னு இந்த வருசப் புதுவரவு!

பூகம்பத்தில் அழிந்த எங்க நகரத்தை மீண்டும் எழுப்பிக்கட்ட வந்த  பிலிப்பீனோ  கட்டிடத் தொழிலாளர்கள், அவர்கள் குடும்பத்தினர்  ஊர்வலத்தில் பங்கேற்றது சிறப்பு.    நகர நிர்மாணம் முக்கியமல்லவா?




 நாங்கள் எல்லோரும் பலமாக் கைதட்டி அவுங்களுக்கு  ஆதரவையும் அன்பையும் தெரிவித்தோம்.  விஸில் சத்தம் வானைப் பிளந்ததுன்னு சொல்லிக்க ஆசை. எனக்கு விஸில் அடிக்க வராதுப்பா.  ப்ச் :-(


மிஸ் பிக்கி, கெர்மிட் எல்லாம் வந்தப்ப... இப்பத்துப் பிள்ளைகளுக்கு  ஒன்னுமே புரியலை.  பழைய தலைமுறைதான் விளக்கம் சொல்லிக்கிட்டு இருந்துச்சு!

கார்னர் ஸ்டோன் சர்ச்  என்ற  ஒரு புது சர்ச்,  எக்ஸ்ப்ளோர்  க்றிஸ்டியானிட்டின்னு சொல்லிக்கிட்டு போச்சு.

தீயணப்பு வண்டிகளின்  ஊர்வலத்தில்  தீ விபத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக்க வேண்டிய  வழிமுறைகளை சின்ன புத்தகமா அச்சடிச்சு  விநியோகம் பண்ணிக்கிட்டுப் போனாங்க.  நம்ம வரிசைக்குப் பக்கம் வந்தப்ப, எல்லோரையும் விட்டுட்டு என் கையில்கொண்டு வந்து கொடுத்ததைப் பார்த்தால்  நம்ம  All because of Uthappa  எபிஸோடு  அவுங்களுக்கு நினைவில்  இருக்கோன்னு ஒரு சம்ஸயம்:-)

ஜப்பான் நாட்டு மக்கள், ட்ரம்ஸ் அதிர  முழக்கத்தோடு கடந்து போனாங்க.

1973 முதல்  எங்க சகோதரி நகரமா இருக்கும் குராஷிகி நகர மக்கள் தனி வண்டியில்!

பி எம் எக்ஸ் வீரர்களில் சிலர், ரெண்டு பேர், மூணு பேருன்னு படுக்கவச்சு தாண்டினாங்க!



ரஷ்யன் கல்ச்சர் செண்ட்டர்!



அடுத்த வருசம் அண்டர் 20  ஃபுட்பால்  உலகக் கோப்பை கேம்   நியூஸியில் நடக்கப்போகுது.

உண்மையான மல்ட்டி கல்ச்சுரல் சொஸைட்டின்னு சொன்னா தாராளமா நியூஸியைச் சொல்லலாம். இந்த் ஊரில் மட்டும்  ஒரு 165 வெவ்வேற இன மக்கள்ஸ் இருக்காங்கன்னு  ஒரு சமயம் நகரத் தந்தையோடு பேசிக்கிட்டு இருந்தப்பச் சொன்னார்.


 திடுக்குன்னு பார்த்தா  இன்னொரு இந்தியக்குழு!  நியூஸிலாந்து சீக்கியர் சங்கமாம்!  ஓ....  தனியாப் பிரிஞ்சு போயிட்டாங்களா?  இல்லை  மதத்துக்குன்னு ஒரு குழுவா?  வரும்போது பார்த்த இளைஞர்  கையை வீசி வீசி  ஆட்டுறார் நமக்கு!!   ஹாஞ்ஜி ஹாஞ்ஜி  :-))))











கிறைஸ்ட்சர்ச் ஏர்ப்போர்ட்  ஃபயர் ப்ரிகேடு  டீம்,  விமானத்துலே தீ  பிடிச்சா இப்படின்னு  தண்ணியடிச்சுக் காமிச்சாங்க.  இதுவரை பயன்படுத்தவே இல்லை என்பதால் நமக்கு டெமோ!   அப்படியே இனியும் பயன்படுத்தும் வாய்ப்பு வரவே வேணாம்....  ஆமென்!

இன்னும் சாண்ட்டா வரவே இல்லை. அதுக்குள்ளே  என் கேமெரா  மெமரி இல்லைன்னு சொல்லுது.  இந்த முறை எக்ஸ்ட்ரா பேட்டரியைக் கொண்டு வந்திருந்தேன்.  ஆனால்....  2 GB  SD  cardதான் போட்டுருந்தேன். இதுக்கு மேலேயா படமெடுத்துறப்  போறோமுன்னு.....  மெத்தனம்:(  அடுத்த வருசம் பொழைச்சுக் கிடந்தால் 32 GB  SD  cardதான் :-))))

அடுத்த அரைமணி நேரத்துக்கு  கோபால் பொறுப்பு. நான் ஜஸ்ட் டைரக்டர்!

புத்தம்புதுசா  ஒன்னும் வரலை.   போகட்டும். 'எலிப்பெண்ணை எடுங்க'ன்னேன்:-)

நம்மூர்லே ரீபில்ட் காரணம்  எக்கச் சக்கமான வேலை வாய்ப்பு. எல்லாம்  கட்டிட வேலைகள்தான்.  பணம் ரொம்பவே புழங்குது.   அதான்  நடுராத்ரி வரை கடைகள்!   இப்படி இருக்கும்போது, சாண்ட்டாவுக்குச் சொல்லணுமா?   அதான் லிமோ வாங்கி இருக்கார்:-)))

 கட்டக்கடைசியில்   வந்தார் நம்ம ஸாண்ட்டா.  மெர்ரி கிறிஸ்மஸ் என்று வாழ்த்தினார். 101  நிமிசங்களில்   ஊர்வலம் முடிஞ்சது.



துளசிதளம்,  வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும்  இனிய கிறிஸ்மஸ் விழாவுக்கான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

மெர்ரி க்றிஸ்மஸ் !



34 comments:

said...

போன முறை வெறும் இந்தியக்கொடியை மட்டும் தூக்கி வந்தவங்க.... என் புலம்பலைக் கேட்டு நியூஸிக் கொடியையும் பிடிச்சுக்கிட்டு வந்தது நல்லா இருந்துச்சு.

விசில் ஒன்று வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்..

said...

வாழ்க்கையில் ஒருமுறையாவது ஆஸ்திரேலியா மற்றும் நியூ ஜெலாந்து போய் பார்க்கவேண்டும் என்ற ஒரு ஆசையை உங்கள் பதிவு அதிகமாகி விட்டது. நல்ல பதிவு. அருமையான படங்கள். நன்றி.

said...

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டுது. படங்கள் எல்லாம் தெளிவா நல்லா வந்திருக்கு டீச்சர்.

இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

said...

நியூஸி கிறிஸ்துமஸ் விழாவை நேரில் பார்த்த உணர்வு கிடைத்து விட்டது.

இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்.

said...

நன்றி.

said...

அழகான கொண்டாட்டம்....

முந்தைய பதிவுகளையும் [இந்திய பயணம்] இன்றைக்குத் தான் படிக்க முடிந்தது!

said...

உங்களின் பதிவால் நாங்களும் கண்டு களித்தோம்... (வீட்டிலும்)

said...

நல்ல பகிர்வு. இந்தியக் கொடியும் பாரம்பரிய உடையில் நம் மக்களும்.. அழகு.

ஆகா, நாற்காலியில் அமர்ந்து நிதானமாய் படமாக்கும் பார்க்கும் வசதி அருமை:).

இந்த மாதிரி ஊர்வலம் மற்றும் கண்காட்சிகளுக்கு 2 GB காணவே காணாதுதான். 16 GB தற்சமயம் உபயோகிக்கிறேன். நீங்க 32 GB வாங்கும் முன் க்ளாஸ் 4 (அ) 10 எது வேண்டுமெனத் தீர்மானிக்க இந்தப் பதிவை ஒரு முறைப் படிச்சிடுங்க:http://photography-in-tamil.blogspot.in/2014/10/blog-post.html

said...

லிமோ சாண்டா க்ளாஸ். எல்லாப்படங்களும் தெளிவா வந்திருக்கு. உற்சாகம் கொடிபிடித்து நடப்பது போல ஒரு பிரமை. ஊரும் நாடும் நீங்களும் நன்றாக இருக்கணும் துளசிமா. இனிய கிறிஸ்மஸ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

said...

அருமையான ஊர்வலம்.அழகான புகைப்படங்கள் டீச்சர். பாலே ஸ்கூல் பக்கத்துலயா இருக்கீங்க. நம்ம நடிகை லைலா கூட அங்கேதான் பாலே படிச்சாங்களாம். டீச்சர் கத்துக்கிட்டாச்சா?

said...

படம் ஒண்ணுமே ஓபன் ஆகலை துளசி. வெறுமனே டப்பா டப்பாவா பார்த்துப் படிச்சேன் :(

said...

பிரமாதம். உங்க பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு ஊர்வலத்தை ரசித்த அனுபவம். ஒன்றைக்கூட விட்டுவைக்கவில்லை என்ற உணர்வு. எவ்வளவு கலவையான கலாச்சாரம், இன, மொழி பேதங்கள். ஆனால் அன்பின் பிணைப்பாலும் நாட்டின் மீதான பற்றுதலாலும் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாய் இணைந்திருப்பது மிகவும் மகிழ்வான விஷயம். இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள் டீச்சர்.

said...

எனக்கும் விசில் அடிக்க வராது! புகைப்படங்கள் எல்லாம் பல நூறு கதைகள் சொல்லுகின்றன.
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

வாங்குனா.... அப்புறம் அதைக்கொண்டு போக மறந்துட்டா?

அதுக்குத்தான் கட்டைவிரல் & ஆள்காட்டி விரலை வாயில் வச்சு விஸில் அடிக்கும் கலையைப் பயில வேணும்:-)

said...

வாங்க விசு.

கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்தான் இவை. அதிலும் நியூஸி.... ஏகப்பட்ட இடங்கள் மனிதக் காலடிகள் படாதவை!

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

ரசிப்புக்கு நன்றீஸ்ப்பா.

said...

வாங்க கோமதி அரசு.

மார்கழிக் கொண்டாட்டத்தில் கிறிஸ்துவுக்கும் இடம் உண்டு பாருங்க!!!!

said...

வாங்க விஸ்வநாத்.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நோ அர்ரியர்ஸ்!!!!

வெரி வெரி குட்!

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ஆஹா.... வீட்டுலே என்ன சொன்னாங்க?

said...

வாங்க ராமலக்ஷ்மி.

இங்கத்து கடைகளில் கேம்பிங் செக்‌ஷனில் பார்த்தால் கூடாரங்கள், சின்னதா கேஸ் கேன் பயன்படுத்தும் அடுப்புகள் கேம்பிங் செய்யன்னே தட்டு, மக் எவர்சில்வரில் இருக்கும். இதெல்லாம் ஓக்கே. லவுஞ் சேர்கள், ஏர்பெட்கள் கூட நல்லதே.டஆனால் கிச்சனில் வச்சுக்க மீட்ஸேஃப் என்னும் வலை பீரோ, டைனிங் டேபிள், சேர்ஸ், ஷவர் கூட இருக்கும். சின்னதா ஸோலார் செல் வச்ச கனமான திக் ப்ளாஸ்டிக் பை அதனுடன் சேந்த குழாயுடன் ஷவர் ஹெட். பத்து லிட்டர் கொள்ளுமாம். அதைத் தூக்கி நிறுத்த ஒரு கம்பம். வெயிலில் தண்ணீர் சூடானதும் குளிக்கலாம். இப்படி வீட்டில் உள்ள வசதிகள் ஒன்னுமே குறையக் கூடாதுன்னா வீட்டை விட்டுட்டு ஏன் கேம்ப் போறாங்கன்னு எனக்கு வியப்புதான்:-))))

கோபாலின் சஷ்டியப்த பூர்த்தி விழாவுக்கு வருமுன் 32 GB க்ளாஸ் 10 தான் வாங்கினோம் . ஆச்சே 2 வருசம்!

வீடியோ தெளிவாக இருக்குமுன்னு கடைக்காரர் சொன்னார்.

பிட் வகுப்பு விஷயங்கள் ரொம்பவே பயனாக இருக்குப்பா. அதுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றீஸ் பிட் ஆசிரியர்களுக்கு.

said...

வாங்க வல்லி.

இன்னும் அஞ்சாறு வருசத்தில் புது நகரம் கிடைச்சுரும்.

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.

உங்களுக்கு அங்கேயும் கிறிஸ்மஸ் விழா வெகு ஜோராய் நடக்குமே! குளிர்தான் படுத்தும், ஒயிட் க்றிஸ்மஸ் அல்லவா!

said...

வாங்க ரிஷான்.

லைலா, என் மாணவிதான். இங்கே நியூஸிக்கு ஷூட்டிங் வந்தப்ப, நாந்தானே பாலே சொல்லிக் கொடுத்தேன். உங்களுக்குத் தெரியாமப் போச்சே!

ஃபோட்டோ எவிடன்ஸ் இருக்கு.(ஷூட்டிங் வந்ததுக்கு)

said...

வாங்க தேனே!

என்னப்பா எல்லாம் காலி டப்பான்னு சொல்லிட்டீங்க? பெருங்காய வாசனை கூட வரலையா???

இன்னொருமுறை சோதிச்சுப் பாருங்களேன். இதுவரை படங்கள் சரியாத்தான் வருதுன்னு நினைச்சேனே:(

said...

வாங்க கீத மஞ்சரி.

அரசியல்வாதிகளின் குறுக்கீடு இல்லைன்னா எல்லா நாட்டு மக்களும் ஒற்றுமையாத்தான் இருப்பாங்க.

எல்லாத்துலேயும் பாழாய்ப் போன அரசியல் வந்துதான்....ஒற்றுமை போச்:(

said...

வாங்க ரஞ்ஜனி.

விஸில் அடிக்கத் தெரியாதோர் க்ளப்பில் உங்களுக்கும் துண்டு போட்டு வச்சுருக்கேன்:-)

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.

said...

எல்லா வசதிகளுடனும் கேம்பிங் என்பதில் ஒரு சந்தோஷமாயிருக்கும்:).

சரிதான், வாங்கிய கார்டை கொண்டு வரவில்லையா:)? ஆம். சமீபத்தில் PiT குழுவில் இணைந்த நித்தி ஆனந்த், பல புகைப்படக் கலைஞர்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பதால் அவர்கள் கேட்கும் எந்த சந்தேகமானாலும் பலருக்கும் உதவட்டுமெனத் தொடர்ந்து பாடமாகக் கொடுத்தபடி இருக்கிறார்.

said...

@ ராமலக்ஷ்மி.

GBக்களில் ஒரு 32, ரெண்டு 8, ஒரு 2 என்றுதான் பயணங்களுக்குக் கொண்டு போகிறேன்..

இந்த ஸாண்ட்டா பரேடுக்கும் கேனனில் 8, ஸோனியில் 2 என்று தான் போட்டு வச்சேன்ப்பா.

பிட் குழுவினருக்கு மீண்டும் என் நன்றிகள்.

said...

வருசாவருசம் நடக்கும் சாண்ட்டா பரேடு பற்றி நீங்களும் வருசாவருசம் அழகிய படங்களுடன் எழுதுகிறீர்கள். இந்த வருட பதிவும், படங்களும் வழக்கம் போல அருமை. வாழ்த்துக்கள். ( எங்கள் வீட்டு கம்ப்யூட்டரில் சிலநாட்களாகவே பிரச்சினை. சரி செய்த பின்னர், இப்போதுதான் விட்டுப் போன பதிவுகளை படிக்க ஆரம்பித்து இருக்கிறேன்)

said...

வேடிக்கை பாக்குறதுதான் என்ன சுகம். வெயிலோ மழையோ அடிக்காம இந்த மாதிரி வசதியா உக்காந்து வேடிக்க பாக்க விட்டா எவ்வளவு நல்லாயிருக்கும்.

பாசம் பார்வைல. நேசம் நெஞ்சத்தோட. உணர்வுகள் உயிரோடன்னு சொல்லுவாங்க. அதுமாதிரி நீங்க அந்தப் பையனப் பாத்ததும் தாய்ப்பாசத்துல ஆழ்ந்துட்டீங்க. வாழ்க. வாழ்க.

படங்கள் சூப்பர். எல்லாம் ரசிச்சேன்.

said...

வாங்க தமிழ் இளங்கோ.

எனக்கும் பதில்போட ரொம்பவே பிந்திப்போச்சு. விடுமுறை காலமாப் போயிருச்சு பாருங்க!

வருசாவருசம் என்னத்தை எழுதறதுன்னு யோசிச்சாலும், உலகமெங்கும் கொண்டாடும் விழாவை அப்படியே விட்டுற முடியுதா?

உங்கள் ரசிப்புக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

ஆங்கிலப் புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க ஜிரா.

அதென்னவோ என்ன வகை இனமென்றாலும் சில முகங்கள் சட்னு மனசுக்குப் பிடிச்சுப் போயிருதே!

ஒரு காலத்தில் தினமும் மின்சார ரயிலில் போகும்போது வழக்கமா அதே வண்டியில் வரும் ஒரு பெண் முகம் இப்பவும் நினைவில் இருக்கு. ரொம்ப அமைதியான அழகு கொஞ்சும் முகம்!

ஒருநாள் பார்க்கலைன்னாலும் என்னவோ போல் இருக்கும். கிட்டப்போய் பேசி பரிச்சயப்பட்டு இருக்கலாம்தான். ஆனா.... இப்போ இருக்கும் துளசி அப்போ இல்லையே:-)))

said...

கிறிஸ்துமஸ் விழாவை நேரில் பார்த்த உணர்வு. நன்றி.

said...

வாங்க மாதேவி.

வருகைக்கு நன்றி.